நிகழ்வுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 2, 2022
பார்வையிட்டோர்: 3,847 
 
 

(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எதிர்பார்க்கப்பட்டது போலவே நண்பன் அறையில் இல்லை என்று தெரிந்தது. புதிய நாயும், பழைய டிட்டோவும்’ வாலைக் குழைத்து மகிழ்ச்சிக் குரலெழுப்பி அவனைச் சுற்றிச் சுற்றி வந்தன. ஏற்கனவே கொழும்பில் வேலை பார்த்த இரண்டு மூன்று வருடங்களாக அவனுக்கு ‘டிட்டோ ‘வுடன் பழக்கம். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் கொழும்புக்கு வந்தபோதுதான் புதிய நாயுடன் பழக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவனைக் கண்டதும் வள் வள்ளென்று பாய்ந்தது அது. ‘டிட்டோ தான் சமாதானப் படுத்திற்று. அறையால் போகும் போதும் வரும் போதும் மீண்டும் மீண்டும் சிறு முனங்கல்கள். பிறகு அவனையும் தனக்குத் தெரிந்தவர் பட்டியலில் அது சேர்த்துக் கொண்டு விட்டது.

நாய்களின் குரல்களுக்கிடையில் வெளிக் கதவின் அண்மையில் நின்று கதவை தட்டலாமா என்று தயங்கிய கணத்தில், உள்ளில் கிழவிகள் கதைக்கும் சத்தம் கேட் டது. மகிழ்ச்சியுடன் கதவைத் தட்டினான். ‘அறையில் போய் ஒரு wash எடுத்தவுடன் ஒரு ஐந்து நிமிடம் ஆறிவிட்டு மகிந்த விஜயசேகரா’வின் கூட்டத்திற்குப் போக வேணும். கூட்டம் எப்படியும் ஐந்தரை மணியளவில் முடிந்து விடும். பிறகு ‘Alfie Darling’ படம் பார்க்க வேணும். இப்போதே மூன்றரை மணியாகுது’

கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அப்பால் வீட்டுக் காரக் கிழவி “நீங்களோ” என்றாள். என்னை வருமெண்டு ஸ்ரீ சொல்லவில்லையோ” என்றான். “சொன்னவர் தான். அவர் இன்னமும் வேலையாலை வரவில்லையே! என்ன செய்யப் போகிறீர்கள்” என்றாள்.

அவன் தயங்கினான். ஸ்ரீயின் மேல் கோபம் வந்தது. “உதிலை சூட்கேஸை வைச்சிட்டு வேணுமெண்டால் wash எடுங்கோவன். இப்ப நாலுமணிக்கு அவர் வந்திடுவார்”

மற்றக் கிழவி அவனைப் புதினமாகப் பார்த்துக் கொண்டு நின்றாள். ‘அனுதாபப்படுகிறாளா? கர்வப்படுகிறாளா?’

“நாலு மணிக்கு வந்திடுவாரா?” என்றான்.

“ஓம், நாலரை மணிக்கு வந்திடுவர்”

வெளிக் கதவில் மாட்டியிருக்கும் துணி கட்டிய – கறுத்த – அந்த மற்றத் திறப்பால் ஸ்ரீயின் அறையைத் திறக்கலாமென்று அவனுக்குத் தெரியுந்தான். அந்த வீட்டுக்காரக் கிழவியும் அவனை நாலைந்து வருடங்களாக அறிவாள் தான். அந்த மற்றக் கிழவிக்கும் அவன் முகம் பரிச்சயமாகித் தானிருக்கும், என்றாலும் அந்தக் கணங்களில் ஒரு இறுக்கம் இருந்தது. இந்தக் கர்வம் பிடித்தவர்களிடம் பணிய வேண்டாமென்றுபட்டது.

“எப்படி wash எடுப்பது. இரண்டு கிழட்டுச் சனியன் களுக்கு முன்னால் எப்படி உடைமாற்றுவது?”

“சும்மா உதிலை றோட்டுக்குப் போட்டு வாறேன். ஸ்ரீயும் வந்திடுவார்தானே” எதனாலும் பாதிக்கப்படாதவன்

போலத்தான் சொன்னான். அந்தக் கறுத்தத் திறப்பால் ஸ்ரீயின் அறைக் கதவைத் திறக்கலாம் என்பதை அறியாத வன் போலத்தான் சொன்னான்.

அவன் பின்னாலேயே வெளிக் கதவு பூட்டப்பட்டது. நாய்கள் கொஞ்ச தூரம் அவனுடன் வந்தன. ‘மத்தி யான றெயினிலேயே வந்திருக்கலாம். சும்மா எரிந்து விழுந்து அவள் முகம் கறுப்பைக் காணாது தவிர்த்திருக் கலாம்.’

“கடையளுக்குப் புத்தகம் போட்ட அந்த ‘ரிசீற்று’களை எங்கேயப்பா வைச்சனீர்?”

“நீங்கள் தானே வைச்சினீங்கள்”

“இராத்திரியல்லே எடுத்து வைக்கச் சொன்னான் இப்பவே ஐஞ்சே முக்காலாகுது”

“பொறுங்கோ இரண்டு நிமிஷத்திலே எடுத்துத் தாரன்”

“பிறகு எந்த றெயினிலை போறது” அவள் முகம் கறுப்பதாய்…

அவன் அதைத் தவிர்க்க முயல்வதாய்…

கரிபடர்ந்த இந்த முகத்துடனும், கசங்கிய சேட்டுட னும், உடலின் அசதியுடனும் இப்படி அழைக்கழியாமல் இருந்திருக்கலாம்.

கொழும்பு பழையபடியேதான் இருந்தாலும் ஸ்தம் பித்து இருப்பதுபோல ஒரு தோற்றம். அசையும் மனிதர் களை மறந்துவிட்டால் ஒரு ஓவியக் காட்சி போல மங்க லொளியில் நகரம் குளித்துக் கிடந்தது.

‘நல்லவேளை; இராசேஸ்வரியிலை சாப்பிடாமல் பசி யோடை வந்திருந்தால் இன்னும் கஷ்டப்பட்டிருக்க வேணும்.

காலி வீதி நீண்டு தெரிந்தது.

‘வடக்கே திரும்புவோமா? தெற்கே திரும்புவோமா? வடக்கே போனால் ஸ்டேசன் றோட்டாலை போய் ஸ்டே சனிலை ஸ்ரீவரும்வரை காவலிருக்கலாம். தெற்கே போனால் கிருஷ்ணபிள்ளையின் ரூமுக்குப் போகலாம்’

தெற்கே திரும்பினான். மாலை நேரமாகையால் நண்பர் களைச் சந்திக்க வேண்டி வரலாம். சந்தித்தால் சிரிக்க வேணும்; இரண்டொரு வார்த்தை கதைக்க வேண்டி நேர லாம். சில வேளை office வேலைகளைப் பற்றி (அந்த டீச்சரின் conversion செய்தாச்சோ ; இந்த டீச்சரின் pension file க்கு என்ன நடந்தது?) விசாரிப்போர் குறுக்கிடலாம், அவர்கள் கதையை நீட்டி வளர்க்கலாம்.

‘அந்தச் circular கிடைத்ததாஜஸே’

‘இந்த வேலை செய்கிற staff officer சரியில்லை’

‘அந்தக் clerk உம்முடைய கூட்டாளி தானே! அவரிட்டை சொல்லி இதை ஒருக்காச் செய்வித்துத் தாருமன்.

‘புதிதாய் வந்த Director எப்படி?’

நினைவின் அதிருப்தியிலேயே வேகமாய் நடந்தான். வலதுகாற் செருப்பு காலோடு ஒட்டாது இருப்பதுபோலப் பட்டது. ‘செருப்புகளும் அறுந்து போச்சுது! வாங்கியும் கனகாலம் ஆச்சு. ஒரு செருப்புத் தைப்பவனிடம் கொடுத்துத் தைப்பிச்சால் நல்லது, யாழ்ப்பாணத்திலை அந்த அவசரங்களுக்கை இதுகளைக் கவனிக்க ஏலாது. மதிற் கரையில் மெழுகு சீலைப் பந்தலின் கீழ் ஒரு செருப்பு தைப்பவன் எதிர்ப்பட்டான். சுற்றிவர பழைய செருப்புச் சப்பாத்துக்குவியல்; நடுவில் நரைத்த முகத்துடன் அவன் யாரோவொரு, காற்சட்டை போட்ட வயோதியரின் கால் களை – செருப்பைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘இதிலை நிண்டு மினைக்கிடேலாது’

இண்டைக்குச் சனிக்கிழமை, கிருஷ்ணபிள்ளையும் அறையிலை இருக்குதோ தெரியாது. ஆள் கொட்டாஞ் சேனைக்குப் போயிருக்கக்கூடும். சும்மா போய்ப் பார்க்கலா மெண்டாலும் அந்த இரண்டு மூன்று கேற்றுக்களையு மல்லே திறந்து கொண்டு போகணும்?’

அந்தக் கடையருகில் வேறோர் சப்பாத்துத் தைப்ப வன். இல்லை – குடைதைப்பவன். ‘இப்ப கொழும்பிலை மழைகாலம் போலை; இண்டைக்குப் பின்னேரமும் மழை வரும் போலை. இப்ப காலு மணி ஆகப் போகுது மஹிந்த விஜயசேகராவிட்டைப் போகேலாது’

அப்ப என்ன செய்கிறது. இப்ப இராமகிருஷ்ண மிஷனுக்குப் போய்ப் பேப்பர் பார்க்கலாம்’

மீண்டுமோர் செருப்புத் தைப்பவன். கறுத்த வாட்ட சாட்டமான மனிதன். ‘செருப்புகளைத் தைக்கக் குடுப் போமா?’ மூன்று இளம் பெண்கள்; வாளிப்பானவர்கள் மகிழ்ச்சியான முகத்தையுடையவர்கள்; சாரி கட்டியிருப் பவர்கள், பூச்சூடியிருப்பவர்கள்; இவனை ஓரக்கண்ணால் பார்த்துச் செல்பவர்கள்.

“இனியும் செருப்புத்தைப்பவன் எதிர்ப்படுவானா? நான் நினைக்கேலை. வழக்கம் போலவே செருப்புக்களை அப்படியே விட வேண்டியதுதான்.”

இராமகிருஷ்ண மிஷனுக்குத் திரும்பும் முடக்கில், சின்னப் பையனிடமிருந்து போத்தலில் ரீ வாங்கிக் குடிக்கும் பெரிய பையன்; பழைய செருப்புக்களை மூட்டையாகக் கட்டி கிளம்பும் நிலையில் இருந்தான் இவனின் பார்வையைச் சந்தித்து இவனையே பார்த்தான். இவனும் சுற்றுமுற்றும் பார்த்தான். பக்கத்தில் ரிக்ஷோவில் சரிந்து இளைப்பாறும் – காத்திருக்கும் கிழவனைத் தவிர ஆள் நடமாட்டம் உறுத்தவில்லை. இரண்டு கால் செருப்புக்களையும் கழற்றிப் பையன் முன் போட்டான். “அறுந்தது களைப் பார்த்து ஒருக்கால் சரிபண்ணித் தாரும்” அறுந்து தொங்கிய இரண்டொரு நூல்களையும், துருத்திக் கொண்டிருந்த சில தோல் சிலும்பல்களையும் வெட்டியவன், ஒரு தோல்வாரை மீண்டும் கெட்டியாக இனைத்துத் தைக்கத் தொடங்கினான். “இதுக்கு ஆணி அடிச்சாத்தான் நல்லது இப்ப ஆணியெல்லாம் சரியான விலைவிக்குது ஐயா”

இவன் ஒன்றும் பேசவில்லை. வெற்றுக் கால்கள் சுட் டன. மழை பெய்யப் போவதற்கு முந்திய சாய்வு வெய்யி லில் நெற்றியிலும் கன்னத்திலும் வியர்வை முத்துக்கள் அரும்பின. யாரோ இரண்டு பெண்கள் இவன் அரு கால் சென்றது போலத் தெரிந்தது. ஒரு கணத்தில் வியர்வை கலந்த பெண்ணின் மனம் இவனைக் கடந்து சென்றது.

இரண்டு செருப்புக்களையும் இவன் முன்னால் தூக் கிப் போட்டுவிட்டு ஏதோ தேடும் பாவனையில் இருந் தான்பையன்.

“எவ்வளவு வரும்?”

“ஒரு ஐம்பது சதம் தாருங்கோவேன்”

“ஒரு ரூபா ஐம்பது சதமோ” என்றவன் ஒரு ரூபாவைத் தூக்கி அவன் கையில் போட்டான். நடக்கத் தொடங்கியவன் திரும்பி அவனைப் பார்த்தபோது, அவன் சின்னவனிடம் ‘இவனைப் பேயன்’ என்பது போல ஏதோ சொல்ல வாயெடுத்தவன் – இவன் முகத்தைக் கண்டதும் ஒரு நொடி பயந்தவனாகி மீண்டும் பெரிதாகத் தலையாட்டி இவனுக்கு நன்றி தெரிவித்தான்,

‘அவன் கண்களில் தெரிந்தது பயமா? மகிழ்ச்சியா? வியப்பா? ஏளனமா? அல்லது எல்லாம் கலந்த ஒன்றா?’

‘நான் சரியான பேயன்தான்’

இராமகிருஷ்ண மிஷன் வளவில் செழித்து வளர்ந்த அசோக மரங்கள்; ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு அப்பால் இரட்டைக் கவரில் பச்சையாய்ப் படர்ந்து குவிந்திருந்தன. இதைப் பற்றி விசாரிக்க வேனும். எங்கடை வீட்டுக் கேற்றிற்குப் பக்கத்திலை வளர்கிற இரண்டு மரங்களையும் இது போலத்தான் வளர்க்க வேணும். அதுகள் எப்பதான் வளரப்போகுதோ’

மிஷன் வாசிகசாலையில் வழக்கம் போலவே சனக் கூட்டம். தினசரிகள் இருக்கிற நடு மேசையைச் சுற்றிலும் சஞ்சிகைகள் இருக்கிற வலதுபக்க மேசையைச் சுற்றி லும் இருப்போரும் – நிற்போருமாய்ச் சனங்கள்; காத்திருக்கின்ற சனங்கள்; ஆவலாதிப்படுகின்ற சனங்கள் வெற்றுவாய் சப்புகின்ற சனங்கள்.

சமயச்சஞ்சிகைகள் கேட்பாரற்றுக் கிடக்கும் இடது பக்கத்து மேசையின் அருகில் கதிரையில் குந்துகிறான். தர்ம சக்கரம், இராமகிருஷ்ண விஜயம், ஆத்ம ஜோதி, தர்மசக்கரம், இராமகிருஷ்ண விஜயம், பெயர் விளங்காத சிவலிங்கத்தை மையமாகக் கொண்ட வடமொழிச் சஞ் சிகை ஒரு தர்ம சக்கரத்தை எடுத்து விரித்தான் வாழ்க் கையில் கடைபிடிக்கப்பட வேண்டிய பத்து விதிகள் வாசித்தான். அருயையாக இருந்தன; ‘இவற்றை நினை வில் நிறுத்த வேண்டும்! இதன் படியே நடக்க முயல வேண்டும்.’

‘நாலரை மணியாகிவிட்டது’ தர்ம சக்கரத்தைப் பார்ப்பதாக பக்கங்களைத் தட்டிக் கொண்டே சுற்றிலும் நோட்டம் விட்டான். ‘இதுவரை வந்தற்கு ஏதாவதொரு தினசரியையாவது பார்க்க வேணும்; அதற்காக காத்திருக்கும் சனங்களுடன் போட்டி போட வேணும். மூர்க்கத் தனமாக ஆக்கிரமிக்க வேண்டும், மற்றவர்கள் காத் திருப்பதைக் காணாதவனாய்ப் பாவனை செய்ய வேண்டும்.

கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நடு மேசைக்கு நகர்ந்து கொண்டான். ‘ஹிந்து’ இதழொன்றைப் புரட்டினான். விஜயலட்சுமி பண்டிட் இந்திராவுக்கு எதிராக பிரசாரம் செய்து கொண்டிருந்தார். வீரகேசரியின் அசைவுகளிலேயே கண் பதித்திருந்தான். எதிர்பாராமல் அவன் அருகிலேயே வந்து விழுந்தது அது. டபாரென்று ஹிந்துவை மூடி அதை எப்படி எடுப்பது அக்கறையாக ஹிந்து படிப்பதாக பாவனை பண்ணி, இயல்பாகவே அதை மூடி வைத்துவிட்டு வீரகேசரியை எடுக்க வேணும்.

பாவனை பண்ணி தயாராவதற்குள் அது மீண்டும் போய்விட்டது. அவனைப் போலவே எத்தனையோ பேர் அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். சுவருக்குப் பக்கத்தில் இருந்த கதிரையில் வீரகேசரி காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருந்தது; தலை நரைத்திருந்தது. கண்ணாடி போட்டிருந்தது; நிதானமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.

எல்லாக் கண்களும் அதையே துளைப்பதாய்…எல்லோரும் பொறாமை பொங்க அதையே பார்ப்பதாய்…எல்லோரும் மனதில் கறுவிக் கொள்வதாய் எல்லோரும் ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணால் வெறிப்பதாய்….’நானும் அப்படித்தானோ…’

நாலே முக்கால் ஆகிவிட்டது. ஸ்ரீவந்திருக்கக் கூடும்; அறைக்குப் போய் ஒரு சிறு குளிப்புப் போட்டுவிட்டு படம் பார்க்க வேணும். கடவுளேயென்று அதற்குள் மழை வந்திடக் கூடாது !

மனங் கேளாமல் மீண்டும் தினசரிக் காய் சுற்றும் முற்றும் பார்த்தான். மின்விசிறியின் ‘விர்’ சத்தம் கர்ண கடூரமாய் ஒலிக்கும் மௌனத்தில், எல்லோரும் மூர்க்க மாய் இயங்குவதாய் …….. ஒருவரோடொருவர் மோதிக் கொள்ளத் தயார் ஆவதாய்…; யாரை ஆக்கிரமிக்க லாம் என்று குறிபார்ப்பதாய்.

‘நான் யாரையாதல் ஆக்கிரமித்திருக்கிறேனா? நானும் எனது இலக்குகளும் தான் பலராலும் ஆக்கிரமிக்கப் பட்டிருப்பது போல…;

ஆற்றாமையுடன் கிளம்பினான், ஒரு வேகம் வந்து பிடரியைப் பிடித்து உந்தித் தள்ளுவது போலப்பட்டது நாலு ஐம்பது; நாலு ஐம்பத்தைந்து; எங்கேனும் ஒன் றாய்ப் பொட்டாக விழும் மழைத்துளி ; நாலு ஐம்பத் தேழு ; ஸ்ரீயின் அறையிருக்கும் ஒழுங்கைக்கான முடக்கின் திரும்பல்; வீதியின் கரையில் இருக்கும் குடும்பம் ; குழி விழுந்த கண்களை உடைய அவன் ; அவனோடு முரண்டு பிடித்து அழும் மூன்று வயதுக் குழந்தை ; வீதியில் படுத் திருந்து கைக் குழந்தைக்கு பால் கொடுக்கும் அவள் ; அவளின் கறுத்த பெரிய தனம்; நாலு ஐம்பத்தெட்டு : வெளிக் கதவில் தட்டல் ஐந்துமணி.

கிழவியின் சினேகிதியே கதவைத் திறந்தாள்; “ஆள் இன்னும் வரவில்லையே! என்ன செய்யப் போகிறீர்கள்”

கறுத்தத் திறப்பை ஆவலோடு பார்த்தான். ‘திறப்பைக் கொடுத்திட்டு போறேனென்று தானே எழுதினவர்”

“அவர் சொல்லிப் போட்டுத்தான் போனவர். நீங்க தான் வெளியாலை போகப் போறேனெண்டதாலை நான் சொல்லேலை. உந்தத் திறப்பை எடுத்துத் திறவுங்கோ”

“உதுவும் திறக்குமே?” என்று தெரியாதவனாகக் கேட்டான்.

“சிலவேளை திறவாது”

கதவு உடனேயே திறந்து கொண்டது. உள்ளே நின்று அடித்துச் சாத்தினான். ஜன்னல்களை ஒலியெழும்பத் திறந்து விட்டான். உடைகளைக் களைந்தெறிந்தான்… கோடு போட்ட சிவத்தச் சாறத்தைக் கட்டிக் கொண்டு, உடம்பைத் துவாயால் மூடிக்கொண்டு, படாரென்று கதவைத் திறந்து, அருகருகே நின்ற இரண்டு கிழவிகளை யும் உர்ரென்ற முகத்துடன் பார்த்துக் கொண்டு பாத் ரூமுக்கு விரைந்தான்.

தலையில் வார்த்த நீரின் குளிர்ச்சியில் மனத்திலும் ஒரு இதம் தொத்திக் கொண்டது போல ஒரு உணர்ச்சி இரண்டு கிழவிகளும் பாவம் என்று நினைத்தான். இரண்டு கிழவிகளும் பாவமென்று மீண்டும் மீண்டும் நினைத்தான். பாத்ரூமிலிருந்து திரும்புகையில் சகஜபாவத்தில் முகத்தில் புன்முறுவல் காட்ட முயன்றான்.

நேரம் ஐந்தேகாலாகி விட்டது. ‘ஐந்தரை மணிக் காதல் பஸ் ஏறினால் தான் ஆறு மணிக்கு முந்தித் தியேட் டருக்குப் போகலாம்’

கிழவிகளுக்குத் தாங்ஸ் சொல்லி வெளிக் கிளம் பினான். நாய்கள் மூலையில் ஒன்றாகப் படுத்திருந்தன. அடுக்குச் செம்பரத்தைப் பூக்களை யாரோ பறித்து நிலத் தில் போட்டிருந்தார்கள், மழைக்கோலம் வலுத்திருந்தது. மழை வர முந்தியே தியேட்டரடிக்குப் போயிட வேணும்’

பஸ்ஸில் சனம் அதிகம் இல்லை. அலையும் கண்கள் தரிக்கக் கூடியதான வண்ணங்கள் எதுவுமில்லை. இயந்திரமாக ஓடிக் கொண்டிருக்கும் பஸ்ஸிலிருந்து கொள்ளுப் பிட்டித் தரிப்பில் இறங்கி நடக்கத் தொடங்கினான். மழை கட்டாயமாக வரும். படம் முடிந்து திரும்பும் போது மழை பெய்தாலும் பரவாயில்லை. ஏதாவது கட்டிடத்தில் ஒதுங்கியிருந்து தாரை தாரையாக வழியும் மழைத் தண்ணீரை மஞ்சல் வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

தியேட்டரடியிலும் சனக்கூட்டமில்லை. நிலைமை அசாதாரணமானது போலப் பட்டது. ‘மழை வரும் போலிருந்ததால் சனங்கள் வராதிருந்திருக்கலாம்.’ ஒரே யொரு கவுண்டரில் மட்டும் ‘கியூ’ வாலாய் நெளிந்திருந் தது. அந்த வாலில் இவனும் தொத்தினான். இவனுக்குப் பின்னாலும் இரண்டு மூன்று பேராய்…

அது எந்தக் கிளாசுக்குரிய கியூவென்றே இவனுக்குத் தெரியவில்லை. தனக்கு முன்னால் நிற்பவர்களைக் கேட் கலாமென்று எண்ணினான். அதற்கான சிங்கள வார்த் தைகளை மனத்தில் கோர்த்துக் கட்டினான். கியூவின் முன் வரிசையில் சலனம். ‘டிக்கற்’ முடிந்து விட்டதான செய்தி காதில் விழுந்தது. நிராசையுடன் திரும்பினான். ‘இனி என்ன செய்வது? இன்றைய நாளே இப்படி அலைக்கழிப் பாய்… இனி என்ன செய்வது?

கால்கள் கோல் பேஸ் நோக்கி நடந்தன.

பிரக்ஞை அற்றவனைப்போல, பிரக்ஞை உள்ள வனாகவே நடந்தான். எதிர்ப்பட்ட மைதானத்தில் வர்ண விளக்குகளால் காணி வெல்லின் கோலாகலம். ‘இங்கு நின்றால் வர்ணங்களைப் பார்க்கலாம் தான்; எத்தனை வர் ணங்கள் ? சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், ஊதா, சிவப் பில் கோடாய் மஞ்சளில் புள்ளியாய், பச்சையில் கோல மாய் வண்ணங்கள் ; கண்சிமிட்டும் வண்ணங்கள் புன் னகை பூக்கும் வண்ணங்கள்; ஒயிலாய் நடக்கும் வண் ணங்கள்; தங்கச் சங்கிலியைத் தூக்கிப் பல்லால் கடிக்கும் வண்ணங்கள்; சங்குமாலை போட்டிருக்கும் வண்ணங்கள் கனவில் ஆழ்ந்து கவிதையாக்கும் வண்ணங்கள்…ஆனால் எங்கே நிற்கிறது.

அலரி மாளிகை வாசலில் துப்பாக்கியுடன் நிற்கும் போலீஸ்காரர்கள்; தனித்து நடக்கும் இவனையே கவனிப்பதாய்; உற்றுப் பார்ப்பதாய் தங்களுக்குள் குசுகுசுப்பதாய்…இயல்பாய் நடக்க முடியவில்லை. இடதுகை ஆட வலது கையை ஆட்டி நடக்க முடியவில்லை.

பெரிய ஒப்றோய் ஹொட்டலின் தண்ணீர்த் தடாகம். புதிதாய் வளரும் மரங்கள். படபடவென்று விழத் தொடங்கும் பெரிய மழைத் துளிகள். ஓடத் தொடங் கினான். நேராகவே ஓடினான். யாரோவொரு சாறக் காறனும் ஓடிவந்தான். எதிரே வந்த ஒரு கட்டிடத் தாவாரத்தில் நுழைந்து மீண்டும் மிதந்து பெருநடை போட்டான். தெற்கு நோக்கிப் போகும் பஸ்கள் தரிக்கும் ஹோல் பேஸ் பஸ் ஹோல்ற் கூடாரத்தில் நுழைந்து தயங்கினான்.

மழை ஓசையெழப் பலத்து விட்டது. கூடாரத்தில் கும்பல் கூடிவிட்டது. காதல் சார்ந்த ஒரு ஆங்கிலப் பாடலின் கோரஸ் குரலுடன், ஒரு வாலிபப் பட்டாளம் கூடாரத்தில் பிரவேசித்தது. தலைவனாகத் தெரிந்த கறுத்தத் தடியன் தன் தொப்பியை நீட்டி சில்லறைகள் வாங்கத் தொடங்கினான். தயங்கியவர்களிடம் உறு மலுடன் தொப்பி அசைந்து அசைந்து இவன் முன்னால் நீண்ட து. இவன் தலை அசைத்தான். ‘what about you’ உறுமலுடன் மீண்டும் நீண்டது. இவனைப் பயம் பற்றிக் கொண்டது. அவர்களுக்கு கும்பலாக வந்த தலை வளர்த்த கறுத்தத்தடியர்களுக்கு இது ஒரு கௌரவப்பிரச்சினை ஆகி றது போலவும் இவனுக்குப் பட்டது. இவனும் விட்டுக் கொடுக்காமல் (பயத்துடன் தான்) மீண்டும் தலை அசைத் தான்.

“Are you’a thomian”

ஆமெனத் தலையசைத்தான். றோயல் கல்லூரியை வாழ்த்தும் சுலோகங்களுடன் கும்பல் அப்பால் நகர்ந்தது. காற்றின் வீச்சில் மழைச் சாரல் உள்ளே தெறித்தது.

மேலும் உள் நுழைந்து நின்று கொண்டான். முகங்களை வெறிக்கத் தொடங்கினான். ஆணும் பெண்ணுமான இளம் சோடி ஒன்று ; அவன் அவளிடம் சொன்னான். “இந்த ‘மச்சிலை’ சென்தோமஸ் இனிங்ஸாலை வெல்லும்”

மழையில் நனைந்தபடியே ஓடும் வாகனங்களைப் பார்த்துக் கொண்டு நின்றான். மழை நீர் வழியும் தார் வீதியில் – ஒளியைப் பரப்பிக் கொண்டு அப்படியே வழுக் கிக் கொண்டு அவை பறக்கும். முதலில் மஞ்சள் ஒளி யாய்த் தூரத்தில் தெரியத் தொடங்கி பெரிதாகிப் பெரிதாகி பரந்து – அண்மி, அவனைக் கடந்து விரைகையில் பின்னால் சிவந்த ஒளிப் பொட்டாய் நீரில் பிரதி பலித்துக் கொண்டே மறையும்.

கனவுலகம் போன்ற மயக்கில் வீதி விளக்குகளின் ஒளிப் பிரவாகம் ; காலி வீதி நீட்டிற்கு ஒரே வரிசையாய் மின்னும் மஞ்சள் ஒளிப் பொட்டுகள். கண் எதிரில் வீதி யில் திட்டு திட்டாய்த் தேங்கி நிற்கும் நீரில் மஞ்சளாய் சலனப்படும் ஒளிப் பிம்பங்கள் — நிலாத் துண்டுகள் போல; நினைவிருக்கிறதா? ஹரிசீனிவாசனின் ‘நிலாத் துண்டுகள்’

மனதில் மேலோங்கும் சலிப்பு; நினைத்ததொன்றும் நிறைவேறாத சலிப்பு; இன்றைய நாள் இப்படியே அநியா யமாகி விட்டதே என்ற சலிப்பு; பகலில் பயணம் செய்து இளைப்பாறாத அசதி நேரத்திய சலிப்பு; மெலிதாய் உடம் பில் கொதிக்கும் நோய்பற்றிய சலிப்பு.

ஏன் சலிக்க வேணும்? ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒவ் வொரு அர்த்தம் இருக்கும் தானே ! அர்த்தமின்றி ஏதும் நிகழ முடியுமா? அர்த்தம் தெரியாமல் நிகழ்வதெல்லாம் அர்த்தமின்றி நிகழ்ந்ததாகி விடுமா? வீதியில் திட்டுத் திட்டாய் தேங்கி நிற்கும் நீரில் மஞ்சளாய் சலனப்படும் ஒளிப் பிம்பங்கள் – நிலாத் துண்டுகள் போல –

‘என்னையே நான் ஏமாற்ற முடியாது. தோல்விகள் தோல்விகள் தான்; கையாலாகாத்தனங்கள் கையாலா காத்தனங்கள் தான்’

‘எப்படியும் இண்டைக்குப் படம் பார்த்தே ஆக வேண்டும். அறைக்குப் போய் ஸ்ரீயையும் கூட்டிக் கொண்டு வந்து ‘செக்கண்ட் ஷோ’ படம் பார்க்க வேணும்’

பள்ளத்தில் தேங்கி நின்ற மழைநீரில் கால்கள் தோய வும் பஸ் பீலியிலிருந்து வடியும் துளிகள் உடலெங்கும் தெறிக்கவும் ஓடும் பஸ்ஸில் ஏறிக் கொண்டான். பஸ் ஸால் இறங்குவதும், சாப்பிடுவதும், நடப்பதுவும் அரை மயக்க நிகழ்ச்சிகளாக அறைக்கு மீண்டவன் அப்போதும் ஸ்ரீ திரும்பியிருக்காததைக் கண்டான்.

கிழவிகளின் பம்பலும் நாய்களின் பம்பலும் இல்லாத மழைத் தூறலின் இலேசான இரைச்சலில் மனதில் கலியும் ஒரு சோர்வில் படுக்கையில் படுத்தவன், அப்படியே உறங்கிப் போனான்.

– 1978, சாதாரணங்களும் அசாதாரணங்களும், முதற் பதிப்பு: அக்டோபர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *