பயங்கரப் பாதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 28, 2022
பார்வையிட்டோர்: 2,308 
 
 

(1950 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலையில் வழக்கத்துக்கு மாறாகச் சற்று முன்ன தாகவே கண்விழித்தேன். சூரியன் உதயமாகவில்லை. சேலைக் கரை போன்று மஞ்சளும் கருப்பும் கலந்து அடி வானம் காட்சியளித்தது. காகங்கள் கதறிக் கொண்டு வீட்டுக்குமேல் பறந்தன. எனது குட்டி நாய் ஜோலி’ ஒன்றுமில்லாத ஒன்றைப் பிடிப்பது போல் அங்குமிங்கும் பாய்ந்து விளையாடியது.

நான் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். செய்வதற்கு ஒன்றுமில்லை; சிந்தனை சுழன்றது.

கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருந்த கடல் தன் அலைக் கரங்களைத் தட்டி ஆதவனை அழைத்தது. கடைசி முறை யாகத் தன் கூவல் சத்தத்தை முடித்துக் கொண்டு சேவல் மரத்தில் இருந்து கீழே குதித்தது. குட்டி நாய் ‘ஜோலி’ சேவலைத் துரத்தியது.

வாடைக் காற்று மெதுவாக உலகத்தைத் தடவிக் கொண்டிருந்தது. குளிரில் இருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள இரு கைகளையும் மார்பு மீது கட்டி அணைத்துக் கொண்டேன். இந்தச் சமயத்தில் எங்கிருந்தே ஒரு எண்ணத் துண்டு சிதறியது.

‘பத்திரிகைக்கு ஏதாவது எழுதலாமே!’

உடனே மனம் கேட்டது “என்ன எழுத்தாளனாகப் போகிறாயா?’

‘ஆம்! இலக்கியச் சேவை செய்யப் போகிறேன்” அறிவு சொல்லிற்று.

மனம் இலேசாகச் சிரித்து விட்டு, ‘அது பயங்கரப் பாதை உனக்கு வேண்டாம்’

அறிவுக்குக் கோபம் வந்து விட்டது. ‘உனக்கு எப் பொழுதும் கொப்புத்தாவும் குணம்தான், முன்பெல்லாம் எழுது எழுது என்றாய்; இப்பொழுது என்னடாவென்றால் வேண்டாம் என்கிறாய்!’

கோபப்படாதே. உலகத்தின் ஓரக் கண்களில் சிக்கிச் சிதைந்த நான் கண்ட அனுபவம் உனக்கும் கிடைத்திருந் தால் நீ இப்படிப் பேச மாட்டாய், கண்ணைத் திறந்து கொண்டு ஏன் பள்ளத்தில் விழுவதற்கும் இலக்கியச் சேவை செய்வதற்கும் என்ன பொருத்தம்?’

‘இலக்கியச் சேவை! மனம் சிரித்தது பொருத்தமில்லாமலா? அர்த்தமில்லாமல் எதுவும் நடப்பதில்லை தம்பி!’ அர்த்தமற்ற பேச்சு. அறிவு முகத்தைத் திருப்பிக் கொண்டது.

‘ஆரம்பத்தில் நீ அப்படித்தான். முட்டிய பின் தான் தலையைக் குனிந்து கொள்வாய். அனுபவம்தான் அர்த்த மாகிறது என்று உனக்குத் தெரியாதா?’

‘நீ என்ன அனுபவத்தைக் கண்டு விட்டாய் ‘ சுகவாசி’! அறிவுக்குக் கோபம் வந்து விட்டது.

‘நானும் காணவில்லை நீயும் காணவில்லை கண்டவர் களையாவது கேட்டிருக்கிறோமல்லவா?’

‘அவர்களும் வாழ்ந்து போனவர்கள் தானே?’

“தாழ்ந்து போனவர்கள்! வாழ்ந்து வழிகாட்டியவர்கள்”.

“அவர்கள் காட்டிய பாதையைத்தான் நான் பின்பற்றுகிறேன்”. அறிவுக்குக் கொஞ்சம் தைரியம் பிறந்தது.

‘எதை! அவர்கள் வாழ்ந்து துன்பப்பட்ட அந்தப் பயங்கர வாழ்க்கையை யார்’

“இல்லை, அவர்கள் இலக்கிய வாழ்க்கையை!

பஞ்சமும் பசியும் நிறைந்த அவர்கள் வாழ்க்கையையா? தாங்கள் கண்ணீர் விட்டதுமில்லாமல் தங்கள் பெண்டு பிள்ளைகள் கண்ணீர் விடுவதைப் பார்த்துக் கதறியழுத அவர்கள் வாழ்க்கையையா?’

அறிவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை ஒரு விதமாகத் தட்டுத் தடுமாறிக் கொண்டு இல்லை. அவர்கள் செய்த சேவையை.’

‘சேவையினாலே எல்லாம் பூரணத்துவம் ஆகிவிடும் என்று எண்ணுகிறாயா?’

அதுதானே ஊழிக் கூத்தின் தத்துவம்.

அது தேவர்களுக்குத் தம்பி! மனிதர்கள் வாழவேண்டிய வர்கள்; வாழ்க்கைத் தத்துவத்தைத்தான் முதலில் உணர வேண்டும்.

“வாழ்க்கையும் ஒரு சேவைதானே?”

“கடமையின் வரம்புக்குள் செய்யும்பொழுது வாழ்க்கை சேவையாகும். நீ புகழ்ச்சியை விரும்புகிறாய், அது மின் மினிப் பூச்சி! இருட்டிலே தான் ஒளிவீசும்; ஆனால் உன்னை நம்பி ஒட்டிய வயிறுடன் வீட்டு மூலையில் முடங்கிக் கிடக்கும் உன் சொந்தங்களுக்கும் செய்ய வேண்டிய கடமையைப் பற்றிக் கவலையில்லையா உனக்கு?”

‘இலக்கியச் சேவை சமுகத்துக்குச் செய்வது சமுகம் என்னை வாழவைக்கும்.’

அதனால் தான் சொல்கிறேன் நீ பயங்கரப் பாதையை நோக்கிச் செல்கிறாய் என்று. இளநீர் குடிப்பவனுக்கு மரத்தைப் பற்றிய கவலை இருப்பதில்லை! அவனுக்கு வேண்டியது இள நீர் தான்! இப்படித்தான் இருக்கிறார்கள் இலக்கிய ரசிகர்கள். அவர்களுக்கு வேண்டியது இலக்கியம் ஆக்கியவனைப் பற்றிக் கவலையில்லை. அவர்களுக்கு இலக்கியம் ஒரு பலிபீடம்! ஆயிரக்கணக்கான அறிவுச் சுடர்களைப் பலியாக்கி விட்டது இந்த இலக்கிய பீடம்! நீ அதற்கொரு போடுகாயாகப் போகிறாயா? என்ன?’

அறிவு பயந்து விட்டது என்ன? ‘இலக்கியம் ஒரு பலிபீடமா?’

மனம் சிரித்தது; அதற்கு வெற்றி கிடைக்கப் போவதில் ஒரு நம்பிக்கை .

‘இவ்வளவு தான்? உலகமும் உண்மையும் தெரியாமல் உளறி விட்டாய் போலும். கேள்! இலக்கியத்தின் சரித்தி ரத்தை, மனம் உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தது.

இலக்கியம் ஒரு நந்தவனம் தான். அதன் மலர் மணம் உன்னைப் பரவசப் படுத்தலாம், வெகு தூரத்துக்கப்பால் இருக்கும் புகழ் ஏணி உன்னை வா! வா!! என்றழைக்கலாம். அதில் மயங்கிக் காலை எடுத்து வைத்தாயோ? உன் காலை வாரியடித்து வாழ்க்கைப் பல்லைப் பிடிங்கிவிடும்.

இலக்கியச் சேவை செய்தவர்கள் எண்ணிறந்தவர்கள். கவிகள், கதாசிரியர்கள். நாடகாசிரியர்கள், அறிஞர்கள், பெரும்பாலும் அவர்கள் எல்லாரையும் பலி வாங்கி விட்டது இந்த இலக்கிய பீடம்.

‘இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் கம்பர் மகன் அம்பிகாபதி வாழ்ந்தான், அவன் கவிஞன்! இலக்கியச்சேவை செய்யப் பிறந்தவன். ஆனால் உருவாகு முன்பே உதறியடித்து விட்டது இந்த இலக்கியம் அவனை!

குலோத்துங்கன் சபையிலே வால்மீகியின் இராமாய ணத்தை அடிப்படையாக வைத்துத் தமிழிலே இராமாயண காவியம் இயற்ற ஒப்புக் கொண்டார் கம்பர்! புகழுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டும்! அம்பிகாபதி அதை எதிர்த்தான் மறுத்தான்.

“தமிழ் இலக்கியம் எப்பொழுதும் பிச்சை வாங்கிய தில்லை, முத்தமிழிலேயே முழுக்காவியம் இயற்றவேண்டு மென்றான்.”

மன்னன் மறுத்தான்; மற்றவர்கள் சிரித்தனர். அம்பிகா பதி யாரையும் பொருட்படுத்தவில்லை.

தமிழன் பிச்சை வாங்க மாட்டான்” என்று கர்ச் சித்தான். பலன் அரச அவையை விட்டு அப்புறப்படுத்தப் பட்டான். முடிவு என்ன தெரியுமா? ஒன்றைக் காரணமாக வைத்து மற்றொன்றுக்குப் பலிவாங்கியது இலக்கிய பீடம், மன்னன் மகனைக் காதலித்தான் என்ற சாயையில்,

உடனே அறிவு குறுக்கிட்டது. இது பழைய கதை தமிழ் இலக்கியத்தில்.

ஏன் மேலை நாட்டிலக்கியம் வேண்டுமா? மனம் தொடர்ந்தது தன் ஆராய்ச்சியை.

மில்டன்! ஒரு மேலை நாட்டு இலக்கிய கர்த்தா. அவன் கண்களில் இருந்து ஓடிய ஓவ்வொரு நீர்த் துளியும் ஒவ்வொரு காவியமாக உருவெடுத்தது. அவன் மகள் அவனது இலக்கியச் சேவைக்குக் கை கொடுத்தாள். ஏன் இயற்கை அவன் கண்களைக் குருடாக்கியதால்.

டோக்கியுட்டோ டோசோ! 51 ஆண்டுகள் இந்த உலகத்தில் வாழ்ந்தான்! இல்லை! வாழ்க்கையுடன் போராடினான், அவன் கவி பாடினான் இலக்கியம் வாழ! இலக்கியச் சேவைதான் அவன் வாழ்வாக இருந்தது. இதற்கு இலக்கிய பீடம் கொடுத்த பரிசு என்ன? ஏழாண்டுச் சிறை வாசம். ஒரே தொல்லை, வாழ்வு துன்பக்காடு, பசி, பிணி, முடிவில் இலக்கியமே அவனைப் பலி வாங்கியது.

மகாகவி புஸ்கின்! கண்ணீரையும் கவிதையையும் இலக்கிய பீடத்துக்கு அர்ப்பணித்தவன், இயற்கையை இலக்கியமாக்கினான். செடிகளின் இலை அசைவிலே அவன் கவியோசை கிளம்பியது! அவனது ஒவ்வொரு கவிதையும் துயரத்தின் சாயை தான். துன்பம் அவனுக்குக் குடை பிடித்தது. அப்பொழுதும் அவன் இலக்கிய சேவை செய்தான். பலன்? ‘வறுமையின் உச்சியிலே நான் தனியாக விடப்பட்டேன்” என்று அழுது கொண்டே செத்தான் இல்லை இலக்கியம் கொலை செய்தது அவனை.

இஸ்டீவன் சன்! ‘ஒளிக்குமுன் இருள் என்ன செய்யு மென்று கேட்டான். பாத்திரங்களைப் பேனா முனையில் நடக்கவிட்டுப் பார்த்தவன் அவன். அவனுக்கு என்னத்தைக் கொடுத்தது இந்த இலக்கிய பீடம்?”

வில்லியர்! இந்த உலகத்தைப் பார்த்து ஆச்சரியப் பட்டான். பிணிதான் அவனுக்கு வசந்த காலம், வறுமை தான் அவனுக்குத் தென்றல் காற்று. வாழ்பவர்களைப் பார்த்து சாவு தான் வந்தனை செய்ய வேண்டுமென்று கர்ச் சித்தான். பசி தாங்க முடியாது நோயின் அடிதாங்க முடியாது தற்கொலை செய்து கொண்டான்.

இஸ்டீன் பேக் உலகத்துக்கு உண்மையைச் சொன்னவன் கடவுளைத் தேடினேன் காணவில்லை சைத்தான்கள் தான் கடவுளாக நடிக்கின்றன!” அவன் கதைகள், கவிதைகள் பித் தம் தெளியாத வெறும் உளறல் என்றது ரசிகர் கூட்டம்.

ஆம், நான் பைத்தியக்காரன் தான் இலக்கியச் சேவை செய்யச் சளைக்காத பைத்தியக்காரன் என்றான். முடிவு? ‘பித்தன்’ என்ற பட்டத்தை அளித்தது இலக்கிய பீடம்.

இது மேலை நாடு மறைத்து வைத்திருக்கும் இலக்கியத் தின் சரித்திரம். நம் தமிழ் நாட்டுக் கவியைத் தெரியுமா உனக்கு?

அமுதகீதம் பாடிய ஆற்றல் மிக்கக் கவிஞன் அவன், குழு றும் தன் உள்ளத்தை இருகைகளாலும் அமுக்கிப் பிடித்தபடி உணர்ச்சி பொங்கக் கவி பாடினான், தமிழ் இலக்கியத்தில் மறுமலர்ச்சித் தேன் கலந்து ஊட்டியவன், இலக்கியத்துக்கு விடுதலை தந்தவன் தேச விடுதலைக்குப் பாடுபட்டவன்.

அன்றொரு நாள் மகாத்மா காந்தி முதல் முறையாக சென்னைக்கு விஜயம் செய்தார். நமது கவிக்குயிலைக் கண்டார். ‘இவர் யாரென்று கேட்டார். ராஜாஜி சொன் னார். இவர் எங்கள் நாட்டுக் கவி’ என்று. மேதைதான். மேதையை அறியமுடியும். காந்திஜீ சொன்னார். இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமென்று அத்தகைய மேதையை, கவிக்குஞ்சரத்தை, மகாகவி சுப்ரமணிய பாரதியை, இலக்கியம் காப்பாற்றியதா? இருக்க இடமின்றி உண்ண உணவின்றி நாடோடியாக் கியது. அவனை இந்த இலக்கிய பீடம். காலமெல்லாம் கந்தல் கோட்டை அணிந்திருத்தான் பட்டினியால் பரி தவித்தான், முடிவில் யானையின் காலால் மிதித்துச் சாக டிக்கப்பட்டான். அவனது அந்தக் கோர மரணத்தைப் பார்த்துச் சிரித்தது இலக்கிய பீடம்!

புதுமைப் பித்தனை அறிந்திருக்கிறாயா? நீ? சிறு கதை மன்னன் அவன். கருத்துச் சொட்டும் கவிஞன், தமிழ் சிறுகதை இலக்கியத்திற்கு புது மெருகூட்டியவன் இலக் கியத்திலே அற்புதங்கள் புரிந்த ஜாலவித்தைக்காரன், அந்தப் புதுமை பித்தன், புகழை வெறுத்தவன், இலக்கிய சேவையே என் உயிர் மூச்சு என்றவன். எழுதி எழுதிக் குவித் தவன், எண்ணற்ற கதை மலர்களை இலக்கிய பீடத்திற்கு அர்ப்பணிந்தவன். தேகம் எலும்புக்கூடு; விரல்கள் வேப்பங் கச்சி. அவன் விரலிலே பேனா நாட்டியமாடியது. பாத்தி ரங்கள் சுயரூபத்தில் பேசின, அவனிடம். மனித குலம் பதுமைகளைக் கண்டு பயப்படும் முயல் குட்டிகள் என்று வெளிப்படையாகச் சொன்னான். மனிதக் கும்பலைப் பார்த்து உருப்படியாக எதையும் செய்யத் திராணியற்ற மனிதப் புழுக்கள் என்று அறை கூவினான்.

சர்வதேச இலக்கியத்தில் எல்லைக் கோடு என்று போற்றுகின்றனர் அவன் எழுத்துக்களை! ஆனால் இலக்கிய பீடம் கொடுத்த பரிசு என்ன? வறுமை, காலமெல்லாம் மனக்கவலை, இவைகள் தாம் கிடைத்த பரிசு! நோய் வழிகாட்டியது, வறுமை குடை பிடித்தது. இலக்கியத் துக்காகவே வாழ்ந்தான். அவன் எழுத்து இலக்கியத்தை வளர்த்தது. அவன் பேச்சு இலக்கியத்தை சீராட்டியது. அவன் மூச்சு இலக்கியத்தைத் தாலாட்டியது. அவன் உயிர் இலக்கியத்துக்குப் பலியாகியது! சாகும்போதுகூட இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது?” என்று கேட்டு விட்டுத்தான் செத்தான். இன்றைய இலக்கிய பீடத்தின் சரித்திரத்திலே பலியாகிய கடைசி மனிதன் புதுமைப் பித்தன். தமிழ் இலக்கியத்திலே அமரன்! ஆனால் வறுமை யென்னும் மெத்தையிலே நோய் முள்ளுக்குத்தத் துன்ப வேதனையிலே உழன்றவன் அந்தப் புதுமைப் பித்தன்.

இலக்கிய பீடம் இன்னும் அலுத்துப் போகவில்லை. இன்னும் எத்தனையோ உயிர்கள் அதற்குத் தேவை. இரக்கம் என்பது அதனிடம் இல்லை. கருணைகாட்ட அதற்கு நேரமில்லை. தனக்குச் சேவை செய்தவர்களை யெல்லாம் முதலை விழுங்குவது போல் விழுங்கிவிட்டது இந்த இலக்கிய பீடம். எனவேதான் சொல்கிறேன். அந்தப் பயங்கரப் பாதை உனக்கு வேண்டாம் என்று. மனம் தன் நீண்ட பிரசங்கத்தை முடித்துக் கொண்டது.

அறிவு எதுவும் பேசவில்லை பேசுவதற்கு அதனிடம் ஒன்றுமில்லை. சிறிது நேரத்திற்குப் பின் “பயங்கரமான பாதைதான்” என்று ஒரு பெருமூச்சு விட்டது.

மனம் இலேசாகச் சிரித்தது.

“தேத்தண்ணீர் ஆறுகிறது” என்று சொன்ன என் நண்பனின் குரல் கேட்டு என் சிந்தனையும் கலைந்தது.

– 1950, பித்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்ச் 1995, மல்லிகைப்பந்தல் பதிப்பகம், யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *