தேவதை போல் ஒருவன்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,474 
 
 

“இந்தியாவில், ஜனநாயகம் என்பது, இந்திய மண்ணின் மேல், ஒரு மேல் பூச்சாகவே இருக்கிறது; அது, அடிப்படையில் ஜனநாயகத்திற்கு எதிராகவே இருக்கிறது…’ என்ற, முதல் இரண்டு வரிகளே என்னைக் கவர்ந்து விட்டன.
மேற்கொண்டு வாசிக்கத் துவங்கும் போது, முகிலன் வந்து, “”அம்மா… உன்னைத் தேடிக்கிட்டு ஒரு அம்மாவும், மகளும் வந்திருக்காங்க!” என்று சொல்லி சென்றான்.
எழுந்து வந்தேன்.
தேவதை போல் ஒருவன்!பூக்கார செண்பகமும், அவளின் இளம் மகளும் நின்றிருந்தனர்.
“”வா செண்பகம்!” என்று வரவேற்றேன்.
“”வணக்கம்மா… இது சுமதி… என் ரெண்டாவது பொண்ணு. சுமதி… இவங்கதான் மேனேஜர் மேடம்… இவங்க பாங்க் வாசல்லதான் நம்ம பூக்கடை!” என்று, மகளிடம் பரபரத்தாள்.
“”வணக்கம் மேடம்… நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க… நந்திதா தாஸ் மாதிரி!” என்று சொல்லி, அந்தப் பெண் சிரித்தாள்.
“”அட… நந்திதா தாசை உனக்கு தெரியுமா? வெரி குட்… உட்காருங்க!” என்றபடி அமர்ந்தேன்.
“”காபியா… மோரா செண்பகம்?”என்று, நான் திரும்பி பட்டம்மாளை அழைக்கப் போன போது, வேகமாக குறுக்கிட்டாள் செண்பகம்…
“”இப்பத்தாம்மா டீ குடிச்சோம்… உங்களிடம் வரவே சங்கடமாத்தான் இருந்துச்சு… வேற வழியில்லாமத்தான் வந்தோம்!” என்று தடுமாறினாள்.
“”சொல்லு… என்ன விஷயம்?”
“”சுமதிக்கு படிப்புல ஆர்வம் இல்லே மேடம்… ஆனா, மூணு வருஷமா தையல் கத்துக்கறா… டிசைன் எல்லாம் நல்லா போடுவா… எக்ஸ்போர்ட் கம்பெனில சூப்பர்வைசர் வேலை காலி இருக்காம்… லண்டன், துபாய்ன்னு கை வேலை செய்து, ஏற்றுமதி செய்ற வேலையாம்… எல்லாமே பட்டுத் துணிகளாம். ஐம்பதாயிரம் ரூபா டிபாசிட் கட்டிட்டு, வேலைக்கு வந்து சேரலாம்ன்னு சொல்லிட்டாங்க… அவ்வளவு பணத்துக்கு நான் எங்க போவேன் மேடம்? அதான், உங்க கிட்ட வந்திருக்கேன்!” என்றாள்.
அதற்குள் அந்தச் சிறு பெண், ஓரடி முன்னே நகர்ந்து உட்கார்ந்தாள்.
“”படிப்பை விட, கை வேலைதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும் மேடம்… பொறுப்பா வேலை பண்ணுவேன். அம்மா சொன்னாங்க, நீங்க ரொம்ப நல்லவங்கன்னு!” என்று மெல்லிய குரலில் அவள் சொன்னது, அழகான பறவையின் ராகமாகவே இருந்தது.
“”அம்மா உனக்கு போன்…” என்று, உள்ளே இருந்து அழைத்தான் முகிலன்.
“”இதோ ஒரு நிமிடத்தில் வர்றேன்…” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு உள்ளே போனேன்.
ஒலிவாங்கியை கையில் எடுத்தேன்.
“”பானுமதி பேசறேன்… யாரது?”
“”நாமகிரி சிட் பண்ட்மா… என் பெயர் சகாய ராஜ்… சீப் அக்கவுன்டன்ட்!”
“”சொல்லுங்க சார்…”
“யார் இவர்… கரன்ட் அக்கவுன்ட் கஸ்டமரா… நினைவில் இல்லாத பெயராக இருக்கிறதே!’
“”பரந்தாமன் தெரியுமில்லையா மேடம்?”
“”பரந்தாமன்…” யோசித்தேன்; ஒரு நிமிடத்தில் தெரிந்து விட்டது.
இந்த வீடு கட்டிய இன்ஜினியர்… எனக்கும், மாதவனுக்கும் நல்ல நண்பர். சொன்னபடியே குறிப்பிட்ட கால எல்லைக்குள் வீட்டை கச்சிதமாக முடித்துக் கொடுத்து, கொத்துச் சாவியைக் கையில் கொடுத்தவர்.
“”தெரியும்… எங்க இன்ஜினியர்… என்ன சார்?” என்றேன்.
“”அவருக்கு கியாரண்டி போட்டீங்களா?”
“”கியாரண்டி?”
“”ஆமாம்… நாலேகால் லட்ச ரூபாய்க்கு… உங்க பெயர், முகவரி, அலுவலகம், போன் நம்பர் எல்லாம் இருக்கு மேடம்… விவரம் தெரியுமா?”
“”என்ன சார்?”
“”குடும்பத்தோட ஓடிட்டார் மேடம்… தலைமறைவாயிட்டார்… ஆறு மாசமாச்சு… எங்க சட்டப்படி முழுப்பொறுப்பும் உங்களுக்குத்தான். வட்டியோட சேர்த்து நிக்கிற தொகை சொல்லட்டுமா எவ்வளவுன்னு? சாரி மேடம்…”
என்ன சொல்கிறார்… ஓடி விட்டாரா… நிலுவையில் வைத்து விட்டா… இதென்ன குண்டு வெடிப்பு!
அப்படியே உட்கார்ந்து விட்டேன்.
“”மேடம் பானுமதி…” என்று அவர் குரல் கவலையுடன் கேட்டது.
“”என்ன செய்யுறது மேடம்… எதிரி கூட வெளிப்படையா தெரியுறான்… கூட இருக்கிறவன்தான் முகமூடி போட்டுக்கிட்டு குழி பறிக்கிறான்… பார்த்துக்குங்க மேடம்!”
என்ன சொல்வது, என்ன செய்வது என்று தவித்து போனேன். இப்படிப் கூட ஒரு மனிதனால் நம்பிக்கை துரோகம் இழைக்க முடியுமா?
கியாரண்டி என்பது, ஒரு மனிதனுடைய கூடுதலான பாதுகாப்பு விஷயத்திற்காக, ஒரு நிறுவனம் வாங்கி வைத்துக் கொள்வதுதானே! முறைப்படி அந்த முதல் மனிதர் கட்டி விடுவார் என்ற நம்பிக்கையின் பேரில் தானே, அவரின் நண்பரோ அல்லது தெரிந்தவரோ கையெழுத்து போடுகின்றனர்… முழு கடன் தொகையையும் அந்த அப்பாவி தலையில் கட்டி, இப்படிக் கூட ஏமாற்றுவரா?
“”கிளம்பறோம்மா…” என்று கை குவித்தாள் செண்பகம்.
“”எப்போ வரச் சொல்றீங்களோ அப்போ வரோம்மா… மனசு வைத்து, இந்த உதவியைச் செய்து தரணும்மா… பூக்காரக் குடும்பம்… என் பொண்ணு வாழ்க்கை உங்க கையிலதாம்மா இருக்கு!” என்றாள் குரல் அடைக்க.
“”பார்க்கலாம்!” எனும் போது, என் குரல் வறண்டிருந்தது.
“”வர்றோம் மேடம்… பிளீஸ்… உதவி பண்ணுங்க!” என்று அந்த சிறு பெண் முறுவலுடன் விடை பெற்ற போது, என் நெஞ்சின் ஈரமான பகுதி கெட்டித்துப் போயிருந்தது.
அப்பா அடிக்கடி சொல்கிற வாசகங்கள் நினைவில் உழன்றன…
“உண்மையே பேசுங்கள், அன்பாக இருங்கள், வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. நேர்மையும், உண்மையும் மட்டுமே வாழ்வின் நோக்கங்கள்!’ என்று அப்பா சொல்லிச் சொல்லி என்னை வளர்த்தார்.
நானும், என் மகனை அப்படிச் சொல்லிக் கொடுத்துத்தான் வளர்க்கிறேன்; ஆனால், உலகத்து மக்கள், ஏன் அப்படி இல்லை! ஏன் ஏமாற்றுக்காரர்கள், நல்லவர்களைத் தேடி வந்து, முதுகில் கத்தி வீசுகின்றனர்? பசுவின் முகத்துடன் வந்து நம்ப வைத்து, உள்ளுக்குள் கொடிய காட்டு விலங்கின் வேட்கையுடன் பாய்ந்து குதறுகின்றனர்?
“”மேடம்!” என்று டேனியல் வந்து நின்றார்.
“”என்ன சார்… சொல்லுங்க…” என்றேன்.
“”பாரோயர் மேடம்… கடனை அடைக்க வந்திருக்கார்; உங்களைப் பார்க்கணுமாம்.”
“”வரச் சொல்லுங்க!”
ஐந்து நிமிடங்களில் ஒருவர் வந்தார்.
“”உட்காருங்க!” என்றபடி ஏறிட்டுப் பார்த்தேன்.
கரிய நிறம். கட்டம் போட்ட கைலியும், புன்னகையற்ற முகமும், இறுக்கமான உதடுகளுமாக, ஒரு போராட்டக்காரத் தோற்றத்துடன் நின்றார் அந்த நடுத்தர வயது மனிதர்.
“”ஊரை காலி பண்ணிட்டுப் போறோம். கடனை பைசல் பண்ணிடலாம்ன்னிட்டு… மெசின் வேலை செய்யலே… வெய்ட் பண்ணுங்கன்னு சொல்றாங்க… என்னம்மா பாங்க் இது?” என்று படபடவென வார்த்தைகளைக் கொட்டினார்.
“”உட்காருங்க சார்… என்ன லோன் உங்களுது… பாஸ் புக்கைக் கொடுங்க!” என்று வாங்கிப் பிரித்தேன்.
காலணிகளைத் தைக்கிற, சிறு தொழில் வியாபாரிகளுக்கான கடன் அது. இருபதாயிரம் ரூபாய்க்கு அருகில் இருந்தது நிலுவை.
“”முழுசா அடைக்கப் போறீங்களா?” என்றபடி பெயரைப் பார்த்தேன்; காத்தமுத்து என்றிருந்தது. கிராமிய வாசத்தை உணர முடிந்தது.
“”ஆமாம்!”
“”நல்லது… இன்றைய தேதி வரை வட்டி கணக்கு பண்ணி சொல்லிடறேன், கேஷ் கவுண்டர்ல கட்டிடுங்க!”
“”ஹும்,” என்றார்.
உட்காரச் சொல்லியும், நின்றபடியே இருந்தது எனக்கு சங்கடமாகவே இருந்தது.
சிஸ்டம் இரண்டு நிமிடங்களில் வட்டி சேர்த்து பேலன்ஸ் தொகையைச் சொல்லி விட்டது. கேஷ் சலான் எடுத்து, விவரங்களை எழுதிக் கொடுத்தேன். சடாரென்று திரும்பிப் போனார். அதற்குள் கேஷியரை அழைத்து, அவரை நிற்க வைக்காமல், உடனே பணத்தை வாங்கிக் கொள்ளச் சொன்னேன். இரண்டே நிமிடங்களில் வேலை முடிந்து திரும்பி வந்து விட்டார்.
“”கட்டிட்டேன்… கடன் முழுசா கட்டி முடிச்சுது… இனி, எந்த பாக்கியும் இல்லேன்னு எழுதிக் கொடுங்க!” என்றார் கறாராக.
“நோ டியூ’ லெட்டரை ஒரு நிமிடத்தில் தயார் செய்தேன்.
“”நல்லது… இதுல இரண்டு காப்பி இருக்கு… ஒண்ணு உங்களுக்கு, ஒண்ணு எங்களுக்கு; கையெழுத்து போடுங்க!” என்று நீட்டினேன்.
“”கையெழுத்தா… நமக்கு எழுதப் படிக்கத் தெரியாதுங்களே… கை நாட்டுதானே!”
“”இல்லையே… பைலை பார்த்தேனே… காத்தமுத்துன்னு அழகா கையெழுத்து போட்டு இருந்தீங்களே?”
“”அதுவா… காத்தமுத்து நான் இல்ல, அவன் என் மகன்!” என்றார் நிதானமாக.
“”மை குட்னஸ்!” என்றேன் திகைப்புடன்.
“”என்ன சார் இது… அவர்தானே கையெழுத்து போடணும்? அவரை கூட்டிகிட்டு வாங்க… செட்டில்மென்ட் பார்ம்ல கையெழுத்து வாங்கிக்கிறேன்.”
“”இல்லம்மா… அவன் வர மாட்டான்!” என்றார்.
“”ஏன் சார்… பிசியா அவர்? பிரச்னை இல்லை; எப்ப முடியுமோ வரட்டும்!”
“”அட இல்லம்மா… அவன் உசிரோடவே இல்ல… செத்துட்டான்… மஞ்சக் காமாலை.”
“”என்ன… இறந்துட்டாரா?” என்றேன். ஒரு கணம், கண்கள் இருண்டு சீராகின.
“”ஊரை விட்டு போறோம்… நாளைக்கு ஒரு விரல் நம்மைப் பாத்து நீளக் கூடாதில்லே, கடனை வச்சுட்டுப் போயிட்டான் மாரிச்சாமின்னு… அதான் வந்தேன்… வரேம்மா!” என்று கைநாட்டு பதித்து விட்டு எழுந்தார்.
வேகமாக கதவை திறந்து, படிகளில் இறங்கி, ஓரிரு நொடிகளில் மாநகர மக்கள் வெள்ளத்தில் மறைந்து போனார்.
என்ன இது… நடப்பதெல்லாம் நனவுதானே! நாடகம் இல்லையே? பரந்தாமன்கள் வாழும் இதே உலகத்தில்தான், மாரிச்சாமிகளும் வாழ்கின்றனர்!
“டிசீஸ்ட்’ – இறந்து விட்டார் என்று ஒரே வார்த்தையில் பைலை மூடியிருக்க முடியுமே? ஏழை விவசாயத் தகப்பன், ஓடி வந்து, இறந்த மகனின் கடனை அடைக்க வேண்டும் என்று, எந்த சட்டமும் சொல்லவில்லையே? அய்யோ… புயலைப் போல வந்து, தென்றலாக ஒரு நம்பிக்கையை விதைத்து விட்டு போனது யார்? மனித உருவில் தேவர்கள் வருவது இப்போதும் சாத்தியமா?
நல்ல லட்சியம் ஒன்றில் வெற்றி பெற வேண்டுமானால் அதன் ரகசியம், அளவற்ற பொறுமை, மகத்தான தூய்மை, மாபெரும் நேர்மை என்று உலகத்து தத்துவங்களெல்லாம் உரத்த குரலில் சொல்லும் போது, எளிமையான ஒரே செய்கை மூலம், ஒரு நந்தவனத்தையே உருவாக்கி விட்டுப் போன, அந்த மகத்தான மாரிச்சாமியை கை கூப்பித் தொழுதேன். என் உணர்வுகள் நெகிழ்ந்து, விழிகளில் நீர் வழிந்தது.
டேனியலை அழைத்தேன்.
“”சொல்லுங்க மேடம்…” என்று வந்தார்.
“”வாசல்ல பூக்கடை போட்டிருக்கிற செண்பகத்தை வரச் சொல்லுங்க. தீபம் மகளிர் குழு தலைவி சாந்தியையும் கூப்பிடுங்க!” என்றபோது, என் மனம் ஈர நிலமாகியிருந்தது.

– மே 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *