நண்பர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 2,698 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

தெற்கு வடக்காக அகன்று நீண்டு கிடந்த மேலத்தெருவின் கிளைபோல் கிழக்கு நோக்கி ஒடுங்கலாகப் பிரிந்து சென்ற நடுத்தெருவில் திரும்பி அடியெடுத்து வைத்த ஆண்டியா பிள்ளையின் நடையில் தனியொரு வேகம் சேர்ந்தது. கைலாசம் பிள்ளையை சந்திக்கப் போகிறோம் என்ற துடிப்பு, அவர் கால் செருப்பின் “டப் – டிப்ட் ஒசையிலேயே உயிரொலி கொடுப்பது போல் தோன்றியது.

“அண்ணாச்சியை பார்த்து ஒரு வருசத்துக்கு மேலே ஆகுதே. இவ்வளவு நீண்டநாள் நான் இந்தப்பக்கம் வராம இருந்ததே இல்லை. ரெண்டு மாசத்துக்கு ஒருக்க, மூணு மாசத்துக்கு ஒருதடவை நான் இந்த ஊருக்கு வந்துக்கிட்டுத்தானே இருந்தேன்? அந்த ஜவுளிக்கடை வேலையை விட்டுப்போட்டு இன்னொரு கடையிலே சேர்ந்த பிறகு எங்கேயும் போக முடியாமலே ஆயிட்டுது.”

ஆண்டியாபிள்ளைக்கு பெருமூச்சு எழுந்தது. வேகம் வேகமாக நடப்பதனால் மட்டுமே வாங்கிய மேல்மூச்சு அல்ல அது…

மேலத்தெருவில் நடந்தபோதே, அதுக்கும் முந்தி பஸ்ஸில் வந்து கொண்டிருந்தபோதே, அவர் நினைப்பெல்லாம் கைலாசம் பிள்ளையைத்தான் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இரண்டு பேருக்கும் நீண்டகாலப் பழக்கம். சுற்றி வளைத்து ஏதோ ஒருவகையில் சொந்தம் கொண்டாடுகிற உறவு என்றாலும், அதைவிட அழுத்தமான நட்பு உணர்வு இரண்டு பேருக்கிடை யிலும் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆண்டியாபிள்ளை அந்த ஊருக்கு வரும்போதெல்லாம், “அண்ணாச்சி யோவ்!” என்று கூவிக்கொண்டு கைலாசம்பிள்ளை வீட்டை எட்டிப் பார்க்காமல் போவதில்லை. அண்ணாச்சியும் அவரைக் கண்டதும் அகமும் முகமும் மலர, “வாரும் வேய்” என அன்புடன் அழைத்து, “என்ன சவுக்கியம் எல்லாம் எப்படி?” என்று விசாரிக்கத் தவறியதுமில்லை.

அதிலிருந்து பேச்சு கிளைவிட்டு, கொடிகள் பரப்பி, எப்படி எப்படியோ தழைத்து, எது எதையோ தொட்டு, சகல விஷயங்களையும் பற்றிப் படரும். உள்ளூர் சமாச்சாரங்களை அண்ணாச்சி சொல்ல; அயலூர் அக்கப்போர், தெரிந்தவர்கள் பற்றிய வம்புகள், ரசமான கிசுகிசுப்புகள், மற்றும் பத்திரிகைச் செய்திகள் என்று ஆண்டியாபிள்ளை கூற, பேச்சு மணிக் கணக்கில் வளரும்.

இரண்டு பேரும் சுவாரஸ்யமாகப் பேசி மகிழ்வார்கள். காப்பி போட்டுக் கொண்டு வரும்படி அண்ணாச்சி உத்தரவிடுவார்.

காப்பி வரும். எந்த நேரமானாலும் கடுங்காப்பி”தான் – பால் சேர்க்கப்படாத கறுப்புக் காப்பி. அது ஒரு தனிச்சுவை கொண் டிருக்கும். மதினி கருப்பட்டியை தூக்கலாகவே போட்டிருப் பாள். ரொம்ப இனிச்சிருக்கும் பானகம் அது என்றாலும் ஆண்டியா பிள்ளை ருசித்துப் பருகுவார். சுவை பெரிதல்ல. அதில் அருவமாகக் கலந்திருக்கிற அன்புதான் முக்கியம். இது தம்பியா பிள்ளைக்குத் தெரியும்.

“தரித்திரம் புடிச்ச இந்த ஊரிலே பால் கிடைக்கிறதே இல்லை. தயிரு, மோரு எதுவுமே கிடைப்பதில்லை. அதனாலேதான் கடுங்காப்பி” என்று அண்ணாச்சி சொல்லுவார் – ஒவ்வொரு தடவையும் சொல்லுவார்.

“அதனாலென்ன, கடுங்காப்பிதான் டேஸ்ட். நல்லதும் கூட” என்று ஆண்டியாபிள்ளை கூறுவார்.

கிராமத்தில் உள்ள கறவை மாடுகளின் பால் எல்லாம் பண்ணையில் கறக்கப்பட்டு பக்கத்து டவுண்களுக்குப் போய்விடுவதால், ஊரிலே பாலுக்குத் தட்டுப்பாடு என்கிற உண்மையும் ஒவ்வொரு முறையும் அவர்களது பேச்சில் அடிபடும்.

இருந்தாலும், ஊரில் பால் தாராளமாகவே கிடைக்கிற நிலை இருந்தால்கூட, அண்ணாச்சியின் நிரந்தரமான பற்றாக்குறை பட்ஜெட் காப்பிக்குப் பால் வாங்குவதை அனுமதிப்பதில்லை. அதனால் என்ன?

இந்த உண்மையை ஆண்டியா பிள்ளையின் மனக்குறளி தானாகவே கூறிக் கொள்ளும். உரத்த சிந்தனையாக அல்ல.

கைலாசம்பிள்ளை தீனிப்பிரியர். சாப்பாட்டைவிட, நொறுக்குத் தீனி அவருக்கு, சீடை, தேன்குழல் என்று ஏதாவது எப்பவும் ஸ்டாக் இருந்து கொண்டேயிருக்கும். அது போக திடீரென்று நினைத்துக் கொண்டு, “ஆமைவடை பண்ணு, “வாழைக்காய் பஜ்ஜி செய்”, “உருளைக்கிழங்கு போண்டா செய்” என்று விருப்பம் தெரிவித்துக் கொண்டேயிருப்பார். அவர் வீட்டு மதினியும் அலுக்காமல் சலிக்காமல் அவருடைய ஆசைகளை நிறைவேற்றி வருவாள். அவள் கைக்கு ஒரு தனி ராசி. அவள் எதைச் செய்தாலும் அது தனி ருசியும் மணமும் பெற்றிருக்கும்.

இவை தவிர, வேர்க்கடலை என்றால் – சிறிய கடை வைத்து உள்ளூரின் சின்னச் சின்னத் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் சிறிதளவு லாபம் பெற முடியும் என்பதை அனுபவ பூர்வமாக நிரூபித்துக் கொண்டிருந்த பிச்சையாப்பிள்ளை சொன்னது போல – “கைலாசம்பிள்ளைக்கு உசிரு!” – அதுவும் எப்பவும் வீட்டில் இருக்கும்.

ஆண்டியா பிள்ளையும் – அண்ணாச்சியும் பேசி மகிழ்கிற வேளையில், வீட்டில் இருக்கிற தீனி தினுசுகள் தாராளமாக வந்து சேரும். வேர்க்கடலைக்குப் “பக்கமேளமாகக் கருப்புக் கட்டித்துண்டு.

நேரம் போவதே தெரியாது. சில சமயம் ஆண்டியாபிள்ளை, துண்டை விரித்துப் படுத்துப் பேசுகிறவர் அப்படியே தூங்கிப் போவதும் உண்டு. தூங்குகிறவரை அண்ணாச்சி தட்டி எழுப் மாட்டார்.

“பாவம், அலுப்பு! நல்லாத் தூங்கட்டும்” என்று விட்டு விடுவார். ஆண்டியாபிள்ளை தானாக விழிப்பு வந்து எழுந் உட்கார்ந்து, “அசந்து தூங்கிட்டேன் போலிருக்கே! இன்னமேதான் சாப்பிடணும்” என்பார்.

அண்ணாச்சி எவ்வளவு உபசரித்தாலும் ஆண்டியாபிள்ளை அங்கே சாப்பிட மாட்டார். “சொந்தக்காரங்க வீட்டுக்கே போய்விடுவார்.

இந்த நட்பு பலப்பல வருடங்களாகத் தொடர்ந்து வளர்வது. கைலாசம்பிள்ளை வீட்டை விட்டு வெளியே போவது கிடையாது. அதிலும், அவருக்கு ஆஸ்துமா கடுமையாகி-விட்ட பிறகு விட்டின் தெரு வாசல்படியைத் தாண்டியது இல்லை. ஆகவே, உறவினர் வீட்டுக்கல்யாணம், சாவு, ஏதேனும் விசேஷம் என்று அக்கம்பக்கத்து ஊர்க்களுக்குப் போய் வருவதும் நின்றுவிட்டது.

ஆண்டியாபிள்ளை மாதிரி வீடு தேடி வருகிறவர்கள்தான் சூரிய வெளிச்சமும், புதிய காற்றும்போல, அவரது சாதாரண நாட்களுக்கு விசேஷ உயிர்ப்பு தந்து கொண்டிருந்தார்கள். அனைவரிலும் ஆண்டியாபிள்ளைக்கு அண்ணாச்சியிடம் தனிப் பிடிப்பு; ஒரு தீவிரமான பற்றுதல். தனித்துச் சொல்லும்படியான காரணம் எதுவும் கிடையாது. உள்ளத்தில், உணர்வில், இயல்பாகத் தோன்றி வலுப்பெற்று விட்ட அன்பின் பிணைப்பு.

அதனால் அண்ணாச்சியை நீண்ட காலம் பாராமல் இருந்து விட்டது – அவருடன் பேச்சுப் பரிமாற்றம் செய்து ஊர் விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமல் போனது – பெரும் குறைவாகவே பட்டது அவருக்கு. இது அவர் உள்ளத்தில் உறுத்திக் கொண்டேயிருந்தது.

அந்த உணர்வுதான் அவரை பஸ்ஸிலிருந்து இறங்கியதும் நேராக கைலாசம்பிள்ளை வீட்டுக்கு உந்தித் தள்ளியது.

தெரு வாசல் படியில் கால் வைக்கும் போதே, “அண்ணாச்சி யோவ்” என்று குரல் கொடுத்தார் ஆண்டியாபிள்ளை.

திண்ணையில் இருந்த தம்பி சோம சுந்தரம், “வாங்க!” என்று அவரை வரவேற்றான். “உட்காருங்க!” என்றான். அவரை ஒருமாதிரியாகப் பார்த்தான்.

தோளில் கிடந்த துண்டை எடுத்து, திண்ணைப் பட்டியக் கல்லில் தூசி தட்டிவிட்டு, துண்டை மடித்தவாறே போட்டு அதன்மீது உட்கார்ந்தார் ஆண்டியாபிள்ளை. “பெரியவாள் வீட்டுக்குள்ளே என்ன செய்றாக? வெளியே காணோம்?” என்று கேட்டார்.

“உங்களுக்குத் தெரியாது? அண்ணாச்சி இல்லை. இறந்து போயிட்டாக…”

ஆண்டியாபிள்ளையின் முகத்தில் ஓங்கி அறைந்ததுபோல் இருந்திருக்க வேண்டும். திடுமென நெஞ்சில் குத்து விட்ட மாதிரி….

அவருக்கு மூச்சே நின்றுவிடும் போல் தோன்றியது. அதிர்ச்சி அவர் முகத்தில் வெளிச்சமாயிற்று. நம்ப முடியாதவர்போல் கேட்டார்:

“ஆங். என்னது?”

“அண்ணாச்சி இறந்து எட்டு மாதங்கள் ஆச்சு.”

ஆண்டியாபிள்ளை திகைப்புடன், “என்ன செய்தது..?” என்றார்.

“ஆஸ்துமாதான். ரொம்பவும் கஷ்டப்படுத்தி விட்டது.”

“சே, எனக்குத் தெரியாதே” என்று முணுமுணுத்தார் பிள்ளை. “அவாளை பார்க்க வராமலே போயிட்டேனே!”

குறுகுறு என்று உட்கார்ந்திருந்தார். வேறு எதுவும் சொல்லாமலே தரைமீது படுத்தார். கண்களை மூடிக் கொண்டார்.

சோமு அவரையே கவனித்தபடி இருந்தான். அவர் முகம் ஏதோ வேதனையைக் காட்டுவதாக அவனுக்குத் தோன்றியது. இந்தச் செய்தி அவருக்கு அதிர்ச்சி தந்து விட்டது என்று எண்ணினான்.

நேரம் ஊர்ந்து கொண்டிருந்தது. அவரை குரல் கொடுத்து உலுக்கலாமா என்று அவன் தயங்கினான்.

சட்டென்று அவரே நிமிர்ந்து உட்கார்ந்தார். “எனக்கு என்னமோ ஒரு மாதிரி வருது…” என்று மென் குரலில் சொன்னார். “நீத்தண்ணி இருக்குமா? ஒரு டம்ளர் கொடேன்” என்றார்.

சோமு வீட்டினுள் போய், பழஞ் சோற்றுப்பானையில் உள்ள தண்ணிரை ஒரு சிறுசெம்பில் எடுத்து வந்து அவரிடம் தந்தான். உப்பு சேர்க்கப்பட்டிருந்த அந்த நீராகாரத்தை அவர் குடித்தார். செம்பை கீழே வைத்துவிட்டு, மவுனமாக அமர்ந்திருந்தார்.

பிறகு எழுந்து, துண்டை உதறித் தோள்மீது போட்டுக் கொண்டு, “வாறேன்” என்று முனகியபடி நடந்தார். வந்தபோது இருந்த மிடுக்கு இப்போது இல்லை அவர் நடையில், நடப்பதே சிரமமான வேலையாக அமைந்து விட்டதுபோல் தோன்றியது.

சோமு அவருக்காக அனுதாபப்பட்டான். “பாவம்” என்று கூறிக் கொண்டான்.

அன்று பிற்பகலில் “ஆண்டியா பிள்ளை செத்துப்போனார்” என்ற செய்தி அவனுக்கு அதிர்ச்சியூட்டும் தகவலாகத்தான் இருந்தது.

– சிறுகதை களஞ்சியம் 1985

– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *