நதிக்கடியில் மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 6,895 
 
 

பெட்ரோ டி உர்டிமாயஸ் துறவியின் வேடமணிந்து பிச்சையெடுக்கப் புறப்பட்டான். அவனுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. மாலை நேரமானது. குன்றும் மலையும் ஏறி இறங்கி பசித்துக் களைத்த பெட்ரோ, திருடர்கள் குகையை அடைந்தான். அங்கே தங்கமும், வெள்ளியும் குவிந்து கிடந்தன. வறுப்பதற்காக ஒரு ஆட்டை சமையலறையில் கட்டித் தொங்கவிட்டிருந்தார்கள்.

தாங்கிக்கொள்ளவே முடியாமல் பசி அதிகரித்தபோது பெட்ரோ விரைவாக ஆட்டின் ஒரு காலை ஒடித்து அடுப்பில் சுடத் தொடங்கினான். அப்போதுதான் திருடர்கள் வந்தார்கள். “இவனை நாம் நதியில் மூழ்கடிக்க வேண்டும்” என்று பெட்ரோவைப் பிடித்து ஒரு சாக்கில் திணிக்கும்போது திருடர்களின் தலைவன் சொன்னான். சாக்கின் வாய்ப்பகுதியைக் கட்டி அவர்கள் அவனை குகைக்கு முன்னால் வைத்தார்கள். பிறகு சாப்பிடத் தொடங்கினார்கள்.

அப்போதுதான் மாடு கன்றுகளை ஓட்டிக்கொண்டு ஒரு மேய்ப்பன் அந்த வழியாக வந்தான். அவனது பாட்டைக் கேட்டபோது சாக்கின் உள்ளிருந்து “கடவுளே என்னைக் காப்பாற்று. அவர்கள் பணம் வாங்கிக்கொள்ளும்படி என்னை வற்புறுத்தியபோது உன் பொருட்டுதான் நான் அதை மறுத்தேன். நதியில் மூழ்கி நான் செத்துவிடாமல் நீதான் காப்பாற்ற வேண்டும்” என்று பெட்ரோ கத்தினான்.

பிரார்த்தனையைக் கேட்டு இடையன் நின்றான். அவன் சாக்கின் கட்டை அவிழ்த்தான். அதோ ஒரு துறவியின் தலை வெளியே வருகிறது!

“தந்தையே, என்ன ஆயிற்று?” மேய்ப்பன் கேட்டான்.

“ஒன்றும் பேச வேண்டாம் சகோதரா” பெட்ரோ சொன்னான்: “நான் பிச்சை கேட்பதைப் பார்த்து சில கனவான்கள் என்னிடம் ஒரு பை நிறைய பணத்தை வாங்கிக்கொள்ளும்படி சொன்னார்கள். நான் அவர்கள் சொன்னதைக் கேட்கவில்லை. என் ஆசிரமத்தில் உள்ளவர்கள் சிறிய தொகையை மட்டுமே வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் சட்டம். பை நிறையப் பணத்தை வாங்கிக்கொள்ளும்படி அவர்கள் என்னை மிகவும் கட்டாயப்படுத்தினார்கள். நான் மறுத்தேன். கடைசியில் அவர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. இதோ அவர்கள் என்னை இந்தச் சாக்கில் கட்டி நதியில் மூழ்கடிக்கப் போகிறார்கள்.”

“தந்தையே!” மேய்ப்பன் மகிழ்ச்சியுடன் சொன்னான்: “உங்களுக்கு நான் உதவி செய்கிறேன். உங்களுக்குப் பதிலாக இந்த சாக்கில் நான் புகுந்து கொள்கிறேன். உங்கள் உடைகளை நான் அணிந்து கொள்கிறேன். நீங்கள் இந்த மாடு கன்றுகளை ஓட்டிக்கொண்டு அடுத்த அடிவாரத்துக்குச் செல்லுங்கள். இருட்டு பரவத் தொடங்கிவிட்டது. அந்த கனவான்களுக்கு இந்த ஆள் மாறாட்டம் தெரியாது. என் மனது மாறிவிட்டது என்றும் எவ்வளவு வேண்டுமென்றாலும் பணம் வாங்கிக்கொள்கிறேன் என்றும் நான் அவர்களிடம் சொல்கிறேன்”.

அப்படி அவர்கள் உடைகளை மாற்றி அணிந்து கொண்டார்கள். மேய்ப்பனை சாக்கின் உள்ளே போட்டு கட்டிவிட்டு பெட்ரோ பசுக்களை ஓட்டிச்சென்றான். சாப்பாடும், மதுவும் உண்டு குடித்தபிறகு திருடர்கள் வந்தார்கள். ஒரு திருடன் சாக்கு மூட்டையை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டான். உடனே மேய்ப்பன் “நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் வாங்கிக் கொள்வேன்… ஒரு பை நிறைய, இரண்டு பை நிறைய, மூன்று பை நிறைய…” என்று கத்தினான். ஆனால் ’கனவான்கள்’ அதைக் கண்டுகொள்ளவில்லை. கடைசியில் இரண்டுபேர் சேர்ந்து சாக்குமூட்டையை நதியில் தூக்கி எறிந்தார்கள்.

மறுநாள் பெட்ரோ பசுக்களை ஓட்டிக்கொண்டு திருடர்களின் குகை முன்பாகச் சென்றான். அவன் குரலை வைத்து திருடர்கள் அவனை அடையாளம் கண்டுகொண்டார்கள். திருடர்களின் தலைவன் வியப்புடன் கேட்டான்: “தந்தையே, நீங்கள் எப்படி நதியிலிருந்து தப்பித்தீர்கள்?”

“கடவுள் என்னைக் காப்பாற்றினார் சகோதரர்களே! கடவுள் எப்போதும் பாவப்பட்டவர்களுடன்தான் இருப்பார். நதிக்கடியில் நிறைய புனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் என் கஷ்டங்களைப் பார்த்து மனம் வருந்தி, எனக்கு அன்பளிப்பாக இந்த மாடுகளைக் கொடுத்தார்கள். என்னைப் பாதுகாப்பாக கரையேற்றிவிட்டதும் அவர்கள்தான். என் நினைவுக்காக என் உடையை மட்டும் அவர்கள் வைத்துக்கொண்டார்கள். கடவுள் அவர்களை ஆசிர்வதிக்கட்டும்!” என்றான் பெட்ரோ.

“நண்பர்களே!” திருடர்களின் தலைவன் சொன்னான்: “இதுபோன்ற பசுக்கள் இருந்தால் ஆயுள் முழுதும் நாம் சுகமாக வாழலாம். பாவிகளுக்கு உதவி செய்கிற இந்தத் துறவி நிச்சயமாக நம்மை சாக்கில் போட்டுக்கட்டி நதியில் எறிவார். அப்படி நமக்குத் தேவையான பசுக்கள் கிடைக்கும்”. பிறகு அவன் பெட்ரோவிடம், “தந்தையே, எங்கள் வேண்டுகோளை நிராகரிக்காதீர்கள்” என்றான்.

“அப்படிச் செய்வதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் நான் ஆசிரமத்துக்குத் திரும்பிச் செல்ல தாமதமாகிவிடும். அதனால் என்ன? பரவாயில்லை” என்றான் பெட்ரோ.

“விரைவாக ஆகட்டும் நண்பர்களே!” திருடர்களின் தலைவன் சொன்னான். அவர்கள் எல்லாம் சீக்கிரமாக ஒவ்வொரு சாக்கிற்குள் புகுந்து கொண்டார்கள். பெட்ரோ உடனே சாக்கின் வாய்ப்பகுதிகளை இறுக்கமாகக் கட்டி, எல்லா சாக்கு மூட்டைகளையும் நதியில் எறிந்தான். பிறகு திருடர்களின் தங்கத்தையும், வெள்ளியையும் கொஞ்சகாலம் ஊதாரித்தனமாகச் செலவு செய்து வாழ்ந்தான்.

– ஆகஸ்ட் 2009 (ஒரு லத்தீன் அமெரிக்க நாடோடிக் கதையின் மொழிபெயர்ப்பு இது).

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *