பச்சைமட்டையர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 1,947 
 

பச்சைமட்டையர் விடுதலை இயக்கங்கள் வியாபிக்கு முன்பிருந்தே நீர்வேலிச்சந்தியில் ஒரு பிரபலமான மிதியுந்துவல்லுனர். அவர்தன் திருத்தகத்தில் 20 வரையிலான சிறந்த நிலமையிலுள்ள மிதியுந்துகளைவைத்து வாடகைக்கு விடுவதால் அயலூர்களிலும் அவர் திருத்தகத்தின் பெயர் பிரசித்தம். பூநகரி, வட்டக்கச்சி, முரசுமோட்டையில் அறுவடை தொடங்கிவிட்டால் வடமராட்சி-கிழக்கிலுள்ள ஒப்பந்த அறுவடைக்காரர்கள் பலருக்கும் பச்சைமட்டையரின் மிதியுந்துகளே கதியும் வாழ்வும். 55 வயதிலும் அவரின் சிவந்த வலிச்ச நார்த்தேகத்தின் ஆறடி உயரத்திலிருந்த தலையில் நிறைந்த முடியுடன் அழகனாகவே இருந்தார். எந்தச்சீமைக்குப் போவதாயிருந்தாலும் ஒரு நாலுமுழவேட்டியும், உறுத்தாத மென்நிறத்தில் நீளக்கை சேர்ட்டும் அணிந்து துவரம்பருப்பளவில் ஒரு சந்தனப்பொட்டுமிட்டு ‘மெட்டாக’த்தான் புறப்படுவார். அவரது வயதை ஒத்த மூத்தவயதினர் அவரை ‘ரத்தினம்’ என்பார்கள். அவரது இயற்பெயர் இராசரத்தினம் என்பதையும், அவருக்குப் ‘பச்சைமட்டையர்’ என்கிற காரண இடுகுறிப்பெயர் வந்த காதையையும் ஊரில் வெகுசில விருத்தர்களே அறிவர்.

வாழ்க்கை வசதிகளைப் பொருத்தவரையில் இரத்தினத்துக்கு இளமையிலும் விளிம்புநிலைக்குடும்பந்தான், அவர் பள்ளிக்குப்போகிற காலத்தில் ஒருநாள் பள்ளிக்கு மட்டம்போட்டுவிட்டாராம். அடுத்தநாள் அவரது கண்டிப்பான ஆசிரியர் முருகேசு பிரம்பை எடுத்து வைத்துக்கொண்டு “ஏன்டா ரத்தினம் நேத்து நீ பள்ளிக்கூடம் வரேல்லை” என்று உறுமவும் சொல்வதறியாது திகைத்த ரத்தினம் “ஐயா…பயிச்சமட்டுக்கு நான் வீட்டில நின்டிட்டன்…….” எனவும் அவரில் இரங்கிப்பரிதாபப்பட்டு அடிக்காமல் விட்டுவிட்டாராம். அன்றிலிருந்தே ‘பயிச்சமட்டு’ மருவிப் ‘பச்சைமட்டை’ ஆனதென்பர் அறிவோர். சிறுவயதிலிருந்தே முழுநீர்வேலியும் அவரது வாடிக்கையாளர்களும் ‘பச்சை’ என்றோ ‘பச்சைமட்டை’ என்றோ அவரை அழைத்தாலும் அவருக்கு அதையிட்டு எரிச்சலோ, முறைப்பாடோ கிடையாது. எப்படி அழைத்தாலும் மென்நகைப்பார் இயல்பில் மிகையான அங்கத உணர்வுள்ள மனிதர் அவர்.

பச்சைமட்டையர் கணவி ஒரு பத்துவருஷங்களாக வெளிவெட்டையில் நடமாட்டத்தைக் குறைத்துக்கொண்டுவிட்டார். அரிதாக வெளியில் எங்கேயாவது போவதானால்க்கூட அது யாராவது வைத்தியர்வீட்டுக்கோ இல்லை மருத்துவமனைக்காகத்தான் இருக்கும். அவர்களின் ஆஸ்தான ஊர்வைத்தியர் செல்லப்பாவும் இணுவிலிருந்துவரும் இன்னொரு குருவிக்குடுமி வைத்தியரும் மாறி மாறி வந்துபோய் அவர்களது முற்றமே பள்ளமாகத் தொடங்கியிருந்தது. அவ்விரு வைத்தியர்களும் தமது வாகடங்களில் சொல்லப்பட்டிருக்கும் நோய்களில் 90 வீதமானவை அவருக்கு இருக்குதென்று சொன்னார்கள். அவர்கள் குடும்பத்துக்கு மனுஷி மீளாத நோயாளியாகிவிட்டதொரு துர்நேர்கை. பச்சைமட்டை இணையது காதல்த்திருமணமாம். நம்பலாம். பச்சைமட்டையரைவிடவும் நிறமான இணைவி காலத்தில் பேரழகியாக இருந்திருக்கக்கூடிய பல தடயங்களும் எச்சங்களும் இன்னும் அவரிடம் உள்ளன. ஆனால் இப்போது மனுஷி மழைகாலங்களில் ஆஸ்துமாவினால் மூச்செடுக்கவே திணறி முக்குளித்துக்கொண்டிருந்தது.

பச்சைமட்டையரின் மூத்தவன் மதியாபரணத்துக்கு ஆறாவதுக்கும்மேல வாய்ப்பாடும் வரவில்லை, எட்டாவதுக்கு மேல படிப்பும் ஏறவில்லை. இப்போது தகப்பனோடு திருத்தகத்தில நின்று பெயருக்கு உதவிசெய்யிறான், என்ன ஆளோவொரு சோக்காளி, 20 ரூபா உழைச்சால் 25 ரூபாயை அவனே அமுக்கிக்கொண்டு போயிடுவான். கோவில் திருவிழாக்கள் கொடியேற்றம், தேர், தீர்த்தம், பூங்காவனம், சப்பறம், மஞ்சம், வேட்டைத்திருவிழா, கப்பல்த்திருவிழா என்று ஒன்றையும் தவறவிடான். இன்னும் எந்தவூரில் கார்ணிவெல், சர்க்கஸ், நாடகங்கள், நடனங்கள், குதிப்புகள் இருந்தாலும் முதல் ஆளாகச் சிகரெட்டும் வாயுமாய் நிற்பான், ஆதலால் அவனது நிகழ்ச்சி நிரல்கள் எப்போதும் இறுக்கமாக இருக்கும். இவை தவிர யாழ்ப்பாணத்துக்கு வரும் படங்கள் அனைத்தையும் முதல் நாளே கூட்டாளிகளுடன் சேர்ந்து பார்த்திடவேண்டும். இனி யாழ்ப்பாணம் போய்ப் படம் பார்த்தபின்னால் அல்லக்கை பரிவாரங்களுடன் ஹொட்டல் பாரடைஸினுள் நுழைந்தானாயின் அங்கே பிறகு வருபவர்களுக்கு எதுவும் கிடைக்காதபடி பண்ணிடுவான். எல்லாம் வயதுக்கோளாறுதான், திருந்திடுவான் என்று பச்சைமட்டையரும் பொறுமை காத்திருந்தார். ஆனால் இப்போது அவன் ‘என்றைக்குக் மேகலா ரீச்சர்வீட்டுக்கு கூரை மின் விசிறி திருத்தப் போனானோ, அன்றிலிருந்து அங்கேயே அடுகிடை படுகிடையாகக் கிடக்கிறான்’ என்ற உண்மையை யாரோ அவர் காதிற்கடித்துவிட அவருக்கு யாரோ நடுமண்டையில் அவ்காரால் (Auger) துளைத்ததைப் போலிருந்தது.

மேகலா ரீச்சரும் கட்டுடம்புக்காரிதான், ஆனாலும் அப்படியொன்றும் வாலையல்ல, அவருக்கும் பேதையொன்று, பெதும்பையொன்று, மங்கையாகிவருவதொன்றென மூன்று குழவிககள். அவருடைய புருஷன் சந்திரகாந்தனுக்கும் தண்ணீரூற்றிலோ தண்ணிமுறிப்பிலோ உபாத்தியாயந்தான் உத்தியோகம், அதுவும் சந்திரகாந்தன் என்று பெயர் கொண்டதாலோ, அல்லது மேகலாமீதான காந்தி வற்றிவிட்டதாலோ மாசமொருமுறைதான் வீட்டுக்கு வரும், வராமலும் விடும். இதனால் மேகலா ரீச்சர்வீடு இளந்தாரிகளின் போக்கும் புழக்கமுமாய் சதா அம்முலோதியாயிருக்கும்.

திங்கள் நல்லூருக்கும், வெள்ளி செல்வச்சந்நிதிக்குமாக மாறிமாறி வேட்டி உத்தரீயம், பட்டை கொட்டைபூண்டுபோய்ச் சேவித்துவரும் மதியனா இப்படி…… அவருக்கு யாரையும் எதையும் நம்பமுடியவில்லை.

அவருடைய இரண்டாவது மகள் ராதிகா, இரண்டாம் முறையாகப் பத்தாவதை வாசிக்கிறாள். ஆங்கிலத்துக்கு பஞ்சாட்சரம் மாஸ்டரிட்டையும், கணிதத்துக்கு அச்சுவேலிக்கும் டியூசனுக்குப் போகிறாள். டியூசன் போகவர மாணவர்கள் என்கிற பேரில ஒரு சின்ன விடலைக்கூட்டம் அவளுக்கு வழிக்காவல் செய்துவருவதையும் இவர் அறிவார். ராதிகாவுக்கும் பெடியளைத் தன்மீது மொய்க்கவைப்பதில் ஒரு சின்னச்சுகம். இன்னும் அறிஞ்சவனோ தெரிஞ்சவனோ எவனென்றாலும் பார்த்து ‘ஈ’…‘ஈ’…யென்று இளித்துக்கொண்டிருக்கவும் பிரீதி. மற்றும்படி அவளையிட்டு இதுவரை புகாருகளோ முறைப்பாடுகள் ஒன்றுமில்லை. என்ன தெறிக்கிற இருநிலை அலரகவைல்லவா, இனிமேல் ஏதும் வந்தாலுமென்றுதான் அவருக்குள் இலேசான கிலேசம்.

அவரது கடைசி மகன் சிவலோகன் எட்டாவது படிக்கிறான். 12 + வயது. பள்ளிக்கூடத்தால் வந்ததும் சாப்பிட்டுவிட்டுப் பந்தை எடுத்துக்கொண்டு வாய்க்கால்த்தரவைப்பக்கமாய் ஓடாமல் நேராகக்கடைக்குவந்து ஐயாவுக்கு காற்றடிக்க. டியூப் ஒட்டுப்போடவென்று தன்னால் முடிந்ததைப்பண்ணி அவருக்கு உதவியாயிருக்கிறான். இப்போதைக்கு அவனாலும் பிரகண்டங்கள் எதுவுமில்லை.

ஆனால் மதியாபரணம் என்கிற மதியனைமட்டும் அவரும் வாடிக்கையாளர்களும் அவன் திருத்தகத்துக்கு வந்தால் மட்டும் கண்டுகொள்ளலாம். தோளுக்கு வளர்ந்த பையனை அவருக்கும் என்ன ஏதென்று நிமிர்ந்துநின்று விசாரிக்கக் கண்டிக்கத் திராணியில்லாமலிருந்தது. அவனோடு வீணாய் கதைவைக்கப்போய், அவனும் திருப்பி எக்குத்தப்பாய் ஏதாவது கதைச்சுவிட்டால் பிறகு முகம்பார்த்துப் புழங்கிறது எப்படீங்கிற ஆற்றாமைதான்.

பச்சைமட்டையர் வீட்டின் முன்பக்கமாக போர்ட்டிக்கோவோட இன்னுமொரு தொடுப்பறை அரைச்சுவர் வைத்துக்கட்டினால் காற்றோட்டமாய்ப் படுக்கலாமென்று நினைத்தார், அதுக்கு அவருக்கு ஒரு பாரம் மணல் பறிக்கவேண்டியிருந்தது. ஒருகாலையில் அவர் போத்தலில் பாலைவாங்கிக் கக்கத்தில் இடுக்கிவைத்து மிதியுந்தில் வந்துகொண்டிருக்கும்போது அவருக்குப் பரிச்சயமான உழவுயந்திரக்காரர் ஒருவர் எதிரில் வரவும் அவரை நிறுத்தித் தனக்கு ஒரு ‘லோடு’ மணல் பறித்துத்தரும்படி கேட்டார், அவரோ “ஏன் காணும் உன்னுடைய சகலனிட்டைத்தானே லொறி நிக்கு…… பிறகு என்னத்துக்கு என்னட்டைவாறீர்” எனக்கேட்கவும். பச்சைமட்டையர் விளக்கம் கொடுத்தார், “ அவன்ர லொறி என்ர ஒழுங்கையுக்க வந்தால்க்காணும், உள்ள கதியாலுகள் எல்லாத்தையும் முறிச்சுபோடும், அது திரும்பிப்போகவும் எங்கட வளவுக்கை திருப்பஇடமில்லை. நீயெண்டால் அப்படியே நேரவந்து மணலை (இடக்கையை உயர்த்தி) இந்தப்பக்கத்தாலும் பறிச்சு…அந்தப்பக்கத்தாலும் பறிச்சுபோட்டுபோகலாம்” என்றுகாட்ட வலதுகையை உயர்த்தவும் கக்கத்திலிருந்த பால்ப்போத்தல் சடாலென தார்றோட்டில் விழுந்து ‘கிளிங்’கிச் சிதறவும் பால் வீதியில் வழிந்தோடியது. பால்பாழ்பட்டாலும் பரவாயில்லை. சமூக அக்கறைமிக்க பச்சைமட்டையர் குந்தியிருந்து போத்தலின் பிசுங்கான்களை நிதானமாகப்பொறுக்கி வீதியின் ஓரமாகப்போட்ட பின்னரே வீடு சென்றார்.

கோண்டாவிலில்ச் சந்தியிலிருந்து உரும்பிராய்ப்பக்கமாக வரும் வீதியில் ஒவ்வொரு ஞாறும் காலியாயிருந்த பிரதேசசபைக்குரிய வளவொன்றுக்குள் ‘மிதியுந்துஅங்காடி’யொன்று கூடும். யாழ்ப்பாணத்தின் மிதியுந்துகளுக்கான முதல் ‘தரையங்காடி’ அதுதான். வடக்கின் பல தொலையூர்களிலிருந்தும் நிறையப்பேர் அதுக்கு வருவார்கள். வரும் பயனர்கள் அங்காடியின் குத்தகைக்காரருக்கு ஒரு ரூபாய் தரகுக்கட்டணம் நுழைவாசலில் செலுத்திவிட்டு தங்கள் மிதியுந்தை உள்ளே எடுத்துப்போய் வைத்துக்கொண்டு விற்பதற்காக நிற்பார்கள். பழைய (விலைமலிவான) மிதியுந்துகளைக் கொண்டுவருவோர் தரகுப்பணத்தைச் சேமிக்கவேண்டி தெருவோரமாக அவற்றைவைத்து மைந்திக்கொண்டுநின்று அங்காடிக்குப்போக விழைவோரை வழிமறித்து இடையில் வியாபாரம் பார்த்துவிடுவதுமுண்டு. அங்காடியில் ஒருவர் ஒரு மிதியுந்தை விலைதலை அமைந்துவந்து வாங்கினாராயின் வாங்கியவரும் தரகுக்கட்டணம் ஒரு ரூபாய் செலுத்தவேண்டும். வியாபாரம் அவ்வளவுதான். மதியம் சாய அங்காடியும் மெல்லக் கலைந்துவிடும். சிலர் இவ்வாரம் வாங்கிய மிதியுந்தை சில சில்லறைத் திருத்தங்களைப் பண்ணி அழகாக்கி அடுத்தவாரம் திரும்பக்கொண்டுவந்து இன்னும் கூடுதலான விலைக்கு விற்றும் பயனடைவார்கள்.

பச்சைமட்டையரும் தவறாது ஒவ்வொரு ஞாயிறும் கோண்டாவில் அங்காடியில் பிரசன்னமாகிவிடுவார். அவர் ஊரறிந்த மிதியுந்து வல்லுனராதலால் மிதியுந்தை வாங்குபவர்களுக்கு அதை ஓட்டிப்பார்த்து ஆட்டிப்பார்த்து ஒவ்வொரு மிதியுந்தினதும் தகுதிதரங்களைப் ஆராய்ந்து ‘இவ்வளவுதானப்பா இதுக்குள்ளபெறுமதி, அதுக்கு மேல போகாது’ என்று விண்டுரைத்தும், சிலசமயங்களில் இருவரிடையேயும் நின்றுபேசி விலை இணக்கங்களும் செய்துவைப்பார். சரக்கு போணியாயிற்று என்றால் இரண்டு பக்கத்திலிருந்தும் நாலு ரூபாயோ ஐந்து ரூபாயோ ‘சம்பாவனைகள்’ கிடைக்கும்.

அறுபதுகளில் யாழ்ப்பாணத்தில் மிதியுந்தை யாரும் ஒரு பெறுமதியான பொருளென்று கணித்துத் திருடுவதேயில்லை. காவல்த்துறைக்கும் மிதியுந்துத்திருட்டு முறைப்பாடுகள் வருவதும் குறைவு. ஒரு முறை பஞ்சத்திலடிபட்ட வட்டக்கச்சி இளைஞனொருவன், பரந்தன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் யாரோ ஒருவர் வாங்கி ஆறுமாதமேயாகாத மிதியுந்தை நிறுத்திப் பூட்டாமல் விட்டுவிட்டு, பலசரக்குக்கடையொன்றினுள் புகுந்து எதையோ வாங்க வினைக்கெட்டுக்கொண்டிருக்க அதை அமுக்கிக்கொண்டுபோய் மறுநாள் கோண்டாவில் சந்தையில் 525 ரூபாவுக்கு விற்றுவிட்டான். அதேவாரத்திலேயே அம்மிதியுந்து களவு கொடுத்தவர்களிடம் அகஸ்மாத்தாக அகப்பட்டுவிட, மிதியுந்தை வாங்கியிருந்தவனோ “ஐயோ…அது கள்ளச்சைக்கிளென்று எனக்குத் தெரியவே தெரியாது…இந்த ஐயா சந்தையில சோதிச்சுக் ‘க்யாரண்டி’ பண்ணினதாலதான் நான் வில்லங்கமிராதென்டு நம்பி வாங்கின்னான்…” என்று அலறினான். கடைசியில் காவல்துறைக்கு முறைப்பாடு போகவும் கோப்பாயிலிருந்து விசாரிக்கவந்த கருணாநிதியென்ற முரட்டு ஆய்வாளன் (பின் நாளில் வி.புலிகளால் ’பூ’ வைக்கப்பட்டவன்) பச்சைமட்டையரின் வயதைக்கூடக் கணக்கெடுக்காமல் அவனது பாணியில் அவரது செவி மூக்கு கன்னங்கள் தலைமுடி எல்லாவற்றையும் பிய்த்துப்பிடுங்காத குறையாகப் பிடித்து இழுத்துக் கசக்கித் தேய்த்துவிடவும் சேவலின்கொண்டைப்பூவென முகமெலாஞ்சிவந்து வீடுதிரும்பினார்.

சம்பவமாகிய அடுத்த வாரம் அவரது மிதியுந்துத்திருத்தகத்துக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் வெள்ளந்தியாக “ஏன் அண்ணை நீங்கள் இன்டைக்குக் கோண்டாவில் சந்தைக்குப் போகேல்லயோ………?” என்று கேட்கவும். பச்சைமட்டையர் நிதானமாகச் சொன்னார்:

“ஏன் தம்பி நேற்றுத்தானே சனிக்கிழமை….. நான் நேற்றைக்கே ஜோராய் தோய்ஞ்சு முழுகியாச்சு, இன்டைக்கும் என்னை என்ன…பொலிஸுக்காரனிட்ட எண்ணெய் அரப்போடபோய் கசக்கித் தேய்ப்பிச்சு வரச்சொல்றியோ…எனக்கேலாப்பா…!”

அது பச்சைமட்டையருக்கு கையில் பெருக்காகக் காசுபணம் புழங்கியநேரம் கொழும்புக்கு கிழங்கு, வாழைக்குலை, வெங்காயம் கொண்டுபோகும் நீர்வேலியின் பேருந்துகள் மூலம் மிதியுந்தின் உதிரிப்பாகங்கள் செயினுகள் ஃப்றீவீலுகள், அச்சுகள், குடங்கள், கம்பிகள், போல்ஸுகளென்று வாங்கி ஏழெட்டுச் சன்லைட்பெட்டிகள் நிறையக் கையிருப்பில் வைத்திருந்தார். சிறிது காலத்தால் கடையில் அவற்றை வைத்திருப்பது அத்தனை விவேகமானதல்ல, பூராயம் தெரிந்து கள்வர்கள் யாரும் கூரைபிரித்து இறங்கி அனைத்தையும் நகர்த்திப்போய்விடலாமென்ற முன்யோசனையில் தன்வீட்டுக்கு எடுத்துப்போய் களஞ்சிய அறையின் அட்டாளையில் ஏற்றி வைத்திருந்தார். அந்தவாண்டிலேயே ஸ்ரீமாவோ ஆட்சிக்கு வரவும், அவர் முதற்காரியமாய் இறக்குமதிப்பொருட்களுக்குத் தடைவிதித்தார். உடனே மிதியுந்துகளுக்கும் அவற்றின் உதிரிப்பாகங்களுக்கும் நாட்டில் பெருந்தட்டுப்பாடு ஏற்பட்டது. இவர் வைத்திருந்த மிதியுந்தின் உதிரிப்பாகங்களின் விலை எகிறித்துடித்து நாலைந்து மடங்காகிப் போயிருந்தன. 7 ரூபாய் விற்ற செயின் 30 ரூபாயுக்கும் சந்தையில் இல்லாமலிருந்தது.

யாழின் எல்லாப் பிரசித்த வைத்தியர்களதும் வைத்தியங்களையும் பார்த்துமுடித்துவிட்ட அவரது காதற்கணவி ஒரு மாரிகாலத்தில் இறந்துபோனார். அவருக்குப்பெரும் இழப்புத்தான், அதன்பிறகு வாழ்க்கையையிட்டான பயம் வந்துவிட்டதோ என்னவோ அந்திம அகவைகளில் பாரதியைப்போல லாகிரிகளே சுகம் என்றாகிவிட்டார். அதன்பிறகெல்லாம் அவரிடம் ஒரு கமுகம்பூக்கந்தம் அடிக்கடி கமழத்தொடங்கியது. அது அவர் வாங்கிவைத்து அடிக்கும் உரும்பிராய் ‘கசிப்பு’ (பட்டை) விலிருந்து என்பவர் சிலர், இல்லை அவர் தன்னிலிருந்து கசிப்புக் கமழாதிருக்கத் தடவிக்கொள்ளும் மருக்கொழுந்தோ ஜவ்வாது அத்தர் என்பவர் வெகுசிலர், அபினையோ, லேகியத்தைக் கண்ணாலேயே காணாதவர்களும் அபினென்றும், இலேகியமென்றும் அணிபிரிந்து விவாதிக்கலாயினர். கால ஆவர்த்தனத்தில் பச்சைமட்டையர் இப்போதெல்லாம் தூக்கம் முறியாதவர்மாதிரிக் காணப்படுகிறார், கதை பேச்சுவாக்கிலும் ஒரு லேசான கிறக்கமும் மயக்கமும்.

பச்சைமட்டையர் பாவிக்கத்தொடங்கியிருக்கும் இலாகிரிகள்செய்த மாயமோ…அவரது நினைவுப்புலத்திலிருந்த தரவுகள் பகுதியாக மங்கவும், மனுஷனுக்குத் தன்னிடம் அன்றைய சந்தைப் பெறுமதிக்கு ஒரு இலட்சம் ரூபா வரையிலான உதிரிப்பாகங்கள் இருக்கென்ற விஷயமே மறந்துபோக மதியாபரணத்துக்கு குருசந்திரயோகமடித்தது. யாழ்ப்பாணத்தில் மிதியுந்துகள், உதிரிப்பாகங்களை சீமையிலிருந்து நேரடியாகவே இறக்குமதி செய்து சந்தைப்படுத்துபவர்களான சுலைமான்கண்டு பிறதேர்ஸ் எனும் மொத்தவியாபாரியிடம் இரகசியமாகப்போய் ஒரு பெட்டிதவிர்ந்த மீதிப்பெட்டிகளில் இருந்த உதிரிப்பாகங்கள் அனைத்தையும் விலைபேசி விற்றுவிட்டு ஒன்றுந்தெரியாதகன்றாக செல்வச்சந்நிதிக்கும், நல்லூருக்கும், வல்லிபுரக்கோவிலுக்கும் வழக்கம்போலத் தீர்த்தயாத்திரைகள் செய்து பக்திசெலுத்திக்கொண்டிருந்தான். அச்சமயம் விசுக்கென இரண்டறையாக இருந்த மேகலா டீச்சர் வீடு நாலு அறைகளாகி நீண்டகூடமும், போர்டிகோவுமாக விஸ்தாரங்கொண்ட மாயங்கண்டு ஊரே அதிசயித்தது.

ஒருநாள் பச்சைமட்டையருக்கு ஏதோவொரு லாகிரியின் போதை அதிகமாகிவிடவும் சிரித்துக்கொண்டு “எனக்கொருக்கால் ராகினிக்கல்லோ கேட்டு வந்தவங்கள்” எனவும், அருகிலிருந்த யாரோ “ஆமோவே…அம்மான் ஒருக்காலும் அதைப்பற்றிப் பறையவேயில்லை அமுக்கிப்போட்டியள்…” எனவும் “உந்தாள் உவர் அப்பர்தான் துண்டற மாட்டனென்டு மடுத்துக்குழப்பிட்டார்…இப்ப என்ன அவளும் போயிட்டாள்…இவளும் போயிட்டாள், காலம்.” என்றுவிட்டுக் கண்களை மேலே சொருகிக்கொண்டு நெடுமூச்செறிந்தார்.

நீர்வேலி வாய்க்கால்த்தரவைப் பிள்ளையார் கோவிலை எதிர்த்தபக்கம் யாழின் திசையில் கண்ணாடித் தொழிற்சாலைக்கு அருகில் ஒரு குளமிருக்கிறது. அதன்தொடர்ச்சியாகக் கிழக்குத்திசையில் விரியும் வாய்க்கால்த்தரவையில் மேய்ந்துவிட்டுவரும் மாடுகள் இந்தக்குளத்தில் இறங்கித்தாகம் தணித்துச்செல்லவசதியாக அக்குளத்தின் தரவைப்பக்கம் சாய்வானதாக அமைக்கப்பட்டிருக்கிறது. வாய்க்கால்தரவையிலோ அங்குள்ள பற்றைகளின் பின்னாலோ காற்றோட்டமாகக் குந்திக் ‘கழித்து’விட்டு வரும் கிராமத்தவர்கள் நேராக அக்குளத்தில் இறங்கித்தான் ‘கால்’கழுவிச்செல்வார்கள். அக்குளத்து நீரே எப்போதும் பாசியால் பச்சை நிறத்திலிருக்கும்.

ஒருநாள் மலையில் அன்றைய ’கோப்பறேசன்’ விஜயம் தந்த மயக்கத்தால் நேர்ந்ததோ, இல்லை கால்கழுவத்தான் இறங்கினாரோ தெரியவில்லை. பச்சைமட்டையர் ஒரு தளம்பலில் மிதியுந்தோடு குளத்துக்குள் இறங்கிவிட்டார். இறங்கியதோடு ஒரு சிறங்கை தண்ணீரை ஏந்தி வாயிலிட்டு விழுங்கியவர்: “இந்த நன்நீரையா மக்கள் குடிப்பதற்கு உகந்ததல்ல என்கிறார்கள்…மடமாந்தர், என்ன ஜோராயிருக்கு இது” என்றார்.

என்னதான் ஆழமானதொரு துக்கம் மனதிலிருந்தாலும் அதிலிருந்து சுதாகரித்துக்கொண்டு இத்தனை ஆண்டுகாலப் பழக்கத்தால் கால நேர பிரமாணம் மாறாமல் தினமும் மிதியுந்துத்திருத்தகத்துக்கு வந்து தன்வேலைகளில் மூழ்கிப்போயிருப்பார். இப்போதுமென்ன……. போதையோ இல்லையோ யாராவது பெரும் குல்லாயாகப் போட்டால் சிலிர்த்து மீண்டெழுந்துவிடுவார்.

மார்க்கண்டு என்றொரு தொழிலாளி நீர்வேலியிலிருந்து தினமும் காங்கேசந்துறை சீமெந்துத்தொழிற்சாலைக்கு வாடகைமிதியுந்திலேயே போய்வந்து கொண்டிருந்தார். அவருக்கு மாதம் மிதியுந்து வாடகையே 100 ரூபாய்களாகிவிடும். இரண்டு மூன்று மாதங்களில் பச்சைமட்டையரிடம் அவரது வாடகைப்பாக்கி ஏறிவிட அவர் இவரைத் தவிர்த்துவிட்டு கிடாயன்கடையில் மிதியுந்தை எடுத்துக்கொண்டு போவது இவருக்குந்தெரியும். ஒரு முறை கிடாயனும் கொடுப்பனவுத் தகராறாய்த்தானிருக்கும் அவருக்கு மிதியுந்தைத்தர மறுத்துவிடவும் வேறுவழியின்றித் திரும்பவும் பச்சைமட்டையரிடமே வந்தார் பயனர். வந்தவர் கடைவாசலில் வாங்கிலமர்ந்து பத்திரிகை பார்த்துக்கொண்டிருந்த ஒருவரிடம் பேசுவதுபோல ஓரங்கவுரையொன்றை (Monologe) நிகழ்த்தலானார்:

“கே. கே. எஸ் போயிட்டுவாறமாதிரியான ‘கொன்டிஸனான’ சைக்கிளென்டா அது ரத்தினண்ணையிட்டைதான் இருக்கு. மற்றவையின்ரயில நம்பிப்போகேலாது பாரும்…… ஒன்று நடுவழியில காத்துப்போகும், அல்லச் செயினைக்கழட்டிபோட்டுச் சிரிச்சுக்கொண்டு நிக்கும் என்ன.”

‘15 ரூபாய் தினக்கூலிக்குத்தானே இந்தச்சோழகத்திலும் இம்மாந்தூரம் சைக்கிளை வலிச்சுஉழக்கிக்கொண்டு போய்வாறான் பிள்ளைகுட்டிக்காரன் பாவம்’ என்பதை நினைக்கவும் பச்சைமட்டையருக்கு மனம் கசிந்தது.

“யார்டா……. அவன் காலங்கார்த்தால வந்துநின்டு ரத்தினண்ணையின்ட ‘விலாசம் எழுப்பிறவன்’ ’’ என்றவர் வெளியேவந்து “ ஓ…. தம்பி மார்க்கண்டுவே…….. உமக்குப் பழைய கணக்கால 107 ரூபா பாக்கி நிக்குது, நினைப்பிருக்கோ……”

“ஓமண்ணை…… மறுக்கேல்ல.”

“ சரி….. அதில 100 ரூபாயையும் நீ தரவேவேண்டாம், வைச்சுப்பிழைச்சுப்போ…… இன்றைக்கு வரக்குள்ள இன்றைக்கான வாடகை 3 ரூபாயோட அந்தமீதிப்பாக்கி 7 ரூபாயையும் சேர்த்து 10 ரூபாயாய் தந்திந்திட்டுப்போ கிளி.” என்றுவிட்டு உள்ளேயிருந்தொரு மிதியுந்தை தூக்கிவந்து அவனிடந்தந்தார் பெருந்தன்மையுடன்.

டியூசனால வந்த ராதிகா மிதியுந்து மேற்சட்டகத்தில் (பாறில்) காலைப்போட்டு நின்றபடி வேறும் இரண்டு மூன்று பெடியளை ஒன்றாய் நெருக்கிவைத்துச் ‘சள்’ அடித்துக்கொண்டிருந்ததைக் கண்டுவிட்டார் பச்சைமட்டையர். இரண்டுநாட்கழித்து அவருக்கு அவள் சாப்பாடு பரிமாறும்போது வேறு யாருக்கோ சொல்வதுபோலச் சொன்னார்:

“நீ…அம்மா மாதிரியே ஒரு நெருப்பென்று எனக்குத்தெரியும் குஞ்சு, ஆனால் நெருப்பென்டதுக்காகக் கண்ட எல்லாத்திலயும் பத்தப்படாது கண்டியோ…உலகம்தெரியாத பொடிசுகளை மயக்கிக் கொண்டுபோய் ஆபத்துகளில சொருகிவிடவென்டே தத்தாரிக்கூட்டங்கள் ஊரெல்லாம் கிளைச்சிருக்கு…… எதிலயாவது எக்குத்தப்பாய் மாட்டிட்டா வினையாகிடும், பிறகு மீட்சியில்லை, கவனம். அது அதுக்கும் உரிய வரைமுறைகளிருக்கு…எதுக்கும் பெரியாட்கள் நாங்கள் இருக்கிறமல்லே…பத்திரமாய் நடந்துக்கோ.”

மறுநாள் இரவுச்சாப்பாடானபின் பிள்ளைகள் மூவரும் சேர்ந்திருக்கையில் அனைவருக்குமான ஒரு விண்ணப்பத் தொனியில் சொன்னார்:

“மதியன் பட்டையும் கொட்டையும் போட்டுக்கொண்டு பத்திமுத்தியோட காந்தன்வாத்திவீட்டுக்கு ஆப்புச்சொருகிற வேலைய விட்டிடு. ஊரில உன்டபேர் கெட்டுக்கிடக்கு. தலைச்சன் பிள்ளை நீ……. பொறுப்போட குடும்பத்தைப் பார்க்கவேணும்.”

அவருக்கு லோகனின் பெயர் ஞாபகத்துவர மறுத்தது. சமாளித்தார்.

“சின்ன மதியன் உனக்குக் கொண்ணையின்ர போக்குப்பிடிக்கல்லேன்டா நீ தனியாயொரு முட்டியை வைக்கலாம், தப்பில்லை.”

“ராதிகா…நீ யாரோடையாவது ஓடிப்போறதென்டால் ஓடிடு, ஆனால் ஐயா இருக்கையிலேயே ஓடவேணும்…பிறகென்டால் தாய் தகப்பன் இல்லாதபிள்ளை போக்கத்துத் தன்ரபாட்டில போயிட்டாள் என்றுதான் குடும்பத்துக்கு அவப்பேர் வரும்…சரியா, எல்லாருமாய் இந்த ஐயாவைக் கொஞ்சம் நிம்மதியாய் இருக்கவிடுங்கப்பா…”

அவரது விண்ணப்பம் ஒரு நெகிழ்வுத்தொனியில் இருந்தாலும் அதற்குள் ஒரு ஆணையும் மறைந்திருந்தது, பிறகு பின்கொல்லைக்குப் போய்விட்டுவந்து அட்டாளையில் தொங்கிய அசவுக்குள்ளிருந்து பொன்நிறத்தில் தாவடிப்புகையிலையொன்றை எடுத்துக் காப்பிலையாக (நரம்பில்லாமல்) கிழித்து அதனுள் களிம்பைப்போலொரு வஸ்தைத்தடவி சிகரெட்டளவில் மெல்லிதாகச் சுத்திப்பத்திக்கொண்டு நிம்மதியாய் மெல்லமெல்ல ஆனந்தசயனத்துள் ஆழ்ந்த பச்சைமட்டையர் அடுத்தநாள் எழுந்திருக்கவில்லை!

(கோப்பறேசன் – அக்கால யாழ்வழக்கில் கள்ளுக்கொட்டகை.)

– ஞானம், செப்டெம்பர் 2022 இதழில் வெளியாகியுள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *