துலாக்கோல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 7,550 
 
 

திறந்திருந்த ஜன்னல் வழி நுழைந்த வெயில் முகத்தில் பட, விழிப்பு வந்தது சேதுராமனுக்கு. எழுந்த போது வாசலில் தென்னமாறை வைத்து பெருக்கும் சத்தம் கேட்டது. அனேகமாய் ரேவதியாய் இருக்கும் என்று தோன்றியது. எதிர்வீட்டுப் பெண்ணுடன் முறை வைத்து வாசலை மாற்றி மாற்றி பெருக்குவது உண்டென்றாலும், இது என்னவோ ரேவதி பெருக்குவது மாதிரி இருந்தது. படுக்கையறையில் இருந்து எழுந்து வந்தவன், வாசலில் ரேவதி பெருக்கிக் கொண்டிருப்பதை பார்த்ததும் தன்னையே லேசாய் மெச்சிக் கொண்டான். வாசலுக்கு அருகே போன போது லேசாய் புழுதி பறந்து தொண்டைக்குள் ஏறியதில், கொஞ்சம் இருமல் வந்தது. தனக்காகத்தான் செருமி இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு இவனை நிமிர்ந்து பார்த்தவள், இவன் பேசாது இருக்க தொடர்ந்து வாசலை பெருக்க ஆரம்பித்தாள்.

வாசக்காலுடன் இரண்டு படி வைத்து தெருவுக்கு இறங்க வேண்டும். ஆனால் அவள் பேசாதது கண்டு, அவன் வாசக்காலுக்கு முன்பாகவே நின்று விட்டான். வாசலில் சாணி கரைத்து வைத்திருந்த ஆரஞ்சு கலர் பிளாஸ்டிக் வாளி முதல் படியில் இருந்தது. வெயில் அதன் மேல் பட, ஆரஞ்சு கலர் வாளி இன்னும், செம்மஞ்சளாய் தெரிந்தது. அது அவள் முகத்திலும் பட்டு, சிகப்பாய் பிரதிபலித்தது. பக்கத்திலேயே ஒரு போனியில் கொஞ்சம் செம்மண் குழைத்து வைத்திருந்தாள். ஒரு துணியும் வாசலில் செம்மண் சாயத்துடன் கிடந்தது. இன்றைக்கு ரேவதியும் தாமதமாக விழித்திருப்பாள் போல. எப்போதும், இவன் எழுந்திருக்கும் முன்பாகவே வாசல் தெளிப்பது கோலமிடுவது எல்லாம் முடிந்திருக்கும். சேதுராமன் அவளை பார்த்துக் கொண்டே நின்றான். அவள், அவனை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை, நேற்றைய விஷயத்தையே நினைத்துக் கொண்டிருப்பாள் என்று தோன்றியது. சற்று நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், பேசுவதற்கான பிடி கிடைக்காமல், திரும்பி வீட்டின் உள்ளே சென்றான்.

ஒரே ஒரு அறை, அடுப்பங்கரை, முன்பக்கம் திண்ணை வைத்த வாசற்படி, பின்பக்கம் ஒரு கிணறு. கிணற்றை ஒட்டியபடி ஒரு குளியலறையும், பாம்பே கக்கூஸும். ஒரு முருங்கை மரம், செம்பருத்திச் செடி, கொஞ்சமே கொஞ்சம் அடுக்குமல்லிச் செடி. ஒரு அரை ஆள் உயரத்து சுற்று மதில் என்று சின்ன அமைவான வீடு. தைக்காபட்டித் தெருவில் இது போல வீடு அமைவது மணத்துக் கொள்ளவேண்டிய அதிசயம் என்று தோன்றும். ரேவதி, இந்த வீடைப் பார்த்ததும் இது தான் வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்தாள். இவன் வேலை செய்யும் பாங்கில் இருந்து இது தூரம் என்றாலும், வேறு வழியில்லாமல் எடுத்துவிட்டான். இந்த வீட்டிற்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியிருக்கும் என்று தோன்றியது அவனுக்கு.

ஏதோ யோசனையில் வீட்டின் பின்பக்கமாய் சென்றான். குளியலறை அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீரை இருகைகளிலும் கோரி, முகத்தில் அடித்துக் கழுவி கொண்டான். வாயைக் கொப்பளித்து முருங்கை மரத்தின் அடியில் துப்பினான். அங்கேயே கொடியில் கிடந்த துண்டை எடுத்து முகத்தை ஒத்திக் கொண்டபடியே, அடுப்பங்கரைக்குள் நுழைந்தான். காஃபி கலந்து வைத்திருந்தாள், அதை ஒருகையில் எடுத்துக் கொண்டு திரும்பவும் வாசலுக்கு வந்தான். வாசலைப் பெருக்கி, முழுதும் சாணி தெளித்து முடித்திருந்தாள். வாசக்காலில் இப்போது செம்மண் பட்டை இட்டுக் கொண்டிருந்தாள். எப்போதுமே வாசக்காலில் செம்மண் மெழுகி கோலமிடுவது தான் அவளுக்குப் பிடிக்கும். பின் அதன் மேலே வெள்ளையாய் கோலமிடுவாள். பளிச்சென்று இருக்க வேண்டும் வாசக்கால் என்பாள். அவளும் எப்போதும் பளிச்சென்று தான் இருப்பாள், எப்போது பார்த்தாலும். இப்போதும், அப்படியே குளிக்காதவள் மாதிரி இல்லை.

கோலம் போட்டு விட்டு ஒரு கையில் வாளியையும், கோலமாவு டப்பாவையும், விளக்கமாறையும் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். வீட்டிற்கு நுழைந்ததும், தண்ணென்ற குளுமையில், அவளின் கோபம் குறைந்திருந்தது போலத் தோன்றியது. அவனைக் கடந்து சுவரை உரசியபடியே பின்பக்கம் போய் கிணற்றில் நீரிறைத்து, வாளியைக் கழுவினாள். குளியலறை சுவர் மீது, செம்மண் போனியை வைத்துவிட்டு, விளக்கமாற்றை துவைகல்லுக்கு பக்கத்தில் போட்டாள். இத்தனை செய்யும் போதும், அவனைப் பார்க்கவில்லை, அவன் பார்த்துக் கொண்டிருந்ததற்கு பதிலாய் ஒரு சிரிப்பு இல்லை. எத்தனை பிடிவாதமாய் இருக்கிறாள், இவள் என்று தோன்றியது. ஒரு சின்ன விஷயத்தில் ஆரம்பித்த பேச்சு, வாக்குவாதமாய் மாறி, சண்டையில் முடிந்தது. அவள் சொல்வதில் சில நியாயங்கள் இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்த அவனால் முடியாது என்றே தோன்றும். இயலாமையைக் குத்தி காண்பிக்க கோபம் வந்து விடுவது எப்போதும் நடக்கிறது.

ரேவதி படித்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூரில் தான். அவளுடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன்கள், ஒருத்தன் சிலுவானக்கடையும், இன்னொருவன் பட்டை வெட்டும் தொழிலும் செய்கிறான். அவளுடைய அப்பாவுக்கும் நகைத்தொழில் தான், கசை ஐய்ட்டங்கள் எல்லாம் செய்வார். கசைத்தோடு, நெக்லஸ், பொடி மூக்குத்தி, சில சமயம் வளையல்களும். நல்ல வசதியான வரும்படி வரும் குடும்பம் வீடு, வாசல், கார் என்று, ஒரே பெண் குழந்தை. ரேவதி அத்தனை அழகு, மாநிறத்தில் அவளுடைய கண்களும், மூக்கும் அத்தனை செய் நேர்த்தியுடன் இருக்கும். சற்றே மேலேறிய புருவ வளைவுகள். உயரமும், அவள் அம்மாவைப் போல. ரேவதிக்கு சுத்தமாய் படிப்பு வரவில்லை, பத்தாவது பெயிலானவுடன் படிப்பை நிறுத்திவிட்டார்கள்.

அப்பாவின் வழி சொந்தத்தில் மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் ஃபான்ஸி ஸ்டோர் வைத்திருந்த ஜெயபாலை ரேவதிக்கு கல்யாணம் முடித்து வைத்தார்கள். மதுரை பிடிக்காமல் போக, ஜெயபாலை கோயம்புத்தூரில் வந்து வியாபாரம் செய்யக்கூப்பிட, ரேவதியின் சகோதர்ர்களும் நெருக்க வேறு வழியில்லாமல் கோயம்புத்தூரில் ஃபான்ஸி ஸ்டோர் மற்றும் வீடியோ பார்லர் வைத்திருந்தான். ஆறுமாதத்தில் மாமனார் வீட்டில் இருக்க முடியாது என்று மதுரைக்கே திரும்பி வந்து விட்டான் ஜெயபால். சங்கத்து மீட்டிங்கிற்கு மதுரைக்குப் போன போது ஜெயபாலைப் பார்த்தான் சேதுராமன். ஜெயபாலுவின் இரண்டாம் திருமணமும், சேதுராமன், ரேவதியின் திருமணமும் ஒரே முகூர்த்தத்தில் தான் நடந்தது. ஜெயபாலுவுக்கு, மதுரையிலும், சேதுராமனுக்கு திருத்தங்கலிலும்.

சேதுராமனுக்கு அவனுடைய திருமணம் ஏதோ அத்தனை அவசரமாய் நடந்தது போலத் தோன்றும். சேதுராமனுக்கு ரேவதி ரொம்பவே அதிகம், அதிலும், சேதுராமன் ரேவதியை விட கொஞ்சம் குள்ளம் வேறு. எதிர்பார்த்ததை விட அழகும் வசதியும் நிறைந்த பெண் என்பதால், சேதுராமன் அவனுடைய அம்மாவின் பேச்சுக்கு உடனே சம்மதித்தான். ரேவதிக்கு விவாகரத்து ஆன விஷயம் ஒரு பொருட்டாகவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், அவனுக்கு ஏதோ பெரிய தியாகம் பண்ணுவது போன்ற நினைப்பும் இருந்தது. அவனுடைய தொழிலில் நிரந்தர வருமானத்தை எப்போதுமே நம்பமுடியாது என்பதால் இரண்டு மச்சினன்கள் இருப்பது கூடுதல் பலம் என்று தோன்றியது அவனுக்கு. ரேவதி, சேதுராமனுடனான திருமணத்துக்கு சம்மதித்ததை விட மதுரையிலேயே தங்கியிருக்கமுடியாதவள், எப்படி ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வர சம்மதித்தாள் என்பது இன்றுவரை ஆச்சரியம் அவனுக்கு.

சேதுராமனுக்கும் ரேவதிக்கும் திருமணம் ஆன போது சேதுராமன் ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே நகைப்பட்டறை வைத்திருந்தான். ஓரளவு வேலை இருந்து கொண்டே இருந்தது. அவனுக்கும் அம்மாவுக்கும், அந்த வருமானம் அதிகமாகவே இருந்தது. திருமணத்திற்கு பிறகு ஏனோ வருமானம் போதுமானதாக இல்லாதது போலத் தோன்றியது. வீட்டில் ஒருத்தர் கூடிப்போனால், இத்தனை செலவாகும் என்று அவன் தெரிந்திருக்கவில்லை. வழக்கமான செலவுகளை விட, ரேவதிக்கான பிரத்யேக செலவுகள் அதிகமாய் இருந்தது போலத் தோன்றும். நாட்கள் போகப் போக, சேதுராமன் போன்றவர்கள் வேலைக்காக நம்பியிருக்கும், நகைக்கடைகளில் வியாபாரம் குறைய ஆரம்பித்தது. வேலையும் குறைய ஆரம்பித்தது. கிராக்கிவேலைகள் அத்தனை சுளுவாய் கிடைப்பதில்லை, தெரிந்தவர் மூலம் கிடைக்கும் வேலைகள் ரொம்பவும் குறைவாகவே இருந்தது. உடைஞ்சது ஊத வருபவர்களே அதிகம் இருந்தனர். ரிப்பேர் வேலைகள் எப்போதும் போதுமானதாய் இருப்பதில்லை.

வருமானம் குறையக்குறைய, பணப்பற்றாக்குறை அல்லது தேவைகள் அதிகமானதாலோ ரேவதிக்கும், சேதுராமனுக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறுகள் தொடர ஆரம்பித்தது. அப்போது, பொற்கொல்லர் லைசன்ஸை வைத்து ஏதாவது செய்யமுடியுமா என்று யோசித்துக் கொண்டிருந்த போது, புத்தா செல்வராஜ் கொடுத்த யோசனையில், தங்க நகைகள் தரம் பார்க்கும் வேலைக்கு பாங்கில் அப்ளை செய்தான். சந்திரன் பிள்ளையின் சிபாரிசுக் கடிதத்துடன் அப்ளை செய்த்தால், அவனுக்கு வேலை கிடைத்தது. இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது இன்றைய நாள் வரை கணக்கில் கொண்டால்.

நகைக்கடனுக்காய் வரும் தங்க நகைகளை தரம் பார்த்து விலை சிபாரிசு செய்யும் வேலை. எத்தனை டச் என்று சொல்லி விட்டால் போதும், ஆனாலும் சிபாரிசு விலையையும் ஒரு சிட்டையில் எழுதிக் கொடுக்க வேண்டும். அப்ரைசர் வேலை எந்த பாங்கிலும் காண்ட்ராக்ட் பணி தான் என்றாலும், மாதத்திற்கு ஒருமுறை தான் சம்பளத்தைத் தருவார்கள். வருகிற கிராக்கிகளைப் பொறுத்து அவனின் மாத வருமானம் கூடும் குறையும். அவன் வேலை பார்ப்பது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் கூட்டுறவு வங்கியின் பிரத்யேக கிளை. அவனுக்கென்று தனிக்கவுண்டர். ஒரு எடை பார்க்கும், எலக்ட்ரானிக் தராசு, துல்லியமாய் கணக்கு சொல்லும். படிக்கல்லில் தராசு போட்டு, குண்டுமணி கணக்குகள் வைப்பது போலில்லை. கண்ணாடி பெட்டியில் இருக்கும் எலக்ட்ரானிக் எடை மெஷின், காற்றினால் எடையை கூடக்குறைய காட்டும் என்பதால், தட்டில் நகைகளை வைத்தபிறகு, கண்ணாடிப் பெட்டியின் சிறு அடைப்புக் கதவை மூடிவிட வேண்டும். உரைகற்கள், கொஞ்சம் ஒரு சீசாவில் ஆசிட், காந்தம், ஒரு ரெஜிஸ்தர், பாரம்கள், சிட்டை எழுதுவதற்கு பேனா, பென்சில் இது தான் அவனுடைய வேலைக்கான சாதனங்கள்.

வருகிற கிராக்கிகளிடம் நகைகளை வாங்கி அதன் வளையம் அல்லது கெட்டியான பகுதியை பிடித்து உரைகல்லில் உரச வேண்டும். உரசும் போதே தங்கத்தின் தரம் தெரிந்து விடும். அனுபவத்திலேயே சொல்லிவிடலாம், அது எத்தனை டச் என்பது. கிராமங்களில் செய்யப்படும் நகைகள் பெரும்பாலும், 85 டச்சுக்கு மேல் வராது, சில கடைகளில் மட்டுமே 90 டச் அலல்து 916 நகைகள் செய்கிறார்கள். உரசுவதில் மட்டும் தெரிந்து விடாத பட்சத்தில், கொஞ்சம் உரசிய இடத்தில் ஆசிட்டை ஒரு இங்க் ஃபில்லரில் எடுத்து ஒரு சொட்டு விட்டால் தெரியும், தரமான தங்கமாய் இருக்கும் பட்சத்தில், அந்த தங்கத்தின் கோடு பிரியாது அல்லது கரையாது. மோசமான தங்கம் என்றால் எளிதில் பிரியும். அதை வைத்தும் தரத்தினை நிர்ணயம் செய்யமுடியும். தாமிரம் அல்லாது வேறு உலோகங்கள் கலந்திருந்தால், காந்தத்தில் தெரிந்துவிடும். கட்டித்தங்கமாய் இருந்தால், ஒரு முனையில் வெட்டி தான் உரசவேண்டும். உரைகல்லும், உரசுவதில் விடும் சிறு பொடிகளை, மெழுகில் ஒட்டி எடுத்தால் வந்துவிடும். அது ஒரு வருஷத்திற்கு ஒரு இரண்டு கிராமில் இருந்து இருபது கிராம் வரை தேறும். அது அப்ரசைசர் வேலையில் இருப்பவர்கள் எடுத்துச் செல்லமுடியாது. அது பாங்கின் கணக்கில் தான் சேரும், அதை கணக்கிடுவதற்கும் பாங்கில் தலைமை அலுவலகத்தில் தனி ஆட்கள் இருப்பார்கள்.

சென்னையில் இருக்கும் சில பெரிய பாங்க்குகளில், தங்கத்தின் தரத்தை நிர்ணயம் செய்ய இயந்திரங்கள் இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கான் சேதுராமன். அது இந்த இது போல கூட்டுறவு வங்கிகளில் வர, இன்னும் பத்தாண்டுகளாவது ஆகும். அது வந்துவிட்டால், இருக்கிற இந்த வேலையும் போய்விடும். ஆனால் இங்கு வராது என்று அவனுக்கு திடமாய் நம்பிக்கை இருந்தது. நகைக்கடன் வாங்க வருவோரின் எண்ணிக்கையை பொறுத்து, இவனுடைய வருமானமும் இருக்கும். ஆடி, பங்குனி, மார்கழி மாதங்களில் நகைக்கடன் வாங்க வருவோரின் எண்ணிக்கை ரொம்பவும் குறைவாய் இருக்கும். அது போன்ற காலங்களில் மற்ற மாதங்களில் சம்பாதித்ததில் கொஞ்சம் சேமிப்பு இருந்தால் தான் பொழுதை ஓட்டமுடியும் என்று தெரியும் அவனுக்கு. சேமிப்பு என்பதே இல்லாமல் போய் விட்டது, மாத வருமானமே போதுமானதாய் இல்லாத பட்சத்தில் எப்படி சேமிப்பது என்பது அவனுக்கு விளங்கவில்லை. வருமானத்தை பெருக்கிக் கொள்ளவும் வழி தெரியவில்லை. அதில் தான் எல்லா பிரச்னைகளும் ஆரம்பிக்கிறது.

நேற்றும் அது போல ஒரு பிரச்னை தான், ரேவதியின் அண்ணன் மகள்களுக்கு காதுகுத்த ஏற்பாடாகியிருந்தது தைமாத பொங்கல் கழிந்த இரண்டு வாரங்களில். மார்கழி மாதம் போதிய நகைக்கடன் இல்லாததால், தை மாதம் வந்த வருமானம் போதவில்லை. பொங்கல் கூட அத்தனை சிறப்பாய் இல்லை. இதில் ரேவதியின் அண்ணன் மகள்களுக்கு காது குத்துவதால், பட்டுப்பாவாடை துணிகள் ரெண்டு பேருக்கும் எடுத்து தரவேண்டும் என்று ரேவதி ஆரம்பிக்க, எல்லாப் பிரச்னைகளும் வந்தது.

“என்னங்க, ஏங் அண்ண புள்ளைங்களுக்கு, காது குத்துறாங்க, தெரியும்ல?”

‘ஆமா என்ன இப்போ? இன்னும் பொழுதிருக்கே?’

“எந்த உலகத்துல இருக்கீங்க நீங்க! அடுத்தவாரம் ஞாயித்துக்கிழமை விசேஷம், இன்னும் சரியா ஒரு வாரம் கூட இல்லை!, இப்பமே துணி எடுத்தாத்தானே தைக்க முடியும்!” என்றாள்.

துணி எடுத்து தைக்க வேண்டும் என்றால், குறைஞ்சது ஆயிரம் ரூபாயாவது தேவைப்படும் என்று சேதுராமனுக்கு கணக்கு பார்க்காமலே தெரிந்தது. அதுக்கு எங்க போய் பணம் ஏற்பாடு செய்வது என்று பயம் தோன்றியது. எதிர் கவுண்டரில் இருக்கும் காஷியரின் கல்லாவில் கை வைத்தால் தான் முடியும் என்று நினைத்த போது அவனுக்கு சிரிப்பு வந்தது.

“நான் கேட்டுட்டு இருக்கேன், ஒங்களுக்கு சிரிப்பு வருதா சிரிப்பு? எங்க வீட்டுக்கு செய்யணுண்டாலே ஒங்களுக்கு அங்க வலிக்கும் போல?”

இதற்கு என்ன பதில் சொல்வது என்று சேதுராமனுக்கு தெரியவில்லை. இன்னைக்கு ராத்திரி நிம்மதியா தூங்குவது முடியாது. பன்னிரெண்டு மணி வரை பேசிக்கிட்டே இருப்பாளே? என்று அவனுக்குத் தோன்றியது.

“ஏற்கனவே அங்க போக்குவரத்து எல்லாம் குறைஞ்சி போச்சு, இதுல விசேஷம்னுண்டு கூப்பிட்டு, நாம ஏதும் கொண்டு போகலைண்டா, வெளங்கிடுமாக்கும்!”

‘வேண்டாம்னு யாருடி சொன்னா? வாங்கலாம் இன்னும் ரெண்டு நாள்ல, சந்திரா டெய்லர் குடுத்தா, ஒரு நாள்ல கொடுத்துடப் போறா!’ என்று சொல்லிவைத்தான். அவளுக்கு அந்த பதிலில் திருப்தி இல்லை. கையில் போட்டிருந்த இரண்டு வளையல்களைக் கழட்டி,

“இதுக்கு கடன் வாங்கிட்டு வாங்க! நானே பாத்துக்கிடுதேன், அவிக கொடுத்தது, அவிகளுக்கே போட்டும். இதுக்கு அந்தப்பய பரவாயில்லையாட்டம் இருக்கு!” என்று சொல்லியதும், சேதுராமனுக்கு ஆத்திரமாய் வந்தது.

‘ஒங்கிளையார்லயே எவனாவது இருந்தா கட்டிருக்க வேண்டியது தான! நானா ஒன்னைத்தான் கட்டிக்கிடுவேண்ணு பின்னாடியே வந்தேன், வேற ஒரு பயலும் இல்லாமத்தானே என்னை கட்டிக்கிட்ட! அதும் அவென் கல்யாணம் பண்ணுதான்னு அதுக்கு முன்னாடியே பண்ணனும் தானே, ஒங்க அண்ணங்கிட்ட சொல்லியிருக்க!

அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது, மூக்கெல்லாம் விடைக்க சுற்றுமுற்றும் பார்த்தாள், ஏதோ செய்யப்போவது போல.

சேதுராமன் இது எதையும் கண்டு கொள்ளாது திரும்பவும் கத்த ஆரம்பித்தான்.

‘அவனைப் பாத்தனே சங்கத்து மீட்டிங்க்ல, வந்து கையப்பிடிச்சுக்கிட்டு பேசுறான், தண்மையானவனாத்தான் தெரியுதான், நீ என்ன புடுங்கி வச்சயோ தாங்கமாட்டாம ஓடிட்டான், ஒன் இம்சை தாங்காமத்தான் எங்க ஆத்தாவும், மக வீட்டுக்கே போறேனுட்டு, திருத்தங்கலுக்கு போயிட்டா’

கையில் இருந்த தண்ணீர் சொம்பை தூக்கி தரையில் எறிய, அது படுக்கைக்கு அருகில் இருந்த டைம்பீஸை உடைத்தது. அப்புறமும் அடங்காமல் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கிக் கொண்டு

“ஒம்புட சாமர்த்தியம் தெரியும்ல, வருஷம்பூரா குப்புறப்படுக்குறவந்தானே நீய்யு? அவென் எவ்வளவோ பரவால்லை, போதும் ஒன் சங்காத்தம்! டிக்கெட் வாங்கிக் குடு, அங்கேயே போயிடுறேன், அவிக நல்லா வச்சுப்பாக என்ன” என்று எறிந்த சொம்பு, உடைந்த டைம்பீஸ் பற்றிய யோசனையற்று, படுக்கையில் குப்புறப்படுத்தபடி அழ ஆரம்பித்தாள். சேதுராமனுக்கு அவள் அழட்டும் என்று தோன்றினாலும், ஏனோ கவலையாய் இருந்தது படுக்கும் போது.

இன்று காலையிலும், அவள் பேசாது அடைத்து போய் இருந்தது மனசுக்கு வேதனையாய் இருந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை சேதுராமனுக்கு. எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டே, குளித்துவிட்டு வேலைக்கு கிளம்ப தயாரானான். காலையில் பலகாரம் ஏதும் செய்யாததால், காரவடை சுப்பு கடையில் இருந்து கொஞ்சம் இட்லிகளும், வடையும் வாங்கி வந்து அவனும் சாப்பிட்டு விட்டு அவளுக்கு கொஞ்சம் எடுத்து வைத்துவிட்டு கிளம்பினான். அம்மா, அவர்களுடன் இல்லாத நாட்களில் பெரும்பாலும் கடையில் தான் சாப்பிடுவது, காலை டிபனும், இரவு பரோட்டாவும் என்று. மதியம் அவள் ஏதாவது செய்து வைத்திருப்பாள் மூன்று மைல் தொலைவாய் இருந்தாலும் வந்து சாப்பிட்டு விட்டு செல்வது வழக்கம்.

அவளிடம் சொல்லிக் கொண்டு, சைக்கிளை எடுத்து, சீட்டுக்கடியில் சொருகி வைத்திருந்த துணியை எடுத்து லேசாக துடைத்தான். சீட்டை ரெண்டு தட்டு தட்டி விட்டு, கிளம்பியவன், பாங்கிற்கு போகும் வழியெல்லாம் யோசித்துக் கொண்டே சென்றான்.

பாங்கை அடைந்ததும், காஷியருக்கு ஒரு வணக்கம் வைத்து விட்டு, கிளை மேலாளரின் அறையை எட்டிப் பார்த்தவன், அது பூட்டியிருக்கவே பக்கத்தில் இருந்த கிளார்க்கிடம் கேட்டு விடுப்பு என்று தெரிந்து கொண்டான். எப்போதும் எல்லோருக்கும் முன்பாகவே வந்துவிடுவார் மேலாளர்.

தன்னுடைய கவுண்டருக்கான சாவியை காஷியரிடம் வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்து, இருக்கையையும், மேசையையும் அழுந்த துடைத்தான். எல்லா உபகரணங்களையும் எடுத்து வெளியே வைத்தான். பொடி வெட்டியை எடுத்துக் கொண்டு, காஷியரைப் பார்த்தான். அவர் இவனை நிமிர்ந்து பார்த்து, என்ன ஓய்! என்று சிரித்தார். பதிலுக்கு சிரித்து வைத்தான். வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தார்கள்.

ஒரு நடுத்தர வயதுடைய ஆள், முன்னால் இருந்த செக்யூரிட்டி கைகாட்ட இவனை நோக்கி வந்தார் கவுண்டருக்கு. கையில் ஒரு துணிப்பை வைத்திருந்தார், நகைக்கடனுக்குத் தான் வந்திருக்க வேண்டும். எங்கேயோ பார்த்த ஞாபகம், எங்கே என்று தெரியவில்லை. நெற்றியில் ஒற்றை நாமம் போட்டிருந்தார், வெள்ளை கதர் சட்டை, ஒரு கருப்பு பேண்ட். நல்ல நிறம், ஒற்றை நாடி ஆள். இவனைப்பார்த்து சிரித்தார்.

“எப்படி இருக்கீங்க தம்பி! ஞாபகமிருக்கா, ராமதீர்த்தம்! பலசரக்குக் கடை நைனாவோட பையன், உங்கப்பாவும், எங்கப்பாவும் ரொம்ப தோஸ்து” என்றார்.

‘ஓ! அப்படீங்களா! எனக்கு ஒங்க நைனாவையும், வெங்கடசாமி அண்ணனையுந்தான் தெரியும்! ஒங்களை பார்த்த ஞாபகம் இல்லையே! என்றான்
“நான் கடைக்கு வாரதில்லைங்க, மதுரையில வேலை பாக்குறேன்! ஒரு எடம் ஒண்ணு வாங்குறேன் நம்மூர்ல! மடவார்வளாகம் பக்கத்துல, சல்லிசா சொல்றாங்க வெலை, எட்டு ஏக்கர் கிட்ட! வாங்கிப் போடலாம்னு இருக்கேன், என்னதான் மதுரையில வீடுவாசல் இருந்தாலும், சொந்த ஊர்ல கொஞ்சம் மண்ணு இருந்தா, நல்லாயிருக்கும்ல! என்ன தம்பி சொல்றீங்க? என்று அவனை கேள்வியாய் கேட்டார்.

‘வாஸ்தவந்தான் அண்ணே! வாங்கிப் போட்டா அது பாட்டுக்கு கெடக்கு!’ என்றவன் அவர் கையில் ஒரு பார்மை கொடுத்து பூர்த்தி செய்யக் கொடுத்தான். பூர்த்தி செய்து, அதனுடன் இணைக்க வேண்டிய ரேசன் கார்டு நகல், போட்டோ எல்லாம் தயாராய் வைத்திருந்தார். ஏற்கனவே நகைக்கடன் வாங்கியிருப்பார் போல என்று நினைத்துக் கொண்டான்.

பாரம் பூர்த்தி செய்து கொடுத்ததும், அதை மேலாளர் இல்லாததால், ஹெட்கிளார்க் மேடம் சரிபார்த்து அனுமதிக்கவும் அவர் கையில் வைத்திருந்த நகையைக் கொடுத்தார். அதனுடன் மத்தியஸ்த எடை பார்த்த சீட்டையும் கொடுத்தார், நானூத்தி ஆறு கிராமும் அறுநூறு மில்லியும் இருப்பதாக எழுதியிருந்தது. ஆளு உஷாராய் இருப்பார் போல என்று நினைத்துக் கொண்டான்.

அவன் அதை வாங்கி, ஒவ்வொரு நகையாக உரைகல்லில் உரசிப் பார்த்துக் கொண்டே இருந்தான். அதில் இரண்டு வங்கியையும், எட்டு வளையல்களையும் தனியாக எடுத்து வைத்தான். அந்த நகைகள் ஏதோ சந்தேகத்துக்குரியதாய் இருப்பது போலப்பட்டது. அதன் எடை மட்டும், நூற்றி அம்பது கிராம் வரை இருந்தது. நகைகளாய் இருப்பதால், அதை வெட்டி ஆராய முடியாது, உரைகல்லில் உரசிய இடத்தில் ஆசிட் விட்ட போதும், அது தங்கம் என்றே காட்டியது. ஆனால் ஒரு வளையலும் வங்கியும் இருக்கும் திக்னெஸ்ஸுக்கு ஏற்றவாறு அதன் எடை இல்லை. இதே நகைகள், முழுக்க முழுக்க தங்கமாய் இருக்கிற பட்சத்தில் குறைந்தது இருநூற்றியைம்பது கிராமாவது இருக்கும், தங்கத்தின் அடர்த்தி அதிகம் என்பதால். கவுண்டரில் இருந்து அவரை நிமிர்ந்து பார்த்தான். அவர் அவனைப் பார்த்தார், சிரித்தார்.

‘அண்ணே, இந்த நகைகள் கொஞ்சம் சந்தேகமா இருக்கு! வெட்டிப் பார்க்கலாமா ஒரு வளையல் மட்டும், எடை குறையாம பாத்துக்குறேன்’ என்றான்.

“அய்யய்யோ வெட்டிடாதீங்க, என் வீட்டம்மா நகைங்க இல்லை, அவசரத்துக்காக எங்கக்கா வீட்டு நகைகளை வாங்கிட்டு வந்திருக்கேன், நீங்க மத்தத வெட்டினாலும் பரவால்லை அத வெட்டாதீங்க! வேற ஏதாவது வழி இருக்கா” என்று சேதுராமனை பார்த்து கலங்கியபடியே கேட்டார். இது ஒரு பெரிய குற்றம் என்பது தெரியும் சேதுராமனுக்கு, இதை காஷியருக்கோ அல்லது ஹெட் கிளார்க்கிடம் சொன்னால், நாமக்காரர் ஜெயிலுக்குப் போவது உறுதி. மேலும் உறுதி செய்ய, தன்னிடமிருக்கும் காந்தத்தை எடுத்து நகைகளின் பக்கம் வைக்க, நகைகள் நகர்ந்தன. நிறைய இரும்பு அல்லது நிக்கல் கலந்து இருக்க வேண்டும். வளையலை லேசாய் டேபிள் முனையில் தட்ட வித்யாசமான சத்தம் வந்தது.

சத்தம் எழுப்பியதும் மற்றவர்கள் கவனிக்கிறார்களா என்று சேதுராமன் நிமிர்ந்து பார்த்த போது, வாடிக்கையாளர்கள் வந்து போய்க் கொண்டிருக்க எல்லோரும் தத்தமது வேலைகளில் மும்முரமாய் ஈடுபட்டிருப்பது போலத் தெரிந்தது.

‘இதுல தங்கம், மேல ஒரு தகடு மாதிரி இருக்கு, உள்ள இரும்பு அல்லது நிக்கல் வளையம் இருக்குண்ணு நினைக்கிறேன்!’ என்று மெதுவாய் அவருக்கு மட்டும் கேட்குமாறு கீழ்க் குரலில் சொன்னவன் நகைகளை மீண்டும் ஒன்றாக சேர்க்க ஆரம்பித்தான். அவர் அவனை ஒருமாதிரி கெஞ்சலாய் பார்ப்பது போலப்பட்டது.

தனது டேபிளில் குனிந்து சிட்டை எழுத ஆரம்பித்தான். 406 கிராம் என்று எழுதி, அருகிலேயே 85 டச் என்று வட்டமிட்டான். 85 டச்சிற்கு உண்டான விலையை சிபாரிசு செய்து, காஷியருக்கு அனுப்பினான்.

நின்று கொண்டிருந்தவரிடம் வீடு எங்கே இருக்கு என்று விசாரிக்க ஆரம்பித்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *