கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: August 25, 2023
பார்வையிட்டோர்: 2,624 
 
 

நம்பமுடியாத கதை; என்றாலும் நம்பித்தானாக வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

1945 ஆகஸ்டு மாதம் 9 -ஆம் நாள் பிரெஞ்சு ராணுவக் கப்பல் ஒன்று புதுக்சேரியைவிட்டு வெளியேறுவதற்கான தாயரிப்புகளில் இருந்தபோது நடந்ததுதான் இக்கதை.

என்னுடைய பிரச்சினைகளெல்லாம் ஓரிரு வரிகளில் சொல்லி முடிக்கப்பட வேண்டிய ஒரு செய்தியை கதையாக எப்படி எழுதி முடிப்பது என்பது பற்றியே. தினமும் உறங்கப் போகும் போது படுக்கையில் என் மகளுக்கு ஒரு கதை சொல்ல வேண்டும். அக்கதை நான் படித்த கதையாக இருக்கக்கூடாது. அந்தத் தருணத்தில் வார்த்தைகளை அடுக்கி அடுக்கி சம்பவங்களைத் திரட்டி உருவாகக் கூடியதாக அக்கதை இருக்கவேண்டும். கதையில் முதல் வரியை; அதாவது, கடலில் மிதக்கும் ஆளில்லாத கட்டுமரத்தில் தாவி ஏறிக்கொண்ட ஒரு டால்ஃபின் நிலவையே பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது போன்ற ஓர் அடியைக் கொடுத்துவிட்டு கதையைக் கட்டச் சொல்வாள். நான் அதிலிருந்து கதையை ஆரம்பிக்க வேண்டும். சில சமயங்களில் கதைக்குள் அவளும் புகுந்து தன் போக்கிற்குக் கதையை திசைத் திருப்பிவிடுவாள். கதை முடியும் நிலையை எட்டுவதை அறியும்போது தீடீரென வேறு ஒரு சம்பத்தை இட்டிக் கட்டி அதன் முடிவைத் தள்ளிப் போடுவாள்.

நிலாவிற்குள்ளிருந்து புத்தர் எட்டிப் பார்த்து டால்ஃபினை நோக்கி கையசைக்க அது கட்டுமரத்தில் வாலை டப்டப்பென்று அடித்துத் துள்ளிக் குதிப்பதை கதையாக்குவது எனக்கு மிகுந்த சிரமமாக இருக்கும். இதில் தர்க்கம் எங்குமே சிதைவுபடக் கூடாது. இடையில் புகுந்து அவள் கேட்கும் கேள்விகள் நம் தவறைச் சுட்டிக்காட்டி நம்மை கூச வைத்துவிடும்.

இப்படியாக கதைசொல்லிக் கதைசொல்லி நானும் எளிய முறையில் கதையெழுதப் பழகிக் கொண்டிருக்கிறேன்.

ஆனால், நான் கதை சொல்லும்போது தேவைப்படாத நம்பகத் தன்மை என்பது கதை எழுதும்போது அவசியம் தேவை என்று நிர்பந்திக்கப்படுகிறேன். அதனாலேயே நான் எழுதிவரும் கதை நம்பமுடியாத கதை என்றாலும் நம்பித்தானாக வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

இக்கதைகூட என் மகள் முதலடி எடுத்துக் கொடுக்க நான் அவளுக்குச் சொன்னதையே சற்றே இடம் வலம் மாற்றி இடம் புறம் மாற்றி உங்களுக்காக எழுதுகிறேன். இக்கதையில் எது என் மகள் சொன்ன முதலடியாக இருக்கும் என்பதை நீங்களே படித்துக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

அதிகாலை, கடலை பனிமூட்டம் போல ஏதோவொன்று கவிந்திருந்தது. அலையடிக்கும் ஓசை மட்டுமே கேட்க அலைகள் கண்ணுக்குத் தெரியவில்லை. வெள்ளை இருட்டு. விடைபெறும் கப்பல் ஒன்றின் சைரன் ஒலி அடிவயிற்றிலிருந்து எழுகிறது. உற்று கவனிக்க, பனிமூட்டத்தினூடாக மங்கலான வெளிச்சப் பூங்கொத்து நகர்வது தெரிகிறது.

பிசலாயி காலைக் கடனைக் கழிக்க ஆண்கள் வருவதற்குள்ளாக முந்திக்கொண்டு கடலுக்கு வருவது வழக்கம். இன்றும் அப்படித்தான்; இத்தனை அதிகாலையில் எழுந்த வந்துவிட்டாள். புதுச்சேரி கடலோர நிலம் அதன் மண்ணரிப்புக்குப் பேர்போனது என்பதால் கரைநெடுக்க பெரும் பெரும் பாறைகளைக் கொட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். அந்தப் பாறைகளின் இடைச்சந்துகளில் மலத்தை இறக்கிவிட்டு பாறைகளைத் தாவித்தாவி கீழிறங்கி மணலில் கால்பதித்தால் ஓடிவந்து குழந்தையைப் போல அலை கால்களைக் கட்டிக் கொள்ளும்.

பிசலாயி பாறைகளில் கால் பதிக்க கருங்கல் அத்தனைக் கறுப்பாகவும் இயல்புக்கு மாறாக வெதுவெதுப்பாகவும் பாதங்களைச் சுட்டது. பாறைகள் மட்டும் வெள்ளை மூட்டத்திற்குள் கழுவப்பட்ட எருமைகளின் முதுகுகளைப் போல பளீரென இருந்தன. பாதங்கள் சூடேறிக்கொண்டே வருவதை உணர்ந்த அவள் கீழிறங்கி மணலில் குதித்து நீரில் கால்களை நனைத்தாள். நீர் வெதுவெதுப்பாக இருந்தது. குறு அலைகள் புரண்டபடி சற்று தள்ளி எதையோ உருட்டியபடி இருந்தன. அவள் அருகில் சென்று பார்த்தாள். வெள்ளை வெளேரென்று பளிங்குப் பாறையில் கிண்ணம் வடித்துக் கவிழ்த்தது போல பெரிதாக ஒன்று மணலில் புதைந்திருந்தது. அலைகள் அதன்மீது ஏறியேறி வழிந்து கொண்டிருந்தன. அந்த மிகப் பெரிய வடிவத்தை கண்கள் விரிய தொட்டுப் பார்த்தாள். கதகதப்பாகத் தகித்தது. அலை நீர் அதன் மேல் பட்டுப் புகைந்தது. அதிசயமான ஒரு பாறையாக இருக்கிறதே என முணுமுணுத்தபடி கால் கழுவினாள்.

விடிந்தது. கடலுக்குச் சென்ற தன் கணவன் கரையேறி வந்ததும் அவனுக்கான காலைக்கடன்களை முடித்துவிட்டு அவன் இரண்டு மொந்தை கள் குடித்து முடிக்கும்வரை குத்துகாலிட்டு அமர்ந்திருந்தாள். குடித்து முடித்ததும் தூங்குவதை வழக்கமாகக் கொண்ட அவனை இழுத்துக்கொண்டு கொட்டப்பட்டிருக்கும் யானைத் தலைகளைப் போன்ற பாறைகளைத் தாவித்தாவி ஓடினாள். அவன் அவளைத் தொடர்ந்தான். அவள் பாறையிலிருந்து கீழே குதித்து மறைந்துபோக அவனும் ஓடி கீழேக் குதித்து ஓடிச்சென்று அவளைத் தழுவினான். அவள் அவனை விலக்கியபடி அலையில் மூழ்கியிருந்த பளிங்குக் கிண்ணத்தைக் காட்டினாள். அவன் அதிசயத்தோடு அப்பாறையைத் தொட்டுத் தழுவினான். அலையில் மூழ்கிய அதன் அடிப்பாகத்தைத் தொட்டுத் தடவியவன் வட்டப் பாறையிலிருந்து கனப்பரிமாணம் கொண்ட தண்டு ஒன்று மண்ணில் புதைந்திருப்பதை அவளுக்குச் சொன்னான். இருவராலும் அப்பாறையைப் புரட்ட முடியவில்லை. அவளிடம் ஏதோவொரு ஆர்வம் தொற்றிக்கொள்ள மற்றவர்களையும் அழைத்துக் கொண்டுவர ஓடினாள்.

பத்துப்பன்னிரெண்டு பேர் அப்பளிங்குக் காளான் குடையை உருட்டிக் கொண்டும் தூக்கித்தூக்கி எடுத்து வைத்தபடியுமாக தெருவுக்குக் கொண்டுவந்தார்கள். மீனவக் குடிகள் குவிந்துவிட்டன. காளான் குடையை நிமிர்த்திய பிறகு எல்லோரும் கையெடுத்துக் கும்பிட்டனர். அறையுங்குறையுமாக செதுக்கி முடிக்கப்படாத ஆவுடையார். லிங்கம் முழுமைகொண்ட பிறகு சக்திபீடம் முடிக்கப்படாமல் வெறும் பாறையாக செதுக்கிக் கழிக்கப்பட்டது போல இருந்தது. லாரிகளில் கொண்டுவந்து கரையோரமாகப் பாறைகளைக் கொட்டுவது வழக்கம். அப்பாறைகளோடு பாறையாக ஒரு பளிங்குப் படிமம் வந்து சேர்ந்திருக்கலாம் என்று நினைத்தவர்கள், அப்படிமத்தைத் தூக்கி வந்து மாரியம்மன் கோயிலின் முன்னேயுள்ள மண் புற்றுக்கு இடப்பட்ட கீற்றுக் கொட்டகைக்குள் அமர்த்தினார்கள். சக்திபீடம் முரட்டுப் பாறையாக இருந்தது. ஆங்காங்கே பாறை பொங்கிப் பூத்து உறைந்திருந்தது. இதைச் செதுக்கி வடிவுக்குக் கொண்டு வந்துவிட்டால் நம்மூருக்கு ஒரு தாயும் தந்தையும் கிடைத்து விடுவார்கள் என மாரியம்மன் கோயில் பூசாரி சொல்ல; சரி அம்மையப்பனைச் செதுக்கி ஒரு வடிவுக்குக் கொண்டு வந்துவிடுவோம் என பஞ்சாய்த்துக் தலை கூரியது.

அன்றைய தினம் பார்த்து ஊருக்குள் வந்த அம்மி கொத்துபவனை வைத்து பீடம் செதுக்கப்பட்டது. முதலில் அவன் அதைச் செதுக்கத் தயங்கினான். இது ஏதோவொன்று; ஆவுடையார் இல்லை என மறுத்தான். இது சாத்திரக்கேடு என எடுத்துச் சொன்னான். அம்மி கொத்துபவன் சிற்ப சாத்திரம் பற்றி பேசுவானேன் என ஒரு பெரியவர் நீட்டி முழக்கிச் சொல்ல; கோபம் கொண்ட அவன் ஏதும் பேசாமல் பிடத்திற்கு சுற்று வட்டப் பகுதியைச் செதுக்கி கோமுகம் அமைத்து வடிவு கொடுத்த அழகைக் கண்டவர்கள் அவனை யாரென விசாரித்தனர். கல்தச்சன் தன்னை மாமல்லனின் வழித்தோன்றல் எனக் கூறிக்கொண்டு சன்மானத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்து தனது தோள்துண்டு நிறைய வகை வகையாக கருவாடுகளைக் கட்டிக் கொண்டு சென்றான்.

ஆவுடையார் அபிஷேகம் கொண்ட அன்று மாலை மேற்கில் சரிந்த சூரியன் மேற்கிலேயே தங்கிவிட்டது போல செக்கர்வானமாக இரவு விரிந்தது. ஓரிரவு மழையில் ஊரெல்லாம் ஓடிய வெள்ளம் கடல் சேர்ந்து அதையும் செம்புல நீராக மாற்றும் அழகை இதுவரைக்கும் கண்டிருந்த மீனவக் குடிக்கு வானும் கடலும் ஒருசேர வியப்பதைத் தந்தன. எங்கும் செம்பட்டை நிறம்; உடல்தோறும் பொருள்தோறும் காற்று வெளியெங்கும் வழிந்தது. மழை நின்ற பிறகும் அச்செவ்விரவு விடியவேயில்லை.

கடல் மட்டம் உயர்ந்து ஊருக்குள் வந்ததில் எல்லோரும் மிரண்டார்கள். புயலில்லை மழையில்லை கடலில் கொந்தலிப்பில்லை; ஆனால், கடலின் நீர் மட்டம் முழங்கால் அளவுக்கு உயர்ந்து ஊருக்குள் புகுந்தது கண்டு புதுச்சேரி நகரமே திகைத்தது. கடல் நீர் உள்ளே ஏறி எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் மேற்கிலிருந்த ஊசுட்டேரியில் நிரம்பியது. வீடுகளுக்குள் நீர் புகுந்தது. எத்தனை நாட்கள் இப்படிக் கழிந்தது என்பது யாருக்குமே தெரியவில்லை. தெருக்களில் ஓடிய நீரில் பெரிய பெரிய ஆழ்கடல் மீன்கள் செத்து மிதந்தன. மாட்டு வண்டிகளைக் கட்டிக்கொண்டு விழுப்புரம் சாலையின் மேட்டுப் பகுதியை நோக்கி சிலர் இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர். பெரியகடை மணிக் கூண்டு நேரம் தவறாமல் ஒலித்து காலம் பற்றிய பிரக்ஞை அறுந்து நழுவாமல் குடிகளைக் காத்தது எனச் சொன்னால் மிகையாகாது. நீரிலேயே மனித நடமாட்டம் அவ்வப்பொழுது நடந்தது.

கொஞ்சம் போல நீர்மட்டம் வடியத் தொடங்கியது. மேற்காக கோரிமேட்டின் உச்சிப் பகுதியில் தங்கியிருந்த மீனவக் குடிகளைத் தேடிக்கொண்டு எங்கிருந்தோ கல்தச்சன் வந்து சேர்ந்தான். அவனது இரு கைகளிலும் கொப்புளங்கள் கண்டிருந்தன. அவன் கோபத்தில் கத்தினான், நான் அப்போதே சொன்னேன். அது ஆவுடையர் அல்ல வேறு ஏதோவொன்று; யாரும் என் பேச்சைக் கேட்கவில்லை. அதைத் தொட்டுச் செதுக்கியதில் எனது கைகள் அமிலத்தில் நனைந்தது போல புண்ணாகி விட்டன பாருங்கள். அந்தப் படிமத்தை உடனடியாகமீண்டும் கடலுக்குள் விசிவிடுங்கள் அதை ஊருக்குள் வைத்திருந்தால் மொத்த குடியும் அழிந்துவிடும் என கத்தினான்.

மீனவக் குடியினர் முட்டியளவு நீரில் புதைந்து கிழக்கு நோக்கி நகர்ந்தனர். அவர்களின் குடிசைகள் சேரும் சகதியுமாகக் கிடந்தன. படகுகள் நீரில் புதைந்தும் கவிழ்ந்தும் கிடந்தன. வலைகளும் கட்டுமரங்களும் கடலோடு ஓடி விட்டிருந்தன. இறந்த மீன்கள் ஒதுங்கிய பகுதிகள் நாறின. மாரியம்மன் கோவில் மட்டுமே மிஞ்சியது. கொட்டகையற்ற இடத்தில் பெரிய புற்று கரைந்துசேற்றுக் குவியலாக இருந்தது. ஆவுடையார் படிமம் மட்டும் தகதகவென்று கண்களைக் கூசச் செய்யும் ஒளியை உமிழந்தபடிச் சுடர்ந்தது. செவ்விருட்டு கொஞ்சம் நீர்த்தது போல இருந்தது. ஆனால் இது இரவா அல்லது பகலா என யாருக்கும் தெரியவில்லை. பகல் இரவு என்பது வானவெளியின் நிறத்தைத் தவிர வேறில்லை என்பது உறுதிபட்டது..

பத்திருபதுபேர் கைகளில் துணியைக் சுற்றிக்கொண்டு அப்படிமத்தைத் தொட்டுத் தூக்கி உருட்டியபடி கடலுக்குச் சென்றார்கள். நீர் வடிந்து ஓடும் சாக்கடைப் பாட்டை வழியாக அதை கயிறுகட்டி இழுத்தபடி கடலுக்குக் கொண்டுவந்து புதைந்து கிடந்த இரண்டொரு கட்டுமரங்களை எடுத்துச் சேர்த்துக் கட்டி அந்தக் கல்லை அதில் ஏற்றி நீருக்குள் தள்ளிக்கொண்டே போனார்கள்.

மாரியம்மன் கோயிலுக்குள் நெருங்கியடித்துச் சுருண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மீனவக் குடிகளை சுளீர் என்ற வெள்ளி வெளிச்சம் சுட்டு எழுப்பியது. கண் திறந்தால் ஊரே வெளிச்சத்தில் மிதந்து கொண்டிருந்தது. நீல வானம். சேருபடிந்த செம்மண் பூமி. நடுவானில் வெண்சுடர்ச் சூரியன் எல்லாம் பழையபடி புதிதாக இந்தப் பூமி பிறந்தது போல இருந்தது. எல்லோரும் கூவியபடி மகிழ்ச்சியோடு கடலை நோக்கி ஓடினார்கள். கடலில் தொடுவான தூரத்தில் கப்பலைவிட பெரியதாக வானத்தை முட்டுவது போல மிகப்பெரிய காளான் குடை ஒன்று சில நிமிடங்கள் தோன்றி மறைந்ததை எல்லாரும் கண்டு திகைத்தார்கள். அது தலைகீழாகப் புரட்டிப்போட்ட ஆவுடையார் போல இருந்ததாக பிசலாயி கண்கள் விரிய சொன்னாள். ஊரில் எல்லோருக்கும் மறு நாளிலிருந்து எல்லாம் மறந்து போனது. முன்பு கிடைத்த பல மீன் வகைகள் கிடைக்கவில்லை என்பது மீனவர்களுக்குத் தெரியவந்தது.

இத்துடன் கதை முடிந்தது என்றாலும் இந்த இடத்தில் என் மகள் குறுக்கிட்டாள்; வேண்டாம் அப்பா இந்தக் கதை. இந்தக் காளானை நான் ஃபோட்டோவில் பார்த்திருக்கிறேன். இது கக்கா அப்பா; இந்தக் கதை வேண்டாம். அது காளான் இல்லை; பெரிய புகை. அது விஷம். அதை சுவாசிச்சா எல்லோரும் செத்துப் போயிடுவோம். அது கக்கா கதை; அது வேண்டாம்.

அவள் சிணுங்கத் தொடங்கிவிட்டாள். குழந்தைக்குச் சொல்கிற கதையா இது என என் அருமை பிசலாயி முணுமுணுத்தபடி படுக்கையில் சரிந்தாள். நான் என் மகளை அணைத்துக் கொண்டு அவளுடைய காதில் கிசுகிசுத்தேன்;

ஒரு ஊருல ஒரு நத்தை இருந்துச்சாம். அது எதையோ தேடிகிட்டு தோட்டத்து வழியா போச்சாம் அப்போ மழை தூறல் போட ஆரம்பிச்சிச்சாம். நத்தை வழியில முளைச்சிருந்த காளான் குடைய பார்த்துச்சாம். அட, மழைக்கு இதுக்குக் கீழ நாம ஒதுங்கலாமே என நெனச்சுதாம். காளான் படர்ந்து அழகா இருந்துச்சாம். நத்தை அதுக்குக்கீழ போயி நின்னுக்கிச்சாம். நத்தையோட உடம்பு காளான்மேல உரச, நத்தையோட எச்சில் சில்லுன்னு காளான் மேல் பட்டுச்சாம். காளானுக்கு உடம்பு கூசுச்சாம். அதுக்கு கிச்சுகிச்சு பண்றது போல இருந்துச்சாம். காளான் தொண்டைய செருமிக் கொண்டு நத்தையே நீ உனது ஓட்டுக்குள்ளேயே ஓடுங்களாமே ஏன் எனது குடைகுள் ஒதுங்குகிறாய் எனக்கேட்டுச்சு. அதுக்கு நத்தை கொஞ்சநேரம் கழிச்சி நான் போயிடுவேன்னு சொல்லிச்சாம். அப்போ அந்த வழியா இன்னொரு நத்தை வந்துச்சாம். அதுவும் காளான் பக்கம் வந்த உள்ளே ஒதுங்கிச்சாம். முதல் நத்தை எனக்கே எடம் இல்ல நீ வேற வரியா என்று அதை தள்ளி விட்டுச்சாம். இரண்டாவது நத்தை முதல் நத்தையை திருப்பித் தள்ள இரண்டுக்கும் சின்ன சண்டை வந்தது. அந்தச்சண்டையில் ரெண்டும் சேந்து காளான தள்ளிவிட காளான் தலைகீழா கவிந்திடுச்சாம். ரெண்டு நத்தைகளும் திடுக்கிட்டு காளானப் பாத்து நிற்க ரெண்டுக்கும் துக்கம் துக்கமா வந்துச்சாம். முதல் நத்தை இப்படிச் சொல்லிச்சாம்; இனி நாம….

நன்றி: பரதேசி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *