நடைபாதையில் ஞானோபதேசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 13,502 
 
 

இடம்: மூர் மார்க்கெட்டுக்குள் மிருகக் காட்சிச் சாலைக்குப் போகிற வழியில் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலுக்கு நேரே வேலியோரப் பிளாட்பாரம்.

நான் போகிற நேரத்தில் அந்த மாந்திரீகக்காரக் கிழவர் கடையைக் கட்டிக் கொண்டு புறப்படத் தயாராகிறார்.

“அடடா, கொஞ்சம் முந்திக் கொள்ளாமல் போய்விட்டோ மே” என்று அங்கலாய்க்கிறார் கூட வந்தவர்.

“அதனாலென்ன? போய்க் கொஞ்சம் நெருக்கமாக நாம் நின்றோமானால், சற்று நேரத்தில் இன்னும் பலர் நிற்க ஆரம்பித்து விடுவார்கள். அப்புறம் இந்த ‘ஆடியன்ஸை’ விட முடியாமல் கட்டிய கடையைப் பிரிக்க ஆரம்பித்து விடுவார் ம்னுஷன்” என்று கூறினேன். நானும் நண்பரும் போய் நிற்கிறோம். பெட்டி மேல் பெட்டியாக அடுக்கி வைத்துத் துணியாலும் கயிற்றாலும் இறுக்கி இறுக்கி மூட்டையைக் கட்டிக் கொண்டே பக்கத்திலிருந்த ஒரு நாட்டுப்புறவாசியிடம் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கிறார், மாந்திரீகர். அவர் பேச்சில் பல இடங்களில் குறில்-நெடில் வித்தியாசம் இல்லாமல் எல்லா வார்த்தைகளும் நீண்டே ஒலிக்கிறது.

“மந்திரேம் மாயம் எல்லாம் ஒரு பக்கம் தள்ளூய்யா. வாக் ஸீத்தம் ஓணும். சுத்தமான வாக்குதான் மந்தரம். சொல்லுதான்யா நெருப்பூ. மனஸ் சுத்தமா இருக்கணும். கெட்ட நெனப்பு, ‘இவனே அயிச்சுடணும்’, ‘அவனே ஒயிச்சுடணும்’னு நெனக்கிற மனஸ் இருக்கே- அதான்யா ஷைத்தான். ஷைத்தான் இங்கே கீறான்யா..இங்கே! வேறே எங்கே கீறான்? மானத்திலே இல்லை… ஷைத்தானும் இங்கேதான் கீறான். ஆண்டவனும் இங்கேதான் கீறான். நல்ல நெனப்பூ ஆண்டவன்; கெட்ட நெனப்பூ ஷைத்தான்” என்று மார்பில் தட்டி நெஞ்சை உணர்த்துகிறார்.

“எல்லாரும் நல்லாருக்கணூம்னு நெனைக்கிறான் பாரூ… அவனே மந்திரேம், மாயம், பில்லீ, சூனீயம், பேய் பிசாசூ … ஒண்ணும் (ஒரு நாசுக்கில்லாத வார்த்தையைக் கூறித் தன் கருத்துக்கு அழுத்தம் தந்து) செய்ய முடியாது…இத்தெ மனசிலே வெச்சுக்க…”

“துட்டூக்கோசரம்…வவுத்துக்காக அக்குரமம் பண்ணறது நம்ம தொயில் இல்லே… எதுவோ தமாஷீக்குத்தான் மந்திரேம், மாயமெல்லாம்… தொயில் மருந்தூ குடுக்கறது… ஆனா, மருந்து செய்யறதுக்குத் துட்டூ ஓணும்பா… இந்த மருந்தூ தெருவிலே வெளையுதூன்னு நெனைச்சிக்கீனியா?… அபுரூபமான மூலிகைங்க… வேருங்க… மஸ்தான சரக்குங்க… எல்லாம் சேத்து உடம்பே கசக்கிப் பாடு பட்டு செய்யறது இந்த மருந்தூ… நோவு வந்துட்டா துட்டெப் பார்க்கலாமா?… வர் ரூபா வர் ரூபாவா இருவது ஊசி போட்டுக்கினு நோவை வெச்சிக்கினு இருக்கறாங்க… பத்து ரூவா பத்து ரூவாவா ரெண்டு ஊசி போட்டுக்கினா நோவு ஓடுது… அத்தெ நென்சிப் பார்க்கறதில்லே…”

“அந்தக் காலத்திலே தொரைங்களுக்கு, நவாப்புங்களுக்கெல்லாம் மருந்தூ குடுத்து, வித்தெ காமிச்சி மெடல் வாங்கி இருக்கேன்… செட்டீ நாட்டுப் பக்கமெல்லாம் போயிருக்கேன். அப்பல்லாம் இந்த பாபாவுக்கு ரொம்ப மரியாதி, அந்த ஸைட்லே. அப்பல்லாம் வெள்ளைக்கார தொரைங்க அள்ளிக் குடுப்பானுங்க… எண்ணீக் குடுக்கற பயக்கமே கெடையாது… இப்பத்தான் நம்ம மாதிரி தாடி வெச்சிக்கினு கால்லே செருப்பூ இல்லாமெ வெள்ளைக்கார தொரைங்க பிச்சேக்காரனுங்க மாதிரி இங்கே சுத்தறானுங்க…” (இங்கே அவர் குறிப்பிடுவது நாமெல்லாம் ‘ஹிப்பீஸ்’ என்று சொல்கிறோமே, அவர்களை.)

“நாம்பள் செகந்தரபாத், பூனா, பம்பாய், கான்பூர் எல்லாம் சுத்தினவன்தான்… அந்தக் காலத்திலே ரெண்டு கோழி இருவது ரொட்டி துண்ணுவேன்… இப்பத்தான் சோத்துக்கே தாளம் போடுது… அடே! அதிக்கென்னா… அதி வர் காலம்; இதி வர் காலம்… ஆனா மருந்து அன்னக்கிம் இதான்… இன்னக்கிம் அதான்… வித்தேகூட அப்பிடித்தான். நல்ல மனஸ் ஓணும்பா. வாக் சுத்தம்… மனஸ் சுத்தம் இருக்கு… ஆண்டவன் நம்ப கூட இருக்கறான்…”

“இன்னொருத்தனுக்குக் கெடுதி நெனைக்காதே. நீ கெட்டுப் பூடுவே… நல்லதே நெனை. ஆண்டவனை தியானம் பண்ணு. எதிக்கோசரம் ஆண்டவனை தியானம் பண்ணூ சொல்றேன்… ஆண்டவனுக்கு அதினாலே எதினாச்சும் லாபம் வருதூ… இல்லேடா, இல்லே! உனுக்குத்தான் லாபம் வருது. கெட்ட விசயங்களை நெனைக்கிறதுக்கு நீ யோசனை பண்ணமாட்டே… ஆண்டவனை நெனைச்சிக்கடான்னா மேலேயும் கீயேயும் பார்த்துக்கினு யோசனை பண்றே… எல்லாத்துக்கும் நல்ல மனஸ் ஓணும்…”

“சரிப்பா… நாயி ஆவுது… வெயிலு பட பேஜாரா கீது… சைதாப்பேட்டைக்குப் போவணும்… நா வரேம்பா. ஆமா, நீ எப்போ ஊருக்குப் போறே?” என்று அந்த நாட்டுப்புறத்துக் கஸ்டமரை விசாரிக்கிறார்.

“சாயங்காலம் ஆவும்” என்கிறார் கஸ்டமர்.

“போற வயிமேலே சைதாப்பேட்டையிலெ வூட்டாண்டேதான் இருப்பேன்… வந்தூ பாரூ… மருந்தூ தயார் பண்ணி வெச்சிருக்கேன். வாங்கிக்கினு போ. இன்னாப்பா யோசிக்கிறே? துட்டூ கொண்டாரலியா?”

-நாட்டுப்புறத்துக் கஸ்டமர் பல்லைக் காட்டுகிறார்.

“துட்டூ கெடக்குது. மருந்து வந்து வாங்கிக்கினு போ. நோவு இருக்கும் போது மருந்தூ குடுக்கணும். துட்டூ இருக்கும்போது துட்டூ வாங்கிக்கறேன்… அப்புறமாக் கொடு. உடம்புக்கு நோவு வந்தா மருந்தூ இருக்குது… மனஸ் நோவுக்கு ஆண்டவன்தான் பாக்கணும்… நல்ல மனஸ்தான் ஆண்டவன். கெட்ட மனஸ் ஷைத்தான்..” என்ற ஒரு சூத்திரத்தைப் பல தடவை திருப்பிச் சொன்னார் அந்த
பாபா.

அவர் பெயர் பாபா என்று அந்தக் கஸ்டமரைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

மூட்டை கட்டியான பிறகு சில வினாடிகள் கண்களை மூடி மார்புக்கு நேரே இரு கைகளையும் ஏந்தி, சிறிது கடவுளைத் தியானம் செய்த பிறகு காவடி மாதிரி ஒரு கம்பின் இரு முனைகளிலும் மூட்டையைக் கட்டித் தொங்க விட்டுத் தோளில் தூக்கிக் கொண்டு எழுபது வயதுக்கு மேலான பாபா தெம்புடன் நடக்க ஆரம்பித்தார்.

நான் காஞ்சிப் பெரியவாளிடமும், ராமகிருஷ்ண பரமஹம்சரிடமும், பைபிளிலும், நீதி நூல்களிலும் பயில்கிற ஞானத்தையே- இந்த நடைபாதைப் பெரியவர் தன்னிடம் வந்து கூடுகிறவர்களுக்கு உபதேசம் செய்வதைக் கண்டேன்.

ஞானங்களும் நல்லுபதேசங்களும் வாழ்க்கையின் எல்லா வழிகளிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

மகான்களையும், வேத வித்துக்களையும், நீதி நூல்களையும் நாடிச் சென்று ஞானம் பெற எல்லா மனிதர்க்கும் முடிவதில்லை. எனவே இந்த மாதிரி மனிதர்களின் மூலம் அது மூர்மார்க்கெட் நடைபாதையில் கூட விநியோகிக்கப்படுகிறது.

இந்த பாபா ஒரு ஞானவான் தான்.

(எழுதப்பட்ட காலம்: 1972 வாக்கில், “நான் மீண்டும் சந்திக்கிறேன்” என்னும் தொடரில் வெளிவந்த இந்தப் படைப்பு “அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்’ என்ற புத்தகத்தில் “நான் சந்தித்த இவர்கள்” என்னும் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது.)

நன்றி: அவர்கள் உள்ளே இருக்கிறார்கள், ஜெயகாந்தன் – ஐந்தாம் பதிப்பு: 2000 – மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – 1

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *