நந்தியாவட்டைப் பூக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 8,648 
 

நந்தியாவட்டை பூக்கள் நதியா டீச்சருக்கு மிகவும் பிடித்தமானவை.காவியாதான் பறித்து வந்து கொடுப்பாள்.அவற்றைப் பார்த்தவுடன் நதியா டீச்சரின் முகமும் மலர்ந்துவிடும்.அப்பூக்களை நதியா டீச்சர் ஆராதிக்கும் விதமே தனி.தன் நீண்ட விரல்களில் மென்மையாய் தொட்டு,தன் கன்னத்தில் வைத்து,கண்கள் மூடி,அதன் மென்மையை உணர்வாள்.

நதியா டீச்சர் பட்டணத்திலேயே பிறந்து வளர்ந்த நாகரீக பெண்மணி.ஆனால் அவரது கூந்தல் மட்டும் இடையைத் தாண்டி நீண்டு வளர்ந்திருக்கும்.பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு காவியா வசித்த தோட்டப்புற பள்ளிக்கு தற்காலிக ஆசிரியையாக பணியாற்ற வந்தவர்தான் நதியா டீச்சர்.காவியாவுக்கு அப்போது பத்து வயது.

“நம்ம ஸ்கூலுக்கு புது டீச்சர் வந்திருக்காங்க,ரொம்ப அழகா இருக்காங்க,அவங்களுக்கு எவ்ளோ நீட்டு முடி தெரியுமா?”முதன்முதலில் நதியா டீச்சரைப் பார்த்துவிட்டு வந்த ராதிகா தன் பூச்சிப்பற்கள் தெரியுமளவுக்கு வாய்பிளந்து சொல்லிக்கொண்டிருந்தாள்.

காவியாவுக்கு ராதிகாவின்மேல் பொறாமையும்,கோபமும் ஒருசேர வந்தது.

“அந்த டீச்சர் ஏன் நான் போகும்போது வரல?,” மனதிற்குள் பொறுமிக்கொண்டிருந்தாள்.

“அவங்க என்கிட்டதான் தலைமையாசிரியர் ரூம் எங்க இருக்குன்னு கேட்டாங்க,கை பிடிச்சி அழச்சிட்டுப் போயி காட்டினேன்,” இவளது புழுங்கலைப் பொருட்படுத்தாமல் ராதிகா பேசிக்கொண்டே போனாள்.

சற்றைக்கெல்லாம் தலைமையாசிரியர் அந்த நீள்சடை ஆசிரியையை அழைத்துக்கொண்டு வந்து வகுப்பில் இருந்த கேத்தரின் ஆசிரியையிடம் அறிமுகப்படுத்தினார்.நதியா டீச்சரைப் பார்த்த காவியா வியப்படைந்து போனாள்.

உயரமான மெலிந்த உடலும்,தங்க நிறமும்,முட்டிக்கால் வரையில் நீண்டிருந்த தடித்த சடைகளும்,அனார்கலி வகையைச் சேர்ந்த அழகிய பச்சைநிற சுடிதாரும் என நதியா டீச்சர் அவள் கண்களுக்குப் பேரழகியாக தெரிந்தார்.ஆனால் அந்தப் பேரழகு ஆசிரியை இவள் புறம் திரும்பாததில் இவளுக்குப் பெரும் வருத்தம்.

அன்று மதியம் பள்ளி முடிந்ததும் வழக்கம்போல் ராணி பாட்டியின் வீட்டுக்குப் போய்,நெகிழிப் பைகளில் நந்தியாவட்டை பூக்களைப் பறித்துக்கொண்டு தன் வீட்டுக்கு நடந்து போகையில் அந்த நீள்சடை அழகி பேருந்துக்காக காத்திருப்பதைக் கண்டாள்.பேசலாமா,வேண்டாமா என இவள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே நதியா டீச்சர் இவளைக் கைகாட்டி அழைத்தார்.

“அது என்னா பூ?” அதுதான் நதியா டீச்சர் அவளிடம் பேசிய முதல் வார்த்தை.

“இது நந்தியாவட்டைன்னு எங்கம்மா சொன்னாங்க டீச்சர்,”

“அட,என் பேரு மாதிரியே இருக்கே,” சொல்லிவிட்டு நதியா கலகலவென சிரிக்க அவளது கைகளில் ஒன்றை எடுத்துவைத்தாள்.அவர் உடனே அந்தப் பூவை குழந்தையைக் கொஞ்சுவதுபோல் தன் கன்னத்தில் வைத்து அணைத்தபடி சிலாகிக்க,இவளுக்கு அது புதுமையாய் இருந்தது.வீட்டுக்கு வந்ததும் இவளும் அதேமாதிரி பூக்களைக் கன்னத்தில் வைத்து உரசினாள்.

காவியாவின் வீட்டிலும் நந்தியாவட்டை பூச்செடி இருந்தது.ஆனால் அதில் பச்சைப்புழுக்கள் அதிகம் என்பதால் பெரும்பாலும் ராணி பாட்டியின் வீட்டிலிருந்து பூக்களைப் பறித்துக்கொண்டு வருவது அவள் வழக்கம்.

அன்று அம்மா வேலைவிட்டு வந்ததும் அவளிடம் சொல்லி,வீட்டிலிருந்த நந்தியாவட்டையின் கிளையொன்றை வெட்டிக்கொடுக்க சொன்னாள்.மறுநாள் நதியா டீச்சரிடம் கொடுத்து அவர் வீட்டில் நட்டுக்கொள்ள சொன்னாள்.தன் பட்டணத்து வீட்டில் பூச்செடி நடுவதற்கு இடமில்லையென சொன்ன நதியா டீச்சர்,அந்தக் கிளையை பள்ளியிலேயே வேலியோரத்தில் இவளோடு சேர்ந்து நட்டுவைத்தார்.தன் அம்மாவைப் போன்றே அவருக்கும் செடி நடுதல் பிடித்திருப்பதைக் கண்டு காவியாவுக்குப் பெருமிதம் தாங்கவில்லை.

ஒரு மாதத்திற்குப் பிறகு,அந்த நந்தியாவட்டை செடியில் இரு பூக்கள் பூத்திருப்பதைக் கண்டு அளவிலா மகிழ்சியடைந்து கொண்டிருந்த வேளையில் அவளுக்குப் பரிட்சயமான முகப்பூச்சு வாசனை வரவே திரும்புவதற்குள் நதியா டீச்சரின் கரங்கள் அவள் தோளைத் தொட்டிருந்தன.

“பூ பூத்திருச்சி,பார்த்தியா?” அவரது முகத்திலும் குதூகலம்.

அன்று முதல் நதியா டீச்சரை காவியா வெகுவாய் ரசிக்க ஆரம்பித்தாள்.அவரது நவீன உடைகள் தொடங்கி,அவர் அணியும் வண்ண வண்ண தோடுகள்,காலணிகள் எல்லாவற்றையும் மனதில் பதியவைத்துக்கொண்டாள்.தான் பெரியவளான பிறகு அதேமாதிரி உடுத்தவேண்டும் என எண்ணிக்கொண்டாள்.

ஒருநாள் இசைக்கல்வி பாடநேரத்தில், “தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு பாடலை’ நதியா டீச்சர் சொல்லிக்கொடுத்தபோது இன்னும் இனிமையாக இருந்ததாய் உணர்ந்தாள்.கபில நிற காகிதத்தில் முள் செய்து,பலூனை ஊதி,அதன்மீது ஒட்டி முள்நாறிப்பழம் செய்ய சொல்லித் தந்தபோது அவளுக்குக் கலைக்கல்விப் பாடத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்தது.மற்றொரு நாள் எல்லாரையும் கண்களை மூடச்சொல்லிவிட்டு,சிண்டரெல்லா கதையைக் கூறியபோது அந்தக் கற்பனை உலகத்தில் இவளும் தன்னை மிக ஆழமாக நுழைத்துக்கொள்ளமுடிந்தது.எப்படிதான் நதியா டீச்சரால் எல்லா பாடத்தையும் இந்தளவுக்கு ஈர்க்கும் வகையில் சொல்லித்தர முடிகிறதோ என வியந்தாள்.

ரசனையுணர்வு நிரம்பிக்கிடந்த நதியா டீச்சர் எப்போதும் துருதுருவென எங்காவது ஓடிக்கொண்டேயிருப்பார்.ஒன்றாம் ஆண்டுக்கு வகுப்பாசிரியையாய்ப் பொறுப்பேற்றிருந்தவர் விதவிதமாக வகுப்பறையை அலங்கரிக்க தொடங்கியிருந்தார்.மரநாற்காலியின் மேல் ஏறி,அதிலிருந்து மேசையின் மேல் ஏறி சுவர் முழுக்க வாசிப்பு அட்டைகளை ஒட்டிவைத்தாள்.பற்பசை அட்டையைக் கத்தரித்து,வகுப்பு வாசலில் தோரணமாய் மாட்டிவைத்தாள்.மணிலா அட்டைகளைச் சிறு சிறு இதய வடிவில் வெட்டி,அதன் மீது எண்களை எழுதி,பசும்பலகையைச் சுற்றிலும் ஒட்டிவைத்தாள்.அவள் செய்யும் அலங்காரமெல்லாம் காவியாவை வியப்பில் ஆழ்த்தியது.

நதியா டீச்சர் மாதிரி காவியாவும் காலியான பற்பசை அட்டையில் தோரணம் செய்து வீட்டு வாசலில் மாட்டினாள்.நதியா டீச்சர் மாதிரியே பேசுவது,நடப்பது,சிரிப்பது என செய்து பார்த்துக்கொண்டிருந்த காவியா அவரைப் போன்று நீண்ட கூந்தல் பெறும் முயற்சியிலும் ஈடுபட்டாள்.

நதியா டீச்சர் தன் தலைமுடிக்கு ரோகிணி தைலம்தான் பூசுகிறார் என்பதை அறிந்தவள் மேரி அக்காளின் கடையில் ரோகிணி தைலத்தை வாங்கி கொடுக்க சொல்லி அம்மாவை நச்சரித்து வாங்கிக்கொண்டாள்.அதைப் பயன்படுத்திய ஓரிரு நாள்களிலேயே தன் முடி நன்கு வளர்வதாய் ஒரு பிரமை ஏற்பட்டது அவளுக்கு. தன் முடி நீண்டு வளர்ந்திருப்பதாய் கற்பனை செய்துக்கொண்டவள் சடை பின்னிக்கொண்டு கண்ணாடியில் முன்னும் பின்னும் தன் முடியை அசைத்துப் பார்த்தாள்.அவளுக்குச் செருக்கு கூடியது.விரைவில் பூரான் சடை பின்னிக்கொண்டு போய் ராதிகாவிடம் காட்டவேண்டும் என எண்ணிக்கொண்டாள்.

இவள் செய்வதையெல்லாம் ஒருநாள் அவள் அம்மா சொல்லிவிட,நதியா டீச்சருக்கும் சிரிப்பு வந்தது.அவளை வாஞ்சையாய் ஒரு பார்வை பார்த்தாள்.ஆனாலும் நதியா டீச்சர் பள்ளி நேரத்தில் எல்லா மாணவர்களிடமும் ஒரே மாதிரிதான் பழகினாள். பள்ளி முடிந்த பிறகுதான் காவியாவுக்கும்,நதியா டீச்சருக்குமான புது உலகம் தொடங்கும்.இரண்டரை மணி பேருந்தில் ஏறும்வரை இவளுடன்தான் அவரது நேரம்.செவ்வாய்,வெள்ளிக்கிழமைகளில் நந்தியாவட்டை பூக்களோடு தோட்டத்து அலுவலகத்தைச் சுற்றியுள்ள மரங்களிலிருந்து வண்ண வண்ண பூக்களையும் பறித்துக்கொண்டு போய் நதியா டீச்சரிடம் கொடுப்பாள்.காவியா மூலம் மாலை தொடுக்க கற்றுக்கொண்ட அவர் அந்தப் பூக்களைத் தொடுத்துக்கொண்டே இவளிடம் என்னென்னவோ பேசிக்கொண்டிருப்பார்.அப்படிதான் ஒருதடவை என்ன நினைத்தாரோ இவளிடம்,”காவியா,நான் படிச்சி முடிச்சபிறகு என் மாமாவைதான் கட்டிக்கப்போறேன் தெரியுமா?” என சொல்லிவிட்டு காவியாவின் கொழுத்த கன்னத்தில் தட்டினாள்.

ஒரு சிறுமியான தன்னிடத்தில் நதியா டீச்சர் அவ்வளவு பெரிய விசயத்தைச் சொல்கிறாரே என காவியாவுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.

”நான் படிச்சி முடிச்சபிறகு நம்ம பாலன் சாரைதான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன் டீச்சர்,” என சட்டென இவளும் போட்டு உடைக்க,நதியா டீச்சர் களுக் என சிரித்துவிட்டு அவள் கன்னத்தில் கிள்ளினாள்.

அந்த நாளுக்குப் பிறகு காவியா நதியா டீச்சரோடு அதிகம் நெருங்கிவிட்டதாய் உணர்ந்தாள்.ஆசிரியை என்பதைத் தாண்டி நதியா டீச்சரை ஒரு தாய் போன்றும் உணர தொடங்கினாள்.ஒரு தடவை அவளுக்கு மிகவும் பிடித்தமான அந்த பாலன் சார் அவளைத் திட்டிவிட,அதைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் அழுதழுது துவண்டு போய் கிடந்தவளை நதியா டீச்சர்தான் தேற்றினாள்.பாலன் சார் திட்டியது அந்தச் சின்னவளை அதிகம் பாதித்ததன் பின்னணியில் இருந்த அந்த மாசற்ற நேசத்தை நதியா டீச்சரால் மட்டுமே விகல்பமின்றி புரிந்து கொள்ளமுடிந்தது.

மனம் வெதும்பி துவண்டு கிடந்த அந்தச் சமயத்தில் நதியா டீச்சர் தந்த அரவணைப்பு அவளால் மறக்கமுடியாததாய் இருந்தது.

ஒருநாள் நதியா டீச்சர் இவளிடம்,”என் மாமாக்கிட்ட பாடற மாதிரி ஏதாச்சும் நல்ல பாட்டா பாடேன்,” என சொல்ல இவள் அன்று முழுக்க பரபரப்பாய் இருந்தாள்.அம்மா சேகரித்துவைத்திருந்த தொன்னூறாம் ஆண்டு பாடல்களின் ஒலிநாடாக்களைத் தேடியபோதுதான் அந்த ஒலிநாடா அவளுக்குக் கிடைத்தது.

“சொந்தம் வந்தது வந்தது

இந்த சுகமே மச்சான் தந்தது”

சித்ராவின் குரலில் வாஞ்சையாய் வெளிப்பட்ட அந்தப் பாடல் இவள் மனதிலும் ஏதோ தாக்கத்தை ஏற்படுத்த,அன்று முழுக்க அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு,வரிகளை எழுதிவைத்து மனனம் செய்துக்கொண்டாள்.

மறுநாள் காவியா டீச்சரின் முன் அந்தப் பாடலை உருகிப் பாடியபோது இவளுக்கும் ஏனோ காரணம் புரியாமல் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

“போகாது உன்னைவிட்டு என்னாசைதான் எந்நாளும்தான்

போனாலும் மண்ணைவிட்டு பூவோடுதான் பொட்டோடுதான்”

எனற வரிகளை இவள் மிக உருகிப் பாடியபோது நதியா டீச்சர் காவியாவை இழுத்து அணைத்துக்கொண்டாள்.அவள் கண்களும் கசிந்திருந்தன.

“எவ்வளோ உருக்கமா இருக்கு நீ பாடினது,என் மனசுல சத்தியமா என் மாமாவைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்கக்கூடாதுன்னு தோனிடுச்சி தெரியுமா?” என சொல்லி இவளைக் கட்டியணைத்துக்கொண்டாள்.அதுதான் நதியா டீச்சரை அவள் கடைசியாக பார்த்தது.

மறுநாள் தொடங்கி இரண்டு வார பள்ளி விடுமுறை ஆரம்பமாகியிருந்தது.அந்த விடுமுறைக்குப் பிறகு நதியா டீச்சர் பள்ளிக்கு வரவில்லை. அவருக்கு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இடம் கிடைத்திருப்பதாக தலைமையாசிரியர் சபைகூடலில் சொன்னார்.

பெரும் ஏமாற்றத்தோடு தாங்கள் நட்டுவைத்த நந்தியாவட்டை பூச்செடியின் முன் போய் நின்றாள்.அந்தச் செடி மரமாகியிருந்தது.நிறைய பூக்கள் பூத்திருந்தன.

முதன்முதலில் நந்தியாவட்டை பூக்கள் பூத்தபோது,பெரியதைக் காட்டி அது தானென்றும் அருகே பூத்திருந்த இன்னொரு சின்ன பூ காவியா எனவும் முன்பு ஆசிரியை கூறியது அவள் நினைவுக்கு வரவே,கண்கள் கலங்கி நின்றாள்.

நதியா டீச்சர் கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு மீண்டும் அதே பள்ளிக்குப் பணியாற்ற வருவார் என பெரிதும் நம்பினாள்.தோட்டத்தில் யார்வீட்டில் நந்தியாவட்டை பூக்களைப் பார்த்தாலும் பெரிய பூக்கள் எல்லாம் நதியா டீச்சர் எனவும்,அருகே இருக்கும் சிறு பூ தான் எனவும் அவள் நினைத்துக்கொண்டாள்.தன் வாழ்நாளில் மீண்டும் நதியா டீச்சரைக் காணப்போகும் நாளுக்காக ஆவலோடு காத்திருந்தாள்.அவளது கற்பனையில் நதியா டீச்சர் ஆண்டுகள் கடந்தும்,அதே இளமையோடு,நீண்ட முடியோடும்,சிறுவயது காவியாவை ஒத்த இரு பெண்பிள்ளைகளோடும் இருந்தாள்.

அதே கற்பனையில் வருடங்கள் பல கடந்து காவியாவும் ஆசிரியையாகிவிட்ட நிலையில்தான் ஒருநாள் நதியா டீச்சரை அவள் சந்தித்தாள்.அது நிகழ்ந்திருக்கவே கூடாத விபத்தென்பதை அப்போது காவியா உணரவில்லை.

கல்லூரி படிப்பு முடிந்து கிள்ளான் நகரில் இருந்த ஒரு பள்ளியில் பணியில் சேர்வதற்காக கடிதம் வந்திருந்தது.பள்ளியின் அலுவலகப் படிகளில் ஏறிக்கொண்டிருந்தபோது எதிரில் இறங்கி கொண்டிருந்த ஒரு தடித்த பெண் காவியாவிடம்,”புது டீச்சரா?” என வினவிவிட்டுப் போனார்.அவர் முகத்தில் எள்ளளவும் புன்னகையில்லை.ஏதோ வேண்டுதல் போலும்;தலைமுடி மொட்டையடிக்கப்பட்டிருந்தது.

இரு வாரங்கள் கழித்து,பள்ளி தொடங்கிய முதல்நாள் சபைகூடலில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு மேடையைவிட்டு இறங்கியபோது அந்தத் தடித்தமேனி ஆசிரியரின் கண்கள் தன்னைப் பார்த்து பளபளவென மின்னுவதைக் கண்டு இவள் வியந்து நின்றவேளையில் அருகே வந்து நின்றவர்,

“என்னைத் தெரியவில்லையா காவியா?” என கேட்டபடி சிறு புன்முறுவல் சிந்தினார்.அந்தப் புன்முறுவல் அவள் அதிகம் பார்த்து ரசித்த ஒரு பெண்ணின் புன்முறுவல்.

“நீங்க,ஏன் இப்படி?” அதிர்ச்சியில் தடுமாறி நின்றாள் காவியா.

“காலத்தின் கோலம்,” இரட்டை வார்த்தையில் பதிலளித்துவிட்டுப் போனவளையே பார்த்தபடி நின்றாள் காவியா.

பள்ளி முடிந்தபின் மீண்டும் சந்திக்க நேர்ந்தபோது தன்னைப் பற்றி சொன்னார் நதியா டீச்சர்.

கல்லூரியில் பயில இடம் கிடைத்த சமயத்தில் தந்தையின் உடல்நலக்குறைவால் வீடு மாற நேர்ந்தது,படிப்பு முடிந்து ஒரே மாதத்தில் மனதுக்குப் பிடித்த மாமாவோடு திருமணம்,அடுத்தடுத்து கருவிலேயே கலைந்து போன குழந்தைகள்,தீவிர சிகிச்சை,கடைசியில் உருவான குழந்தை கலைந்துவிடாமலிருக்க போட்டுக்கொண்ட அதிகமான ஊசிகளால் தலைமுடி யாவும் கொட்டிப்போனது எல்லாவற்றையும் சொல்லிமுடித்த நதியா டீச்சரை ஏறிட்டுப் பார்க்கும் தெம்பு காவியாவுக்கு இல்லாமல் போனது.

“அதிர்ச்சியாயிட்டியா?நீ பார்த்தப்போ எல்லாம் நிக்காம ஓடிக்கிட்டே இருந்தேன்,இப்ப வரைக்கும் என்னோட ஓட்டம் நிக்கல”

காவியா புரியாமல் பார்க்க,இறுகிய முகத்தோடு தொடர்ந்தார் நதியா டீச்சர்.

“தலைமுடியையெல்லாம் இழந்து நான் பெத்த என் பையனுக்கு இப்போ ரெண்டு வயசு.அவனுக்கு சர்க்கரை வியாதி உச்சத்துல இருக்கு,அவனுக்காக வீட்டுக்கும்,ஆஸ்பிட்டலுக்குமா ஓடிக்கிட்டே இருக்கேன்,” சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்து போய்விட,இயந்திரத்தனமாய் மகிழுந்துக்குள் சென்று அமர்ந்தாள் காவியா.

இதுநாள்வரை கற்பனையில் சற்றே பூசின உடலோடும்,அதே நீண்ட முடியோடும்,சிறுவயது காவியாவை ஒத்த இரு பெண்பிள்ளைகளோடும் அவளைப் பார்த்து புன்னகைத்த நதியா டீச்சரின் பிம்பம் மெல்ல மெல்ல கரைந்தது.மகிழுந்துக்கு வெளியே எட்டிப் பார்த்தாள்.வேலியோரத்தில் இருந்த நந்தியாவட்டை மரத்தினடியில் ஒரு பெரிய நந்தியாவட்டை விழுந்திருந்தது.உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்து நொறுங்க,காரினுள் தலைசாய்த்து அழ ஆரம்பித்தாள் காவியா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *