தொடக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 25, 2022
பார்வையிட்டோர்: 4,517 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருபத்தியொன்பதாவது மாடியில் இருப்பதில் சில வசதிகள் இருந்தன. மற்ற கட்டிடங்கள் உயரம் குறைந்தவை. என்னுடைய அலுவலகம் உச்சியில் இருந்தது. சுற்றிவரக் கண்ணாடி ஜன்னல்கள். உலகத்தை ராஜ்யம் ஆளுவது போன்ற ஒரு பிரமையை அது கொடுக்கும்.

நிலம் நித்திரை கொள்வதில்லை என்று சொல்வார் கள். ஆனால் வானம் விழித்திருப்பதில்லை . இரவு நேரங்களில் வேலை செய்ய நேரிடும்போது மிகவும் ரம்மியமாக இருக்கும். விளக்குகளை அணைத்துவிட்டு, இருளின் நடுவில் மௌனமாக இருந்துகொண்டு பார்க் கும்போது நட்சத்திரங்களிடையே மிதப்பது போலத் தோன்றும். மழைக்காலங்களில் என்னவென்றால் மின்னலும், இடி முழக்கமும் அதிசயமாகக் கீழேயிருந்து மேலே வரும்.

பறவைக் கூட்டங்களைப் பார்ப்பது இன்னொன்று. சம உயரத்தில் இருந்தே அவற்றைத் தரிசிக்கலாம். சில பறவைகள் திறந்திருக்கும் ஜன்னல் வழியாக மிகவும் சுதந்திரமாக உள்ளே நுழையும். இறக்கைகளைத் தொய்ய விட்டு ஒரு சுற்று வந்து மீண்டும் செட்டையடித்துத் திரும்பிவிடும். அவை அப்படி அடிக்கடி வந்து போவது அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என்பதை உறுதிப்படுத்தவே என்று நான் எண்ணிக்கொள்வேன். அந்த எண்ணம் எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும்.

இது தவிர வேறு சில காட்சிகளையும் காணலாம். எதிரில் இருக்கும் கட்டடத்தின் இருபதாவது மாடியில் இருவர் வேலை செய்தனர். ஓர் ஆணும் ஒரு பெண்ணும். அவர்கள் ஒருவர்மீது ஒருவர் ஆசைப்பட்டவர்களாகத் தெரிந்தார்கள்.

அவள் அடிக்கடி ஏடுகளை எடுத்துக்கொண்டு வரு வாள். அவன் அவற்றைப் பார்ப்பான். அவளையும் பார்ப்பான். விலக்கப்பட்ட அங்கங்களில் விழிவைப்பார் கள்; தடுக்கப்பட்ட இடங்களைத் தடவுவார்கள். அங்கு மிங்கும் பார்த்துவிட்டு அவதியாக உதடுகளை உரசிக் கொள்வார்கள்.

பிறகு அவள் பைல் கட்டுகளைத் தூக்கிக்கொண்டு ஒன்றும் தெரியாதமாதிரி வெளியே போவாள். இவன் பெருமூச்சு விட்டுக் கொண்டு அவளுடைய அடுத்த வரவுக்காகக் காத்திருப்பான். வேலை சலிக்கும் போது இந்த இளம் காதலர்களைப் பார்த்துக் கொஞ்சம் பரவசப்படலாம்.

ஆனால் அதற்கு இப்போது அவகாசம் இல்லை. இன்று நடக்க இருக்கும் ஒரு முக்கியமான கூட்டத்தில் மிகவும் பாரதூரமான முடிவுகளைச் சொல்லும் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். பதினொரு பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை தக்க ஆதாரங்களும், ஆணித்தரமான முடிவுகளும் கொண்டது. இதை அறிமுகப்படுத்தும் ஆரம்ப உரை எப்படி இருக்கவேண்டும் என்ற சிந்தனையில் இருந்தேன்.

கடந்த ஆறுமாத காலமாக இந்த ஆலோசகர் பணி என்னை அலைக்கழித்தது. நேற்றுத்தான் முடிந்தது. நானும் என்னுடைய பெண் உதவியாளர் கொஸாமரும் நேரம் போவது தெரியாமல் வேலை செய்தோம். கட்டுரையைச் செவ்வையாக்கி, சுத்தம் செய்து முடிக்கும் போது இரவு பத்து மணியாகிவிட்டது.

பிரசங்கத்துக்கு வேண்டிய வரைபடங்கள், ஸ்லைடுகள் மற்றும் உபகரணங்கள் எல்லாவற்றையும் அடுக்கியாகிவிட்டது. நகல்களையும், பிற்சேர்க்கைகளையும் ஒழுங்குப்படுத்தி அவரவர் இருக்கைகளின் முன்பு கொஸாமர் வைத்துவிட்டாள். எல்லா சொற்பொழிவாளர் களுக்கும் ஏற்படும் ஆரம்பத் தயக்கம் எனக்கும் இருந்தது. அந்த யோசனையில் மூழ்கியிருந்தேன்.

மூன்றாவது முறையாகத் தொலைபேசி ஒலித்தது. இந்தத் தடவை யும் என்னுடைய ஐந்து வயது மகள் தான் பேசினாள். அண்ணன் மேல் மீண்டும் புகார் கொடுத்தாள். அது மிகவும் நீண்ட பட்டியலைக் கொண்டிருந்தது. ஓர் ஏழு வயதுப் பையனால் அரைமணி நேரத்துக் கிடையில் இவ்வளவு உற்பாதங்களை உற்பத்தி செய்ய முடியுமா என்று அது என்னை யோசிக்கவைத்தது.

என் மனைவி வேலைக்குப் போய்விட்டாள். பிள்ளைகள் இரண்டு பேருக்கும் பள்ளி விடுமுறை. அவர்களுக்கு விலக்கு தீர்ப்பது இன்று என் வேலையாகிவிட்டது. பணிப்பெண்ணை அழைத்து என் கஷ்டத்தைத் தெரிவித்து, பிள்ளைகளை இன்னும் கண்டிப்புடன் பார்த்துக்கொள்ளும்படி கூறினேன்.

அப்போது பார்த்து கொஸாமர் உள்ளே எட்டிப்பார்த்தாள். சமயமறிந்து வந்துவிடுவாள். புன்சிரிப்புத் தேவதை. அவள் முகம் சுளித்தோ, மூக்கைச் சுருக்கியோ நான் பார்த்ததில்லை.

ஆப்பிரிக்காவில் secretary பறவை என்று ஒரு பறவை இருக்கிறது. அதன் கொண்டையில் இரண்டு பென்சில் செருகி வைத்தது போல இருக்கும். அது நடக்கும் போது தலையை நிமிர்த்தி ஒருவித செருக்குடன் நடக்கும்.

கொஸாமரைப் பார்த்தபோது அந்தப் பறவையைப் போலவே இருந்தாள். விநோதமான உடையணிந்து இன்னும் விநோதமான தலை அலங்காரம் செய்து வந்திருந்தாள். இரண்டு முள்ளம் பன்றி முள்கள் அவள் கொண்டையில் நீட்டிக்கொண்டு நின்றன. ஒரு சாயலில் யப்பானியப் பெண்ணின் பாவனையாகவும் தோன்றியது. மிக உயரமாகவும் ஒல்லியாகவும் காட்சியளித்தாள். பாதங்களைச் சிறுசிறு அடிகளாக வைத்து விரைந்து நடந்தாள்.

‘கொஸாமர், என் இனியவளே! எனக்கு ஓர் உதவி செய்வாயா?’

‘சொல்லுங்கள், காத்திருக்கிறேன்’ என்றாள்.

‘என் பிள்ளைகளிடம் இருந்து இனிமேலும் தொலை பேசி வந்தால் நீ இரண்டே இரண்டு கேள்விகள் கேட்கவேண்டும். ஒன்று, வீடு எரிகிறதா? இரண்டு, யாராவது காலை முறித்துக்கொண்டார்களா? இரண்டுக்கும் இல்லை என்று பதில் வந்தால் தொலைபேசியைத் துண்டித்துவிடு. எனக்கு இனிமேலும் தொந்தரவு தரவேண்டாம்.’

அவள் முறுவலித்தபடியே சரி என்றாள். சுழல் கதிரைபோல ஒற்றைக்காலில் சுழன்று திரும்பினாள். குதி உயர் காலணியில் இப்படி லாவகமாக இவள் சுழன்று திரும்புவாள். ஒரு முறைதானும் தடுக்கி விழுந்ததில்லை .

கடந்த இரண்டு மணித்தியாலங்களாக ஒரு தொலை பேசியும் வரவில்லை . ஆனபடியால் வீடு பத்திரமாக இருக்கிறது. கால்களும் சேமமாக இருக்கின்றன என்று நம்பலாம்.

உலகில் உள்ள கம்பனிகள் எல்லாம் ஒரு பொருளை அல்லது சேவையை வாங்கி பிறகு விற்கும் அல்லது உற்பத்தி செய்து விற்கும். ஆனால் இந்த நிறுவனம் அதற்கு விதிவிலக்கு. இது ஒரு படி மேலே போய் அந்தக் கம்பனிகளையே வாங்கி விற்கும் தொழிலைச் செய்தது.

இதற்கு வேண்டிய மூலதனத்தில் முக்கியமானது அயோக்கியத் தனம். இதன் அடித்தளமே தர்ம விரோதமாகச் செயல்படுவதுதான். இது தவிர வஞ்சகம், சூழ்ச்சி போன்ற குணாம்சங்களும் வரவேற்கத் தக்கவை.

மீதியான மூலதனம் வாடிக்கையாளர்களிடம் இருந்தே கிடைக்கும். மனிதனுக்கு மிக இயல்பான மௌடீகம்தான் இதற்கு ஆதாரம். மக்களிடையே மௌடீகம் ஏராளமாக இருந்ததால் வியாபாரமும் ஏராளமாகப் பெருகியது.

முறைகேடான வழியில் பணம் சம்பாதித்தவர்களுக்கு இது சொர்க்கம். அவர்கள் பணம் எல்லாம் வெள்ளாவி வைத்து (money laundering) வெளியே வந்தது. மீண்டும் புரண்டது. இப்படி இந்த நிறுவனம் கொடிகட்டிப் பறந்தது.

ஆனால் சமீபத்தில் ஒரு மதலை கம்பனியை வாங்கியபோது ஒரு சிறிய தவறு நேர்ந்துவிட்டது. அது இந்த நிறுவனத்தை அதல பாதாளத்துக்கு இழுத்துச் சென்றது.

கருங்குழி (blackhole) என்று சொல்வார்களே, அதுதான். போட்ட முதலீடெல்லாம் போன இடம் தெரியவில்லை. இருந்ததையும் அடித்துக்கொண்டு போனது இந்த பால்குடி மறவாத கம்பனி.

ஆனைக்கும் அடி சறுக்கும் என்ற கதைதான். இதை எப்படிச் சொல்லப் போகிறேன். நம்பமாட்டார்கள். ஒரு தகுந்த மேற்கோள் காட்டி என் பேச்சை ஆரம்பித்தால் நன்றாயிருக்கும். ஆப்பிரிக்காவில் ஒரு பழமொழி வழக்கில் இருக்கிறது. ‘எலி பிடிக்கப் போகிறவன் எலியைப் போலவே சிந்திக்க வேண்டும்’ என்று.

இன்று வரும் சபையினர் எல்லாம் தகுதி வாய்ந்தவர்கள். இருபது பேருக்கு மேலிருக்கும் அந்தக் கூட்டத்தில் சிலரிடம் நான் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மீதிப்பேர் தலையாட்டிக்கொண்டு பின்னே போகும் பேர்வழிகள்தான்.

இன்று காலை வந்திருந்த குரல் அஞ்சல் தகவல்களில் முக்கிய மானது அலிசாலா பின் ஒஸ்மான் கூட்டத்திற்கு வருகிறார் என்பது தான். இவருடைய கேள்விகளில் பள்ளம் இருக்கும். விழுந்துவிடாமல் சமாளிக்க வேண்டும்.

இவர் ஓர் அராபியர். சொந்தமாக ஜெட் விமானம் வைத்திருக்கி றார். சாட்டிலைட் போல உலகை வலம் வருவார். கண்கள் அம்புலன்ஸ் விளக்குகள் போலப் பளிச்சிடும். எந்த நேரமும் இவர் கைகளும், முகமும் வேர்த்துக் கொட்டியபடியே இருக்கும். மிகக் கோபமான மூக்கு. இன்னும் கோபமான உதடுகள். இவர் மூச்சை விடும் போது பத்தாயிரம் டொலர் சம்பாதித்துவிடுவார். திரும்பி உள்ளே இழுக்கும் போது இன்னொரு பத்தாயிரம் டொலர் சம்பாதித்துவிடுவார் என்று சொல்வார்கள். இவர் யாருக்காகவோ காத்திருந்தார் என்று சரித்திரம் இல்லை.

இரவு நேரமானதும் பற்பல பறவைகளும் மரத்திலே வந்து ஒதுங்குவதுபோல வயோதிகம் வந்ததும் பலவிதமான நோய்களும் உடம்பிலே வந்து தங்கிவிடும். மிசேல் பூனே வயோதிகர். பெயர் தெரிந்ததும், தெரியாததுமான பல வியாதிகள் அவர் கைவசம் இருந்தன. உருளைக்கிழங்குகளை எடுத்துவிட்ட உருளைக்கிழங்கு சாக்கு போல அவர் உடம்பு சுருங்கி இருக்கும். தேகம் பூராவும் சர்க்கரை. அதனால் அவர் தான் குடிக்கும் கோப்பியில் சர்க்கரை சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால் அவருடைய மூளை வெகு சுறுசுறுப்பாக இயங்கக்கூடியது. ஒட்டைச்சிவிங்கி இரை மீட்பது போல மிக நிதானமாகவும், ஆறுதலாகவும் பேசுவார். இவர் ஒரு வசனம் பேசி முடிக்குமுன் மெதுவாக நகர்ந்து சிறுநீர் கழித்துவிட்டு மீண்டும் வந்து உட்கார்ந்துவிடலாம்.

குளோரியா பாண்ஸ் என்ற பெண்மணி. பாரிய யாக்கைக்கு உடமையானவர். என்ன காரணமோ அவரைக் காணும் போதெல் லாம் யாப்பருங்கலக்காரிகை எனக்கு ஞாபகத்துக்கு வரும். எவ்வளவு சிரமப்பட்டுத் தயாரித்த ஆண்டறிக்கையையும் ஒரு கேள்வியில் தூக்கி எறியும்படி செய்துவிடுவார்.

ஓலாண்டோ . இரண்டாயிரம் டொலருக்குக் குறைந்த ஆடைகளை அணிவதில்லையென்ற விரதம் பூண்டவர். ஆடம்பரப் பிரியர். முன் தலைமயிர் உதிர்த்துப் பிடரி மயிர் சிலும்பி நிற்கும். வேரி மயிர் பொங்க’ இவர் ஆங்கிலத்தை அட்சரம் அட்சரமாக உச்சரிப் பார். யோசனையான ஆள். ஒரு மணி பேச வேண்டியதை ஒரு நிமிடத்தில் சொல்லிவிடுவார். ஒரு வசனத்தை ஒரு வார்த்தையில் வடிப்பார். அவர் பேச்சு புதிராக இருக்கும். யாராவது பின்னால் வந்து அரும்பதவுரை, பொழிப்புரை, தெளிவுரை, விளக்கவுரை, விசேடவுரையென்று செய்தால் தான் உண்டு.

‘உண்மை எப்போதும் வெல்லும், உன் பக்கம் திறமையான வக்கீல் இருந்தால்’ என்பது தெரிந்ததே. ஆனபடியால் நல்ல வாதத் திறமையோடு இந்த அறிக்கையை அவர்கள் முன்பு வைக்க வேண்டும். அப்பொழுதுதான் வெற்றி கைகூடும்.

காற்றுக் கூடுதலாக இருந்தாலும் வறட்சியாக இருந்தது. நீள மாயிருந்த கண்ணாடி ஜன்னலைச் சாத்தி விட்டு தண்ணீர் குடிக்கக் கிளம்பினேன். எங்காவது நடந்து போனால் ஆறுதலாக இருக்கும். மூளைக்கும் கொஞ்சம் இடைவெளி தேவைப்பட்டது.

தண்ணீர் ஊற்றுப்பக்கம் போனேன். இந்த ஊற்று இடது கைப் பழக்கக்காரர்களுக்காகச் செய்யப்பட்டு இருக்கவேண்டும். அதனு டைய குமிழ் இடது பக்கம் இருந்தது. வலது கைக்காரனான எனக்கு அது வசதியாக இல்லை .

இடது பெருவிரலால் தம் பிடித்து அமுக்கியபோது தண்ணீர் சீறிக்கொண்டு மேலெழுந்தது. அதற்கு லாவகமாக வாயைத் திறந்து பருகவேண்டும். மூன்றங்குலம் வாயைத் திறந்து முப்பத்தியேழு பாகைக் கோணத்தில் பிடிக்கவேண்டும். இதற்கு நீண்ட பயிற்சியும், நிதானமான யோசனையும் அவசியம். மிகவும் சங்கடமான அப்பியாசம். வாய் , முகம், தலைமயிர், கழுத்து என்று எல்லா அங்கங்களையும் நனைத்த பிறகுதான் தாகசாந்தி செய்யலாம்.

எவ்வளவு முயன்றும் இந்தக் கலை எனக்குக் கைவரவே இல்லை. இதில் தேறுவதற்கிடையில் எண்சீர்க் கழி நெடில் ஆசிரிய விருத்தப் பாவை இயற்றப் பழகிவிடலாம் போல பட்டது.

அறைக்குத் திரும்பினேன். ஆனால் அங்கே எனக்கு வேறுவிதமான ஒரு சம்பவம் நடப்பதற்குக் காத்திருந்தது.

கதவை இழுத்துச் சாத்திவிட்டு மறுபடியும் என் அறிக்கையை விரித்துப் பாயிரம் பாடும் முயற்சியில் இறங்கினேன். அப்பொழுது படீரென்று ஒரு சத்தம். நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அந்தப் பறவை ஐம்பது மைல் வேகத்தில் வந்து என் ஜன்னல் கதவில் மோதி விழுந்தது. பூ இதழ்கள் உதிர்வதுபோல அதன் இறகுகள் உதிர்ந்தன. அது மோதிய இடத்தில் கண்ணாடியில் வட்டமாக, வெண்மையான அடையாளம் பதிந்தது.

ஜன்னலைத் திறந்து மாடத்தில் இறங்கினேன். பறவைகள் பறந்து தான் நான் பார்த்திருக்கிறேன். படுத்துப் பார்த்ததில்லை. இந்தப் பறவை படுத்திருந்தது. அதைக் கையில் எடுத்தேன். சிறு துடிப்பிருந்தது. உடம்பின் சூடு இன்னும் தணியவில்லை . மிருதுவாக இருந்தது. காம்பில்லாத ஒரு பூவைத் தூக்குவது போல லேசான கனம் கனத்தது.

அந்தச் சத்தம் கேட்டு கொஸாமர் வந்துவிட்டாள். அவள் கண் களில் அச்சமும் வருத்தமும் தெரிந்தது. மெதுவாகக் கிட்டவந்து தொட்டுப் பார்த்தாள். ‘இறந்துவிட்டதா?’ மெள்ள தலையசைத்தேன். பறவையின் துடிப்பு அடங்கி உஷ்ணம் ஆறத் தொடங்கியிருந்தது. அது என்ன குற்றம் செய்தது? யாருக்கும் ஒரு தீங்கிழைக்கவில்லையே! மூடியிருந்த ஜன்னலைக் காற்றுவெளி என்று நினைத்து வந்து மோதிவிட்டது.

‘இது என்ன பறவை என்று தெரியுமா?’

‘இந்த ஊர்ப்பறவை அல்ல. வரத்துப் பறவை. கழுத்தைப் பார். பகட்டான நிறம். ஆண் பறவைதான். பெண் என்றால் நிறம் மங்கலாயிருக்கும். இதற்கு முன்பு ஒரு முறை இந்தப் பறவையைப் பார்த்திருக்கிறேன். திறந்திருந்த ஜன்னல் வழியாக இது என் அறைக்கு வந்திருந்தது. சிறகுகளை விரித்து அடித்து ஒரு வட்டம் போட்டது. என்னுடைய நண்பன் இது. இப்படி இதற்குத் துரோகம் செய்து விட்டேன்’.

‘துரோகமா? என்ன துரோகம்?’

‘சற்று முன்புதான் சாளரத்தைச் சாத்தினேன். பறவை தவறுதலாக எங்களிடம் வந்துவிட்டது என்று நாங்கள் நினைக்கிறோம். உண்மையில் நாங்கள் அல்லவோ அதன் பாதையில் கட்டடங்கள் எழுப்பியிருக்கிறோம்.’

‘சரி, இனி என்ன செய்வது? உங்களுக்கு நேரமாகிறது. நீங்கள் கூட்டத்திற்குப் புறப்படுங்கள். நான் இதைக் கிளீனரிடம் சேர்ப்பித்து விடுகிறேன்.’

நான் அதற்கு உடன்படவில்லை. அந்நியமான ஊருக்கு வந்து விட்ட அகதிப் பறவை அது. ஒரு பாவமும் அறியாதது. தனித்துப் போய் இறந்து கிடக்கிறது.

அதைக் கைக்குட்டையில் ஏந்தி எடுத்துக்கொண்டு இருபத்தி யொன்பது மாடிகள் கீழே போய் அடக்கம் செய்யும் போதுதான் அதைப் பார்த்தேன். நீல நிறமான அதன் வலது காலில் ஒரு வளையம்.

அலுமினியத்தில் செய்த அந்த வளையம் பளபளத்தது. இதை எப்படி நான் முன்பே பார்ப்பதற்குத் தவறினேன். என் மனம் பிங்கோ ஆட்டத்தில் கடைசிக் கட்டத்திற்குக் காத்திருப்பதுபோல படபட வென்று அடித்துக் கொண்டது. அந்த வளையத்தை மெள்ளக் கழற்றி வைத்துக்கொண்டேன்.

கொஸாமர் என்னுடைய பேச்சுக்கு வேண்டிய வரைபடங்களை அரங்கத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டாள். என் வரவை எல்லோரும் எதிர்பார்த்து இருப்பதாகவும் அறிவித்தாள். காலணிக்குள் குறுணிக் கல் புகுந்துவிட்டது போல கால் மாறியபடியே நின்றாள். அவஸ்தைப் பட்டாள். விரைவில் செல்ல வேண்டும் என்று என்னை அவதிப் படுத்தினாள்.

ஆனால் அதற்கு முன் எனக்கு ஒரு சிறு வேலை பாக்கி இருந்தது. வளையத்தை எடுத்து உற்றுப் பார்த்தேன். மொஸ்கோ பறவை மையம், செயல் எண் Z453891′ என்று எழுதியிருந்தது. கம்புயூட்டரில் வையவிரிவலையை விரித்தேன். அந்த வளையத்தில் எழுதியிருந்தபடி மொஸ்கோ மையத்தைத் தேடினேன். கிடைக்கவில்லை.

பறவைகளின் தாய் தரவுத்தளம் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் இருந்தது. அதில் என் முயற்சியைத் தொடங்கினேன். பல வாசல்கள் திறந்தன. மூடின. வழி விசாரித்தபடி மொஸ்கோ மையத்துக்கு வந்து கதவைத் தட்டினேன். பதிவு இலக்கம் என்ற கேள்விக்குத் தயங்காமல் Z453891 என்று பதிந்தேன்.

அப்பொழுது அந்தப் பறவையின் ஜாதகம் விரிந்தது. Saker Falcon ஐந்து வருடங்களுக்கு முன்பு அந்த வளையம் மாட்டப்பட்டிருந்தது. சில வருடங்களுக்கு முன்பு அராபியாவில் காணப்பட்டது. பலமுறை மொஸ்கோவுக்கும், ஆபிரிக்காவுக்கும் இடையில் பிரயாணம் செய்திருந்தது. குளிர்கால ஆரம்பத்தில் வந்து அது முடிய போய்விடும். இன்று என் கையில் மரணமடைந்து கிடந்தது.

வலையை மடித்தேன். வளையத்தை மேசையில் வைத்தேன். இந்தப் பறவை இன்ன நாள், இன்ன தேதி, இந்த இடத்தில் மரணமடைந்தது என்று குறிப்பு எழுதினேன். என் குறிப்புடன் அந்த வளையத்தை மொஸ்கோ மையத்துக்கு அனுப்பிவிடும்படி கொஸாமரைக் கேட்டுக்கொண்டேன்.

என் கட்டுரையைக் கையில் எடுத்தேன். பேச்சிற்கு அத்தியாவசிய மான மற்ற உபகரணங்களையும் சேகரித்துக்கொண்டேன். அந்த நீண்ட கட்டடத்தின் ஒரு தொங்கலில் இருந்து மறுதொங்கலில் அமைந்திருந்த கலந்தாய்வுக் கூடத்திற்கு விரைந்தேன்.

பேச்சை எப்படித் தொடங்குவது என்பதை நான் இன்னும் தீர்மானிக்கவில்லை. அதற்கு நேரமுமில்லை. இனியும் தாமதிக்க முடியாது.

நான் கதவை முழங்கைகளினால் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தேன். எதிர்பார்த்தபடி அங்கே இருபது பேர்களுக்கு மேலே கூடியிருந்தனர். என்னைக் கண்டதும் அங்கிருந்தோர் தங்கள் அதிருப்தியைத் தங்கள் தங்கள் தகுதிக்கு ஏற்றவாறு வெளிப்படுத்தினர்.

சில நாற்காலிகள் நகர்ந்தன. சிலர் அசைந்து கொடுத்தனர். பாதி குடித்த கோப்பிக் கோப்பைகள் மேசையிலே ஆடின. சிகரெட் பிடிக்கக்கூடாது என்ற அறிவித்தலையும் மீறி யாரோ புகைத்திருந்தார்கள். அந்த மணம் அறையிலே சூழ்ந்திருந்தது.

என் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்பேனென்று சிலர் எதிர்பார்த் தார்கள். சீமாட்டிகளே, சீமான்களே’ என்று வழக்கமான சம்பிரதாயத் துடன் பேச்சை ஆரம்பிப்பேன் என்று சிலர் நினைத்தனர். இன்னும் சிலர் காலை வணக்கம் கூறுவேன் என்று காத்திருந்தார்கள்.

மாறாக நான் ஒன்றுமே செய்யவில்லை. பேச்சு மேடையில் அஞ்சலி செய்வதுபோல சில விநாடிகள் அசையாது நின்றேன். விரித்த சிறகுடன் வேகமாக வந்து கண்ணாடியில் மோதி இறந்து போன அந்தப் பறவையே என் ஞாபகத்திற்கு வந்தது. என் உரையைத் தொடக்கினேன்.

‘ஒரு பறவை இன்று வழி தவறிவிட்டது. சில நிமிடங்கள் முன்பு. வெறும் வெளி என்று நினைத்து அது என் ஜன்னல் கண்ணாடியில் வந்து ஐம்பது மைல் வேகத்தில் மோதியது. தட்சணமே உயிர் பிரிந்துவிட்டது.

‘அதை இப்போதுதான் அடக்கம் செய்துவிட்டு வருகிறேன்.

‘வளைந்த மூக்கும் வெள்ளைத் தலையும் கொண்ட பறவை. சாம்பல் நிறமான செட்டைகள் யாரையும் வசீகரிக்கும் தன்மை உடையவை. இந்தக் கைகளில் விரிந்து அனாதரவாகக் கிடந்தது. அதன் உடம்புச் சூடு ஆறுமுன்பே அது அடக்கம் செய்யப்பட்டு விட்டது.

‘இந்த நிறுவனத்தின் தோட்டத்தில், ஒரு அடி ஆழத்தில், அது உறங்குகிறது. ரோஜாப் பதியனுக்கும், அந்தூரியத்திற்கும் இடையில் மரண வாசகம் எழுதாத ஒரு கல்லறையில் அது கிடக்கிறது.

‘இந்தப் பறவையை Saker Falcon என்பார்கள். ருஸ்யாவின் வடகிழக்கு மூலையில் இருந்து குளிர்கால ஆரம்பத்தில் இது புலம் பெயரும். தெற்கு ஆப்பிரிக்கா வரைக்கும் பறந்து வந்து வசந்தம் வரும் வேளைகளில் திரும்பிவிடும்.

‘ஐயாயிரம் மைல்கள் இதற்கு ஒரு பொருட்டல்ல. சூரியனையும் நட்சத்திரங்களையும் வைத்துத் திசையறிந்து செல்லும். சரி கணக்காக வந்து கணக்காகத் திரும்பிவிடும்.

‘அப்பேர்ப்பட்ட வல்லமை படைத்த பறவை இன்று ஒரு சிறிய தவறு செய்தது. திரும்ப வேண்டிய ஒரு சிறு திருப்பத்தில் திரும்ப மறந்துவிட்டது. அதனால் அது இறக்க நேரிட்டது. இனி அது தனக்குச் சொந்தமான ருஸ்யா நாட்டின் வடபகுதிக்குத் திரும்பவே போவதில்லை.’

தொடக்க உரையை முடித்துவிட்டு அறிக்கையைக் கையில் எடுத்தேன். சபையோரின் முகங்களைப் பார்த்தேன். அந்த முகங்களை மறைத்த இருள் விலகுவதுபோல் பட்டது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது அவர்களுக்கு விளங்கியது போலவும் இருந்தது. நான் என்னுடைய உரையை இனிமேல் படிக்கவேண்டிய அவசியமே இல்லை. அப்படித்தான் நினைக்கிறேன்.

– 1999-2000

– மஹாராஜாவின் ரயில் வண்டி, முதற் பதிப்பு: டிசம்பர் 2001, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

1937 ஜனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாணம் அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *