தொழில் ரகசியம்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 26, 2020
பார்வையிட்டோர்: 4,653 
 

எதிர் வீட்டு நித்யாவைப் பார்க்கப் பிரவீனாவிற்குப் பொறாமையாக இருந்தது.

இவளுக்கும் அவளுக்கும் தொழில் ஒன்று. பலான தொழில். பிரவீனாவிற்கு ஆள் கிடைப்பது அரிதாயிருக்கிறது. நித்யாவிற்கு அப்படி இல்லை. நிறைய கிடைக்கிறார்கள் .

தனக்கு அழகில்லையா…? எழுந்து சென்று கண்ணாடியில் பார்த்தாள்.

நித்யாவை விட இவள் எந்தவிதத்திலும் குறைவில்லை. நிறமும் அவளைவிட இவள் அதிகம்.

அப்படி இருந்தும்… ஏன் கிடைக்கவில்லை.?

ஆளைப் பிடிக்கத் தெரியவில்லையா. அணுகுமுறை சரி இல்லையா..?

பாடாவதி விடுதியில் போய் இரவு முழுக்க இருந்து விட்டு கசங்கி, சோர்ந்து….. ஆள் கிடைக்காமல்தானே அங்கே செல்ல வேண்டி இருக்கிறது.? விடுதி மேலாருக்கும் வருமானத்தில் பாதி கொட்டித் தொலைக்க வேண்டி இருக்கிறந்து..? – ப்ரவீனாவிற்கு வெறுப்பாக இருந்தது.

நித்யாவிற்கு இந்த கஷ்டமெல்லாம் கிடையாது. மதியம் கிளம்புவாள். பகல் காட்சி சினிமா பார்த்துவிட்டு வருவது போல் மாலை போனது போலவே திரும்பி வருவாள். ஒரு அலட்டல் கிடையாது. இரவு கண் விழிப்பு இல்லை. இவை எல்லாவற்றையும் விட முக்கியம்..அவளுக்கு அக்கம் பக்கம் அவப்பேச்சுக் கிடையாது. சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

“அம்மாடி ! மதியம் ஏதோ… பகுதி நேர வேலைக்கில்லே ஏதோ ஒரு கம்பேனிக்குப் போறா…!! “- சொல்லுவார்கள்.

நித்யாவுக்குக் கிடைக்கும் ஆட்களும் மோசமானவர்கள் கிடையாது. லுங்கி கட்டியவர்கள், குடிகாரர்கள் என்று அடிமட்ட ஆட்கள் இல்லை. எல்லோரும் படித்தவர்கள் போல் பேண்ட் சட்டை போட்டு நாகரீகமாக இருப்பார்கள். அழைத்துச் செல்லும்போது பார்த்தால் ஏதோ…. காதலர்கள், கணவன் மனைவி போல் தெரிவார்கள்.

‘எப்படி இப்படி .? என்ன மாய மந்திரம்..?’- இன்றைக்கு இவளை பின் தொடர்ந்து சென்று ஆள் பிடிக்கும் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் ! – பிரவீனா இப்படி முடிவெடுத்துக் கொண்டு அவளைக் கண்கொத்திப் பாம்பாக நோட்டைமிட்டாள்.

நித்யா 11.30 க்கெல்லாம் அழகாக உடுத்திக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள். அக்கம் பக்கம் பார்க்காமல் ஏதோ வேலைக்குச் செல்வது போல் நடந்தாள்.

இவளும் அவளுக்குத் தெரியாமல் பி ன் தொடர்ந்தாள்.

நித்யா நேராக சத்யா திரை அரங்கிற்குத்தான் சென்றாள்.

‘இன்றைக்குச் சினிமாவிற்குத்தான் வந்திருக்கின்றாளா..? தான் தொடர்வது தெரிந்து போக்குக்காட்டி இங்கு சென்றிருக்காளா..? பிரவீனா மனதில் உதித்தது.

ஆனாலும் இவள் ஆளை விடுவதாய் இல்லை.

எதுவானாலும் சரி. இவள் எங்கே போனாலும் சரி. அவள் ரகசியம் கண்டிபிடிக்காமல் திரும்புவதில்லை.. ! – முடிவெடுத்துக்கொண்டு இவளும் அவள் நிற்கும் வரிசையில் நிற்காமல் அவளுக்குத் தெரியாமல் தூரத்தில் நின்றாள்.

நித்யா… நாலைந்து பெண்களுடன் வரிசையில் நின்றதால் இவளைக் கவனிக்கவில்லை.

12. 20 க்கு கொட்டகையினுள் மணி அடித்தது. அதனைத் தொடர்ந்து திமு திமுவென்று ஆண்கள் கூட்டம் வந்தது.

வந்தவர் ஆண்கள் எல்லோரும் பெண்கள் நிற்கும் வரிசையினை அடிக்கண்ணால் பார்த்துக் கவனித்துச் சென்றார்கள்.

“பத்து மணி ஆட்டமா..? “- பிரவீனா தன் அருகில் நின்றவளைக் கேட்டாள் .

“ஆமாம். மொகத்தைத் திருப்பிக்க. “என்று சொல்லிக் கொண்டே அவள் அவர்களைப் பார்க்காதவாறு திரும்பி நின்றாள்.

“ஏன்..? “இவளும் அவள் சொல்படி நின்று கேட்டாள்.

“போற ஆளுங்க மொகத்தை எல்லாம் பாரு. பெண்களைப் படுக்க அழைக்கிற கற்பழிக்கிற பார்வை. எல்லாம் சகிலா படம் பார்த்துட்டுப் போற வினை “கிசுகிசுத்தாள்.

அப்போதுதான் இன்னொன்றும் நடந்தது. நித்யா அப்படிப் பார்க்கும் ஆண்களை பார்த்து ஒரு மாதிரியாய் சிரிக்க… ஒருவன் அவளைப் பார்த்து அதே சிரிப்பு சிரித்து வலையில் சிக்கினான் .

நித்யாவிற்குப் பழம் பழுத்து விட்டது. வரிசையை விட்டு வெளியே வந்தாள்.

அவனும் இவளைத் தொடர்ந்தான்.

பிரவீனாவிற்கு விசயம் விளங்கி விட்டது.

மலையாளப் படம் பார்த்துவிட்டு ஜொள்ளுடன் வரும் ஆண்களைத் தூண்டில் போட்டால் வலையில் தானாக மீன்கள் விழும் சூட்சமம் விளங்கி விட்டது.

‘இருவரும் எங்காவது செல்வார்கள். சோலி முடித்து ஆறு மணிக்கெல்லாம் திரும்புவார்கள். தினம் ஒன்றிரண்டு. ரெய்டு பயமில்லை, அலட்டலில்லை. கண் விழிப்பில்லை. பகல் பொழுதிலே சம்பாத்தியம் முடிந்து வீடு திரும்பி விடுவதால்…அக்கம் பக்கம் கெட்ட பேர் இல்லை. ‘

பிரவீனாவிற்கு அவள் தொழில் ரகசியம் விளங்கிப் போக முகம் பிரகாசித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *