பட்டமரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 20, 2023
பார்வையிட்டோர்: 1,512 
 

அந்த ஊரிலேயே அதன் வயதைச் சொல்லும் அளவிற்க்கு வயதானவர்கள் யாரும் இல்லை.ஏறத்தாழ இருநூறாகக் கூட இருக்கலாம் அதன் வயது.ஆனாலும் அதன் தோற்றத்தில் முதிர்ச்சி என்பதே இல்லை.கொள்ளை அழகு,கோடி அழகு.அதன் அருகில் சென்றாலே,உச்சி வெயில் நேரத்தில் கூட உச்சந் தலையை வருடிக் கொடுக்கும் சுகம்.

சிங்கம்புணரியில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் உள்ளது தச்சம்பட்டி.அமெரிக்காவின் அடையாளம் வெள்ளை மாளிகை போல்,மலேசியாவின் அடையாளம் இரட்டைக் கோபுரம் போல்,துபாயின் அடையாளம் புர்ஜ் கலீஃபா போல் தச்சம்பட்டியின் அடையாளம் பச்சைபசேலென படர்ந்து விரிந்த அந்த ஆலமரம்.

“P.L.A-வுல ஏறி வந்தீகன்னா ஆலமரத்தப் பார்த்து எறங்குங்க,அதுதேன் நம்ம ஊரு” என்று சொன்னால் போதும்,பச்சப் புள்ளை கூட பக்குவமா வந்து இறங்கிடும்.பேருந்து நிறுத்தத்தின் அடையாளம் மட்டுமல்ல அதுதான் நிழற்குடையும் கூட.

தச்சன் கண்மாய் ஆரம்பமாகும் இடத்தில் கண்மாய் உள்வாயில் கரை ஓரத்தில் உள்ளது அந்த ஆலமரம்.அதன் நிழலில் இளைப்பாரிக் கொள்வோமா என ஏங்கித் தவிக்கும் தூரத்தில் பாறை ஒன்று உள்ளது.அது அந்தப் பகுதி சம்சாரிகளின் விவசாயக் களம்.வயலில் அறுவடை செய்த பயிர்களை வெகுதூரம் தூக்கிச்  சுமந்து வந்து பாறையில் போட்டு விட்டு,ஓடிப் போய் ஆலமரத்தின் அடியில் ஒரு இரண்டு நிமிடங்கள் இளைப்பாறினால் போதும்,அடுத்து சுமப்பதற்க்கான தெம்பு இருநூறு மடங்கு உடம்பிலே அதிகமாகும்.மேய்ச்சலுக்குப் போன ஆடு மாடுகள் கூட சுட்டெரிக்கும் சூரியனுக்குப் பயந்து ஆலமரத்தின் நிழலில் கொஞ்சம் படுத்திருந்து அசைபோட்டுவிட்டுச் செல்லும்.சிட்டுக் குருவிகளின் சின்னஞ்சிறு வீடுகளும்,

பச்சைக் கிளிகளின் பங்களாக்களும் அந்த ஆலமரத்திலே தான்.

பள்ளிச் சிறுவர்கள் பள்ளி விட்டு வந்ததுமே,புத்தகப் பையை வீட்டில் வைத்துவிட்டு துள்ளிக் குதித்து ஓடுவது அங்கேதான்.சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கிடை ஆடுகள் போல் அங்கேயே கிடப்பார்கள்.கோழிக் குண்டு,கபடியிலிருந்து கிரிக்கெட் வரை அவர்கள் விளையாடாத விளையாட்டே இல்லை இங்கு.ஆலமரத்தின் விழுதுகளைத் தொற்றிக் கொண்டு ஊஞ்சலாடுவதில்தான் அந்தச் சிறார்களுக்கு எத்தனை சந்தோஷம்.விழுதுகளைப் பற்றிக் கொண்டு யார் ரொம்ப தூரம் சென்று வருவது என்பதிலும்,யார் ரொம்ப நேரம் தொற்றிக் கொண்டு ஊஞ்சலாடுவது என்பதிலும் எப்போதும் அவர்களுக்குள் போட்டியிருக்கும்.நகரத்துச் சிறுவர்கள் மாலை நேரங்களில் பூங்காக்களுக்குச்  சென்று விளையாடுவது போல் கிராமத்துப் பிள்ளைகளுக்கு இந்த ஆலமரமே பூங்கா.

கல்லூரி மாணவர்கள் மட்டும் சும்மாவா?மரத்தில் ஆங்காங்கே தனது  பெயரையும் தன் காதலியின் பெயரையும் கல்வெட்டு ரேஞ்சுக்கு எழுதி வைப்பார்கள்.

பல தலைமுறைகளாக பற்பல பஞ்சாயத்துகளையும் பலவிதமான மனிதர்களையும் பார்த்து வளர்ந்த அந்த ஆலமரம் தான் கிராமத்து மக்களின் நீதிமன்றம்.

இப்படியாக அந்த ஊர் மக்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒன்றிப் போன அந்த ஆலமரத்தைச் சுற்றி ஒருநாள் எல்லோரும் ஒப்பாரி வைக்காத குறையாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தனர்.

“ஏஞ்ச… மரங்களப் பூராவும் நெடுகிலும் இப்பிடி வெட்டிப் போட்டுக்கிட்டு வர்றாய்ங்களே…. இவய்ங்களால ஒரு மரத்தையாச்சும் உண்டாக்கிற முடியுமா” என்ற கல்யாணியிடம்,

“அட ஏஞ்ச நீ வேற, நூறு நாள் வேலையிலயுந்தேன் நம்மல மரக்கன்னு வைக்கச் சொல்றாய்ங்கே. வச்சுப்புட்டு போட்டோ எடுக்குறதோட சரி, அம்புட்டுத்தேன். அதுக்கப்பறமா அத கண்டுக்கிறதே இல்ல. அதோட அது பட்டுப் போயிருது. இவய்ங்கெதானாக்கும் மரம் வளக்கப் போறாய்கே?” என்று அங்கலாய்த்துக் கொண்டாள் சிவகாமி.

“ஏம்ப்பா…. தப்பு பண்ணிட்டமேப்பா.அந்தக் காலத்துலயே ஒரு சாமி சிலைய வச்சு வழிபட்டுருந்தா இன்னைக்கி இப்படி நடந்துருக்காதப்பா.சாமியக் காரணம் காட்டி காப்பாத்திருக்கலாமே ச்சேசே….”என்று வேதனைப் பட்டுக்கொண்டிருந்தார் முதியவர் முத்துச்சாமி.”இந்த ஆபிசரும் மனுசங்கெ தானே?ஈவு எறக்கமே இருக்காதா?சண்டாளப் பாவிக,இப்பிடிப் பண்றாய்ங்களே…”தன் பங்கிற்கு திட்டிக்  கொண்டிருந்தாள் தண்டட்டிக் கிழவி.

JCB இயந்திரம் ஒன்று வந்து நின்றது.அங்கிருந்த அரசு அதிகாரிகள் கூட்டத்தினரை அப்புறப்படுத்தினர். “ஏன் சார், இந்த இடத்துல மட்டும் ரோட்டைக் கொஞ்சம் வளச்சுப் போடுங்களேன் சார். வளைவா இருந்துட்டுப் போகுது” என்ற வைத்தீஸ்வரனிடம், “உங்க இஷ்டத்துக்கெல்லாம் ரோடு போட முடியாது தம்பி. அரசாங்கத்துக்குத் தெரியாதா எது நல்லது எது கெட்டதுன்னு. அந்தப் பக்கமா ஓரமா போய் நில்லுங்க தம்பி, இடைஞ்சல் பண்ணாதீங்க” என்று கடிந்து கொண்டார் அதிகாரி.

எது செய்தும் காப்பாற்ற முடியாத கையறு நிலையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் கிராம மக்கள்.

சாலை விரிவாக்கத்திற்காக ஆலமரத்தின் கிளையை சடாரென்று ஒடித்தது JCB இயந்திரம், படாரென்று வெடித்தது அங்கிருந்த அத்தனை இதயங்களும்.

மரம் வளர்ப்போம்! மனித நேயம் காப்போம்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *