கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 7,542 
 
 

மிழ்நாடு கமர்சியல் பேங்க் கிளை, சென்னைக்கு பக்கத்தில் உள்ள திருவாலங்காடு.

“கிரி, யாருப்பா அது? நானும் நாலு நாளா பாத்துக்கிட்டேயிருக்கேன். பாங்குக்கு வரான், போறான். என்ன பண்றான்? ”, வங்கி கிளையின் மேனேஜர் ரங்கமணி தனது அக்கௌண்டன்டை வினவினார்.

“யார்ன்னு தெரியலே சார், நான் இப்போதான் பார்க்கிறேன், எதாவது கஸ்டமரா இருக்கும். அக்கௌன்ட் ஓபன் பண்ண வந்திருப்பான்”, அசிரத்தையாக நழுவினார் அக்கௌண்டன்ட். இந்த மேனேஜருக்கு வேறே வேலையே இல்லை. எல்லாத்துக்கும் சந்தேகப் பட்டுக்கிட்டு.

அடுத்த நாளும், அதே சந்தேகத்துக்குரிய ஆசாமி, வங்கி வாசலுக்கு எதிரே நின்று கொண்டிருந்தான். கொஞ்சம் கசங்கிய சட்டை, ஐந்து நாள் தாடி, கண்ணில் தூங்காத அசதி.

‘ஏன் இங்கேயே பார்த்து கொண்டிருக்கிறான்?பேங்க்லே கொள்ளை கிள்ளை அடிக்க பிளான் பன்றானோ?’

ரங்கமனிக்கு நிலை கொள்ளவில்லை. உடனே போலீசுக்கு போன் பண்ணின்னர்.

“ஹலோ ! திருவாலங்காடு போலீஸ் ஸ்டேஷன்? இன்ஸ்பெக்டரா?”

“ஆமா! நான் இன்ஸ்பெக்டர் அமலன் பேசறேன். நீங்க யாரு பேசறது?”

“சார், நான் ரங்கமணி, ‘தமிழ்நாடு கமர்சியல் பேங்க்” திருவாலங்காடு கிளை , மெயின் ரோட்லே இருக்கே, அதன் மேனேஜர் பேசறேன்”

“சொல்லுங்க சார், என்ன விஷயம்?”

“இங்கே, சந்தேகப் படறா மாதிரி, ஒரு ஆள், பேங்க் வாசல்லே நிக்கறான். நாலு நாளா பாக்கறேன். கொஞ்சம் என்னன்னு பாக்க முடியுமா?”

“இதோ உடனே வந்து பார்க்கிறோம்”

***

டுத்த நாள். இன்ஸ்பெக்டர் அமலன் கிட்டேயிருந்து போன்.

“தேங்க்ஸ் மேனேஜர் சார், உங்க உதவிக்கு. நாங்க சந்தேகப்பட்டது சரியாக போச்சு. உங்க பேங்க் பக்கத்திலே நடமாடிக் கிட்டிருந்தவன், சாதாரண ஆளில்லை. பெரிய தீவிரவாதி. பேரு வெடிகுண்டு வேலன். உங்க பக்கத்திலே இருக்கிற ஆஸ்பத்திரி திறப்பு விழாவிற்கு கவர்னர் வரும்போது, குண்டு வைக்க பிளான் பண்ணி கிட்டிருந்தான். சரியான நேரத்திலே துப்பு கொடுத்தீங்க. அவனை வளைச்சி பிடிச்சிட்டோம். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்”

“பரவாயில்லே சார், என் கடமையை தானே செய்தேன்”

“இப்படி எல்லாரும் அலெர்ட் ஆக இருந்தா, எங்களுக்கு வேலை ஈசி ஆச்சே சார். எப்போவாவது இந்த பக்கம் வந்தா, ஸ்டேஷன்க்கு வாங்க சார்”

“அதுக்கென்ன, நேரம் கிடைக்கச்சே கட்டாயம் வரேன். உங்களுக்கு எந்த பேங்க்லே அக்கௌன்ட்?”

“ஸ்டேட் பேங்க். அக்கௌன்ட் எல்லாம் வேண்டாம் ! நீங்க சும்மா வாங்க சார்”

“சரி வரேன்”.

***

ரு இரண்டு வருஷம் கழித்து.

இப்போது ரங்கமணி கொஞ்சம் பெரிய அதிகாரி. அம்பா சமுத்ரம் வங்கி கிளையின் சீனியர் மேனேஜர்.

அன்று, கடன்காரர்களில் சிலரை பார்க்க, கடை வீதியில் அலைந்து கொண்டிருந்தார். சால்ஜாப்பு கேட்டு கேட்டு புளித்து விட்டது.

அப்போது, யதேச்சையாக திரும்பினார். கொஞ்சம் தூரத்தில், இரண்டு வருடம் முன்பு பார்த்த அதே தீவிரவாதி போல ஒருவன். ரங்கமணியை கைகாட்டி ஏதோ சைகை செய்து கொண்டிருந்தான். கூடவே இரண்டு மூன்று தடி ஆட்கள்.

அடே !வெடிகுண்டு வேலன்! ஜெயில்லேருந்து விடுதலை ஆயிட்டானா என்ன? இல்லே தப்ப்பிச்சு வந்துட்டானா? இங்கே என்ன பண்றான்? என்னை பார்த்து என்ன சொல்றான்?

ஒருவேளை நான் காமிச்சு கொடுத்தேன்னு, தேடி பிடிச்சு பழி வாங்க வந்துட்டானா?. குலை நடுங்கியது. ச்சே ! துப்பு கொடுத்தது தப்பா? ஐயையோ ! என்ன பண்ணுவேன்?

ரங்கமணி உடனே ஒரு வங்கி கடன்காரனின் கடைக்குள் நுழைந்து விட்டார். தப்பிச்சேண்டா சாமி.

தனது நண்பர், திருவாலங்காடு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு போன் பண்ணினார்.

“இன்ஸ்பெக்டர் சார், நாந்தான் ரங்கமணி பெசரேன். ஞாபகமிருக்கா? தமிழ்நாடு கமர்சியல் பேங்க்’ மேனேஜர்”.

“சார், சொல்லுங்க சார், எப்படி இருக்கீங்க! ட்ரான்ஸ்பர் ஆயிடுச்சாமே!”

“இப்போ அம்பாசமுத்ரத்திலே இருக்கேன். இங்கே, அந்த தீவிரவாதியை திரும்பவும் பார்த்தேன்”

“யாரு, திருவாலங்காடு ஆஸ்பத்திரிக்கு குண்டு வைக்க முயற்சி பண்ணினானே, வெடிகுண்டு வேலன் , அவனையா?”

“அவனையேதான்! இங்கே தான் அம்பா சமுத்திரத்திலே இருக்கான்”

“இருக்காதே ! அவன் புழலேறி ஜெயில்லே இருக்கானே! ஐந்து வருஷம் தண்டனை கொடுத்திருக்காங்களே. எதுக்கும், நான் விசாரிச்சுட்டு சொல்லவா?”

“சரி”

ஒரு பத்து நிமிடம் கழித்து:

“மேனேஜர் சார், நீங்க சொல்றது சரி, அவன் ஜெயில்லேருந்து தப்பிச்சிட்டானாம். திருநெல்வேலி பக்கம் தான் நடமாடிகிட்டு இருக்கிறதா தகவல். நான் உடனே இந்த நியூஸ் அம்பா சமுதிரத்திற்கு பாஸ் பண்ணிடறேன்.”

***

டுத்த நாள் காலை.

ஒரு பதினொரு மணி இருக்கும்

“சார், நான் அம்பா சமுத்ரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசறேன். ஆதி. நாங்க அந்த வெடிகுண்டு வேலனை பிடிச்சிட்டோம். இங்கேயும், மினிஸ்டர் வரப்ப, போட்டு தள்ள பிளான் பண்ணிட்டிருந்திருக்கான்.”

“ரொம்ப சந்தோஷம் இன்ஸ்பெக்டர் சார்”. அப்பாடா, இனிமே பயம் இல்லே.

“ரொம்ப தாங்க்ஸ் சார், முடிஞ்சா இன்னிக்கு சாயந்தரம் ஸ்டேஷன் பக்கம் வாங்களேன். நேரே பார்த்து பேசலாம். ட்ரீட் இருக்கு.”

“வரேனே”

***

ன்று மாலை – அம்பாசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷன்

ரங்கமணி உள்ளே போனபோது, இன்ஸ்பெக்டர் இல்லை. ஏட்டு மட்டும் தான் இருந்தார். “வாங்க சார், இன்ஸ்பெக்டர் ஐயா உள்ளே விசாரணை பண்ணிட்டு இருக்கார். இப்போ வந்துடுவார். நீங்க உக்காருங்க ”

“இருக்கட்டும்!”

“நீங்க கொடுத்த அலெர்ட்னாலே, டக்குன்னு அந்த தீவிர வாதியை பிடிச்சுட்டோம். ஐயாக்கு ரொம்ப சந்தோஷம். உங்களாலே, அவருக்கு ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு.”

“அப்படியா! ரொம்ப சந்தோஷம். வெடிகுண்டு வேலன் இன்னும் உங்க கஸ்டடியில் தான் இருக்கானா?”

“இங்கே தான் இருக்கான்!”

அப்போது, சிறை செல்லிலிருந்து வெளியே வந்தவனை பார்த்ததும் ரங்கமணிக்கு தூக்கி வாரிப் போட்டது. அவனேதான். வெடிகுண்டு வேலன். எப்படி வெளிலே வந்தான்? கையிலே விலங்கு இல்லையே?

வெளியே வந்தவன், நேராக ரங்கமணியை நோக்கி கை அசைத்த படியே வந்தான்.

“ஹலோ! ரங்கமணி சார் ! நான்தான் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஆதி! எப்படியிருக்கீங்க?”

“நீங்களா ? இன்ஸ்பெக்டரா ? என்னை தெரியுமா?”

“என்ன சார், இப்படி கேட்டுட்டீங்க? திருவாலங்காட்டிலே மப்டிலே ரோந்து பண்றப்போ, பேங்க்லே உங்களை பார்த்திருக்கேன். நான் அப்போ ஸி.ஐ.டி போலீஸ்லே சென்னையிலே இருந்தேன். எஸ். ஐ. யா இருந்தேன். தீவிரவாத ஒழிப்பு துறை.”

“இப்போ?”

“கிரைம் பிராஞ்ச். டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர். என்னடா போலீஸ் டிரஸ்லே இல்லையேன்னு தானே பாக்கறீங்க? எப்பவும் மப்டிலே தான் சுத்துவேன். நேத்தி கூட கடை தெருவிலே உங்களை பாத்தேன். ஆனால் சட்டுன்னு நினைவுக்கு வரல்லே.”

“சாரி, கவனிக்கலே. அப்போ வெடிகுண்டு வேலன் எங்கே?”

“என்ன சார், தெரியாத மாதிரி கேக்கறீங்க. இங்கே தான் கஸ்டடிலே, உள்ளே இருக்கான்! நேரே பாருங்க”

எதிர் செல்லில் இருந்த வெடிகுண்டு வேலனை, இதற்கு முன்னால் ரங்கமணி பார்த்ததே யில்லை. ஒரு படித்த நாகரிக யுவன். லெவிஸ் பான்ட் விலையுர்ந்த டீஷர்ட். மழித்த முகம். ரிம்லெஸ் கண்ணாடி. கண்ணை மூடி அமர்ந்திருந்தான். இவனா தீவிரவாதி?

“இவனா?” – ரங்கமணி

“என்ன சார், இவனான்னு கேக்கறீங்க?”

“இல்லே! சும்மா கேட்டேன்.’

இவனை நம்பி அசால்டா ஐம்பது லக்ஷம் கடன் கொடுக்கலாமே! இவனா தீவிரவாதி?

“டீ சாப்பிடுங்க சார்.” இன்ஸ்பெக்டர் ஆதி. “உங்களுக்கு எப்படி இவன்தான் டெர்ரரிஸ்ட்ன்னு சந்தேகம் வந்தது? நீங்க ப்ரில்லியன்ட் சார்.”

முகத்தில் வழிந்த அசட்டை துடைத்து கொண்டார் ரங்கமணி. வெளிலே சொன்னா வெக்கக்கேடு. இரண்டு தடவையும் தப்பான துப்பு கொடுத்திருக்கோம்.

ஆதியையே , மப்டிலே சுத்திக்கிட்டிருந்தப்போ, டெர்ரரிஸ்டுன்னு நினைச்சிருக்கிறோம். சொன்னா டின் கட்டிடுவாங்க. மானம் கப்பலேறி விடும்.

“அது என்னமோ, இவனை பார்த்ததும் தோணித்து. பேங்க்லே வேலை செய்யறோம். இந்த அளவு கூட மனுஷங்களை புரிஞ்சிக்கலன்னா எப்படி? “- சமாளித்தார்.

“ஆனாலும், அநியாயத்துக்கு அடக்கம் சார் உங்களுக்கு!” – புகழ்ந்தார் இன்ஸ்பெக்டர் ஆதி.

***

“Don’t judge a book by its cover –பழமொழி ”

திருக்குறள்:

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.

குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.

முரளிதரன் எனும் எனது இயற்பெயரில் நான் 2012 அக்டோபர் முதல் சிறுகதை எழுதி வருகிறேன். நான் அரசுடைமை வங்கியில், பணி புரிந்து விருப்ப ஒய்வு பெற்றவன். கோவன்சிஸ், மற்றும் வெளி நாட்டு வங்கிகளில், ரிஸ்க் ஹெட் மற்றும் ஆடிட்டராக பணி புரிந்த அனுபவம் உண்டு. மன வளம், கணிணி மற்றும் வணிக சம்பந்த கதை எழுத ஆவல். நல்ல கருத்து கூற விருப்பம். குங்குமம், குமுதம் போன்ற பத்திரிகைகளில் எனது…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *