(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பண்டாரம் மட்டும் அரசியலில் இருந்திருப்பானோயனால், மிகச் சிறந்த தலைவராகக் கருதப்பட்டிருப்பான். அந்த அளவிற்கு பிஸி. அவன். இருப்பினும் அலுவலகத்தில் அக்கெளண்டண்டாக மாட்டிக் கொண்டதால், அவனுடைய ‘பிராடுத்தனம் அடிக்கடி சேலஞ்ஜ் செய்யப்பட்டது. அதற்கு ஒரு வகையில் அவனும் காரணம்.
பொதுவாகத் தப்புத் தண்டா செய்பவர்கள் எல்லோரையும் அனுசரித்துப் போவார்கள். எதிரிகளிடமும் பல்லைக்காட்டி, அவர்களைத் தன் நண்பர்களாக்கிக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆனால் பண்டாரம் இதற்கு விதிவிலக்கு. அவன் செய்யாது. விட்டு வைத்த எதுவும் தப்புத் தண்டாவாக இருக்க முடியாது. இந்த லட்சணத்தில், அலுவலகத்தில் உள்ள அனைவரிடமும் எகிறுவான். ஏடாகூடமாய் நடந்து கொள்ளான்.
அவனை எப்படியாவது எதிலாவது சிக்க வைக்கவேண்டும் என்பதில் பலர் கண்ணாக இருந்தாலும் கிரேட் ஒன் கிளார்க் கிருபாகரன் கருத்தாக இருந்தான். அலுவலகத்திலேயே நேர்மையானவன் அவன். நேர்மை இல்லாத எந்த நிர்வாகமும், பொது மக்களுக்கு எதிரான ஸ்தாபனம் என்று நினைக்கும் “கிறுக்கன்”.
இதற்கிடையே சில மைனர் பிராடுகள், அட்மினிஸ்டி ரேட்டிவ் ஆபீசருக்கு எத்தனையோ மொட்டை பெட்டிஷன்களைத் தட்டிப் பார்த்தார்கள். பலனில்லை, சொல்லப்போனால் தனியறையில் ஏர் கூலர், இதங் கொடுக்க சுழற்நாற்காலியில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கும் அட்மினிஸ்டிரேடிவ் ஆபீசர், நொடிக்கு நூறுதரம் பண்டாரம் பண்டாரம் என்று காலிங் பெல்லை அழுத்தாமல் வெளியே வந்து கூப்பிட்டு அழைத்துப் போகிறார். முக்கியமான பைல்களை, இருவரும் நீண்ட நேரம் விவாதிக்கிறார்கள். பண்டாரம் சிரித்த முகத்தோடு வெளியே வருகிறான். வந்ததும் வராததுமாக “வார வட்டிக்கு… யாருக்குப் பணம் வேண்டும்?” என்று கேட்கிறான்.
‘மொட்டையர்கள்’ யோசித்தார்கள். அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீசரும் அயோக்கியன் பண்டாரத்துக்கு நெருக்கமான பெரிய அயோக்கியன் ஆகையால் இப்போது மொட்டைப் பெட்டிஷன்கள் எழுதுவதை நிறுத்தி விட்டார்கள்.
மொட்டைப் பெட் டிஷ ன் வரும் போதெல்லாம் அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீசர், பண்டாரத்தை வரவழைத்து, பெட்டிஷனிலுள்ள குற்றச்சாட்டுகளை, பைல்க ைள வைத்து, விவாதிப்பதோடு, பண்டாரத்துக்கு எச்சரிக்கைமேல் எச்சரிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் என்பதும், பண்டாரம் அத்தனை உதைகளையும் வாங்கிக் கொண்டு வெளியே வரும் போது, அவருக்கு, கான்பிடன்ட் மாதிரி ஒர் அபிப்ராயத்தைக் கொடுப்பதற்காகச் சிரித்துக் கொண்டு வருகிறான் என்பதும், அந்த அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது.
மைனர் பிராடுகள், மேஜர் பிராடுக்கு எதிராக மொட்டைப் பெட்டிஷன் வேலையைப் புதுப்பித்தார்கள். அட்மினிஸ்ட்டிரேட்டிவ் ஆபீசருக்குப் பதிலாக டில்லியில் இருக்கும் டைரெக்டருக்கு, பண்டாரத்தின் சகல பிராட் லீலைகளையும் விலாசப்படுத்தி எழுதினார்கள். மொட்டைப் பெட்டிஷனுக்கு வார வட்டிக்கு ஆபீஸ் பணத்தை விடுவதைத் தலைப்புச் செய்தியாகப் போட்டு அனுப்பி வைத்தார்கள்.
பதில் இல்லை.
அவர்கள் சளைக்கவில்லை. ஒன்று. இரண்டு. நாலு. எட்டு.
மொட்டைப் பெட்டிஷன்கள் கத்தை கத்தையாகப் பறந்தன. அவற்றை பழைய பேப்பர்க்காரர்களிடம் போட்டால், பேப்பர்காரர் செய்கிற திருட்டுத்தனம் தவிர்த்து எடை மூன்று கிலோ தேறும்.
டில்லி டைரக்டரால் இதற்குமேல் பொறுக்க முடியவில்லை.
இனிப் பொறுத்தல் தவறு.
டைரக்டர், கடுவன் பூனையான டெபுடி டைரக்டர் தேஷ்முக்கை விசாரணைக்கு அனுப்பினார்.
மடிசார் வேட்டியுடன் சாதாரணமாக வந்த தேஷ்முக்கை, ‘கஸ்டமர் என்று நினைத்தனர் அலுவலக ஊழியர்கள். அவரைப் பார்த்ததும், அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீஸ்ரே அறைக்கு வெளியே வந்து அரை பல்டி அடிக்கப் போகிறவர் போல் நெளிந்து நின்றதைப் பார்த்துச் சுதாரித்துக் கொண்டார்கள்.
“ஸார் ஒங்க விளலிட் ஸர்பிரைஸா இருக்கே” என்று சொன்ன அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீஸ்ரைப் பார்த்து அர்த்த புஷ்டியாகச் சிரித்துக்கொண்டே, “ஹர இஸ் பண்டாரம்? வேர் இஸ் பண்டாரம்? வாட் இஸ் பண்டாரம்?” என்று சத்தமாகச் சொன்னார் தேஷ்முக்.
அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீசர் அவரை அழைத்துக் கொண்டு, பண்டாரத்தின் முன்னால் நிறுத்தி, ஹி இஸ் பண்டாரம்… அக்கெளண்டண்ட் பண்டாரம்…” என்று சொல்ல நினைத்தாரே தவிர, நாக்கு நினைத்ததை ஒலியாக்கவில்லை.
தேஷ்முக் கடுவன் பூனையானார். பண்டாரம் போட்ட ‘சல்யூட்டைப் பொருட்படுத்தவில்லை.
“மிஸ்டர் பண்டாரம்… வேர் இஸ் கேஷ் பாக்ஸ்? கேஷை செக் பண்ணனும்.”
பண்டாரம் வெலவெலத்துப் போனான். ஆபீஸ் இம்ரஸ்ட் பணம் ஐந்நூறில், கொஞ்சம்தான் இருக்கு. ஐந்து ஆசாமிகளுக்கு வார வட்டிக்கு விட்டிருக்கிறான். நாளைக்குத்தான் சம்பள நாள். பாவிப் பயல்கள், நாளை மறுநாள்தான் கொண்டு வருவார்கள்.
“கமான். கிவ் மீ தி கீ…”
கிருபாகரன் சிரித்துக் கொண்டான். பயலுக்கு வேணும்!
“ஜ. லே. பண்டாரம் சாவியைக் கொடுங்க”.
பண்டாரம் கதி கலங்கிப் போனான். அதே சமயத்தில் ‘சாவியை கொடுங்க” என்ற வார்த்தை அவனுக்கு ஒரு சுபசகுனமாக ஒலித்தது. மூளையில் ஏதோ ஒரு ஸெல் ஒரு பிராடுத்தனத்துக்கு ஐடியா கொடுத்தது.
பண்டாரத்துக்குப் புதுத் தெம்பு பிறந்தது.
“நல்லா. பாருங்க. ஸார். எதைத் தொட்டாலும் கேஷை மட்டும் தொடமாட்டேன். இந்தாங்க… சாவி… இந்தாங்க…”
தேஷ்முக் ஸீரியஸ்ஸாக முகத்தை வைத்துக்கொண்டு கேஷ் புக்கைப் பார்த்தார். 310-90 ரூபாய் பாலன்ஸ் இருக்க வேண்டும்.
தேஷ்முக் சாவியை வைத்து பெட்டியைத் திறந்தார். பணத்தை வெளியே எடுத்து எண்ணப்போனார்.
பண்டாரம் சிரித்துக் கொண்டான்.
“ஒன் மினிட் ஸார். எண்ணுங்க. நான் பாத் ரூம் போயிட்டு வந்துடறேன். டயேரியா மாதிரி இருக்கு தேஷ்முக் பணத்தை எண்ணி முடித்தார். 90-10 ரூபாய்தான் இருந்தது. 220-80 ரூபாயைக் காணோம். அவருக்கு ரத்தம் கொதித்தது. இவனை விடக்கூடாது. எல்லோரும் பண்டாரம் வருகைக்காகக் காத்திருந்தார்கள். ஒரு சிலர் அவனுக்காகப் பரிதாபப்பட்டார்கள். மாட்டிக்கிட்டானே! உத்தியோகம் போயிடுமே… ஜெயிலுக்குப் போகனுமே… பண்டாரம் அரை மணி நேரம் கழித்துச் சாவகாசமாக வந்தான். தேஷ்முக் சீறினார்.
“பண்டாரம். 220 ரூபாய்க்குமேல் எடுத்திருக்கே… ஒன்னை சஸ்பெண்ட் செய்யப் போறேன். போலீஸில் ரிப்போர்ட் பண்ணப் போறேன்.”
பண்டாரம் அசரவில்லை.
“வாட்…? 310-90 ரூபாய் சரியாய் இருந்துதே…”
“நான் எண்ணிப் பார்த்தேன். 90-10 தான் இருந்தது.”
“எப்படி ஸார் இருக்கும்? நீங்க வரதுக்கு ஐந்து நிமிஷத்துக்கு முன்னதான் செக் பண்ணினேன்… 310-90 இருந்தது.”
“நீ இப்படி சொன்னா என்னய்யா அர்த்தம்?” “நீங்க எண்ணும்போதே. கொஞ்சத்தை எடுத்துப் பைக்குள் வச்சிருக்கலாம். யார் கண்டா?”
“ஏய். நீ வரம்பு மீறிப் பேசறே. நான் டெபுடி டைரெக்டர் தேஷ்முக்… என்னையா திருடுனதா சொல்றே?”
“ஸார் நான் நல்ல குடும்பத்தில இருந்து வந்தவன். நான் எடுத்திருப்பேன்னு நீங்கதான் வரம்பு மீறிப் பேசறீங்க…”
“ஓ மை காட். நீ இண்டர்நேஷனல் பிராடாய் இருப்பே போலிருக்கே…”
“ஸார் வார்த்தையை அளந்து பேசுங்க… கேஷ் பாக்ஸில் இருந்து பணத்தை எடுத்து. பைக்குள் போட்டுக்கிட்டதுமில்லாமல். என்மேலேயே பழி போடுறீங்களே…”
“ஒய். பணத்தை எடுத்ததை ஒப்புக்கொள். இல்லேன்னா… போலீஸுக்கு போன் பண்ணுவேன்.”
“நானும் அதைத்தான் சொல்றேன். மரியாதையா. எடுத்த பணத்தை பாக்சிலே போடுங்க. இல்லேன்னா 199-க்கு போன் பண்ண வேண்டியது வரும். அதோட மான நஷ்ட ஈடு வழக்கு போட வேண்டியதிருக்கும்.”
பண்டாரம் தவிர, எல்லோருமே, அதிர்ந்து போனார்கள். டெபுடி டைரக்டர் தேஷ்முக் முக்கினார்.
“ஏய். என்னையா. ஒரு டெபுடி டைரக்டரைய்யா. திருடன்னு சொல்றே. நான் சரியாத்தான் எண்ணினேன். சரியாத்…”
“நீங்க எப்படி லார் எண்ணலாம்?. என்னை எண்ணச் சொல்லி இருக்கணும். நீங்களே… எண்ணி எடுத்துக்கிட்டால் நானா பொறுப்பு? நல்லவனுக்குக் காலமில்லங்கறது சரிதான்…?”
அட்மினிஸ்ரேட்டிவ் ஆபீசர் அதிர்ந்து போனார். அலுவலக ஊழியர்கள் பண்டாரத்தை மனதுக்குள் வேண்டா வெறுப்பாகப் பாராட்டினார்கள். கிருபர்கரனுக்குக் கிறுக்குப் பிடிக்கும் போலிருந்தது. தேஷ்முக்கின் கண்களில் நீர் தேங்கிவிட்டது. கொட்ட வேண்டியதுதான் பாக்கி.
விஷயம், டைரக்டருக்கு எஸ்.டி.டி.யில் சொல்லப்பட்டது. அவரிடம் பேசிக் கொண்டிருந்த தேஷ்முக்கின் கண்ணிர் டெலிபோனை நனைத்தது.
பண்டாரத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. “பணத்தை செக் பண்ணப்போகும் அதிகாரிகள் பணத்தைத் தொடக்கூடாது. சம்பந்தப்பட்ட நபரை, பணத்தை எண்ணிக் காட்டும்படிக் கூற வேண்டும்” என்று டைரக்டரால் சர்க்குலர்தான் போட முடிந்தது.
எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்ட டெபுடி டைரக்டர் தேஷ்முக். சீனியர்அதிகாரி அதோடு டைரெக்டருக்கு வேண்டியர். ஆகையால் அவர்மேல் ஆக்ஷன் எடுக்கப்படவில்லை. மாறாக, திரித்தவரைக்கும் கயிறு என்ற மனோபாவத்தில், தானுண்டு, தன் பிள்ளைகுட்டிகள் உண்டு என்று இருந்த அடமினிஸ்டிரேட்டிவ் ஆபீசர் தமது பிள்ளைகுட்டிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு அந்தமான் கிளைக்கு மாற்றப்பட்டார்.
பண்டாரம் தன்னை மாற்றினால் கோர்ட் டில் ரிட்போடப்போவதாக ஜாடை மாடையாகப் பேசினான். தானே ‘உண்மை விளம்பியாக மாறி, பண்டாரம் ரிட்டுக்குத் துடித்துக் கொண்டிருக்கிறான். அவனை ஹிட் பண்ணாதீர்கள் என்று மொட்டைத்தனமாக எழுதிப்போட்டான். பிறகு, பலனைப் பற்றிக் கவலைப்படாத கர்மயோகியாகக் காட்சியளித்தான்.
இன்னொரு பெரிய வேலைக்கு அடிபோட்டுக் கொண்டு இருந்த டைரக்டர் கோர்ட் வழக்கு எதற்கு? என்று நினைத்துச் சும்மா இருந்துவிட்டார்.
கிருபாகரனால் சும்மா இருக்க முடியவில்லை.
பல்லைக் கடித்துக் கொண்டான். கட்டுண்டான்; பொறுத்திருப்பான்.
காலம் மாறும்.
காலம் மாறி வந்தது.
பண்டாரம், லீவில் இருக்கையில், கிருபாகரன், எ ஸ்டாபிளிஷ் மெண்ட் செக் ஷ ன் கிளார்க் கோடு பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு மோசடி தெரியவந்தது. பண்டாரம் ஆபீஸ் விஷயமாக, குறிப்பிட்ட ஒருவாரம் டெல்லியில் இருந்திருக்கிறான். அதற்காக டி.ஏ போட்டிருக்கிறான். ஆனால் அதே வாரம் சென்னையில் மருத்துவ சிகிக்சை பெற்றதாக மெடிக்கல் பில்லும் போட்டிருக்கிறான் எப்படி?
கிருபாகரன், மொட்டைப் பெட்டிஷன் எழுதவில்லை. முழுக் கையெழுத்தோடு தட்டிவிட்டான் ஒரு பெட்டிஷனை.
டைரக்டர் ‘விட்டுத் தொலைக்கலாம்’ என்றார். ஆனால் சூடுபட்ட தேஷ்முக் பண்டாரத்தைத் தொலைக்கவும் என்றார். அதே சமயம் தாமே விசாரணைக்குப் போக மறுத்துவிட்டார்.
இறுதியில் சரியாகக் கண்ணும் தெரியாத காதுங் கேட்காத ரிட்டயர் ஆகும் தருவாயில் உள்ள இன்னொரு டெபுடி டைரக்டர் படேசிங்கை, டைரெக்டர் அனுப்பி வைத்தார். படேசிங், மாலையில் போகும் ரயிலுக்காக, காலையிலே ஸ்டேஷனில் போய் நிற்கும் டைப்பு; எல்லா ரிக்கார்டுகளையும் எடுத்துக் கொண்டார். சென்னைக்குப் போவதுதான் அவரது கடைசி அபிவியல் யாத்திரை.
ஒரு வாரத்தில், ஒரு ஞாயிற்றுக் கிழமை.
சென்ட்ரல் ஸ்டேஷனில் தமிழ்நாடு எக்ஸ்பிரசில் முதல் வகுப்பிலிருந்து இறங்கிய படே சிங்கை, நாலுமுழ வேட்டியும், கிழிந்த சட்டையும் போட்ட நபர் ஒருவன், நமஸ்கார் படேசிங்ஜி” என்றான்.
“அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீசர் அனுப்பி வைத்தார்… உங்களைப் பார்க்கறதுக்கு ஸ்டேஷனுக்கு வரத்துடித்தார். ஆனால் அவர் ஒய்புக்கு nரியஸ்னு திருச்சியிலிருந்து தந்தி வந்தது. போய் விட்டார். டோன்ட் ஒர்ரி ஸ்ார்… ஒங்களுக்கு ரூம் புக் பண்ணியாச்சு. ஊட்டி போறதுக்கு நீலகிரி எக்ஸ்பிரஸில் டிக்கெட் புக் பண்ணியாச்சு… என்னையும் உங்களோட வந்து. சுற்றிக் காட்டச் சொன்னார். போகலாமா?”
போனார்கள்.
பியூனின் அன்பினாலும், அவன் செலவழித்த பணத்தாலும், படேசிங் மகிழ்ந்து போனார். பியூன் என்றால், இவனல்லவோ பியூன் ஊட்டியிலும் சரி, கோயம்புத்துரிலும் சரி, ஒரு நயா பைசா இதுவரை அவரைச் செலவழிக்க விடவில்லையே, நிச்சயம் அவனை அட்டெண்டராக புரமோட் செய்ய வேண்டும்!
ஞாயிற்றுக்கிழமை சென்ட்ரலில் இறங்கி, அன்றே நீலகிரி எக்ஸ்பிரஸில் ஊட்டி போய், புதன் கிழமை விசாரணைக்காக அலுவலகம் வரப் போவதாகவும் ஆவன செய்யும்படியும் தான் எழுதிய பர்ஸனல் கடிதத்திற்கு அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீசர் எடுத்துக் கொண்ட முயற்சியை அவர் பாராட்டியதோடு தாம் ரிட்டயராவதால் காலியாகும் இடத்திற்கு அவரைப் போடும்படி சிபாரிசு செய்ய வேண்டுமென்றும் நினைத்துக் கொண்டார்.
ஊட்டி போய்விட்டு, எம்.எல்.ஏ.ஹாஸ்டலில ஒய்வெடுத்துக் கொண்டிருந்த படேசிங், பியூன், டீக்காய் டிரஸ் பண்ணிக் கொண்டு வருவதைப் பார்த்து வியந்தார். அதுக்கென்ன? பியூன்னா, வெட்டியாய்த்தான் இருக்கணுமா? டெர்லின் கூடாதா?
பியூன் அவரை பிரைவேட் கார் ஒன்றில் அலுவலகம் அழைத்துப் போனான்.
பண்டாரம் சகிதமாய் வந்த படேசிங்கைப் பார்த்து. அட்மினிஸ்ட்டிரேட்டிவ் ஆபீசர் ஆச்சரியப்பட்டுப் போனார்.
அவர் பேசுவதற்குள், படேசிங் முந்திக் கொண்டே ஐ ஆம் லாரி மிஸ்டர் கண்ணுச்சாமி! ஒங்க, ஒய்பு எப்படி இருக்காங்க?” என்று கேட்டு வைத்தார்.
அட்மினிஸ்டிரேடிவ் ஆபீசர் கண்ணுச்சாமி திகைத்தார் வந்ததும், வராததுமாய் ‘ஒய்பை’ப் பற்றிக் கேட்கிறானே, இவனுக்கு அறிவிருக்கா? அவர் மனைவி அழகிதான் அதுக்காக…?
கண்ணுச்சாமியின் இருக்கையில் படேசிங் உட்கார்ந்தார். ஏதோ பேசப் போனார் அதற்குள் பண்டாரம் முந்திக் கொண்ட “படேசிங்ஜி. நான்தான் பண்டாரம். உங்களிடம் தனியாய்ப் பேசணும்… மிஸ்டர் கண்ணுச்சாமியை வெளியே போகச் சொல்றீங்களா?” என்றான்.
டெபுடி டைரக்டருக்கு லேசாக விஷயம் புரியத் துவங்கியது. கண்ணுச்சாமியைப் போகும்படி அவர் கண்களால் ஆணையிட்டார். சொந்த அறையில் இருந்தே வெளியேற்றப்பட்ட வெங்கொடுமைச் சாக்காட்டை, நினைத்துக் கண்ணுச்சாமி வெம்பிக் கொண்டு வெளியேறிய போது, பண்டாரம் டெபுடியிடம் முரட்டுத்தனமாகப் பேசினான்.
“படேசிங்ஜி நான் தப்பு பண்ணியது உண்மைதான். ஏன் உங்களை மாதிரி மேலதிகாரிகளும் தப்பு பண்றது மட்டுமில்லாமல், தப்பு செய்கிறவர்களைத்தான் விரும்புகிறீர்கள் என்பதுதான் காரணம். டுர் போனோமே, எந்த ஒரு இடத்திலேயாவது, எந்த ஒரு சின்னச் செலவுக்காவது, எந்த ஒரு சமயத்திலேயாவது நான் கொடுக்கிறேன்னு சொன்னிங்களா? இல்லை. ஏன்? ஊரான் வீட்டுக்காசுன்னா, எனக்கு மட்டுமல்ல. உங்களுக்கும் ஆசை..”
“சரி விஷயத்துக்கு வருவோம்…. உங்களுக்கு நான் செலவளிச்சதுக்கு நிறைய ஆதாரம் இருக்கு. நீங்க ‘அதை’ விட்டுடுங்க நான் இதை விட்டுடறேன். நீங்க கண்ணுச்சாமிக்கு எழுதின லெட்டரைப் பிரிச்சது தப்புதான். ஆனால் ஒரு தப்புத்தானே இன்னொரு நல்லதைக் கொண்டு வருது?”
படேசிங் விட்டு விட்டார். பண்டாரம் நேர்மையானவன் என்றும், அவன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்றும், ரிப்போர்ட் கொடுத்து விட்டார். தேவையற்ற பிரச்னைக்கு மூலகாரனமான கிருபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபார்சு செய்தார்.
கிருபாகரன் ‘கடவுளே…! இந்தப் பண்டாரத்தை நீதான் அடக்கனும் என்று அலுவலகத்திலேயே சாமி கும்பிட்டான்.
எப்படியோ,’இப்போது பண்டாரம் காட்டில்மழை பெய்கிறது.
மொட்டைப் பெட்டிஷன் போடாமல், முழுக்கையெழுத்துப் போட்ட கிருபாகரன் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கேள்வி.
– காகித உறவு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: சூலை 2005, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.