சென்னை. தலைமைச் செயலகம். முதல்வரின் அலுவலகம். 28 வயது இளைஞனை அவன் என்று விளிப்பதுதான் மரபு. ஒரு மாநிலத்தின் முதலவரை அவர் என்று அழைப்பதும் மரபுதான். 28 வயது இளைஞனே முதல்வராக இருக்கும் போது அவரை அவன் என்றழைப்பதைத் தவிர்த்து விடுவோமே…
பணி மேசையில் புதைந்திருந்த கணிப்பொறித் தொடுதிரையில் விரலால் தடவித் தடவி ஏதோ புள்ளி விளக்கங்களை முதல்வர் பார்த்துக் கொண்டிருந்த போது, பக்கத்திலிருந்த இன்னொரு திரையும் உயிர் பெற்றது. அது காட்சித் தொலைபேசியின் திரை. இந்திய நாட்டின் தலைமை அமைச்சரின் முகம் அதில் தோன்றியது.
முதல்வரின் கவன்ம் இந்தத் திரைக்கு மாறியது. “வணக்கம் அய்யா!” என்று சொற்களால் தலைமை அமைச்சருக்கு வணக்கம் கூறியவர், கைகளையும் கூப்பி வணங்கினார்.
முதல்வரின் வணக்கத்தை மெல்லத் தலையசைத்து ஏற்றுக் கொண்ட தலைமை அமைச்சர், கடமைக்காக பதில் வணக்கம் தெரிவித்துவிட்டு, “ஒரு முறை தில்லிக்கு வந்துத் திரும்பிச் செல்லவும்… மிகவும் அவசரச் செய்தி!” என்றார்.
“சரி” என்றபடி முதல்வர் தலையசைக்கவும், தலைமை அமைச்சரின் முகம் மறைந்து திரை அணைந்தது.
உடனே எழுந்த முதல்வர் இடது கை மணிக்கட்டை வாயருகே உயர்த்திக் கையில் கட்டியிருந்த தொலைபேசியைத் தன் குரலாலேயே உயிர்ப்பித்து, “செயலாளரே, வானூர்தியைத் தயார்படுத்து. தில்லிக்குச் செல்லவேண்டும்.” என்றபடி நடக்கத் தொடங்கினார்.
தலைமைச் செயலகத்தின் மொட்டை மாடியில் காத்திருந்தது அந்த ஒலி வேக வானூர்தி.
துணைவர்கள் சிலருடன் முதல்வர் வானில் பறந்தார்.
*****
தில்லி. தலைமையமைச்சர் வீடு. நண்பகல் உணவருந்தியபடியே தமிழக முதலமைச்சரும், இந்தியத் தலைமை அமைச்சரும் பேசிக் கொண்டார்கள்.
“மற்ற எல்லா மாநிலத்துக்காரர்களும் மறுத்து விட்டார்கள். நீயும் என்னைக் கைவிட்டுவிட்டால் என் தலை தப்பாது. அந்த அகதிகளை உங்கள் மாநிலம் ஏற்றுக் கொள்ள எப்படியாவது ஏற்பாடு செய்.” -தலை நரைத்த தலைமை அமைச்சர் கெஞ்சாத குறையாக வேண்டுகோள் விடுத்தார்.
முதல்வரின் முகத்தில் சிறிய புன்னகை தோன்றி மறைந்தது.
“தமிழர்களை உலகம் பல முறை கைவிட்டிருக்கிறது. ஆனால் தமிழர்கள் யாரையும் ஒருபோதும் கைவிட்டதில்லை. அதுபோல் அகதிகளை மறுப்பது எம் பண்பாட்டிலேயே இல்லை. அந்த அகதிகளைத் தமிழ்நாட்டிற்கே அனுப்புங்கள்…”
*****
தமிழ்நாடு.மாலைத் தொலைக்காட்சிச் செய்திகளில் முதலமைச்சரின் வேண்டுகோள் ஒளி(லி)பரப்பாகிக் கொண்டிருந்தது.
“அன்பான தமிழக மக்களே! நிலவு எங்களுக்குச் சொந்தம்…மற்றவர்கள் வெளியேற வேண்டும் என்று கூறி சில நாடுகள் அங்கே கடும் போர் புரிந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிலிருந்து புலம் பெயர்ந்த இந்தியர்கள் மூன்று இலட்சம் பேர் அங்கு வீடுகளையும் சொத்துக்களையும் இழந்து உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி அகதிகளாக நிலவில் தவித்துக் கொண்டிருக்கிறார்களாம்…
அந்த நிலவு தேசத்து அகதிகளை மற்ற மாநிலங்கள் முன் வந்து ஏற்றுக் கொள்ளும் முன்பாக தமிழகம் அவர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ள இருக்கிறது… அகதிகளின் மறுவாழ்வுக்கு உதவி செய்திட அரசுக்கு உதவிகள் செய்திட மக்கள் தாராளமாய் நிதி அளிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்…”