கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 7,228 
 

அன்று ஞாயிற்றுக் கிழமை. சுந்தருக்குக் கல்லூரி கிடையாது.காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு பொழுது போகாமல் டீவியில் நல்ல நிகழ்ச்சிகள் எதுவுமில்லாதிருந்தாலும் விடாமல் ஒவ்வொரு செனலாகப் புரட்டிக் கொண்டிருந்தான் அவனுக்குப் பிடித்தது ஏதாவது கிடைக்குமாவென்ற நப்பாசையில்.அவன் என்னதான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாலும் அவனது ஆங்கில மொழியறிவு போதுமானதாக இல்லை அதனால் அவன் தந்தை தினமும் கொஞ்ச நேரமாவது ஆங்கில தினசரியைப் படிக்கும் படியும் முக்கியமாக தலையங்கம் ,கட்டுரைகள் போன்றவைகளைக் கட்டாயம் படிக்க வேண்டுமென்பார். அவனுக்கோ ஆங்கிலம் வேப்பங்காய்.அன்று வந்த தினசரி பிரிக்கப் படாமல் கிடந்தது. அதுவும் ஞாயிறு தினசரி என்பதால் கூடுதல் தாள்களும் சேர்ந்து குப்பையாகக் கிடந்தது. பொழுது போகாமல் கஷ்டப் படும் பொழுது கூட தினசரியைப் புரட்ட விரும்பாமலிருந்தான் சுந்தர்.

அவன் அம்மா அடிக்கடி புலம்புவாள். இப்படி தினசரி வாங்கி யாரும் படிக்காமலிருப்பதற்கு ஏதாவது நல்ல தமிழ் தினசரியை வாங்கினால் நானாவது படிப்பேன் என்று. ஆனால் அவனப்பா அதைக் காதில் போட்டுக் கொள்ளவே மாட்டார். அவருக்கொரு நம்பிக்கை. “எறும்பூறக் கல்லும் தேயும்” என்பது போல் தினசரியை தினமும் பார்ப்பதால் என்றாவது அவனாக புரட்டத் தொடங்க மாட்டானாவென்று. அவர் பின்னால் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். எதிலுமே விருப்பமில்லாமல் சினிமா மோகம் பிடித்து அலைகிறானே என்று அவனைப் பற்றிய கவலை அவரை பிச்சுத் தின்று கொண்டிருந்தது.

வாசலில் சார்! என்று யாரோ கூப்பிடும் சத்தம் கேட்க சுந்தர் போய் எட்டிப் பார்த்தான். எதிர்த்த வீட்டுத் தாத்தா நின்றிருந்தார். அவருக்கு ப் பேச ஆளே கிடைக்காது. அவர் பெரிய ரம்பம் என்று எல்லோரும் அவரைக் கண்டாலே தூர ஓடுவார்கள் சுந்தரின் அப்பா மட்டும் விதி விலக்கு. பேசுவதை பொறுமையாகக் கேட்டுக் கொண்டு தலையை ஆட்டி க் கொண்டிருப்பார்.வயதானவர் அவர், மனதைப் புண்படுத்தக் கூடாது. அவர் நிறைய விஷயங்களை படித்துவிட்டோ அல்லது கேட்டுவிட்டோ வந்து தான் பேசுகிறார். சில சமயம் திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைப் பேசுவார். பொறுத்துக்கத்தான் வேண்டும் என்பார் சுந்தரின் அப்பா. ஆனால் சுந்தருக்கு சுத்தமாக தாத்தாவைப் பிடிக்காது. அதில் ஆச்சரியப்படஏதுமில்லை.பிடித்தால்தான் ஆச்சரியப்படனும்.வாசல் கதவைத் திறந்து கொண்டே அப்பா பின்னால் தோட்டத்தில் வேலையாக இருக்கிறார் என்றான் சுந்தர். பின்னாலிருந்து ஏதேச்சையாக முன் பக்கம் வந்து கொண்டிருந்த சுந்தரின் அப்பா தாத்தாவைப் பார்த்து விட விடு விடு என்று வந்து அவரை உள்ளே அழைத்தார். சுந்தர் டீவியை வேண்டா வெறுப்பாக அணைத்துவிட்டு அடுத்த அறைக்கு ச் சென்றான்.

தாத்தா சுந்தரின் அப்பாவிடம் அன்று காலை தனக்கேற்பட்ட கசப்பான அனுபவத்தை விவரிக்க ஆரம்பித்தார்.

அவர் காலையில் சுசீந்திரம் கோவிலுக்குச் சென்றிருந்தாராம் திரும்பி வரும் பொழுது பஸ்ஸில் நல்ல கூட்டமிருந்தததாம் இடம் கிடைக்காமல் நின்றே பயணம் செய்ய வேண்டி வந்ததாம் டிக்கெட் எடுக்க கண்டெக்டரிடம் பத்து ரூபாய்த் தாளை நீட்டினாராம் கண்டெக்டரும் கூட்டத்தில் டிக்கெட் போட சிரமப்பட்டார் என்றும் தாத்தாவிடம் பத்து ரூபாயைப் பெற்றுக் கொண்ட கண்டெக்டர் டிக்கெட்டையும் மீதி சில்லறையையும் தாத்தாவின் கையில் திணித்தததாகவும் சொன்னார்

“ரோடுகள் இருக்ற அழகில பஸ் ஒரே குலுங்கல். நின்னுண்டு பயணம் பண்ணுவதே சிரமமாக இருக்கும் பொழுது கண்டெக்டர் கொடுத்த சில்லறையையா சரி பார்க்க முடியும் ? பஸ்ஸ விட்டு இறங்கினப்றம் மீதிச் சில்லறையை சரி பார்த்தா ஒரு ரூபாய் குறைகிறது. இரண்டு ரூபாய்க்கும் ஒரு ரூபாய்க்கும் வித்தியாசமில்லாததினால குழப்பம்.” என்றார்.

மேலும் சொன்னார்:

“கண்டெக்டர் ஒன்னும் ஏமாத்தல. அரசாங்கம் மக்கள ஏமாத்தறது.” இப்பொழுதுள்ள ஆட்சியாளர்களும் மெத்தப்படித்த அதிகாரிகளும்தானே அரசாங்கம். அந்தக் காலத்து ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் படிக்காத பாமர மக்களையும், வயதான, பார்வை குறை உள்ளவர்களையும் கருத்தில் கொண்டு பல் வேறு வடிவங்களில் நாணயங்களைத் தயார் செய்து புழக்கத்தில் விட்டார்கள். அதனால் பார்வையற்றவன் கூட நாணயங்களைத் தடவிப் பார்த்து அதன் மதிப்பைச் சொல்லிவிடுவன். ஆனால் இப்பொழுதுள்ள அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் தாங்களே எழுதப் படிக்க கற்றுக் கொண்டு விட்டோமே தங்களை விட கீழானவர்கள் இருக்க மாட்டார்கள் என்று எண்ணி விட்டார்களோ என்னவோ எனக்குத் தெரியாது. ஓரே வடிவத்தில் நாணயங்களை வடிவமைத்து அதில் ஒன்று இரண்டு என்று போட்டு விட்டார்கள். அதிலுள்ள நடைமுறை சிக்கல்களைப் பற்றி சிந்திக்கத் தெரியாமல் ஏதோ மக்களின் வரிப் பணத்தை மிச்சப் படுத்தி விட்டதாக தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்ளும் அறிவீலிகள். இதனால் ஏழை பாழைகள் எவ்வளவு நஷ்டப்படுகிறார்கள் என்று காணத் தெரியாத கபோதிகள். கண்ணிருந்தும் காணத் தெரியாதவர்கள் அல்லது காண விரும்பாதவர்களும் கபோதிகள் என்றுதானே அழைக்கப் பட வேண்டும். இப்போழுது ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் பெரிய மதிப்பில்லாமல் இருக்கலாம். இன்றும் எத்தனையோ வயதான ஏழைகள் உழைத்து வாழ வேண்டும் என்ற நல்ல கொள்கையுடன் சாலையோரங்களில் சிறு சிறு வியாபாரங்கள் செய்து பிழைக்கின்றார்கள். அரசாங்கம் வெளியிடும் இந்த நாணயங்களால அவர்கள் படும் துன்பங்களும் நஷ்டங்களும் சொல்லி மாளாது” என்று புலம்பினார்.அதிலிருந்த உண்மை புரிந்ததாலும் அவரே அனுபவப்பட்டிருந்ததாலும் சுந்தரின் அப்பாவிற்கு வலித்தது. தாத்தா கொஞ்ச நேரம் மற்ற லோக விஷயங்கள் பேசிவிட்டுப் புறப்பட்டார்.

அவர் போனதுதான் தாமதம் சுந்தர் மீண்டும் ஹாலுக்கு வந்து டீவியை ஒளிரச் செய்தான்.சிறிது நேரத்தில் அவன் அம்மா சாப்பிட அழைக்கவே சாப்பிட்டுவிட்டு மாடி அறையில் படுக்கப் போய்விட்டான். எழுந்து வந்து முகம் கழுவி காப்பி குடிக்கும் பொழுது ” டேய் சுந்தர்! அப்பா ஏதோ ஆபிஸிலிருந்து போன் வந்து அவசரமாக மதுரை புறப்பட்டுப் போய்விட்டார்டா. திரும்பி வர மூனு நாலு நாளாகுமென்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அவரிருந்தால் ஞாயிறு தோறும் சாயந்திரம் சந்தைக்குப் போய் ஒரு வாரத்திற்கு த் தேவையான காய்கறி, பழங்கள் அனைத்தையும் வாங்கி வந்து விடுவர் என்பது உனக்கும் தெரியுமே. அவர் திடீரென்று வெளியூர் போக வேண்டியதாகி விட்டது. ஆத்தில் காய்கறி ஒன்றும் இல்லை. நீ செத்த சந்தைக்குப் போய் கொஞ்சம் காய்கறி வாங்கி வாயேன் என்றாள்.

போம்மா! எனக்கு அதெல்லாம் பழக்கமில்லை. நீ பக்கத்துக் கடையில வாங்கி சமாளி எனக்கு வேறு வேலையிருக்கிறது என்றான்.

டேய்! பக்கத்துக் கடையில யானை விலை குதிரைவிலை சொல்லுவாண்டா.காய்கறிகளும் சொத்தையாகவும் வாடியும் இருக்கும் என் ராஜால்ல! கொஞ்சம் போய் வாங்கிண்டு வாடா என்று கெஞ்சினாள்.

ஸ்கூட்டர் இருக்கா? என்றான். இல்லையென்றால் அதைச் சாக்காக வைத்து சந்தைக்குப் போகாமல் ஓய்த்து விடலாம் நண்பர்களுடன் வெட்டிப் பேச்சுப் பேசி பொழுதைக் கழிக்கலாம் என்பது அவன் நினைப்பு. சுந்தரின் அம்மா பை, ரூபாய், ஸ்கூட்டர் சாவி மூன்றையும் அவன் கையில் கொடுத்து போய் வா! என்றாள். வேறு வழியில்லாமல் முனகிக் கொண்டே போனான் சுந்தர். அவன் போனதும் அந்தப் புண்ணியவதி நினைத்துப் பார்த்தாள். அவன் காலையிலிருந்து முதுகொடிய செய்த வேலையும், இனிமேல் செய்யப் போற வேலையும் என்ன என்று. நண்பர்களுடன் தெருவில் நின்று அரடடை அடிப்பது. இதை வேலை யென்று சொல்கிறான் என்று சலித்துக் கொண்டாள்.

உழுது பயிரிடும் பொழுது சோம்பி இருந்து விட்டு அறுவடைக்கு அரிவாளைத் தூக்கிக் கொண்டு போய் எனக்கொன்றும் கிடைக்கலையே. மற்றவர்களெல்லாம் அதிர்ஷ்ட சாலிகள் என்று புலம்புகின்ற ஜாதி இதுகளெல்லாம் என்று தோன்றிறு அவளுக்கு
அவள் மேலும் யோசித்தாள்.

எவ்வளவு குழந்தைகள் வீட்டின் நிலையறிந்து பொறுப்பாகவுமிருந்து நன்கு படிக்கவும் செய்கிறது, ஏன் சிலதுகள் பொறுப்பற்று ஊர் சுற்றிகளாக இருக்கிறது. குழந்தை வளர்ப்பு சரியில்லை என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் உலகறிவு படிப்பறிவு இல்லாத அனைவரது குழந்தைகளும் உதவாக்கரைகளாக இருக்க வேண்டாமா. ஆனால் உண்மையில் அப்படியில்லையே. அரகுறப் படிப்போட உள்ள நமக்கே குழந்தை வளர்ப்பு பற்றி எதுவும் தெரியாமல் இருக்கும் பொழுது உலக அறிவும் படிப்பறிவும் இல்லாத பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு பற்றி என்ன தெரிந்திருக்க முடியும்? ஆனால அப்படிப்பட்ட சூழ் நிலையில் வளரும் எத்தனையோ குழந்தைகள் குடும்பத்திலும் பொறுப்பாக இருந்து கொண்டு நன்கு படித்து முன்னுக்கு வரவும் செய்கிறார்கள்தானே நம் கண்களுக்குப் புலப்படாத சக்தி தான் காரணமாக இருக்க முடியும் என்றுஅவளுக்கு த் திண்ணமாகத் தோன்றியது. அந்த சக்தியிடம் தொடர்ந்து தன் பிள்ளைக்கும் நல்ல புத்தியை கொடுக்கும் படி தினம் தினம் வேண்டுகிறாள். வேறு என்ன செய்யமுடியும் அந்தப் பேதையால்.

சுந்தர் சந்தையில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு ஸ்கூட்டரை எடுக்க வரும் வழியில் நடை பாதையில் ஒரு பாட்டி முருங்கைக் காய் விற்றுக் கொண்டிருந்தாள். சுந்தரைப் பார்த்ததும் “தம்பி! மூனு முருங்கக் காய் ஐந்து ரூபாய்தான். நல்ல பிஞ்சுக் காய் வாங்கிப் போயேன்” என்றாள். காய்கள் நன்றாக இருந்தது. சுந்தர் மூனு காய்களைப் பொறுக்கி எடுத்து க் கொண்டு பாட்டியிடம் ஒரு பத்து ருபாய்த் தாளை நீட்டினான். “இன்னும் மூனு காய் எடுத்துக் கொள்ளேன்” என்றாள் பாட்டி. “வேண்டாம் பாட்டி!. மூனு போதும். பாக்கியைக் கொடு” என்றான். பாட்டி தன் சுருக்குப் பையைத் திறந்து ஒவ்வொரு நாணயமாக எடுத்து சுந்தரிடம் கொடுத்தாள். சுந்தர் வாங்கிய பாக்கியை சரி பார்த்தால் ஏழு ரூபாய் இருந்தது. “என்ன பாட்டி? கூடுதல் காய் வாங்கலைன்னு விலையக் குறைச்சுட்டியா?” என்று கிண்டலாகக் கேட்டான். பாட்டிக்கு சுந்தரின் பேச்சுப் புரியவில்லை. “நான் ஐந்து ரூபாய் சரியாத்தானே தந்திருக்கேன்” என்றாள். “இல்ல பாட்டி! நீ தந்ததுல. ஏழு ரூபாய் இருக்கு. நீ ஒரு ருபாய் என்று நினைத்து தந்ததெல்லாம் இரண்டு ரூபாய் துட்டு சில்லறையை நல்லா சரி பார்த்துக் கொடு. இல்லைனா நீ இந்த வேகாத வெயிலில் கஷ்டப் படறதுக்கு ஒன்னும் மிஞ்சாது “என்று சொல்லி விட்டு பாட்டியிடம் ஒரு இரண்டு ரூபாய் துட்டையும் திரும்பக் கொடுத்துவிட்டு வீட்டிற்கு ப் புறப்பட்டான். “கண்ணு பத்தல! என்ன செய்ய.! நீ மகராசனா இருக்கனும்” என்று ஆசிர்வதித்தாள் பாட்டி

சுந்தருக்கு க் காலையில் தாத்தா அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்த விஷயத்தின் உண்மைகள் புரிய நெஞ்சு வலித்தது.ஆடசியாளர்க்ள், அதிகாரிகள் மீது சொல்லோண்ணாக் கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. சுந்தரின் வாய் அவர்களைத் திட்ட வண்டியை எடுக்கப் போய்க் கொண்டிருந்தான் சுந்தர்.

எதிர்த்த வீட்டுத் தாத்தா எதிர்பாராத விதமாக அச்சமயம் அந்த இடத்திற்கு வந்திருந்ததால் சற்றுத் தள்ளி நின்று சுந்தருக்கும் பாட்டிக்கும் நடந்த உரையாடல்களை உற்று கவனித்துக் கொண்டிருந்தார். அவருக்கு சுந்தரின் நேர்மை, இரக்க சிந்தனை, ஆட்சியாளர்களிடம் உள்ள் அலட்சியத்துடன் கூடிய பொறுப்பற்ற போக்கின் மீது ஏற்பட்ட நியாயமான கோபம் எல்லாம் ரொம்பப் பிடித்திருந்தது.

மகாத்மா காந்தி யை யோ, ராஜாஜி யையோ, அம்பேத்காரையோ,வவுசியையோ எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களெல்லாம் வக்கீல் தொழில் படித்தவர்கள். அவர்களுக்கிருந்த அறிவுக்கும் திறமைக்கும் சுய நலத்துடன் அவர்கள் தொழிலில் நன்றாகச் சம்பாதித்து பணக்காரர்களாக வாழ்ந்துவிட்டுப் போயிருக்கலாம். ஆனால்அவர்கள் தங்களின் வாழ்க்கையையே பொது நலத்திற்காக அர்ப்பணித்து இளமைக் காலத்தில் போராட்டத்திலும் ஜெயிலிலும் வாழ்க்கையைக் கழித்து நல்ல தலைவர்களாக மக்களை வழி நடத்தினார்கள்.

தற்பொழுது தரங்கெட்டவர்கள் சுய நலத்துக்காக அரசியலைக் கையிலெடுத்துக் கொண்டாலும் நல்லவர்களும் அரசியலில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஓட்டுரிமையைப் பணத்திற்கு விற்கவும் உழைக்காமல் “இனாம்” என்ற பெயரில் அரசாங்கத்திடமிருந்து பிச்சை வாங்கி சோம்பித் திரியும் சுய கௌரவமில்லாத மக்கள் கூட்டத்தில் தரங்கெட்டவர்களின் கை ஓங்கியதால் தற்பொழுது அரசியல் சாக்கடையாகிவிட்டது. தரங்கெட்ட அரசியல் வாதிகளும் தங்களைத் தட்டிக் கேட்க யாருமில்லை என்ற ஆணவத்தில் அவர்களின் சொந்த நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு மக்களின் வரிப் பணத்தை சூறையாடி ஊதிப் பெருக்கிறார்கள்.

இளைஞர்களுக்கு பயமிருக்காது. ஆனால் அவர்களின் பெற்றோர்கள் ” நீ ஒன்னும் நாட்டைத் திருத்தறென்னு சாக்கடையில் போய் விழாதே. நன்னாப் படிச்சு அமெரிக்காவுக்குப் போய் பணம் சம்பாதிக்கப் பார். பணமிருந்தால் தான் வாழ்க்கை” என்று சுயநல சிந்தனையை மட்டுமே வளர்க்கின்றார்கள். படித்து நேர்மையாக வாழ ஆசைப் படுபவர்களே பணம் தான் வாழ்ககைக்கு முக்கியம் என்று எண்ணும் பொழுது தரங்கெட்ட மனிதர்கள் அரசியலை பணத்தைக் கொள்ளையடிக்கும் முதல் போடாத வியாபாரத் தளமாக நினைப்பதில் என்ன தவறிருக்க முடியும் ஊழல் பெருகி அரசியல் சாக்கடையாகிவிட்டது.

தற்பொழுது எல்லொரும் சொல்வதுபோல் அரசியல் சாக்கடையாகவே இருக்கட்டும். அந்தச் சாக்கடையை சாக்கடை நீரை வைத்தே சுத்தம் செய்ய முடியுமா? நல்ல நீரை வைத்துத் தானே சாக்கடையைச் சுத்தம் செய்து துர் நாற்றத்தைப் போக்க முடியும். தரங்கெட்டவர்களின் அராஜகத்தைக் கண்டு பயந்து நல்லவர்கள் வாய்மூடிகளாக இருக்கிறார்கள். இளைஞர்களை வைத்து அவர்களின் கைகளை வலுப் படுத்தி அந்த நல்லவர்களுக்கு த் தோன்றி விட்ட தரங்கெட்டவர்களைப் பற்றிய பயங்களைப் போக்க வேண்டும். அதற்கு சுந்தர் போன்ற இளைஞர்கள் சுய நலத்தை துறந்து அணி அணியாக வர வேண்டும். அவர்களிலிருந்து நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும். இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் தரங்கெட்ட அரசியல்வாதிகளிடமிருந்து விடுதலை கிடைக்க வேண்டும்.

சுந்தர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவன் நண்பர்களுடன் தெருவில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நல்லவைகளை எடுத்துச் சொல்லி இள்ஞர்களை ஊக்கப் படுத்த வேண்டுமென தீர்மானித்துக் கொண்டு தாத்தாவும் வீட்டைப் பார்த்து நடை போட ஆரம்பித்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *