கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 24, 2019
பார்வையிட்டோர்: 95,304 
 
 

(1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

பம் பகதூர் என்ற யானையின் மாவுத்தன் மத்தாதின், யானை நாளுக்கு நாள் அடங்காப்பிடாரியாக ஆகிக் கொண்டு வருவதாக இளவரசனிடம் முறையிட்டான். அதன் துணைக்கு சீக்கு. எனவே, டாக்டரின் உத்திரவுப் படி அதை அதன் ஜோடியிடமிருந்து பிரித்து வைத்திருந்தார்கள். ஆனால், ஒவ்வொரு நாள் மாலையிலும் அதன் துணையை அதனுடன் உலாவ அழைத்துப் போகாவிடில் பம் பகதூர் அட்டகாசம் செய்தது; கர்ஜித்தும் பிளிறியும் களேபரப்படுத்தியது. அதன் துணையை அதனுடன் இட்டுச் சென்றால் அது துணைக்குத் தொல்லை தந்தது. துணையின் முதுகில் தன் தும்பிக்கையைத் தூக்கிப் போடாமல் அது வெளியே நகர மறுத்தது. மத்தாதின் பம் பகதூரைக் கண்டித்தால், அது தன் கோபத்தை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தியது.

“கவலைப் படாதே, மத்தாதின்” என்று இளவரசர் மாவுத்தனைத் தேற்றினார். “நம் பம் பகதூர் தன்னை ஆடம்பரமாகக் காட்டிக் கொள்ள ஆசைப்படுகிறது. சிறிது காலமாக அந்த வாய்ப்பு அதுக்குக் கிடைக்க வில்லை. அடுத்த புதன்கிழமை, நான் என் புது மனைவியை அவளது புது வீட்டுக்கு அழைத்து வருவேன். அப்போ நீ பம் பகதூரை தடவுடலாக அலங்கரித்து, ரயில் நிலையத்துக்கு இட்டு வா. நாங்கள் அதன் மீது அமர்ந்து அரண்மனை சேர்வோம்.”

பம், அதன் பெயருக்கேற்றபடி வீரமான யானை மட்டுமல்ல; மிகப் பெருமை உடையதும் கூட. அதன் இந்தக் குணத்தை இளவரசர் மிகப் பாராட்டினார். அரசு விழா மற்றும் ஊர்வலங்கள் அனைத்திலும், பம் பகதூர் கவனத்துக்கு உரியதாகத் திகழ வேண்டும் என்பதில் மகாராஜா அதிக அக்கறை காட்டினார். பூரண அலங்காரம் பெற்ற நிலையில் அதன் போக்குகள் நிறைவுற்று விளங்கும். சிறந்த பயிற்சி பெற்ற படைவீரன் அணிவகுப்பில் நடப்பதை விட உயரிய முறையில் அது நடந்து கொள்ளும். ஆனால் அதே பம் பகதூர் லாயத்தில் பெரும் தொல்லை செய்யும் மனித சுபாவங்களைக் கண்டறியும் அதீத உள்ளுணர்வு அதுக்கு இருந்தது. அதனால், பாதுகாப்பாளனின் சின்னஞ்சிறு குறை அல்லது ஒழுங் கீனமான செயல் கூட அதன் கோபத்தை வெகுவாகக் கிளறிவிடும்.

சில சமயம் பணியாளர்கள் பேசிக் கொள்வார்கள்: “பம் நல்ல யானை தான். ஆனால் மாவுத்தன் அதன் தீனியிலிருந்து திருட ஆரம்பித்த நாள் முதலாக, அது அவன் பேரில் வஞ்சம் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் மிக நேர்த்தியான யானை என்ற பெருமையைக் கேட்பதில் பம் சந்தோஷப்படுமே.”

இளவரசர் தன் புது மணப் பெண்ணுடன் உதயப்பூரிலிருந்து திரும்பி வந்தார். ரயில் நிலையம் விழாக்கோலம் பூண்டிருந்தது. சாலை நெடுக நீண்ட கார் வரிசை குதிரைப் படையினர், தங்கள் எடுப்பான உடைகளோடு, அராபியக் குதிரைகள் மேல் மிடுக்காக அமர்ந்திருந்தனர். அணிகள் அனைத்தும் பூண்டு பம் பகதூர் நின்றது. மின்னும் பெரும் கவசம் அதன் பின்புறத்தை மறைத்திருந்தது. பொன்மய அம்பாரியில் கோர்க்கப் பட்டிருந்த சிறு பொன்மணிகள் கிணுகினுத்தன. அதன் தந்தங்களில் கூடத் தங்கத் தகடுகள் மிளிர்ந்தன. அதன் முதுகில் மத்தாதின், தான் இருந்த உயரத்தை உணர்ந்தவனாய், கீழே நின்ற கூட்டத்தை பார்த்திருந்தான்.

இளவரசரும் அவரது மகாராணியும் அம்பாரியில் ஏறிய போது கூட்டம் ஆரவாரம் செய்தது. பம் பகதூர் தன் துதிக்கையை உயர்த்தி வணங்கியது. ஊர்வலம் தொடங்கியது. பம் ராஜகம்பீரத்துடன் நடந்தது. அதனிடம் சதா குறைகண்ட மத்தாதின் கூட மனநிறைவு பெற்றான். மிக்க நளினத்துடன் ஆடி அசைந்து சென்ற பம் பகதூர், தன் முதுகில் சுமந்து வந்த அரச தம்பதிகளை அரண்மனை முன்வாசலில் இறக்கியது.

தன் மணமகளை விருந்தினருக்கு அறிமுகப்படுத்துமுன், இளவரசர் தன் யானையிடம் பேசினார்: “பம் பகதூர், இது உன் புதிய மகாராணி, நீ என்னைவிட அதிக ஆவலோடு இவளை எதிர்பார்த்திருக்கலாம்.” பம் பகதூர் துதிக்கையை உயர்த்தி மகாராணிக்கு வணக்கம் செலுத்தியது.

அழகு மிக்க மகாராணி அன்பின், பிரியத்தின் அவதாரமாக விளங்கினாள். அவள் ஏறத்தாழ இளவரசர் உயரம் இருந்தாள். அகன்ற நெற்றியும், திரண்ட உதடுகளும் பெற்ற அவள் கண்கள் பெரியவை, கருமையானவை, ஒளிநிறைந்தவை. அவள் விழிகளால் பார்த்தது போலவே, அவற்றால் பேசவும் செய்தாள். யார் மீது அவள் பார்வை பட்டாலும் சரி, அவர்கள் முற்றிலும் வசியமானார்கள். நன்கு சுருதி மீட்டிய சிதார் வாத்தியத்தை லேசாகத் தொட்டு இசை எழுப்பும் திறனுடைய இறகு போலவே அவையும் இருந்தன.

அழகுக்கு வணக்கம் செலுத்துவது போல் பம் பகதூர் துதிக்கையைத் தூக்கியது.

“பம் யானை மட்டுமல்ல. என் நண்பனும் கூட. நாங்கள் ஒரே நாளில் பிறந்தோம்” என்று இளவரசர் கூறினார்.

மகாராணி கரம் கூப்பி பம் பகதூரின் வணக்கத்தை ஏற்றாள். வம் பகதூர் தன் துதிக்கை நுனியால் அவற்றை லேசாய்த் தொட்டது. பிறகு, பயிற்சி பெற்ற ராணுவ வீரன் போல், சீராக நின்றது; அதன் கண்கள் மகாராணி மேல் நிலைபெற்றிருந்தன.

பம்மின் இதயத்தில் பெருகிய உணர்ச்சியை இளவரசர் உணர்ந்தார். “நமது பம், யானையின் உடலைப் பெற்றிருந்தாலும், ஒரு காதலனின் உள்ளம் அதுக்கு இருக்கிறது. அதுக்கு கண்டுணரும் சக்தி, முக்கியமாக அழகு முகங்களை அறியும் சக்தி, இருக்கிறது” என்று இளவரசர், மகாராணியைக் குறும்பாகப் பார்த்தபடி, முணுமுணுத்தார்.

மகாராணி தன் கண்களை இளவரசன் மீதும், பிறகு பம் மேலும் திருப்பினாள். இருவர் கண்களிலும் காதலின் ஒரே செய்தியைக் கண்டறிந்தாள் களிபெருவகை கொண்டாள்.

பல நாட்கள் இளவரசர் திருமண வைபவங்களில் ஈடுபட்டிருந்தார். அதனால் வாரம் ஒரு முறை சென்று யானையைப் பார்ப்பதை தவற விட்டார். இதற்கிடையே பம் பகதுருக்கு அதன் மாவுத்தனிடமிருந்து மனக்குறை அதிகரித்து வந்தது. மாவுத்தனது கட்டளைகளில் அது எரிச்சலுற்றது. அது மெலியலாயிற்று. காரணம், வழக்கமாக அது பெறக் கூடிய தீனி குறைந்து வந்தது தான்.

தக்க தருணம் பார்த்து, மத்தாதின் பம் பகதூரின் வளர்ந்துவரும் துர்க்குணம் பற்றி இளவரசரிடம் மீண்டும் முறையிட்டான். அதை மிருகக் காட்சி சாலைக்கு அனுப்ப வேண்டும் என யோசனை கூறினான். அதன் இடத்துக்கு அங்கிருந்து வேறு ஒரு குட்டி யானையைக் கொண்டு வந்து, அரச யானைக்கு உரிய பணிகளை உரிய முறையில் பயிற்றுவிக்க வேண்டும் என்றான்.

“இல்லை. பம்மிடம் எந்தக் குற்றமும் இல்லை” என இளவரசர் உறுதியாகச் சொன்னார். “நான் அதைக் கவனிக்கத் தவறிவிட்டேன். பம் உயிரோடு இருக்கும் வரை, வேறு யானை அதன் இடத்துக்கு வரக்கூடாது.

அன்று இரவு இளவரசர் மகாராணியிடம் பம்மின் நேர்மை பற்றிய பல நிகழ்வுகளைக் கூறினார். அரசுப் பணிகள் காரணமாக அவர் தன் நண்பனை அலட்சியப்படுத்த நேர்ந்ததற்காக வருத்தப்பட்டார். லாயத்துக்கு வாரம் ஒரு முறையாவது போய் பம்மை கவனிக்கும்படி மகா ராணியை அவர் கேட்டுக் கொண்டார்.

மகாராணியும் உடனே இசைந்தாள். மறுநாளே, ருசியான மாவால் பத்து சேர் லட்டுகள் செய்து எடுத்துக் கொண்டு அவள் யானையைப் பார்க்கப் போனாள். பம்முக்கு, துயர மேகங்களுடே திடீரென சூரியன் பிரகாசித்தது போலிருந்தது. அதுக்கு அடக்க இயலாத ஆனந்தம். மகாராணி தன் கையாலேயே சுவையான லட்டுக்களை அதன் வாயில் ஊட்டியபோது, அதன் மேனி மகிழ்வால் சிலிர்த்தது. அது தன் சிறிய வாலை ஆட்டியது; காதுகளை அசைத்தது. அதன் துதிக்கை மகாராணியின் கைகளை மென்மையாக வருடும் பாதங்களைத் தொடும். இளவரசர் அங்கே இருந்தால், உண்மையில் மகாராணியின் இடுப்பைத் துதிக்கையால் வளைத்து, அவளைத் தன் தலைமேல் தூக்கிக் கொள்ள பம் விரும்புவதை உணர்ந்திருப்பார்.

“பம் பகதூர், இளவரசர் விருப்பம் இது. வாரம் தோறும் அவரால் உன்னைக் காண வரமுடியாது போனால், அவருக்குப் பதில் நான் வர வேண்டும். இனி உன்னைப் பற்றி எவ்விதமான புகாரும் அவர் காதுகளை எட்டக் கூடாது என்றும் அவர் விரும்புகிறார்” என்று மகாராணி சொன்னாள்.

பம் பகதூர் துதிக்கையை உயர்த்தியது. பிறகு அதன் நுனியால் தரையில் மகாராணியின் கால்களை சுற்றி ஒரு வட்டம் வரைந்தது.

“மாண்பு மிக்கவரே!” என மாவுத்தன் விளக்கினான்: “பம் சத்தியம் செய்கிறது-இனி அது தங்கள் விருப்பப்படியே நடக்கும்.”

மகாராணி மிக இளகிய மனம் படைத்தவள். ஒவ்வொரு முறையும் அவளை யார் வணங்கினாலும், அது மனிதனோ மிருகமோ, உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ, அவள் கைகள் தாமாகவே குவிந்து, நமஸ்காரம் பண்ணும். முதல் முறை பம் மகாராணியின் கூப்பிய கரங்களை வெறுமனே தொட்டது. இம்முறை அது தன்னை கட்டுப்படுத்த இயலவில்லை-அது தன் துதிக்கையை அவளது மணிக்கட்டுகளில் சுற்றியது: ஒரு நொடி தான். பிறகு அவள் தகுதிக்கு மதிப்பளிக்கும் விதத்தில் பின்னுக்கு நகர்ந்தது.

மத்தாதினுக்கு இது பிடிக்கவில்லை. அவன் பம்மைக் கண்டித்தான்.

“கூடாது கூடாது! நீ என் முன்னிலையில் பம்மை ஒரு போதும் திட்டக் கூடாது” என்று மகாராணி கூறினாள்.

அன்று மத்தாதின் உற்சாகமின்றி இருந்தான். ஆனால் பம் வெகு சந்தோஷமாய், மிகுந்த உற்சாகத்துடன் இருந்தது. அது மத்தாதினைக் கோபமாகக் கூடப் பார்க்கவில்லை.

அன்று மாலை மததாதின் பம்மன் இரவு உணவிலிருந்து அது முன்பு சாப்பிட்ட லட்டுகளின் எடை அளவு தீனியை எடுத்துக் கொண்டான். பம் வெகு கோபக் கொண்டு, அந்த உணவைத் தொட மறுத்துவிட்டது. மறுநாள் காலை மத்தாதின் பயந்து போனான். பம்மின் உணவு அளவில் குறைந்ததைச் சரிககட்டினான்.

மகாராணி தன் வாக்கைக் காப்பாற்றினாள். வாரம் ஒருமுறை பம் பகதூரைக் காண வந்தாள். அவள் பெற்ற வரவேற்பு அவளுக்கு மிக ஆனந்தம் தந்தது. சரியான மலை போலிருந்த ஒரு பிராணி, தன் துதிக்கையின் ஒரே வீச்சால் மெலிந்த சிறு உருவினளான அவளை நசுக்கிவிடக்கூடிய ஒன்று, அவளை எதிர்நோக்கி வாரம் முழுதும் காத்திருந்தது; அவளைக் கண்ட மகிழ்வில் உடல் புளகித்தது. இதை எண்ணவும் அவள் மிக்க மகிழ்ச்சி அடைந்தாள். அது அவளை அன்பாய் வருடும் முத்தமிடும் தன் துதிக்கை நுனியை அவள் கைகள் மீது தடவும்: அவள் பாதங்களைத் தொடும்.

அந்த மிருகம் அவளிடம் காட்டிய அன்பினால் மகாராணியின் உள்ளம் பெருமைப்பட்டது.

பம், மிகவலிமையான மரம் அல்லது தூணைத் துாள் தூளாக்கி விடக்கூடிய பலசாலி, அவள் முன்னிலையில் ஒரு குழந்தை போல் நடந்து கொள்ளும். அது மகாராணியின் கைகளையும் கால்களையும் முத்தமிடு கையில் அதன் வாய், குழந்தையின் வாய் போலவே, ஈரம் சுரக்கும். எவ்வளவு கூடுமோ அவ்வளவுக்கு அவள் அருகில் நிற்க அது விரும்பியது. ஒவ்வொரு முறையும் அவள் உணவு ஊட்டி முடிந்ததும், பம் தன் துதிக்கையால் அவளது மெல்லிடையை வளைத்து அவளைத் தன் தலைமீது தூக்கி வைக்கும். ஒரு தாய் தன் பிள்ளையைத் தூக்குவதை விட மென்மையாக அது அவளை அப்படி எடுக்கும். மகாராணி அதன் கட்டுகளை அவிழ்க்கச் செய்வாள். பம் அந்த இடம் முழுவதும் சுற்றித் திரியும். அது அவளை அரண்மனைக்கு எடுத்துச் செல்லும் மறுபடியும் துதிக்கை உயர்த்தி வணங்கும், அவள் கால்களைத் தொடும்; பிறகு வேகமாக அவள் இடுப்பைச் சுற்றி வளைக்கும். மறு கணம், மகாராணி தான் தனது பட்டாடை ஒரு சிறிதும் குலையாமல் தரைமீது நிற்பதைக் காண்பாள்.
இளவரசருக்கு அரசு அலுவல்கள் அதிகமாயின. அவர் அடிக்கடி அரண்மனையை விட்டு வெளியே செல்ல நேர்ந்தது. யானையைப் போய் பார்க்க அவருக்கு நேரமேயில்லை. மாறாக, மகாராணி அடிக்கடி வந்து பார்த்தாள். அப்படி வரும் சமயங்களை அவள் ஆவலோடு எதிர் நோக்கினாள். முந்திய நாளே இனிப்புத் தின்பண்டங்கள் தயாரிக்க உத்திரவிடுவாள். ஒவ்வொரு முறையும் அவை வெவ்வேறு ரகங்களாக இருக்கும்படி கவனித்துக் கொள்வாள். அவள் எப்போதும் அவற்றை பம் பகதூருக்குத் தன் கையாலேயே ஊட்டுவாள். அதுவரை ஒரு மனிதப் பிறவியிடமிருந்து தான் பெற்ற அன்பை விட ஒரு மிருகம் அவளிடம் காட்டுகிற அன்பு எவ்வளவு அதிகமென்மையாக இருக்கிறது என்று அவள் சிந்திப்பாள்.

இதற்கிடையில் பம்முக்கு மத்தாதினிடமுள்ள வெறுப்பு, மகாராணியிடம் அது கொண்ட அன்பு வலிதாக வளர்ந்தது போல், வேகமாக அதிகரித்தது. மத்தாதினுக்கு ஒரு துண்டு நிலத்தை இளவரசர் தானமாக வழங்கியிருந்தார். அதில் அவன் ஒரு குடிசை கட்டி, அதைச் சுற்றி ஒரு சிறு தோட்டம் அமைத்திருந்தான். அவன் தன் சுக செளகரியங்களைக் கவனிக்கும் போது, பம் பகதூருக்கு உரிய உணவைக் குறைத்து வந்தான். இரண்டு நாட்கள் பம் பகதூர் தன் உணவைத் தொடவில்லை; மத்தாதினை ஏறெடுத்துப் பார்க்கவுமில்லை.

ஒரு நாள் இளவரசர் வேட்டைக்குப் போகத் தீர்மானித்தார். முன் பெல்லாம் அவர் புலிவேட்டைக்குப் போன போதெல்லாம் பம் பகதூர் மேல் சவாரி செய்வார். இம் முறை மத்தாதின் பம்மின் மனநிலை பற்றிக் கவலை கொண்டான். சென்ற இரண்டு நாட்களாக பம் சீக்காக இருக்கிறது; அதனால் வேட்டைக்காகப் பயிற்சி பெற்ற வேறொரு யானையை ஏற்பாடு செய்திருப்பதாக அவன் இளவரசரிடம் கூறினான்.

வேட்டை கோஷ்டி யானை லாயம் அருகாகச் சென்றது. திறந்த சன்னல் வழியாக பம் அதைப் பார்த்தது. அது துயர் நிறைந்த உரத்த குரல் எழுப்பித் தன் எதிர்ப்பை அறிவித்தது. அதை எவரும் கவனிக்கவில்லை. அது மனம் தளர்ந்து மெளனமாயிற்று.

வேட்டை கோஷ்டியை அனுப்பிவிட்டு, மத்தாதின் தனது தோட்டத்துக்குப் போனான். செடிகள், பூப்பாத்திகளில் வேலை செய்யலானான். அவனுக்குக்குறைந்த சம்பளம் தான் எனினும் அவன் மிக வசதியாக வாழ்ந்தான். இதை அனைவரும் அறிவர்.

பும் நாள் முழுவதும் குமைந்து குமுறியது; தன் உள்ளத்தில் வஞ்சத்தை அசைபோட்டது. ஒரு கவளம் உணவைக் கூட அது தொடவில்லை. பிற்பகல் வேளையில், பணியாளர்கள் அதன் போக்கில் ஏதோ விசித் திரம் கண்டார்கள். மத்தாதினிடம் தெரிவித்தார்கள். அவன் வந்தான். பம்மை திட்டத் தொடங்கினான். அவன் பக்கம் பாராமலே பம் திரும்பிக் கொண்டது.

பம்மின் கால்களைப் பிணைத்த சங்கிலிகள் உறுதியாய் கட்டப்பட்டிருப்பதைக் கவனித்த பிறகு மத்தாதின் யானையை செம்மையாக அடித்தான். பம் தீனியை தின்றிருக்கிறதா என்று பார்க்க அவன் திரும்பினான். அப்போது திடீரென்று பம்மின் துதிக்கை மின்னல் வேகத்தில் பாய்ந்து மத்தாதினை தரையில் விழ அடித்தது. பம் தனது பெரிய பாதத்தை மாவுத்தனின் மார்பில் பதித்தது. ஒரு நொடியில் மத்தாதின் கூழாக நசுக்கப்பட்டான். பம் சங்கிலிகளை அறுத்து எறிந்தது. பணியாளர்கள் பயத்தால் அலறிச் சிதறி ஓடினார்கள்.

பம் பகதூர் லாயத்தை விட்டு வெளியேறி, மத்தாதின் தோட்டம் நோக்கிச் சென்றது. செடிகளைப் பிடுங்கி வீசியது; பூப்பாத்திகளை மிதித்து நாசப்படுத்தியது. மத்தாதின் குழந்தைகள் பயந்து, குடிசையை விட்டு ஓடினார்கள். பம் குடிசையைத் தகர்த்து அதை மண்னோடு மண்ணாக்கியது.

பம் பகதூர் வெறிபிடித்து அலைகிறது என்ற செய்தி மகாராணியை எட்டியது.

போலீஸ் மேலதிகாரி, யானை மேலும் பலருக்கு தீங்கு விளைவிக்கும், ஆகையால் அதை சுட்டுக் கொல்ல வேண்டும் என அனுமதி கோரினார்.

“ஆனால் மத்தாதின் ஒருவனை மட்டுமே அது தாக்கியது என்று தானே நீங்கள் தெரிவித்தீர்கள்” என்று மகாராணி மறுத்துரைத்தாள்.

“ஆம் மகாராணி அது மத்தாதின் தம்பி வீடு நோக்கிப் போகிறது என்று எனக்கு செய்தி கிடைத்திருக்கிறது. அவனையும் அது விட்டு வைக்காது.”

“மத்தாதின் தம்பியா? அவன் என்ன செய்கிறான்?”

“அவன் லாயத்தை மேற்பார்வை பார்க்கிறான், மகாராணி.”

“அப்படியானால் அவனும் மத்தாதின் மாதிரி பெரிய திருடனாகத் தான் இருக்க வேண்டும். பம் பகதூரைக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன? என்னை பம்மிடம் உடனே அழைத்துப் போங்கள்” என்று மகாராணி கூறினாள்.

அவள் தன் அறைக்குப் போய், முந்திய முறை பம் பகதூரை காணச் செல்கையில் அணிந்திருந்த பட்டாடையை உடுத்துக் கொண்டாள்.

“மகாராணி பெரிய ஆபத்தை அணுகுகிறீர்கள். அது மிக்க அபாயமாகலாம்” என்று போலீஸ் மேலதிகாரி எடுத்துச் சொன்னார்.

“நான் சொல்கிறபடி செய்யுங்கள்” என்று மகாராணி உத்திரவிட்டாள். “என் கார் வரட்டும். நீங்கள் அவசியம் என்று கருதுகிற பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செய்யுங்கள்.”

சற்று நேரத்தில் மகாராணியின் கார் சாலையில் விரைந்தது. ஆயுதங்களோடு குதிரை வீரர்கள் காரைத் தொடர்ந்து சென்றார்கள். அதே சாலையின் மறுமுனையிலிருந்து பம் பகதூர் வந்தது. அது ஒரு குளத்தின் அருகே நின்றது. துதிக்கை நிறைய நீரை மொண்டு, அது மீண்டும் நடந்தது. அதன் அருகே வரத் துணிந்தவர் மீது அது சேற்று நீரை வீசிப் பரிசளித்தது. பம் பிறகு யாருக்கும் தீங்கு புரியவில்லை.

இடையே சிறிது தொலைவே இருந்தபோது, மகாராணி காரை நிறுத்தி, கீழே இறங்கினாள். போலீஸ் மேலதிகாரியை தன்னுடன் வர வேண்டாம் என்று அவள் தடுத்துவிட்டாள்.

“உங்கள் குதிரை வீரர்களைத் தயாராக வைத்திருங்கள்” என்று அவள் அறிவித்தாள். நான் என் இரண்டு கைகளையும் உயர்த்தினால், சுடுவதற்கு அது அடையாளம் என்று கொள்க. ஆனால், எந்த நிலையிலும் நீங்களாகச் சுடவே கூடாது. பம் பகதூருக்கு வெறி பிடிக்கவில்லை என்று எனக்குப் படுகிறது.”

பம் பகதூர் காரைப் பார்த்தது. நின்றது. தன்னை நோக்கி நீட்டப்பட்ட துப்பாக்கிகளை அதன் கண்கள் கவனித்தன. அது தாக்குவதற்குத் தீர்மானித்தது. வேகமெடுத்து ஒடி வந்து அது காரை நெருங்கியதும், மகாராணி அதன் குறுக்கே வந்தாள். மேலதிகாரி தன் ஆட்களை சுடுவதற்கு தயாராகும்படி தூண்டினார்.

மகாராணி திரும்பி உரத்த குரலில் கத்தினாள்; “என்னிடமிருந்து சைகை கிடைக்கும் வரை சுடக்கூடாது.”

பிறகு, பம் பகதூரைச் சந்திக்க அவள் ஒடினாள்.

மகாராணிக்கும் யானைக்கும் நடுவில் ஐம்பது கஜம் இடைவெளி தான் இருந்தது. மேலதிகாரியும் அவரது குதிரைவீரர்களும முன்னே பாய்ந்தார்கள். பம் பகதூர் பாதையில் அசையாது நின்றுவிட்டது. மேலும் முன்னேற வேண்டாம் என்று மகாராணி அவர்களுக்குக் கட்டளை யிட்டாள். நிதானமாக அடி எடுத்து வைத்து அவள் யானையை நெருங் கினாள். பம் பகதூர் அவளைப் பார்த்துவிட்டது. வணக்கம் தெரிவித்து அது துதிக்கையை உயர்த்தியது. மகாராணி பதிலுக்குக் கை கூப்பினாள். ஆனால் பம் முன்பு செய்தது போல் அவள் கைகளை தொடவில்லை.

மகாராணி பிரியத்தோடு பேசினாள்: “என் அருமை பம் பகதூர், இன்று உன் தும்பிக்கை சுத்தமாக இல்லை என்று தெரிகிறது. ஆனாலும் நீ என்னைத் தொடாத போதிலும், நான் உன் தும்பிக்கையை என் உடல் முழுதும் உணர்கிறேன். சொல்லு, பம் பகதூர், வருந்தத்தக்க இந் நிலையை நீ எப்படி அடைந்தாய்?”

பம் தன் துதிக்கை துனியால் மகாராணியின் கால்களை சுற்றி பல வட்டங்கள் வரைந்தது. அதன் உள்ளத்தின் துயர் அனைத்தையும் அவ் வட்டங்கள் எடுத்துக் கூறுவது போலிருந்தது.

மகாராணி மிக மென்மையான குரலில் கூறினாள்: “என் வீர பம் பகதூர் உள்ளத்தில் என்ன நடக்கிறது என நான் அறிவேன். உனக்கு வெறியில்லை என்று எனக்குத் தெரியும். கசப்பு உன் அழகிய ஆத்மாவில் கறைபடியச் செய்துவிட்டது. வெறுப்பும் கசப்பும் மக்களுக்கு என்ன செய்யும் என்றும் நான் அறிவேன்.”

பம் பகதூர் அவள் காலைச் சுற்றி மற்றுமொரு வட்டம் வரைந்தது. மகாராணி யானையின் கண்களை உற்று நோக்கினாள் அவற்றில் கண்ணிர் பொங்குவதை அவள் கண்டாள்.

“நீ எங்கே போய் கொண்டிருந்தாய், பம் பகதூர் மத்தாதின் தம்பி வீட்டுக்கா? அவனும் உனக்குத் துன்பம் தந்தானா?”

பம் பகதூர் தன் வலது பாதத்தைத் துாக்கி தரையில் ஒங்கி மிதித்தது. அதில் ரத்தம் சிதறியிருந்ததை மகாராணி பார்த்தான்.

அவள் தொடர்ந்து பேசினாள்: “பம் பகதூர், வீரர் நெஞ்சில் வெறுப்பு விஷத்தைப் பாய்ச்சுகிறவர்கள் விளையாடுவது மரணத்தோடுதான். இனி உனக்கு எவரும் தீங்கு புரியாதபடி நான் கவனிப்பேன். மனிதர் போல் தோன்றுகிற, உள்ளத்தில் கயவர்களாக இருப்போரிடமிருந்து நான் உன்னைக் காப்பாற்றுவேன்.”

பம் பகதூர் அமைதியாகக் கேட்டுநின்றது. மகாராண் அதனிடம் மேலும் சொன்னாள்: “அருமை பம் பகதூர், கோபம் உன் உள்ளத்தின் அன்பை எப்படி விஞ்சியது என எனக்குப் புரியவில்லை. மத்தாதின் குழந்தைகள் வசித்த வீட்டை நீ ஏன் இடித்து நொறுக்கினாய்? அவர்கள் உனக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. நீ மீண்டும் அதைக் கட்டியாக வேண்டும்.”

பம் பகதூர் மகாராணி கால்களை சுற்றி இரு வட்டங்கள் வரைந்தது. மகாராணி தொடர்ந்தாள்: “அதைச் செய்ததற்காக நீ வருந்துகிறாய். அது எனக்குத் தெரிகிறது. நீ அதை மறுபடி கட்டிக் கொடுத்தால் நீ எனக்கு மிக்க சந்தோஷம் அளிப்பாய். நான் அதை சீரமைப்பேன், ஆனால் அந்தச் செலவை ஈடுகட்டும் வரை உனக்குப் பாதி அளவு உணவு தான் தரப்படும். சம்மதமா?”

மகாராணி சொன்னதை பம் பகதூர் புரிந்து கொண்டதோ என்னவோ! வட்டங்கள் வரைவது தான் அது அறிந்த ஒரே மொழி. அது பல வட்டங்கள் வரைந்தது.

யானையின் துதிக்கையில் சகதி கட்டியாக உலர்ந்திருந்ததை மகாராணி கண்டாள். அவள் கைநீட்டி, துதிக்கையை வருடினாள். முன்பு யானை தான் மகாராணிக்குத் தன் அன்பை உணர்த்த முயலும். இப்போது அவள் அதை எவ்வளவு நேசித்தாள் என்பதை மகாராணி யானைக்கு உணர்த்த முயன்றாள். அங்கே அது உயிருள்ள மலை என நின்றது; அசைய விரும்பவில்லை. அசைந்தால் அன்பின், அழகின் காட்சி சிதைந்து விடும் என்று அது கருதியது.

பம் பகதூரைத் தன் பின்னால் வரும்படி கூறி மகாராணி அவ் வசியத்தைத் தகர்த்தாள். அவள் முன்னே செல்ல, யானை பின் நடந்தது. அவர்கள் பின்னால் போலீஸ் அதிகாரியும் குதிரை வீரர்களும் வந்தார்கள். இப்படியாக பம் பகதூர் அதன் லாயத்துக்குத் திரும்ப அழைத்துச் செல்லப்பட்டது.

லாயத்தின் நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட்டது. பம் பகதூர் தவிர இதர யானைகளுக்கும் முழு அளவு உணவு தரப்பட்டது. எனினும் பம் பகதூர் தானே அந்த இடத்தின் ராஜா என்ற தோரணையோடு நடந்தது.

பல நாட்கள் வரை மகாராணி யானையைப் பார்க்க வரவில்லை. சிறிது காலத்துக்குப் பிறகு வந்து அவள் பம் பகதூரிடம் பேசினாள் பாதி அளவு உணவு உனக்கு பிடித்திருப்பதாகவே தோன்றுகிறது. நீ முன்னை விட ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறாய். இப்போ நீ உன் பாபத்துக்கு பரிகாரம் செய்துவிட்டாய். இனி என்றும் நீ ஆனந்தமாக இருப்பாய்.”

பம் பகதூர் மகாராணியைத் தன் துதிக்கையில் தூக்கி, தலை மீது வைத்துக்கொண்டது.

– குருபக்ஷ் சிங், பஞ்சாபிக் கதை.

– சிறந்த கதைகள் பதிமூன்று, 13 இந்திய மொழிகளிலிருந்து சிறந்த கதைத்தொகுப்பு, முதற் பதிப்பு: 1935, தமிழில்: வல்லிக்கண்ணன், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *