பரதனை இனி பார்க்க முடியாது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 26, 2020
பார்வையிட்டோர்: 5,788 
 
 

தகவல் தெரிந்ததும், மயிலாடும்பாறையிலிருந்து மூணு மைல் தூரத்திலிருக்கும் பரதன் தியேட்டர் இடிக்கப்படுவதற்கு வெகு முன்னாடியே அதிகாலையிலேயே தியேட்டரைச் சுற்றி கூட்டம் அலைமோதி நின்றது!

சுத்துப்பட்டு கிராமங்களிலிருந்தும் சாரிசாரியாக கூட்டம் வந்து கொண்டிருந்தது. வண்டிமாடு கட்டியும், டிராக்டர் வைத்தும் தோட்டம் துறவுகளிலிருந்தும், காடு கரைகளிலிருந்தும், வயல்வெளி ஒத்தையடிப் பாதையெங்கும் ஜனத்திரல்கள் இன்னும் இன்னும் மேலே மேலே வந்த வண்ணமிருந்தனர்.

முப்பது வருசமாக மயிலாடும்பாறை கிராமத்திற்கு மட்டுமல்ல, சுத்துப்பட்டு அத்தனை கிராமங்களுக்கும் விவசாய கூலி ஜனங்களின் சந்தோசத்தின் அடையாளமாக இருந்த பரதன் தியேட்டர் இன்னும் சற்று நேரத்தில் இடிக்கப்போவதை, நிகழவிருக்கும் துயரத்தை பார்க்கப்போகும் பரபரப்பு கொட்டும் கடும் பனிப்பொலிவு அவர்களை கொஞ்சமும் சட்டை செய்யவில்லை.

பரதன் தியேட்டரை எல்லோரும் பரதன் என்றுதான் அழைப்பார்கள். அவர்களைப் பொருத்தமட்டில் பரதன் தியேட்டர் ஒரு கட்டடம் அல்ல. அது ஜனங்களின் உயிர்.

சூரியன் மெல்ல மெல்ல மேலெழுந்ததும் அடர் வெண்புகையென மண்டிக்கிடந்த பனிமூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக விலகியதும் பரதன் பளிச்சென தெரிய ஆரம்பித்தான்.

பெரிசுகளும் பெண்களும் பரதனை சுற்றிச் சுற்றி வந்தனர். தேனியில் பிரசித்திப்பெற்ற போட்டோ ஸ்டுடியோகாரர் பரதனை ஆவணப்படுத்த பல கோணங்களில் படமெடுத்தார். உள்ளுர் மயிலை வீடியோ கிராபர் பரதனையும், குவிந்துவரும் கூட்டத்தையும் சுற்றிச்சுற்றி வீடியோவில் பதிந்துகொண்டார்.

பொடிசுகளும், இளவட்டங்களும் செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டனர். இனி பரதனைப் பார்க்க முடியாது என்கிற ஆவல் ஒட்டுமொத்த கூட்டத்தையும் தொற்றிக்கொள்ள, காளிமுத்து மட்டும் விதிவிலக்கா? அவனும் தனது மகன் துபாயிலிருந்து வாங்கி அனுப்பியிருந்த ஆண்ட்டிராய்டு செல்போனில் பரதன் அருகில் நின்று ஒரு செல்பி எடுத்துக் கொண்டான்.

தான் செல்பி எடுத்ததை தனது செல்போனில் சரிப்பார்த்துக் கொள்ள செல்போன் திரையை விலக்கினான்.

“அடடா என்ன அழகு! ஆண்ட்ராய்டு போனை சரிவர கையாளத்தெரியாத எனக்கே செல்போனில் இவ்வளவு அழகா பரதன் அமைஞ்சிட்டானே!அமரப்போகும் தீபம் என்பதாலா?” காளிமுத்துவின் மனதில் கேள்விகள் எழ… எழ… அவன் கண்களில் அவனையும் அறியாமலே கண்ணீரும், மனதில் பழைய நினைவுகளும் எட்டிப்பார்த்தன.

பரதன் தியேட்டர் கட்டுவதற்கு இந்த இடம் தேடியதிலிருந்தே எங்க ஊருக்கு மட்டுமல்ல.. சுத்துப்பட்டு அத்தன கிராமங்களுக்கும் எங்கிருந்து வந்து ஒட்டிக்கொண்டதோ அவ்வளவு சந்தோஷம்.

இந்த இடத்தை தேர்ந்தெடுத்து விலை படிஞ்சு வானம் பறிக்க ( அஸ்திவாரம் கட்ட குழிப்பறிப்பதை இப்படித்தான் சொல்வார்கள். பூமித்தாயை குழிப்பறிப்பதாக சொல்வது அபசகுணமாம்) தொடங்கும் போது என் சிநேகிதர்கள் தெய்வேந்திரன், இருளாண்டி மகன் செல்வம், ஜெயராஜ், மொக்கராஜ், சின்னத்துரை நாங்க ஆறு பேரும் பள்ளிக்கூடம் போகாம புத்தகப்பையை சீமக்கருவேலம் வேலிக்குள்ளாற ஒழிச்சு வெச்சுட்டு வானம் பறிக்கிறதை வேடிக்கைப் பாத்தோம். அதிலிருந்து தொடங்கி எங்க ஊரு காவல் தெய்வம் ஐய்யனார் மாதிரி கம்பீரமா ஒரு அடையாளமா ஓங்கி உயர்ந்து நிக்கிறானே பரதன் இன்னைக்கி வரைக்கும் பரதனுக்கும் எங்களுக்குமான அதீதமான உறவு!

சாயந்திரம் நாலு மணிக்கு எங்களுக்கு பள்ளிக்கூடம் விட்டுறவாங்க, புத்தக பைக்கட்ட வீட்டுல சீச்…சனியனேன்னு விட்டெறிஞ்சிட்டு நேரா பரதன தேடித்தான் நாங்க வருவோம்.

எத்தனையோ வாட்டி வேலையாளுகளுக்கு சைக்கிள் எடுத்து ஊருக்குள் வந்து காப்பி, மிச்சர், காரச்சேவு,பால்பன்னு என எல்லாத்தையும் எங்க கைக் காசப்போட்டு வாங்கித் தந்திருக்கோம். அவங்களும் பசங்க பிரியமா வாங்கித் தரானுகளேன்னு மறுக்காம வாங்கிப்பாங்க.

பரதன முழுசாக கட்டி முடிச்சு வர்ணம் அடிச்சு முதல் நாள் முதல் சினிமா முதல் காட்சி ” கந்தன் கருணை” படம் போட்டிருந்தாங்க.

முதல் நாள் முதல் காட்சிக்கு எங்க ஆறு பேத்துக்கும் இலவசமாக படம் பார்க்க டோக்கன் கொடுத்திருந்தாங்க.

ஏதோ ஓட்ட வாயி சும்மா இருக்காதுங்குற மாதிரி நாங்க ஆறு பேரும் எங்க வீட்டுல பெருமையா ” பரதனில் முதல் காட்சிக்கு காசில்லாம சினிமா பாக்க டோக்கன் தந்திருக்காங்களேன்னு“ சொல்லி தொலைச்சுட்டோம்.

” அட விவரம் கெட்ட கூகைகளா… சும்மா ஒருத்தன் டோக்கன் குடுத்திருக்குறானா அதுல ஏதோ விசியம் இல்லாமலா இருக்கும். முதல் காட்சிக்கு முதல் ஆளா போற எலந்தாரிப் பசங்கள ரத்தப்பலி கொடுக்கத்தான் உங்களுக்கு டோக்கன் கொடுத்திருக்காங்க. இது தெரியாம பெருமையா பீத்திக்கிறீங்களே”ன்னு சொல்லி வீட்டுக்குள்ள விட்டு கதவ வெளி தாழ்பாள் போட்டுட்டாங்க. நாங்க அழுது அழுது ஓஞ்சதுதான் மிச்சம்!

அண்ணக்கி பள்ளிக்கூடத்துல கணக்கு வகுப்பு. எங்களுக்கு கணக்கு பாடத்துக்கு ஹரிதாஸ் மாஸ்டர். அவர் ரொம்பவும் கறார் பேர்வழி. அவரது வகுப்பு முடிகிற வரைக்கும் ஒரே அமைதியாய் இருக்கும். தும்முன்னாக்கூட யார்ரா அதுன்னு கேட்டு டெஸ்க்கு மேலே நிக்க வெச்சிருவாரு. மத்தியான சாப்பாடு சாப்புட்டு வந்ததுமே முதல் பீரியட் வேற. சாப்புட்ட மயக்கம். அமைதியான சூழல். கொஞ்சம் உஷார் இல்லாம ஜெயராஜ் கணக்கு வகுப்புல தூங்கிட்டான். ஹரிதாஸ் மாஸ்டர் கிட்ட எந்த தில்லாலக்கடி வேலையும் செல்லாது. ஜெயராஜ் தூங்கினத மாஸ்டர் பாத்துட்டார். ஜெயராஜ் பக்கத்துல உட்கார்ந்திருந்த மாயாண்டிக்கு ஜெயராஜ் மண்டையில ஓங்கி ஒரு கொட்டு வைக்கச் சொல்லி மாஸ்டர் சைகை காண்பித்தார். மாயாண்டிக்கு எப்பவும் நொட்டாங்கை ( இடது கை பழக்கம் ) தான் பலம். அவனுக்கு சாப்பிடறத தவிர மத்த எல்லாத்துக்குமே நொட்டாங்கை தான். அதனாலத்தான் அவனுக்கு லெப்ட்டு மாயாண்டின்னு பட்ட பேரும் உண்டு. ஜெயராஜ் எப்பவும் மாயாண்டிய பேர் சொல்லி கூப்பிட மாட்டான். லெப்ட்டுன்னு தான் கூப்பிடுவான். அதனால மாயாண்டிக்கு எப்பவுமே ஜெயராஜ் மேல ஒரு கண்ணு வெச்சிருந்தான். அதுக்கு இப்ப கிடைச்ச வாய்ப்ப பயன்படுத்திக்க நினச்சு நொட்டாங்கை கட்ட விரல உள்ளாற விட்டு நாலு விரலையும் மடக்கி எச்சியை தொட்டு அப்பன் பகை ஆத்தா பகைன்னு எல்லா பகையையும் சேத்து வெச்சு வச்சான் ஒண்ணு மண்டையில.

” ஆ… முறுக்கு… முறுக்கே… முறுக்கு வேணுமா… முறுக்கு…” ராத்திரியில பரதன் தியேட்டர்ல முறுக்கு விக்கிற ஞாபகத்துல தூக்கக் கலக்கத்துல எழுந்து நின்னு வலது கைய கொஞ்சம் ஒசத்தி தூக்கிப்பிடிச்சு முறுக்குத் தட்ட ஏந்திப்பிடிக்கிற மாதிரி அஞ்சு விரலையும் விரிச்சு வெச்சு கணக்கு வகுப்புல முறுக்கு விக்க ஆரம்பிச்சுட்டான் ஜெயராஜ்.

வகுப்பே விழுந்து விழுந்து சிரிச்சதுல்ல அத்தனப் பேத்துக்கும் கண்ணுல தண்ணி வந்திரிச்சு.

ஜெயராஜ்க்கு வகுப்புல என்ன நடந்துச்சு ஏது நடந்துச்சுன்னு புரியாம அப்படியே அமைதியா நின்னுட்டான். ஹரிதாஸ் மாஸ்டரும் ஒரு நிமிஷம் மெய்மறந்துபோனார்.

ஜெயராஜ் முறுக்கு விக்க வந்ததே தனிக்கத!

ஜெயராஜ்க்கு எம்.ஜி.ஆர் படம்ன்னா உசுரு! இன்னும் சொல்லப்போனா அவன் குடும்பத்துக்கே உசுரு! அட… எங்க ஆண்டிபட்டி தொகுதி மக்களுக்கே எம்.ஜி.ஆர் ன்னா உசுருதான்!

அண்ணக்கி பரதனில் ” ரிக்ஷாகாரன் ” எம்.ஜி.ஆர் படம். போஸ்டரில் ”இன்று இப்படம் கடைசி” துண்டு சிலீப் ஒட்டியிருந்தார்கள். அந்தப் படத்துல எம்.ஜி.ஆர். ரிக்ஷா போட்டியில கலந்துகிட்டு அவர் ரிக்ஷா ஓட்டி ஜெயிப்பதை பார்ப்பதில் ஜெயராஜ்க்கு அலாதியான ஆசை எப்பவும் உண்டு. அண்ணக்கி ஞாயிற்றுக்கிழமை வேற. மேட்னி ஷோவும் போட்டிருந்தாங்க. ஒரு வழியா எப்படியோ சினிமா பார்க்க காச பிறட்டி சேத்துட்டான். அவனுக்கு நைட்டு ஷோ வரைக்கும் பொறுக்க முடியல. மேட்னி ஷோ கிளம்பிட்டான். அவன் அரக்கப்பறக்க போயி தரை டிக்கெட் எடுத்து தியேட்டருக்குள் நுழையிறதுக்குள்ளாற படத்த போட்டுட்டாங்க. தியேட்டருக்குள்ளாற ஒரே இருட்டு. ஒவ்வொரு ஆளாப் பாத்து கடந்து போயி திரைக்குப் பக்குத்துல உட்காந்துட்டான்.

சினிமாத் திரையில் ரஜினிய மல்லாக்கப் படுக்கப்போட்டு கை கால் எல்லாத்தையும் சங்கிலியால கட்டிப்போட்டிருக்காங்க. ரஜினி படுக்கையில தர்மயுத்தமே நடத்திக்கிட்டிருக்காரு. ஜெயராஜ்க்கு பக்குன்னு ஆகியிருக்கு! அவனுக்கு ஒரு யோசனை! இன்னைக்கு ”ரிக்சாக்காரன்” படம் கடைசிங்கிறதால நாளைக்கு வரப்போகுற ”தர்மயுத்தம்” படத்த டிரைலர் காட்டுறான் போலிருக்குன்னு ”ரிக்சாக்காரன்” படத்த எதிர்பார்த்து காத்துக்கிடக்கானாம்.

இன்னமும் ”ரிக்சாக்காரன்” படம் போட்டப்பாடுல்ல. பொறுமையை இழந்துட்டான் ஜெயராஜ். ”அட வெக்காளி படத்த நிறுத்துங்கடா. கேனப்பய ஊருல கிறுக்குப்பய நாட்டாமையா? வெக்காளி உங்கள கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சிட்டீங்களா? எவ்வளவு நேரந்தான் பொறுமையா காத்துக்கிடக்கிறது. வெக்காளி நாளைக்கு வரப்போகுற படத்தோட டிரைலர எவ்வளவு நேரந்தான் போட்டுக் காட்டுவீங்க. ஒழுங்கா எங்க வாத்தியார் படத்த போடுங்கய்யா. இல்ல வெக்காளி என்ன நடக்கும்ன்னு எனக்கே தெரியாது.” ஒரே சவுண்டு விட்டு ரணக்களப்படுத்தியிருக்கிறான்.

படத்த நிறுத்திட்டு தியேட்டர் வேலையாள் ஒருத்தன் வந்துட்டானாம். ”இங்க எவண்டா வெண்ணெ சவுண்டு கொடுத்தது?.

”நான் தான் சவுண்ட் கொடுத்தேன் அதுக்கு என்ன இப்போ? ” உடனே தியேட்டர் வேலயாள் ஜெயராஜ்ஜ ஓங்கி கண்ணத்துல ஒண்ணு வெச்சுட்டு ” டேய் வெண்ணெய் இது டிரைலர் படமில்ல. மெயின் படந்தான். ஒழுங்கா அமுக்கிக்கிட்டு படம் பாரு. இல்லே ஒங்க ஆத்தா கொடுத்த செனப்பாலு வெளிய வந்துரும்.”

வெக்காளி போங்கடா நீங்களும் உங்க படமும்னுட்டு வீட்டுக்கு வந்துட்டானாம். அதுக்கப்புறந்தான் அவனுக்கு விவரம் தெரிஞ்சிருக்கு மேட்னி ஷோ ”தர்மயுத்தம்”, நைட் ஷோ ” ”ரிக்சாக்காரன்”ன்னுட்டு. அண்ணக்கி எம்.ஜி.ஆரை பாக்க முடியாமப் போனதால இனி என்னைக்கும் இப்படி நடக்கக் கூடாது அதுக்கு ஒரே வழி ”தியேட்டரில் முறுக்கு வித்தா காசில்லாட்டிக்கூட எல்லா படமும் பாத்துக்கலாம்ன்னு” அண்ணைக்கே ஜெயராஜ் தியேட்டர்ல முறுக்கு விக்க முடிவு பண்ணிட்டானாம்.

ஜெயராஜ் இப்படித்தான் எப்பவுமே அவன் ஒரு விவரம் கெட்டான் தான்!

எங்க சினேகிதன் சரவணனோட அப்பா இறந்துட்டார். அவர ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குற சுடுகாட்டுல அடக்கம் பண்ணிட்டு வீடு திரும்பிக்கிட்டிருந்தோம். எல்லோரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கிட்டே திரும்பிப்பார்க்காம வந்துகிட்டுயிருக்கும்போது, ஜெயராஜ் மட்டும் சுடுகாட்டுப் பக்கம் திரும்பிப்பார்த்திருக்கான் அவ்வளவு தான் அவன் காதச்சேர்ந்து சுளீர்ன்னு ஒரு வப்பு விழுந்துச்சு. ” வெக்காளி உனக்கு புத்தி கித்தி கெட்டுப்போயிடுச்சா? அடக்கம் பண்ணிட்டு வரோமே வீடு வரவரைக்கும் திரும்பிப் பார்க்கலாமா? அடக்கம் பண்ணுன ஆத்மா திரும்பிப் பார்த்தா சாந்தி அடையுமா? என்ன பழக்கம் பழகுறே?” ஊர் பெருசு பரமசிவம் சொன்னதும் அப்புறந்தான் திரும்பிப் பார்க்காம வீடு வந்து சேர்ந்தான்.

பரதனில் அப்போ ஒரு தலை ராகம் படம் ஓடிக்கிட்டிருந்துச்சு. படத்தில் வரும் கதாநாயகன் சங்கர் போல நானும் தலையில் ஸ்டெப் கட்டிங் வெட்டியாகணும்ன்னு முடிவெடுத்து, அஞ்சு மைல் தூரத்தில் இருக்கும் கடமலைக்குண்டு போய் ஸ்டெப் கட்டிங் வெட்டிட்டு, ஜம்முன்னு மறுநாள் ஸ்கூலுக்கும் வந்தாச்சு.

காலையில முதல் பீரியட் இங்கிலீஷ். மாரப்பன் மாஸ்டர். எங்க கிளாஸ் மாஸ்டரும் அவர் தான். இங்கிலீஷ் கிராமர்க்கு அவர் தான் வகுப்பெடுப்பார். எனக்கு கிராமர்னா வேப்பங்காயாட்டம் கசக்கும். சுட்டுப்போட்டாலும் வராது.

மாஸ்டர் கிளாஸ்க்குள் வந்ததும் கரும்பலகையில் டைரக்ட் ஸ்பீச் அண்டு இன்டைரக்ட் ஸ்பீச் என்று இங்கிலீசில் எழுதிப்போட்டுட்டு மாணவர்கள் பக்கம் திரும்பினார். அவர் கண்ணுக்கு நான் தான் தெரியுணுமா? என்னெ டெஸ்க் மேல ஏறி நிக்கச் சொல்லிட்டார். ”நான் ஒண்ணுமே பண்ணலேயே இவர் ஏன் என்னெ டெஸ்க் மேல ஏறி நிக்கச் சொல்றார்?” என்னையத்தான் நிக்கச் சொல்றாரா? என்கிற சந்தேகம் எனக்கு!

எப்படியும் கிராமர்ல என்னெ கேள்வி கேட்கத்தான் செய்வார். எனக்கு எப்படியிருந்தாலும் பதில் தெரியப்போறதில்லே. அப்போ டெஸ்க்கு மேல ஏறி நிண்டாகனும். அதுக்கு இப்பவே நின்னுறலாம்ன்னு என் சந்தேகத்தை நானே தீர்த்துகிட்டு டெஸ்க் மேல ஏறி நின்னுட்டேன்.

என்னெப் பாத்து கிளாஸ் முழுவதும் கிடந்து சிரிப்பா சிரிக்குது!.

கரும்பலகையில எழுதிப் போட்டிருக்குற டைரக்ட் ஸ்பீச்சை இன்டைரக்ட் ஸ்பீச்சா வந்து மாத்திக்காட்டுன்னுட்டார். எனக்கு உடம்பெல்லாம் வௌவெளுத்துப்போச்சு! தயங்கித் தயங்கி கரும்பலகை அருகே நான் சென்றதும் கண் இமைக்கும் நேரத்திற்குள் என் உடம்பெங்கும் பிரம்பு விளையாடித் தீர்த்தது. கடைசியாக என் காதருகே வந்த மாஸ்டர் ” நாளைக்கு என் வகுப்புக்கு வரும் போது இந்த ஸ்டெப் கட்டிங்கை சாதாக்கட்டிங்காக மாத்தியிருக்கணும். புரிஞ்சதா?” அப்பத்தான் புரிந்தது மாஸ்டருக்கு கோபம் கடுமையானதுக்கு காரணம் கிராமரை விட என்னோட ஸ்டெப் கட்டிங் தான்னு”

சுத்துப்பட்டு கிராமங்களுக்கெல்லாம் ஆடிப்பண்டிகை, தீபாவளிப்பண்டிகை, தைப்பொங்கல் எல்லாப் பண்டிகைகளின் கொண்டாட்டமும் பரதன் தியேட்டரில் படம் பார்ப்பதில் தான் நிறைவு பெறும். எங்களோட சந்தோஷம் நல்லது கெட்டது எல்லாமே எங்களுக்கு பரதன் தான்!

பரதன்னா எங்களுக்கு ஏகப்பிரியம். அது தான் எங்க உசுரு!

”நல்ல தங்காள் கதை” பரதனில் ஓடியதிலிருந்து காடு வயலு தோட்டம் ஊரு எங்கப் பாத்தாலும், நல்ல தங்காள் கதையைச் சொல்லி சொல்லி பொடிசுகளிலிருந்து பெருசுங்க வரை அழாதவங்க பாக்கியில்ல. வெத்தலப் போட்ட நாக்கு சிவக்குற மாதிரி எங்க மனசுல்ல தங்கிப்போன அடையாளம்,பரதன்.

தியேட்டர் உச்சியில கட்டியிருக்குற கூம்பு வடிவ ரேடியோவிலிருந்து ” மருதமலை மாமனிலே முருகைய்யா…” பாடல் ஒளிபரப்பை கேட்டுவிட்டால் சண்டி செய்கிற மாடுக கூட வேகமா வண்டியை இழுத்துக்கிட்டு சிட்டா பறக்குமாக்கும். நடக்கமாட்டாத நோஞ்சாங் கூட டக்கு புக்குனு நடையை கூட்டி வேகமா தியேட்டரை வந்து சேர்ந்துடுவான் ஏன்னா இந்தப் பாட்ட போட்டாச்சுன்னா பாட்டு முடிஞ்சதுமே சினிமா போடப் போறாங்கன்னு அர்த்தம்.

”தாய் மீது சத்தியம்” படம் வந்திருந்துச்சு. ” டேய் வயலுல ஆடுடா… டேய் வயலுல ஆடுடா…” என்கிற சிரிப்புக் காட்சியை சொல்லி சொல்லி காடு கரையெல்லாம் சிரிச்சது இன்னமும் மனசுல நிக்கிது”.

பரதனோட தான் எடுத்துக்கொண்ட செல்பியை பார்த்துக் கொண்டேயிருந்த காளிமுத்துவின் கண்களில் கண்ணீர் சொரிவதைக் கண்டு,

” காளி, கடல் பெருசா இருந்தாலும் மழையில்லாட்டி வத்தித்தான ஆகணும்!” என்றவாறே தன் தோளில் ஒரு கரம் பற்றியது கண்டு காளிமுத்து தன் சுய நினைவுக்கு வந்த போது இன்னும் அருகில் வந்து அரவணைத்துக் கொண்டான், ஜெயராஜ்.

”மழையில்லை ஒரு பக்கம். போதாத குறைக்கு எப்போ நம்ம ஊருக்கு நூறு நாள் வேலைன்னு வந்துச்சோ அப்பவே விவசாயக் கூலிவேலைக்கு ஆள் பற்றாக்குறை வந்திருச்சு. அப்படியே தப்பி ஆள் கிடைச்சாக்க ஒரு வேலையும் செய்யாம சும்மா உக்காந்து தாயம் விளையாடிட்டு வந்தாக்க அவ்வளவு கூலி கிடைக்குதின்னுட்டு, நீங்க எவ்வளவு கூலி தருவீங்கன்னுட்டு கேக்குறாங்க. இன்னக்கி சின்ன சின்ன விவசாயி விவசாயம் செய்ய முடியல. எல்லாரும் இலவம் பஞ்சு மரம் நட்டுட்டாங்க. ஆத்துல தண்ணியக் காணோம். குடி நீருக்கும் விளை நீருக்குமே பஞ்சம் வந்திருச்சு. விளை நிலமெல்லாம் இப்படி அடுக்கு மாடி கட்டிடம் கட்டறதுக்கு நிலத்தை வித்திட்டு வராங்க. பரதன் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனா ஒண்ணு காளி, உழவன் கை மடங்கினா துறவிக்கும் சோறு கிடைக்காது!” பேசிக்கொண்டு இருக்கும் போதே மண் புகை தரையிலிருந்து வானம் வரைக்கும் எழுந்து நின்றது. சத்தமில்லாமல் பரதன் மண்ணில் சரிந்து விழுந்திருந்தான்!

நாங்கள் பேசிக்கொண்டே பரதனை விட்டு வந்து கொண்டிருந்தோம்.

ஜெயராஜ் திரும்பிப் பார்க்காமல் வீடு திரும்பினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *