பதிலில்லை பாடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 4,594 
 
 

‘யோக்கியன்னு மரியாதை குடுத்தா… இப்புடி இழுத்தடிக்கிறான் !. இதோட பதினோரு நாள்ல பத்தாவது தடவை. இனி பொறுக்காது. ஆளை நடு ரோட்டுல பார்த்;தாலும் ஈட்டிக்காரன் போல கழுத்துல துண்டைப் போட்டு வசூல் பண்ணியே ஆகனும். கேட்டு குடுக்கலைன்னா… ‘உன் பவிசுக்கு என் கூலி இருநூத்தி அம்பது ரூபாய் காசில்லே தூசு. இந்த அல்ப காசுக்குப் போய் என்னைத் தொழிலை விட்டுட்டு பத்து நாளா நாயா பேயா அலைய விடுறீயே நியாயமா ? கேட்டு குடுக்காட்டி ‘இந்தா உன் பணமுமாச்சு நீயுமாச்சு. இனி உன் காசு தேவை இல்லே. என் உழைப்பை நீ எடுத்துகிக்கிட்டதாய் இருக்கட்டும்.ன்னு மொகத்துல அடிக்கிறாப்போல சொல்லிட்டு திரும்பனும். !’ மனசுக்குள் சூடு கிளம்ப எழுந்த சேகர்

கடையில் வேலை செய்துகொண்டிருப்பவனைப் பார்த்து, ”நான் நம்ம கடன்காரன் வீடு வரை போய் வர்றேன். நீ அந்த பேனுக்கு காயில் சுத்திட்டு இந்த மிக்ஸிக்குப் பிளேடு போ” என்று சொல்லிவிட்டு தன் கடையிலிருந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள்தான் கதிரேசன் வீடு. வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்த… அவனை உரசிக்கொண்டு இன்னொரு சைக்கிள் வந்து நின்றான் பக்கத்துக் கடைக்காரன் டைலர்; சதாசிவம்.

அவனைப் பார்த்ததும் இவனுக்கு ஆச்சரியம்.

‘ஏய் ! நீ எங்கே இப்படி ?” கேட்டான்.

”கடன் வசூலிக்க..”

”கடனா ?!”

”ஆமா. இவர் என் வாடிக்கைகாரார். பேண்டு சட்டை எது தைச்சுக் குடுத்தாலும் உடனேகாசு குடுத்து தீர்த்துடுவாரு. இப்போ என்ன கஷ்டமோ தெரியலை. நாலைஞ்சு தடவையாய் அலையறேன். இதோ அதோன்னு இழுத்தடிக்கிறார். என் கஷ்டம் இன்னைக்குக் கடை வாடகைப் பணம் குடுத்தே ஆகனும். ஆள் கிட்ட வசூல் பண்ணியே தீரனும். நீ எங்கே ?” விசாரித்தான்.

”நானும் உன் கேசுதான். ஆள் இருக்காரா ?” முணுமுணுத்து வாசலைப் பார்த்தான்.

அங்கு ஹீரோ ஹோன்டா இருந்தது.

”அப்ப்பா! ஆள் இருக்கார்.” பெரு மூச்சு விட்டு வாசல் ஏறி அழைப்பு மணி அழுத்தினான்.

கதவைத் திறந்த கதிரேசன் ”வாங்க…வாங்க…”இருவரையும் வரவேற்றார்.

”சார் ! பணம் …? ” சேகர் இழுத்தான்.

”ஒரு நிமிசம்!” என்று சொல்லி உள்ளே சென்றவர் உடன் பணத்துடன் திரும்பினார்.

”என் பழக்கம் எப்போதுமே கையிலே காசு வாயிலே தோசை. ஆனா… சமீபமா தவறிட்டேன். ஏன் தெரியுமா ?” கேட்டு ஏறிட்டார்.

பதில் சொல்லத் தெரியாமல் விழித்தார்கள்.

”உங்களைப் போல எனக்கும் கொஞ்சம் விளையாட ஆசை.” நிறுத்தினார்.

துணுக்குற்றார்கள்.

”நீங்க யார்கிட்ட வேலை வாங்கினாலும் உடனே முடிச்சு உடனே திருப்பறதில்லே. ஒன்னுக்குப் பத்துத் தடவையாய் அலையவிட்டு …வேலையை முடிச்சதும் உடன் காசை கொடுத்ததைத் திருப்புறீங்க. இந்த பழக்கம் உங்ககிட்ட மட்டுமில்லே உங்களைப் போல மத்த தொழிலாளி எல்லார்கிட்டேயும் இருக்கு. வாடிக்கையாளர்கள் கஷ்டம், வலி உங்களுக்கும் புரியனும்ங்குறதுக்காத்தான் நான் அன்னைக்குப் பணத்தோட வந்தும் குடுக்காம திரும்பிட்டேன்.”

”தம்பிகளா ! உங்களுக்கும் ஆயிரம் வேலை. அதே போல் வாடிக்கையாளர்களான எங்களுக்கும் ஆயிரம் வேலை. வேலையைக் குடுத்துட்டு உங்ககிட்ட அலையிறதையும் ஒரு வேலையாய் நீங்க ஆக்கினா…நாங்க எப்படி அடுத்த வேலையைப் பார்க்கிறது ? இன்னைக்கு உங்களைப் போல அலைஞ்சு திரிஞ்சா தொழில் கெடும். தொழில்ல நேர்மை, நாணயம் இருந்தா சிறப்பா முன்னேறலாம். அதுக்கு நான் உதாரணம். சாதாரண மெக்கானிக்கா இருந்து இப்போ சின்ன தொழிலதிபர். நீங்க திருந்தி முன்னேறனும்ங்குறதுதான் என் ஆசை . இது பதிலுக்குப் பதில் இல்லே. பாடம். இந்தாங்க உங்க கூலி.” பணத்தை நீட்டினார்.

சேகர், சதாசிவம் தவறை உணர்ந்து, ”மன்னிச்சிடுங்க சார். உங்க பாடம் எங்களுக்கு மனப்பாடம்!” தழுதழுத்தார்கள். பணத்தைப் பெற்றார்கள்.

Print Friendly, PDF & Email
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *