கதைக்காரன் கர்வம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 27, 2022
பார்வையிட்டோர்: 1,280 
 

(1938ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘அதென்னவோ எனக்குத் தெரியாது. ‘வசந்தா டாக்கீஸுக்கு நீ ஒரு சமூகக் கதை எழுதிக் கொடுத்தாகவேண்டும். ‘ஆகட்டும்’ என்று நீ வாக்குறுதி கொடுத்தால்தான் உன்னை விடுவேன்.’

‘டாக்கிக்குக் கதை எழுதும் திறமை எனக்கு இல்லையே! என்ன செய்வேன்?’

‘சினிமாக் கதை எழுதத் திறமையே வேண்டியதில்லை. சொல்லப் போனால் கதைகூட வேண்டியதில்லை.

‘பின் என்னதான் வேண்டும்?”

‘நல்ல சம்பாஷணை; நல்ல பாட்டு’.

என் நண்பன் கிருஷ்ணஸ்வாமி ‘வசந்தா டாக்கீஸ்’ டைரெக்டர். என்னை அதற்கு ஒரு கதை எழுதிக் கொடுக்கும்படி தெடு நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.

‘திடுக்கிடும் சம்பவங்களும் துப்பாக்கிப் புகையும் என்னால் கொடுக்க முடியாதே?’

‘வேண்டாம். அதெல்லாம் இப்போது எடுபடாத சரக்குகள். உனக்குத் தெரியாதா? நீ அதைப்பற்றிக் கவனம் செலுத்துகிறதேயில்லை போலிருக் கிறது. ஜனங்களின் மனசு இப்போது வேறு பக்கம் திரும்பியிருக்கிறது. ஹிந்தி, தெலுங்கு முதலிய படங்களே இதற்கு முக்கியமான காரணம். ஆகையால்தான் இந்த அவசரம். சமூகக் கதைகளுக்கு இப்போது பெரிய கிராக்கி. உன்னிடம் கையில் ஏதாவது கதை இருக்கிறதா?”

‘இருக்கிறது.ஆனால் அது நாவலாக எழுத லாயக்கே ஒழிய, டாக்கிக்கு வேண்டிய அளவு நிகழ்ச்சிகள் அதில் இல்லை.

‘அதெல்லாம் நான் பார்த்துக்கொள்ளுகிறேன். கதை என்ன சொல், பார்ப்போம்’.

‘கதை சிறிதுதான். சம்பவங்கள் நடந்ததெல்லாம் நமது பக்கத்தில்தான். அவையும் சில மாதங்களுக்குள்ளேயே நடந்துவிடுகின்றன. சென்ற வருஷத்துச் சட்டசபைத் தேர்தலின் காலம்.

‘அந்த வருஷந்தான் காலேஜிலிருந்து வெளிவந்த ஓர் இளைஞன். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறான்; தலைவிரி கோலமாகத் திரிகிறான். மற்றொரு நண்பனுடன் வீடுவீடாகச் சென்று வாக்காளர் வரிசையில் கண்ட பேர்களைச் சந்தித்துக் காங்கிரஸின் லக்ஷ்யத்தை எடுத்துச் சொல்லுகிறான். தகப்பனார் அவன் ஏதாவது ஓர் உத்தி யோகத்தில் அமர வேண்டும் என்று அவனைத் துளைத்துக்கொண்டே இருக்கிறார். தாய் அவன் வீட்டில் நுழைந்தபொழுதெல்லாம் கல்யாணப் பேச்சுப் பேசு கிறாள். அதை யெல்லாம் கவனிக்காமல் அவன், தேச சேவை ஒன்றே யௌவன இந்தியாவின் லக்ஷ்யமாக இருக்கவேண்டும் என்று பிரசங்கங் கூடச் செய்தாள்.

‘ஒரு நாள் வாக்காளர் ‘ஜாப்தா’வுடன் ஒரு குறிப்பிட்ட மனிதர் வீட்டிற்குள் நுழைந்த பொழுது, அங்கே கூடத்தில் ஒரு தேவதாஸிப் பெண் வீணை வாசித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கண்டான். சுந்தரமும் அவனுடைய நண்பனும் உள்ளே நுழைத்ததை அந்தப் பெண் முதலில் கவனிக்கவில்லை.

‘நாராயண ஐயங்கார்வாள் இருக்காளோ?’ என்று சுந்தரம் வெகுளித் தனமாகக் கேட்டான். தேவதாஸி உட்கார்ந்திருந்த வீட்டில் போய் அவன் அப்படிக் கேட்டதற்கு மெய்ம்மறந்த பிரசார உற்சவம் ஒரு காரணமாக இருக்கலாம். வாழ்க்கையில் இன்னும் அவனுக்கு அநுபவம் போதவில்லை என்பது மற்றொரு காரணம். அது நீலாம்பாளுக்கு மிகவும் விநோதமாயிருந்தது. அந்த வாலிபர்களின் அறியாமையைக் கண்டு, தன்னை அறியாமலேயே ‘கொல்’ என்று சிரித்துவிட்டாள். காரணமில்லாமல் அவள் சிரித்தாள் என்று சுந்தரத்தின் முகத்தில் கோபமும் வெட்கமும் கலந்து ஜொலித்தன. நீலாம்பாள் மறு நிமிஷமே சமாளித்துக்கொண்டாள். யௌவனத்தின் மிதப்பில் முதலில் அவளுக்குக் குறும்பு உணர்ச்சிதான் மேலோங்கி இருந்தது. தானே தன் மரியாதைக் குறைவான நடத்தையை அறிந்து கொண்டு வெட்கி, எழுத்துநின்று, ‘மூன்று வருஷங்களாக ஒரு தேவதாஸி இந்த வீட்டில் வசிக்கிறாள்’ என்றாள்.

‘விவரங்கள் வேண்டாம். சுருக்கிச் சொல், போதும். சுந்தரமும் நீலாம்பாளும் காதல்கொண்டு விட்டார்கள் அவ்வளவுதானே?’

‘பின் நீயே கதையை எழுதிவிடலாமே?’

‘சொல்லு, சொல்லு. எழுத்தாளன் என்றால் துரும்பைக் கிள்ளிப் போட்டால்கூட விறைக்கும்போலிருக்கிறது!’ என்று சொல்லிக்கொண்டு கிருஷ்ணஸ்வாமி சிரித்தான்.

‘அடுத்துவந்த சந்திர கிரகணத்தன்று, காவேரிக்கு நீராடச் சென்ற இடத்தில் மறுபடியும் இருவரும் சந்தித்தார்கள்-‘

‘சரி, அப்புறம் -‘

‘அவ்வளவுதான். சுந்தரத்தின் தேசீயம் அன்றே அந்தக் கிரகண ஸ்நானத்துடன் ஆற்றோடு போய்விட்டது. அதற்குப் பிறகு எப்பொழுது பார்த்தாலும் நீலாவின் வீட்டில் ‘ஆஜர்’ கொடுத்துக் கொண்டிருந்தான். நீலாவின் தாய்க்கு இது பிடிக்கவில்லை. ஆனால் பெண்ணின் பிடிவாதத் திற்குப் பயந்து சும்மா இருந்தாள்.

‘கடைசியாக ஒரு நாள் சுந்தரம் நீலாவை மணந்துகொள்ளப் போவ தாகத் தகப்பனாரிடம் தெரிவித்தான். பெற்றோர்களுடைய நயபய முயற்சி ஒன்றும் அவனிடத்தில் பிரயோசனப்படவில்லை. அவன் ஒரே உறுதியுடன் இருந்தான். தகப்பனார் கடைசியாக அந்தப் பெண்ணையே நேரில் கண்டு பேசுவதென்று தீர்மானித்தார்.

‘நீலா அவரை நேரில் சந்தித்துப் பேச மறுத்து விட்டாள். கடைசியாக அவர் அவளுடைய தாயிடம் போய் முறையிட்டார். இருவருமாகக் கலந்து நெடுநேரம் யோசித்து ஒரு கொடூரமான தீர்மானத்திற்கு வந்தார்கள். அதன்படி காதவர்கள் இருவரும் நிரந்தரமாகப் பிரிய வேண்டியதுதான்-

‘கதை பாதகமில்லையே! மேலே?’

‘அந்தச் சூழ்ச்சியை நீலாவின் தாய் பிரயோகம் செய்வதாக ஒப்புக் கொண்டாள். ஒரு நாள், அதுவும் ஒரு பௌர்ணமியன்று-மாலை.

‘அடி நீலா, மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு ஒரு விஷயத்தை இதுவரையில் நான் உன்னிடம் சொல்லாமல் இருந்தேன். இனிமேலும் சொல்லாமலிருந்தால் எனக்கு ஒரு பெரிய பாவம் சம்பவிக்கும். சொல்லிவிட வேண்டியதுதான்’ என்று அவள் தாய் ஆரம்பித்தாள்.

‘அவர் ஏழை என்று சொல்லப்போகிறாய்!’ என்று பதற்றத்துடன் நீலா குறுக்கிட்டாள்.

‘இல்லையடி-நீ அவனுடைய தகப்பனாரின்-பெண்!’ என்று சொல்லி விட்டு அவள் மகளுக்கு முன் நிற்கத் தைரியமில்லாமல் வெளியே போய்விட்டாள்.

‘இந்தச் சிறு சம்பாஷணையிலிருந்து விபரீதம் விளைந்தது. நீலா தாய் சொன்னதைக் கேட்டதும் புழுப்போலத் துடித்தாள். தன் நிலைமையைப் பற்றி அவளால் எண்ணக்கூட முடியவில்லை. அன்று வழக்கம் போல் சுந்தரம் வந்தபொழுது அவனுடன் பேசக்கூட முடியவில்லை அவளுக்கு. ‘திரும்பிப் போ!’ என்று அர்த்தம் படக் குறிப்புக் காட்டினாள். சுந்தரம் பிரமை தட்டிப்போய் நின்றுவிட்டு ஒன்றும் விளங்காமலேயே வெளியேறினான்.

‘தாய் தன் சதியாலோசனை பலித்தது’ என்று நினைத்துப் பூரித்தாள்.

ஆனால் நீலா, தன் வாழ்க்கையின் மகிழ்ச்சி மண்ணான நிமிஷமே தான் மேலே செய்ய வேண்டியதைத் தீர்மானித்துவிட்டான். தாய் தகவல் சொன்ன நிமிஷம் முதல் தான் உயிர் வாழ்வது அசாத்தியம் என்று தாயிடம் தெரிவித்தாள். பெண்ணின் பிடிவாத குணத்தை அறிந்த தாய் திகில் பிடித்துப்போனாள். என்ன செய்வதென்று அவளுக்குத் தெரிய வில்லை.

‘சுந்தரம் வீட்டையடைந்த சிறிது நேரத்திற்கெல்லாம் நீலா மரிக்கும் தறுவாயில் இருப்பதாகக் கேள்விப்பட்டு ஓடி வந்தான். நீலா விஷம் உண்டு விட்டாள். கடைசியாகச் சில நிமிஷங்கள் சந்தித்தார்கள். ஆனால் அப்பொழுது ஒரு நிமிஷம் அவனுடன் பேசி நிலைமையை விளக்கினாள். அன்றே சுந்தரம் எங்கோ போய்விட்டான். இடம் தெரியவில்லை.

கதையில் வேகமே இல்லையல்லவா?’

‘நிறைய ஊட்டலாம். ஸீனரியோ நான் தயார் செய்து கொள்ளுகிறேன். தேர்தல் பிரசாரக் கூட்டம், காவேரி மணலில் கிரகண ஸ்தானம், பிரசார நிதிக்காக நீலாவின் நாட்டியக் கச்சேரி ஒன்று, எல்லாம் சரி பண்ணிவிடுகிறேன். படக்காட்சிக்குத் தகுந்தபடி சில இடங்களில் மாறுதல்கள் செய்யவேண்டியிருக்கும். முடிவையும் அநேகமாகச் சுபமாகச் செய்து விடலாமென்று நினைக்கிறேன்..’

‘அது கூடாது’

‘அட போடா பைத்தியமே! நான் அப்படி உன் கதையைத் திருத்தி அமைக்காவிட்டால் ஜனங்கள் ரஸிக்க மாட்டார்கள். தெரியுமா?’

‘ரொம்ப நல்லதாயிற்று!’

‘ஜனங்களுக்குப் பிடிக்காத கதையை எப்படிப் படம் பிடிப்பது?’

‘வேண்டாவே வேண்டாம். என் கதை என்னிடம்; அவ்வளவுதானே?’

‘இதுதான் எழுத்தாளரின் கர்வம் என்பது!’

‘அதுதாண்டா அவனுக்கு மிஞ்சியிருக்கும் ஆறுதல்! அதைக்கூட அவன் விற்றுவிட முடியாது!’

– ஹிந்துஸ்தான்-1938.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *