கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி புனைவு
கதைப்பதிவு: August 20, 2020
பார்வையிட்டோர்: 7,279 
 

நாய்களில் அகிடாஇனு, பிட்புல், புல்டெரியர், கிரேட்டேன், பிரேசிலியன் மஸ்டிஃப், டாபர்மேன் பின்ஸ்சர்ஸ், பொம்மரேரியன், ஹஸ்கீஸ், ராட்வெய்லர், சிப்பிப்பாறை, தால் மாட்யன், லெப்ராடோர், அல்சேஷியன் என்கிற ஷெஃபர்டு, இப்படி பல வகை இனங்கள் இருக்கின்றன.

இருப்பினும் ராஜபளையம் நாட்டு நாய்க்கு எதுவும் ஈடாகாது. பழங்காலத்தில் ஜமீன்தார், பெரும் நிலக்கிழார்கள் வேட்டைக்கு செல்லும் போது இந்த வகை நாயைத் தான் பயன் படுத்தினார்கள்.

நாய்கள் எந்த வகையாக இருந்தாலும் அதனை குட்டியிலிருந்து எடுத்து வளர்த்தால் நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். புத்திசாலியான அவைகள் மனிதனுக்கு நல்ல, நம்பிக்கையான நண்பனாக இருக்கும். வீட்டில் திருடன் வந்து, நாய்களிடம் சிக்கினால் அவ்வளவு தான், நினைக்க முடியாத அளவில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

இந்த சிறுகதைக்கு ஹீரோவாக இருப்பது நம்ம சிபி தான். அதனால் தான் இவ்வளவு பீடிகை. இந்தறிவு ஜீவனேயானாலும் சிபிக்கு தங்கமான மனசு. எஜமான் விசுவாசத்தில் எவரெஸ்டை விட உயர்ந்தது. தோற்றமும் உயரமானது தான்.

தொழில் நிமித்தமாக ராஜபாளையம் சென்ற போது குட்டியாக வாங்கி வந்தது தான் சிபி. சாகசங்கள் செய்யக் கூடியது. மின்னல் வேகத்தில் மணிக்கு ஐம்பது கிலோ மீட்டர் வரையில் ஓடக்கூடிய அபார ஆற்றல் கொண்டது. இதனிடம் இது வரையில் யாரும் அகப்பட்டது கிடையாது. துரதிர்ஷ்டமாக மாட்டினால் நாலு கால் பாய்ச்சலில் பதறி அடித்து ஓடுவார்கள்.

வம்பு தும்பு பண்ணி இது வரையில் யாரும் தன்னிடம் வாலாட்ட வில்லையே என்ற ஏக்கம் சிபிக்கு உண்டு. அப்படி வம்பு செய்தால் அவர்களை துரத்தி வளைத்து தொடையை கடித்து திண்ண வேண்டும் என்ற அவா கொஞ்ச நாட்களாக தீரா வெறியாக இருந்தது.

எஜமான், வேணும் என்கிற அளவுக்கு கறியும் கருவாடும் போட்டு திங்கச் செய்தாலும், அதற்கு நரன் தொடை தின்ன தீராத ஆசை உருவாகியது.

வெளி ஆள் யாராவது எதையாவது தின்ன கொடுத்தால் மோப்பம் கூட பிடிக்காது. ஃபுட் பால்தான். எட்டி உதைத்து தூர தள்ளிவிடும். மயக்க மருந்து கலந்துக் கொடுத்து, மயங்கச் வைத்து விடுவார்கள் அல்லது விஷம் கலந்து சாகடித்து விடுவார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு அதிகம். வளர்ப்பு அப்படி.

வீடு இருக்கும் இடம் புறநகர் பகுதி. பத்திரமாகவும் முன்னெச்சரிக்கை யாவும் இருக்க வேண்டிய இடம். வீட்டார்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று வந்து போவோர்களின் தாட்சண்னியம் அறிந்து நடந்து கொள்ளும் விஷயத்தில் தந்திரசாலி.

வீட்டைச் சுற்றியும், வீட்டுக்குள்ளேயும் வாலை ஆட்டிக் கொண்டு, சத்தமிட்ட படி சும்மா துரு..துரு..வென சுற்றிக் கொண்டிருக்கும்.

அன்று, எஜமான் நகைகளையும், பணக்கட்டுக்களையும் இரும்பு பெட்டியிலிருந்து எடுத்து சரி பார்த்து, உள்ளே வைக்க வேண்டிய கூடுதல் பணத்தையும் சேர்த்து பெட்டியில் வைத்து அழுத்த்தி பூட்டி, அந்த பூட்டுக்கு நான்கு எண்களை அழுத்தி டிஜிட்டலால் பத்திரப் படுத்தி நிம்மதி அடைந்தார்.

வாலை ஆட்டிக் கொண்டு ஹஅ. . ஹ்அ. . .ன்னு மூச்சிரைப்புடன், நாக்கை வெளியே தள்ளி உள்ளிழுத்து தொடர்ந்து செய்யும் இயல்பான அனிச்சை செயலால் பார்த்து பரவசமடைந்தது.

அதான் இவ்வ்வளவு இருக்கே, திருடன்கள் எவனும் மோப்பம்(?) பிடித்து வரலையே. . ஏன்.,? என்ன காரணமாக இருக்கும்.,? என்று யோசித்தது.

நாய் விற்ற காசு குறைக்காது சரி, கருப்பு பணத்தைக் கொள்ளை அடித்தால் செல்லுபடி ஆகாதோ.,! என்னவோ.,? திருடனுக்கே வெளிச்சம். நினைத்த சிபி எஜமான் காலை சுற்றி வந்து கவலைப் படாதீங்க, ஒரு பயலும் தொடாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற பாவனையில் குழைந்து வாலை ஆட்டியது.

சிபியின் கடுங்காவலில் நாட்கள் நகர்ந்தன.

கடந்த நாலைந்து நாட்களில் அந்த வீட்டை உளவு பார்த்துக் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டினான் திருடன்.

ஓய்வாக படுத்து யோசனையில் இருக்கும் சிபி அதை கவனிக்க தவறவில்லை. என்ன இவன், வீட்டுக்கு முன்னால் அடிக்கடி வந்து குட்டிப் போட்ட பூனையாட்டம் அங்கேயும் இங்கேயும் நடந்து ஆளவட்டம் போடுறான்.,?.,! வீட்டை நோட்டம் பார்க்கிறானா. .? இல்லை இது போல ஒரு வீட்டை பக்காவா கட்டனும் என்று பிளான் பண்ணுகிறானா.,? ஆளையும் மூஞ்சியும் பார்த்தால் வீடு கட்றவனா தெரியலை. . .

சற்று உன்னிப்பாக பார்க்கிற போது திருட திட்டமிடுகிறான் என்று அதன் மூளை தெரிவித்தது. வரட்டும். . என்று கருவிய சிபி, பார்க்க பாவமா இருக்கான், கடித்து வைத்தால் தாங்க மாட்டானே. .என்று பரிதாபம் கொண்டு தனது ஆசையை அடக்கி வைத்துக் கொண்டது.

திருடன் அடுத்தடுத்து நோட்டம் விடுகிற போது இவனோட எண்ணத்தை விரட்டி அடிக்கனும் என்ற நல்லெண்ணத்தில், தான் இருப்பதை குரைத்து லொள்ளு விட்டது. வந்தால் நீ அம்பேல் என்று வேறு வகையில் குரைத்து உஷார்ப் படுத்தியது.

ம்ஹும். . திருடன் முயற்சியை கைவிடுவதாக இல்லை. குரைக்கிற நாய் கடிக்காது என்று சிபியைப் பற்றி சாதாரணமாக நினைத்து விட்டான் போல. .

திருடனுக்கு சமயம் வாய்த்தது.

எஜமான் தமது குடும்பத்துடன் திருப்பதி சென்று வர காரில் புறப்பட்டார். புறப்படும் முன்பு சிபியை கூப்பிட்டு, சிபி. . நாங்கள் யாரும் இல்லை என்பதற்காக உன் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டு, அலப்பரை பண்ணாதே, வேணுங்கிற அளவுக்கு தண்ணி, சோறு வைத்திருக்கிறோம். ராத்திரி, நாளை காலை, மத்தியானமின்னு மூணு வேளைக்கும் போதுமான சாப்பாடு இருக்கு., ஒழுங்கா சாப்பிட்டு, ஒழுங்கா வீட்டை பார்த்துக் கொள்ளனும். ஜாக்கிரதை, வீடு பத்திரம் என்றார்.

சிபி ஆமோதித்து ‘ழ’ கரத்தில் சத்தமிட்டு வாலை ஆட்டியது.

இரவு மணி பதினொன்று. அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரு விளக்குகள் எரிந்துக் கொண்டிருந்தன. வீடுகள் அமைதியில் மூழ்கி கிடந்தன. தூரத்தில் எங்கேயோ தெரு நாய் ஒன்று ஓலமிடும் சத்தம். இடை இடையே ஒன்றிரண்டு கார்கள், ஐந்தாறு பைக்குகள் ஓடும் வேகத்துக்கான வாகன சத்தம் கேட்கிறது. நோட்டம் விட்ட திருடன் வீட்டை எட்டிப்பார்த்தான்.

ஆள் அரவம் தெரிந்த சிபி, திருடனைப் பார்த்து குரைத்தது. ச்சூ. . ச்சூ. . என்று விரட்டினான். சிபி மீண்டும் குரைத்து பயமுறுத்தியது.

திருடன் கோழி பிரியாணியின் லெக் பீசை எடுத்து சிபி. . யிடம் தூக்கிப் போட, அது அதைக் கவ்விக் கொண்டு அப்பால் நகர்ந்து சென்று மௌனமாகியது.

திருடன் மீண்டும் ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, மார்புயர இரும்பு கேட் மேல் ஏறி உள்ளே குதித்து இறங்கினான். இடுப்பில் பென் டார்ச்சு, பென்நைஃப், பென் ஆஷா பிளேடு, இத்தியாதி கருவிகளும் செல் போனும் இருந்தது.

வீட்டின் முன் நின்ற திருடன் இடது புறமும் வலது புறமுமாக மெதுவாக நடந்து மேலே ஏறக்கூடிய வழியை ஆராய்ந்தான். தோதாக படலை. வீட்டின் பின்பக்கம் சென்று அண்ணாந்து பார்த்தான்.

தரை தளத்தின் கிரில் ஜன்னல் அதற்கான லாஃப்ட். அது போலவே அதற்கு நேர் மேலே முதல் தளத்துக்கான கிரில் ஜன்னல் அதற்கான லாஃப்ட். அருகில் மூன்றடி இடைவெளியில் மொட்டை மாடியிலிருந்து இறங்கும் பைப் குழாய் தெரிந்தது. அதைத் தொட்டு ஆட்டி ஆதாரத் திறனை சோதித்துப் பார்த்தான். அவன் நினைத்த படி வலுவாக இருந்தது.

பைப்பை பிடித்து ஏறினான். பேண்ட் இடைஞ்சல் செய்தது. பேண்டின் தொடை, இடுப்பைத் தூக்கி சரி செய்து கொண்டு ஏறினான். கை கால்கள் வழுக்க, உள்ளங்கை உள்ளங்கால்களை சுருக்கி, இறுக்கிப் பிடித்து ஏறுவது சிரம்மமாக இருப்பது முகச்சுளிவிலும் மூச்சுத் திணறலிலும் தெரிந்தது. பேண்ட் பாக்கெட்டில் இருந்த டூல்ஸ் பவுச் வெளியே எட்டிப் பார்த்தது.

பத்தடி உயரம் ஏறி பைப்பிலிருந்தபடி கீழ் ஜன்னலின் லாஃட்டுக்கு தாவினான். பவுச் கவர் விழுந்து ட்டணங்க். . என்றது. த்ச்சோ. . என்று உச் கொட்டியவன் அங்கிருந்து தரையில் குதித்தான்.

வீட்டின் பக்கவாட்டிலிருந்து முட்டிப் போட்டு மெதுவாக தவழ்ந்து வந்தது சிபி.

லேசான இலைச்சருகின் சத்தம் கேட்டு சுதாரித்த திருடன், சற்று நிதானித்து சுற்றிலும் பார்த்தான். இருட்டும் நிசப்தமும் இணைந்திருக்க சுவர் கோழியின் உய்யிங். . சத்தம் ஒலித்தது.

பவுச்சை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் பத்திரப் படுத்திக் கொண்டு மீண்டும் ஏறினான். ஏறும் சிரம்மம் இப்போது கனத்தது. ஜன்னல் லாஃட்டுக்கு தாவ எத்தனித்தான். ஏறிய உயரம் போதவில்லை, இன்னும் ஓரடி ஏற வேண்டும். மேலேறி தாவினான். கனுக்கால் இடறி மோதி கீழே விழ, லாஃப்ட் விளிம்பில் முழங்கால் உராய்ந்து சிராய்ப்பு ஏற்பட்டு இன்னும் கீழே விழ, பதறிய திருடன் துளி நம்பிக்கையில் கீழே விழாமல் லாஃப்ட் விளிம்பில் தொங்கினான்.

யோசித்து நிதானமாக குதிக்க, கால் அழுத்தமாக தரையில் பதிய கனுக்கால் வலி அதிர்வால் மண்டி போட்டவாறு விழுந்து உட்கார்ந்தான்.

ஈ..ய்ய்யே.. வலி வேதனையால் முகத்தின் வியர்வையை துடைத்துக் கொண்டு கண்களை திறந்தான்.

எதிரில் சிபி. பின்னங்கால் இரண்டையும் மண்டியிட்டு, முன்னங்கால்களை ஸ்ட்ரெயிட்டாக ஊன்றி, கோபமாக நாக்கை வெளியே நீட்டி ஆஅஹ். . . ஆஅஹ். . . என்ற சத்தத்துடன் வெறித்த படி நின்றிருந்தது. இருட்டில் கண்கள் மஞ்சளாய் ஒளிர்ந்தது. இது மயங்க வில்லையா.,? லெக் பீசை திங்கவில்லையா.,?

(இல்லடா என்று) சிபி உறுமியது.

அவனுக்கு மீண்டும் முகமெல்லாம் வியர்த்தது. பயத்தின் உச்சத்தை உணர்ந்தான். திருடுவதை விட இதனிடமிருந்து தப்பிக்க வேண்டுமே. .

எந்தப் பக்கம் ஓடினால் இலகுவாக தப்பிக்கலாம் என்று நினைத்து, முடிவெடுத்து விலுக்கென்று எழுந்திரிச்சு ஓடினான். அடிப்பட்ட வலது கால் விண் விணென்று வலித்தது.

திருட வந்ததோடல்லாமல், தப்பிக்கப் பார்க்கிறாயா என்ற பார்வையில் சிபி துரத்தியது. வீட்டின் முன்பக்கம் வந்த திருடன் ஹை ஜம்ப் சாம்பியன் இல்லாதவனாதலால் ஏணிப்படியில் ஏறுவது போல சர. . சரன்னு கேட் மீது ஏறினான்.

கேட்டின் மேல் உச்சிக்கு ஏறியவுடன், தெருப்பக்கம் இறங்க காலைத் தூக்கி தாண்டும் போது, கேட்டின் கம்பி வேல்முனை கால் காயத்தில் குத்தி, மேலும் ரணமாக்க அதை பொறுத்து கொண்டு, இறங்குவதில் முனைப்புக் காட்ட வேல்முனை பேண்டை குத்தி டர்ரென்று கிழிக்க, திருடன் தன் தொடை தெரியும்படி இறங்கி விழுந்தான்.

துரத்தி வந்த சிபி தெரு விளக்கு வெளிச்சத்தில் தொடையைப் பார்த்ததும், நாக்கு ஜொள்ளு விட்டது. லெக் பீசை கொடுத்தா என்னை ஏமாற்றப் பார்க்கிறாய்.,? இருடா உன் தொடையை பதம் பார்க்கிறேன். . .

. . . ஆசையில் எட்டடிக்கு பின்னால் சென்று வேகமாக முன்னேறி பத்தடி உயரத்துக்கு எழும்பி குரைத்துக் கொண்டே கேட்டைத் தாண்டி அவன் பக்கத்தில் குதித்து நிற்க, இதை எதிர்ப்பாராத திருடன் பதறி அடித்து துள்ளி எழுந்து ஓடினான்.

சிபி விடவில்லை. குரைத்துக் கொண்டே துரத்த, இது குரைக்கும் சத்தம் கேட்டு தெரு நாய்கள் ஆங்காங்கே குரைக்கத் தொடங்கியது.

ஓடிய திருடன் பக்கத்து வீடு, அதற்குப் பக்கம் காலி பிளாட்டை தாண்டி, மூன்றாவதாக கட்டி முடிக்கப்படாமல் நிறுத்தி வைத்திருந்த வீட்டின் மறைப்பு தட்டி கேட்டை திறந்து தன்னை மறைத்துக் கொண்டான்.

நாலுகால் பாய்ச்சலில் பாய்ந்து வந்த சிபி, சற்று தாமதித்து திரும்பி எஜமான் வீட்டை ஒரு முறை பார்த்தது. அதற்குள் வேறு யாராவது வீட்டுக்குள் நுழைந்து விடுவார்களோ என்ற அனுமான உணர்வு. பின் மோப்பம் பிடித்து தட்டி கதவின் பொந்து வழியாக உடலை ஒடுக்கி, கால்களை தாழ்த்தி ஊர்ந்த படி உள்ளே சென்றது.

உள்ளே திருடன், செங்கள் அடுக்கு, ஜல்லி குவியல், இரும்பு கம்பிகள் இத்யாதி தளவாடங்கள் இடையே காலை நீட்டி வலி உள்ள இடத்தை அழுத்தி நீவி விட்டுக் கொண்டிருந்தான்.

சிபியைப் பார்த்தவன் அட ராட்சஸ நாயே, என்னைய விட மாட்டியா. . என்று விசும்பினான். திருடன் இருக்கும் இடம் தெரிந்து சத்தமாக குரைத்து வேகமெடுக்க, கிழிந்து தொங்கும் துணியால் தொடையை மூடிய படி எழுந்து ஓடினான்.

இருட்டும், வெளிச்சமும் முழுமையாக இல்லாத மிதமான இடத்தில் அவன் கிழிசலை மறைத்ததும், சிபிக்கு தொடை மீதான ஆசை மேலோங்கியது. போலிஸ் திருடன் விளையாட்டுப் போல நாய், திருடன் விளையாட்டு ஆரம்பமானது.

தலை தெறிக்க கண்மூடித்தனமாக ஓடிய திருடன், பையோ டாய்லெட்டு கொள்கலனை புதைக்க தோண்டிய 8×5 அளவில் 12 அடி ஆழ குழியில் தடாலென்று விழுந்தான். குழி பறித்த மண், குழியை சுற்றி கிடந்தமையால் குழியின் ஆழம் அதிகமாக தோற்றமளித்தது.

பின்னாலேயே துரத்தி வந்த சிபி குழி இருப்பதை அறிந்து வேகத்தை மட்டுப்படுத்திக் கொண்டு நின்று விட்டது.

திருடன் திரு திருவென விழித்தான். பள்ளம் தோண்டியவர்கள் எப்படி மேலே ஏறி இருப்பார்கள்.,? ஏறுவதற்கான சாத்திய கூறுகள் ஏதும் இல்லை. குதித்து குதித்து எம்பினான். வலுவான பிடிமானம் எதுவும் கிடைக்காததால் முயற்சி பலன் கொடுக்க வில்லை.

சிபி குரைப்பதை குறைத்துக் கொண்டு முன்னங்கால்களால் மண்ணை பிராண்டியது. திருடனை சுற்றிச் சுற்றி வந்து லொள் லொள் என்றது.

ச்சூ. . ச்சூ. . போ, போய் தொலையேன் சனியனே என்று கத்தி கைகளை தூக்கி விரட்டினான். வாயிலிருந்து வெளி வந்த வார்த்தை குழிக்குள்ளிருந்து வெளியே வரலை. கேட்டை தாண்டி குதித்து வந்த நாய் தம்மீது பாய்ந்து கடித்து குதறி விடுமோ என்ற பயம் நெஞ்சைக் கவ்வியது. போய் விடு பைரவரே என்று கெஞ்சி இருந்தால் ஓடி இருக்குமோ.,?

சிபி, திருடன் மீது பாய்ந்து, கடித்து குதறி, தொடைக் கறியை எடுத்து விட துடியாய் துடித்தது. இருப்பினும் பள்ளத்துகுள்ளே பாய்ச்சலிட்டால் திரும்ப வெளியே வருவது கஷ்டமாயிற்றே என்றும் யோசித்தது.

ஐந்தறிவும், ஆறறிவும் தம் முயற்சி ஈடேற பிரயத்தனம் நடத்திக் கொண்டிருந்தது. எதுவும் நடக்காத போது எதிர்ப்பார்ப்பதில் அர்த்தமில்லை. குழிக்குள் பாய்ந்து தொடைக் கறி திண்ண விரும்பாத சிபி, குரைத்து ஏமாற்றத்தை உரைத்து விட்டு நகர்ந்தது.

அப்பாடா தப்பித்தேன் என்று நிம்மதி பெருமூச்சு விட்ட திருடன், சோர்ந்து போய் ஓய்வெடுக்க பள்ளத்தின் ஒரு மூலைக்கு நகர்ந்து சென்று உட்கார்ந்தான்.

நகர்ந்த சிபி அங்கிருக்கும் தளவாடங்களை ஆராய்ந்து பார்த்தது. ஒரு இடத்தில் பிளாஸ்டிக் பாரல் மீது கயிறு இருந்தது. அதை எடுக்க எக்கி எக்கி தாவியது. ஒரு சில முயற்சிகளுக்குப் பிறகு கயிற்றை வாயில் கவ்வியது. பிறகு மெது மெதுவாக தரையோடு தரையாக இழுத்து வந்து திருடன் குழிக்குள் போட்டது.

போட்டு விட்டு எடுத்துக்கு என்று தன் பாஷையில் சொல்லியது. இதை எதிர்ப் பாராத திருடன் மகிழ்ச்சியுடன் கயிற்றை எடுத்து பிரித்து அதன் முனையை வளையமாக்கி அருகாமையில் இருக்கும் மரத்தின் மீது வீசினான். நீள பற்றாக் குறையால் கயிறு எதிலும் சிக்காமல் திரும்ப திரும்ப தோல்வியை தழுவியது.

இதற்கு எரிச்சல்(?) அடைந்த சிபி இரண்டு மூன்று முறை குரைத்து, எதிர்ப்பைத் தெரிவித்து விட்டு மீண்டும் எதையோ தேடி ஓடியது.

திருடன் தொடர்ந்து கயிறு போட்டுக் கொண்டிருக்க, சிபி நீளமான மூங்கில் ஒன்றை பல்லால் கவ்வி, மெது மெதுவாக தரையோடு இழுத்து வந்து குழிக்குள் தள்ளியது.

நடுக்கடலில் தத்தளித்தவனுக்கு சிறு மிதவை கிடைத்தால் எப்படி சந்தோஷப் படுவானோ அப்படி ஒரு சந்தோஷம் அவன் முகத்தில் நியான் விளக்காய் பளிச்சிட்டது.

மூங்கிலைக் கொண்டு எப்படியும் வெளியே வந்து விடுவான் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தது சிபி.

கயிறு கொடுத்து உதவி செய்கிறது. மூங்கில் போட்டு ஒத்தாசை செய்கிறது. இதற்கு பரிவா., பாசமா., விசுவாசமா.? தெரியாமல் மெல்ல தட்டுத் தடுமாறி மேலே ஏறி மண் முகட்டில் களைப்பாறினான்.

அவனையே உற்றுப் பார்த்து, நாக்கை தொங்கப் போட்டு நின்று கொண்டிருந்த சிபி, காவல் காப்பது, காப்பாற்றுவது நம் கடமை. எஜமான் வீட்டில் இவன் திருட வில்லை, திருட எத்தனித்தான். . அதற்கான தண்டனையும் அவஸ்தையும் கொடுத்தாயிற்று. இதற்கு மேல் அவனை கடித்து குதறி வைக்க வேண்டாம், இனி நான் இருக்கும் இடம் தேடி வரமாட்டான் என்று நினைத்து வாலை சுருட்டிக் கொண்டு மௌனமாக தன் இருப்பிடம் திரும்பியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *