(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கறுப்பு எக்ஸ் குறி போட்டு, மஞ்சள் தொப்பி அணிந்த கிழவர் பள்ளிக்கூடப் பிள்ளைகள் ரோட்டுக் கடக்க உதவுவதற்காகக் காத்திருந்தார். அவர் கையில் இருந்த சிவப்பு அட்டை கைப்பிடியில் வெள்ளை வர்ணத்தில் STOP என்று எழுதியிருந்தது. கிழவர் தன்னுடைய சம் பளம் வாங்காத உத்தியோகத்தில் தீவிரமாக இருந்தார். சில பெண் குழந்தைகள் பொறுமை இல்லாமல் அவர் கைகளைப் பறித்துக்கொண்டு சீறிப்போய் சாலையைக் கடந்தன.
கிழவருடைய கண்படாத தூரத்தில், ஆனால் சிறுமி கள் கலவரப்பட்டு பார்க்கும்படி வசதியான தொலை வில், அவன் தன்னை நிறுத்திக்கொண்டான். வெள்ளை பனியனும், சாரமுமாக தன் தொழிலுக்கு உகந்த உடை யில் காட்சியளித்தான். பத்து வருடங்களாக அவன் காவாலியாகக் காலம் கழித்துவிட்டான். இவனுக்கு அந்த ஊரில் ஒரு தனி மதிப்பு இருந்தது. பெற்றோரும் பிள்ளைகளும் இவனைப் பார்த்தாலும், பார்க்காத மாதிரி இருக்கப் பழகிக் கொண்டார்கள்.
ஓரமாக இருக்கும் பள்ளிக்கூடங்களையும் கல்லூரிகளையும் அவனுக்குப் பிடிக்கும். பள்ளிக்கூடம் என்றால் சீருடை அணிந்து வந்து போகும் சிறுமிகள். கறுப்புச் சப்பாத்து, வெள்ளைக் கால்மேசு, வெள்ளைச் சீருடை, மஞ்சள் ரிப்பன் என்று மலர் வனத்தை உலுக்கிவிட்டது போல இருக்க வேண்டும்.
கல்லூரிகள் என்றால் பருவப் பெண்கள் வண்ண வண்ணமாக உடுத்தி, புத்தகங்களை மேலே பிடித்து, கண்களைக் கீழே போட்டு நடந்துவரவேண்டும். எக்கிய இடையும், சின்ன நடையுமாக இருந்தால் இன்னும் நல்லாக இருக்கும். கும்பல் கும்பலாக வருவதில் ஒரு கவர்ச்சி இருந்தது. தனியாக வரும்போது இன்னொரு அழகு.
சிறு பெண்கள், பாடசாலையில் இருந்து வெளியே வரும்போது அவனைக் கண்டதும் புத்தகப் பையைத் தூக்கி முகத்தை மறைத்துக் கொண்டு ஓடப் பழகியிருந் தார்கள். அவர்கள் எதிர்பாராத தருணத்தில், திடீரென்று அவர்கள் முன் தோன்றி தன்னுடைய காவாலி என்ற பேருக்கு அவமானம் ஏற்படாமல் நடந்துகொள்ள வேண்டுமென்பதுதான் அவன் ஆசை.
அவனை ஊரில் எல்லாருக்கும் தெரிந்திருந்தது. அவனுடைய பிரபலம் காவல் நிலையம் வரைக்கும் போய்விட்டது. இரண்டு முறை பொலிஸில் பிடித்தும் போய்விட்டார்கள். முழங்காலில் இரண்டு உதை வாங்கியதோடு திரும்பிவிட்டான். பெண்கள் பள்ளிக் கூடம் விடும் போதுதான் அவனுடைய வியாபாரம் மும்முரமாக நடக்கும். ஆனாலும் அவன் தன் ஸ்தலத்தை அடிக்கடி மாற்ற வேண்டும்; அல்லாவிடில் அபாயம் உண்டு.
சாதுவாகக் காணப்படும் பெண்களையே அவன் குறிவைப்பான். அங்குமிங்கும் பார்த்துவிட்டு அவர்கள் முன் திடுதிப்பாக தோன்றி தன் காரியத்தை செய்வான். சில அப்பாவிப் பெண்களுக்கு முதலில் அவன் என்ன செய்கிறான் என்று பிடிபடவே நேரம் எடுக்கும். அவனுடைய நோக்கம் ஆரோக்கியம் ஆனதல்ல என்று தெரிந்ததும் அவர்கள் எதிர்வினை வெவ்வேறுமாதிரி இருக்கும்.
சிலர் ‘வீ’ என்று கத்துவார்கள்; சிலர் பிரமை பிடித்து நிற்பார்கள்; சிலர் திரும்பி ஓடுவார்கள்; இன்னும் சிலர் புத்தகங்களைத் தூக்கி முகத்தை அரைவாசி மறைத்துக்கொள்வார்கள்.
ஆனால் அன்று நடந்தது எதிர்பாராதது. இத்தனை வருட சேர்விஸில் அப்படிப் பார்த்ததில்லை. மரங்களிலே இருந்து சின்னச் சின்ன பூக்கள் உதிர்ந்தன. அந்தப் பெண் பாதையைக் கடக்குமுன் தங்கள் பூக்கள் எல்லாவற்றையும் கொட்டி விட வேண்டும் என்பது போல அவை அவசரப்பட்டு வேலை செய்தன. அவளைப் பார்த்தால் மிக சாதுவாகத்தான் தெரிந்தாள். முகத்திலே வெக்கமான செம்மை. இதற்கு முன்பு பார்த்திராத ஒரு புதியவள். தலையைக் குனிந்தவளும், கண்களைத் தாழ்த்தியவளுமாக வந்து கொண்டிருந்தாள். அங்கேதான் அவன் ஏமாந்து போனான்.
இவள் ஓடவில்லை; அசையவில்லை. சிறிது நேரம் அவனையே பார்த்திருந்துவிட்டு ரோட்டைக் கடந்தாள். இடது பக்கம் பார்க்க வில்லை; வலது பக்கம் பார்க்கவில்லை; அவனிடம் நேராக வந்தாள். கண்கள் அவனை விட்டு அசையவில்லை. அவளுடைய கண்களும் அவனுடைய கண்களும் ஒன்றுடன் ஒன்று பூட்டிக்கொண்டு விட்டன. அவன் மெதுவாக சாரத்தை இறக்கினான். உடம்பு அவன் தோலுக்குள் சுருங்கிப்போனது. ஓடுவோமா என்று ஒரு கணம் யோசித்தான்.
அவனுக்கு வந்த கோபத்தில் மனது இலக்கணம் பிசகாத சுத்தத் தமிழில் திட்டியது. ‘இவள் சிறுபெண்ணாக இருக்கிறாள். அதுவும் மாணவி, என்ன துணிச்சல் இருந்தால் என்னிடம் இப்படி நேராக வருவாள்.’ கிட்ட வந்த அவள், அவனைத் துளைப்பது போலப் பார்த்தாள். குனிந்து செருப்பை எடுப்பாளோ என்று ஒரு விநாடி அவன் திகைத்தான். ஆனால் அப்படி அசம்பாவிதம் ஒன்றும் நேரவில்லை.
அவனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாள். ‘அடுத்த ஷோ எப்ப இருக்கும்? என்னுடைய தங்கையும் பார்க்க வேண்டும்.’
அவனுடைய காவாலி இமேஜ் இப்படித்தான் உடைந்தது. எக்காளம் ஊதியபோது எரிக்கோ சுவர்கள் இடிந்தது போல.
அன்றிரவு அவன் ஊரைவிட்டு ஓடிவிட்டான். ஊரில் அந்தக் கதையை எல்லோரும் வியப்பாகப் பேசிக்கொண்டார்கள். ஒருவருக்கும் என்ன நடந்ததென்று முழுதாகத் தெரியவில்லை. மஞ்சள் தொப்பி கிழவரும், விரிந்த கண் சிறுமிகளும் மிகவும் சந்தோஷப்பட்டனர்.
ஆனால் எதிர்பாராத காரியம் ஒன்றும் நடந்தது. அந்தப் பெண்ணைப் பற்றி பல அவதூறுகள் கிளம்பின. வதந்திகள் என்றால் வேகமாகப் பரவும் தன்மை கொண்டவை. அவளுடைய தகப்பனாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வாழ்க்கையில் மிகச் சுலபமான வழிகளைத் தேர்ந்தெடுத்துப் பழகியவர். அவளைக் கல்லூரியிலிருந்து விலக்கிக்கொண்டு வேறு ஊருக்கு மாற்றலாகிப் போய்விட்டார்.
காவாலி ரவுனுக்குப் போனான். தன்னுடைய ரவுடித்தனத்தை வைத்துப் பிழைத்துக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான். ரவுனிலே இவனைவிட சேர்விஸ் கூடியவர்கள் இருந்தார்கள். புதிதாக வந்த இவனை அவர்கள் மதிக்கவில்லை. இவனுடைய பழைய பெருமைகளும் அவர்களுக்குத் தெரியவில்லை .
சிலகாலம் இரவிரவாகச் சுவர்களில் நோட்டீஸ் ஒட்டும் வேலை பார்த்தான். நேர்மையாக இருந்தான். அப்படியும் நிரந்தர வருவாய் இல்லை. பழையபடி ரவுடித்தனத்துக்குத் திரும்பி விடுவோமோ என்று பலமுறை நினைத்தான். அவனுடைய யோசிப்புக்கள் நாலு திசையிலும் நீண்டன .
அந்த நேரங்களில் அந்தப் பெண் தோன்றினாள். கோபமில்லாத கண்கள்; சிரிப்பில்லாத உதடுகள். ஆனால் அவளை மறக்க முடியவில்லை. புத்தக ஒற்றையை மடித்துவிட்டு விட்ட இடத்திலிருந்து தொடர்வதுபோல அவளுடைய நினைவுகள் தொடர்ச்சியாக வந்தன. அந்தப் பெண்ணும் கல்லூரிப் படிப்பை முடிக்காமல் பாதியிலேயே விட்டுப் போனதாகக் கேள்விப்பட்டிருந்தான். அவனுக்கு வருத்தமாக இருந்தது. அந்த துணிச்சலான பெண்ணுக்கு என்ன ஆகியிருக்கும் என்று அடிக்கடி தன்னையே கேட்டுக்கொண்டான். அவளுக்காக, சுத்தப்படுத்திய சில முத்தங்களை அவன் தனியாக எடுத்து வைத்தான்.
அப்பொழுது அவனுக்குத் தியேட்டரில் டிக்கட் கிழிக்கும் உத்தியோகம் கிடைத்தது. அந்த வேலையை நிரந்தரமாக வைத்துக்கொண்டான். யாராவது இளம் பெண்கள் தியேட்டருக்கு வந்தால் அவர்களுடைய உதடுகளையும் கண்களையும் உற்று நோக்குவான். ஒரு விநாடி மட்டுமே பார்த்த அவளுடைய உயரமோ, நிறமோ, சடையோ அவனுக்கு ஞாபகமில்லை. ஆனால் படபடக்கும் கரிய கண்களையும், மெல்லிய கறுப்பு வரைந்த உதடுகளையும் அவன் ஒரு கணமேனும் மறந்ததில்லை.
இப்படியாகப் பல வருடங்கள் ஓடிவிட்டன.
ஒரு நாள் ஓர் இளம் கணவனும் மனைவியும் ஸ்கூட்டரில் வந்தார்கள். அந்தப் பெண் இறங்கி வந்த போது ஒலிம்பிக் பந்தத்தைத் தூக்கி வருவதுபோல மிதந்து கொண்டு வந்தாள். தாராளமயமாக்கப் பட்ட தலைமயிர்; ஒரு ஜெட் விமானத்தின் புகைபோல அவளுடைய கேசம் நேராகவும் நீளமாகவும் இருந்தது. பாதி விழிகளினால் தான் அவளைப் பார்த்தான். முழு விழிகளால் அவளுடைய பிரகாசத்தைத் தாங்கமுடியாது என்று அவனுக்குப் பட்டது.
தியேட்டரில் டிக்கட் முடிந்துவிட்டது. இது தெரிந்ததும் அந்த பெண்ணின் வதனம் சுருங்கிவிட்டது. அவளுடைய முகம் வாடக் கூடிய விதமாக ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று இவனுடைய மனது ஏனோ பிரார்த்தித்தது. அவள் கணவனின் முகத்தையே பார்த்தாள். வாய் திறந்து ஒன்றுமே சொல்லாமல் அவன் செய்யப் போவதை அவதானித்தாள்.
கணவன் மிகவும் தயக்கமாகப் போய் பிளாக்கில் இரண்டு டிக்கட் வாங்கி வந்தான். அப்பொழுது அந்தப் பெண் திரும்பினாள். அந்த முகம் நெஞ்சைத் தொட்டது. அந்நியமான முகமாகத் தெரியவில்லை. பல இரவுகள் அவனுக்கு அறிமுகமான முகம். கண் மடல்கள் படபடப்புக் குறைந்து ஒளி தீட்டியிருந்தன. ஈரமாகி இளமையாக இருந்த இதழ்கள் இப்போது முற்றிவிட்டன. வயதாக்கப் பட்ட அவன் முத்தங்கள் வீணாகிப் போயின என்று பட்டது.
டிக்கட்டைக் கிழித்துக் கொடுத்தபோது ஒருவரும் அவனுடைய விரல்களின் நடுக்கத்தைக் காணவில்லை. கணவனுடன் உள்ளே சென்ற பெண் திடீரென்று திரும்பி வந்தாள். அவனுடைய கண்களை அவள் கவரவுமில்லை; தவிர்க்கவுமில்லை. கறுப்பு நூல் பூசிய விளிம்பு அதரங்களைத் திறந்து, ‘அடுத்த ஷோ எத்தனை மணிக்கு?’ என்று மிகச் சாதாரணமாகக் கேட்டாள். அவள் சொற்கள் செல்லமாகவும், நெருக்கமாகவும் வந்தன. உதடுகள் பளபளவென்று சும்மா விருந்தாலும் கண்கள் பெரிதாகச் சிரித்துக் கொடுத்தன.
அவனிடம் இருந்த வார்த்தைகளை எல்லாம் அவள் களவாடி விட்டாள். சிறிது நேரம் கழித்துத்தான் அவனுக்கு வாய் திறந்தது. இவ்வளவு காலமும் பூட்டிவைத்த எண்ணங்கள் சிந்தி விடுமுன் கேட்டான். கையிலே இருந்த பாதி டிக்கட்டை பார்த்தபடி, ‘பெண்ணே, உன்னுடைய பட்டப் படிப்பை முடித்துவிட்டாயா?”
‘எங்கே முடிந்தது? என் பட்டப் படிப்பு அன்றைக்குப் போனது தான்’ என்றாள். பிறகு ஏதோ யோசித்தது போல ‘உனக்கு என்ன நடந்தது?’ என்று கேட்டாள்.
‘உனக்குப் பட்டம் கிடைக்கவில்லை; இருந்த பட்டமும் எனக்கு அன்றோடு போய்விட்டது’ என்றான்.
மனைவியைத் தவறிய புதுக் கணவன் வேகமாகத் திரும்பி வந்தான். அவளைச் சந்தேகமாகப் பார்த்தபடி கையைப் பிடித்து உள்ளே இழுத்துச் சென்றான்.
– 1999-2000
– மஹாராஜாவின் ரயில் வண்டி, முதற் பதிப்பு: டிசம்பர் 2001, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.