(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வாழ்ந்து கெட்ட வயதான ஸ்ரீராமர் போல், அந்த பிர மாண்டமான பங்களாவை, பிரமிப்பு ஏதுமின்றி ஏறிட்டுப் பார்த்தார் கந்தய்யா.
வில் மாதிரி வளைந்திருந்த தளை நார் , வலது தோளுக்கு வளையமாகி, இடுப்பைத் தொட்டது தென்னைம்பாளை யால் கட்டப்பட்ட கூம்புப் பெட்டி, இடது தோளில் அம்ப ராத் துணிப்போல தொங்கியது. இந்த பாளைச் சதையை இழுத்துப் பிடிப்பது மாதிரியான மூங்கில் எலும்புகள், இரண் டையும் இழுத்துக் கட்டிய பனை நார் நரம்புகள். இடுப்பில் ஒரு பாடாதி பெல்ட். முட்டியோடு முடிந்து போன தார்ப் பாய்த்த வேட்டி. கை முட்டிகளிலும், கணுக்கால்களிலும் கருந்திரட்சையான காய்ப்புகள் கொட்டாங்குச்சியை வாயளவு இடைவெளியில் வளைத்துப் பிடித்து வைத்திருப் பது மாதிரியான மோவாய். ஸ்ரீராமர் வனவாசம் செய்த போது வந்திருக்கக்கூடிய சிண்டு சிடுக்குமான முடி எலும் போடு ஒட்டிய உடம்பு ஏறிட்டுப் பார்த்தால் தான் முகம் தெரியும் என்கிற மாதிரியான உயரம். நாற்பதுக்கு மேலே நாற்பத்தைந்துக்கு கீழே.
‘இங்கேயே நில்’ என்று சொல்லிவிட்டு உள்ளே போன பிள்ளையாண்டானை’ இன்னும் காணவில்லை என்பது போல், கந்தையா உடம்பை எக்கி , கேட்டுக்கு மேலே தலையை தூக்கிப் பார்த்தார். மாடியில் பாப் மியூசிக் பாடிய சல்வார் கம்மீஸ்காரிகளின் சத்தம் அவர் கவனத்தைக் கவர வில்லை . தெருவில் கிரிக்கெட் ஆடிய சிறுவர்களின் கூச்சல் அவரது காதுகளில் எட்டவில்லை . விலாவில் விழுந்த கிரிக் கெட் பந்தின் தாக்கம் ஏதுமின்றி அவர் தன் பாட்டுக்கு நின் றார். ஒரே ஒரு சமயம் இடையில் சாத்தி வைத்த பாளை அரிவாளை எடுத்து அவர் விரலால் கூர் பார்த்தபோது, கிரிக் கெட் பையன்கள் பயந்து போய், ‘ஸ்டம்பை’ வேறு பக்கம் கொண்டு போனதோ அவருக்குத் தெரியாது. கூப்பிட்டு வந்தவனுக்கும், குரல் கொடுக்கலாமென்றோ, பால்கனியே மாடியானது மாதிரியான இடத்தின் முன்பகுதியில் நின்ற பெண்களிடம் விசாரிக்க வேண்டுமென்றோ தோன்றாமல் சுத்த சுயப்பிரகாசமாய் நின்ற இடத்திலேயே நின்றார்.
நல்ல வேளையோ, கெட்ட வேளையோ, குரோமிய தகட்டால் வேயப்பட்ட கேட் இரண்டாக பிளந்து அவருக்கு வழிகாட்டியது. கூத்துக்கு முன்னால் கட்டியங்காரன் போல், அவரை குடிசை தேடி கூட்டி வந்த இளை (என் இப்போது செடிகளுக்கு நீர்ப்பாய்ச்சும் குழாயை கையாக்கி அவரை உள்ளே வரும்படி அதையே வளைத்து பிடித்து சைகையாக்கி னான். அப்படி குழாயை அக்குவது ஒரே மாதிரியான நீர்ப் பாய்ச்சல் என்று நினைத்த கந்தய்யா. சும்மாவே நின்றபோது அந்த இளைஞன் “உள்ளே வாய்யா” என்று சொன்ன படியே வீட்டுக்கு உள்ளே பார்த்தான்.
உள்ளே போய்க் கொண்டிருந்த கந்தய்யாவை , எல்லா பங்களாக்களிலும் இருப்பது போல ஒரு சடை நாய் குறுக்கே வந்து குலைத்தது. அந்நாயின் குலைப்பு சத்தத்தை காது களில் உள்வாங்காமல் அவர் தன்பாட்டுக்கு முன் ஏறிய போது, அந்த நகரத்து நாய் வாலை பின்காலுக்கு மத்தியில் நுழைத்துக்கொண்டு, குலைப்புச் சத்தத்தை ஊளைச் சாத்த மாக்கியது. அதாவது அவரிடம் ‘சரண்ட்டராம்’.
பங்களா முகப்பின் ஒரு கிரவுண்ட் பகுதியில், எதுவரை நடப்பது, என்று புரியாமல் கறுத்தய்யா , தயங்கியபோது, அந்த நீர்ப்பாய்ச்சி இளைஞன் உள்ளே ஓடினான். சிறிது நேரத்தில் வெளியே வந்து அவரை நின்ற இடத்திலே நிற்கும் படி சைகை செய்துவிட்டு, மீண்டும் உள்ளே ஓடினான்.
கந்தய்யா சுரணையற்றபடியே நின்றார். வலது பக்கம் நின்ற இரண்டு மாருதி கார்களோ அவற்றை ஈரத்துணியால் துடைத்துக் கொண்டிருந்த வேலைக்கார டிரைவர்களோ அவர் கண்களில் படவில்லை . வலது பக்கம் நின்ற அம்பா ஸிடர் காரில் ‘என்னடி ராக்கம்மா’ தூள் பரப்ப முழங்குவதை அவர் காது கொடுத்து கேட்கவில்லை. இரண்டு கைநெட் டிக் கொண்டாக்களும்’, மூன்று சேட்டக்களும்’, அவர் மனதில் பதியவில்லை. ‘உள்ளேயிருந்து அம்மா எப்போ வருவாங்கோ எடுத்த எடுப்பிலேயே மரத்துக்கு எவ்வளவுன்னு ரேட் பேசிக்கணும்…’
திடீரென்று பேசிக்கொண்டே நின்ற டிரைவர்கள் பேச் சற்று செயல்பட்டார்கள். அம்பாஸிடர் காரில் ராக்கம்மா மௌனமானாள். அந்த அம்மா நான்கு அடி தூக்கலில் உள்ள மேடை திண்ணையில் பிரசன்னமானாள். அவளது உடம்புக்கு 5 வயது என்றால், லிப்ஸ்டிக்குக்கோ 20 தேறும். ஜாக்கெட்டுக்கு பதினாறு. ஒட்டகச்சிவிங்கி மாதிரியான உடம்பு. தொட்டால் ரத்தம் கொட்டுகிற மாதிரி சிவப்பு. தங்கமுலாம் போட்ட பிரேமில் மூக்குக்கண்ணாடி.
“முன்சாமி….. அந்த ஆள பின்னால் கூட்டிக்கொண்டு வா….”
அந்த அம்மா அவ்வளவு பேசியதே, முனுசாமிக்கு தான் காட்டும் ஒரு சலுகை என்பது மாதிரி உள்ளே போய்விட்டாள். ‘முன்சாமி’ கந்தய்யாவை புல்வெளிகளுக்கு மத்தியில் வளைந்து நெளிந்து போன மெட்டல் பாதையில் நடக்க வைத்தான். முன்னால் நடந்து நடந்து பின்னால் நடந்த வரை திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டான்.
அந்தப் பங்களாவின் பின்பக்கம் வந்த கந்தய்யா, தற் செயலாய் நிமிர்ந்தார். அங்குள்ள குட்டி தென்னைத் தோப் பைப் பார்த்து, உடம்பை நிமிர்த்தினார். வளைத்து வைத்த கால்கள் நிமிர்ந்தன. கழுத்தை மறைத்து தொங்கிய முகம் இப்போது உயரமானது. பெரிய பெரிய தேங்காய்களை சுமந்த ‘அதிகமான’ தென்னைகளையும், பச்சையும் சிகப் பும் கலந்து மின்னும் பெங்களூர் குட்டை தென்னைகளையும், கோணல் மானலான நக்குவாரி தெங்குகளையும், அவர் உற்று உற்றுப் பார்த்தார். மயில்கள் விசுவரூபம் எடுத்து ஆடுவதுபோல் தோன்றிய அத்தனை தென்னைகளையும், பார்க்கப்பார்க்க, அவருள் ஏதோ ஒன்று விஸ்வரூபம் ஆனது. தென்னை மரங்களை விட தானே அதிகப் பச்சை என்பது போல் பப்பாளி காய்களை சிலுக்கி மினுக்கி குலுக்கி காட்டும் பப்பாளி மரங்களை அலட்சியமாகப் பார்த்தார். ஒரு தென் னையின் ‘தூரில்’ வேரூன்றி அதன் மேல் பாம்பு போல் சுற்றிய பசலைக்கொடியை உதாசீனமாகப் பார்த்தார். ஒரு தென்னையை உயர விடுவது இல்லை என்பது போல் மேலே குடை போல் விரிந்த மாமரத்தை சினந்து பார்த்தார். காய்க் காமல் கருகி தலைகீழாக தொங்கிய பாளைகளையும், பழுப்பு ஓலைகளையும் கோபமாக பார்த்தார். அந்த வீட்டுக் காரர்களை திட்ட வேண்டுமென்பது போல் கூட அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. இப்படியா – மரங்களை – அம் போன்னு விட்றது…
தென்னைகளோடு தென்னையாகிப் போனவர். அந்த அம்மா , தனது சோடியோடு அங்கே நிற்பதை கண்டுக்காமல் நிற்பதை கண்டு கொண்ட முனுசாமி, கந்தய்யாவின் தோளை தடவினான். தட்டினான் பிறகு அடித்தான். அந்த குட்டித் தோப்பிலிருந்து கண்களை விருப்பத்திற்கு விரோத மாக மீட்டிய கந்தய்யா, அந்த அம்மாவைப் பார்க்காமல் அவளுக்கு பக்கத்தில் டவுசர் பனியன் என்ற அரை நிர்வா ணத்தோடு நின்ற ஒருவரை அசைவற்றுப் பார்த்தார். உடனே அவரும் “இந்த தென்னை மரத்திலே இரண்டு பச்சை பாம்புங்க லவ் பண்ணிக்கிட்டு இருக்குப்பா . சிலர் கொம்பேறி மூக்கன்னு சொல்றாங்க பார்த்து ஏறு’ என்று சொல்லப் போனார். அப்படி சொன்னால், அந்த மரமேறி நடைபாதைவாசியாகி விடுவார் என்று நினைத்தோ அல்லது வீட்டுக்காரி ‘உங்களுக்கு எந்த இடத்திலே என்ன பேச வேண்டுமென்று தெரியாது’ என்று கொடுக்கப் போவதை வாங்கிக்கொள்ள மறுத்தோ அவரும் கந்தய்யா மாதிரியே நின்றார். பிறகு அந்த பச்சை பாம்புகளைப் பற்றிச் சொல்ல வில்லை என்றால், தலை வெடித்து விடும் போல் தோன்றிய தால், நாக்கு சுமந்ததை வார்த்தைகளாக்காமல் ‘வாக்கிங்’ போய்விட்டார். அவர் போன பிறகுதான், பேசுவது என்று தீர்மானித்த அந்த அம்மாவும் இப்போது பேச்சைத் துவக்கி னாள். “எத்தனை தென்னைங்களை சீவி விடணும்பா. மொத்தம் இருபது மரங்களை யாவது சீவணுமுன்னு நெனைக் கேன் இல்லையா!”
கந்தய்யா, அந்த தென்னைகளை மேற்கொண்டு பார் வையிட வேண்டியது இல்லை என்பது போல் அந்த அம்மா வையே பார்த்தார். இருபத்தைந்து என்று சொன்னாலும் அந்த அம்மா நம்புவாள். மரத்தக்கு உள்ள மாமூல் ரேட் டான ஐந்து ரூபாய் என்று பார்த்தாலும், நூறு ரூபாய்க்கு மேல போகும். வருஷப்பிறப்பு என்று சொல்றாங்க… தமிழ் வருஷமோ தெலுங்கு வருஷமோ… வாயிலே நுழையாத வருஷம் . ஆனாலும் நல்ல நாளு குச் சையிலே அயுற பசங்க ளுக்கு பிரியாணி வாங்கிக்கினு போகணும் …. சம்சாரத்துக்கு ஒரு காடா சேலை வாங்கணும். அதுக்காக பொய் சொல்றதா. எவனுக்கு வேணும் இந்த பொழைப்பு. நாயமாவே சொல்லுவோம். ரேட்ட வேணுமின்னா ஐந்து இருந்து ஆறாக கேட்போம்.
கந்தய்யா உதடுகளை சரியாக திறக்காமலே ஏதோ உச்சரித்தார். அது அந்த அம்மாவுக்கு புரியவில்லை.
“இந்தாப்பா – முன்சாமி. இவன் என்ன சொல்றான் கேளு.”
“பதினைந்து மரத்துக்கு மட்டும் போதுமாம்மா.”
கந்தய்யா தோளில் தொங்கிய பாளை அரிவாளை கை யில் எடுத்தபடியே முனுசாமியிடம் மேலும் ஏதோ பேச, முனுசாமியும் அந்த உச்சரிப்பை அந்த அம்மாளிடம் அர்த்தப் படுத்தி பேசினான்.
“ஒரு மரத்துக்கு எவ்வளவு ரேட்டுன்னு கேட்காரும்மா ….”
“என்னப்பா இது, ஒரு தொழிலாளி வயத்திலே அடிப்பவளா நான்?”
“நீயே சொல்லக்கூடாதா?” நல்ல வேளை வயிறுன்ன தும் ஞாபகம் வந்துட்டுது. பாவம் இந்த மரமேறி வயிற்றைப் பாரு. எம்ட்டி கிணணம் மாதிரி தோணுது. ஏய் இந்தாடி சுதாமா….. கொஞ்சம் பழைய சாதம், நார்த்தங்காய் ஊறு காய் எடுத்துட்டு வாடி. உன் பேரு என்னப்பா.”
“கந்தய்யா”
“முதல்லே சாப்பிடு கந்தப்பா. உன் காசை பிடித்து தானா நான் கோட்டை கட்டப்போறேன். ஏய சுதாமா ஒன்னைத்தாணடி –“
சுதாமா ஒரு ஈயப் பாத்திரத்துடன் வெளிப்பட்டாள்.
இந்த பதினாறு வயசுப் பெண்ணுக்கு அம்மா இட்ட பெயர் லட்சுமி. ஆனால் இவள் டிவி மகாபாரதத்தில் பால கிருஷ்ணனின் தோழனாக வருவானே சுதாமா. அவனை மாதிரியே குதிரை வால் முடி காட்டி தோன்றுபவள். ஆகை யால் எசமானி அம்மாளின் பெயர், பெத்த அம்மாவின் பெயரை துரத்திவிட்டது. என்றாலும் இப்போது முனுசாமி முன்னால் அப்படிப்பட்ட பெயரை வாங்கிக்கொள்ள அவ ளுக்கு இஷ்டம் இல்லை. ஆகையால் வீட்டுக்காரியை வாய்க்குள் பூசணிக்காய் பொந்தி” என்று திட்டிக் கொண்டே ஈயப்பாத்திரத்தை கந்தய்யாவிடம் சந்தோஷத் துடன் நீட்டினாள். பஞ்சு மாதிரி திரண்ட கஞ்சியில் நூல் நூற்கலாம். அப்படிப்பட்டதை, சாப்பிட்டதாக பேர் பண்ணி, அம்மாவுக்கு தெரியாமல் குப்பைத் தொட்டியில் ஊற்ற நினைத்த சுதாமா; இப்போது கந்தய்யாவை ஒருவாய் உள்ள குப்பை தொட்டியாக நினைத்தாள். அவர் இரண்டு கையையும் திருவோடு மாதிரி ஆக்கியபோது அவள் ஈயப் பாத்திரத்தை தலைகீழாக கவிழ்த்தாள். கந்தய்யா நாலே மடக்கில் கஞ்சியை காலி செய்துவிட்டார்.
இந்த மரமேறி மனிதர் வயிறு காட்டிய குளிர்ச்சியை அந்த அம்மாளின் மீது ஒரு பார்வையாக்கினார். முன் கூட்டியே ரேட் பேச வேண்டும் என்ற எண்ணத்தை செஞ்சோற்றுக் கடனுக்கு எதிரான செயலாக நினைத்து அந்த அம்மாவின் கண் முன்னாலேயே ஒரு அந்தமான் தென்னை மீது உடம்பை போட்டார். நாகர மாட்டிக் கொண்டு , ஒரு கையை தென்னையின் முதுகை வளைத்து, மறுகையை, அதன் மார்பில் ஊன்றியபடியே அனாசியமாக தாவினார். இடையில் இன்னொரு தென்னையில் இருந்து வழி மறித்த ஓலைக்கையை ஒரே சுண்டால் சுண்டி அதை கீழே சாய்த்தபடியே அந்தக் கோணைத் தென்னையில் தத்தித் தத்தி , தாவித் தாவி , குதித்துக் குதித்து படுத்துப் படுத்து மேலே போனார். உச்சிக்குப் போய் ஒரு நோட்டம் போட்டார். எம்மா பெரிய பன்னாடைங்கோ….. நயினா நல்லாத்தான் சொன்னார். ‘அடே…. கந்தய்யா தென்னை மரத்து சில்லாடைங்க தேங்காய்களுக்கு, குழந்தைகளுக்கு, தொட்டில் மாதிரிடா. ஆனா அதே தொட்டில் சேலை பின்னிக்கிட்டா குழந்தைக்கு மூச்சு முட்டி அதுவே பாடை யாகி விடும். அதனாலே இந்த பன்னாடைங்களை பக்குவமா எடுடா’ என்று அந்தக் காலத்திலே கூத்துப் போட்ட அப்பாக் காரர் சொல்லுவார். இவரைக் கூட, கூத்தில் திரௌபதி வேடம் போட கூப்பிட்டார்கள். இவருக்குத்தான் பிடிக்க வில்லை. சேலை கட்டி, அப்புறம் அதையும் அவிழ்க்க விட்டு….சீச்சி….
கந்தய்யா, சிந்தனையிலிருந்து விடுபட்டு, பட்டுப்போயி ருந்த ஓலைகளை பிய்த்து எறிந்தார். தென்னங்குறும்பல் களை, முட்டைகளை அடை காக்கும் கோழி போல் அடை காத்த ஒரு பாளையைச் சுற்றிய பன்னாடைகளை குறும்பல் கள் தெரியும்படி பக்குவமாக அகற்றினார். அடி உச்சியில் கோணல் மாணலாய்க் கிடந்த சில்லாடைகளை அரிவாளால் கூறு போட்டு அப்புறப்படுத்தினார். அனாவசியமாக தோன்றிய பச்சை ஒலைகளின் அடிவாரங்களை பாளை அரிவாளால் கோடு போட்டார். அந்த ஒலைகள் அடியற்று வீழ்ந்தன. அதன் அடிவாரங்கள் இப்போது ஜோதி போல் மின்னின. பன்னாடை போன பாளைப் பூக்கள், தங்கச் சரட்டில் தொங்கும் முத்துக்கள் மாதிரி மின்னின. இப்போது அந்த மரமே ‘கிராப்பு ‘ வெட்டப்பட்ட மனிதர்கள் போல் நவீனப்பட்டது. நீண்ட நாளைய தாடி எடுத்தால் முகம் எப்படி மின்னுமோ அது போல், அதன் தேங்காய்களும் உச்சியும், ஒரு சேர மின்னின.
கால் மணி நேரத்தில் கந்தய்யா கீழே இறங்கினார். அவரையே பார்த்துக் கொண்டிருந்த, அந்த அம்மாவை பார்க்காமல், இன்னொரு மரத்தல் ஏறப் போனார். அந்த அம்மாவும், அவருடன் வேலை வாங்குவதற்கு நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்பது போல் போய் விட்டாள்.
கந்தய்யா, மரம் மரமாய் தாவினார். ஒரு சில மரங்களில் முற்றிப் போன தேங்காய்களை கீழே வீழ்த்தினார். வருத்தப் பட்டு பாரம் சுமக்கும் பட்டுப் போன பாளைகளையும், குறும்பல்களையும் கீழே தள்ளினார். நான்கு மரங்களில் ஏறி முடித்துவிட்டு ஐந்தாவது மரத்தை அவர் பார்த்தபோது அந்த அம்மா மீண்டும் அங்கே வந்தாள். இப்பொழுது அவள் கையில் ஒரு குவளை டம்ளர் . அதன் கொள்ளளவு முழுவதும் நெய் மணக்காத மோர்.
“கந்தய்யா. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ. இந்த மரங்க எல்லாம் எங்கே போகப்போகுதுப்பா…. முதல்லே மோர் சாப்பிடு.”
கந்தய்யா, அந்த மோர் டம்ளரை ஒரே மடக்கில் காலி செய்தார். அந்த அம்மாவுக்கு மரியாதை கொடுக்கும் வகை யில், தண்ணீர் தொட்டிக்கு அருகே போடப்பட்ட கல்லில் உட்கார்ந்தார். அந்த அம்மா, போன உடனேயே எழுந்தார். பெல்லட்டை இறுக்கிப் போட்டார். அடுத்த தென்னைக்கு தாவினார். ஏதோ ஒரு தென்னையில் மட்டும் அவர் பாளை அரிவாள படவில்லை. இவ்வள வுக்கும் அந்த மரம் ஜடாமுனியாகவே இருந்தது. ஆனாலும் தேங்காய்களுக்கு தேவையில்லாத சில்லாடைகளை ஆதர வாக வைத்து ஒரு குருவிக்கூடு இருந்தது. அதற்குள் இரண்டு குருவிகள் வாய்களை தீப்பந்தங்களாக காட்டின. அவருக்கு அந்த கூட்டை சிதைக்க மனம் வரவில்லை. அப்படியே இறங்கி விட்டார். மற்றபடி அத்தனை மரங்களையும் சீராக்கி விட்டார். பழுப்பேறியவை பளபளத்தன. வெள்ளை யும் தொள்ளையுமாய் மின்னின.
கந்தய்யா வேலை முடித்த களைப்பில் – அதுவே ஒரு திருப்தியைக் கொடுக்க தேங்காய்களை பொறுக்கிக் கொண்டு முன்புறமாக வந்தார். எதையோ பெருக்கிக் கொண்டு இருந்த முனுசாமி உள்ளே ஓடினான். அந்த அம்மாவும் சிம்மாசன மேடைக்கு வந்தாள்.
“பரவாயில்லையே மூன்று மணி நேரத்திலே முடிச் சுட்டியே……”
“என்ன முனிசாமி இவன் என்ன சொல்றான்.”
“வீட்டுக்கு சீக்கிரமாகப் போகணுமாம். கொஞ்சம் பிரச்சினையாம்.”
“பிரச்சினை இல்லாத நாடு எது வீடு எது …. ஏய் சுதாமா… நம்ப கந்தப்பாவுக்கு பக்கடாவும் டீயும் கொண்டு வாடி பாவம் . ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்”.
சுதாமா சொல்லப் பொறுக்காமல் … ஏற்கனவே சொல்லப் பட்டவள் போல், ஒரு ஈயத்தட்டில் , பக்கடாச் சிதைவுகளை யும் கண்ணாடி டம்ளரில் டீயும் கொண்டு வந்தாள். இப்போது, தன் பங்கு குறைந்து போன ஆத்திரத்தில் அந்த தட்டை கந்தய்யாவின் கையில் சுடச்சுட வைத்தாள். ஆனால் காய்ப்பு கைக் கொண்ட கந்தய்யா டீயை ஒரே மடக்கில் குடித்தார். பக்கடாவை பசங்களுக்காக மடிக்குள் வைக்கப் போனார். பிறகு, அதுகளுக்கு பிரியாணி வாங்க போவதை நினைத்துக் கொண்டார். குருவி கூடு கொண்ட மரம் போக மீதி பதினான்கு மரத்துக்கு ஐந்து ரூபாய ரேட் படி எழுபது ரூபாய் – அம்மா ஆறு ரூபாய் ரேட் போடுவாங்க. அப்போ சே கணக்கு வர மாட்டேங்க…… அந்த காலத்திலே எழுபதுக்கு மேலே எண்ணிப் பார்த்தேன்.
“ஏய் சுதாமா …. இந்த ரூபாயை கந்தப்பனிடம் கொடு. மூணு மணி நேரத்துக்கு மூவைந்து பதினைந்து ரூபாய்தான். பாவம் நல்லவன். பொழைத்துப் போறான்”.
சுதாமா, கையில் திணித்த இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களை கந்தய்யா நம்ப முடியாமல் பார்த்தார். ஒரு வேளை, ஆறேழு ஐந்து நோட்டுக்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்குமோ என்று அந்த நோட்டுகளை பிதுக்கினார். அவை கிழியப் போவது போல் தோன்றின. அவர் அந்த அம்மாவை லேசான ஆத்திரத்தோடு பார்த்தார். அவளோ இப்பொழுது மங்களகரமாக சிரித்தபடியே சொன்னாள்.
“உன் பிள்ளைகளுக்கு ஒரு தேங்காய் வேண்டுமானால் எடுத்துட்டுப் போ. சமையலுக்கு ஆவும். உன் சம்சாரம் சந்தோஷப்படுவாள்.”
சம்சாரத்தை நினைத்தவுடனே, அவள் காடா துணி இல்லாமல் வரும் தன்னைப் பார்த்து கத்தப்போகிறாள் என்ற பயம் கந்தய்யாவை பற்றிக் கொண்டது. இதயத்தில் கோபம் ஊற்று எடுத்தது. அதில் கொதித்தெழுந்த வார்த்தைகளை வயிற்றில் இருந்த பழைய சாதம் இழுத்துப் பிடித்தது. அப்படியும் மேலே போன , ஒரு சில வார்த்தைகளை , தொண்டைக்குள் இருக்கும் பக்கடா கீழே தள்ளியது. இதை மீறி வாய்க்கு வந்த வார்த்தைகளை அந்த அம்மாவின் கருணையான பார்வையும், தாய்மையான தோரணையும் ஆவி ஆக்கின. இந்தச் சமயம் பார்த்து ஒரு போலீஸ் ஜீப் “வணக்கம் அம்மா, அய்யா இருக்காங்களா…” என்ற குரல் காரர்களோடு உள்ளே வர. அந்த அம்மா சிம்மாசனத் திண்ணையில் நின்றபடியே அவர்களை ஆசீர்வதித்தாள். பிறகு, வீட்டுக்குள் அலட்சியமாகப் போய் விட்டாள்.
வேலைக்கார இளைஞன் முனுசாமி, உதடுகளைக் கடித்துக் கொண்டான். இவன், ‘அந்த அய்யா’ வேலை பார்க்கும் அலுவலகத்தில் கேஷுவல் அதாவது அன்றாட கூலி. இந்த வீட்டில் எடுபிடி வேலைகளை செய்து கொண்டே அந்த அலுவலகத்தில் வேலை பார்ப்பதாக ஒரு ரிஜிஸ்டர். ஆபிஸ் வேலையில் நிரந்தரமாக வேண்டும் என்பதற்காக வீட்டுச் சாக்கடையை கழுவி விடுவதிலிருந்து சகல சில்லறை வேலைகளையும் செய்யும் அவன், இப்போது அந்த அம்மாவை மனதுக்குள் கெட்ட வார்த்தைகளினால் திட்டினான். பிறகு அந்த வார்த்தை அவளுக்கு கேட்டாலும் கேட்கும் என்று பயந்து போனான். நேரம் கிடைக்கும் போது, இன்றைக்கே, கந்தய்யாவின் வீட்டிற்குப் போய் அவரைக் கூட்டி வந்ததற்கு அபராதமாக தன் சொந்த பணத்தில் கொஞ்சம் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, கந்தய்யாவையே, கண்ணிமைக்காமல் பார்த்த போது….
கந்தய்யா, அந்தப் பிச்சை தேங்காயை எடுக்க வேண்டும் என்ற சொரணை கூட இல்லாமல், இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களையும், காதுக்கு ஒன்றாய் சுருட்டி, வைத்தபடி, அந்த பங்களாவைவிட்டு சுருண்டு சுருண்டு, நடந்து கொண்டிருந்தார்.
– பூநாகம் (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1993, கங்கை புத்தக நிலையம், சென்னை.