கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 21,588 
 
 

டாக்டர் சார், எனக்குப் பயமா இருக்கு சார். என்னுடைய நடவடிக்கைகளை யாரோ கண்காணிக்கிற மாதிரி இருக்கு. என்னைக் கண்காணிச்சு யாருக்கு என்ன ஆகப் போகிறதுன்னு கல்யாணி கேட்கிறாள். ஆனால், எனக்குப் பயமா இருக்கு சார்.
என் வீட்டிலேயும், ஆபீஸ்லேயும் ஓட்டுக் கேட்கிற கருவியை வைச்சு ஒட்டுக் கேட்கிறாங்கன்னு தோணுது. நான் பேசறதை ஒட்டுக் கேட்டு யாருக்கு என்ன லாபம்னு மனைவி கேட்கிறாள். ஆனால், இப்படி நினைக்கிறதைத் தவிர்க்க முடியலை சார்.
நான் எங்கே போனாலும் போலீஸ் வருது. வீட்டுக்கு முன்னாலே, தெருவிலே போலீஸ் ஜீப் சதா நின்னு என்னைக் கண்காணிக்குது. நான் ஆபீஸுக்கு போனா அங்கேயும் போலீஸ் ஜீப் அல்லது வேன் வந்த நிற்கிறது. ஆனால், இத்தனை வருஷமா போலீஸ் என்னைச் சுத்திச் சுத்தி வந்தாலும் என்னை அவங்க எதுவும் பண்ணலை. ஆனால், சைலன்ட்டா என்னைப் போலீஸ் மிரட்டுற மாதிரி இருக்குது.

பயம்கம்யூனிஸ, சோசலிஸ நாடுகள்லேதான் அரசாங்கம் கண்காணிக்கும்ன்னு படிச்சிருக்கேன். பிக் பிரதர் ஈஸ் வாட்சிங்ன்னு சொல்வாங்க. அந்த நாடுகள்லே அரசாங்கம் தான் பிக் பிரதர். ஆனால், நம் நாடு ஜனநாயக நாடு. சுதந்திர நாடு. இங்கே கூட அரசாங்கம் என்னை மாதிரி பத்திரிகையிலே வேலை பார்க்கிறவனைக் கண்காணிக்குமா டாக்டர் சார்? ஆபீஸ்லேயும், வீட்டிலேயும் ஃபோன்லே ஒட்டுக் கேட்கிற கருவியை வச்சு ஒட்டுக் கேட்கிறாங்க சார்.

என் சின்ன மகள் இரண்டாவது வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு – குரங்கு, அப்பத்தைப் பிரிச்சுக் கொடுத்த கதைப் பாடத்தைச் சொல்லிக் கொடுத்தேன். காலையிலே ஆபீஸுக்குப் புறப்பட்டேன். எங்க அபார்ட்மெண்ட் வாசலிலே ஒரு குரங்காட்டி குரங்கோட உட்கார்ந்திருந்தான். நான் என் மகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தது காலையிலே ஏழு, ஏழே கால் மணிக்கு. நான் பேசறதை ஒட்டுக் கேட்டு அதற்குள்ளே, நான் ஆபீஸ் புறப்படுகிறதுக்குள்ளே ஒரு குரங்காட்டியையும், குரங்கையும் தேடிக் கண்டுபிடிச்சு அபார்ட்மெண்ட் வாசலிலே கொண்டு வந்து நிறுத்திட்டாங்க சார்.

அதனாலேதான் சார் சொல்றேன். நான் பேசறதை ஒட்டுக் கேட்கறாங்கன்னு. அதுவும் அரசாங்கம்தான் இவ்வளவு வேகமா, என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். இரண்டு மணி நேரத்துக்குள்ளே இவ்வளவு பெரிய ஊரிலே குரங்கை வைச்சிருக்கிற குரங்காட்டியைத் தேடிக் கூட்டிட்டு வந்து என் அபார்ட்மெண்ட் வாசலிலே நிறுத்தி, என்னைப் பயமுறுத்தறதுன்னா அது அரசாங்கத்தாலேதான் முடியும். சாதாரண மனுஷனாலே முடியற காரியமா டாக்டர் சார்?
நான் ஒண்ணும் புரட்சிக்காரன் இல்லை சார். புரட்சிங்கிற சொல்லே எனக்குப் பிடிக்காது சார். ஆனால் கொஞ்ச நாளைக்கு முன்னாலே, எந்தப் புத்தகத்தைப் பார்த்தாலும் படிக்கிற ஆசையினாலே, மார்க்ஸியம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் படிச்சேன் சார். ஒருவேளை விமர்சகனான என்னைக் கொஞ்சம் அடக்கி வைக்கணும்ங்கிறதுக்காக பத்திரிகை முதலாளியும் அரசாங்க மேலிடமும் சேர்ந்து என்னைப் பயமுறுத்தறதுக்காக இப்படியெல்லாம் பண்றாங்களோன்னு தோணுது சார்.
ஒருநாள் நான் வீட்டிலே பேசிக் கொண்டு இருக்கிறபோது, சினிமா பாடலாசிரியர் ராமலிங்கத்தோட சினிமா பாடல்களைக் கிண்டல் பண்ணினேன். கொஞ்ச நேரம் கழிச்சு வெளியே கடைக்குப் போனேன். அங்கே சினிமா பாடலாசிரியர் ராமலிங்கம் எதிரே வந்துக்கிட்டு இருந்தார் சார். நான் பேசறதை ஒட்டுக் கேட்காம இது முடியுமா?

அந்தத் தெருவுக்க ராமலிங்கம் வர வேண்டிய அவசியமே இல்லை. அவர் வீடு அந்தப் பக்கமே இல்லை. நான் வீட்டிலே பேசியதை ஒட்டுக் கேட்டு, நான் வீட்டை விட்டு வெளியே வரும் போது என்னைப் பயமுறுத்தறதுக்காக, ராமலிங்கத்தை வீட்டிலே போய்க் கூட்டிட்டு வந்த, எனக்கு எதிரே வர விட்டிருக்காங்க.
ஆனா ஒட்டுக் கேட்கிறதை யார் செய்கிறாங்கன்னுதான் தெரியலை. போலீஸோ, சி.பி.ஐ.யோ இல்லை ரா வோதான் செய்யணும். இதை என் வீட்டுக்குப் பக்கத்திலேயே யாரோ ஒருத்தன் சம்பளம் வாங்கிட்டு, ஒட்டுக் கேட்டு, உடனுக்குடனே சம்பந்தப்பட்டவங்களுக்குத் தகவல் சொல்லி என்னைப் பயமுறுத்தறாங்க.

ரொம்பப் பெரிய வி.வி.ஐ.பி.க்களை விமர்சிச்சு ஏதாவது பேசினா, அவங்களைத் தான் நான் வெளியே போகும்போது எனக்கு எதிரே கூட்டிட்டு வந்து பயமுறுத்த முடியலை சார். மற்றபடி யாரைப் பத்திப் பேசினாலும் அவங்களை உடனே கூட்டிட்டு வந்திடுவாங்க.
ஒருவேளை நான் மார்க்ஸியமெல்லாம் படிச்சதினாலே என்னை இடது சாரின்னு நெனைச்சுக்கிட்டு, என்னை வலதுசாரியா மாத்தறதுக்காக இந்த மாதிரி எல்லாம் பண்றாங்களோன்னு சில சமயம் தோணும். இதைப் பத்தி ஒரு லாயர்கிட்டே பேசி கோர்ட்டிலே சட்டபூர்வமா ஏதாவது தீர்வு காணலாம்னு நெனைச்சு, ஒரு வக்கீல் ஃப்ரெண்டைப் பார்த்தேன். அவன் என்னோட படிச்சவன்.

ரோட்டிலே போலீஸ் ஜீப், போலீஸ் வேன் நின்னா உனக்கென்ன? அவங்க ரோந்து போகிறதுக்காக வந்திருப்பாங்க. அவங்களைப் பார்த்த நீ ஏன் பயப்படணும்னு கேட்டான்.

பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் ஒட்டுக் கேட்பதாகத் தகவல் வெளியானது. நீ என்ன பிரணாப் முகர்ஜி பெரிய வி.வி.ஐ.பி.யா? என்று என் தங்கை என்னைக் கேலி செய்கிறாள். கேலி பேசுகிறவர்களுக்கு என்ன வந்தது? என் அவஸ்தை எனக்கல்லவா புரியும்?

வீட்டில் உள்ளவர்களுக்கோ, நண்பர்களுக்கோ, ஒட்டுக் கேட்க முடியும் என்பதையே நம்ப முடியவில்லை. அதனால் அவர்கள் சுதந்திரமாக இயங்குகிறார்கள். எங்கே வேண்டுமானாலும் சுதந்திரமாகச் சென்று வருகிறார்கள். யாரைப் பற்றி, எதைப் பற்றி வேண்டுமானாலும் சுதந்திரமாகப் பேசுகிறார்கள். அவர்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லை.

ஆனால், கருத்துச் சுதந்திரத்தின் மையமான பத்திரிகையில், ஒரு விமர்சனப் பத்திரிகையாளனாகப் பணி புரிகிற எனக்குத்தான் இத்தனை தொல்லையும். யாரைப் பற்றியும் விமர்சமிக்கவே பயமாக இருக்கிறது சார். தீபாவளிக்குச் சட்டையைச் சரியாகத் தைக்காத தையல்காரரை விமர்சிக்கக் கூடப் பயமாக இருக்கிறது. அதை ஒட்டுக் கேட்டு, அந்தத் தையல்காரரிடம் போய்ச் சொல்லிவிட்டால் நான் என்ன செய்வேன் டாக்டர்.

வீடு, ஆபீஸ், கடைத்தெரு, கோயில் என்று எங்கே போனாலும் இந்த ஜனநாயக பிக் பிரதர் என்னை வாட்ச் பண்ணுகிறார் சார். சுதந்திரமாக ஒரு இடத்துக்குப் போக முடியவில்லை. சுதந்திரமாகப் பேச முடியவில்லை சார்.

இது ஏதோ மனப்பிராந்தி, மனவியாதின்னு எங்க அப்பா உங்களை மாதிரி ஒரு மனோதத்துவ டாக்டர்கிட்டே கூட்டிட்டுப் போனார். அவர் எனக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தார். ஊசி போட்டு ஒரு வாரம் தூங்க வச்சார். தினசரி சாப்பிடறதுக்கு மாத்திரைகள் எல்லாம் கொடுத்தார்.

மாத்திரை சாப்பிட்டா தூக்கம் தூக்கமா வருதுன்னு மாத்திரை சாப்பிடறதை நிறுத்திட்டேன். ட்ரீட்மெண்ட் எல்லாம் எடுத்த பிறகும் போலீஸும் அரசாங்கமும் என்னைக் கண்காணிக்கிறது நிற்கவில்லை. அதற்கப்புறமா சைக்காலஜி பற்றி ஏராளமான புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். மூளையிலே ஏற்படற கெமிக்கல்ஸ் சேஞ்சுனாலேதான் இதெல்லாம் வருதுன்னு டாக்டர் சொன்னது சரிதானோன்னு தோணுது. எனக்க வந்திருக்கிற மனோ வியாதிக்க நியூரோஸிஸ்னு அந்த டாக்டர் சொன்னார்.

ஆனால் அந்த டாக்டர் வீட்டுக்குப் போனா அங்கேயும் போலீஸ் வேன் வருது. அதனாலே வேறே டாக்டரைப் பார்ப்போம்னு உங்ககிட்டே வந்தேன். வீட்டிலே கூட இதைப் பற்றிப் பேசலை. எந்த டாக்டர்கிட்டே போகப் போறேன்னு வீட்டிலே பேசினா, அதை ஒட்டுக்கேட்டு போலீஸ் வேனை அனுப்பிடுவாங்கன்னு, யார்கிட்டேயும் எதுவும் சொல்லாமே உங்ககிட்டே வந்திருக்கேன் சார்.

இது வியாதியா, இல்லை சட்டபூர்வமா நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயமான்னு நீங்கதான் சொல்லணும் டாக்டர்.

– பிப்ரவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *