நான்கு சுருக்கமான (ஆனால் எங்கோ படித்த) கதைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 30, 2022
பார்வையிட்டோர்: 5,206 
 
 

1

அவனை நீதிமன்றத்திற்கு கூட்டி வருகிறார்கள்.

நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார்

அவர்தான் கொலை செய்தார் என்பதற்கான ஆதாரங்களை காவல் துறை சரிவர சமர்ப்பிக்காததால் இவர் விடுதலை செய்யப்படுகிறார்.

ஓரமாய் ஓளிந்து நின்று இந்த தீர்ப்பை கேட்டுக்கொண்டிருந்த நான் சட்டத்தின் முன் நீ தப்பித்து விட்டாலும் இதோ வெளியே வரும்போது உன்னை நானே “முடித்து” விடுகிறேன் முடிவு செய்து காத்திருக்கிறேன்

நெஞ்சை நிமிர்த்தி வருகிறான், அவன் அருகில் அடி வருடிகள் பலர் அவனை சுற்றிக் கொண்டு கூட்டி வருகிறார்கள்.

இதோ என்னை தாண்டி நடக்க போகிறான், குபீரென அந்த கூட்டத்தின் நடுவில் குதித்து அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டு சட்டென கழுத்தையும் பிடித்தேன்.

ஆனால்..!

அவன் எல்லோருக்கும் கையை காட்டியபடி நடந்து கொண்டே இருக்கிறான்.

அப்படியானால் நான் அவன் கழுத்தை பிடித்தது, குத்தியது……

அங்கேயே உட்கார்ந்து அழுகிறேன். என்னை கொன்றுவிட்டு இப்படி “உருவமில்லா அருவமாய்” அலைய விட்டு இதோ..அவன் போய்க் கொண்டிருக்கிறான்.

2.

வழக்கமாய் உணவு உண்ணும் ஓட்டலுக்குள் நுழைந்தேன். கல்லா பெட்டியில் உட்கார்ந்திருந்த முதலாளி அங்கிருந்தே ஒரு இளைஞனை அழைத்து என்னை கவனிக்க சொன்னார். வழக்கமான வாடிக்கையாளர் அல்லவா !

அருகில் வந்த சர்வர் இளைஞனாய் இருந்தான், சுறுசுறுப்பாய் இருந்தான், என்ன சார் வேணும்? மட மடவென நான் கேட்டதை எல்லாம் வேகமாய் கொண்டு வந்து கொடுத்தான். சாப்பிட்டு முடிக்க பில் கொண்டு வந்து கொடுத்தான். பில்லை சோதித்து பார்த்தேன் சரியாக இருந்தது. டிப்ஸ் கொடுத்தேன், வேண்டாம் சார் என்றான், எங்க முதலாளி நல்ல சம்பளம் தர்றாரு சார்.

உடல் சிலிர்த்து விட்டது, தினம் தினம் அவனையே என் டேபிளுக்கு உணவு பரிமாற அழைத்து கொண்டேன். இருந்தாலும் சாப்பிட்ட பில்லை வாங்கி சோதிப்பது தப்பியதில்லை.

தம்பி உன்னை ஆறு மாசமா வாட்ச் பண்ணேன். நல்லபடியடியா நடந்திருக்கே, என் கம்பெனியில உனக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ணிட்டேன். அடுத்த வாரமே வந்து ஜாயின் பண்ணிக்க..

சார் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு நின்றான்.

சாப்பிட்டு முடித்து அவன் கொண்டு வந்த பில்லை வழக்கம்போல் சோதித்தேன்.

எல்லாம் குறைவாக போடப்பட்டிருந்தது

கேள்விக்குறியாய் அவன் முகத்தை பார்க்க கிசு கிசு குரலில் சொன்னான், சார் நான்தான் குறைச்சு சொல்லி பில் போட சொன்னேன். கண்டுக்காம கொண்டு போய் கட்டிடுங்க.

3.

எங்கள் குழுவில் ராமய்யாவையும் அவன் சம்சாரத்தையும்,இரண்டு பேரும் சேர்ந்து பசங்களை உருப்படியாக்காம விட்டுட்டாங்க. இப்படித்தான் பேசிக் கொள்கிறோம்.

அவனுக்கு சாதாரண உத்தியோகம் என்றாலும் அரசு உத்தியோகம். அந்த நகரில் அமைந்திருந்த காலனி ஒன்றில் சுமார் நாற்பது பேர் வரை இருக்கிறோம். எல்லாருமே கிட்டத்தட்ட ஐம்பதை தாண்டியவர்கள்தான். ஏன் பாதிப்பேர் ஓய்வும் பெற்று அந்த காலனியில் வீட்டை கட்டிக்கொண்டு வாழ்க்கையை அமைதியாக கழிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொரு நாளும் தண்ணீர் வரவில்லை, சாக்கடை அடைச்சிடுச்சு, கரண்டு இல்லை, ஆதார், ரேசன், இப்படி பல நூறு பிரச்சினைகளுக்காக அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு பு;லம்பி புலம்பி நிம்மதியை தொலைத்து கொண்டிருப்பவர்கள்தான்.

ராமய்யாவும் அவன் சம்சாரமும் எங்கள் காலனிக்கு வீடு கட்டி வந்து சுமார் இருபத்தி ஐந்து வருடங்கள் ஓடியிருந்தது. இங்கு வரும்போது சிறு குழந்தைகளாக இருந்த அவர்கள் பையனும், பொண்ணும் இன்று வளர்ந்து தனித்தனி குடும்பங்களாக அருகில் வசித்து கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் எல்லோரும் எங்கள் குழந்தைகளுக்காக பெரிய பெரிய காண்வெண்டுகளில் சேர்ப்பதற்கு நடையாய் நடந்து அட்மிஷன் வாங்கி சேர்த்த பொழுது இவர்கள் மட்டும் அங்கிருந்த அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் சேர்த்து ஹாயாக இருந்தனர்.

ஏம்ப்பா அங்க நல்ல கோச்சிங், நிறைய கத்து கொடுக்கறாங்க, இப்படி பலர் பலவிதமாக இவர்களிடம் ஓதியும் இவர்கள் பாட்டுக்கு அடுத்த வேலையை பார்த்து கொண்டிருந்தது பலருக்கு எரிச்சல்.

இந்த எரிச்சல் அவர்கள் இறுதி வகுப்பு படிக்கும் வரை நீடித்து கொண்டுதான் இருந்தது. அவரவர்கள் இஞ்சீனியரிங், மருத்துவம், கம்யூட்டர் என்று பல்வேறு படிப்புகளுக்கு ஆலாய் பறந்து தங்கள் வாரிசுகளுக்கு கல்லூரிகளில் இடம் பிடித்து கொண்டிருக்க, இவர்கள் முதலில் பொண்ணை கலை பிரிவு ஒன்றில் சேர்த்து படிக்க வைத்தனர். உடன் சார்ட்டேண்டு, அது இது என்று படிக்க வைத்து தனியார் கம்பெனியில் ஒரு வேலையிலும் ஒட்ட வைத்துவிட்டனர்.

இதற்கும் அந்த பெண் எங்கள் குழந்தைகளை விட நன்றாக படிக்கும் பெண். இப்படி பண்ணிட்டாங்களே, பணத்தாசை பிடிச்சவங்க, செலவு பண்ணி படிக்க வச்சாத்தான் என்ன? இப்படி எங்களுக்குள் பேசிக்கொள்வோம்.

அடுத்து பையனையும் வாத்தியார் படிப்பில் சேர்த்து ‘எலிமிண்டரி ஸ்கூல்’ ஒன்றில் தொடக்கநிலை வாத்தியாராக சேர்த்து விட்டார்கள். அந்த பையனும் கூட நன்றாக படிக்க கூடியவன், அவனை எல்லாம் படிக்க வைத்தால் மருத்துவராக வரக்கூடியவன். இப்படி எங்களுக்குள் பேசிக்கொண்டாலும் அவனிடம் சொல்வதில்லை. சொல்லி என்ன பிரயோசனம்?

இப்படி வாழ்க்கையை ஓட்டி இருபத்தி ஐந்து வருடங்கள் ஓடி இப்பொழுது எங்கள் குழந்தைகள் எல்லாம் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் நல்ல சம்பளத்தில் உட்கார்ந்து கொண்டார்கள்.

அதற்கு பின் அவர்களை பெரிய பெரிய இடத்தில் கட்டிக்கொடுத்து வெளி நாட்டுக்கு அனுப்பி இன்றைக்கு வருசத்துக்கு ஒரு முறையோ இருமுறையோ எங்களை வந்து எட்டி பார்த்து போவார்கள்.

எங்களுக்கு எப்பொழுதுமே இந்த தம்பதிகளை கண்டால் ஒரு வித கிண்டலும், நக்கலும் செய்ய தவறுவதில்லை. இந்த குழந்தைகள் வாழ்க்கையை கெடுத்துட்டாங்களே.

பாருங்கள் அவர்களுக்கு திருமணம் முடித்தது கூட உள்ளுரில் சாதாரண குடும்பத்தில் சம்பந்தம் செய்து முடித்து விட்டார்கள்.

இப்படி எல்லாமே கஞ்சத்தனமாகவே செய்து பணத்தை சேமித்து என்ன செய்யபோகிறார்கள்? அவனவன் கடன் கிடன் வாங்கியாவது குழந்தைகளை படிக்க வைத்து அமெரிக்கா, ஆப்பிரிக்கா, என்று அனுப்பாமல் ?

இப்பொழுது கூட அவர்கள் எதையும் கண்டு கொள்வதில்லை, வாரம் ஒரு நாள் இரு குழந்தைகளின் வாரிசுகள் இவர்கள் வீட்டில் கூடி கூப்பாடு போட்டும், நேரம் கிடைத்தால் இவர்கள் அவர்களின் வீட்டுக்கு போய் சந்தோசப்பட்டுக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். நல்லதோ கெட்டதோ, எல்லாம் ஒன்று கூடித்தான் இருக்கிறார்கள்.

நாங்கள், இன்றும் கூட அவர்களை கிண்டல் செய்து கொண்டுதான் இருக்கிறோம். பின்னே எங்கள் குழந்தைகள் எல்லாம் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் இருக்கின்றன. ஒரு வருசமோ இரண்டு வருசத்துக்கு ஒரு முறையோ அவர்கள் முகத்தை பார்த்து கொண்டு. நிம்மதியாக காலத்தை கழிப்பதாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

இவர்களை போலவா சுற்றம் உற்றம் எல்லாம் சூழ வாழ்ந்து கொண்டு ……!

4.

பழனி மலை வரைக்கும் போய் இறைவனை தரிசித்து விட்டு வரலாம் என்று நாங்கள் தம்பதி சகிதம் முடிவு செய்தோம்.

நல்ல “டிராவல்ஸ்” இருந்தா சொல்லுப்பா, நம்பிக்கையான டாக்சி வேணும். வயசானவங்கன்னு எங்களை சிக்கல்ல விட்டுட கூடாது, அப்படிப்பட்ட டாக்சியை ஏற்பாடு பண்ணி கொடு, நண்பனிடம் சொல்லி வைத்தேன்.

இருவருமே அறுபதை தாண்டியவர்கள். ஓரளவு குடும்ப பொறுப்புக்களை முடித்து ‘அக்கடா’ என்றிருக்கிறோம்.

நண்பன் போன் செய்தான் நாளை காலை அஞ்சு மணிக்கு டாக்சி ஒண்ணு வரும், நம்பிக்கையான டிரைவர்தான். கிளம்பி போய்ட்டு வாங்க, போனை வைத்து விட்டான்.

சீக்கிரம் எந்திரிச்சு சாதம், டிபன் எல்லாம் ரெடி பண்ணி வச்சுக்கோ, பார்சல் பண்ணிட்டு போயிடலாம். காலையில அஞ்சு மணிக்கு டாக்சி வருதாம், மனைவியிடம் அலாரம் அடிப்பது போல் சொல்லி விட்டேன்.

சொல்லிவிட்டாலும் மனைவிக்கு கூடமாட எல்லா உதவிகளும் செய்தும் கொடுத்தேன்.

காலையில் வீட்டு வாசலில் ஹாரன் சத்தம் கேட்டு வீட்டு கதவை திறந்தேன்.

டாக்சி நின்று கொண்டிருந்தது. டிரைவர் இறங்கி நின்று கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் வணக்கம் சொன்னார்.

வண்டி வந்தாச்சு, ரெடியா? உள் பக்கம் திரும்பி சத்தம் கொடுத்தேன். நான் ரெடி, இந்த இரண்டு பையை எடுத்து கொண்டு போகணும்,

பை இரண்டும் பெரியதாய் இருக்க எனக்கு இதை தூக்கி போக முடியுமா என நான் நினைக்கும் போதே, வெளியில் இருந்து நான் எடுத்துட்டு போகட்டுங்களா? பணிவாய் டிரைவர் கேட்டு நின்றார்.

வாங்க, சொல்லி முடிக்கும் முன் அவரே வந்து இரண்டு பைகளையும் எடுத்து காருக்குள் கொண்டு போய் வைத்தார்.

கார் கிளம்பியது, மெல்ல திரும்பிய டிரைவர் போறதுக்கு முன்னாடி ஈச்சனாரி பிள்ளையாரை பார்த்துட்டு போயிடலாங்களா?

அட ..!உண்மைதானே பிள்ளையாரை பார்த்து விட்டு கிளம்பினால் நல்லது தானே. மனசுக்குள் டிரைவரை பாராட்டிக்கொண்டு சரிப்பா கோயில் கிட்ட காரை நிறுத்துங்க.

காரை நிறுத்தியவர் அவரே சற்று தூரம் சென்று பூஜைக்குரிய பொருட்களை வாங்கி வந்தார்.

நாற்பது நிமிடத்தில் தரிசனம் எல்லாம் முடிந்து வெளியே வந்தோம். பக்கத்தில் இருந்த ஓட்டலுக்கு போய் காப்பி சாப்பிட்டு போகலாம், முடிவு செய்தவர்கள் டிரைவரை அழைத்தோம்.

வேண்டாங்க, பணிவுடன் மறுத்து விட்டார். சரி நாம போயிட்டு வந்துடலாம், உள்ளே நுழைந்து காப்பி குடித்து விட்டு விட்டு வந்தோம்.

பொள்ளாச்சி பக்கம் ரோட்டுல கொஞ்சம் ஒதுங்கி நிறுத்தப்பா, டிபன், சாப்பிடணும், கொண்டு வந்துட்டோம். டிரைவரிடம் சொல்லி விட்டு அப்படியே சாய்ந்து உட்கார்ந்தோம்.

ஒதுங்கி நின்ற காரில் இருவரும் கொண்டு வந்த டிபனை எடுத்து மூன்று இலையாக எடுத்து வைத்தோம். ஓட்டுநரையும் கையை கழுவிட்டு வந்துடுங்க, ஒண்ணா சாப்பிடலாம், அழைத்த போதும் சிரித்து கொண்டே “வேணாங்க”, மறுத்தார்.

நாங்கள் சாப்பிட்டு கொண்டிருந்த போது டிரைவர் இறங்கி கொஞ்ச தூரம் நடந்து செல்வது தெரிந்தது.பத்து நிமிடத்தில் நாங்கள் சாப்பிட்டு முடித்து இறங்கி கை கழுவவும் அவர் திரும்பி வரவும் சரியாக இருந்தது.

பொள்ளாச்சி தாண்டிய பின் உடுமலை போகும் வழியில் சார் இங்க பெருமாள் கோயில் ஒண்ணு இருக்கு சார் அதையும் தரிசிச்சுட்டு போகலாமா? டிரைவர் கேட்கவும் மனைவியின் முகத்தை பார்த்தேன். அவளும் சம்மதமாக தலையாட்ட அந்த கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தோம்.

அதன் பின் பழனி அடிவாரம் போவதற்குள் நான்கைந்து கோயிலுக்கு டிரைவர் கூட்டி சென்றார். அனைத்து இடங்களிலும் நல்லபடியாக தரிசனம் செய்தோம். ஆனால் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. நாங்கள் தரிசனம் செய்ய போகும் போதோ, இல்லை ஓட்டலில் காப்பி சாப்பிட காரை நிறுத்தும் போதோ அவர் இறங்கி மறைவாக எங்கோ சென்று விட்டு வந்ததையும் கண்டோம்.

இரண்டு மூன்று இடங்களில் காப்பி சாப்பிட கூப்பிட்டும் டிரைவர் சாப்பிட மறுத்து விட்டார். அது மட்டுமல்ல கொண்டு வந்த சாப்பாடு கூட வாங்கி சாப்பிட மறுத்து விட்டார்.

எங்கள் இருவருக்கும் தரிசன டிக்கட் வாங்கி, “விஞ்ச்” மூலம் மேலும் கீழும் செல்ல டிக்கட் எல்லாம் வாங்கி வந்து சாமி கும்பிட அனுப்பி வைத்தார்.

அங்கு தரிசனம் எல்லாம் முடிந்து கீழே இறங்கி வர மாலை நான்கு ஆகியிருந்தது.

கீழே டிரைவர் காத்திருந்தார். எங்களை பத்திரமாக கார் இருக்குமிடம் கூட்டி சென்றவர் நல்ல ஓட்டல் கிட்டே நிறுத்தறேன், சாப்பிட்டு வந்துடுங்க, சொன்னவுடன் இருந்த களைப்பில் சரி என்று தலையாட்டினோம்.

ஆனால் ஒண்ணு, நீங்களும் எங்களோட சாப்பிட வர்றதா இருந்தா சாப்பிட போகலாம்.

தயவு செய்து தப்பா நினைச்சுக்காதீங்க, நீங்க சாப்பிட்டுட்டு வாங்க, பலவந்தமாய் மறுத்து விட்டார்.

இரவு எட்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது, வீடு வந்து சேர, எல்லா பைகளையும் எடுத்து வந்து வீட்டுக்குள் வைத்தவர் நான் போலாங்கலா?

எங்கள் இருவருக்குமே அவர் மேல் கோபம், ம்..ம்..தலையாட்டினாலும், பர்சிலிருந்து அவருக்கு தருவதற்காக நான்கைந்து நூறு ரூபாய் தாள்களை நீட்டினேன்.

அதிலிருந்து இரண்டு தாள்களை உருவிக்கொண்டவர், மீதத்தை எங்களிடமே திருப்பி கொடுத்தார்.

வெளியூருக்கு போனா அவங்க கிட்ட இருந்து “இருநூறு” ரூபாய் பேட்டாவா வாங்கிக்கனும்னுங்கறது, எங்க டிராவல்ஸ் ரூல்ஸ்ங்க சார், அது மட்டும் போதும்.

என்னங்க, நாங்க எது கொடுத்தாலும் வாங்கிக்க கூடாதுன்னு அடம் பிடிக்கறீங்க, கிண்டலாய் சொன்னாலும் மனதுக்குள் சுருக்கென உரைக்கட்டும் என்றே சொன்னேன்.

ஒரு நிமிடம் திகைத்தவர், ஏன் அப்படி சொல்றீங்க.

பின்ன என்னங்க, ஒரு காப்பி சாப்பிடறதுக்கு கூட எங்களோட வரக்கூடாதுன்னு நினைக்கறவருகிட்ட என்ன சொல்ல முடியும்? நாங்க கூப்பிட்டா வரமாட்டேங்கறீங்க, ஆனா நீங்க தனியா போய் சாப்பிட்டுட்டு வர்றீங்க, ஏன் எங்களோட சாப்பிட்டா உங்களுக்கு என்ன குறைஞ்சு போயிடும்? சூடாக கேட்டேன்.

சிரித்துகொண்டே சொன்ன டிரைவர் ஏங்க இது என்ன மாசம் தெரியுங்களா?

எங்களுக்கு ரம்சான் மாசம்ங்க, தொழுகறதுக்காக தனியா போயிட்டு வந்தேன். அதனாலதான் உங்களோட நான் வரலை.

அட..ஆமாம் இது நோன்பு இருக்கற மாசம் ஆச்சே, இது கூட தெரியாமல் இவரை தப்பா நினைச்சுட்டோமே,

தப்பா நினைச்சுட்டோம் உங்களை, அசடு வழிந்தோம்.

இருந்தாலும் உங்க மேல எங்களுக்கு கோபம்தான், மனைவி கொஞ்சம் கோபமாய் சொன்னாள்.

திகைத்து நின்றார் என்ன சொல்றீங்க?

பின்னே என்னங்க நீங்க நோன்பு இருக்கறேன்னு சொல்லியிருந்தா நாங்களும் சாமி கும்பிடற வரைக்குமாவது சாப்பிடாம விரதம் இருந்திருப்போமில்லை., சிரித்து கொண்டே சொன்னாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *