கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 30, 2018
பார்வையிட்டோர்: 7,990 
 
 

குமார் என் பால்ய சினேகிதன். மறக்க முடியாத எனது பள்ளிக்கூட நண்பர்களில் ஒருவன். நான் சிவகுமார். தனியார் நிறுவனத்தில் தனியாய் கணக்கெழுதுகிற வேலை, எல்லாம்… எந்தச் சங்கிலியும் இல்லாமலேயே நாள் முழுதும் நம்மைக் கட்டிப்போட்டுவிடுகிற அந்தப் பாழாய்ப் போன கணினியில் தான்.

இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது கடைசியாக நான் குமாரைப் பார்த்து. அடிக்கடி அவனை நினைத்துக் கொள்வேன். நமது சூழல்கள் எவ்வளவு தான் மாறினாலும் இப்படித்தான் சிலர் நமது நினைவுகளிலிருந்து நீங்காது இம்சையாக இருப்பார்கள் சிலர்.

எங்கிருக்கிறான் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று எதுவும் தெரியாத நிலையில் முகநூலில் அவனைத் தேடலாம் என முடிவு செய்தேன். “நண்பர்களைக் கண்டறியவும்” என்ற முகநூலின் வாசகம் என்னைச் சற்று சிந்திக்க வைத்தது. அதில் குமார் என்று தட்டச்சு செய்ய முகநூலில் உள்ள எல்லா குமார்களும் வரிசையாகத் தோன்ற ஆரம்பித்தனர்.

இந்த மாதிரி ஒரு பெயரை முகநூலில் தேடுவது தான் மிகப்பெரிய சவால் என்று புரிய ஆரம்பித்தது எனக்கு. தமிழ்நாட்டு குமார்கள் மட்டும் அல்ல தென் இந்தியா வட இந்தியா ஏன் இந்த உலகத்திலுள்ள அத்தனை குமார்களும் வரிசையாக வந்து கொண்டே இருந்தனர் அதில். இதில் எனது சினேகிதனை எப்படித் தேட. இந்த லட்சணத்தில் புகைப்படங்களுடன் சிலர் புகைப்படங்களை இல்லாத சிலர். நடிகர்களின் படங்களில் சிலர். நடிகைகளின் படங்கள் பலர். பூக்கள், மரங்கள்,மிருகங்கள் எனத்தொடங்கி கடவுள் படம் வரை, ஏன் ஒருவர் எலும்புக்கூட்டை முகப்படமாக வைத்திருந்தார். நிச்சயமாக அவர் நான் தேடும் குமார் இல்லை என்று உறுதியாக நம்பினேன்.காரணம் அவனுக்குப் பேய்கள் என்றாலே மிகவும் பயம். இப்படி அடிக்கடி கணினி மற்றும் அலேபேசி திரை வெளிச்சத்தினை வெறித்துப் பார்த்து பார்த்து கண்கள் களைப்படைந்தது தான் மிச்சம். தேடித் தேடிச் சலித்த பின் எனது தேடலை கைவிட்டேன்.

பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை வாரப் பத்திரிக்கை ஒன்றைப் புரட்டி கொண்டிருந்தேன். புதிய திரைப்படம் ஒன்றில் கவிப்பித்தர் என்ற புனைப்பெயரில் பாடல் எழுதி அந்தப் பாடல் மூலம் பிரபலமாகியிருந்த நண்பர் குமாரின் புகைப்படம் வெளியாகியிருந்தது. பள்ளி நாட்களில் கவிதைகள் கதைகள் புத்தகங்கள் என்றால் தூர ஓடும் அவனுக்குள் ஒரு கவிஞன் முளைத்திருந்தது பிரமிப்பாக இருந்தது.

உடனடியாக எழுந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள இல்லத்தரசியிடம் இது பற்றி பெருமையாகச் சொன்னதுதான் வினையாகிப் போனது. பிரபலமான ஒருவர் உங்கள் நண்பரா…என என்னைப் பெருமையாக நினைப்பாள் என்று நினைத்த எனக்கு..

“நீங்களும்தான் இருக்கீங்களே, ஒன்னுத்துக்கும் புரோஜனம் இல்லாம….

எப்பப்பாரு எதையாவது எழுதறீங்க. ஒரு பத்திரிக்கையிலையும் இன்னும் வந்தபாடில்லை…”

என்று ஆரம்பித்து விட்டாள்.

இனி இந்த விஷயத்தை யார் யாரிடம் சொல்லலாம், யாரிடமும் சொல்லக்கூடாது என்று பட்டியல் போட்டு யோசிக்க ஆரம்பித்தேன்.

அப்போது என் பத்துவயதுப் பிள்ளை ஒரு பாடலை ரசித்துப்பாடிக் கொண்டிருந்தான்.

“லூசு லூசா லூசு லூசா

போனேனே

லேசு லேசா லேசு லேசா

ஆனேனே..” என்று அவன் பாடிய பாடல் ஹிட் ஆகியிருந்ததும் அந்த அற்புதமான பாடலை எழுதியது என் நண்பன்தான் என்றும் தெரியவந்தது.

முகநூலில் கவிப்பித்தரை எளிதில் கண்டு கொண்டேன். ஏற்கனவே அவரது நண்பர்கள் பட்டியல் 5000 ஆக இருந்ததால் நான் பின்தொடர்பவர்கள் பட்டியலில் இடம்பெற்றேன். இப்படி எனது பெயர் அந்தப் பட்டியலில் இருப்பதை நண்பர் குமார் பார்த்து இருப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று தோன்றியது.

அவர் சென்னையில் வசிப்பவர் என்பது அதிலிருந்து தெரிந்தது. ஆனால் தொலைபேசி எண் இல்லை. சரி எப்படியும் அடுத்த முறை சென்னைக்குச் செல்லும் போது விசாரித்துக் கண்டுபிடித்து விடலாம் என்று இருந்தேன்.

குமாருடன் கழிந்த என் பால்ய நாட்கள் நினைவுக்கு வந்தது. பள்ளிக்கூட நாட்களில் எனது நெருங்கிய தோழன் குமார் தான். மதிய உணவை இருவரும் பகிர்ந்து உண்போம். சேர்ந்து படிப்போம். வகுப்பறைக்குப் போகாமல் கட் அடித்து தியேட்டகளுக்குப் போவதுமுண்டு அடிக்கடி. அந்த கால திரைப்படங்களில் சின்ன சின்ன விஷயங்களில் கூட நீதி, நேர்மை இவை வலியுறுத்தப்படும். கதைகளோ உணர்ச்சி வசப்பட வைத்து மெய்சிலிர்க்க வைக்கும். படம் பார்க்கும் எங்களுக்கோ ‘கட்’ அடித்துப் படம் பார்க்க வந்த குற்ற உணர்ச்சியுடன் படத்தின் தாக்கமும் சேர உணர்ச்சிப் பிழம்பாய் உருகிப்போய் கண்ணீர் விடுவோம். ஆனாலும் அடுத்த புதுப்படம் வரும்போது கடமை தவறாமல் கட்அடித்துப் போய் மீண்டும் உணர்ச்சிப் பிழம்பாய்…

பரிட்சை நெருங்க திடீரென படிக்கிற பிள்ளைகளாய் மாறி பரீட்சைக்கு முதல் நாள் பரபரப்பில் இருவரும் சேர்த்து படிக்க ஆரம்பிப்போம். கடினமான கணக்கைப் பாதிவரை போட்டுவிட்டு இதற்கு மேல் எப்படிச் செய்வது என்று நான் முழிக்க அவனோ தனக்கும் அது வரை தான் தெரியும் என்கிற பதிலை தயாராகச் சொல்லி விடும் அளவுக்கு ஒத்த கருத்துள்ள நண்பர்களாக நாங்கள் இருந்தோம்.

ஊரில் எங்கள் வீட்டுக்கு வலதுபுற மூலையில் மொட்டை மாடிக்குச் செல்ல படிக்கட்டுகள் இருக்கும். அதில் சில சொளகரியங்கள் இருந்தன. பள்ளியில் எங்கள் சீனியர் நண்பர் ஒருவர் பழக்கமாக…

“பீர் தான் உடம்புக்குக் குளிர்ச்சி.

பீர் குடித்தால் உடம்பு தேரும்… “ என்று ஒல்லியாக இருக்கும் எங்களிடம் சொல்ல அதை வேதவாக்காக அப்படியே நம்பிவிட்டோம். நண்பர்கள் இருவரும் கஷ்டப்பட்டு காசுசேர்த்து பீர் பாட்டில் வாங்கி ஒரு மஞ்சப்பையில் வைத்து ரகசியமாகப் படியேறி மொட்டை மாடிக்குச் சென்றோம். அங்கு அமர்ந்து நாயர் கடை புரோட்டா சால்னாவுடன் சாப்பிட்டுவிட்டு மிகுந்த ஆவலுடன் இரண்டு மூன்று கழித்து எடை இயந்திரத்தில் எங்கள் வெயிட் பார்த்து ஏமாந்துபோனோம்.

ஒருமுறை எங்கள் ஊர் வாய்க்காலில் தண்ணீர் நிறைந்து ஓட இருவரும் படித்துறையில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தோம். நன்றாக நீந்தத் தெரிந்த நாம் தண்ணீரில் இறங்கி நீச்சலடிக்க ஆர்வ கோளாறினால் அரைகுறையாக நீந்தத் தெரிந்த அவனும் இறங்கினான். திடீரென்று அவன் தத்தளிப்பதை பார்த்த நான் நீந்திச் சென்று அவனைக் கரை ஏற்றினேன். அந்த வகையில் நான் அவனது உயிர் நண்பன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அந்தச் சம்பவத்திற்காக குமாரின் உறவினர்கள் எனை திட்டித்தீர்க்க அவனது அம்மா மட்டும், “நல்லவேளைப்பா…எம்புள்ள உசிரைக் காப்பாத்திட்டே…” என்றார்.

இன்னொரு சமயம் நான் குமார் மற்றும் இன்னொரு நண்பன் ராஜா மூவருமாகச் சைக்கிளில் டிரிபில்ஸ் சவாரி செய்தோம். ராஜா சைக்கிளை ஓட்டி வர முன்புறமாக நானும் பின் இருக்கையில் குமாரும் அமர்ந்திருந்தோம். எங்கள் ஊர் மேம்பால இறக்கத்தில் சைக்கிள் வேகமாக இறங்க எதிர்ப்புறமாக மற்றோரு சைக்கிளில் கோழிகள் அடைத்து வைத்த கூடையுடன் வந்தவர் மீது மோதிவிட்டோம். அவர் சைக்கிள் சாய்ந்து கீழே விழு அவரின் சைக்கிளின் முன் சக்கரம் எட்டாய் வளைந்தது. கூடையும் கீழே விழுந்ததில் சேதாரம் ஆகி இருந்தது. இதில் ஆத்திரமடைந்த அந்த ஆள்

எங்களை மிக மோசமான வார்த்தைகளில் வசைபாடிய போது நிறைய புதிய வார்த்தைகளை கற்றுக் கொண்டோம். அந்த ஆள் எழுந்து சுதாரிப்பதற்குள் நண்பன் ராஜா சைக்கிளை மிக வேகமாக மிதித்தான். மூவரின் இதயமும் திக்திக் என்று அடித்துக்கொள்ள. வசைபாடியபடி துரத்திக்கொண்டு ஓடி வந்தவரிடம் சிக்காமல் சந்து பொந்துகளில் புகுந்து ஒருவழியாகத் தப்பித்தோம். மூவரும் அவரவர் வீட்டிற்குச் சென்ற பின்னரும் அந்த அதிர்ச்சியிலிருந்து வெகுநேரம் விடுபடாமல் இருந்தோம். எங்கே அந்த ஆள் என் வீடு தேடி வந்து விடுவானோ என்கிற பயம் எனக்குள் இருந்தது. அதற்கு அடுத்த ஆறு மாத காலம் நானும் எனது நண்பர்களும் அந்த மேம்பாலம் இருந்த பக்கம் செல்லவே இல்லை.

கோழி வாங்குவதற்குக் கூட கோழிக் கடைக்கு செல்வதைத் தவிர்த்தேன். அந்தப் பயம் எங்களுக்கு அடுத்த சில வருடங்களுக்கு எனக்கு இருந்தது என்னவோ உண்மைதான். இருந்தாலும் அப்படித் தப்பித்ததை பெருமையாகப் பேசுவான் குமார்.

வளர்ந்தபிறகு அந்தச் சம்பவம் என் மனதை உறுத்த அதற்குப் பரிகாரமாகத் தான் நான் இன்று வரை ரோட்டில் சைக்கிளில் எதை வைத்துக்கொண்டு விற்றாலும் அவர்களிடம் காசு கொடுத்து எதையாவது வாங்காமல் இருந்ததில்லை.

பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரியில் சேரவேண்டிய தருணம் வந்தது. குமாரின் தந்தைக்கு அலுவலக பணியில் வெளியூருக்கு மாற்றலாகிட நாங்கள் அப்போது பிரிய நேர்ந்தது. கைப்பேசிகள் இல்லாத அந்தக் காலத்தில் அதன் பிறகு எங்களால் தொடர்புகொள்ள முடியாமலேயே போய்விட்டது.

அலுவலக நண்பர் ஒருவரின் தூரத்து உறவினர் மூலமாக குமார் சென்னையில் நண்பர் தங்கி இருக்கும் பகுதி மற்றும் அவரது செல்பேசி எண் கிடைத்தது.சென்னைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் அடுத்த மாதமே ஏற்படசென்னையில் எனது பணிகளை முடித்த பின் நண்பர் குமாரை அலைபேசியில் அழைத்தேன்.

ஆனால் மறுமுனையில் இருந்து எந்தப் பதிலும் இல்லை. என்னுடைய செல்பேசி எண் நண்பரிடம் இல்லாததால் அழைப்பு யாரோ ஒரு முகம் தெரியாத மூன்றாம் நபரிடமிருந்து வந்திருப்பதாக நினைத்து பதில் சொல்லாமல் தவிர்த்திருக்கலாம் என்று நினைத்தேன்.

தொடர்ந்து முயற்சி செய்ய மறுமுனையில் குமார் ஹலோ என்றான். பதிலுக்கு ஹலோ குமார் சாருங்களா… நான் சிவகுமார். உங்கள் பள்ளிக்கூட தோழன் என்று நினைவூட்டினேன்.

சில விநாடிகள் மொளனமாக இருந்த குமார்…

“ஓ நீங்கள் சிவக்குமாரா…” என்றார்.

என்னதான் பால்ய நண்பனாக இருந்தாலும் நட்பை விட்ட இடத்தில் தொடரமுடியுமா என்று தெரியவில்லை.

“என்னடா எப்படியிருக்கே…”

என வாய்வரை வந்துவிட்ட வார்த்தைகளை மாற்றி…

“என்ன…எப்படி இப்படி இருக்கீங்க…?” என்றேன்.

“நல்லாயிருக்கேன். நீங்க என்ன செய்றீங்க…” எனக் கேட்டான். நான் தனியார் நிறுவன வேலையில் இருப்பதாகப் பதில் சொல்லிக் கொண்டிருக்கையில் மன்னிக்கனும் நண்பரே நான் இப்போது அவசரமாக ஒரு படப்பிடிப்புக்கு சென்றாக வேண்டும் அடுத்த மூன்று நாட்களுக்கு ஹைதராபாத்தில் இருக்கவேண்டும் என்றான்.

பிறகு பேசலாம்…உங்களை நேரில் பார்க்க வேண்டுமே என்றேன். அந்த வார ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு திரைப்படத்தின் துவக்கவிழாவில் பங்கு பெற இருப்பதாகவும் அங்கு வந்தால் நேரில் பார்க்கலாம் என்றான்.

பிரபலமான பின் பிஸியாக இருப்பது ஒன்றும் பெரியவிஷயமில்லை என்று

நினைத்துக் கொண்டேன்.

சனிக்கிழமை ஊருக்குத் திரும்புவதற்கு டிக்கெட் ரிசர்வ் செய்திருந்த நான் அதை கேன்சல் செய்து மறுநாள் இரவுக்கு புக் செய்தேன். வெயிட்டிங் லிஸ்டில் பெயர்வர பார்த்துக்கொள்ளலாம், எப்படியும் நண்பனைப் பார்ப்பது தான் முக்கியம் என்று நினைத்தேன்.

ஆறு மணிக்கு விழா.

ஐந்து மணிக்கே மண்டபத்தில் காத்திருந்தேன். கூட்டம் நிரம்பி வழிந்தது. சில வி ஐ பி.க்கள் வருவது காலதாமதமாக விழா ஒரு மணிநேரம் தாமதமாக துவங்கியது. குமாரைத் தேடினேன். எழு மணிக்கு வந்தவன் நேரடியாக மேடைக்குச் செல்வதை தூரத்தில் அமர்ந்தபடி பார்த்தேன். எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது அவனைப் பார்த்து.

என்னைப் போலவே எனது நண்பனும் மாறிப் போயிருந்தான். தலையில் வழுக்கை விழுந்திருந்தது. தொப்பை மட்டும் சற்று பெரிதாக வளர்ந்திருந்தது. விழாவில் பேசிய அவன் அதாவது கவிப்பித்தர் அந்தப்டத்தின் நாயகனாகனுக்கும் தனக்குமான நட்பு மிக ஆழமான தென்றும் நட்பு தான் ஒரு மனிதன் சம்பாதிக்கிற மிகப்பெரிய சொத்து என்றும் பேசினார். விழா முடிய ஒன்பது மணியாகி விட்டது.

கூட்டத்தில் முண்டியடித்து நண்பரைச் சந்திக்கமுடியவில்லை. அவர் விழா முடிந்த சில நிமிடங்களிலேயே புறப்பட்டு விட்டார். நானும் அவசரமாகப் புறப்பட்டு வந்து ஊருக்கு ரயில் பிடித்தேன்.

ஊர்திரும்பிய நான் சில வாரங்களுக்குப் பிறகு அவ்வப்போது செல்பேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன். நீங்கள் அழைத்த நபர் வேறு ஒருவருடன்….என்று ஒரு தோழி அடிக்கடி பதில் சொன்னாள்.

ஐந்தாறு முறை லைன் கிடைத்து விடப் பரவசத்தில் நான் காத்திருக்க எதிர்முனையில் ரிங் சத்தம் தொடர்ந்து முழுமையாக ஒலித்து கால் முடிந்துவிடும்.

அதற்குப்பிறகு நான் கவிப்பித்தருக்கு கால் செய்வதில்லை. நினைவில் எஞ்சியிருந்த என் பால்ய நண்பன் குமாருடனிருந்த நட்பு எனக்குள் தொடர்ந்து கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *