தொடு திரை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 15,184 
 
 

அன்றைய தினம் பணி முடிந்து பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள ஓர் உணவகத்திற்குள் நுழைந்தேன் . ஒருவர் என் பின்னால் நின்றபடி எனது தோளை இறுகப்பற்றினார்.நான் யாரென்று திரும்பிப்பார்த்தேன்.அவர் முத்தலீப் பாய். ஆறடி உயரத்தில் வெளீர் ஆடையில் நின்றுக்கொண்டிருந்தார்.
“ பாய் …………… ” என்றவாறு விளித்தேன். என்னை அவருக்கே உரித்தான கரிசனத்தோடு பார்த்தார். அதற்கு பிறகு கொஞ்ச நேரம் நலம் விசாரிப்புகள், குடும்ப நிலவரங்கள் என சம்பிரதாய இத்யாதிகளுக்குள் சென்றோம்.
அவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எழுத்தர் பணியில் இருபது ஆண்டு காலம் பணியாற்றி கடந்த வருடம் ஓய்வு பெற்றவர். உள்ளுர்க்காரர்.அவர் ஓய்வு பெற்றதனால் ஏற்பட்ட காலிடத்தில் நான் பணியமர்த்தப்பட்டிருக்கிறேன். அவருடைய கையெழுத்து கரிச்சான் குருவிகள் மின் கம்பியில் வரிசையாக அமர்ந்திருப்பதைப்போல பார்க்க அழகாக இருக்கும். ஒருநாள் அவரிடம்அதை புகழ்ந்துச்சொல்லப்போய் என் நெருங்கிய வட்டத்திற்குள் அவர் வந்து விட்டார்.
“ தம்பி வாங்க. ஆளுக்கு நாலு புரோட்டா சாப்பிடுவோம்” என்றபடி என்னை உணவத்திற்குள் இழுத்தார் . “ நீங்க சாப்பிடுங்க பாய் . நான் டீ சாப்பிடுகிறேன்” என்றேன்.“ உங்களுக்கு ஹோட்டல்ல சாப்பிடுறது பிடிக்காது ” என்றபடி செல்லமாக கோபித்துக்கொண்டார். “ அப்படியெல்லாம் கிடையாதுங்க பாய் . நேற்று நான் சாப்பாடு கொண்டுக்கிட்டு வரலை.இந்த ஹோட்டல்லதான் சாப்பிட்டேன்” என்றவாறு புன்னகைத்து நின்றேன்.
“ அப்ப இதுமாதிரி சாயந்தரக்கட்டு டிபன் பண்றது பிடிக்காது . அப்படி தானுங்களா ?”
“ ஆமாங்க பாய்”
“ நானும் உங்க வயசுல அப்படிதான் இருந்தேன். பிறகு சாயந்தரம் டீ குடிக்கப்பழகினேன். அதுவே தொடர் பழக்கமாகி பிறகு டிபன் பண்ணத்தொடங்கினேன். இப்ப சாயந்தரமானால் நாலு இட்டலியோ , புரோட்டாவோ பிய்த்து வயிற்றுக்குள்ள போட்டுக்கரலனா வயிற்றுக்குள்ளேருந்து ஆவியா கிளம்புது…………..” என்றபடி அவர் வயிற்றை தடவிக்கொண்டு வயிறு குலுங்கச் சிரித்தார்.
“இப்ப சாப்பிட்டால் நைட்டு பாய் ? ” என்றேன்.
“ நைட் வேண்டாமுனு சொன்னா மக எங்கே விடுறாள். ரெண்டு தோசையாவது சாப்பிட்டால்தான் அவளுக்கு பரமத்திருப்திஏற்படுது . அவளுக்காகவே நைட்டும் சாப்பிட வேண்டி வருது ” என்ற அவர் புரோட்டாவை குருமாவில் பிசைந்துக்கொண்டிருந்தார்.
“ அப்ப ஒரு நாளைக்கு நான்கு நேரம் சாப்பிடுறீங்க. அப்படி தானுங்களா? ”
“ வயித்துக்கு வஞ்சகம் பண்ணி என்னத்த கட்டிக்கிட்டு போகப்போறோம் தம்பி ” என்றவர் ஒரு ஆம்ப்லெட் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார். நான் தேனீர் பருகி அவருக்காக காத்திருந்தேன்.
எனக்கும் சேர்த்து வழக்கம் போல அவர்தான் பணம் கொடுத்தார்.பிறகு அலுவலக நடவடிக்கைகளை விசாரித்தார்.சக பணியாளர்களை கேட்டுத்தெரிந்துக்கொண்டார்.
“ தம்பி உங்க போனைத்தாரீங்களா? . ரெண்டு வார்த்தை பேசிட்டுத்தாறேன் ”அவருக்கே உரித்தான மோகனப்புன்னகையில் கேட்டார் . என்றைக்குமில்லாமல் அவர் அப்படி கேட்டது எனக்கு வியப்பாக இருந்தது.
“நீங்க எதையும் என்னக்கிட்ட உரிமையோடு கேட்கலாம் பாய் ” சொல்லிக்கொண்டே வேகமாக சட்டைப்பையைத்துலாவினேன்.
“ தம்பி ஒன்னும் வருத்தமில்லைங்களே ?” கூரிய மூக்குக்கு அடியில் கிடந்த மீசையை அழுத்தி துடைத்துக்கொண்டு கேட்டார். தாடியை நீவி விட்டுக்கொண்டார்.
“ என்ன பாய் பெரிய வார்த்தையெல்லாம் ? நீங்க பேசுங்க ” மொபைலை அவரிடம் கொடுத்தேன்.
“ அவசரத்தில என் போனுக்கு டாப் ஆப் செய்யாம வந்திட்டேன். அதான்……. ” என்றவர் அதை வாங்கிக்கொண்டு இரண்டடி எடுத்து வைத்தவர் என்னிடம் ஓடிவந்தார்.
“ பேசிட்டீங்களா பாய் ?” என்றேன்.
“ இல்ல தம்பி ?”
“ ஏன் பாய்? ”
“ தம்பி எனக்கு இந்த செல்லுல நம்பர்கொடுக்கத்தெரியல . நீங்களே நான் சொல்கிற நம்பரை போட்டுக்கொடுங்க ”என்றபடி மொபைலை என்னிடம் நீட்டினார். நான் மொபைல் முன் ஈ விரட்டுவதைப்போல கையை அசைத்தேன்.கருப்புத்திரை பளிச்சென திறந்துக்கொண்டது.
அவருடைய முகம் தாமரை போல மலர்ந்தது.பழுத்த வெள்ளரிப்பழம் வெடிப்பதைப்போல சிரித்தார்.“ என்ன தம்பி மேஜிக் பண்றீங்க” என்றபடி மொபைல் திரையை உற்றுப்பார்த்தார். அவரது கண்கள் நெற்றி வரைக்குமாக உருண்டு திரண்டுப்போயிருந்தன.
“ நம்பரைச்சொல்லுங்க பாய்? ”
இரட்டைகளாக அவர் சொன்ன எண்களை பதிவு செய்து அவரிடம் கொடுத்தேன்.அதை வாங்கிக்கொண்டு அவர் பழைய இடத்திற்கு ஓடினார்.
அவர் சொன்னதுபடியே இரண்டு வார்த்தைகள்தான் பேசியிருப்பார் போலும்.போன வேகத்தில் திரும்பி வந்தார்.அவருடைய முகம் தொங்கிப்போய் இருந்தது. ஏமாற்றத்துடன் வந்துக்கொண்டிருந்தார். குடும்பத்தில் எதுவும் பிரச்சனை போலும்! அவருடைய மகளுக்கு வரன் தேடிக்கொண்டிருக்கிறார். நாளைக்கு அவரது மகளைப்பார்க்க ஒரு வரன் வருவதாக சொல்லிருந்தார் . அது தொடர்பாக ஏதேனும்நடந்தேறி இருக்கலாம்.அவரிடம் அதைப்பற்றி விசாரிப்பது நாகரிகமில்லையென அமைதியாக நின்றுக்கொண்டிருந்தேன்.
“ என்ன தம்பி இப்படி நடந்துப்போச்சு ” – என்றார்.
“ என்னது பாய் ?”
“ இன்றைக்கு நடந்த போட்டியில விஸ்வநாதன் ஆனந்த் கார்ல்ஸென்கிட்ட தோத்துட்டாராமே ” என்றார். தோற்றத்திற்காக விஸ்வநாதன் ஆனந்த் வருத்தப்பட்டாரோ என்னவோ! பாய் அவருக்காரொம்பவே வருத்தப்படுவதாக தெரிந்தது.அவரை பார்க்கவே வியப்பாக இருந்தது. இந்தியர்கள் என்றால் கிரிக்கெட் பிரியர்கள் எனும் நிலை ஒரு புறம் இருக்க முத்தலீப் பாய் சதுரங்க ஆட்டத்தின் விசிறியாக இருக்கிறாரே !
“வெற்றியும் தோல்வியும் விரனுக்கு அழகு பாய் ? “ என்றேன்.
“ என்ன தம்பி அப்படிச்சொல்லிட்டீங்க? அதற்காக ஆனந்த் ஒரு சின்னப்பையன்க்கிட்ட தோற்கிறதா?ஆனந்த் சதுரங்கத்தில் ஜாம்பவான் இல்லையா! இந்தியாவிற்கு எத்தனையோ தடவை சாம்பியன் ஷிப் பெற்றுக்கொடுத்தவராச்சே !” என்றார்.நான் அவரை குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தேன். அவருடைய நினைவுகள் விஸ்வநாதன் ஆனந்த் பற்றியே மையம் கொண்டிருந்தது. அவர் சச்சினைப்பற்றி பேச்செடுத்தால் அவருடைய ஓய்வு வரையிலான சகாப்தத்தை அவிழ்த்து விடலாம் என நினைத்தேன். அவர் கிரிக்கெட் பக்கம் வருவதாக இல்லை.
“ உங்களுக்கு யார் பாய்சொன்னா?”
“ மனைவி சொன்னா”
“ இதைக்கேட்கத்தான் போன் பண்ணீங்களா ?”
“ ஆமாம் தம்பி ” என்றவர் நாணிக்கோணி ஒரு விதமான நளினத்தொடு நின்றார் .
“ இதை என்னக்கிட்ட கேட்டிருந்தா நானே சொல்லிருப்பேனே பாய் ” என்றேன்.
என்னை அவர் புழுவைப் போலதான் பார்த்தார். உனக்கெல்லாம் சதுரங்கம் பற்றி தெரியுமா?என கேட்பதைப்போல அவருடைய பார்வை இருந்தது.
“ தம்பி……….விஸ்வநாதன் ஆனந்த் தோற்றது தெரியுமா? ”
“ தெரியும் பாய்”
“ எப்படி தெரியும் ? ”
“ மொபைல்ல பார்த்தேன் பாய்”
“ நெட் காட் போட்டிருக்கீங்க ?”
“ ஆமாம்பாய் ”
“ தெரியாம போச்சே தம்பி ”
தொண்டையை கனைத்துக்கொண்டார்.சட்டையின் கழுத்துப்பட்டையை எடுத்து விட்டுக்கொண்டார். கையை உதறி, நெற்றியைச் சுழித்து, பார்வையை கைப்பக்கம் கொண்டு வந்து மணியைப்பார்த்தார். “ உங்களுக்கு பஸ் வருகிற நேரம் இல்லையா ?”
” ஆமாம் பாய்” என்றேன்.கொஞ்ச நேரம் அமைதியாக நின்றார்.பிறகு கேட்டார் “ தமிழ் நாட்டில அமைச்சரவை மாற்றம் எதுவும் நடந்திருக்கானு பார்த்து சொல்லுங்களே”.
நான் விரல்களை மொபைலின் திரைக்கு கொண்டுச்சென்றேன்.உலக உருண்டையை தொட்டேன்.ஸ்டேட் கரண்ட் நியூஸ் கொடுத்து சேர்ச் கொடுத்தேன்.திரையில் செய்திகள் வார்த்தைகளாக விரிந்துக்கிடந்தன.
“ என்ன தம்பி ஒன்னும் தெரியலையா?”
“ ஒரு மாற்றமும் நடந்ததாக தெரியலையே பாய் ” என்றேன் மொபைலில் தேடிக்கொண்டே.
“ அப்படிங்களா ? ” என்றவர் கொஞ்ச நேரம் அதே இடத்தில் மௌனித்து நின்றார்.
“ வேறு என்னவெல்லாம் இதுல பார்க்கலாம் தம்பி ”
“ பொண்ணுக்கு மாப்பிளை தேடலாம் பாய் ” என்றேன். இதை சற்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டேன் போலும். அவருடைய முகம் சட்டென மாறியது .
என்னை ஒரு விதமாகப் பார்த்தார்.நான் நாக்கை மடித்து மெல்ல கடித்துக்கொண்டேன்.எனதுஆழ்மனம் குறுகுறுத்தது .தலையில் கொட்டிக்கொள்ளணும் போல இருந்தது.
“ என்ன தம்பி கிண்டல் பண்றீங்களா?” என்றார் சற்று மிடுக்கான குரலில்.
“ சாரிபாய் கோபிச்சிக்கிட்டீங்களா ?” செயற்கையாக சிரித்து வைத்தேன்.
“ பின்னே என்ன தம்பி! இல்லாததை சொன்னா நான் கோபிச்சிக்கிற மாட்டேனா ?”
மார்புக்கூடு ஏறி இறங்க பெரியதாக ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டேன் .ஒரு நிறைவு மனதிற்குள் புகுந்தது.அவரை எப்படியும் சமாதானப்படுத்தி விடலாம் என்பதாக தோன்றியது.
“ பாய்! உங்க வயசு என்ன, என் வயசு என்ன?உங்களுக்கிட்ட நான் விளையாடுவேனா ? நான் சொல்றது உண்மை பாய்.” என்றேன்.
அவர் என்னுடைய தோள்களை பற்றி குலுக்கினார்.
“ பாய் இப்பவெல்லாம் பொண்ணுக்கு மாப்பிள்ளையும், மாப்பிள்ளைக்கு பொண்ணும் மொபைல்லதான் தேடுறாங்க”
“ எப்படி சொல்றீங்க ?”
“ பேஸ் புக்ல ! ” என சொல்லிவிட்டு அவருடைய பதிலுக்காக காத்திருந்தேன்.
“ ஆமாம் தம்பி . எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம் . உங்களுக்கிட்ட கேட்கணுமுனு நினைச்சிக்கிட்டிருந்தேன் .பேஸ் புக் பற்றி சொல்லுங்க தம்பி ”என கேட்டுவிட்டு என் முகத்தை ஊடுறுவிப்பார்த்தார் .
நான் என்னுடைய முகநூலைத்திறந்து அகல விரித்து அவருக்கு விளக்கத்தொடங்கினேன்.
“ அடடே இது யாரு தம்பி ?” என்றவாறு பார்வையை விசாலமாக்கினார்.
“ நான்தான் பாய் . சின்ன வயசுல எடுத்த போட்டோ ” என்றேன்.
“ எங்கே கொடுங்க பார்ப்போம் ” என்றவர் கண்களை விரித்து திரையை உற்றுப்பார்த்தார். என்னையும் திரையும் மாறி மாறிப்பார்த்தார்.
“ இவங்க எல்லாம் என்னுடைய பேஸ் புக் ப்ரண்ட்ஸ் ” என்றபடி திரையைத் தொட்டு மேலே ஓட விட்டேன் ”
“ அடடே ” என்றபடி திரையிலிருந்து கண்களை எடுக்காமல் பார்த்தார்.
“ பாய் உங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கட்டுங்களா ?” என்றேன்.
திரையிலிருந்து பார்வை எடுத்து என் மீது வைத்தார்.“ தம்பி……. நான் பைபாஸ் சர்ஸரி பண்ணிருக்கேன். அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து என்னை கொன்னுடாதீங்க ” என்றபடி என் கன்னங்களை வருடினார்.சிரித்து வைத்தார் .
நான் திரையை வேகமாக நகர்த்தி ஒரு முகத்தை பெரிய பிம்பமாக்கி அவரிடம் காட்டினேன். “ அடடே என் பையன் ” என்றவாறு மொபைலை பிடிங்கி அகமகிழ்ந்தார். முகத்தால் பூச்சொறிந்தார்.
“ தம்பி ………… இந்த போன் எவ்வளவு ?”
“ பத்தாயிரம் ரூபாய் பாய் ”
“ எனக்கு ஒன்னு இது மாதிரி வாங்கித்தாரீங்களா? ”.
“ என்ன பாய் இப்படிக் கேட்டுட்டீங்க ? நாளைக்கே வாங்கிடுவோம்” என்றேன்.
“ நாளைக்கே வேண்டாம்”
“ பின்னே எப்ப வாங்கலாம் பாய் ?”
“ நான் பணம் சேமிக்க வேண்டாமா ?”
“ பாய்…….. பத்தாயிரம் ரூபாய் சேமிக்க வேணுமா!.துபாய்ல இருக்கிற உங்க பையன்க்கிட்ட கேட்டா தரமாட்டாரா? இல்ல உங்க பென்சன் பணத்தில வாங்க முடியாதா ?” என்றேன்.
“ பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன். பணம் நிறையத் தேவைப்படுது. அதான் கொடுத்தக்கடனையெல்லாம் கேட்டு வாங்கிக்கிட்டிருக்கேன். ” என்றார்.
“ கல்யாணச் செலவோடு செலவா உங்களுக்கு இதுமாதிரி செல்போன் ஒன்னு வாங்கி விடுவோம் பாய்” என்றேன்.
“ கல்யாணச்செலவுல கை வைக்க வேண்டாம் தம்பி. தினமும் நான் சாயந்தரம் சாப்பிடுற ஒரு வேளை உணவை குறைச்சிக்கிறேன். அந்தப்பணத்த உண்டியல்ல போட்டு வைக்கிறேன். கொஞ்ச நாளைக்குப்பிறகு அதில் சேர்ந்த பணத்தை வச்சி அதை வாங்கிவிடலாம் ” என்றார். அவரதுயோசனை அதிசயமாகவும் அதே சமயம் சரியெனவும் பட்டது. “சரிங்க பாய் ” என்றவாறு அவரிடமிருந்து விடைப்பெற்றுக்கொண்டேன் .
மறுநாள் முதல் நான், ஒரு மாதக்காலம் மருத்துவ விடுப்பில் வீட்டில் இருக்க வேண்டியதாகி விட்டது .அன்றைய தினம் இரவு என் மனைவிஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். அறுவைச் சிகிச்சை குழந்தைப்பேறு என்பதால் மனைவியை கவனித்துக்கொள்ளும் பொருட்டு அந்த விடுப்பு எடுக்க வேண்டியதாகி விட்டது . அதற்குப்பிறகு முத்தலீப் பாயை பார்க்க முடியவில்லை.
நேற்றுதான் அவரை சந்திக்கும் பொருட்டு அவருடைய இல்லத்திற்குச் சென்றேன்.
“ பாய் நல்லா இருக்கீங்களா ? ”
“ அடடே வாங்க தம்பி . பேத்தி பிறந்திருக்காள்னு கேள்விப்பட்டேன்.வாழ்த்துக்கள்” – என் கைகளை பற்றி குலுக்கினார்.
“ நன்றிங்க பாய்”என்ற நான் அவருடைய அனைத்து உபசரிப்புகளையும் ஏற்றுக்கொண்டேன்.
“தம்பி . என்னால முடிஞ்சது இது.இந்த ஒரு கிராம் மோதிரத்தை பேத்தி விரல்ல போட்டு விடுங்க”என்றவாறு ஒரு சிறிய பர்ஸை என் கையில் திணித்தார்.
“இது என்ன பழக்கம் பாய்? அதெல்லாம் வேண்டாம் ”என்றவாறு அதை வாங்க மறுத்தேன். அவர் என்னை விடுவதாக இல்லை.கட்டாயப்படுத்தினார்.. மிக விரைவில்நடைபெறவிருக்கிற அவருடைய மகள் நிக்காஹை கருத்தில் கொண்டு அந்த மோதிரத்தை வாங்கிக்கொண்டேன்.
“ பாய்…………. இன்றைக்கு மொபைல் வாங்கிறலாமா ? உண்டியலைத் திறங்கஎவ்வளவு சேர்ந்திருக்குனு பார்ப்போம் ” ஆவலோடு கேட்டேன் .
“ உண்டியல் பணம்தான் இந்த நகை ” என்றார்.
“ பாய்……………! அப்ப மொபைல் ?”.
என்னை வாசற்படி வரைக்கும் அழைத்துவந்தார்.பிறை போல சிரித்தார்.கை குலுக்கினார்.“ தம்பி…………ஒரு வேளை உணவு இல்லாமல் என்னால இருக்க முடியுறப்ப;அந்த மொபைல் இல்லாம இருக்க முடியாதுங்களா ?” என்றார் .
“ பாய்………………..!!!”என ஒரு இழு இழுத்தேன் நான்.

Print Friendly, PDF & Email

1 thought on “தொடு திரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *