கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 2,196 
 

1929ல், அதாவது அறுபத்திஇரண்டு ஆண்டுகளுக்கு முன், நானும் பெரியாரும் திருநெல்வேலியில் ஒரு சொற் பொழிவுக்காகச் சென்றிருந்தோம்.

எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த இல்லத்தை நாங்கள் அடைந்ததும், எதிர்பாளர்கள் அன்றைய கூட்டத்தை நடக்கவிடாமல் செய்வதற்காக அச்சடித் திருந்த எதிர்ப்பு நோட்டீசுகள் சிலவற்றைக் கண்டோம். அதில் பெரியார் புராணங்களையெல்லாம் பொய் என்று சொன்னவர். நாத்திகர் – பெரியார். அவரை இன்று நெல்லையில் பேசவிடக் கூடாது. என்றிருந்தது.

கூட்டம் மாலை 6 மணிக்கு என்பது எங்களுக்குத் தெரியும். மணி 6½யும் ஆயிற்று.
எங்களை அழைத்தவர்களும் அங்கே வரவில்லை. ஆகவே, நான் பெரியாரிடம், நாம் பேசாமல் திரும்பிப் போய்விடுவது நல்லது என்றேன். அவரும் சரி என்று இரயில் நிலையத்திற்குப் போக ஏற்பாடு செய்யும்படி சொன்னார். நான் போய் எட்டணாவுக்குப் பேசி ஒரு குதிரை வண்டியைக் கூட்டிவந்தேன்.

வண்டியில் முதலில் என்னை ஏறச் சொல்லிவிட்டுப் வண்டியில் பின் ஏறி அமர்ந்து பெரியார் வண்டிக்காரனிடம் கூட்டம் நடக்கும் இடத்தின் வழியாக இரயிலடிக்குப் போகும்படி சொன்னார். அந்த இடம் , வந்ததும் பெரியார் பார்த்தார். சுமார் ஐநூறு அறுநூறு பேர்கள் அங்கு கூடியிருந்தனர். மேடையில் மேசை நாற்காலிகள் எல்லாம் இல்லை, எங்களை வரவழைத்த ஆட்களும் இல்லை

உடனே பெரியார் வண்டியை நிறுத்தும்படி, சொல்லிக் கீழே இறங்கினார். தனியாகவே போய் மேடையில் ஏறினார். “பொதுமக்களே! நான் உங்கள் முன் இப்போது பேச வரவில்லை. ஒரு உண்மையைச் சொல்லிப் போகவே வந்தேன். புராணங்களைப் பொய் என்று நான் சொன்னதாக என்னை எதிர்த்து நோட்டீசு போட்டிருக்கிறார்கள். அது நான் சொல்லவில்லை.

“சைவப் புராணங்களை எல்லாம் பொய் என்று கண்டு பிடித்துச் சொன்னவர்கள் வைணவப் பண்டிதர்கள். வைணவப் புராணங்ளையெல்லாம் பொய் என்று கண்டு பிடித்துச் சொன்னவர்கள் சைவப் பண்டிதர்கள். இந்த இரண்டு புராணங்களுமே பொய்யாக இருக்குமோ என்று நான் எண்ணியதுண்டு. ஆக, புராணங்களைப் பொய் என்று சொன்னவர்கள் சைவ – வைணவப் பண்டிதர்கள் தான். இதைச் சொல்லிப் போகத் தான் நான் வந்தேன். என்மேல் பழிபோடாதீர்கள்” என்று சொன்னதும் ஒயாமல் கைதட்டி மக்கள் ஆரவாரம் செய்தார்கள், தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டே யிருந்தார் அனைவரும் அமைதியாக இருந்து கேட்டார்கள்.

அந்தக் காலத்தில், பெரியாரும் நானும் சேர்ந்து பிரச்சாரப் பணியில் ஈடுபட்டதில் நடந்த இம்மாதிரி நிகழ்ச்சிகள் பலர் என் நினைவை விட்டு அகலவில்லை.

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *