நல்ல காரியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 2, 2020
பார்வையிட்டோர்: 4,684 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

உலகம் மிகவும் பயங்கரமானது நண்பரே, மிகவும் பயங்கரமானது.

“வாழ்க்கை மிக மிகக் கொடியது நண்பரே, மிக மிகக் கொடியது”.

ஒவ்வொருவரும் எத்தனையோ தடவைகள் சொல்லி விட்ட, அல்லது ஒரு தடவையாவது சொல்ல விரும்புகிற அல்லது சொல்லியே தீரக்கூடிய இந்த வார்த் தைகளை இப்பொழுது தான் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையென எடுத்துக்கொண்டு “ஆர்க்கிமிடீஸின் பேரன் மாதிரி நான் ஓலமிடத் துணிந்திருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டியதில்லை.

பம்பாயிலிருந்து எனது நண்பர் ஒருவர் எனக்கு எழுதியுள்ள கடிதம் இப்படி ஆரம்பமாகிறது.

எனக்கு எப்பொழுதாவது மிகவும் சுவையான கடிதங்கள் வருவது உண்டு. பம்பாய் நண்பர் எழுதியுள்ள கடிதம் வெறும் கடிதமாக இல்லை. அதைப் படித்து நான் பெற்ற இன்பத்தை இவ் வையகமும் பெறட்டுமே என்ற நல்லெண்ணத்தோடு கடிதத்தை இங்கே தருகிறேன்.
“வாழ்க்கையை, அது காட்டும் உண்மைகளை ஆராய்ந்து. உணர அவாவுகின்ற மாணவன் நான் என்று நீங்கள் பல இடங்களில் எழுதியிருக்கிறீர்கள். அதனால் தான் நான் உங்களுக்கு இவ் விஷயம் பற்றி விரிவாகவே எழுதத் துணிகிறேன்.

“அகல்யாவைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது. இந்திரனோடு காமப் புது மண மதுவின் தேறல் ஒக்க உடன் உண்டிருந்து” பின்னர் “நெஞ்சினால் பிழை இலாள்” என்ற ஸர்டிபிகேட் பெற்று பத்தினிமார் பட்டியலிலே அழியாத இடம் பெற்று விட்டாளே தாடி முனியின் இளம் மனைவி, அவளைப் பற்றி நான் இங்கே குறிப்பிட வில்லை என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். நான் இங்கு அறிமுகம் செய்ய விரும்புவது இரட்டைச் சடைக்காரி, ஐடெக்ஸ் விழிக்காரி, லிப்ஸ்டிக் இதழ்க்காரி, க்யூட் கைகாரி ஹைஹீல்டு ஷூக்காரி ஒருத்தியைத்தான்.

“நண்பரே, உங்களோடு போட்டியிட்டு ஒரு கதாசிரியனாக மாறும் எண்ணம் எனக்குக் கிடையவே கிடையாது. ஜோராக வர்ணனை பண்ணுவதில் ஈடுபட்டு விட்டேனே என்றால், பெண்ணைப் பற்றி எண்ணப் புகழ்ந்தால் யாருக்குத் தான் குஷி கிளம்பாது? அதிலும், அகல்யா இருக்கின்றாளே…

“ஹல்லோ மிஸ்டர் வனா, கானா, நீங்கள் ஏன் ஒரு தடவை பம்பாய் பக்கம் வரக்கூடாது? தென்னாட்டிலிருந்து யார் யார் எல்லாமோ இங்கே வந்து போகிறார்கள்; நீங்கள் ஏன் வருவது பற்றி ஒருவரிகூட எழுதுவதில்லை? இங்கு வந்தால் நீங்கள் எவ்வளவோ அற்புதங்களைப் பார்க்க முடியுமே.. சென்னையின் மூலையில் கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாட்டின் அருகே ஒரு தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டு நீங்கள் பம்பாய் போன்ற மாபெரும் நகரத்தைக் கற்பனையினால் கூட பிடித்து அடைத்துவிட முடியாது. பம்பாயை அறிய வேண்டுமானால் நீங்கள் இங்கு வந்து கேம்ப் போட்டுத்தான் ஆக வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் வாழ்க்கையைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் மேலும் எவ்வளவோ கற்றுக் கொள்ள முடியும். நீங்கள் கற்கக்கூடிய பாடங்களுக்கு ஒரு சிறு சாம்பிள் மாதிரி இருக்கட்டுமே என்பதனால் தான் அகல்யாவைப் பற்றி எழுதுகிறேன்.

“அகல்யா-“

அவளை சோகத்தின் திரு உருவம் என்பதா? வைராக்யத்தின் வஜ்ர பிம்பம் என்பதா? சமூகம் சமூகம் என்கிறார்களே, அந்த உருவமற்ற இதயமற்ற மொந்தையின் கண்ணற்ற மூஞ்சியில் கரியை அள்ளிப் பூசத் துணிந்த வீர வடிவம் என்பதா? நண்பரே, எப்படி அழைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே அவள் பெண்களில் பெரும்பாலோர் செய்யத் துணியாத ஒரு காரியத்தைச் சாதித்து முடித்த ஒரு பெண் என்று சொல்லி வைக்கிறேன்…..

நல்ல காரியம் ‘ஒரு நாள் நானும், பம்பாய் நண்பர்களில் எனக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டையும்” சைக்கிளில் போய்க்கொண்டிருந்தோம்.

“இந்தக் கொழுக்கட்டை இருக்கிறானே, அவன் ரொம்பவும் ஜாலி பிரதர். அவன் பெயர் வேறு. இந்தி பேசுகிறவன் தான். அவனுக்கு தமிழ் நாட்டுக் கொழுக்கட்டை மீது அபாரமான காதல் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் “கொழுக்கட்டை இருக்குதா? கொழுக்கட்டை இருக்குதா?” என்று பறப்பான். ஆகவே, எங்கள் வீட்டில் கொழுக்கட்டை டிபன் செய்கிற தினங்களில் எல்லாம் அவனை நான் விருந்துக்கு அழைப்பது உண்டு என்பது “சொல்லாமலே பெறப்படும்” என்கிற இலக்கணத்துக்கு உட்படும் ஒரு விவகாரம் என்க….

அவனும் நானும் வீதி வழியே போய்க் கொண்டிருந்தோமா? அப்போ என்ன ஆச்சுது? வீதியின் ஓரமாக ஒரு பெண் நடந்து போனாள். வேகம் வேகமாக நடந்து கொண்டிருந்தாள். என் நண்பன் கொழுக்கட்டை அழகு ரசிகன். கோகுலத்துக் கண்ணனையும் அர்ஜுனனையும் வியந்து பாராட்டி விழுந்து கும்பிட்டு, ஓரளவுக்காவது பின்பற்றத் துடிக்கிற மகாரசிகன். அவன் சைக்கிளை வேகமாக மிதித்து முன்னேறிப் போனான். கொஞ்ச தூரம் போய்விட்டு மறுபடியும் திரும்பி வந்தான். அந்த இரட்டைச் சடைக்காரியின் பின்னழகைப் பார்த்து வியந்த கண்கள் அவளது முன்னழகைக் கண்டு களிக்காமல் இருக்கலாமா? அதற்காகத்தான். ஒரு தடவை பார்த்தவனுக்கு ஏதோ சந்தேகம் வந்துவிடவே, இரண்டாவது தடவையாக முன் சென்று. கீழிறங்கி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்து வந்தான். அவளை நன்றாகக் கவனித்தபடி நடந்தான்.

அவள் அவனை ஒரு தடவை தலைநிமிர்ந்து பார்த்தாள். பிறகு அவனை லட்சியம் செய்யாமல், கம்பீர நடை போடும் அராபிக் குதிரை மாதிரி, மிடுக்காக நடந்து சென்றாள். அவள் கையில் சில புத்தகங்கள் இருந்தன. எனவே அவள் கல்லூரி மாணவியாக இருக்கலாம் என்று பட்டது.

“கொழுக்கட்டை என் அருகில் வந்ததும், “என் மூளையை சலவைக்குத் தான் போடணும்!” என்று அலுத்துக்கொண்டான். “அழுக்கேறி ரொம்பவும் தடித்து விட்டதாக்கும்?” என்று கேட்டேன். “மறதி, மறதி, மறதி. அதைச் செருப்பில் அடிக்க!” என்று அவன் குமைந்தான். “என்னப்பா விஷயம்? இந்தப் பெண்ணைப் பார்த்த பிறகு உனக்கு ஏன் இப்படி ஒரு ஞானோதயம் ஏற்பட்டது?” என்று விசாரித்தேன்.

“இவளை இதற்கு முன்பு எங்கோ பார்த்திருக்கிறேன். வேறு எங்கோ பார்த்திருக்கிறேன். எங்கே என்று ஞாபகம் வரமாட்டேன் என்கிறதே!” என அங்கலாய்த்தான் அவன்.

“இவள் காலேஜ் படிக்கிறவள் என்று தெரியுது. அதனாலே, காலேஜ் முன்போ, ரஸ்தாவிலோ, சினிமா தியேட்டரிலோ நீ பார்த்திருக்கலாம். நீ தான் அங்கிங்கெனாதபடி எங்கும் ஆஜராகிவிடும் ஆனந்தன் ஆயிற்றே!” என்று நான் சொன்னேன்.

“இடியட், உளராதே! ஸீரியஸ் விஷயம்”.

“ஓகோ, காதலா ! கண்ட உடனேயே அட்ராக்ஷன் தானாக்கும்? என்றேன். அவன் எரிந்து விழுந்ததைப் பார்க்கவும், உண்மையிலேயே ஏதோ ஸீரியஸ் விஷயம் தான் என்று நான் ஊகித்துக் கொண்டேன். அப்புறம் நான் அவனைக் கேலி பண்ணவில்லை.

“அந்தப் பெண் ஆகா – அழகு சுந்தரி ஓகோ ஓய்யாரி என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். சராசரி உருவம் ஒரு தடவை பார்த்தால் ஒன்பது தடவை பார்க்கும் ஆசையையோ, “ஒன்பது இன்ட்டு ஒன்பது ” தடவை எண்ணி எண்ணி ஏங்கவைக்கும் துடிப்பையோ தூண்ட முடியாத ‘ஆவரேஜ்கர்ள்’. வயசு என்ன, 20, 21 இருக்கலாம். அவள் குள்ளியும் அல்ல; நெட்டச்சியும் அல்ல. தடிச்சியுமல்ல; ஒல்லிச்சியுமல்ல. சகல அம்சங்களிலும் “சராசரி ரகம்” தான். அவளுடைய ஆடை அலங்காரத்திலோ, நடை ஒய்யாரத்திலோ அப்படி ஏதாவது அதிவிசேடத் தன்மை இருந்தது கொல் என்று கேட்டாலோ, அது ஒரு எழவுமில்லை. ஆகவே, கொழுக்கட்டையின் ரசனை உணர்வு மீது எனக்கே சந்தேகம் ஏற்படத் தொடங்கியது.

அதன் பிறகு அந்த யுவதியை நான் சில தடவைகள் அதே பாதையில் காண நேர்ந்தது. அதன் மூலம் மகத்தான ஒரு உண்மையை நான் புரிந்து கொள்ள முடிந்தது. (நான் புரிந்துகொண்டது மகோமகா உண்மையின் ஒரு துணுக்கு தான் என்பது பின்னர் எனக்கு வெட்ட வெளிச்சமாயிற்று. இப்போதைக்கு இது தூங்குக) அந்தப் பெண் கல்லூரிக்கு நடந்தே போனாள். வீட்டுக்குத் திரும்புகிற போதும் நடைதான். அவள் வீட்டுக்கும் கல்லூரிக்கும் இரண்டு மைல் தூரம் இருக்கலாம். அவள் மழை என்று பயப்படுவதில்லை. வெயில் என்றும் தயங்குவதில்லை. நடப்பதில் இன்பம் காண்பவள் போலும். அவள் நடக்கவில்லை. எங்கோ ஏதோ பறிபோவது போல, அல்லது எதையோ பறி கொடுத்துவிட்டுப் பதறி ஓடுகிறவள் போல், வேகம் வேகமாக நடந்தாள். ஆகவே, பஸ்ஸுக்குக் கொடுக்க அவளிடம் காசு கிடையாது என்று எண்ண வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

‘இரண்டு வார காலம் எனது நண்பன் கொழுக்கட்டையை நான் சந்திக்க முடியவில்லை. மறுமுறை அவனைப் பார்த்த பொழுது அவனாகவே அந்தப் பெண்ணைப் பற்றிய பேச்சைத் தொடங்கினான். அவள் மற்ற நவயுவதிகளைப் போன்றவள் அல்லள். அவள் சினிமாவுக்குப் போவதே இல்லை. பணத்தைப் பிடுங்குவதற்காக ஏற்பட்ட எந்த இடத்தின் அருகிலும் அவள் செல்வதில்லை. உல்லாச உணவு விடுதிகளுக்கும் அவள் போவதில்லை.

“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிந்தது” என்று நான் அவனைக் கேட்டேன்.

அவனோ தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தான்: “நான் அவளை முன்பு எங்கோ பார்த்திருப்பதாக நினைக்கிறேன் என்று சொன்னேன் அல்லவா? அது எந்த இடம் என்பது எனக்குத் தெரிந்து விட்டது. பம்பாய் நகரத்தின் “சிகப்பு விளக்குப் பிராந்தியத்தில் தான். உடலின் உணர்வுப் பசியால் தவிப்பவர்களுக்கு தங்கள் உடல்களை வாடகைக்கு விட்டுத் தமது பணத்தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் பெண்கள் வசிக்கிற வட்டாரத்திலே தான்.” அங்குள்ள விபசார விடுதி ஒன்றிலே தான் அவன் அவளைக் கண்டான்.

“முதலில் என்னால் இதை நம்பமுடியவில்லை . எப்படி ஐயா நம்பமுடியும்?” தான் உண்டு, தன் படிப்பு உண்டு என்ற கொள்கை உடையவள் போல தினந்தோறும் கல்லூரிக்குப் போய் வருகிற ஒரு இளம் பெண்ணை , “மெய் வருத்தம் பாரார். பசி நோக்கார்” என்ற தன்மையில் “கருமமே கண்ணாகி” இயங்கிய நவயுவதியை இரவு நேரத்தில் விபசார விடுதியில் “தொழில் செய்யும் ஆளாகக் கண்டேன் என்று ஒருவன் சொன்னால், நான் அதை எப்படி நம்ப முடியும்? இல்லை, யாரால் தான் நம்ப முடியும் அதை?.

“எனது திடமான மறுப்பு கொழுக்கட்டையின் வெள்ளை முகத்தை போண்டாவின் நிறத்துக்கு மாற்றிவிட்டது. அவனுக்கு எவ்வளவு கோபம்! “போடா முட்டாள்! உன்னிடம் வந்து சொல்ல வந்தேனே!” என்று சிடுசிடுத்தான். பிறகு “இன்று ராத்திரி என் கூடவா. காட்டுகிறேன்” என்றான்….

“நண்பரே, பம்பாய் நகரத்தின் விபச்சாரவிடுதிகளைப் பற்றி பம்பாயிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில வாரப் பத்திரிகைகள் படங்களோடு பிரசுரித்திருந்த உண்மைகளை நீங்களும் படித்திருக்கக் கூடும். நாகரிகத்தின் மேற்படியில் கோலாகலக் கொலுவிருக்கின்ற இம் மாநகரத்தின் பயங்கரச் சாயைகளாகவும் பாப நிழல்களாகவும் திகழ்கின்ற எத்தனையோ விஷயங்களைப் பற்றி பத்திரிகைகளில் எவ்வளவு தான் எழுதிவிட முடியும் ? இல்லை , கடிதத்தில் தான் என்ன எழுத முடியும்? அதனால் தான் நான் சொல்கிறேன், வாழ்க்கையின் உண்மைகளைக் கற்க ஆசைப்படுகிறவர்கள் அவசியம் பம்பாய் வந்தாக வேண்டும் என்று…

அன்றிரவு கொழுக்கட்டை என்னை ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றான். விடுதித் தலைவியுடன் பேசிய முறையிலிருந்து அவனுக்கும் அந்த இடத்துக்கும் ரொம்ப நாள் பழக்கம்” என்பது நன்கு புரிந்தது. பேச்சோடு பேச்சாக அவள் சொன்னாள். “இங்கு ஒரு ஸ்டூடன்ட் இருக்கிறாள். கல்லூரியில் படிக்கிற மாணவி என்பதால் கொஞ்சம் மிடுக்காகத் தான் பழகுவாள். அதனால் அவளோடு பொழுது போக்குவதற்கு அநேகருக்குத் தயக்கம் உண்டு. சிலருக்கு பயம் என்று கூடச் சொல்லலாம். ஆனால் அவள் நல்லவள். இப்படிச் சொல்லிவிட்டு அவள் மாணவியை அழைத்தாள். அங்கு வந்து சேர்ந்த பெண்ணைப் பார்த்ததும் நான் திடுக்கிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆமாம். அவளே தான். வழியோடு போகிற யுவதிதான்.

“கொழுக்கட்டை “டொமட்டோபிராண்டு” குட்டி ஒன்றைத் சேர்ந்து கொண்டு தனி அறைக்குப் போய்விட்டான். இந்த அதிசயப் பெண்ணோடு பேசிப் பார்க்கலாமே என்ற ஆசை எனக்கு உண்டாயிற்று. அதனால் நான் அவளோடு ஒரு அறை சேர்ந்தேன்.

“தன்னைத் தேர்ந்தெடுத்து, தன்னோடு தனி அறை சேருகிறவன் என்ன எதிர்பார்ப்பான் என்பதை உணர்ந்த அலட்சியத்தோடு –

எதையும் அல்லது எவரையும் பெரிதாக மதிக்காத அசிரத்தையோடு – தனக்கே உரிய ஒரு கர்வத்தோடு அவள் நின்றாள். நடந்தாள். உட்கார்ந்தாள். சகல காரியங்களையும் சகஜமாகச் செய்தாள்.

“என்னை நீ பார்த்ததில்லையா? பார்த்த நினைவு உனக்கு இல்லையா?” என்று கேட்டேன்.

“இருக்கலாம். அதைப்பற்றி இப்ப என்ன?” என்று மிடுக்காகக் கேட்டாள் அவள்.

“நீ படிக்கிற மாணவி என்று நான் நினைத்தேன்.”

“நான் மாணவிதான். படித்துப் பட்டம் பெறுவதுதான் என் லட்சியம்” என்றாள் அவள்.

“பின்னே நீ இங்கே இருப்பானேன்? இந்தத் தொழிலில் நீ எப்படி ஈடுபட்டாய்?”

“இந்த நிலையில் உள்ள எந்தப் பெண்ணிடமும் யாரும் கேட்கத் தவறாத ஒரு கேள்வி இது” என்று சொன்னாள். சற்றே மௌனமாக இருந்தாள். “நான் எப்படி ஈடுபட்டேன் என்றா கேட்கிறீர்கள்? நானாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். படித்துப் பட்டம் பெறவேண்டும், நல்ல நிலைமையில் வாழவேண்டும் என்பது என் லட்சியம். இரண்டுக்கும் பணம் வேண்டுமே? நான் வசதிகளற்ற குடும்பத்தில் பிறந்தவள். படிக்காமல் இருந்தால் என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன். பெரிய மனிதர்கள் வீட்டில் வேலைக்காரி ஆக நேரிடலாம், அப்பொழுது மட்டும் என் உடலுக்கும் ஒழுக்கத்துக்கும் களங்கம் ஏற்படாமலா போய்விடும்…. அல்லது, குடிகாரனோ முரடனோ. கயவனோ எவனோ ஒருவனுக்குப் பெண்டாட்டி ஆக நேரிடலாம். அப்பொழுது என் வாழ்விலே அமைதியும் ஆனந்தமும் வளமும் கிட்டிவிடுமா? நான் படித்து உயர்வது என்று உறுதி செய்தேன். கீழ் வகுப்புகள் வரை உபகாரச் சம்பளத்தில் படித்துவிட முடிந்தது. கல்லூரிப் படிப்புக்குப் பணம் தரக்கூடியவர்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. வள்ளல்கள் என்று பெயர்பெற்ற சிலரை அணுகினேன். அவர்கள் என் உடல் உறவை விரும்பினார்கள். சில பெரிய மனிதர்களை நாடினேன். அவர்களின் வைப்பாட்டியாக மாறினால் அவர்கள் பண உதவி செய்வார்கள் என்று புரிந்தது. நான் எவ்வளவோ முயற்சிகள் செய்தேன். பார்ட்-டைம் அலுவல்கள் கிடைக்குமா என்று பார்த்தேன். அந்த வசதி இந்த நாட்டில் ஏது? பணம் படைத்தவர்களின் கயமைக் குணத்துக்கு இணங்கி அவர்களின் இருட்டு வேலைக்குத் துணைக் கருவியாக மாறி, பிறகு வெளி உலகில் அவர்கள் பெறத் தவிக்கிற புகழ் வெளிச் சத்துக்கு நானும் ஒரு சாதனமாக மாறுவதை விட, இப்படி உடல் உழைப்பில்” ஈடுபட்டுப் பணம் சம்பாதிப்பது உயர்ந்தது என்று நான் முடிவு செய்தேன். தொழிலில் இறங்கிவிட்டேன் …. கிடைப்பதைக் கொண்டு, சிக்கனமாக வாழ்ந்து முன்னேறுகிறேன். விரைவில் வெற்றி பெற்று விடுவேன் என்று நம்பிக்கையோடும் உறுதியோடும் அவள் பேசினாள்.

“இது பாவம் என்று…”

நான் முடிப்பதற்குள் வெடுக்கெனச் சொன்னாள் அவள். “எது பாவம்? பணத்துக்கு முதல் பூஜையும் முக்கியத்துவமும் கொடுக்கிற மனித ஜாதியிலே பணம் இல்லாமல் இருப்பது தான் பாவம். வறுமை தான் பாவம். வறுமை தான் மகாப் பெரிய பாவமும் குற்றமும் ஆகும். இன்னும் சில மாதங்களில் என் படிப்பு முடிகிறது. அதன் பிறகு நான் ஏன் இங்கு வரப்போகிறேன்? எனக்கு நிச்சயமாக ஒரு வேலை கிடைத்துவிடும். படித்த பெண்ணுக்கு – பி.ஏ பாஸ் செய்துவிடுகிற பெண்ணுக்கு தானா வேலை கிடைக்காமல் போய்விடும்?”

“உன் பெயரை அறிந்து கொள்ளலாமோ?” என்று கேட்டேன்.

“அகல்யா” என்றாள் அவள்.

அவளும் நானும் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொண்டோம் என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.

“உயரிய முடிவை எய்த நல்லவழி இல்லை என்றாகுமானால், பிறர் தவறு மோசம் என்று கருதுகிற வழிகளைப் பின்பற்றி காரிய சாதனை பெறுவது பிசகு அல்ல; பாவமும் அல்ல”. இவ்வாறு அறிஞர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். மதியூகிகள் வழிகாட்டியும் இருக்கிறார்கள். ஆனால், அவாவிய பலனை அடைந்துவிட்ட பிறகும் மீண்டும் மீண்டும் தவறான பாதையிலேயே போவது தான் குற்றம் ஆகும். நான் கல்வி அறிவு பெற விரும்புகிறேன். படித்தாக வேண்டிய உயரிய நூலை விலை கொடுத்து வாங்க இயலாவிட்டால் கெஞ்சியாசித்துப் பெறு; திருப்பித் தருவதாகக் கேட்டு வாங்கு; அல்லது, திருடியாவது படி என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் அறிவின் பக்தர்கள். நான் கெஞ்சினேன். யாரும் பண உதவி பண்ணவில்லை. கடனாகக் கேட்டேன். தருவார் எவருமில்லை. பிச்சை எடுக்கவோ திருடவோ நான் தயாராக இல்லை . ஆகவே, இந்த வழியில் பணம் சம்பாதிக்கத் துணிந்தேன்” என்றும் அவள் சொன்னாள்.

“கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே” என்று விதி வகுத்துத் தந்தவர்கள் வந்த சமுதாயத்தில் வாழும் பெரியவர்கள் அபலைப் பெண் தேர்ந்து எடுத்துக் கொண்ட இந்த வழியைப் பற்றிப் பாராட்டுரை வழங்குவார்களோ என்னவோ….

“பரீட்சை முடிந்த பிறகு அகல்யா அந்த விடுதிக்கு வருகிறாளா என்று அறியும் ஆவல் இயல்பாகவே எனக்கு ஏற்பட்டது. ஒருநாள் கொழுக்கட்டையிடம் அவளைப் பற்றிக் கேட்டேன், அவள் அங்கு வருவதில்லையாம் என்றுதான் சொன்னான்.

“பரீட்சைகளின் முடிவு வெளியான போதும் எனக்கு அகல்யாவின் நினைப்பே எழுந்தது. பாஸாகா விட்டால், மனமொடிந்து தற்கொலை செய்து கொள்ளக் கூடிய மாணவ மணிகளில் அவளும் ஒருத்தியாக மாறியிருப்பாளோ என்னவோ? இவ்வறெல்லாம் வீண் எண்ணங்களை வளர்த்து அவதிப்பட்டது என் உள்ளம்.

“இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்செயலாக நான் அவளைச் சந்திக்க நேர்ந்தது. அவள் பார்த்தும் பாராதது போல் போய்விடக்கூடும் என்று நான் நினைத்தேன். நானாகப் பேச்சுக் கொடுத்தாலும் அவள் பேசாமலே மூஞ்சியைத் திருப்பிக் கொண்டு போய்விடுவாள் என்றும் எண்ணினேன். முன்பெல்லாம் அவள் அப்படிச் செய்வது தான் வழக்கம்.

“இருப்பினும், முயற்சி செய்வதில் நஷ்டம் எதுவும் இல்லை எனத் துணிந்து அவள் அருகில் போய், “நமஸ்காரம், மிஸ் அகல்யா” என்றேன்.

அவள் என்னை கவனித்தாள். உற்று நோக்கிவிட்டுப் புன்னகை புரிந்தாள் “நமஸ்காரம்” என்றாள், “நான் பரீட்சையில் தேறிவிட்டேன். எனக்கு வேலையும் கிடைத்துவிட்டது. நல்லவர்கள் சிலர் நடத்தும் ஒரு கம்பெனியில் கிளார்க் வேலை. இப்பொழுது நூற்றி இருபத்தைந்து ரூபாய் சம்பளம்” என்று அவளாகவே சொன்னாள். வெற்றி தந்த பெருமிதமும் . இதயபூர்வமான மகிழ்ச்சியும் அவள் முகத்திலும் பேச்சிலும் பொங்கி வழிந்தன.

“ரொம்ப சந்தோஷம். ரொம்ப ரொம்ப சந்தோஷம்” என்று சொல்லி விட்டு நான் என் வழியே நடந்தேன். நல்ல காரியத்துக்கு நல்ல வழியில் பணம் கிடைக்கத் துணை புரியாத இந்த உலகத்தைப் பற்றி என்ன எண்ணுவது. எப்படி ஏசுவது என்றே எனக்கு விளங்கவில்லை !”

– வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002, பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *