பயிற்சிமுகாம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 15, 2021
பார்வையிட்டோர்: 2,334 
 

அத்தியாயம் மூன்று | அத்தியாயம் நான்கு

தொடரும் பயிற்சி!

நண்பகல் பயிற்சியின் போதும் சிவா ஆசிரியர் வந்து சேரவில்லை. செழியனும், பாரியுமே பயிற்சிகளைக் கவனித்தார்கள். மூன்றரை மணி போல தடைப் பயிற்சியின் போதே ஆசிரியர் வந்து சேர்ந்தார். இரவில் அரசியல் வகுப்பு நடைபெற வேண்டும் என்பதை ஏ.ஜி.ஏயுடன் கலந்தாலோசிக்கவே சென்றிருக்கிறார். ” இன்னிரவு உங்களுக்கு அரசியல் வகுப்பு நடைபெறும் ” எனக் கூறினார். தடைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றார் . நிமிர்ந்து நிற்கிற பனை மரத்தில் 15 அடி உயரத்தில் ஒரு ஆள் சுயாதீனமாக நின்று சுற்றிவரப் பார்த்து நடமாடக் கூடியதாக 5 அடி நீளமும், 6 அடி அகலத்தில் பனையின் ஒரு பக்கத்தில் இரண்டடியாகவும், மறுபுறத்தில் நாலு அடியுமாக மரப்பீடம் வெளித்தள்ளலாக கயிறுகளால் வரிந்து இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தது. அதில் சாரணர்களின் அனுபவம் தெரிந்தது. நிலத்திலிருந்து துலா போன்ற பனைக்குற்றி(கால்) பீடத்திற்கு ஏறக் கூடியதாக கயிற்றுக்கட்டுடன் கிடந்தது. வழக்கம் போல ரஜனி, தியாகுவும் சரிவான கோலிலே கையால் பிடியாமலே , நிலத்தில் ஓடுறது மாதிரியே ஓடி பீடத்தில் ஏறினார்கள். பிறகு மேலே இருந்து ஒருவர் பின் ஒருவராக நிலத்தில் குதித்தார்கள். சாதாரணமாக எழும்பி வந்தவர்களை “கால் நோகவில்லையா ? ” என ஜீவன் கேட்டான் . ” இல்லை. நெடுகக் குதித்தால் நோகப் பார்க்கும் ” என்று தியாகு பதிலளித்தான். ஆனைக்கோட்டைத் தோழர்கள் முதல் தடவைக் குதிக்கிறார்கள் போல இருக்கிறது. சரிவில் அரைவாசிக்கு ஓடி ஏறியவர்கள் மீதி தூரத்தைத் கையால் பிடித்து, பிடித்து விரைவாகத் தட்டிற்கு வந்தார்கள். குதிக்கிற போதும் சிறிது தடைப்பட்டு நின்று விட்டு குதித்து விட்டார்கள். இந்தப் பயிற்சிகள் குறைந்த பட்சம் இரண்டு நாள்களாவது நடை பெறும்.எனவே, சமையற்குழு பயிற்சி எடுக்கத் தவறி விடுவதில்லை.

நிலத்தில் உமி,கிமி ஒன்றுமில்லை.வெறும் தரையாகவே இருந்தது . ” கற்களைக் கிளறி எடுத்து சமப்படுத்தி இருக்கிறோம். ஆகக் காய்ந்து போய் விட்டால் தண்ணீர் சிறிது தெளிப்போம்.இன்று பரவாயில்லை. நீர் தேவையில்லை ” என்று ஆசிரியர் கூறினார். அராலிப் பெடியள் நிலத்தில் போய் துள்ளிப் பார்த்தார்கள். ” 15 உயரம்.கொஞ்சம் கூடிப் போய் விட்டது” என்று ஜீவனுக்குப் பட்டது. வடலி வளவு என்பதால் வெயிலிலும் ஒருவிதக் குளிர்மை நிலத்திலும் நிலவியது. சிவா ஆசிரியரும் கைப்பிடியாமல் சர்க்கஸ்காரன் போல ஏறி தட்டிலிருந்து குதித்ததுடன் ஒரு கரணமும் போட்டு எழும்பினார். சங்கரும் குதித்து விட்டான். அராலித்தோழர்களும், சிறு தோழர்களும் , ஐயருமே இருப்பதாகப் பட்டது.

“ஜீவன் கெதியாய் குதி ” என்று சிவா ஆசிரியர் கத்தினார். ஓடி ஏறப் பார்த்தான். 2, 3 கால் அடிகள் வைத்த பிறகு கையாலும் பிடித்து , பிடித்து மேலேச் செல்ல வேண்டியிருந்தது. முக்கித் திக்கி மேலே ஏறினான். தட்டிலே இருந்து ஒரு சுற்றுப் பார்த்தான். கீழே நிலத்தைப் பார்த்தான். ‘ குதி’ எனச் சொன்னது நெஞ்சம் ” அது எங்கே குதித்தது ?. தலை தான் கிறு,கிறுத்தது. ” நம்மாலே ஏலாதப்பா ” என்றான்.” சரி இறங்கி வா”என்று ஆசிரியர் கூற ஏறியது மாதிரியே இறங்கி வந்தான். அடுத்ததாக அராலித் தோழர்கள் பின்னடிக்க ரொபேர்ட் , அணில் குஞ்சு போல விரைவாக கையால் பிடித்து ஏறினான். விரைவாக ஏறியது குறிப்பிடக் கூடியது. தட்டில் நின்றவன் ஒரு செக்கன் கூட நின்று ஜீவனைப் போல வெளியே பார்க்காமல் ‘டப்’பென குதித்து விட்டான். குட்டியன் குதிக்கிறான். ” எப்படியடா முடிந்தது ? ” என்று அவனிடம் வியப்புடன் கேட்டான். ” நான் போன வேகத்திலே குதித்து விட்டேன். கீழேயே பார்க்கவில்லை. எங்கட அண்ணர் ஒருவர் கூறுகிறவர். இதைப் போல ஊரிலே உயரமில்லை. 5 அடி, 6 அடி உயரம் தான். உயர்த்திலிருந்து குதிக்க வேண்டும் என்றால் நிலத்தைப் பார்க்கவேக் கூடாது என்பார். பார்தாயோ ‘ பயம் ‘ பிடித்துக் கொள்ளும். பிடித்துக் கொண்டால் பிறகு குதிக்கவே மாட்டாய். ஒன்று மனம். இரண்டு அறிவு. இந்த இரண்டும் ஒத்துப் போக வேண்டுமானால் சிலதைப் பின்பற்றித் தான் ஆக வேண்டும் ” என்பார்.‌ இவர்கள் எல்லாம் ஈசியாய் குதிக்கிறார்கள். அப்ப காலிலே அடிபடாது தான். இது , இரண்டு, மூன்று மடங்கு உயரம். கனக்க யோசிக்கவும் கூடாது ” என்றான் பெரிய அறிவாளி போல .

ஆசிரியரிடம் ” ஏன் கரணம் அடித்தீர்கள் ? ” என்றுக் கேட்டான். அவர் ” ஒருக்காய்ச் செய்கிற போது கரணம் போடாட்டி இவர்களைப் போல கையைப் பின்னால் ஊன்றித் தான் எழுவேன். எனக்கு பல தடவை அடிக்க வேண்டியும் ஏற்படலாம். நெடுக அடிக்கிற போது மணிக்கட்டிலே நோகப் பார்க்கும். கரணம் அடித்தால் பின் ஊன்றல் இல்லை. கை நோ இல்லை ” என்றார். கேள்வி கேட்டால் தான் சொல்லுவார் போல இருக்கிறது .”நான் முயன்று பார்க்கவா ? ” என்றுக் கேட்டான். ” சரி போ ” என்றார். முந்திய மாதிரியே ஏறினான். நேரத்தைக் கடத்தாமல், விடுப்பும் பார்க்காமல் குதி. குதித்து விட்டான். காலிலே நோ இல்லை.கையிலே லேசாக வலித்தது தான். குதித்து விட்டது பெரிய விசயமில்லையா. அராலித் தோழர்களிலும் பலர் அதே பாணியில் குதித்து விட்டார்கள் . ஐயரும் குதித்து விட்டார். இன்னொரு தடவையும் குதித்தான். மேற் கொண்டு முயவேயில்லை. எப்பவும் வீரன் தலையைக் கவிழக் கூடாது அல்லவா. குதியாது விட்டவர்களிற்கு நாளை இருக்கிறது .குதித்து விடுவார்கள். பயிற்சி முடிந்த போது “அப்பாடா”என்றிருந்தது. ஜீவன், குளறி, தியாகு போன்றவர்கள் அவசரப்படவில்லை. சமையற்குழு இவர்களுக்கு முதலே குளித்து விட்டிருக்கும். அராலித் தோழர்கள் கிணற்றடிக்குப் பறந்து போனார்கள். குட்டிகளும் தான். அவர்களுக்குப் பசி. மாற்றுடையில் நின்ற போது ஐயர் ” திருநீறும், சந்தனமும் வைத்திருந்தால் மங்களகரமாக இருக்கும் ” என்றான். சிரித்தார்கள் . ” என்ன கறி ? ” என குளறி குழுவிடம் கேட்டான் . ” பருப்புக்குழம்பு ” என்றான். சரி தான் .பருப்பிலே சிறிது மிளகாய்த் தூளும் போட்டு வைக்கிறார்கள். பாணும் பருப்புக்கறியும் தான். அன்றிரவு, பெரிய தோழர் ராஜேஸ் வந்திருந்தார்.

” மறைவாக நின்று தாக்குதல் தொடுப்பது பற்றி விளங்கப்படுத்தத் தொடங்கினார். ஒரு தாக்குதலில் ஈடுபடுவது அல்லது ஒரே நேரத்தில் அல்லது விட்டு, விட்டு வேற நிலைகளில் தொடர்ந்தாற் போல தாக்குதல்கள், தொடங்கி விட எதிரிக்கு உதவிக்கு வருகிற அணிகளிற்கு எதிராக தொடுப்பவை இவை எல்லாமே கெரில்லாத் தாக்குதல்கள் தாம்.‌‌‌ குறைந்த வளங்களுடன் எதிரிக்கு கூடிய சேதத்தை ஏற்படுத்துறதை கெரில்லாத் தாக்குதல் என வரையறுக்கிறார்கள். படையினர் இயக்க முகாம்களை வான், மூலமாக , தரை மூலமாக அல்லது கடல் மூலமாக ‌தாக்குவதை அம்புஸ் என இந்தப்பக்கம் கூறப்படுகிறது. இரண்டுமே அடிப்படையில் ஒன்று தான். ஒரு குழுவாக திரள்கிற தோழர்கள் தமக்குள் வேலைகளைப் பிரித்துக் கொண்டு தொடர்பு கொள்ள வோக்கி டோக்கிகள் ஈறாக எலெக்ரோனிக் அலை கருவிகள் இன்றைய நிலையில் பாவிக்கப்படுகின்றன. கணனி உலகம் என்பதால் பெரிய நாடுகள் அவற்றில் ஹக்கிங் செய்யும் முறைகளை விருத்தி செய்து வைத்திருக்கின்றன. நமது கணனியில் வருவதில் பெரும்பாலானவை அவர்கள் செய்யும் சோதனைகள் தாம் என எமக்குத் தெரிவதில்லை. திருடர்களும் இவர்களது செயல்முறைகளை களவாடி (மறைவாகவே வழங்கப்படுகிறதும் கூட இருக்கின்றன) பாவித்து விளையாடி விடுகிறார்கள். இவர்களும் கண்டு பிடிப்புகளை விரிவடைய வைக்கிறார்கள். இவை மக்களின் கண்களுக்குத் தெரியாமல் இருக்கிற வலையமைப்பு. அவற்றில் பரிமாறுற செய்திகளை புரியாமல் குழப்புவதற்காக‌ மர்மபாசையில் பேசுவார்கள். ஜி.பி.எஸ் வந்த பிறகு கெரில்லா நிலைகளை இலகுவாக காட்டிக் கொடுக்கிற கருவிகளாகப் போய் விட்டிருக்கின்றன. சிறிலங்கா அரசு போல மக்கள் அழியிறது பற்றி உலக நாடுகளும் அக்கறை செலுத்துவதில்லை. எனவே நிலைகளை அறியிற போது அணுகுண்டு போட்டது போல அந்த பகுதி முழுதையுமே மக்களும் அழிபட‌ அழித்து விடுகிறார்கள்.

அதனால் நவீனக்கருவிகள் விடுதலைப் பிரிவிற்கு உதவுறது குறைந்து கொண்டேப் போகின்றன. வேறு முறைகளையே நாமும் தொடர்பாடலை சுயமாக கையாளத் தெரியவேண்டியிருக்கின்றன. வேப்பங்குச்சியும் பல்லைக் குத்த உதகிறது . யாழ்நகரில் தொகை, தொகையாய் அழிவுகள் நிகழ்ந்தது உங்களுக்குத் தெரியும். ஜி.பி.எஸ் கருவிகள் ஒளிப்புள்ளிகளை ஏற்படுத்தி இருக்கும். கோட்டையிலிருந்து உடனே செல் மழை. கிபீர்த் தாக்குதல்கள். நீங்கள் இப்ப எடுத்துக் கொண்டிருப்பது அடிப்படைப்பயிற்சிகள். இவர்களை எதிராகத். தாக்குதல்களைச் செய்வதற்கு அறிவும் வேண்டும் . விசேச பயிற்சிகளும் தேவை. பிறிம்பாக‌ கொமாண்டர் பயிற்சிகளையும் அவசியம் .எடுக்க வேண்டும் .

ஆள்பலம் குறைவாக இருப்பதாலே பழகுவதற்காக இரு சாரர்களையுமே கலந்தும் அனுப்புறது இருக்கிறது. ஆனால் அந்த முறையும் சரி தான். அரைவாசிப் பயிற்சி நம்மிடையே பழகி எடுக்கிறோம். மிச்சப்பயிற்சியை எதிரியுடனான் சண்டையின் போதே எடுக்கப் போகிறோம். தாக்குதல்களில் ஈடுபடுறதும் கூட ஒரு பயிற்சி தான். எதிரியின் வாய்ப் பந்தல்களிற்கெல்லாம் பயப்படாதீர்கள். எதிரியை துவசம் செய்யப் போறதும் பயிற்சி தான். எம்பக்கத்தில் சாவு வீதம் கூட என்பதால்….நீங்களாகவே தயார்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொள்கிறோம். நீச்சல், கால்பந்தாட்டம் …முதலான விளையாட்டுகளில் திறமையாக விளையாடுவது எப்பவுமே உங்களுக்கு உதவியாகவே இருக்கும். கழுகைப் பொறுத்தவரையில் விளையாட்டு வீரர்களாகப் பார்த்து பொறுக்கி ,பொறுக்கி எடுப்பதைப் பார்க்கிறீர்கள். நீங்கள் எல்லாரும் குறி பார்த்துச் சுடுறதில் நன்கு தேர்ச்சி பெற வேண்டும் . பயப்படாமல் முடிவெடுத்து செயல்படும் திறமையை வளர்த்துக் கொள்ளவும் வேண்டும். அனுபவங்களாலே திறமைகள் பட்டை தீட்டப்படுகின்றன. அதாவது பயிற்சிகளாலே தீட்டப்படுகின்றன . தோழர்களை இருவர் குழுக்களாகப் பிரித்து விடுதல் .வீதியில் தாட்டு விட்டு நிற்கிற போது அல்லது கிளைமார்களை மரங்களில் கட்டி விட்டு நிற்கிற போது முன்னணிக்குழு , எதிரி வருவதைக் கண்காணித்துக் கொண்டு நிற்கும் அந்த‌ முதற் குழு தாக்குதல்களில் ஈடுபடுவதில்லை. தாக்குதல் குழுவிற்கு ‘ பறவை ‘ போல கத்தியோ, ‘ குயில் ‘ போல கூவியோ ஏதோ ஒரு விதத்தில் தெரியப்படுத்துவார்கள். இலக்குப்புள்ளியை எதிரி அடைகிற போது தாக்குதலைத் தொடுக்க தயார் நிலையில் துணைக் (இருவர்) குழு காத்திருக்கும். பிரதான குழு முதலில் தாக்குதலைக் தொடுக்கிற போது எதிரியின் தீவிரத்தைக் குறைக்க துணைக்குழுவும் பிறகு இறங்கும். சினைப்பர்க்குழு சிறிது தூரத்தில் நிலை எடுத்து கழுகுக் கண்னோடு இருக்கும். அதுவும் தக்க சமயத்தில் எதிரியை சுட்டு விழுத்தும் . எமக்கு கணிசமான ஆயுதங்களும் வேண்டும். எம்பக்கமிருக்கிற மனோபலம் படைத்தரப்பை விட‌ அதிகம். தொடக்கத்தில் எம்பக்கம் இழப்புகள் நேரிட்டாலும் போகப் போக எதிரியின் இழப்பு கூடிக் கொண்டே போகும். நம்பக்கத்தில் சகோதரச் சண்டைகள் என்பவை ஏற்பு போன்றவை. வெற்றிக்கான வாய்ப்புகளை அவைக் குழப்பி எதிரிக்கு சாதகமாக்கி விடுபவை.” ராஜேஸ், சுவாரசியமாகவே விளக்கிக் கொண்டுப் போனார். கரும்பலகையில் மரத்திற்குப் பின்னால் நிலை எடுத்தல் ,சுடுதல்..என்று வரையும் வரைபில் அவருக்கு வரைகலை அறிவும் இருப்பதும் தெரிந்தது.

அந்தத் தோழரையும் ஜீவன் வேடிக்கைப் பார்த்தான். குமரன், கந்தன்…. இவர்களைப்போல‌ போராளித் தோற்றம். சினிமா நடிகர் விக்ரம் போலவும் இருந்தார் . அரசியலை வெறுமனே பேசிக் கொண்டிருப்பவர்களிற்கும் ,களத்தில் நிற்பவர்களுக்கும் வித்தியாசம் இருக்கவே செய்கின்றன. ஆனால், இருபகுதிகளுமே உடம்பும் ,மூளையும் போல ஒன்றிணைந்தும் செயல்பட வேண்டியவை. கிரேக்கர்களில், ஆசிரியர்களான‌ அரிஸ்டோட்டல் போன்ற அறிஞர்கள் எல்லோருமே சண்டையில் ஈடுபடக் கூடிய தகுதியும் பெற்றவர்களாகவே இருந்தார்கள். கல்வி முறைக்குள்ளாக ஒரே மாதிரி வளர்க்கப்பட்டதால்….சாதித்தவைகளும் அங்கே அனேகம் இருந்தன. உடைவு படாத‌ இணைவு கவனிக்கப்பட்டிருந்தது . ஜீவன் உயர் வகுப்பிற்குப் பிறகு தான் விளையாட்டுத் துறையின் அவசியம் பற்றியே உணர்கிறான். வாய்ப்புகள் இல்லை தேடி ஓட வேண்டியிருந்தது. இயக்கமும் ஒரு அரசாங்கம் . அதன் மூலம் சமூகப் பிரிவுகள் கதவுகளையும் அகல‌த் திறந்து விட வேண்டும் எனவும் விரும்புகிறான். வாசிகசாலைக்குழுக்களில் ஆண்டுவிழாக்களின் போது நிகழ்த்தும் போட்டிகளில் அனைவரும் பங்கு பற்றலாம் என கணிசமானவை திறந்திருந்ததை பார்த்திருக்கிறான். விளையாட்டுக்குழுக்களிலும் ஆர்வம் இருக்கிறவர்களை சேர்த்துக் கொள்கிறார்கள் தான். ஆனால் உத்தியோகப்பூர்வக் குழுக்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. வெளிநாடுகளில் விலைக்கு ஆட்டக்காரர்களை வாங்கிச் சேர்த்துக் கொள்வதை இலங்கையின் (ஏ.ஜி.ஏக்கள்) அரசமட்ட பிரிவுகளும் கூட‌ அனுமதிப்பது இல்லை. இலங்கையில் இருக்கிற புற்றுநோய் மேல் மட்டத்தில் இருந்து கீழ் நோக்கி ஓடிக் காணப்படுகின்றது . “சுயராட்சியம்” ஒன்று தான் மாற்றங்கள் எல்லாத்திற்கும் வழி ஏற்படுத்த வல்லவை.

இரு மணி நேரம் பலதையும் கூறி வகுப்பை முடித்தார். தொழிற்சங்க அமைப்புகள் கலைக்கப்பட்டதால் அரசியல் வகுப்புகள் நடத்துற தாடி வளர்த்த புரட்சிக்கர தோழர்கள் இல்லாமல் போய் விட்டிருந்தனர். முந்திய பாசறை வகுப்புகளை அவர்களே நடத்தியவர்கள். அயலிலே நடந்த சகோதரச் சண்டை ஒன்றால் அதன் அஸ்தமனம் நடந்தேறி விட்டது. அக்கடமி போல வளர்ந்த அவ்வமைப்பு மீளவும் உயிர் பெற வேண்டுமே என நினைத்துக் கொண்டான். காவலுக்கு போக முதலே வகுப்பு முடிந்து விட காவலுக்குச் செல்ல , மற்றவர்கள் சபா வைக்கத் தொடங்கி விட்டார்கள். விடுதலைப் பாதையில் தடை ஏற்பட்டால் என்ன தான் செய்வது? அதற்கு ஒரு கோப்பை திறந்து விட்டு தொடர்ந்தும் செல்ல வேண்டியது தானே. தோழர்கள் இறந்து விட்டால், காயம் ஏற்பட்டு விட்டால்…இருப்பவர்கள் தானே தொடர வேண்டியதும் முறை….எனவே செல்கிறார்கள். முகாம் இப்படியே நகர்ந்து கொண்டிருந்தது. அடுத்த நாள், உடற்பயிற்சியில் எண்களைக் கூறி வருகிறப் போது இருவரைக் காணவில்லை. குட்டித் தோழர்களான நிற்சாமத்தவர்கள் தாம் எனத் தெரிந்து கொண்டு விட்டார்கள். ” எங்கே போனார்கள் ? ” என்ற கேள்வி பெரிதாக எழுந்தது. கொட்டிலிற்குள் போய் தேடிப் பார்த்தார்கள். கிணற்றடிக்கும் போய் எட்டிப் பார்த்தார்கள். எதற்கும் உள்ளே இறங்கியும் பார்த்து விடுவதும் நல்லது எனத் தோன்றியது. வந்து ” யார் சுழி ஓடக் கூடியவர் ? ” என்று பாரி கேட்டான் .ரஜனி கையை உயர்த்திக் கொண்டுச் சென்றான் . ” மற்றவையள் பயிற்சியில் கவனம் செலுத்துங்கள் ” என்று கூறிய சிவா ஆசிரியர் செய்து காட்டத் தொடங்கினார். செழியன் செய்வதில் கண்ணைப் பதித்தார். தவறாகச் செய்த தோழர் சிலரையும் .திருத்தி ” இப்படி ..! ” எனக் காட்டினார் . ஒரு மணி நேரத்திற்கு பிறகு வந்த பாரி வளவில் எங்கும் அவர்கள் இல்லை “என்பதைத் தெரியப்படுத்தினான்.

நண்பகல் பயிற்சியும் நடந்தன. பாரியும், செழியனும் அகன்று போக, வேறு இரு புதிய அமைப்புத்தோழர்கள் வந்திருந்தார்கள். ” ராஜா, நேசன் “என அறிமுகப்படுத்தப்பட்டனர். ” இன்றைக்கு (தடைப்பயிற்சி) ‘ குரங்குத் தொங்கல் ‘ லைச் செய்யப் போறீர்கள் ” என்று சிவா ஆசிரியர் கூறினார்.‌ அதாவது குரங்கு தன் பெரிய உடம்பை கீழே தொங்க விட்டு கொப்புகளில் விரைவாக பிடித்துக் கொண்டு போகுமே அதேப் பயிற்சி தான். இவர்கள் உடற்பயிற்சி செய்கிற அதே புல்வெளிக்கே அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கே அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் சிலர், பனை மரத்தில் ஏற வல்லவர்களைக் கொண்டு நீளப்புறமாக ஐம்பது மீற்றர்க்கு அதிகமான நீளத்தில் இருந்த இரண்டு உயர்ப் பனைகளில் பதினைந்தடி உயரத்தில் தடித்த வடக்கயிரைக் உறுதியாகக் கட்டி விட்டிருந்தார்கள். மின்சாரக்கம்பி போல அது காற்றிலே ஆடிக் கொண்டிருந்தது. இரண்டு அந்தங்களிலும் முடிச்சுகளுடன் உள்ள இறங்கு கயிறுகள் தொங்கிக் கொண்டிருந்தன. ” இந்தக் கயிற்றில் இங்கே இருந்து அங்க மட்டும் தொங்கிக் கொண்டு போகப் போறீர்கள் ” என்று செழியன் கூறினார். ” யார் முதலில் …” என்று விஜயன் கேட்டார். தியாகு, ரஜனி தோழர்கள் நீளத்தைக் கண்ணால் அளவிட்டு பின்னடைந்தார்கள். ‘ நிச்சியமாக இதைச் செய்வதற்கு ஒரு வழி இருக்கும் ‘ என்று ஜீவனுக்குத் தோன்றியது. தனது தோழர்களைப் பார்த்தான். அவனுக்கு அடுத்தப் பிரிவினர் . 5 , 6 வயசு குறைவானவர்கள். அவன் பொறுப்பாளன். சரியோ, பிழையோ முதலில் செய்ய வேண்டியவனாகவும் இருந்தான்.

சிவா ஆசிரியர் எதையும் குறிப்பிடாது பயமுறுத்துவதைக் கவனிக்கவேச் செய்கிறான். செய்கிற போதே சொல்லித் தருவது அவர் வழக்கம். உயரப்பலகையில் ஏறி ரொபேர்ட் குதித்தப் பிறகே, விளக்கமாகக் கூறினார். இப்ப ஜீவன் உயர் பலகையில் ஏறினாலும் குதிப்பான். முன் கரணம் அடிக்க வருவதில்லை. இருந்தாலும் அடிக்கவும் முடியும் தான். முடிச்சுக்களை விரல்களால் …பார்த்தான் .பதினைந்தடி உயரம்.எங்கே பிடித்தார்கள்? எதற்கெடுத்தாலும் அந்த உயரம். இப்படி சிந்தித்துக் கொண்டிருக்க , ” ஜீவன்,என்ன, உன்ரப் பெடியள்கள் உன்னைத் தான் பார்க்கிறார்கள். நீ ஏறு ” என்று சிவா ஆசிரியர் கூறினார். சரி கீழே பார்க்காது தொங்கிச் செல்ல வேண்டியது தான் என்று முடிவெடுத்துக் கொண்டு, கயிறைப் பிடித்து தொங்கி கால் விரல்களை முடிச்சுகளில் வைத்துக் கொண்டு ஏறிப் போனான். அவன் வீட்டு தென்னை மரங்களில் எல்லாம் ஏறி வட்டுக்குள்ளே போய் நின்று வான்வெளி , நிலத்தை எல்லாம் பார்க்கிறவன். அவனுக்கு மரம் ஏறுவதிலோ, கயிற்றில் ஏறுவதிலோ சிக்கல் இல்லை. கயிறு கொஞ்சம் ஆடியது. ஏறி கயிறைப் பற்றி விட்டான். மரக்கொப்புகளில் தொங்கி ஆட்டம் போட்டவர்கள் இல்லையா, காலிலேயும் , கையிலேயும் தொங்கிக் தொங்கிக் கொண்டு நகர்ந்தான். கீழே பார்க்கவேயில்லை.ஏன் வீணான தலைச் சுத்தல் ?, கைகள் தானாகவே கழன்று விடும் போல வலித்தன. சிவா ஆசிரியர், ” ஜீவன் முழங்கை மடிப்பிலே கயிற்றிலே தொங்கு. கணுக்கால் முடிச்சிலே நீ தொங்குறது சரி ” என்றார். மடிப்பிலே தொங்கினான்.கை நோ துப்பரவாகத் தெரியவில்லை. அப்படியே களைப்பாரி விட்டு போ ” என்றார். அப்படியே செய்தான். களைக்க மடிப்பிலே தொங்கினான். ” ஒருத்தராலே மடிப்பிலேயே மணிக் கணக்கிலேயும் நிற்க முடியும். கடக்கிற போது நீ முழுதாய் படிந்து விடுவாய் ” என்றார். அவனை விரைவாகச் செய்யச் சொல்கிறார். முடிந்தவரையில் விரைவுப் படுத்தினான். கயிற்றிலிருந்து கை கழன்று விட்டாலும் கால் தான் நிலத்திற்கு முதலில் இறங்கும். பெரிதாக நோகாது. இருந்தாலும் தோழர்கள் வளையமிட்டே நிற்கிறார்கள். தியாகு, ஆனைக்கோட்டைத் தோழர்கள் தெரியும் தானே. அவர்கள் ” உன்னைக் ‘கச் தான்’ பிடிப்பார்கள் என்றும் பகிடி விட்டார். ” அப்படித் தான் விடாமல் நகரு.ஏலாது என்றாலே களைப்பாறு ” என்று ஊக்கப்படுத்தவும் தவறவில்லை.எப்படிக் கடந்தேன் எனத் தெரியாமல் தொங்கிச் சென்றான். ” எந்த நோஞ்சான் என்றாலும் பங்கு பற்ற முடியும் ” என்ற கருதுகோள் புரட்சியில் இருக்கிறது. அவனாலும் முடியும் தான்.

அடுத்த தொங்குக் கயிற்றில் தொங்கி இறங்கிற போது உள்ளே ஒரு சந்தோசம் பூக்கவே செய்தது.

அடுத்து ரோபேர்ட்டும்,சேகரும் முயல்வதற்குக் கேட்டார்கள். ” சரி ” என்ற விஜயன் ரொபேர்ட்டை ஏற அனுமதித்தான். தொங்கு கயிற்றில் ஏறினான்.அவனுக்கு முதலில் பயத்தை அகற்ற வேண்டும் என ஜீவனுக்குத் தோன்றியது. இரணைத் தோழர்கள் தானே நிறைய இருக்கிறார்கள். பெரிய தோழர்களுடன் சேர , இவர்களையும் கீழே வளையமிட வைத்தான். ” ரோபேர்ட் பயப்படாதே !,நாங்கள் பிடிக்க இருக்கிறோம் . துணிஞ்சு செய் ” என்று கத்தினான். இரணைத் தோழர்களும் சத்தமிட்டார்கள். ” முதலில் முழங்கை மடிப்பிலே நின்றுப் பார்.அப்படி களைப்பாற முடியும் என்று புரிந்து கொள்வாய்.ம் ! ,நகரு “என்று கத்திச் சொன்னான். சிவா ஆசிரியர் வேடிக்கை பார்த்து கொண்டு நின்றார்.அவர் வழி சரி தான். முதலில் ஒரு தோழருக்கு சொல்லிக் கொடுத்தால் , அந்தத் தோழரே மற்றவர்களை பயிற்சி செய்ய வைத்து விடுவான்.தோழர்களின் உற்சாகக் குரலிலும்,கத்தலிலும் ரோபேர்ட் தொங்கி முடிச்சுக் கயிற்றில் இறங்கினான். சேகரும் அதே மாதிரி செய்தான். இருவரும் குட்டிகள் விழுந்தாலும் பிடிக்கலாம்.கை பெரிதாக நோகாது. இரணைத் தோழர்கள் வளர்ந்தவர்கள். முதலாவதாக விமல் தொங்கினான். அவன் இலகுவாகக் கடந்து இறங்கினான். அவன் புத்திசாலி தான். அடுத்து ஒவ்வொரு இரணைத் தோழர்கள். தியாகு, ரஜனி, ஆனைக்கோட்டைத் தோழர்களிற்கும் கீழே பெரிய வளையம் போட்டே கத்தி, கத்தி செய்ய வைத்தார்கள். பல கைகள் , விழுந்தாலும் ஏந்தவே முடியும் தான் என்ற நம்பிக்கை பலமாகவே இருந்தது. ஒரு தடவைக்கு மேல் ஒருத்தரை தொங்கச் சொல்லவில்லை. ” விருப்பம் என்றால் நாளை செய்யுங்கள் ” என்றார். ஒரு தோழர் தான் கை நழுவி விழுந்து விட்டார். அவரை ஏந்தி விட்டார்கள் . அவனை தரையில் பாடாமல் ஏந்தியதால் விசை குறைக்கப்பட்டு சிறிய நோவையே பெற்றிருப்பான். இவர்களுக்கே கைகள் நொந்தன. எல்லாப் பயிற்சிகளையும் தடிகளுடனும் நடத்தப்பட்டே வந்தன. சிவா ஆசிரியர் , ” துவக்கு முதுகிலே தொங்கும். எனவே இதற்கு அது தேவையில்லை ” என்றார். பலகைத் தட்டிற்கும் கையை காற்றிலே பறக்க விட்டு ஏறினாலே தடியை கையோடு வைத்திருக்கலாம். எனவே தடியை மேடையிலிருந்தே எடுத்துக் கொண்டு குதித்தார்கள்.

– தொடரும்…

(பதிவுகள் இணைய இதழிலும் இத் தொடர் வெளியாகி இருக்கிறது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *