பட்டம் விடுவோம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 2,356 
 

கொட்டாஞ்சேனையில் ஒரு குச்சு ஒழுங்கையிலே அந்த இடத்திலே மூன்றரைப் பேர்ச் துண்டிலே பழைய வீடு உடைக்கப்பட்டு புதியதாக அந்த மூன்று மாடிக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த மாடிக்க கட்டிடத்தை கட்டுகின்ற “றிச்சார்ட்” என்பவன் யாழ்ப்பாணத்தவன். அவன் யாழ்ப்பாணத்திலே எட்டாம் வகுப்பு வரை முக்கித்தக்கிப் படித்து விட்டு அதற்கு மேல் படிப்பு ஓடாது என்று பாடசாலைக்குப் போகாமல் “கெற்றப்போல்” அடித்துக்கொண்டு திரிந்தான். 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரத்துக்குப் பிறகு தோன்றிய நிலைமைகளுக்குள் தன்னை உட்படுத்தினான். அங்கு வாழ முடியாத நிலைமை ஏற்பட்டதும் கொழும்பு வந்து சேர்ந்து விட்டான்.

அவன் பல நாள்கள் வேலை தேடி அலைந்து இறுதியில் மொத்தவிற்பனைத் துணிக்கடையில் ஒரு வேலை கிடைத்தது. முதலாளி சொல்லுகின்ற கடைகளுக்குப் புடைவைகளைக் கொண்டு போய் ஒப்படைக்க வேண்டும். ஒன்றரை வருடங்கள் இந்த வேலை செய்து பெற்ற அனுபவத்தைக் கொண்டு துணிகளை வாங்கிக் கடைகளுக்குக் கொடுக்கின்ற தொழிலைச் செய்ய ஆரம்பித்தான். ஒரு வருடத்திலே அந்த வியாபாரத்தில் கிடைத்த இலாபத்திலே ஒரு சிறு கடைத் துண்டை வாடகைக்கு எடுத்து தொடர்ந்து வியாபாரம் செய்து கொண்டி ருக்கிறான். இதற்கிடையில் கொழும்புத் தமிழ்ப்பெண் ஒருத்தியைக் காதலித்துத் திருமணம் செய்து இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் தகப்பனாகியும் விட்டான்.

அவனது தாய் யாழ்ப்பாணத்தில் செல்விழுந்து செத்துப்போனாள். அந்நேரம் மரணச் சடங்கில் கூட கலந்து கொள்ள யாழ்ப்பாணம் போக முடியாத நிலை. அவன் தான் இன்று இந்த மூன்று மாடி வீட்டைக் கட்டுகின்றான்.

மேசன் சிவநாதனே அந்தக் கட்டிடத்தைக் கட்ட கொந்தறாத்து எடுத்தி ருக்கிறான். அவன் யாழ்ப்பாணத்திலே மேசன் வேலை செய்ய முடியாத போர்ச் சூழ்நிலையினால் வீட்டில் கிடந்த நகைகளை விற்றுக் கொஞ்ச நாள் வாழ்க்கையை ஓட்டிவிட்டு, கொழும்புக்குப் போனால் மேசன் வேலை செய்யலாமென்று பலர் கூறியதால் கொழும்புக்கு வந்தவன், அவன் எதிர்பார்த்ததை விட கொழும்பு வாழ் தமிழர்களிடமிருந்து வீடு கட்டும் வேலைகள் கிடைத்தன.

விடுதலை இயக்கங்களை விட்டுத் தப்பி ஓடி வந்தவர்களும், ஏஜென்சிகளுக்கு இலட்சக்கணக்கான பணத்தைக் கட்டிவிட்டு வெளிநாடு செல்ல ஆண்டுக் கணக்காக எதிர்பார்த்திருக்கின்ற இளைஞர்களும் தமது அன்றாட சீவியத்துக்காக சிவநாதனிடம் கூலிகளாகச் சேர்ந்து விட்டார்கள். அவனுக்கு அது வாசியாகப் போய்விட்டது.

அந்த மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது தளத்திற்கு “பிளாற்” போடும் வேலை முதல் நாள் காலை தொடங்கி அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு முடிவடைந்தது. றிச்சார்ட்டும், சிவநாதனும் “பிளாற்” போடுவதில் விடிய விடிய வேலை செய்தவர்களுக்குப் புரியாணியும், வடை, வாழைப்பழம், தேநீரும் தாராளமாகக் கொடுத்தனர்.

பாஸ்கரன் காலையிலிருந்து சீமெந்து வாளிகளை அவனுக்கு மேல் நின்றவனுக்குத் தூக்கிக் தூக்கிக் கொடுத்துக் களைத்துச் சோர்ந்து போனான். அவனது கைகால் மூட்டுகளும், முதுகும் உளைவெடுத்துக் கொண்டிருந்தன. அவன் கீழ்த்தளத்திற்கு வந்து வெற்றுச் சீமெந்துப் பக்கற்றை ஒரு மூலையில் போட்டு அதிலே தன் உடலை விழுத்தினான். நித்திரையாகிப் போய்விட்டான்.

காலை ஏழு மணியளவில் அவனோடு வேலை செய்கின்ற தனம் அவனை எழுப்பினான். அவன் மறுபக்கம் திரும்பி கால் இடுக்கில் இரு கைகளையும் செருகிப் படுத்துக் கொண்டான்.

“டேய்! பாஸ்கரன் எழும்படா இண்டைக்கு ஏஜென்சி அறுவான் வரவல்லவா சொன்னவன்? மாடு எழும்படா!”

தனம் பலமாகக் கத்தி அவன் தோளை உலுப்பினான்.

ஏஜென்சி என்ற சொல் நித்திரை மயக்கத்திலே மூளையில் பொறி தட்டியதும் கண்களைக் கசக்கிக் கொண்டு எழும்பியிருந்தான். குந்தி இருந்தவாறு இரு கால்களையும் உருவிச் சூடேற்றி இரு கைகளையும் உதறிச் சோர்வு முறித்தான்.

“ஓம் மச்சான், இண்டைக்கிப் போகாட்டி, அந்த றாஸ்கல் பிறகு யமப் பொய் சொல்லுவான். அவன் அனுப்புவான் எண்டு நம்பிக்கை இல்லையடா!.”

“அது சரி அவனுக்குத் தொல்லை கொடுத்தால் தான் காசையெண்டாலும் வாங்கலாம். எழுப்பி வெளிக்கிடு”.

“தனம் நீ நித்திரை கொள்ளலையா?”

“உன்னை எழுப்பிவிட நித்திரை கொள்ளாமல் இதில் கிடந்தன். போய் அந்தப் பைப்பிலை முகத்தைக் கழுவிக் கொண்டு வா!”

பாஸ்கரன் எழுந்து “பைப்” தண்ணீரில் வெறும் கையால் பற்களைத் தீட்டி முகத்தைக் கழுவிக்கொண்டு, அணிந்திருந்த சேர்ட்டின் கீழ்ப்பாகத்தால் முகத்தைத் துடைத்துக் கொண்டு வந்தான்.

சேர்ட்டின் முனையில் அரும்பியிருந்த தாடி சொர சொரத்தது.

“டேய் உடுப்பை மாத்து. அதற்கு முதல்ல கால்களில் ஒட்டிக்கிடக்கிற சீமெந்துப் பட்டையை எண்ணை போட்டு அழியடா”

“தனம் தேங்காய் எண்ணை இருக்காடா!”

“என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய். றெடியாக ஒரு குப்பியில் கொண்டு வந்திருக்கிறன். இந்தா போட்டுத்தேய்!

தனம் கொடுத்த குப்பியிலிருந்த தேங்காய் எண்ணெயை வலது உள்ளங்கையில் ஊற்றி கால் கைகளில் தடவித் தேய்த்தான். சீமெந்து பட்டை மறைந்து போயிற்று. கையில் மிஞ்சிக்கிடந்த எண்ணெயை தலைமுடியில் தடவி விட்டான். எண்ணெய் தேய்ப்பதற்காக “கொங்கிரிட்” கல்லில் குந்தியிருந்த அவன் எழுந்து சுற்றிப்பார்த்தான்.

கோண்டாவில் நடேசன், கொக்குவில் குகன், திருநெல்வேலி இராஜன், கொட்டடிப் பிரதீபன், வல்வெட்டித்துறை திவாகரன், யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த அல்பிறட், இராஜேந்திரன், யூட், அமரன் ஆகியோரும் இன்னும் பல வடபகுதி இளைஞர்களும்’ “பிளாற்” போட்டு முடித்த களைப்பில் அந்தத் தளத்திலேயே வெற்றுச் சீமெந்துப் பைகளிலே, ஷெல் அடித்து இறந்து கிடந்தவர்களைப் போல ஆழ்ந்த நித்திரையில் கைகால்களைச் சுதந்திரமாக ஒருவருக்கு மேல் ஒருவர் எறிந்து கொண்டு படுத்திருந்தார்கள்.

“இவங்கள் எல்லாம் பாவங்களடா தனம்!”

“டேய் அது தெரியாதா? முதலில் உன் பாவத்தை நீ பார். வெள்ளவத்தைக் கல்லா போக வேணும்? உடுப்பை மாற்றிக் கொண்டு ஓடடா!”

“ஓமடா !”

“அந்த பொறுக்கி ஏஜென்சிக்காரனிட்டை காலைப்பிடித்தாவது, அனுப்பச் சொல்லு’

“ஒண்டரை வருஷமா மூண்டு இலச்சத்தைக் குடுத்திட்டு அதைத்தான்ரா செய்யிறன்”

வேறென்ன செய்யிறது? அதைத்தான் செய்ய வேணும்போ! அவங்களோடை முண்டினாலும் பயங்கரவாதி எண்டு பொலீஸில் பிடித்துக் குடுத்திடுவாங்கள்”

“அந்தப் பயத்திலதான்ரா இருக்கிறன். இல்லாட்டி அந்த எளியவனை அடிச்சு முறிச்சிருப்பன்”

“இவங்களோடை எங்களைப் போன்ற பாவப்பட்ட சனங்களுக்குச் சண்டித்தனம் சரிவராது. வெளிக்கிட்டுப் போ!”

“இந்தா போறன்”

பாஸ்கரன் வேலைக்கு வரும் போது உடுத்தி வந்திருந்த “லோங்சையும் சேர்ட்டையும் ஒரு கொங்கிரிட் கல்லில் மடித்து வைத்திருத்தான். வேலைக்காக அணிந்திருந்த உடுப்புகளைக்கழட்டி விட்டு, அந்த உடுப்பை அணிந்து கொண்டான். தனத்திடமிருந்து வாங்கிய சீப்பால் தலை முடியை ஒழுங்காகச் சீவி விட்டான்.

“சரி மச்சான் நான் வாறன். முதலில் அலிஸ்நோனாட் டைப்போய், அது ஒரு தெய்வமடா, அது எனக்கு இருக்க இடந்தத்து சாப்பாடும் போட்டு நான் குடுக்கிற காசை முகங் கோணாது வாங்குமடா. அதுக்கு காசு கொடுத்துப் போட்டுத்தான் ஏஜென்சிக் காரனிட்டைப் போகப் போறன்.”

“சரியடா, நேரத்துக்குப் போனால் தான் அவனைப் பிடிக்கலாம்”

“வாறன் மச்சான்” பாஸ்கரன் அந்தக் குச்சொழுங்கைப் படிகளிலே பாய்ந்தேறி பெனடிக்ற் மாவத்தைக்கு வந்து லூசியாத் தேவாலயப்படிகளால் ஏறி வந்து, கோயிலுக்கு முன்னால் நின்று மாதாவை வணங்கிவிட்டு, கொட்டாஞ்சேனைச் சந்திக்கு விரைந்து நடந்தான். 102 டபிள்டெக்கர் பஸ் புறப்பட ஆயத்தமாய் நிற்க, அதில் ஏறி கொச்சிக்கடைக்கு “டிக்கட்” எடுத்து அந்த டிக்கட்டை வாயில் கடித்து வைத்துக் கொண்டு “புட்போட்டி”லேயே நின்றான்.

புனித அந்தோனியார் ஆலயத்துக்கு முன்னால் உள்ள பஸ்தரிப்பிலே பஸ் நிற்க முன்னரே குதித்து இறங்கி ஜெம்பட்டா வீதிக்கு விரைவாக நடந்து வந்து அந்த வீதியின் முதல் முடுக்கில் தான் தங்கியிருக்கிற அலிஸ் நோனாவின் வீட்டை அடைந்தான். – “மவனே, நேத்தைக்கி எங்கை போயிருந்தே? பொலீஸ் புடிச்சுக் கொண்டு போனதோ எண்டு பயந்துபோனன். இந்த மரக்கறிகளை கூடையில் போட்டு விட்டு யாபாரத்துக்குப் போக மனமில்லாம நீ வருவாயெண்டு நிக்கிறன்”.

அலிஸ்நோனா என்னும் அறுபது வயதான அந்த உப்பிப் பெருத்த உருவம் கிமோனா அணிந்து கொண்டிருந்தது. அது சேலை உடுத்ததை அவன் பார்த்ததேயில்லை.

“நோனா! நேத்து “பிளாற்” போடுற வேலை அது முடியக்காட்டிலும் விட்டுட்டு வர ஏலா. இண்டைக்கிக் காலையிலைதான் முடிஞ்சுது.”

“இஞ்ச வா மவனே! இந்தப் புட்டுவத்தில் இரு “ரீ” ஊத்தித்தாறன் குடி”

“சரி நோனா!” என்ற பாஸ்கரன் அந்த அம்மாளின் தேனீரைக் குடிக்க விரும்பி கதிரையில் அமர்ந்து சேர்ட் பொக்கட்டில் வைத்திருந்த பணத்தைக் கையில் எடுத்தான்.

“இந்தா மவனே உனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு இருந்துபடி. நான் “ரீ” போட்டு வாறன்.

பாஸ்கரன் அக்கடிதத்தை வாங்கி முகவரி எழுதிய எழுத்துக்களைப் பார்த்ததும் தன் தங்கையின் கையெழுத்தாயிருந்ததால் அவசரமாக உறையைக் கிழித்துக் கடிதத்தை வாசிக்கத் தொடங்கினான்.

அன்பு மிக்க அம்பி,

நீ சுகமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

இராசா நீ அனுப்பிய இரண்டாயிரம் ரூபாய் கிடைச்சது. அந்தக்காசு எங்களுக்கு நெருப்புத்தின்ற மாதிரி. நீ கூலி வேலை செய்து இந்தக் காசை அனுப்புகிறாய் என்று அறிந்து நானும் உன் சகோதரிகள் இரண்டு பேரும் காசு கிடைத்த அன்று முழுவதும் சாப்பிடாமல் அழுது கொண்டிருந்தோம்.

உனக்குப் பல்கலைக்கழக அனுமதி கிடைக்குமென்று நிச்சயமாகத் தெரிந்தும் நீ சகோதரிகளுக்காக வெளிநாடு சென்று உழைத்துப் பணம் அனுப்ப ஒற்றைக் காலில் நின்றாய். நாங்களும் எங்களிடம் கிடந்ததெல்லாவற்றையும் விற்று சுட்டு மூன்று இலட்சம் உன்னிடம் தந்து கொழும்புக்கு அனுப்பி வைத்தோம். நீ வெளிநாடுகளுக்கும், ஏஜென்சி நம்பிக்கையானவன் என்று சொன்னாய். இப்போ ஒன்றரை வருடமாகுது. நீ போகிற அறிகுறி ஒன்றும் இல்லை. நாங்கள் இங்கு அரைப் பட்டினியும் உன்னை நினைத்துப் பெருமூச்சுமாயிருக்கிறோம். உனது அப்பா குண்டு விழுந்து சாகாமல் இருந்தால் ஏதோ ஒரு வழியில் உழைத்து எங்களுக்குக் கஞ்சி ஊத்தியிருப்பார். இப்ப எல்லாம் நிச்சயமில்லாமல் போய் விட்டது. எங்களது வாழ்க்கை எப்படிப்போகுமோ தெரியாது. வாழ்க்கை நிச்சயமில்லாதாகப் போய்விட்டது மகனே. நீ எப்படியாவது அந்த நாசமறுவான் ஏஜென்சிக்காரனைப் புடித்து வெளிநாடு செல்லப் பார். இராசா நீ வெளிநாடு சென்றால் தான் எங்களுக்கு விடிவு. நாங்கள் நீ வெளிநாடு செல்ல வேண்டுமென்று எல்லாக் கடவுள்களையும் மன்றாடிக் கொண்டிருக்கிறோம்.

மகனே உடம்பைக் கவனி, நீ கூலி வேலை செய்து எங்களுக்குக் காசு அனுப்ப வேண்டாம்.

உனது அம்மா

அம்மாவுக்காக மூத்த தங்கை பாமினியே இக்கடிதத்தை எழுதியிருந்தாள்.

பாஸ்கரன் அந்தக் கடிதத்தை சேர்ட் பொக்கற்றுக்குள் மெதுவாகத் திணித்து விட்டு, விரக்தியுணர்வு ஆட்கொண்ட சிந்தனையுடன் தலை குனிந்து இருந்தான்.

“மவனே இந்தா “ரீ” குடி என்ன மவனே முகம் ஒரு மாதிரியாப் போயிட்டுது?”

“ஒண்டுமில்லை நோனா; அம்மாண்ட கடிதம் தெரியுந்தானே, கவலைப்பட்டு எழுதியிருக்கிறா” அலிஸ் நோனா கொடுத்த தேனீரைக் குடித்து விட்டு நோனா என்றான்.

“என்ன மவனே”

“இந்தாங்கோ காசு தொளாயிரம் ரூபா இருக்கு வைச்சிருங்கோ” என்று எழுந்து நின்று இரு கைகளாலும் நீட்டினான்.

“மவன் உனக்குச் செலவுக்கு இருக்கோ?”

“இருக்கு நோனா முன்னூறு ரூபாய் இருக்கு இப்ப நான் ஏஜென்சிக்கார னிட்டை போக வேணும்”

“மவனே நீயும் எத்தனைமுறை அந்த மோசக்காரனிட்டைப் போயிட்டு வந்திட்டாய்” –

“அவனை விட்டா வேறு கதியில்லை நோனா, நான் போயிட்டு வாறன்!”

“மவன் பகல் சாப்பாடு வைக்கவோ?” –

“ஓம் நோனா; இல்லாட்டிக்கும் பரவாயில்லை”

“மவனே அந்த அறுப்பான்ற தொண்டைக்குழியைப் பிடித்தாவது வெளிநாடு செல்லப்பார் மவனே உங்க தாயும் தங்கச்சி புள்ளைகளும் பாவந்தானே”

“ஓம் நோனா”

“ஓடு மவ்னே! நீ என்னடை புள்ளை மாதிரி. முதலில அவனிட்டைப் போயிட்டு வந்து செய்தியைச் சொல்லு நான் காய்கறி வித்துப்போட்டு வந்து சமைச்சிட்டு உன்னைப் பாத்துக் கொண்டிருப்பன். சரிதானே மவனே?” –

“ஓம் நோனா, நான் போயிட்டு வாறன்” –

“சரி மவனே, அந்தோனியார் உன்னைக் கைவிட மாட்டார்”

பாஸ்கரனின் கண்கள் கலங்கிப் போக, அவன் எழுந்து வீதிக்கு வந்து அந்தோனியார் கோயிலுக்கு முன்னால் ஓடிச்சென்று கல்கிசை பஸ்ஸில் ஏறி உட்காந்தான். அந்தோனியாரே என்னை வெளிநாடு அனுப்ப உதவி செய்யும் மனதுக்குள் வணங்கினான்.

அந்த பஸ் வை. எம். சி. ஏக்கு முன்னால் நின்றதும் and “ஒக்கம பகின்ட” என்று இரண்டு பொலீஸ்காரர் வந்து கத்தினர்.

“போச்சு, எல்லாம் பிழைக்கப் போகுது. என்னைப்பிடிச்சுக் கொண்டு போய் விடுவாங்களோ?” என்று பயந்து கொண்டு பாஸ்கரன் பஸ்சை விட்டு இறங்கினான்.

சிங்களவர்களையும் கிழடு கட்டைகளையும் போகவிட்டு அவனையும் அவனைப் போன்ற தமிழ் இளைஞர் இரண்டு பேரையும் தமக்குப்பின்னால் போய் நிற்கும்படி கூறிவிட்டனர். அந்த பஸ் புறப்பட்டுச் சென்றதும் ஒரு பொலீஸ்காரன் அவன் முகத்தைச் சந்தேகக் கண்களோடு பார்த்தான்.

“ஐடின்ட் காட்டை எடு”

பாஸ்கரன் பயந்து நடுங்கி தனது அடையாள அட்டையை சேர்ட் பொக்கற்றிலிருந்து எடுத்து மரியாதையாக இரு கைகளாலும் அவனிடம் கொடுத்தான்.

“பாஸ்கரன்” என்று கூறிய பொலீஸ்காரன் அவன் முகத்தைப் பார்த்தான்.

“ஓவ்சேர்”

“உண்டை ஊா என்ன?”

“வல்வெட்டித்துறை”

“ஓ! பாஸ்கரன் பிரபாகரன், நீ பிரபாகரனின் தம்பியா?”

“என்ன சேர்; அவரை எனக்குத் தெரியாது. நான் “துப்பத் சேர்”

*பேசாதை மூஞ்சியை உடைச்சுப் போடுவன்”! பாஸ்கரன் “கடவுளே” என்று மனதுள் வணங்கிக் கொண்டு மௌனித்து நின்றான்.

“நீ கொழும்புக்கு ஏன் வந்தது? குண்டு வைக்கவா?”

“நா சேர் போறின் போக “பிறான்ஸ் யண்ட சேர்”

“பயங்கரவாதிகள் ஒக்கோம அப்படித்தான் சொல்றது?”

“இல்லைசேர் நான் “அத்ததமாய்” சொல்றன்.” –

“மிச்சம் பேசவேண்டாம் விளங்குதா?”

“ஒவ் சேர்”

“நீ குண்டு வைக்கத்தான் கொழும்புக்கு வந்திருக்கிறாய்!”

“ஐயோ! கடவுளே இல்லை சேர் நான் என்ரை தங்கச்சிகளைக் கரை சேர்க்க வெளிநாடு போவதற்கு ஏஜென்சிக்கு மூண்டு இலட்சம் கட்டிப்போட்டு அலையிறன் சேர்.”

“தமிழன் எல்லாம் இப்படித்தான் சொல்றான்” –

“நான் சொல்றது நூற்றுக்கு நூறு “கன்றட் பேசன்ற்” உண்மை “அத்த சேர்”

“டேய் அதிகம் பேசாதை, உன்னை இப்ப கொண்டு போய் அடைச்சால் நீ வெளியே வர முடியாது தெரியுமா?”

“தன்னவா” சேர்

“என்ன “தன்னவா” உனக்கு கொஞ்சம் சிங்களம் தெரியுமா?”

“நான் கொழும்புக்கு வந்து ஒன்றரை வருஷம் தான் சேர்”

“சரி கட்டவாகன இன்ட, தமிழில் பேசு எனக்கு விளங்கும். நான் மட்டக்களப்பிலே கனகலாம் இருந்தவன்”

“ஓம் சேர்” பாஸ்கரன் கூனிக்குறுகி நின்று பேதலித்தான்.

ஒரு மணித்தியாலத்துக்கு மேல் அந்த இரு பொலீஸ்காரர்களும் அவனையும் இரு இளைஞர்களையும் அந்த இடத்தில் பிடித்து வைத்துக் கொண்டிருந்தனர். அவன் நெஞ்சோடு கைகட்டியவாறு நிற்கையில் இரு பொலீஸ்காரர்களும் மற்ற இரு இளைஞர்களையும் சற்றுத்தூரக் கூட்டிச்சென்று பேசினர். அந்த இளைஞர்கள் “சேர்ட்” பொக்கற்றுக்குள் கைவிடுவதையும் கண்டான். பின்னர் அவர்களைப் போகும்படி விட்டுவிட்டனர்.

அந்த இரு பொலீஸ்காரர்களும் அவன் அருகில் வந்தனர்.

“அடே உன்னை றிமாண்டில் போட்டால் நீ வர ஏலாது தெரியுமா? –

“தெரியும்”

“நீ பாவம் உன்னைப் போகவிடலாம். சேர்ட் பொக்கற்றிலை உள்ள சல்லி எல்லாம் குடு”

“சேர் நான் ஏஜென்சிக்காரனிட்டை போக வந்தனான்.”

“அது தான் விடுறம் காசை எடு”

பாஸ்கரன் ஏதோ விடுதலை கிடைத்து விட்டதைப் போல உணர்ந்து சேர்ட் பொக்கற்றில் வைத்திருந்த முன்னூறு ரூபாவையும் எடுத்துக் கொடுத்தான்.

“சேர் இவ்வளவு தான் இருக்கு”

“சரி ஓடி வீட்டுக்குப் போ!”

“தாங்கியூ சேர்”

“பாஸ்கரன் “சேர்ட் பொக்கற்றைத் துளாவினான். ஐந்து ரூபாய்க் குத்தி ஒன்று கிடக்கிறது”

வெள்ளவத்தைக்குப் போய் வர ஐந்து ரூபா காணாது. கான் மணிக்கூட்டு பஸ் தரிப்பை நோக்கி நடந்தான். அலிஸ்நோனா மனதில் தோன்றினாள். தனமும் நினைவில் வந்தான்.

தனத்தையும் கூட்டிக்கொண்டு பின்னேரம் ஏஜென்சிக்காரனிடம் போவம். மனம் அமைதிப்படுவதாயில்லை.

ஆனால் அவனுக்குத் தெரியாது. அவனது ஏஜென்சிக்காரன் செல்லத்துரை நூற்றுக்கு மேற்பட்ட முறைப்பாடுகளினால் வெள்ளவத்தை பொலீஸ் அவனைப் பிடித்து றிமாண்டில் வைத்திருப்பது.

– வீரகேசரி 1991 – விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி)- விவேகா பிரசுராலயம் – முதற் பதிப்பு கார்த்திகை 1995

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *