நெற்றிச் சுருக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2022
பார்வையிட்டோர்: 1,229 
 

(2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரியூசன் கிளாசை நோக்கி ஒரு விசர் நாய் ஓடி வந்து கொண்டிருந்தது. அது வந்து கொண்டிருந்த வழியெல்லாம். தொடர்ச்சியாக நாய்கள் குரைக்கும் ஓசை கேட்டுக்கொண்டிருந்து. பாரியூசன் கொட்டில்களின் ஓரத்தில் ஒதுங்கியிருந்த சுற்றுவட்டார நாய்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு குரைத்தபடியே ஓடி மறைந்தன. க கொட்டில் மேசைகளின்மேல் மாணவர்கள் எல்லோரும் இரைந்த படியே ஏறிக்கொண்டனர். நடுங்கியபடி சிலரும், சேட்டைக்காகச்சிலரும் கூச்சலிட்டனர். நான்கைந்து மூர்க்கமுள்ள மாணவர்கள் விசர்நாயை நோக்கிக் கற்களை வீசினர். அந்த நாய் மெதுவாகத்திரும்பி அவர்களுக்கு அதன் பற்களைத்திறந்து காட்டியது. கல்லெறிந்தவர்கள் ஓடிச்சென்று மேசைகளின் மேல் பாய்ந்து ஏறினர்.

மீண்டும் அந்தநாய் நாக்கை வெளியே நீட்டிக்கொள்ள வால் தொங்கியபடி மெதுவாக ஓடிச்சென்றது. அங்கு ஆறேழு ரியூசன் மாஸ்டர்கள் இருந்தும் ஒருவருக்கு மாத்திரம் அந்தநாயை அழித்துவிட வேணும் எனும் எண்ணம் வலுப்பெற்றது. புதிய கொட்டிலுக்கு கிடங்கு கிண்ட கொண்டு வந்திருந்த இரும்பு அலவாங்கை எடுத்துக் கொண்டு நாய்போன திசையில் ஓடிச்சென்றார். ஏனைய மாஸ்டர்மார் கைகளைக் கட்டி ஒரு கையினை வாயில் வைத்தபடி புதினம் பார்த்தனர்.

சேர் போனதைக்கண்ட மாணவர்கள் கொட்டில்களில் இருந்து வெளியே வந்து என்ன நடக்கப்போகிறதோ என ஏங்கிக் கொண்டு சிலரும், கூச்சலிட்டபடி பலரும் நின்றனர்.

ஓடிக்கொண்டிருந்த நாய் துரத்தியவரை நோக்கித் திரும்பி வந்தது. தலையில் ஒரே அடி. கண்களைத் திறந்தபடி நாய் வீழ்ந்து கிடந்தது. மீண்டும் ஓர் ஒங்கிய அடியில் தலை பிளந்து இறந்துபோனது அந்த நாய்.

யாரையும் நெருங்கவிடாத அவ்வாசிரியர் தானே தனித்து பெரிய கிடங்கு வெட்டி அந்த நாயைப்போட்டு மேல்புற மண்ணையும் இழுத்து மூடினர். டெட்டோல் வாங்கி வரும்படி கூறி அலவாங்கை நன்றாக கழுவிவிட்டார். பக்கத்தில் இருந்த குப்பைகூழங்களைப் புதைகுழிக்கு மேல்பரப்பி தீயிட்டுக் கொழுத்திவிட்டார்.

நாயை அடித்ததற்காக அவர் மனம் சிறிது நொந்தாலும் தான் செய்தது மிகவும் சரியானது என அவர் நினைத்தார். உண்மையும் அதுதானே. தன்னைக் கொல்லவரும் பசுவையே கொல்லலாம் என்றால் பல பேரைக் கொல்லவல்ல இந்த நாயைக் கொன்றது எவ்வளவு நல்லவிடயம் எனப் பெற்றோர் பேசிக்கொண்டனர்.

விசர் நாய் ஒன்று திரியும் செய்தி ஊரில் ஏற்கனவே பரவியிருந்ததனால் சிறிய பிள்ளைகளை ரியூசனுக்கு அனுப்பாமல் இருந்த பெற்றோர் மகழ்ச்சியோடு அவர்களை ரியூசனுக்கு அனுப்பி வைத்தனர்.

நல்ல வேலைதான், அது தேவையானது தான் என்றாலும் குழந்தைகளின் நெஞ்சில் கொலை உணர்வு தோன்றுமாறு அவர் மாணவர்களின் முன்னால் இவ்வாறு அந்த நாயை அடித்தது முற்று முழுதாகச் சரியென்று சொல்ல முடியாது.” என ஒரு முதிர்ந்த ஆசிரியர் மாணவரிடையே கதைத்து விட்டார்.

சில மாணவர்கள் அன்றிரவு கனவில் அந்த ஆசிரியர் தங்களை அலவாங்கினால் அடிப்பதாக அலறினர். கனவு கண்ட ஒரு மாணவனின் தந்தை மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஒரு முக்கி பணியாளர்.

நெருப்பு இல்லாமலே, ரியூசன் கொட்டிலில், மயிர் கொட்டிய மண்டையில் இருந்து வெளிவந்த ஒரு பொறி; காட்டுத்தீயானது.

நன்மை செய்த அந்த மாஸ்டருக்கு பிள்ளைகள் குறைந்து விட்டனர். ரியூசன் மாஸ்டர்களில் நீண்ட அனுபவம் உடைய அந்த மாஸ்டர் அக்கிராமத்திற்குச் செய்த சேவைக்குப் பதிலாக அந்தச் சமூகம் அவருக்குக் கொடுத்த மரியாதையினை அவர் மௌனமாக ஏற்றுக்கொண்டார்.

சில நாட்கள் அந்த மாஸ்டர் அமைதியாக இருந்தார். நாயைப் போலவே குரைத்துக் குரைத்துச் செத்துப்போன தனது பால்ய நண்பனை நினைத்தபடியே ஒரு மாலை நேரம் அவர் உலாத்திக்கொண்டிருந்தார்.

ஆறாம்வகுப்பு படிக்கும்போது அந்தச் சம்பவம் நடந்தது. மாஸ்டரின் நண்பனுக்கு நாய்க்குட்டி என்றால் கொள்ளை ஆசை, தூக்கி விளையாடுதல், ஓடிப்பிடித்து பந்து எறிந்து விளையாடுதல், நீந்துதல் என்று அவனுடைய அதிக நேரம் நாய்களோடு செலவழித்தான். ஒரு நாள் தாயாரைப் பயணம் அனுப்ப பஸ்நிலையத்திற்கு சென்றிருந்தான். இருள் பிரியும் காலை வேளை அங்கு வந்த சிறிய நாய் ஒன்று அவனுடைய கரண்டிக் காலைக் கௌவி விளையாடியது. அவனும் காலால் தட்டித் தடவி – அதனோடு விளையாடினார்.

ஆனால் சிறிது காலத்தின் பின் அவனை வைத்தியத்திற்காக ஹொறிவிலைக்குக் கொண்டு சென்றும் பலன் பெரியதாகக் கிடைக்கவில்லை.

விதி: அவனை நாயாகவே குரைத்தபடி வாயால் நீர்வடிய, அவன் இறந்துபோனான்.

ஐந்து கிலோ தள்ளியிருந்த கல்வி நிறுவனம் ஒன்று அவரை அழைத்தது. வேறுவழியின்றி அவர் அங்கு செல்ல ஆயத்தமானார்.

கல்வி கடைச்சரக்கான போது அதில் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக ரியூசன் சென்றர்கள் மாறிவிட்டன. பங்குச் சந்தை நிலமைதான்.

ஆசிரியர் பஸ் நிலையத்திலே நின்றபோது ஒருவர் தினசரிப்பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார்.

நாலைந்துபேர் அவரைச் சுற்றி நின்றனர். ஜோக் பகுதியை அவர் உரத்து வாசித்தார்.

நம் நாட்டில் சிங்கம் இல்லாத சிங்கராஜ வனமா? அரசியல் – கட்சியொன்று புதிய பாராளுமன்றத்திலே கேள்வியெழுப்பியது.

தீர்மானம் விவாதத்திற்கு விடப்பட்டது. ஒரு வாக்கு வித்தியாசத்திலே சிங்கம் ஒன்றினை சிங்கராஜா வனத்திலே விடுவதாக பாராளுமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முறைப்படி விலை மனுக் கோரப்பட்டது. சிங்கப்பூர் சந்தையில் நிறுவனம் ஒன்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு சிங்கம் இலங்கைக்கு அனுப்பப்பட இருந்த வேளையில் பத்திரிகையாளர் மகாநாடொன்றை அச்சிங்கம் நடத்தியது.

“சிங்கத்தாரே சிங்கத்தாரே நீங்கள் இலங்கைக்குப்போனாலும் உங்களுக்கு ஆலோசகராகப் பணிபுரிய நரியாரைக் கொண்டு போகவில்லையா” என ஒரு பத்திரிகையாளர் கேட்டார்.

கம்பீரமாகச் சிரித்த சிங்கம் “இலங்கையிலே தரமான நரிகள் உள்ளன. மலிவாகவும் வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம். சிங்கப்பூருக்கு வெளிநாட்டுக்குச் செலவாணியில் குறைவு ஏற்படாது” என அது கூறியது.

மற்றொரு பத்திரிகையாளர் “அங்கே பல இனமத நரிகள் உள்ளனவாமே” என்றார். “நான் சகல பாசையும் பேசும் தமிழ் நரி ஒன்றையே தேர்ந்தெடுப்பேன்” எனக் கூறி “நோ மோ குவஸ்சன்” என்று கையசைத்து வாசல்க் கதவை அடைத்துக் கொண்டதாம்.

செய்தியைக் கேட்டவர்கள் விளங்கியும் விளங்காமலும் உரத்துச் சிரித்தனர்.

நமது ரீயூசன் மாஸ்டர் தனக்குத் தொல்லை கொடுத்த உள்ளுர். நரியைப் பற்றி யோசித்தார். அவரது அகன்ற நெற்றியில் நான்கைந்து சுருக்கங்கள் தோற்றின.

– மறுபக்கம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜனவரி 2005, எழுத்தகம் தமிழ் எழுத்தாளர் பேரவை, மட்டக்களப்பு..

Print Friendly, PDF & Email

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

சதிவிரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *