கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,506 
 
 

கிராமத்திற்குச் செல்லும் பேருந்து என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.
கூட்டத்தில் ஏறி, ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டான் செந்தில். அவனருகில் பூக்கூடை, பழக்கூடைகளுடன் ஏறிய பெரியவர்கள் இருவர், தங்கள் காலடியில் அதை பத்திரப்படுத்தி அமர்ந்து கொண்டனர்.
பஸ் கிளம்பியது கூட தெரியாமல் கண்களை மூடினான். மனதில் அப்பா, அம்மாவை பார்க்கப் போகிறோம் என்ற நினைவு குறுகுறுப்புடன் ஓடியது.
பதினைந்து வருட இடைவெளியில், தன்னை அவர்களால் அடையாளம் காண முடியுமா?
“அப்பா… எங்கேப்பா போற… நானும் வர்றேன்…’
ஐந்து வயது மகன் கேட்டபோது, கண்களில் கண்ணீர் நிறைந்தது.
“உங்க தாத்தா, பாட்டியை பார்க்கப் போறேன். அவங்க காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பிறகு, உங்களையெல்லாம் அழைச்சுட்டு போறேன்…’
அவன் சொல்வது புரியாவிட்டாலும், “சரிப்பா… சீக்கிரம் வந்துடுங்க. நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது…’
நிராசை!“செந்தில் கோவிச்சுக்காதே… வந்து சாப்பிடுப்பா. அப்பா உன் நல்லதுக்கு தானே சொல்றாரு. நல்லா படிக்கணும்ன்னு உன்னை கடிஞ்சுக்கிட்டாரு… எழுந்து வாப்பா…’
“இங்க பாரும்மா. அவர் இஷ்டத்துக்கு என்னால ஆட முடியாது. எனக்கு படிப்பு வரலை; அவ்வளவு தான். அதுக்காக தினமும் என்னை, “படி, படி’ன்னு கரிச்சுக் கொட்டறாரு… இது வீடா… கர்மம்…’
“செந்தில்… படிப்புதான் சரியா வரலைன்னு பார்த்தா… ஆத்தோரம் வெட்டிப் பயலுகளோட சேர்ந்து, சீட்டு விளையாடறீயாமே… உன் மனசில் என்னடா நினைச்சுட்டு இருக்கே. உங்கப்பன் சாதாரண விவசாயி… ஞாபகம் வச்சுக்க. காட்டிலேயும், மேட்டிலேயும் கஷ்டப்பட்டுதான் உன்னை படிக்க வைக்கிறேன். ஒரே மகன், படிச்சு நல்ல பேர் எடுப்பேன்னு பார்த்தா… இப்படி பேரை கெடுத்துட்டு நிக்கிறீயே. உனக்கு நல்ல புத்தியே வராதா…’
கோபமாக மகனை பார்த்தார்.
“என்னடா முறைக்கிறே… போ… போயி படிக்கிற வழியைப் பாரு…’
அன்று இரவு, விதை நெல் வாங்க வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு ஓடி விட்டான் செந்தில்.
அப்பா, அம்மா என்ற பாச உணர்வு அற்று, அவர்களை எதிரியாக நினைத்த நாட்கள். வீட்டிலிருந்த பணத்தைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டோமே என்ற குற்ற உணர்வு சிறிதும் இல்லாமல், இளமை திமிரில் திரிந்த நாட்கள்…
இ@தா இன்று கட்டட வேலை கற்று, ஒரு கொத்தனாராக, மனைவி, குழந்தை குடும்பம் என்று வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்க, தன் மகன் வளர, வளர அவனை நல்லவிதமாக படிக்க வைத்து உருவாக்க வேண்டுமே என்று, ஒரு தந்தையாக அவனுடைய எதிர்காலத்தை நினைத்து கவலைப்படும் போது, அவன் மனதில், அவனை பெற்றவர்கள் வந்து போயினர்.
“அஞ்சலை… நான் பாவம் பண்ணினவன். பெத்தவங்களோட அருமை தெரியாம, அவங்களை உதாசீனம் பண்ணி ஓடி வந்தேன். இதோ, இன்னைக்கு இழந்ததை நினைச்சு வருத்தப்படறேன். நான் கிராமத்துக்குப் போறேன் அஞ்சலை. அவங்களைப் பார்த்து, காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டாதான் என் மனசு ஆறும். புள்ளைய பத்திரமா பார்த்துக்க…’
“”பூஞ்சோலைக்கு இரண்டு டிக்கெட் கொடுங்க,” கண் விழித்தான் செந்தில், கண்டக்டர் நின்று கொண்டிருக்க, பக்கத்தில் இருப்பவர் டிக்கெட் வாங்க, செந்திலும் பணத்தை கொடுத்து, “”எனக்கும், பூஞ்சோலைக்கு ஒரு டிக்கெட் கொடுங்க.”
“”தம்பி… நீங்க பூஞ்சோலை கிராமத்துக்குத்தான் வர்றீங்களா?”
“”ஆமாங்க… நீங்க அந்த ஊர்க்காரங்களா… வீட்ல விசேஷமா… பூ, பழக்கூடையோடு போறீங்க?”
“”எங்க வீட்டு விசேஷம் இல்ல தம்பி. ஊர் கூடி விசேஷம் நடத்தறோம். எங்க ஊரு பிள்ளை… ஐ.ஏ.எஸ்., என்னமோ சொல்றாங்க… அதான் கலெக்டருக்கு படிச்சு… தமிழ்நாட்லே இரண்டாவதாக வந்திருக்கு… எங்க கிராமத்துக்கே சந்தோஷமான விஷயம். அதான், அந்தத் தம்பிக்கு பாராட்டு விழா நடத்தணும்ன்னு, எங்க பஞ்சாயத்துத் தலைவர் முடிவு öŒ#து, இன்னைக்கு சாயந்திரம் ஆத்தங்கரையிலே பந்தல் போட்டு, பெரிய விசேஷமாக கொண்டாடறோம்.”
பெருமிதமாக சொல்லும் அவர்களைப் பார்த்தான்.
“”என்னதான் சொல்லு… தங்கப்பன் அதிர்ஷ்டம் செய்தவன்பா. நினைச்ச மாதிரி, புள்ளையை கலெக்டருக்கு படிக்க வச்சுட்டானே.”
“”இருந்தாலும், அதுக்காக அவன் எவ்வளவு சிரமப்பட்டிருப்பான். ஆனா, சந்தோஷமா இருக்கு. நம்ம ஊர்ப் பையன். கலெக்டராக வந்தது, நம்ப எல்லோருக்கும் பெருமை தர்ற விஷயம் தானே.”
அவர்களுக்குள் பேசிக் கொள்ள, தங்கப்பனா… திடுக்கிட்டுப் பார்த்தான்.
தங்கப்பன் அவன் அப்பாவின் பெயராச்சே… அவருக்கு, தான் மட்டும் தானே பிள்ளை. அப்படியானால் அவர்கள் பேசிக் கொள்வது, வேறு யாராவதாக இருக்கும். எது எப்படியிருந்தாலும், சாயந்திரம் கூட்டத்திற்குப் போனால், இதற்கான விடை கிடைத்து விடும்.
பெற்றவர்களைத் தவிக்க விட்டு, ஓடி வந்த என்னை ஏற்றுக் கொள்வார்களா? “அம்மா என் மீது எவ்வளவு பாசம் வச்சிருந்தே… நான் பாவி… என்னை மன்னிச்சிடும்மா!’
மூடிய கண்களில் கண்ணீர் வழிந்தபடி இருந்தது.
அந்தக் கிராமத்து ஜனமே, ஆத்தங்கரைப் பந்தலில் கூடியிருந்தது. ஒவ்வொருவர் முகத்திலும், தங்கள் வீட்டுப் பிள்ளைக்கு பாராட்டு விழா நடத்துவது போல் அவ்வளவு மகிழ்ச்சி.
மாநிறமாக, களையான முகத்துடன் விழா நாயகனான ராமன், அந்த ஊர்ப் பெரியவர்களுக்கு மத்தியில், பவ்யமாக கைகளைக் கட்டியபடி நின்றிருந்தான்.
பஞ்சாயத்துத் தலைவர் பேச ஆரம்பித்தார். “”இங்கு கூடியிருக்கும் நம் கிராமத்து மக்கள் எல்லாருக்கும் வணக்கம். நம்ம ஊர் தம்பி ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதி, தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தில் பாசானது, நம்ப கிராமத்துக்கே பெருமைக்குரிய விஷயம். நம்ம தங்கப்பன் மகன் ராமனை பாராட்டும் விதமாக, இந்த விழா நடக்குது. நம்ப வீட்டுப் பிள்ளையை, நாம் எல்லாரும் நிறைஞ்ச மனசோடு வாழ்த்துவோம்.”
சொன்னவர், ராமனுக்கு மாலை அணிவிக்க, கூட்டத்தின் கைதட்டல் வானைப் பிளந்தது.
பஞ்சாயத்துத் தலைவர் ராமனை பேச அழைக்க, “”ஐயா, நான் இந்த சபையில் பேசறதை விட, எங்கப்பா பேசறதுதான் நல்லா இருக்கும். அவரை மேடைக்கு அழைக்கிறேன். எனக்குக் கிடைக்கிற இந்தப் பாராட்டும், மாலை மரியாதையும் எங்கப்பாவுக்குத்தான் கிடைக்கணும்.”
தளர்ந்து போன உடம்பு, முகத்தின் சுருக்கங்கள் முதுமையை பறை சாற்ற, மேல்சட்டை அணியாது, துண்டால் போர்த்தியபடி நடந்து வரும் தந்தையை, எதிர்கொண்டு சென்று கைபிடித்து அழைத்து வந்தான் ராமன்.
மைக்கை அவர் கையில் கொடுக்க, பரிவோடு தன்னைப் பார்க்கும் ராமனை பார்த்தார்.
“”எல்லாருக்கும் வணக்கங்க. எனக்கு இந்த மாதிரி கூட்டத்தில் பேசிப் பழக்கமில்லை. ஆனா, ரொம்பப் பெருமையா இருக்கு. என் மகன் எனக்கு அந்தச் சிறப்பைத் தேடிக் கொடுத்திருக்கிறான். நான் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். எனக்குப் படிக்கணும்ன்னு ரொம்ப ஆர்வமுங்க. அந்த காலத்தில், எங்கப்பாவுக்கு நிறைய பிள்ளை குட்டிங்க… என்னைப் படிக்க வைக்க முடியலை. ஆனா, என் மகனை படிக்க வச்சு பெரிய ஆபீசராக்கணும்ன்னு கனவு… ஆசை, என் மனதில் இருந்திச்சி…” ஒரு கணம் பேச்சை நிறுத்தியவர், பொங்கி வரும் கண்ணீரை, மேல் துண்டால் துடைத்துக் கொண்டார்.
“”என் ஆசை… நிராசையாப் போச்சு. ஆமாம் உங்களில் நிறையப் பேருக்குத் தெரியும். என் மகன் என் மனசைப் புரிஞ்சுக்காம… வீட்டை விட்டு ஓடிப் போனான். நிலைகுலைந்து போன நானும், என் சம்சாரமும் மகனை தேடி தவிச்சோம். அவன் வரவே இல்லை. மகனை பறிகொடுத்த ஏக்கத்திலே, என் மனைவியும் செத்துப் போனா…
“”ஊரே கூடி நின்னு, என் நிலைமையைப் பார்த்துப் பரிதாபப்பட்டது. ஆனா, என்னை கேலி பேசினவங்களும் அதிலே இருந்தாங்க… “சாதாரண விவசாயி தானே. மகனுக்குப் படிப்பு வராட்டி என்ன… ஏதோ புழைச்சுட்டுப் போகட்டும்ன்னு விடாம, அந்த புள்ளையை படி படின்னு படுத்திவச்சு… வீட்டை விட்டுத் துரத்திட்டான். இப்ப பெண்டாட்டியையும் பறிகொடுத்துட்டு நிக்கிறான்… ம்… இவன் கொடுத்து வச்சது அவ்வளவுதான்…’ ன்னாங்க… என் ஆசை நிராசையாகப் போச்சு. ஆனா, மனசுக்குள் ஒரு வெறி. அந்த நிராசையே என்னை எழுந்து நிக்க வச்சுது. ஆமாங்க. அனாதை இல்லம் தேடி ஓடினேன். ஆதரவில்லாத இந்த ராமனை என் மகனாக சுவீகாரம் பண்ணிக்கிட்டேன். அஞ்சாவது படிச்ச இந்த பாலகன், இந்த அப்பாவை, என் அன்பை, ஆசையைப் புரிஞ்சுக்கிட்டான்.
“”இப்ப, என் மகன் பெரிய படிப்புப் படிச்சு, ஜில்லாவுக்கே கலெக்டராகும் தகுதியைப் பெற்றிருக்கிறான். இந்தக் கூட்டத்திலே, இப்ப நான் பெருமையா சொல்லிக்கிறேன்.
“”பெத்தவங்க என்னைக்குமே, புள்ளைகளுக்கு நல்லதைத் தான் சொல்வாங்க, செய்வாங்கன்னு நம்பிக்கை இல்லாம, எங்களைத் தவிக்கவிட்டு ஓடிப் போனானே… அவன் என் புள்ளை இல்லை. என் மகனாகத் தத்தெடுத்த இந்த ராமன், என் மனசைப் புரிஞ்சுக்கிட்டு, என்னை அவன் அப்பனாக மனப்பூர்வமாக ஏத்துக்கிட்டுப் படிச்சு, முன்னேறி என்னைத் தலை நிமிரச் செய்திருக்கானே, இவன்தான் என் புள்ளை.”
சொன்னவர் கண்ணீர் வழிய ராமனைத் தழுவிக் கொண்டார்.
கூட்டம் கலைந்தது.
“”தம்பி நீங்க பஸ்சிலே எங்க கூட வந்தவருதானே. பூஞ்சோலைக்கு யாரைத் தேடி வந்தீங்க. பார்த்துட்டிங்களா?”
“”யாரையும் பார்க்க வரலை. நான் பத்திரிகையில் வேலை பார்க்கிறேன். இந்தக் கூட்டத்தில் கலந்துக்கிட்டு, அதைப் பத்தி எழுதலாம்ன்னு வந்தேன்.”
“”அப்படியா ரொம்ப சந்தோஷம் தம்பி. நீங்க முதலிலேயே சொல்லியிருந்தா… உங்களை ராமன்கிட்டேயும், அவர் அப்பாக்கிட்டேயும் அறிமுகப்படுத்தி வச்சிருப்போமே.”
“”பரவாயில்லை. நான் வர்றேங்க.”
“”தம்பி, கூட்டத்திலே ராமனோட அப்பா பேசினதைக் கேட்டிங்களா… அதை உங்க பத்திரிகையில எழுதுங்க தம்பி. ஒரு அப்பனோட வேதனை என்னன்னு புள்ளைங்க புரிஞ்சுக்கட்டும். பெத்தவங்க மனசைப் புரிஞ்சுக்காம, வீட்டை விட்டு ஓடிப்போற புள்ளங்க இனியாவது திருந்தட்டும்.”
கண்களில் கண்ணீர் வழிந்தோட பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்தான் செந்தில்.

– மார்ச் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *