கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 6,010 
 

இன்று புகையிரதத்தில்தான் பயணிக்க வேண்டுமென நேற்றிரவு முடிவான பொழுதே எனக்குள் மெல்லிய சந்தோச அலை அடிக்கத் தொடங்கி விட்டது. எனது கணவர் இன்று நிகழ்ச்சி நடை பெறும் மண்டபத்துக்கு வேளைக்கே போய் முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கிறதாம். அதனால் அதிகாலையிலேயே தான் காரில் போய் விடுவதாயும் என்னை பின்னர் புகையிரதத்தில் வரும் படியும் கேட்டுக் கொண்டார்.

எப்போதும் இந்தக் காரில்தானே..! அதுவும் அதிவேக வீதியில் அவசரமாய்ப் பயணிப்பது. நீண்ட பொழுதுகளின் பின் புகையிரதத்தில் போக இப்படியொரு வாய்ப்பு என்றதும் உண்மையிலேயே எனக்கு சந்தோசம்தான். எனக்குத் தேவையான எல்லாவற்றையும் காருக்குள்ளேயே அடைத்து அனுப்பி விட்டேன்.

சிறிய கைப்பையுடன் ஒரு கொப்பியும் பேனையுமாக ஏறிய போது புகையிரதத்தினுள் யன்னலோரமாக இருக்கை கிடைத்தது. மனசுக்குள் சந்தோசம் துள்ளியது. வெயிலின் முறைப்பும் இல்லாமல், குளிரின் குத்தலும் இல்லாமல் காலைச் சிலிர்ப்போடு இயற்கை கண்களை இதமாக வருடியது. காற்று யன்னல் வழி மேனியைத் தழுவியது. இயற்கையை ரசித்த படி மனசு ஏகாந்தத்தில் சுகிக்கத் தொடங்கியது. புகையிரதம் தாலாட்டியது.

வெளி அழகாய்… மரங்கள் எல்லாம் அவசரமாய் நகர்ந்து கொண்டிருந்தன. குருவிகள் கெந்துவதும் ஏதோ நினைத்து விட்டு மீண்டும் பறந்து மரங்களில் குந்துவதுமாய் இருந்தன. கவிஞர் சோலைக்கிளி இதைக் கண்டால் கட்டாயம் ஒரு குருவிக் கவிதை புனைந்திருப்பார். எனக்கும் ஏதேதோ மனசுக்குள் பூத்தன. கவிதையாய் வடிக்க வார்த்தைகள்தான் வர மறுத்தன. – இனிது இனிது ஏகாந்தம் இனிது – ஒளவைப் பாட்டியின் வரிகளின் அர்த்தம் புரிந்தது.

திடீரென்று புரியாத பாசையில் கதைக்கும் பெரிய சத்தம் கேட்டது. ம்…… புகையிரதம் நின்றது கூடத் தெரியாமல்……..நான். அதற்கிடையில் அடுத்த தரிப்பு நிலையம் வந்து விட்டது. ஏறுவோரும் இறங்கியோரும் தத்தமது திசைகளில் வெளியில் விரைய.. ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த சில பெண்களும் ஒரு ஆடவனும் தமது உயர்ந்த குரல்கள் மற்றவர்களைத் தொந்தரவு செய்யுமே என்ற எந்த வித பிரக்ஞையுமின்றி அடிக்குரலில் உரத்துப் பேசிய படி நானிருந்த பெட்டியினுள் ஏறினார்கள்.

நான் மீண்டும் யன்னல் வழி பார்வையைச் செலுத்தி இயற்கையுடன் ஐக்கியமாகினேன். மனசுக்குள் இனிமையான கவிதையொன்று பிரசவமாவது போன்றதொரு மகிழ்வான உணர்வு. சோதியா, சோலைக்கிளி, …….. போன்றோரின் கவிதைகள் இப்படியான சந்தர்ப்பங்களில்தான் பிரசவித்தனவோ..! விஜயராகவனின் நுங்குக் கவிதை அடிக்கடி மனசுக்குள் எட்டிப் பார்த்தது. அவனுக்குக் கவிதையை அழகாக வாசிக்கவும் தெரியும். ஒரு தரம் அவனது நுங்குக் கவிதையை ஐபிசி-தமிழ் வானொலியில் கேட்டு விட்டு இரவெல்லாம் ஒரே நுங்குக் கனவு. பாட்டா சீக்காய்களை எல்லாம் ஒரு பக்கமாய் ஒதுக்கி விட்டு தன் வீட்டு முன்றலில் நின்ற ஒற்றைப் பனையிலிருந்து கந்தசாமியைக் கொண்டு இறக்குவித்த பருவ நுங்கைப் பக்குவமாய் சீவி பெருவிரலால் குத்தி இழுத்து பனைமுகிழில் விட்டு……… ம்…ம்… நாக்கில் சுவை நரம்புகள் சுரந்து……… பக்கத்தில் அடிடாஸ் ஆஃப்ரர்சேவின் வாசனை கமகமக்க – ஹலோ – என்றது ஒரு குரல். நுங்கை அப்படியே அந்தரத்தில் விட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தேன். சற்று முன்னர் வந்த ஆப்பிரிக்கப் பிரயைகளில் ஒருவனான அந்த ஆடவன்தான் என் அருகில் அமர்ந்தான்.

இவனோடு கூட வந்த பெண்களுக்கருகில் இவனுக்கு இடம் கிடைக்கவில்லைப் போலும். பதிலுக்கு – ஹலோ – சொல்லி விட்டு மீண்டும் யன்னலினூடு நான் இயற்கையிடம் சென்றேன்.

– மன்னிக்கோணும். உனக்கு என்ன பெயர் என்று சொல்வாயா..? – ஆபிரிக்கன் யேர்மனிய மொழியில் வினவினான்.
திரும்பி – கோகிலா – என்றேன்.
ம்… கோ..லா.. நல்ல பெயர். எனது பெயரை அவன் அப்படித்தான் உச்சரித்தான்.
– நன்றி – சொல்லி விட்டு அவனது பெயரைக் கேட்காமலே மீண்டும் யன்னல் வழி வெளியோடு ஐக்கியமானேன்.
– கோ…லா…! எங்கை போறாய்..? ஸ்ருட்கார்ட்டுக்கா..? –
– ம்… –
– அங்கு வேலை செய்கிறாயா..? –
– இல்லை. எமது நாட்டுக் கலை நிகழ்வு ஒன்றுக்குப் போகிறேன். –
– உன்னை எனக்குத் தெரியும். நீ உனது தங்கையை சங்கீத வகுப்புக்கு கூட்டி வரும் போது நான் காண்கிறனான். –
– அப்படியோ…..! எனக்கு உன்னைத் தெரியாது. நான் உன்னை ஒரு நாளும் கண்டதில்லை. அதுபோக அது எனது தங்கை இல்லை… மகள்..! –
– நான் நம்ப மாட்டன். நீ இவ்வளவு இளமையாக இருக்கிறாய். ஆசியப் பெண்கள் எல்லாம் இப்படித்தான் அழகாக இருப்பார்களோ..? –

ம்… தொடங்கி விட்டான். இந்த ஆண்களே இப்படித்தானோ! தமது மனைவியரல்லாத வேறு எந்தப் பெண்ணைக் கண்டாலும்.. நீ அழகு.. நீ இளமை என்று.. சின்னதான எரிச்சல் மனசுக்குள் தோன்றியது. மீண்டும் யன்னல் வழி வெளியே லயிக்க முனைந்த போதெல்லாம்.. கோ..லா..! கோ..லா..! – என்று அழைத்து எனக்கு கோபமூட்டினான்.

ஓவ்வொரு தரிப்பிலும் இறங்குவொரும் ஏறுவோருமாக பயணிகள் மாறிக் கொண்டிருக்க இவன் மட்டும் என்னருகில் என் தனிமையைக் குலைக்க என்றே இருந்தான். என் சந்தோசத்தை மெதுமெதுவாகச் சூறையாடினான்.

கோ…லா என்னோடை ஒரு நாளைக்கு கோப்பி குடிக்க வருவியோ..?

ம்.. யேர்மனியில் ஒருவன் ஒரு பெண்ணை இப்படிக் கேட்கிறான் என்றால் அதன் அர்த்தம் வெறுமனே கோப்பி குடிப்பதற்கான அழைப்பல்ல. அதற்கும் மேலான சம்மதம் தேடல் அது. அருகமர்ந்து அரை மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்கிடையில் அவன் தேடல்.. அவனைச் சொல்லிக் குற்றமில்லை. இது யேர்மனிய நாகரிகங்களில் ஒன்று.

– இல்லை. எனக்கு நேரமில்லை. – வார்த்தைகளோடு எரிச்சலும் ஒட்டியபடி வெளியில் கொட்டியது.
– பிளீஸ்… ஒரு நாளைக்கு. ஒரே ஒரு நாளைக்கு… –
– இல்லை. எனக்கு இவைகளுக்கு நேரமுமில்லை. இவைகளில் ஆர்வமுமில்லை. நான் திருமணமானவள். எனக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள். –
– அதனால் என்ன..? நானும் திருமணமானவன்தான். –
– அப்படியானால் உனது மனைவியுடன் போய் கோப்பியைக் குடியேன். – சொல்ல வந்த வார்த்தைகளைச் சொல்லாமல் விழுங்கிக் கொண்டேன்.

அவனது கரைச்சல் தொடர்ந்தது. கெஞ்சிக் கேட்டான். யேர்மனியர்கள் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். எனக்கு நேரமில்லை என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும். அப்படியே ஒதுங்கி விடுவார்கள். நாளாந்தம் சந்திப்பவர்களாக இருந்தால் அந்த எண்ணத்தை அப்படியே விட்டு விட்டு மீண்டும் நட்பாகப் பழகத் தொடங்க விடுவார்கள். இவன் ஆப்பிரிக்க நாட்டவன் என்பதாலோ என்னவோ எனக்கு விருப்பமில்லையென்று சொன்ன பின்னும் – தொலைபேசி இலக்கத்தைத் தருகிறாயா..? முகவரியைத் தருகிறாயா..? – என்று கரைச்சல் படுத்திக் கொண்டே இருந்தான்.

இயற்கையோடு நான் ஒன்றும் போதெல்லாம் என்னைக் குழப்புவதிலேயே குறியாக இருந்தான். அவனைத் திசை திருப்ப எண்ணி வெளியிலே தாயின் கையைப் பிடித்த படி செல்ல நடை போடும் ஒரு குழந்தையைக் காட்டி – அந்தக் குழந்தையைப் பார்த்தாயா..? எவ்வளவு அழகாக இருக்கிறாள்.. – என்றேன். உண்மையிலேயே அந்தக் குழந்தை துறுதுறுத்த கண்களுடன் துடிப்பாய் தெரிந்தாள். கன்னத்தைக் கிள்ளிப் பார்க்க வேண்டும் போல ஆசை வந்தது. ஆனால் அவனால் அக் குழந்தையிடம் லயிக்க முடியவில்லை. என்னைச் சம்மதிக்க வைப்பதிலேயே மும்முரமாக இருந்தான்.

எனது இன்றைய தனித்த ரெயில் பயணத்தில் ஏகாந்தமாய் இருக்கலாம் என்ற என் இனிமையான நினைப்பு தொலைந்து வெகு நேரமாகியிருந்தது. இதற்கு மேலும் தாங்காது வேறு எங்காவது போய் இரு – என்று மனசு சொல்லியது. எரிச்சலோடு எழுந்து பார்த்தேன். எல்லா இருக்கைகளுமே நிரம்பி இருந்தன. பரவாயில்லை ஏதாவதொரு மூலையில் போய் நிற்பது உத்தமமெனத் தீர்மானித்தபடி எனது கைப்பையையும் கொப்பியையும் பேனையையும் எடுத்துக் கொண்டு அவனைத் தாண்டி நடந்தேன்.

– கோ..லா.. எங்கை போறாய்..? –
– அங்காலை போய் இருக்கப் போறன். –
– ஏன்..? –

நான் பதில் சொல்ல வில்லை. விரைந்து நடந்தேன். இருப்பதற்கு இடம் கிடைக்கவில்லை. வெளிச் செல்வதற்கான கதவோடு அண்டிய ஒரு மூலையில் போய் நின்று எனது கொப்பியைப் பார்த்தேன். அது எதுவுமே எழுதப் படாமல் வெறுமையாக இருந்தது. நேரத்தைப் பார்த்தேன். ம்.. இன்னும் சில நிமிடங்களில் ஸ்ருட்கார்ட் வந்து விடும். ஏமாற்றத்தின் நடுவே ஒரு நிம்மதிப் பெருமூச்சு.

– 10.6.2003

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *