துரோகமான நட்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 3,202 
 

மழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது, ஆனால் குளிர் மட்டும் குறையாமல் இருந்தது.

சென்னை மாநகரத்தை விட்டு ஐந்தாறு கிலோ மீட்டர் தள்ளியிருந்த அந்த நகரம் இந்த இரவு பதினோரு மணி அளவிலும், வாகனங்கள் குறையாமல் சென்று கொண்டிருந்தன. சென்னைக்கும், உள் தமிழ் நாட்டுக்கும் அது முக்கியமான பாதை ஆதலால் இரவு முழுக்க கூட வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கும்.

வாகனங்கள் சென்ற அளவுக்கு எதிர் வினையாக ஆட்கள் நடமாட்டம் சுத்தமாக குறைந்து ஒரு வித தூக்கத்தில் இருந்தது அந்த பாதை.

இந்த சுற்றுப்புற அமைதியை பற்றியோ, தேங்கியிருந்த மழை தண்ணீரை வாரி வீசி சென்ற வாகனங்களை பற்றியோ எந்த சட்டை செய்யாமல் மனித உருவம் ஒன்று நடந்து வந்து கொண்டிருந்தது. அது அணிந்திருந்த மழை கோட்டும், தலையில் சாய்மானமாக வைத்திருந்த தொப்பியும், ஏதோ நோக்கத்திற்காக அந்த உருவம் சென்று கொண்டிருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு கட்டத்தில் அந்த உருவம் சட்டென நின்று திரும்பி பார்த்தது. எந்த மனித நடமாட்டமும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னால் இடது புற பாதையில் வேகமாக நடக்க ஆரம்பித்தது.

நடக்க நடக்க இரு புறமும் வானுயர்ந்த கட்டிடங்கள், வீடுகள் கொண்ட பிளாட்டுகளாக, தனித்தனியாக பனை மரமாக நின்று கொண்டிருந்தது. அதனை சுற்றி காம்பவுண்டுகள் அமைக்கப்பட்டு, முன் புறம் செக்யூரிட்டிகளின் நடமாட்டங்களும் தெரிந்தன.

அந்த உருவம் நடையை சற்று வேகமாக்கியது. சரியாக வலது புற பிளாட்டுகளில் நான்காவது பிளாட்டுக்கு எதிர் புறம் நின்று நோட்டமிட்டது. இரு செக்யூரிட்டுகள் பேசிக்கொள்வது கேட்டது.

மெல்ல சிறிது தூரம் சென்ற உருவம் தனது செல் போனை எடுத்து எண்களை அழுத்திவிட்டு காத்திருந்தது. அந்த செல்போனில் வெளி வந்த வெளிச்சம் அந்த முகத்தை கொஞ்சம் பயமுறுத்தியே காட்டின. எதிரில் போன் எடுக்கும் சத்தம்.

காதில் வைத்து ஏதோ சொன்னது.

செக்யூரிட்டி ஆபிசில் இருந்து ஒரு உருவம் வெளியே வந்து முருகேசா பின்னாடி எதோ சத்தம் கேட்குதாம், என்னன்னு நான் போய் பார்த்துட்டு வாறேன், உள் புறமாய் அமைந்திருந்த குடியிருப்பை நோக்கி ஒடியது.

உள்ளிருந்து வெளி வந்த மற்றொரு உருவம், மாரியப்பா, டார்ச் லைட்ட எடுத்துட்டு போ, அட சொல்ல கேட்காம போறான், டார்ச்ச கொடுத்துட்டு வந்துடலாம், மாரியப்பனின் பின்னால் வேகமாக இந்த உருவமும் ஓடியது.

இந்த இடைப்பட்ட காலம் அந்த உருவத்துக்கு உள்ளே வருவதற்கு போதுமானதாக இருந்தது.

லிப்ட் மெல்ல மெல்ல உயர ஐந்தாவது மாடியில் நின்றது. வெளியில் வந்த உருவம் வரிசையாய் இருந்த வீடுகளில் ஆறாவதை நோக்கி நடந்தது. கதவுக்கருகில் நின்ற உருவம் தன் காற்சட்டையில் இருந்து எடுத்த சாவியை நுழைத்து சடக்கென திறந்து உள்ளே நுழைந்து கதவை சாத்திக் கொண்டது.

விறு விறுவென குளியலறைக்குள் சென்ற உருவம் தன்னுடைய உடைகளை மள மளவென கழட்டி அங்கேயே போட்டு விட்டு நிதானமாய் ஷவரை திறந்து குளிக்க ஆரம்பித்தது.

தலையை துவட்டி கொண்டிருந்த போது செல் போன் அழைத்தது. எடுத்து ஹலோ சொன்னவுடன் சார்..இங்க யாரையும் காணொமே சார், நாங்க இரண்டு பேருமே நல்லா சுத்தி பார்த்துட்டோம்.

ஐயோ, அயாம் சாரி ஒரு வேளை இந்த மழையினால ஏதோ சத்தம் கேட்டுச்சோ என்னவோ, நான் பாத்ரூமுக்குள்ள இருக்கும்போது அந்த சத்தம் கேட்டுச்சு, சாரி..சாரி..உங்களை இந்த மழையில கஷ்டப்படுத்திட்டேனே, ம்..நான் இப்ப உங்களுக்கு ஒரு கிப்ட் கொடுக்கறேன், ஆனா அதை உடனே சாப்பிடக்கூடாது, உங்க டியூட்டி முடிஞ்சு பின்னாடிதான் சாப்பிடணும் சரியா ! என் பிளாட் தெரியுமில்லை.

என்ன சார் இப்படி கேட்கறீங்க, மாரியப்பனை அனுப்பறேன் சார்..இளிப்பு சத்தம்.

ஒரு ஸ்காட்ச் பாட்டிலும், உண்பதற்கு ஒரு சில பாக்கெட்டுகளையும் எடுத்து மாரியப்பனுக்காக காத்திருந்தது அந்த உருவம் ரொம்ப நன்றி சார், ஒரு வித சிரிப்புடன் அவரிடமிருந்த பொருட்களை வாங்கி சென்றான் மாரியப்பன்.

காலை பத்து மணி இருக்கலாம், அந்த அலுவலகம் மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. எம்.டியின் அறைக்குள் உட்கார்ந்திருந்த பரந்தாமனுக்கு போன் கால் ஒன்று வந்தது, நண்பன் வாசுதேவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கான்.

இவருக்கு இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது, செகரட்ரியிடம் சொல்லி விட்டு மருத்துவமனைக்கு விரைந்தார். இண்டன்சிவ் கேர் யூனிட்டை வந்தடைந்தவர், அங்கு கண்ணீருடன் நின்று கொண்டிருந்த வாசுதேவனின் மனைவி, மகளை பார்த்து அவர்கள் அருகே விரைந்தார்.

என்ன ஆச்சு? படபடப்புடன் கேட்டார். நாங்க இரண்டு பேரும் ஊர்ல கோயில் விசேசத்துக்கு போயிருந்தோம், நேத்து காலையிலதான் கிளம்பி போனோம். இவரையும் கூப்பிட்டேன், நான் வரலை அப்படீன்னுட்டார். சரி ஒரு நாள்தானே, இன்னைக்கு வந்துடாலாமுன்னுதான் இருந்தோம். காலையில அஞ்சு மணி இருக்கும், கார் டிரைவர் போன் பண்ணினாரு, ஐயா வீட்டுக்குள்ள விழுந்து கிடக்கறாரு. உடனே ஹாஸ்பிடல்ல கொண்டு போய் சேர்க்க சொல்லிட்டு வந்து சேர்ந்தோம்.

டிரைவர் எங்கே? சற்று தள்ளி நின்ற டிரைவரிடம் என்ன ஆச்சு? விவரமா சொல் ஐயா, என்னைய காலையில நேரத்துல வெளியில போகணும், அஞ்சு மணிக் கெல்லாம் வீட்டுக்கு வந்துடுன்னு சொன்னாரு, அது மாதிரி நானும் அஞ்சு மணிக்கு வந்துட்டேன். வந்து உள்ளே பார்த்தா நடு ஹால்ல விழுந்து கிடக்கறாரு, குடிச்சுட்டுத்தான் அப்படி கிடக்கறாருன்னு அவரை எழுப்பினேன், ஆனா எந்திரிக்கவேயில்லை, அப்புறம்தான் அம்மாவுக்கு போன் போட்டு சொன்னேன், அவங்க ஹாஸ்பிடலுக்கு போன் போட்டு அவரை கூட்டிகிட்டு வந்து அட்மிட் பண்ணிட்டாங்க.

வாசுதேவன் மனைவியிடம் சென்றவர், எனக்கு உடனே போன் போட்டு சொல்லியிருக்கலாமில்லை, கோபித்து கொண்டார். உங்களுக்கு போன் பண்ணி சொல்லலாமுன்னுதான் முதல்ல நினைச்சேன், அப்புறம் அதுக்கு முன்னாடி அவரை ஹாஸ்பிடல்ல சேர்க்கறது முக்கியமுன்னு நினச்சு அவரை சேர்த்திட்டு போன் பண்ணுனேன்.

இருங்க, எங்க இரண்டு பேரோட பிரண்டுதான் இந்த ஹாஸ்பிடல்ல டைரக்டரா இருக்கறாரு. போய் விசாரிக்கறேன். அவரை சந்திக்க விரைந்தார்.

சாரி..பரந்தாமன், ரொம்ப கிரிட்டிக்கலா இருக்கறாரு வாசுதேவன், டிரிங்க்ஸ்ல பாயிசன் கலந்திருக்கு, இது போலீஸ் கேஸ் வேற, அவன் எனக்கு பிரண்டுங்கறதால நானே ரிஸ்க் எடுத்து சேர்த்துக்கிட்டேன். இப்ப ஒண்ணும் சொல்ல முடியாது, இன்னும் இருபத்தி நாலு மணி நேரம் போகணும், பாக்கலாம். ஆமா அவனுக்கு என்ன பிரச்சினை? ஆல்கஹால்ல பாயிசன் கலந்து குடிக்கறதுக்கு?

அதுதான் எனக்கு தெரியலை, இதை அவங்க மிஸஸ் கிட்டே சொல்லிட்டீங்களா? இல்லே இன்னும் சொல்லலை. வீணா கலவரமாயிடுவாங்க, அதுக்கப்புறம் போலீசுக்கு போயிட்டா பிரச்சினை இன்னும் பெரிசாயிடும்.

கண்டிப்பா, நான் நினைக்கறதும் அதுதான், நீங்க போலீசுக்கு ஒண்ணும் சொல்ல வேண்டாம். மேற்கொண்டு இந்த பிரச்சினைய நான் பார்த்துக்கறேன்.

அவங்க உயிருக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா? நாந்தான் பதில் சொல்லணும் போலீசுகிட்டே,

புரியுது, வேண்டாம், போலீசுக்கு போக வேண்டாம். எதுவானாலும் நான் பொறுப்பெடுத்துக்கறேன். உறுதி சொல்லி விட்டு ஐ.சி.யூவிற்கு வந்தவர், எல்லாம் சரியாயிடும், கவலைப்படாதீங்க, நான் எங்க கம்பெனி ஆளு ஒருத்தரை இங்க இருக்க சொல்றேன். ஆறுதல் சொன்னார்.

வேண்டாங்க, அவரோட கம்பெனி மேனேஜர் வந்துட்டாரு, அவங்க கூட இருக்கறாங்க.

பரந்தாமனுக்கு முகம் களையிழந்தது, இருந்தாலும் சமாளித்து, அப்ப சரி, எதுன்னாலும் டாக்டர் கிட்டே நான் பேசிக்கறேன், நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க, எல்லாம் நல்லபடியாயிடும் சொல்லி விட்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார்.

அலுவலகத்திற்கு வந்தாலும் நண்பனின் நிலை அவருக்கு ஒருவித படபடப்பை கொடுத்து கொண்டுதான் இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை டாக்டருக்கு அவருடைய தனிப்பட்ட போனில் விசாரித்து கொண்டே இருந்தார். பெரிய முன்னேற்றமில்லை, இந்த செய்தியே அவருக்கு வந்தது.

இரண்டு நாட்கள் ஓடியிருந்தது. வாசுதேவனின் நிலைமையில் எந்த முன்னேற்றமுமில்லாமல்தான் இருந்தது. பரந்தாமன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மருத்துவமனைக்கு சென்று வாசுதேவனின் மனைவிக்கும், மகளுக்கும் ஆறுதல் சொல்லி விட்டு வருவார்.

காலிங் பெல் ஒலிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்த பரந்தாமன் வெளியில் அறிமுகமில்லாத இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் புருவத்தை சுருக்கினார்.

ஐ.ஆம் ராஜசேகர், இன்ஸ்பெக்டர். ப்ரம் டிபார்ட்மெண்ட் ஆப் போலீஸ், உங்க கிட்டே கொஞ்சம் பேசணும், பரந்தாமன் ஆச்சர்யத்துடன் வாங்க, வெல்கம், போலீஸ் என் வீட்டுக்கு வந்திருக்கீங்க. உட்காருங்க, சோபாவை காட்டினார்.

தாங்க்ஸ், உட்கார்ந்தவர், வீட்டுல உங்க குடும்பம்,

பையன் டெல்லியில பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிக்கிறான், அவனுக்கு உதவியா என் மனைவி டெல்லி போயிருக்கா. இன்னும் இரண்டு மாசத்துல பையனுக்கு படிப்பு முடிஞ்சு வந்திடுவாங்க, எதுக்கு கேட்கறீங்க..

சாரி இதை சொல்றதுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு, உங்க பையன் இப்ப ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருக்கறதா எங்களுக்கு தகவல் வந்திருக்கு, உங்களுக்கு தகவல் தர முயற்சி பண்ணுனாங்களாம், கிடைக்கவேயில்லை, அதனால எங்க டிபார்ட்மெண்ட்டுக்கு போன் செஞ்சு உங்களுக்கு மெசேஞ் பாஸ் பண்ண சொன்னாங்க.

இந்த செய்தி பரந்தாமனை அப்படியே நிலை குலைய வைத்தது. என்ன என்னாச்சு, என் பையனுக்கு, அவங்கம்மா கூட இல்லையா ? மனைவியின் போனுக்கு முயற்சி செய்ய ஆரம்பித்தார்.

வேண்டாம், உங்க மனைவிக்கு போன் பண்ணாதீங்க, அவங்களுக்கு இந்த செய்தி தெரியாது, முதல்ல உங்களுக்கு சொன்ன பின்னாடி மேற்கொண்டு செய்யலாமுன்னு முடிவு பண்ணிக்கலாம்.

என்ன பிராப்ளம், எதுக்காக அட்மிட் பண்ணியிருக்காங்க?

உங்க பையன் எங்கேயோ பார்ட்டியில கலந்திருக்காரு, அங்க ட்ரிங்க்ஸ்ல யாரோ விஷம் வச்சு கொடுத்துட்டாங்க.

ட்ரிங்ஸ் விஷம் வச்சு கொடுக்கற அளவுக்கு அங்க அவனுக்கு விரோதிங்க யாருமில்லையே.

அப்ப இங்க இருக்கலாமின்னு சொல்றீங்களா?

ஐயோ இன்ஸ்பெக்டர், நான் அதை சொல்ல வரலை, விஷம் வச்சு கொல்ற அளவுக்கு அவன் என்ன பாவம் பண்ணினான் மத்தவங்களுக்கு ?

அதுதானே, இன்னொன்னு தெரியுமா? உங்க பையனுக்குத்தான் தன்னோட பொண்ணை கொடுத்து எல்லா பிசினசையும் பார்க்க சொல்லணும்னு வாசுதேவன் சொல்லிகிட்டிருந்தாரு.

தேவையில்லாமல் வாசுதேவன் பெயர் வரவும் கொஞ்சம் அதிர்ந்த பரந்தாமன் இன்ஸ்பெக்டர் அவரை உங்களுக்கு தெரியுமா?

ஓரளவுக்கு தெரியும். அவரோட நண்பரான டாக்டர் எனக்கு ரொம்ப உறவினர்.

டாக்டரா?

ஆமா வாசுதேவன் அட்மிட் ஆகியிருக்கற ஹாஸ்பிடல் டைரக்டர் தான்.அவரும் டாக்டர்தான்

பேச்சு, எங்கெங்கோ செல்வதை பார்த்த பரந்தாமன் சார் இப்ப என் பையன் எப்படி இருக்கான், நான் இப்ப டெல்லிக்கு கிளம்பறேன்.

இன்னொரு வருத்தமான செய்தியும் உங்களுக்கு சொல்ல வேண்டியிருக்கு, வாசுதேவன் இறந்துட்டாரு.

அதிர்ச்சியாகி எழுந்து நின்றார். இன்ஸ்பெக்டர் என்ன சொல்றீங்க? வாசுதேவன் இறந்துட்டாரா?

ஏன் அதிர்ச்சியாயிட்டீங்க பரந்தாமன், நீங்க அதைத்தான எதிர் பார்த்தீங்க, நீங்க இங்க செஞ்சதை அங்க உங்க பையனுக்கு வேற யாரோ செஞ்சிருக்காங்க.

எழுந்து நின்ற பரந்தாமன் அப்படியே பொத் என்று சோபாவிலேயே உட்கார்ந்தார். ப்ளீஸ் இன்ஸ்பெகடர் என்னன்னமோ சொல்றீங்க, இங்க வாசுதேவனுக்கு விஷம் வச்சது நான் தான்னு சொல்றீங்க, அதுக்கும் என் பையனையும் இழுத்து வச்சு பேசறீங்க.

உங்க பையனை காப்பாத்திடலாமுன்னு ஏற்கனவே டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க, ஆனா வாசுதேவன் இறந்துட்டாரே,

சொல்லுங்க, எதுக்காக அவருக்கு விஷம் வச்சீங்க? இல்லையின்னு சொல்லாதீங்க? வாசுதேவன் வீட்டுக்கு அன்னைக்கு இராத்திரி நீங்க போயிருக்கீங்க, போகும்போதே இரண்டு ஸ்காட்ச் பாட்டிலு வாங்கிட்டு போயிருக்கீங்க, நீங்க பண்ணுன தப்பு, எப்பவும் உங்களுக்கு சப்ளை பண்ணுன கடையில வாங்கியிருக்கீங்க. அங்க நல்லா விசாரிச்சிட்டோம். இப்ப உண்மைய சொல்லிடுங்க. சாய்ந்து உட்கார்ந்தார் இன்ஸ்பெக்டர்.

பரந்தாமன் இறுதலை கொள்ளி எறும்பானார், அங்கே தன் மகனை பார்க்க போக வேண்டும். இங்கே உண்மையும் சொல்ல வேண்டும்.

திணறியவாறு அவன் வீட்டுக்கு இரண்டு பாட்டிலை வாங்கிட்டு போனது உண்மைதான். முன்னெச்சரிக்கையா எங்க அபார்ட்மெண்ட் செக்யூரிட்டிகளுக்கு தெரியாம போகணும்னு முடிவு பண்ணினேன். வாசுதேவன் வீட்டுல யாரும் இல்லையின்னு தெரிஞ்சவுடனே இராத்திரி எட்டு மணிக்கு மேல வெளியே போனேன். காரணம் என் கார்ல போனா எண்ட்ரி போட்டு என்னை காட்டி கொடுத்துடும்னு வெளியே போய் ஒரு ஆட்டோ பிடிச்சு அவன் வீட்டு பக்கத்துல இறங்கி நடந்தே போனேன். அப்பத்தான் ஆட்டோகாரனுக்கும் நான் இறங்கி எந்த வீட்டுக்கு போனேன்னு தெரியாது.

வாசுதேவன் ஹால்ல உட்கார்ந்திருந்தான். வேணும்னே அவனுக்கு தெரியற மாதிரி இரண்டு பாட்டிலையும் அவன் முன்னால வச்சுட்டு பேசிகிட்டே இருந்தேன். வீட்டுலதான் யாருமில்லையே ஒரு பாட்டிலை உடைக்கலாமான்னு நான் கேட்ட உடனே சரின்னுட்டு இரண்டு டம்ளரை எடுத்துட்டு வந்தான். ஒரு பாட்டிலை உடைச்சு டம்ளர்ல ஊத்துனேன். கொஞ்சம் ஊறுகாய் கிடைக்குமான்னு அவனை சமையலறை பக்கம் அனுப்பிச்சிட்டு நான் கையோட கொண்டு போன மருந்தை அவன் டம்ளர்ல கலக்கிட்டேன்.

அவன் குடிச்சு மயங்கி கீழே விழும்போது நான் சத்தமில்லாம நான் குடிச்ச டம்ளரையும், மிச்சமிருந்த முழு பாட்டில், ஸ்னேக்ஸ் எல்லாத்தையும் எடுத்து வச்சுகிட்டு, என் கை பட்ட இடத்தை எல்லாம் துடைச்சிட்டு சத்தம் காட்டாம அவன் வீட்டை விட்டு ரொம்ப தூரம் நடந்து வந்து ஒரு டாக்சியை பிடிச்சு என் அபார்ட்மெண்ட்டுக்கு அரை பர்லாங்க முன்னால இறங்கி நடந்தே வந்தேன். கேட்டுல இருந்த வாட்ச்மேன் கிட்டே பின்னாடி ஏதோ சத்தம்கேட்டதாவும் வந்து பாக்க சொல்லி போன் பண்ணுனேன். அவங்களும் பின்னாடி போக நான் என் பிளாட்டுக்கு வந்து ஒண்ணுமே தெரியாதமாதிரி அவங்களை கூப்பிட்டு மிச்சமான அந்த ஸ்காட்ச் பாட்டிலையும், ஸ்நேக்சையும் கொடுத்துட்டேன்.

இப்ப நான் என் வீட்டை விட்டு எங்கேயும் போல அப்படீங்கற மாதிரி ஒரு சாட்சியும் உருவாக்கிட்டேன்.

எல்லாம் பிளான் பண்ணித்தான் செஞ்சிருக்கீங்க, ஆனா அந்த பாட்டிலை வாங்கும் போது பில் போட்டு வாங்கினது தப்பா போச்சு. அந்த பில் வாசுதேவன் வீட்டுல கிடைச்ச பின்னாடிதான் அதைய வச்சி விசாரிச்சு வர முடிஞ்சுது. சரி அவரை என் கொல்லணும்னு நினைச்சீங்க.

இரண்டு பேரும் சின்ன வயசுல இருந்து நண்பர்கள்தான். நாங்க இரண்டு பேரும் ஒண்ணாத்தான் தொழில் கத்துகிட்டோம். சொந்தமா தொழிலை ஆரம்பிச்சோம். இரண்டு பேருக்கும் நல்ல வளர்ச்சிதான், ஆனா அவனுக்கு போன மாசம் கோடிக்கணக்குல வருமானம் வர்ற மாதிரி ஆர்டர் ஒண்ணு கிடைச்சிடுச்சு, என்னையும் சேர்த்துக்கோ அப்படீன்னு கேட்டேன். மறுத்துட்டான். அவனவன் திறமை, அப்படீன்னு சொன்னான். ஆனா சத்தியமா தெரியாது அவன் என் பையனுக்குத்தான் அவன் பொண்ணை கொடுக்கணும்னு நினைச்சிருக்கான்னு, அது தெரியாம வீணா பொறாமையால இந்த காரியம் பண்ணிட்டேன்.

ம்..இப்ப வருத்தப்பட்டு என்ன பண்ன முடியும்? நான் தப்பை ஒத்து கிட்டு சரண்டர் ஆயிடறேன். அதுக்கு முன்னாடி என் பையனை பாக்கறதுக்கு டெல்லி போக மட்டும் அனுமதி கொடுங்க

ஐ.ஆம்.சாரி அதுக்கு வாய்ப்பு இல்லை, அவனுக்கு நான் சொன்ன எந்த பிரச்சினையும் நடக்கலை. இப்ப உங்க பையன் வாசுதேவன் பக்கத்துல இருக்கான். அவரும் பிழைச்சுகிட்டாரு. இப்ப வார்டுக்கு மாத்திட்டாங்க. அவருக்கு இந்த மாதிரின்னு கேள்விப்பட்டு அவங்க கூட இரண்டு நாளா இருக்கான்.

அப்ப ஏன் வீட்டுக்கு வரலை? என் கூட பேச கூட இல்லை.

வாசுதேவன் அவன் கிட்டே நிறைய மனம் விட்டு பேசுவாரு. அப்ப அவருக்கு எப்பவுமே ஆல்கஹால் ஒத்துக்காது அப்படீன்னு ஏற்கனவே இவன் கிட்டே சொல்லியிருக்காரு. அவன் இப்படி ஆயிடுச்சுன்னு தெரிஞ்ச உடனே டாக்டர்கிட்டே பேசியிருக்கான். பாயிசன் விஷயத்தை சொல்லியிருக்காரு. நானும் அவனும் காலேஜ் மேட்ஸ், என் கிட்டே இந்த விஷயத்தை சொல்லி கண்டுபிடிச்சு தர சொன்னான்.

சாரி அவனுக்கு அவங்கப்பாவேதான் குற்றவாளி அப்படீங்கறது ஜீரணிக்க முடியாமத்தான் இருக்கும்.

அத்தனையும் அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த பரந்தாமன் குற்ற உணர்ச்சியால் என்ன செய்வது என்று உட்கார்ந்திருந்தார்.

அடுத்து என்ன நடக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். நாம் கதையை முடித்து கொள்ளுவோம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *