கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 4,953 
 

ஊரின் நுழைவாயிலிலேயே கன்னியாத்தா கோயிலின் வடபுறம் துவங்கி பனங்காடு என்று சொல்லப்படும் மலையடிவாரத்து நெழலிக்கரை வரை நல்லமுத்துக் கவுண்டரின் பூமிதான். பாதிக்கு மேல் பண்டம் பாடிகள் மேய்க்கிற வறண்ட பூமியானாலும், மிச்சமிருந்த பூமியில் நல்ல விளைச்சல் காணும். கன்னியாத்தா கோயிலை ஒட்டியிருந்த அந்த அகண்ட – ஆழமான
கிணற்றில் மோட்டார் ஓடுகையில் ஊர் ஜனங்கள் தன்ணீர் முகந்து செல்வார்கள், ஆங்காங்கு கிணறு இருந்தாலும் இந்தத் தண்ணீருக்கு அவ்வளவு ருசி.

அப்படியிருந்த கிணறுதான் இந்த வருடம் மழை இல்லாததால் உள்வாங்கிக் கொண்டே போய் இறுதியில் இரண்டடித் தண்ணீர் நின்றது. மற்ற சாகுபடியையெல்லாம் நிறுத்தி, ராகி மட்டும்
கொஞ்சம் பயிரிட்டிருந்தார். அதற்கே தண்ணீர் இழுபறி.

கவுண்டர் யோசனையுடன் பாத்திகளின் பாதைகளை வெட்டி, தண்ணீர் பாய்ந்ததும் மண்ணைச் சரித்து அடைத்து, அடுத்த பாத்திக்கு நகர்ந்து கொண்டிருந்தார். அச்சமயம் பதற்றத்துடன் ஓடி வந்தாள் அவர் மனைவி.

“ஏனுங்கோ, பட்டியைத் தெறந்து விடும்போது பண்டத்தை எண்ணுனீங்களா?”

“ஏன்லே, என்ன ஆச்சு?” புரியாமல் மனைவியைக் கேட்டார் கவுண்டர்.

“செம்பிலியாட்டுக் குட்டிக ரெண்டைக் காணமுங்கோ. கிழபுறத்துப் பட்டி வேலிகிட்ட தரையில் நரிக மண்ணைப் பறிச்சிருக்கு. நரிகளோட காலடித் தடம் இருக்கு. போச்சே, மொதலு போச்சே!” என்று அழாத குறையாகச் சொன்னாள்.

“நரிகளா? நாய் ஒண்ணை வளக்க ஆரம்பிச்சப்புறம் நரித் தொல்லையே கெடையாதே, உம், இப்ப திருடு போனது ஆச்சரியமால்ல இருக்கு, எல்லாம் நம்ம கஷ்ட காலம்..” முனகியபடியே, பட்டி இருந்த இடம் நோக்கிப் போனார்.

மனைவி சொன்னது சரிதான். இரண்டு ஆட்டுக் குட்டிகள் காணாமற் போயிருந்தது. பட்டியின் ஒருபுறம் பள்ளம் பறிக்கப் பட்டிருந்ததுடன், நரிகளின் காலடித் தடங்கள் பளிச்சென்று
தெரிந்தன.

வரப்பில் வளர்ந்திருந்த வேலமரத்தின் அடியில் பேசாமல் உட்கார்ந்து விட்டார் கவுண்டர். அவர் மகன் சக்தி, தடி ஒன்றை எடுத்து காவல் பணியில் அலட்சியம் காட்டிய நாயை அடிக்க
அரம்பித்தான். அது ஓலமிட ஆரம்பித்தது.

கவுண்டர் எழுந்தார். நரிகளின் தடத்தைப் பார்த்தபடி சென்றார். மலையடிவாரம் வரை தடம் தெரிந்ததால், மலங்காட்டிலிருந்து தான் அவை வருகை தந்திருக்க வேண்டும் என்பது தெளிவாயிற்று.

“ருசி கண்ட நரிகள் இன்றைக்கும் வரும். காவலுக்கு ராவு இங்கேயே படுத்துட வேண்டியதுதான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, வீட்டுக்குத் திரும்பினார்.

“நேத்து வாங்கிட்டு வந்த அரிசியில் கல்லு நெறய இருக்குதுப்பா!” என்று கவுண்டரின் பெரிய மகள் புகார் சொன்னாள்.

கவுண்டரின் மனைவி அரிசியை முறத்தில் போட்டுக் கல் பொறுக்கிக் கொண்டே, “அரிசியில் கல்லு, நல்லெண்ணெயில் கடலெண்ணெய், காப்பிப் பொடியில் சிக்கரிப் பொடின்னு அந்தப்
பீலிக்காம்பட்டி யாவாரி, கட்டேல போறவன், வெலையை மட்டும் மத்தவங்க ஏத்தறதுக்கு முந்தி ஏத்திப்புடறானே, நல்ல சாமானாக் கொடுத்தா என்னவாம்?” என்றாள்.

“தாராவரத்துலேர்ந்து பெரிய ஆபீசருங்க வந்து அஸ்கா, அரிசி மூட்டைக, எண்ணெய் டின்னுக எல்லாத்தையும் பறிமுதல் பண்ணி, கடைக்காரன் மேல கேஸும் போட்டாங்கன்னு நம்ம
பூசாரி சொன்னானே, நெசமாயிருக்குமா?” என்று மகள் கேட்டாள்.

“நெசந்தாண்டி பாப்பா. நம்ம குப்பக்கா கூடச் சொல்லுச்சு. அதிக வெலைக்கு விக்கலாம்னு பதுக்கி வெச்சிருந்தானாம். எண்ணெயில கலப்படமாம். இந்தத் தடவை வசமா சிக்கிட்டான்.”
“ஏகப்பட்ட அரிசி மூட்டையும், அஸ்கா மூட்டையும் பறி போயிடுச்சே, இனிமேயாவது அவனுக்குப் புத்தி வருமா?”

“அந்தக் கன்னியாத்தாதான் கொடுக்கணும்”

***

இரவு ஆட்டுப் பட்டியின் காவலுக்கு தந்தையும் மகனுமே போனார்கள்.

நள்ளிரவு வரை ஏதேதோ யோசனையில் விழித்திருந்த கவுண்டர் பிறகு உறங்கி விட்டார். திடீரென்று நாயின் குரைப்புச் சத்தம் கேட்டது. கவுண்டரின் மகன் விழித்து பட்டியை நோக்கி
ஓடினான்.

இருளில் பட்டியை நெருங்கித் தெரிந்தன, நெருப்புத் துண்டங்களாய் நாலைந்து ஜோடிக் கண்கள்; நரிகள்! மடார் மடாரென்று தடியடிகள் விழ அடுத்த நொடியில் புர்..ரென்று உறுமிக் கொண்டு நரிகளெல்லாம் பறந்தோடி விட்டன.

“நல்ல வேளை நாய் உளைச்சதால குட்டிக தப்பிச்சுது!” என்ற நல்லமுத்து கவுண்டர், சக்தி! நரிக இனி நாளைக்குத்தான் வரும். அதுக்கு நா ஒரு வழி செய்றேன். கொறை ராத்திரியாவது நல்லாத் தூங்கலாம், வா!” என்று மகனைக் கூட்டிப் போனார்.

***

பிற்பகல்.

மராபாளையத்துத் தொட்டியர்கள் – தேவுடு, வெங்கிட்டு, நாச்சி, பீலிக்காம்பட்டி கன்னியாத்தா கோயில் பூசாரி செவப்பன் நால்வரும் வந்தார்கள்.

“எசமாங்க கூப்பிட்டதாத் தாக்கல் வந்துச்சு…” என்று நல்லமுத்துக் கவுண்டரின் முன் கைகட்டிப் பணிவுடன் நின்றார்கள்.

“நம்ம பட்டியில ரெண்டு எளம் குட்டிகளை மலங்காட்டு நரிக வந்து தூக்கிட்டுப் போயிருச்சு. அதோட தெனமும் வர ஆரம்பிச்சுடுச்சு. நீங்க மலங்காட்டுக்குப் போயி ரெண்டு மூணு
நரிகளைப் பிடிச்சுக் கொண்டு வரணும். அதுகளைக் கொன்னு, நம்ம தோட்டத்துக்கு வர்ற மலையடிவாரத்துல ஒரு கம்புல சொருகி வெச்சிடலாம்னு பாக்கறேன். செத்த நரிகளைப்
பாத்துட்டுப் பயந்து அதுக வேற திசைக்குப் போயிடும்ல. என்ன சொல்றீங்க?”

“எசமாங்க பட்டியில ஆட்டுக் குட்டிகளை நரிக வந்து தூக்கிட்டுப் போனதாக் கேள்விப் பட்டப்பவே யோசிச்சோமுங்க. இப்ப, எசமாங்களே உத்தரவு போட்டப்புறம் மலங்காட்டைத் தூள்
பரத்திப் போட மாட்டமா? நீங்க கவலையை விடுங்க சாமி!” என்று பூசாரி சொன்னான்.

பிறகு அவர்கள் கவுண்டர் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு கலைந்து சென்றார்கள்.

***

அன்று முன்னிரவில்…

நால்வரும் டார்ச் விளக்கொளியில் மலைப் பாறைகளில் தாவி ஏறினார்கள்.

புதர்களும், பாறைகளும் இருளில் பீதியைத் தந்தன. முட்செடிகளை வெட்டி விலக்கி முன்னேறினர். மின்மினிப் பூச்சிகள், கொய்ங்.. என்று ரீங்காரமிட்ட பெரிய வண்டுகள், சட சடவென்று ஏதோ ஒரு பிராணி விழுந்தடித்து ஓடும் சப்தம்…ஆந்தை ஒன்று அலறியது.

“பத்து நரியாவது இன்னிக்குப் பிடிச்சிடணுங்கோ..” என்றான் நாச்சி.

“பேசாதே!” என்று தடுத்தான் பூசாரி. பின் மெல்லச் சொன்னான்: “மலங்காட்டுக்கு உள்ளாறப் பூந்துட்டோம். இனி நம்ம வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான்..”

“சரிங்கோ” என்றார்கள் மற்ற மூவரும்.

வெங்கிட்டு தன் கையில் வைத்திருந்த பையிலிருந்து கருப்பு உருண்டைகளை எடுத்தான். தயாராக எடுத்து வந்திருந்த கவுச்சி வீசும் வெள்ளாட்டுக் குடல் கறியை இலைப் பொட்டலத்தில்
இருந்து பிரித்து, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தேவுடு நீட்ட, பூசாரி அதனுள் உருண்டைகளை ஜாக்கிரதையாகத் திணித்து பாறை மீது கூறு போட்டு வைத்தான்.

“டார்ச் லைட்டை அணைச்சிட்டுப் பாறைகள்ல அல்லாரும் மறைஞ்சுக்குங்கோ. பூசாரி மட்டும் கொரலு கொடுக்கட்டும்!” என்றான் நாச்சி.

நாச்சி, தேவுடு, வெங்கிட்டு மூவரும் பாறைகளை ஒட்டிய புதர்களில் ஆங்காங்கே சிதறி மறைந்து கொள்ள, வெள்ளாட்டுக் கறியினுள் மருந்துருண்டைகளைத் திணித்துக் கூறு போட்டுப்
பரத்தப்பட்டிருந்த பாறைக்கருகில், இருளில் பூசாரி மட்டும் நின்று கொண்டிருந்தான்.

தொண்டையைக் கனைத்துக் கொண்டான். சிறிது நேரம் அமைதி…

திடீரென்று நரி ஒன்றின் ஊளை கேட்டது. உதட்டைக் குவித்து, உடம்பை வளைத்து “உக்கே…ஊ..ஊ..” என்று பூசாரி நரியாகி ஊளையிட்ட ஓசை நொடிக்கு நொடி பெருகிற்று.

ஒன்று… இரண்டு… மூன்று…

எங்கெங்கிருந்தோ நரிகள் அங்கு திடீரென்று முளைத்தன. பூசாரி மெல்ல பின்னுக்கு நகர்ந்து ஒரு பாறைக்குப் பின்னால் பதுங்கினான்.

நரிகள் கவுச்சியை மோப்பம் பிடித்து முன்னுக்கு நகர்ந்து வந்தன. இருளில், சிலீரென்ற காற்றில் உடம்பு நடுங்க பூசாரி எட்டிப் பார்த்தான். கண்ணுக்கு நரிகள் நிழலுருவாய்த் தெரிந்தன. தணல் துண்டுகளாய் அவற்றின் கண்கள் ஜொலித்தன. புர்..ர்..ரென்ற உருமல், சலசலப்பில் அவற்றின் இருப்பிடத்தை நிதானித்தான். பாறையை நெருங்கி மூன்று நான்கு நரிகள் கவுச்சியில் வாய் வைப்பதை உற்றுக் கவனித்து சந்தோஷத்தோடு முணு முணுத்தான்: “மாட்டிக்கிட்டீங்களா..?”

வெள்ளாட்டுக் கறியை தலைக்குக் கொஞ்சம் அவசரமாய் கவ்விய நரிகளின் வாயில் கந்தக வெடி மருந்து உருண்டைகள் டமார், டமார் என்று தீப்பிழம்புடன் வெடித்தன. வாய் கிழிய கீழே
விழுந்து துடித்துப் புரண்ட நரிகளைப் பார்த்ததும், பாறைகளிலிருந்து வெளிப்பட்டு அங்கே கூடிய நால்வரும் டார்ச் விளக்கொளியில் மற்ற நரிகள் விழுந்தடித்துக் கொண்டு ஓடியதைக்
கண்டு கை கொட்டிச் சிரித்தார்கள்.

கீழே கிடந்த நான்கு நரிகளில் இரண்டுக்கு இன்னும் துடிப்பு இருந்தது. அவை இங்குமங்கும் புரண்டு துடித்தன.

***

ஒரு மாதம் சென்றபிறகு ஒருநாள்…

உச்சி வேளைக்கு நல்லமுத்து கவுண்டர் தோட்டத்திலிருந்து வீட்டுக்கு வந்தார்.

“பாப்பா, தாகத்துக்குக் கொஞ்சம் தண்ணி கொண்டு வாம்மா!” என்று கூறியபடி, கட்டிலில் உட்கார்ந்தார்.

அவர் மகள் கண்ணம்மா செம்பில் கொணர்ந்த நீரை அவரிடம் கொடுத்தாள். “ஏனுங்கப்பா, இன்னிக்கு வாங்கியாந்த அரிசியில் கூட ஒரே கல்லு மயம். கல்லு பொறுக்கி மாளலீங்கப்போ.
அநியாய வெலை கொடுத்து வாங்கினாலும் அந்தக் கடைக்காரப் பாவி இப்பிடி அக்குருமம் பண்றானே?..”

“என்ன பாப்பா பண்றது? இந்தச் சின்ன கிராமத்துல வேற கடைக்காரன்கிட்டே அரிசி கெடையாது. சோளம், ராகி, கம்பு பயிர் பண்ற நாம அரிசியைத் தின்னுப் பளகிக்கிட்டது நம்ம தப்பு.
பதுக்கி வெச்சிருந்தான்னு அன்னிக்கு அஸ்கா, அரிசியெல்லாம் கடைலேர்ந்து பறிமுதல் பண்ணினாங்க. கலப்படம் பண்றான்னு அபராதம் போட்டாங்க. என்ன செஞ்சு என்ன புண்ணியம்? கட்டின அபராதத்தையும் பறி கொடுத்த முதலையும் மறுக்கவும் சரக்குகள்ல கூட்டி அதிக வெலை வெச்சிடுவான். அதுக்குத் தக்கனே கல்லையோ, மண்ணையோ கலந்துதானே சரிக்கட்டியாகணும்? என்ன பண்ணினாலும் அவன் திருந்த மாட்டான் பாப்பா!”

திடீரென்று பேச்சு மாறி மகள் கேட்டாள்: “ஏனுங்கப்பா, செத்த நரிகளைக் கொண்டு மலங்காட்டு நரிகளைப் பயமுறுத்தலாம்னு கட்டித் தொங்க விட்டீங்களே, இப்பல்லாம் பட்டிக்கு ஆடு திருட நரிக வருதா?”

“எப்பிடிம்மா வரும்? அதுக்கு அஞ்சறிவுதானே இருக்கு?”

(தாமரை மாத இதழ்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *