நான்காவது கவர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 12, 2022
பார்வையிட்டோர்: 2,762 
 
 

மூன்று கவர்களில் இரண்டைக் கொடுத்துவிட்டேன்; எந்தப் பிரச்னையும் இல்லை. வாங்கிக்கொண்ட ஊழியரின் மெருகேற்றப்படாத கருப்பு கிரானைட் முகத்தில் ஒரு வினாடி ஒளி தோன்றி மறைந்தது. கழுத்தில் தொங்கிய அடையாள அட்டை அவர் பெயர் சாகண்டி வீரய்யா என்று அறிவித்தது.

வீரய்யா உடனடியாக வேலையில் இறங்கினார். ‘பைட்ட கூச்சண்டி, சுப்பாராவ்காரு. பிலுஸ்தானு’ (வெளியில் உட்காருங்கள், சுப்பாராவ் ஸார். கூப்பிடுகிறேன்’). அவர் குரல் உறுமி மேளம் மாதிரி ஒலித்தது.

மூன்றாவது கவரை எடுத்துத் தயக்கத்துடன் காண்பித்தேன். ‘அது இணை ஆணையர் அய்யாவுக்கு,’ என்றார் கண்டிப்பு தொனிக்கும் உருமலில். ‘அதை நீங்களேதான் கொடுக்கணும். இவர் பழைய அதிகாரி மாதிரி இல்லை, ரொம்ப கண்டிப்பு… சரி, பைட்ட கூச்சண்டி, நேனு செப்தானு’ (வெளியில் போய் உட்காருங்க. நான் சொல்றேன், அப்ப போகலாம்).

வெளியில் சென்று உட்கார்ந்தேன்.

எனக்கு லஞ்சம் கொடுக்கத் தெரியாது. கொள்கை என்று ஒன்றுமில்லை; கொடுத்துப் பழக்கமில்லை, அவ்வளவுதான். வாழ்க்கையில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளாமலேயே நான் ஐம்பது வயதைக் கடந்துவிட்டேன். நான் ஓர் ஆங்கில ஆசிரியர். நல்லபெயர் வாங்கிய ஆசிரியர்தான். ஆனால், சரளமாக ஒன்றிரண்டு நிமிடம் ஆங்கிலத்தில் பேசுவதற்குக்கூட நான் பழகிக்கொள்ளவில்லை; தட்டுத்தடுமாறிதான் பேசுவேன். வகுப்பறையிலும் ஆங்கிலத்தைத் தெலுங்கில் சொல்லித்தரவேண்டியிருப்பதால், ஆங்கிலம் பேசுவதில் எனக்குப் பயிற்சி இல்லாமல் போய்விட்டது. இங்கிலீஷை விடுங்கள்; எனக்கு ஸ்கூட்டர் ஓட்டக்கூடத் தெரியாது. சைக்கிள் ஓட்டுவேன். பஸ்ஸிலோ, சைக்கிளிலோ, நடந்தோதான் எல்லா இடங்களுக்கும் போய்வருகிறேன்.

நான் கிராமமா, நகரமா என்று சொல்லமுடியாத ஓர் இரண்டுங்கெட்டான் ஊரில் அரசாங்க மானியம் பெரும் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர். திடீரென்று அரசாங்கம் ஆசிரியர்களின் பணிச்சுமையை அதிகரித்ததால், நான் பணிபுரிந்துவந்த தனியார் பள்ளியில் ஏழு ஆசிரியர்களுக்குப் பணியிடம் இல்லாமல் போய்விட்டது; அந்த ஏழுபேர்களில் நானும் ஒருவன். அதிகப்படியான ஆசிரியர்களை, பணியிடங்கள் காலியிருக்கும் அரசு உதவி பெரும் வேறு தனியார் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்தார்கள். என்னை கிருஷ்ணா மாவட்டத்திலிருந்து கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாபிகொண்டாலு என்ற இடத்துக்குத் தூக்கியடித்தார்கள். இதற்கிடையில் ஆசிரியர்களுக்கு ஊதியத் திருத்தம் வந்துவிட்டது. இடமாற்றம் என்பதால் எங்கள் ஏழுபேருடைய ஊதிய நிர்ணயத்தையும் கண்டுகொள்ளவில்லை. ‘உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் டிரான்ஸஃபர் ஆர்டர்ஸ் வரலாம். புதிய பள்ளிகளுக்குப் போனபிறகு ஊதிய மாற்றத்துக்கு விண்ணப்பியுங்கள்,’ என்று ஆசிரியர் சங்கக் காரியதரிசி கண்டிப்பாகச் சொல்லவிட்டார். புதிய பள்ளியிலும் நான் போவதற்கு முன்பே எல்லோருக்கும் ஊதியத்திருத்தம் முடிந்துவிட்டதால், என் ஊதிய வீச்சை மாற்றி அமைக்கும் வேலையை நானே செய்யவேண்டியதாகிவிட்டது.. ஊதிய நிர்ணயம் குறித்த காகிதங்களை எடுத்துக்கொண்டு பயணப்படகில் கோதாவரி நதியைக் கடந்து, பின்பு நான்கு மணிநேரம் பேருந்தில் பயணம் செய்து இந்தப் பள்ளிக்கல்வி இணை ஆணையர் அலுவலகத்துக்கு வந்திருக்கிறேன். இங்கு வேலை முடிந்தபிறகு இன்னும் சில காகிதங்களையும் சேர்த்து எடுத்துக்கொண்டு அரசாங்கக் கருவூலத்துக்குச் செல்லவேண்டுமாம். இவையெல்லாம் நான் இதுவரை பார்த்திராத இடங்கள். இதெல்லாம் போதாதென்று அகண்ட கோதாவரிமீது படகோட்டம்! பிரவாகமாக ஓடும் அந்த நதியில் இன்னும் எத்தனை முறை படகில் பயணம் செய்யவேண்டுமோ!

ஊதிய நிர்ணயம் காகிதங்களில் கையெழுத்துப் போட்டுக்கொண்டே கேட்டார் என் பள்ளி முதல்வர், ‘கவர்ன்மென்ட் ஆஃபீஸுங்கள்ள ஒரு அனுகூலம் என்ன தெரியுமா, சுப்பாராவ்?’

நான் பரிதாபமாக அவரைப் பார்த்தேன்.

‘பணத்தைக் கொடுத்தா வேல முடிஞ்சுடும். டக்குனு முடிஞ்சுடும்.’

‘எனக்கு அனுபவம் இல்லே, ஸார்.’

‘அட, போய்யா, லஞ்சம் கொடுக்கறதுக்குப் பெரிய அனுபவம் வேணுமா? ரங்காகிட்ட போ. அவன் ஏற்பாடு பண்ணுவான்.’ ரங்கா என்று அழைக்கப்படும் ரங்கபாபு ஆசிரியர் சங்கத்தின் காரியதரிசி.

என் புலம்பலைக்கேட்டு ரங்கபாபுவுக்குக் கோவம் வந்துவிட்டது. ‘சுப்பாராவ்காரு, உங்க வாழ்க்கையில உங்களுக்கு இதுவரைக்கும் கவர்ன்மென்ட் ஆஃபீஸுங்களுக்குப் போகவேண்டிய அவசியமே வரலியா?’ என்று எரிச்சலுடன் கேட்டார்.

‘போயிருக்கேன். ஆனா, இந்தமாதிரி விவகாரமெல்லாம் யாராவது கூடவரவங்க பாத்துப்பாங்க. கையெழுத்துக்குக் கூப்பிடுவாங்க. அப்ப உள்ள போவேன்.’

‘நல்ல மனுஷரய்யா நீர்! சரி, இது ஒண்ணும் பெரிய விஷயம் கிடையாது. ஆஃபீஸருக்குப் பத்தாயிரம் குடுங்க. நாங்கள்ளாம் அவ்வளவுதான் குடுத்தோம். இப்ப யாரோ புதுசா வந்திருக்கிறாராம். யாராயிருந்தாலும் பத்தாயிரத்துக்குமேல குடுக்கவாண்டாம்; அப்புறம் கெட்ட வழக்கமாயிடும். சூப்பரின்டெண்டன்ட், க்ளார்க்கு இவங்க ரெண்டுபேருக்கும் தலா ரெண்டாயிரத்து ஐநூறு. குமாஸ்தா பேரு வீரய்யா. கருப்பா, குண்டா இருப்பான். நல்ல பையன். அவனுக்கு நான் ஃபோன்பண்ணி சொல்லிடறேன். அர்த்தமாயிந்தா? (புரிஞ்சிதா)?’

‘வந்து…’

‘இன்னும் என்ன, ஸார்? சொல்லுங்க, மென்னு முழுங்கவேண்டாம்.’

‘இல்லே, பணத்த கையிலியே குடுத்துடலாமா? ஒண்ணும் பிரச்சினை…’

‘வெள்ளித் தாம்பாளத்தில வெத்தல பாக்கு பழம் வெச்சுக் கும்பிட்டுக் குடுக்கறது! சுப்பாராவ்காரு, கோவிச்சுக்காதீங்க, நீங்க என்னைவிடப் பெரியவர். இதெல்லாம்கூடவா சொல்லிக்குடுக்க முடியும்? சமயோஜிதமா நடந்துக்குங்க, ஸார் … ஆல் ரைட், இப்படிச் செய்யுங்களேன். மூடு கவர் தீஸ்கோண்டி. பத்தாயிரத்துக்கு ஒண்ணு. மிச்ச ரெண்டு கவர்லேயும் தலா ரெண்டாயிரத்து ஐநூறு. கவரைக் குடுங்க. பணத்தை எப்படிக் குடுத்தாலும் சந்தோஷமா வாங்கிப்பானுங்க.’

‘தாங்க்ஸண்டி,’ நான் குழப்பத்துடன் தலையாட்டினேன்.

***

‘ஸார்… மாஸ்ட்ராரு… ஏமண்டி, சுப்பாராவ்காரு…’

உறுமல் சத்தம் கேட்டு நான் திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்தேன். வீரய்யா சிரித்தபடி எதிரில் நின்றுகொண்டிருந்தார். கருப்பு கிரானைட் பின்னணியில் பற்கள் பளீரென்று ஒளிர்ந்தன.

‘என்ன, தூக்கமா? நல்ல ஆள், ஸார், நீங்க.’

‘இல்லை… ஏதோ சிந்தனை.’

‘சரி, இப்ப நீங்க ஆஃபிஸரைப் போய்ப் பாக்கலாம். ஃபைல் அவருக்குப் போயாச்சு. நாங்களும் பேசிட்டோம்.’

கண்காளிப்பாளரின் அறையைத்தாண்டி ஒரு நடைக்கூடம் சென்றது. கூடத்தின் இறுதியில் மேலதிகாரியின் அறை. அறைக்கு வெளியே உதவியாளர் ஒருவர் அரைத்தூக்கத்தில் இருந்தார். வீரய்யா அவரை எழுப்பி ஏதோ சொன்னார். அவர் உள்ளே போய்விட்டு வந்து, போகலாம் என்று எனக்கு ஜாடை காண்பித்தார்.

கதவைப் பாதித்திறந்து தயங்கி நின்றேன். ஏ. சி. காற்று சில்லென்று முகத்தில் அடித்தது.

‘நமஸ்காரம், ஸார்… நேனு…’

‘கமின், மிஸ்டர் சுப்பாராவ். டேக் எ ஸீட்.’

‘பரவாயில்ல, ஸார். நிக்கறேன்.’

அவர் வற்புறுத்தவில்லை. ஃபைலில் கவனம் செலுத்தினார்.

அவர் நல்ல உயரம்; உட்கார்ந்த நிலையிலும் என் உயரத்துக்குமேல் இருந்தார். நல்ல சிவப்பு வேறு. முக அமைப்பு, தோல் நிறம், ஒலியலை எழுச்சி தாழ்வுடன் கூடிய ஆங்கில உச்சரிப்பு இவையெல்லாம் அவர் வெள்ளைக்கார துரையோ என்று சந்தேகப்பட வைத்தது. என் இரண்டு கைகளும் தன்னிச்சையாக ஒன்று சேர்ந்துகொள்ள, நான் பயபக்தியுடன் அவரைப் பார்த்தேன். இவர் கவர் வாங்குவாரா? பார்த்தால் அப்படித் தெரியவில்லையே! இவரிடம் கவரைக் கொடுக்கும் தைர்யம் எனக்கு இருக்கிறதா?

அதிகாரி கோப்பிலிருந்து நிமிர்ந்து என்னைப் பார்த்தார். என் உடல் இன்னும் குறுகியது.

‘ஸோ, மிஸ்டர் சுப்பாராவ், சம்பளத்தில் இருபதாயிரம் ரூபாய் கூடுகிறது, இல்லையா?’ இதையும் அவரது அசையழுத்தத்தோடு கூடிய ஆங்கிலத்தில்தான் கேட்டார்.

‘ஆமாம், ஸார்.’

‘நல்லது. இங்கிலீஷ் வாத்தியார்தானே நீங்க? நல்லா ப்ரிபேர் பண்ணி குழந்தைகளுக்கு நல்லா சொல்லிக்கொடுக்கணும், என்ன?’

‘கட்டாயமா, ஸார்.’

அவர் குனிந்து கையொப்பமிட்டார். ஆல் ரைட், நீங்க போகலாம்.’

நான் தயங்கி நின்றேன்.

‘என்ன?’

நாக்கு அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. சமாளித்துக்கொண்டு அவர் முகத்தைப் பார்க்காமலேயே கால் சட்டைப்பையிலிருந்து உதறலுடன் கவரை எடுத்து மேஜைமேல் வைத்தேன்.

‘வாட்ஸ் திஸ்?’

‘ஒண்ணுமில்லை, ஸார்…’

‘ஒண்ணுமில்லாததை இங்கே கொண்டுவந்து வைப்பானேன்?’

எச்சிலை விழுங்கி, தைரியத்தைத் திரட்டிக்கொண்டு சொன்னேன், ‘அதில்லை, ஸார், கோவிச்சுக்கக்கூடாது, பெரியவங்ககிட்ட வெறுங்கையோட போகக்கூடாது இல்லையா, அதான்…’

‘ஸம்ப்ரதாயமாக்கும்?’

‘கரெக்ட், சார்.’

‘ஓ, வெரி வெல், தென், மிஸ்டர் சுப்பாராவ். ஆல் த பெஸ்ட்.’ முகமலர்ச்சியுடன் சொன்னார்.

‘தேங்க் யூ, ஸார்.’ கைகளைக் கூப்பி பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் வெளியில் வந்தேன். என்ன ஒரு பெரியமனிதத் தன்மை! இந்தமாதிரியெல்லாம் நமக்குப் பேச வருமா! யாருக்குதான் பேச வரும்?

ஒருமணி நேரம் காத்திருந்து ஒப்புதல் ஆணையைக் கையோடு வாங்கிக்கொண்டு போகச்சொன்னார் வீரய்யா. வெளியில்போய் உட்கார்ந்தேன். பத்து நிமிடம் கழித்து அவர் வெளியில் வந்தார். என்ன இது, அதற்குள் முடிந்துவிட்டதா? இல்லை, அவர் தன்பின்னால் வரச்சொல்லிக் கையசைத்தார். பின்தொடர்ந்தேன். வெளியில் வேப்பமரத்தடியில் யாரும் இல்லை. அங்கு சென்று நின்றார்..

‘அய்யாவுக்கு எவ்வளவு குடுத்தீங்க?’ உறுமி மேளம் கோபத்துடன் ஒலித்தது.

எனக்கு திக்கென்றது. ‘என் ஏதாவது பிரச்னையா?’

‘அதெல்லாம் ஒண்ணுமில்ல. எந்தா இச்சாரு, செப்பண்டி’

‘பத்து.’

‘தப்பு. பதினைஞ்சு குடுத்திருக்கணும்.’

‘ரங்கபாபு பத்துதான் கொடுக்கச்சொன்னாரு.’

‘அது பழைய ஆஃபிஸர் ரேட்டு, மாஸ்ட்ராரு. இவரு பதினைஞ்சுக்குக் கொறஞ்சு வாங்கமாட்டாரு.’

‘ஆனா, அய்யா இத வாங்கறதுக்கே இஷ்டப்படல. எவ்வளவு கஷ்டப்பட்டு குடுத்தேன் தெரியுமா?’

‘க்கும், உமக்கு ரொம்பத் தெரியும்! இஷ்டப்படாததான் மேல அஞ்சு கேக்கறாரா?’ சொல்லிவிட்டு சிரித்தார். அது ஏதோ மிருகம் உறுமுவது மாதிரி கேட்டது.

‘அவரு உங்களைக் கூப்பிட்டுச் சொன்னாரா?’

வீரய்யா தலையசைத்தார்.

‘இங்கிலீஷ்ல சொன்னாரா?’

அவர் என்னை விநோதமாகப் பார்த்தார். ‘இங்கிலீஷ்ல எதுக்கு சொல்லணும்? தெலுங்குல சொன்னா குடுக்கமாட்டீங்களா?’ உறுமல் ஒலி கொஞ்சம் உரத்து ஒலித்தது. எதிரே பெட்டிக்கடையில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த இருவர் எங்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.

‘அய்யய்யோ, என்னென்னமோ சொல்றீங்களே, வீரய்யகாரு! நான் அப்படியா சொன்னேன்? ஆனா, எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.’

கால்சட்டைப்பையிலுருந்து பணப்பையை எடுத்து பத்து ஐநூறு ரூபாய் நோட்டுக்களை வெளியில் எடுத்தேன். ‘ஆனா, எங்கிட்ட கவர் இல்லையே!’

கிரானைட் முகம் கேள்விக்குறியானது. ‘கவரா? இங்க்லீஷு, கவரு, இதெல்லாம் என்னது? கவர் எதுக்கு இப்ப?’

‘பணத்த வெச்சுக் குடுக்கறத்துக்கு.’

‘கௌரவமா வெச்சுக் குடுக்கறதுக்கா?’

நான் தலையாட்டினேன்.

வீரய்யா நெற்றியில் அறைந்துகொள்வது மாதிரி பாவனை செய்தார். பிறகு கால்சட்டைப்பையிலிருந்து நான் காலையில் கொடுத்திருந்த கவரை வெளியில் எடுத்தார். அதிலிருந்த ஐநூறு ரூபாய் நோட்டுக்களை அலக்ஷியமாக வெளியிலெடுத்து சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டு, காலி கவரை என்னிடம் நீட்டினார். கிரானைட் முகத்தில் இகழ்ச்சி நெளிந்தது. ‘இந்தாங்க கவர். போட்டுக் கொண்டுபோய்க் குடுங்க’.

– நன்றி: http://puthu.thinnai.com, 19 April 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *