தேர்வறைத் தியானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 30, 2013
பார்வையிட்டோர்: 9,635 
 
 

மூன்று மணி நேரம் தேர்வறையில் மௌனமாக இருக்கும்போது மனதில் பல்வேறு சிந்தனைகள் தோன்றும். பிரிந்த அன்பு, உடைந்த நட்பு, தோழியின் பரிவு, நண்பனின் நெருக்கம், தேர்வு சரியாக எழுதவில்லை என்றால்… எனும் பயம் இப்படி. இது பொதுவானவர்களுக்கு.

இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்குக் கடவுள் பற்றிய ஆராய்ச்சி, பொதுவுடைமைச் சிந்தனை, கதை, கவிதை எழுதும் எழுச்சி, நாட்டில் சீர்திருத்தம் கொண்டு வருவது எப்படி என்றெல்லாம் இங்கே வந்துதான் ஞானோதயங்கள் (!) பிறக்கும். இப்படிப் பல்வேறு திசைகளுக்குக் அவரவர்களது கற்பனை விமானம் கூட்டிச்செல்லும்.

என்னையும் எனது விமானம் கூட்டிச் சென்றது, ஒரு புனைவை எழுத. அந்தப் புனைவானது நான், தேர்வறை, எனது மனம் சம்பந்தப்பட்டது. இதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. பின்வரும் புனைவு, பாதி உண்மை பாதி கற்பனை.

எனக்கு இது இரண்டாவது தேர்வு. முதலாவது, மூன்று நாட்கள் முன்னதாக முடிந்து விட்டது. அதைச் சரியாகவும் எழுதவில்லை. சரி, அந்த விஷயம் இங்கு எதற்கு? இங்கே களம் இரண்டாவது தேர்வறை. அறைக்குள் நுழையும்போது இலேசான பயம். முன்னது போல் இதுவும் கடினமாக இருக்குமோ என்று.

எனது இருக்கையைக் கண்டுபிடித்து அதில் அமர்ந்தேன். அதிலிருந்து நேரே பார்த்தால், எனது வகுப்பில் படிக்கும் அழகிய பெண் ஒருத்தி அமர்ந்திருந்த காட்சி! அவள் தற்செயலாகப் பின்னால் திரும்பிப் புன்னகை பூத்தாள். எனக்கு ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை. நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன்.

நீங்கள் கேட்கலாம், இதில் என்ன புரியவில்லை என்று. அவளை எனக்குக் கொஞ்சம் பிடிக்கும். அவளிடம் நட்பாகப் பழக வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஆனால், அதற்கான முயற்சி எதையும் எடுத்ததே இல்லை. நேர்மாறாக, சில முறை பகைத்திருக்கிறேன். அப்படியிருந்தும் அவள் என்னைப் பார்த்ததும் புன்னகைத்துதான் நான் ஒரு நொடி செயல் இழக்கக் காரணம்.

கேள்வித்தாள் கைக்கு வந்து சேர்ந்தது. அதைப் பார்த்த எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி, அவள் புன்னகைத்ததை விட! காரணம், கேள்விகள் அத்தனையும் நான் படித்தவை. எனக்காகவே தயார் செய்யப்பட்ட கேள்வித்தாள் போல் இருந்தது அது!

என் மனம் சொன்னது, இந்த அதிசயத்துக்குக் காரணம் அவள் புன்னகையாக இருக்கலாம் என்று. நானும் என் மனதிடம், “சரி, இனி ஒவ்வொரு தேர்வின்பொழுதும் அவளைப் பூப் (புன்னகை) பொழியச் சொல்கிறேன்” என்றேன்!

இரண்டே கால் மணி நேரத்துக்குள் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் எழுதி முடித்து விட்டேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. பின், 15 நிமிடம் விடைத்தாளை அலங்கரித்தேன். சரியாக 2.30 மணி நேரத்தில் மொத்த வேலையையும் முடித்தே விட்டேன்.

பின்பு, கண்காணிப்பாளரைப் போல் நானும் ஒரு மௌனப் பார்வையாளன் ஆனேன்.

அறை ஒன்றும் முழுமையான நிசப்தமாக இல்லை. அறையில், ஆதி காலத்தில் வாங்கப்பட்ட மின் விசிறி ஒன்று ‘கிர்ர்ர் கிர்ர்ர்’ என்று சுற்றிக் கொண்டு இருந்தது. இடையில் இரண்டு நிமிடம் மின் தடை ஏற்பட்டது. அப்போது நிலவியதே, அது நிசப்தம்! நிசப்தம் என்றால் அப்படி ஒரு நிசப்தம். நான் பயந்தே போய்விட்டேன், எனது செவிதான் செயல் இழந்துவிட்டதோ என்று. நல்லவேளை, அருகில் இருந்த சகோதரி சலசலவென்று விடைத்தாளைத் திருப்பி என் பயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

மின்சாரத் தட்டுப்பாடு என்கிறார்கள்; எங்கள் அறையில் மட்டும் ஆறு மின் விளக்குகள் அறையில் போதிய வெளிச்சம் இருக்கும்பொழுதும் தேவையில்லாமல் ஒளிர்ந்து கொண்டிருந்தன. இப்படிப்பட்ட மின் விரயங்களைத் தடுக்கக் கல்லூரிகளின் தேர்வுச் சமயங்களில் மின்சார வாரியம் தடாலடிச் சோதனை நடத்த வேண்டும்!

இறுதி முப்பது நிமிடத்தில் பல சுவாரசியமான காட்சிகள் காணக் கிடைத்தன. தனது சிந்தனைக்கு மின் விசிறியைத் துணைக்கு அழைக்கும் பாவனையில் அதை பார்த்துப் பார்த்து யோசித்து எழுதும் என் முன் வரிசை நண்பன், கையில் வண்ண வண்ணப் பேனாக்களுடன் பத்திரகாளியை நினைவுபடுத்தும் முகம் அறியாச் சகோதரி, படபடப்புடன் எழுதியது போதாதென்று எழுதியதைச் சரிபார்க்கும்போதும் படபடப்புடன் பக்கங்களைத் திருப்பும் தோழி…

இவற்றையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும்பொழுதே என் செவிகளுக்கு மட்டும் யுவன் சங்கர் ராஜாவின் இசை கேட்க, தியான நிலையை அடைந்தேன்.

முடிவற்ற ஒரு புல்வெளி (மனக்)கண்முன். அதில், வரலாறு படைத்த பலரின் அணிவகுப்பு. அதில் என்னைக் கவர்ந்தவர்களின் பட்டியல் பின்வருமாறு…

ஹிட்லர், சுபாஷ் சந்திரபோஸ், கார்ல் மார்க்ஸ், ஐசக் நியூட்டன், டயானா, கப்பலோட்டிய தமிழர், கௌதம புத்தன் இப்படி ஏராளமானோர்! முழுப் பட்டியலை மற்றொரு நாள் வெளியிடுகிறேன்.

அவர்களுள் எனக்கு வழிகாட்டி ஒருவரும் இருந்தார். அவரது முகம் அவ்வளவு பிரகாசம்! சூரியனைப் போல அதைக் கண்ணாடி அணியாமல் பார்க்க முடியவில்லை. கண்ணாடியுடன் பார்த்தாலும் அடையாளம் காண முடியவில்லை. அவர், மேலே குறிப்பிடப்பட்டவர்களுள் எவரேனும் ஒருவருடன் நான் உரையாடலாம் என்றும், ஆனால், உரையாடும்பொழுது அவர்களைத் தொடக் கூடாது என்றும் கூறினார். நான் யோசனையே இன்றிப் புத்தனைத் தேர்வு செய்தேன் உரையாட. சிரித்த முகத்துடன் தமிழில் பேசினார் புத்தர். நானும் சிரமப்பட்டு ஆங்கில வார்த்தைகளைத் தவிர்த்துப் பேசினேன்.

கேள்வி – 1: ஏன் மனிதர்களுக்கு ‘ஆசை வேண்டாம்!’ என்று போதித்தீர்கள்?

புத்தன்: எனக்கு மனிதர்கள் ஆசையின்றி இருக்க ஆசை (சிரிக்கிறார்).

கேள்வி – 2: உங்கள் ஆசை நியாயமானதா?

புத்தன்: ஆசைக்கு நியாய, அநியாயங்கள் கிடையாதே! (மீண்டும் சிரிப்பு). (சற்று இடைவெளி விட்டு) ஆசை அவரவர் மனதைப் பொறுத்தது. எனக்கு, எனது ஆசை நியாயமாகத்தான் தெரிகிறது.

கேள்வி – 3: உங்கள் மனைவி யசோதராவைப் பற்றிச் சில வரிகள்?

புத்தன்: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

“தம்பி, எழுதுனது போதும்!” இந்தச் சத்தத்தில் தியானம் கலைந்து பார்த்தேன். தேர்வறைக் கண்காணிப்பாளர் எனது முன்வரிசை நண்பனிடம் போராடிக் கொண்டு இருந்தார். எனக்கு மிகவும் வருத்தம்! புத்தனிடம் சொல்லாமல் கொள்ளாமல் வந்து விட்டோமே என்று!

சரி, அடுத்த தேர்வு அன்று உரையாடலைத் தொடரலாம் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.

அறையை விட்டு வெளிவந்தவுடன் நடந்த உரையாடலை எழுதி வைத்துக் கொண்டேன். அப்பொழுதே முடிவு செய்துவிட்டேன், இதை வைத்து ஒரு புனைவை எழுதிவிட வேண்டும் என்று.

ஆனாலும் ஒரு சிறு குறை. முன்னர் என் மனதிடம் வாக்களித்தது போல், அவளிடம் அடுத்த தேர்வு அன்று புன்னகைக்கும்படிச் சொல்ல மறந்து விட்டேன். அதற்குக் காரணம் புத்த நினைவுகளே!

யாராவது அவளைப் பார்த்தால் சொல்லுங்கள், என்னைப் பார்த்து மெலிதாகப் புன்னகைக்க!

நன்றி: நிலாச்சாரல்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *