கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 24, 2023
பார்வையிட்டோர்: 1,104 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அர்த்தசாமம் கடந்து விட்ட அகாலவேளை.

உலகில் ஒவ்வொரு அணுவையும் தனது கருங்கல் வண்ணக் கொடுங் கரங்களாற் பற்றி பிடித்துக் கொண்டிருக்கும் இருளை உதாசீனஞ் செய்து பயன் கருதாத கருமயோகி போல் ஓடிக் கொண்டிருக்கிறது புகை வண்டி.

இப்போது மதவாச்சியைத் தாண்டி வவுனியாவை நோக்கி நொடிக்கு நொடி முன்னேறுகிறது. அந்த வண்டியில், குருஷேத்திரப் போர்க்களத்தில் குற்றுயிரும் குறை உயிருமாக விழுந்து கிடந்த கௌரவ – பாண்டவ படையினர் போல் நித்திரையைத் தட்டிக் கழிக்கத் திராணியற்று வசதியாகக் குந்தியிருந்து கொண்டும் நடை பாதையில் கையிற் கொண்டுவந்த பத்திரிகைகளை விரித்துச் சரிந்தும் ஒழுங்கற்று உறங்குகிறார்கள் பலர். இருக்கை வசதி குறைந்துவிட்டாலும் – நித்திரையின் உபத்திரவத்தாற் செயலிழந்து கோழித்தூக்கம் தூங்குகிறார்கள் சிலர். பிரயாணம் செய்கின்றோமே என்ற சுரணையற்றுக் கிடக்கும் அந்தக் கூட்டத்திற்கு விதிவிலக் கானவன் போல கண்கள் நித்திரையை வேண்டிக் கெஞ்ச விழித் திருக்கிறேன்.

கால சமுத்திரத்திற்குள் மணித்தியாலங்கள் ஐந்துக்கு மேல் கழிந்திருக்கலாம். திட்டவட்டமாகக் கூறிவிடுவதற்கில்லை. இது வரை புறப்பட்ட இடத்திருந்து சுமார் நூற்று ஐம்பது மைல்கள் கழிந்து விட்டன. போகவேண்டிய இடத்திற்கு இன்னும் நூறு மைல்கள் வரை எஞ்சியுள்ளன. இந்த இடைவெளி குறுகக் குறுக, சஞ்சலமும் அதிகரிக்கிறது. என்னைக் காட்டிக்கொள்ளக் கூடாது

என்று நான் இட்டுக்கொண்ட வேடம் பல்லிளித்து விடுமா?

வெளிச்சத்துக்காகப் போடப்பட்ட ஜன்னற் கண்ணாடி வெளியிருளை இரசமாக ஏற்று உருவத்தை ஓரளவு சுட்டிக் காட்டுகின்றது. அந்த உருவம் : கருங்குன்றைத் தலைகீழாகக் கவிழ்த்து விட்ட தாடி; தூக்கக் கலக்கமும், துன்ப நினைவுகளும் கூடிக் குலவும் விழிகள்; அவற்றின் கீழ் வேதனையின் கறைபோல ஒட்டிக்கொண்டிருக்கும் கருவளையம்; அரையில் வெளுத்தாலும் அசையாத துவர் ஏறிய காவி வேட்டி; தோளில் வேட்டியின் வண்ண துண்டு; வளர்ந்து கற்றையாகிச் சிங்கத்தின் பிடரிபோல் வளைந்து நெளிந்து சுருண்டு கிடக்கும் சிகை; அந்தச் சிகையை பின்னணியாகக் கொண்ட நெற்றி; அந்த நெற்றியில் பாலைப் பழிக்கும் வண்ண விபூதிப் பூச்சு; அரையங்குலப் பரிமாணத் துக்குச் சந்தனப் பொட்டு. கதிர்காமத்திலிருந்து வரும் அசல் சாமியார் தான், அதில் எள்ளத்தனையும் சந்தேகம் வேண்டிய தில்லை .

நாகரிகத்தின் வாரிசுகள் என்று மேளமடித்துக் காட்டும் ‘பொடியன்கள்’ குறுக்கும் மறுக்குமாக நடமாடும் பெட்டியில் இந்தப் பிகிருதியா? இதைக் காணிவல் காட்சியிலல்லவா வைக்க வேண்டும்? ஆம்; அது தான் நான் வேண்டுவது. உலகத்திலிருந்து கொண்டு உலகத்தைவிட்டு ஒதுங்கிய என்னை எப்படியாவது சொல்லி, எங்காவது வைக்கட்டும். இந்த உருவம் இரண்டொரு வரை அப்படிக் கதைக்கத் தூண்டியது. கதைத்திருக்கிறார்கள். காதுகள் கேட்டிருக்கின்றன. இதுவரை என்னைத் தெரிந்த இரண் டொருவர் கடந்தும் சென்றிருக்கிறார்கள். அவர்களும் அப்படிச் கருதியிருக்கலாம். எனக்குப் பிடித்ததும் அது தான். என்னை எவரும் இனங் கண்டு பிடிக்கக் கூடாது. இந்த இன்றைய என் உரு மாற்றத்தில் ஒரு வெற்றி; நல்ல வேடம். அதில் மனம் இலயித்துக் கொள்ள இதழ்க்கடையில் குறுநகைபூத்து நெளிகிறது. அப்பப்பா திருப்தி!

என்ன திருப்தியா?

திருப்தியென்பது மனித இதயத்துக்குச் சாசுவதமான ஒன்றல்ல. அந்தத் திருப்தி மட்டும் கிடைத்திருந்தால் நான் இந்தப் பிரயாணத்தை மேற்கொண்டிருக்க வேண்டியதில்லை! நீரும் புல்லும் கிடையாது மேய்ப்பாளனின் கண்காணிப்புக்குத் தப்பிய வெள்ளாட்டுக் குட்டிபோல கொழும்பு நகர ஜன வெள்ளத்துக்குள் எற்றுண்டு அலைந்து கொண்டிருந்தேன். புறப்பட்ட இடத்தையே மீண்டும் நாடவேண்டியிருக்கிறதென்றால் நிம்மதி கிடைத்துவிட்டது என்று பெருமைப்படுவதில் அர்த்தமில்லை.

ஓடிக்கொண்டிருந்த வண்டியின் வேகம் குறைகிறது. உட் கொண்ட உணவின் ஒரு பகுதியைக் கழிவாக்கி வாயால் கக்கிக் கொண்ட பின் புதிய உணவென்ற பிரயாணிகளை உட் கொள்ள விழையும் பெரிய வௌவால் போன்று வவுனியாவைக் கண்ட தும் வண்டி நின்று விடுகிறது.

‘பிளாட்பாரத்’தையடுத்த தண்டவாளத்தை விடுத்து அடுத்த தடத்திற்றான் வண்டி நிறுத்தப்பட்டிருக்கிறது. வழக்கமாகக் கொழும்பு வண்டியும் யாழ்ப்பாண வண்டியும் அனுராதபுரியிற்றான் சந்தித்துக் கொள்ளுவன. இன்று இங்குதான் சந்திக்கவேண்டியிருக்கிறதெனப் பேசிக் கொள்கிறார்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்து வருகின்ற வண்டியில் எனக்குத் தெரிந்தவர்கள் இருந்துவிட்டால் என்செய்வது! அங்கங்களை உள்ளடக்கி வெறும் ஓடாகக் காட்சி தரும் ஆமையாக மூலையோடு மூலையாகக் குறண்டிக் கொள்கிறேன்.

யாழ்ப்பாண வண்டி கடகடவென்ற ஓசையை எழுப்பிக் கொண்டு வந்து நிற்கிறது. அதிலிருந்து இறங்குகிறார்கள் சிலர்; ஏறுகிறார்கள் சிலர். என்னை எப்படித்தான் மறைத்துக் கொண் டாலும் கட்புலன்கள் மிகமிக விழிப்பாகவே இருக்கின்றன. அதோ அந்த வண்டியிலும் தெரிந்தவர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார் கள். தங்கள் தங்கள் அலுவல்களை மேற்கொள்ள அவகாசம் இன்றித் தவிக்கும் மனிதப் புழுக்களுக்கு என் விஷயத்தில் கவன மில்லாமலிருக்கட்டும். ஆனால் அவர்கள் கண்ணில் நான் தென் படக்கூடாது. அது தான் என்னுள் கப்பிக் கவிந்திருக்கும் பிர திக்ஞை .

முன் வந்த வண்டியை விட, பின்வந்த வண்டியைத்தான் முதலில் அனுப்புகிறார்கள். அந்த இடம் சூனியமாகின்றது. அப்பப்பா! அந்தச் சூனியத்துள் என் உள்ளம் பூரணம் பெறு கிறது. ஒன்றின் அழிவிலே தான் இன்னொன்று ஆகிறது என் பார்களே, அந்த உண்மையும் இப்படித்தான்!

நானிருக்கும் பெட்டியில் அவசரம் அவசரமாக ஒருவர் ஏறுகிறார். அவரைத் தொடர்ந்து கொட்டுகிற பனிக் குளிருக்கு இதமாக முக்காடிட்ட இன்னோர் உருவம் வருகிறது. முதலில் வந்தவர் சுற்றிலும் நோட்டம் விட்டபோது, தூங்கி வழியும் மனித மந்தைகள் கண்களில் பட்டிருக்க வேண்டும். எனக்குப் பக்கத் திலே மூன்றாம் வகுப்புப் பெட்டியில் நீட்டி நிமிர்ந்து படுக்கைக்கே டிக்கட் பெற்றுக் கொண்டாவர் போல் சர்வ சுதந்திரமாக ஒருவர் உறங்குகின்றார். வந்தவர் அவரைத் தட்டி ‘கொஞ்சம் காலை மடக்குங்கோ இங்கே ஒரு பெண்பிள்ளை உட்கார வேண்டும்” என்று கேட்டுக் கொள்கிறார். சொப்பனத்தில் இலயித்துக் கிடந்த அவர் மூக்கால் அழுதபடி கால்களை மடக்கிக் கொள்கிறார். ஆனால் அந்தப் பால்குடிக்கும் பூனை தன் கண்களைத் திறக்கவில்லை.

பெண்ணென்ற அந்த முக்காடிட்ட உருவம் உட்கார்ந்து கொள்ள, வந்தவர் கண்ணாடிப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்த என் முதுகில் கையைப் போட்டு “நீங்கள் யாழ்ப்பாணத்துக்குத் தானே?” என்கிறார். திரும்பிப் பார்க்காமல் என்வாய் “ஆம்” என்கிறது.

“எனக்கு அவசரமான வேலை. வர முடியவில்லை . இவள் தனியே வருகிறாள். யாழ்ப்பாணம் வரை பார்த்துக் கொள்ளுங் கள்!”

இதென்ன அவஸ்தை, ஆசாபாசங்களைக் கல்லி எறிந்து விட்டு என்னையே நான் அடக்கி ஒடுக்கிக் கொள்ளும் நிலையில் புதிய சுமையொன்று வந்து அழுத்துகிறதே என்று மனம் நினைத் துக்கொள்கிறது. வாயால் எந்தவித பதிலும் வெளிவரவில்லை , வண்டி புறப்படுவதற்காக மணி “டாண் டாண்” என்று ஒலிக்கவே பெண்ணை வண்டியில் ஏற்ற வந்தவர் அவசரமாக இறங்குகிறார். வண்டி நகரும் போது கூடக் கையைக் காட்டிப் “பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அவர் கூறத் தயங்கவில்லை .

பிரயாணஞ் செய்த ஒரு சில மனித ஜந்துக்களும், பொருள் களும் வெளியே வழிந்து போக, வேறு மூட்டை முடிச்சுகளையும் மனிதர்களையும் இரையாகக் கொண்ட வண்டி திணறிப் பெருமூச் சுடன் புறப்படுகிறது. கைதேர்ந்த தாளக்கணக்குத் தெரிந்த சங்கீத விற்பன்னனைப் போல் ”சுக் சுக்” என்று வண்டி இடும் ஒலி, சுதிசேர்ந்த தாலாட்டுப் பாடலாக அமையும் போது ஓணான் போல் ஆடிக்கொள்ளும் பெட்டியிலிருப்பவர்கள் உறங்காமலிருக்கத் தயாராகவில்லை .

இருளின் மை வண்ணத் திரையைக் கிழிக்கும் இராட்சதக் கண்ணால் பார்த்துக் கொண்டு வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. தண்டவாளத்தின் ஓரங்களில் அமைந்த ஒரு சில கட்டடங்கள் மின்மினிப் பூச்சிகளின் ஒளிச் சன்னங்களை நினைவூட்டிக் கொண் டிருப்பது தெரிகிறது. கிளைத்துச் சடைத்து நெடித்து ஒன்றோ டொன்று தழுவி நிற்கும் மாபெரும் விருட்சங்கள் இருளின் ஆதீனத்தைக் கைலாகு கொடுத்து வரவேற்பது போன்ற காட்டை ஊடறுத்துச் செல்லுகிறது வண்டி. புதிதாக ஏறியவர்களும் உறக்க விட்டத்துக்குள் அகப்பட்டுவிட்டார்கள்.

என் ஒப்புதலைப் பொருட்படுத்தாது சுமத்தப்பட்ட சுமை யான அந்தப் பெண்ணின் முக்காடு தூக்கக் கலகத்தினால் கலைந்து அவளது தோளிற் சரிந்து விழுகின்ற வேளையில் வண்டியிலுள்ள வர்கள் உயிரிருந்தும் பிணமாகி விட்டார்களே என்ற நம்பிக்கையிற் சிறிது திரும்பிப் பார்க்கின்றேன். அங்கே காண்பது? இப்படி நடக்குமா? வினாக்கள் மனமரத்திருந்து உதிருகின்றன. என்ன விந்தை ?

எதையெதைத் தவிர்த்து ஒதுக்கித் – தள்ளி விட வேண்டு மென்று எதிர்பார்க்கின்றோமோ; அதுவே தேடிவந்து நமது காலடியில் அகப்படுவது போன்ற நிலையேற்பட்டு விடுகிறதே! “ஒன்றை நினைக்கினது வொழிந்திட்டொன்றாகும், அன்றி யது வரினும் வந்தெய்தும் – ஒன்றை, நினையாத முன்வந்த நிற்பினு நிற்கும், எனையாளு மீசன் செயல்”. இப்படி ஆன்றோர் கூறுகின் றனர். நிதர்சன உண்மை எதார்த்த வாதம் என்றெல்லாம் சொல்லிக் கொள்பவர்களுக்கு இந்தக் கருத்தில் இசைவிருக்காது. மூடக் கருத் துக்கள் இவையென்று சாதிப்பர். ஆனால் நான் வெறுக்கிறேன். ஒதுக்குகிறேன்; ஒதுங்கி ஒதுங்கி ஓடுகிறேன். அது என் காலடியில் வந்துவிட்டதென்றால் இதன் கருத்து என்னவோ?

நான் துணையாகச் செல்ல வேண்டியவள் கண்ணம்மா! கண்ணம்மாவுக்கா நான் துணை? அவளுக்குத் துணையாக வாய்த் திருப்பவன் என்னைத் துணையாக்கிவிடுகிறானே!

அந்தக் கண்ணம்மா?

சிங்கத்தின் பிடரிபோல் அசிங்கமாக வளர்ந்து கிடக்கும் சிகையும், தாடியும், அதற்கேற்ற உடையும் என்னை நிச்சயமாக அவளுக்குக் காட்டிக் கொடுக்கவில்லை. காட்டிக்கொடுக்காமலும் விடலாம். நல்ல உருமாற்றந்தான் இருந்தும் அவளை யாரென்று அறிந்துகொண்டு ஒரே வண்டியில் நானும் அவளும் ஒரே பெட்டி யிற் செல்வதென்றால் அதுவும் இன்னும் தொண்ணூறு மைல் செல்ல வேண்டும்! இந்த நிலையில் எப்படி அவள் என்னைக் கண்டுபிடிக்கமாட்டாள் என்று நம்புவது? தப்பித்தவறி என்னால், என்ன செய்த போதும் மாற்ற முடியாத என் குரல் காட்டிக் கொடுத்துவிட்டால்…?

அவள் அந்த வண்டிப் பெட்டியில் சுகமாகக் கண்ணயரு கிறாள். இப்போதைக்கு அவள் விழிக்கப்போவதில்லை. இத்துணிவால் கண்களின் துணைகொண்டு அவள் உருவைக் கணிக் கின்றேன்.

வெட்டிய அப்பிள் துண்டு நெற்றி; பழுத்துச் சற்றுக் காய் வுற்ற தக்காளியின் வண்ணம்; அலை பாயும் சுருண்ட சிகையை, அள்ளி அழகாக முடிந்திருந்தாள். குறுகுறுக்கும் நாகப்பழக் கண்கள் மூடியிருந்த போதிலும் அவற்றைத் தம்முள் சிறைப்பிடித்த போளைக் குமிழிகள் எல்லாம் அப்படியே தானிருக்கின்றன. ஆனால் அவளது அடிவயிறு சற்றுக் கனத்து உப்பியிருக்கின்றது. கர்ப்பிணி அவள். இது தான் முன்னுக்கும் பின்னுக்குமுள்ள மாற்றம்.

காலத்தோடு ஒரு வருடம் உருண்டோடிச் சென்றுவிட்டது. அந்த இடைக் காலத்துக்குள் எத்துணை மாற்றங்கள்! அதனை யொட்டி எத்துணைச் செயல்கள் நடந்து முடிந்துவிட்டன.

‘நான்’ என்ற பண்டத்தை திறந்து – சத்திரசிகிச்சை செய்து அதனுள் முட்டையிட்டுப் பல்கிப் பெருகியிருக்கும் நாசக் கிருமி களை வெளிக்குக் கொண்டுவந்து விட்டால் தனி மனிதனைச் சுற்றிச் சுழன்றுவரும் ஆசாபாசத்தின் அடித்தளத்தை இலகுவில் அறிந்துவிடலாம், அப்படி அறிந்துவிடத் தேவையற்றவருக்கு என் வேடம் வெளுத்துவிட்டாற் பரவாயில்லை. ஆனால் கந்தையா என்ற இப்பிரகிருதி செத்துத் தொலைந்திருப்பான் என்று நம்பிய வர்களுக்கு நம்பிக்கை பாழாகக்கூடாது. அப்படி எவரெவர் நம்பிக்கை உடைபட்டுப் போனாலும் பரவாயில்லை! என்னருகில் இருந்து கொண்டு என்னைத் தெரிந்து கொள்ளாமலே வரும் இவளுக்கு நான் யார் என்று என்றைக்குமே தெரிந்துவிடக்கூடாது.

நெடுங் கதையாகக் கூடிய நீளமான சம்பவ அங்கங்களைக் கொண்ட தொடர் நாடகமல்ல எங்கள் வாழ்க்கை. ஒரேயோர் அங்கத்தை – ஒரேயொரு சுவையை மையமாகக் கொண்டு சுற்றிச் சுழன்று வரும் உயிர்த் துடிப்புள்ள ஓரங்க நாடகம் இது. அந்த நாடகத்தின் மிக முக்கிய பாத்திரம் அவள்.

மலாயாவிலிருந்து பென்ஷனியராக வந்த ஆறுமுகம் எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு வராமலிருந்தால் கண்ணம்மாவுடன் கந்தையாவின் கதை பிணைந்திருக்கவேண்டியதில்லை. என்ன செய்ய? ஏதோ பலம்பொருந்திய ஒரு சங்கிலித் தொடர்பு – எப்படியோ ஒன்றோடொன்று – பின்னிப் பிணைந்து கொள்ள –

இறுக்கமான நெருக்கம் உண்டாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

இக்காலத்தில் “யங்கி ஸ்டைல்” என்று சொல்லுகிற “றிப் பயர் குறோப்” வைத்துக் கொண்டு ஊரைச்சுற்றி வளைய வரும் நவநாகரிக இளவட்டங்களைப் போலன்றி – பருவத்துக்குரிய குரங்குச் சேட்டைகளைத் தவிர்த்துத் திரிந்த என்னை ஆறுமுகம் தனது கடைசிப் பையன் கண்ண னுக்கு “டியூசன்” ஆசிரியராக நியமித்துவிட்டார்.

ஆரம்பத்தில் இதனைத் தடுத்திருந்தால் இந்தச் சாமியார் வேடத்துடன் உலைய வேண்டியதில்லை. ஊரை வெறுத்து நேசமும் பாசமும் ஊட்டிய பெற்றோரை விடுத்து இப்படியெல் லாம் தன்னைத்தான் மறைத்து வாழவேண்டிய நிர்ப்பந்தத்துக்கும் இடமேயில்லை ! இதயத்தில் இரத்தம் கசிகிறது.

அதெல்லாம் பழைய கதைதான்! இருந்தும் அந்தப் பழை மையிற் கால்கொண்டு தான் இந்தப் புதுமைக்கு வரவேண்டி யிருக்கிறது. காலத்தை எதிர் நீச்சலடித்துக் கடந்து ஓராண்டுக்கு முன்சென்றுவிட்டால் கை தேர்ந்த சைத்திரிகனது கரத்தின் நுட்பத் தாலாகி மெருகு குன்றாது – இன்றும் புதுமையுடன் எழில் தரும் அஜந்தாவின் வர்ணச் சித்திரங்கள் போன்ற காட்சிகள் பளிச்சிடும். உயிர்த் துடிப்புள்ள அக் காட்சிகள் இதோ சலனப் படமாக என்முன் விரிகின்றன.

பென்ஷனியர் ஆறுமுகம் அன்று வீட்டிலில்லை. கண்ணம் மாவின் தாயார் அடுக்களையிலே வேலையில் ஈடுபட்டிருக்கலாம். அதைப் பற்றிய அக்கறை எனக்கில்லை. சுட்டித்தனம் மிகுந்த கண்ணனை அதட்டி அடக்கிப் பாடஞ் சொல்லிக்கொடுப்பதே ஒரு சாதனை. அந்தச் சாதனையிற் காணும் வேதனையில் ஆழ்ந்து கொண்டிருக்கும்போது…..

“களுக்” என்ற சிரிப்பொலி என் காதுகளைச் சாடியது. இல்லை, தேனருவியாகப் பாய்ந்தது. நிமிர்ந்து பார்த்தபோது அங்கு நின்றவள் கண்ணம்மா. அந்தியின் செவ் வண்ணக்குழம்பு அவள் மேனியில் பொதிந்து கிடந்தபோதும் அவள் மேனிக்கு மெருகூட்ட அலங்காரம் செய்யத் தவறவில்லை. அழகுடன் அலங்காரம் கூடிவிட்டால் சலனபுத்தி படைத்தவர் மயங்கக்கூடும். விஸ்வாமித்திரனான யான் புலனை வெட்டித் திருப்பிப் – பாடத்தில் கண்ணனைப் புகுத்துவதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன்.

“என்ன மாஸ்டர் பேசுகிறீர்களில்லை!”

“மாஸ்டர் உங்களுக்குக் காது கேட்காதா”

என் மௌனத்தை மீண்டும் அவள் களைந் தெறிந்து விட் டாள். தொடர்ந்து அவளே பேசினாள்:

“உங்களிடம் கதைப்புத்தகங்களிருந்தால் கொடுக்கின்றீர்களா?” என்று குயிலிசையில் கேட்டுக் கொண்டாள். முதன் முதல் அவள் விடுத்த வேண்டுகோள் இது. இயற்கையிலேயே புத்தகங்களை மற்றவர்களுக்கு வழங்கி அவர்களையும் புத்தகப் பைத்தியமாக்குவதில் எனக்கொரு நிறைவுண்டாவது வழக்கம். இந்தப் பட்டியல் நீளுவதை விரும்பாமலிருப்பேனா? அந்த நன்னோக்கின் காரணமாக,

“நாளைக்குக் கொண்டு வந்து தருகிறேன்” என்றேன்.

இலட்சையும் இயற்கையில் சங்கோசமும் கொண்ட எனக் குத் தொடர்ந்து அந்தப் பருவக் குமரியுடன் பேசுவதென்றால் என்னவோ போலிருந்தது.

தனது நெஞ்சுக்குக் குறுக்கே அரசினர் காரியங்களில் “பியூன்கள்” மாட்டியிருக்கும் பட்டி போல் அமைந்து, விழுந்து கிடந்த பின்னலைத் தட்டி முதுகில் நெளியவிட்டுக் கொண்டு அவள் நடந்துவிட்டாள். நடக்கும்போது அவளது பாளைச் சிரிப்பில் பற்கள் மின்னுகின்றன. கண்கள் எதையோ தேடுகின்றன.

அந்த அன்னநடை? அதில் இழைந்தோடும் இலாவண்யம் எல்லாம் சிந்தையைத் திணறடித்து முன்பு யான் கண்டிராத புதுமையை – புதிய- அனுபவத்தை எனக்கு ஊட்டியே விட்டது. அதில் இராமர் வேடம் போட்டு மறைக்கவோ, மரக்கறி வாதம் செய்து மறுக்கவோ நான் விரும்பவில்லை. வெறுமனே புத்த கத்தை அவள் கேட்கவில்லை என்பது அவளது செயலில் – பாவ னையில் எல்லாம் துலாம்பரமாக எனக்குத் தெரிந்தேவிட்டது. அவள் உள்ளே புகுந்துவிட்டாள். புதிய அனுபவமும் அதில் இழைந்துவரும் எண்ணமும் நெஞ்சில் கப்பிக் கவிந்துவிட்டதன் பலனாக இரவைப் பகலாக்கி நெளிந்து கொண்டிருந்து – மறுநாள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னராகவே அங்கு ஆஜராகிவிட்டேன். சுருதி சுத்தமான இனிய பண்ணைக் காதுகள் பருகத் துடித்தன.

அப்பப்பா! கையோடு கொண்டுவந்த புத்தகத்தைப் பெறு வதில் எவ்வளவு ஆவல் அவளுக்கு! அதைச் சாக்காக வைத்துக் கொண்டு என்ன என்னவோ வெல்லாம் அளந்து கொட்டினாளே. ஊரறிந்த எழுத்தாளர்களைப் பற்றியும், அவர்களது கதைகள், அவர்கள் கையாளும் நடை, கரு, உரு இப்படியெல்லாம் அவள் பேசிப்பேசி நேரத்தைக் கொன்று கொண்டிருந்தாள். அந்தச் சாக்காட்டில் நெஞ்சு கனன்றது. ஏதோ புரியாத புதிர் விடுபடுவது போன்ற பிரமை …. மகுடி கேட்ட நாகமானேன். கண்ணனுக்கு இந்தப் பேச்சு வாதம் தன் போக்கில் எதையாவது செய்து என்னை ஏமாற்றக்கூடியதாக இருந்தது. நானும் இப்போது அவனது ஆசிரியனாக இருக்கத் தயாரில்லைத்தான்.

வளர்ப்பானேன்?

அன்று அரும்பிய எமது நட்பு மலர்ந்தது. ஒன்றோடொன்று மிகக் நெருக்கம் குறைந்து ஒன்றிக்கொள்ள வேண்டிய வேளை…

உலகம் இருவருக்கிடையே மட்டும் தங்கியதல்ல. பரந்து செறிந்த அதன் வெளியில் எத்தனை எத்தனையோ ஜந்துக்கள், அதிலும் மனிதனின் அற்ப புத்திக்கு எட்டாதன எதுவுமேயில்லை. அதன் பலன் மூன்றாம் பேர்வழிக்குத் தெரியாதது என்று கருதிய விடயம் எப்படித் தான் புகைந்ததோ? குறுகிய காலத்துக்குள் பீரங்கி வெடிபோல் உலகம் முழுவதும் கேட்டு விட்டபோது நெருக்கடி சொல்லி முடியாது.

இருவர்க்கிடையேயும் ஏற்பட்ட பலரக வேறுபாடு நிமிர்ந்து நின்று சாதிக்க முடியாத பலவீனத்தைத் தந்து கொண்டிருந்தது. பலவீனத்தைத் தாண்டி நான் முன்னேறியிருப்பேன். எனினும் என்னை இளைஞன் என்று தெரிந்தும் தனது வீட்டுக்குள் அனு மதித்த கண்ணியவான் ஆறுமுகத்தின் கண்ணீரைத் துடைத்து விடவே யான் முனைந்தேன். அந்த வஞ்சமற்ற உள்ளத்தைக் கொல்ல நினைக்க கூடாது.

ஊரெல்லாம் உறக்கத்தின் சிலந்தி வலைக்குள் அகப்பட்டுக் கொண்டு, படுக்கையில் நெளியும் யாமம், என்னைப் பெற்று வளர்த்து என்ன என்னவோ கனவு கண்ட தந்தையைத் – தாயை எல்லாம் விட்டுப் பிரிந்து கிளம்பிவிட்டேன். வெறுமனே திடீரென நான் கிளம்பியிருந்தால் தேடியிருக்கலாம். அது தேவையில்லாத வாறு சரியான வழியில் நான் கையாண்ட தந்திரம் அதில் உண்டு. எழுதிய கடிதமும் அதை உறுதி செய்யும். அந்தக் கடிதத்தைப் படித்திருப்பார்கள். தேடியிருக்கமாட்டார்கள் என்று கருதுகிறேன்.

அன்புள்ள பெற்றோருக்கு,

“பாசமும் நேசமும் ஊட்டி வளர்த்து படிப்புச் சொல்லிக் கொடுத்து ஆளாக்கிய உங்கள் மகன் உங் களை விட்டுப் பிரிகின்றான் என்று நீங்கள் வேதனை யில் வெதும்பாதீர்கள். அவரவர்களுக்கு ஏற்பட்ட நியதியின் பலனே அவரவர்களுக்குக் கிட்டுகிறது. ஏன்? எதற்கு? என்ற வினாக்களுக்கு விடையை இங்கு விளக்குவதில் அர்த்தமில்லை. இதோ இக்கடிதத்து டன் காட்சி தரும் ‘பொலிடோல்” மருந்துப் புட்டி என் செலவு சாவுடன் சங்கமித்து விடும் என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்தும். எங்கேயாவது என் பிணத்தைத் தேட முற்படாதீர்கள் ! அதிலும் வெற்றி காணமாட்டீர்கள்! ஏனெனில் எனது பிணம் இந்த ஊரின் எல்லையிலேயே தங்காது.

உங்கள் மகன். இப்படியெல்லாம் எழுதிவிட்டு நான் ஓராண்டை எங்கெங் கெல்லாமோ கழித்துப் பெற்ற தாயும் பிறந்துள பொன்னாடும் நெஞ்சில் மீண்டும் கிளர்ச்சியை ஊட்டித் தொடர்பு கொண்ட ழைக்கக் கிளம்பியிருக்கிறேன். செத்துத் தொலைந்தவன் என்று கருதிய நான் மீண்டும் உயிருடன் தோன்றி, விடுபட்டுப் போன சிக்கலைப் பெரிதாக்கிக் கொள்ளக் கூடாதென்ற நிலையுடன் ஆளே உருமாறிச் செல்கின்றேன்.

அந்த உருமாற்றம் கொண்டவனை என்றைக்காவது காணக் கூடாதவள் அவள். அவள் இதோ இன்னும் தூங்கிக்கொண்டே என்னருகிலிருக்கிறாள். தூக்கக் கலக்கத்திலும் அவளது சோபிதம் குறைந்ததாகவில்லை. வண்டியின் ஆட்டத்துடன் அவளது நெஞ் சுக்குக் குறுக்கே கிடக்கும் சேலை ஒரு புறம் சரிந்துகொள்கிறது. அங்கே கிடப்பது தாலி. அவளது வாழ்வுக்கு வேலியாக அவளது குடும்ப அந்தஸ்தை, பெருமையையெல்லாம் நிலைநாட்ட ஆறு முகம் அவர்கள் கண்ணீரால் அமைத்துக் கொண்ட வேலி இது. அந்த வேலியை அவள் நிச்சயம் என்னை இனங்கண்டு கொண் டால் நீக்கிவிடலாமல்லவா? அதில் கடுகளவும் சந்தேகமே வேண் டியதில்லை. அப்படியானால் நான் மனிதனா?

அந்த நிலைக்கு நான் காரணமாவதா? சே! எதையெதை நல்லதென்று நினைத்து இது வரை சாதித்து வந்தேனோ அது என்றைக்கும் முறியடிக்கப்படக்கூடாது!

வவனியாவை விட்டுக் கிளம்பிய வண்டியின் வேகம் சிறுகச் சிறுகக் குறைகிறது. அடுத்து ஒரு புகையிரத நிலையம் வரவிருக் கிறது. ஓமந்தைக் காட்டின் நடுவே அமைந்த அந்த நிலையத்தில் வண்டி நிற்கும்போது அவள் கண் விழித்துக்கொள்வாள். இயற்கை யிலேயே சரள சுபாவமுடைய அவன் வேற்றாளிடம் பேசி உதவி கோருவதற்குப் பின்னிற்கமாட்டாள்.

அப்படியானால் என்னுடன் அவள் பேச வேண்டிய நிர்ப் பந்த மேற்படவே செய்யும். இந்தப் பெட்டியில் தொடர்ந்து அவளருகில் இருக்கக்கூடாது. இதோ வண்டி ஆடி அசைந்து கதிகுறைந்து நிலையத்தை வந்தடைகிறது. அவசரம் அவசரமாக எழும்புகிறேன். முற்றாக அந்த வண்டி நிற்கிறது. அதிக பிர யாணிகள் அந்த நிலையத்தில் இறங்கப்போவதில்லை. இரண்

டொருவர் இறங்குகிறார்கள். அந்த இரண்டொருவரில் ஒருவனாக இறங்கிக்கொள்கிறேன்.

வேறு பெட்டியில் ஏறிக்கொண்டு எனது பிரயாணத்தைத் தொடர்வதிலும் அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லை . ஏன்? எதற்கு? செத்துவிட்ட பல பிரச்சினைகள் உயிர்கொண்டு நல்ல கருத்துக்கு இடையூறு செய்யக்கூடாது!

செத்துத் தொலைந்திருப்பான் என்று கருமாதிகளைச் செய்து முடித்திருப்பார்கள். அந்த இடத்தில் மீண்டும் உயிரை ஸ்தாபித்து – இதோ செல்லும் கண்ணம்மாவின் வாழ்வுக்குச் சோதனையைத் தேடித்தருவதா? கூடாது. உள்ளக் குறுகுறுப்பிற் புறப்பட்ட இடத்துக்கு மீண்டும் வர முயன்றேன். அந்த முயற்சியில் சூனியம் உருவாகும் போது நிறைவை எதிர் பார்க்கலாமா? இனிச் சூனியத்தில் நிறைவு காணுவதுதான் எனக்குப் பிடித்தமானது!

வண்டி என்னைப்போன்ற சில மனித மந்தைகளையும், மூட்டை முடிச்சுகளையும் கக்கிவிட்டு ஒரேசீரான வேகத்தில் அவசரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. துணையற்றுச் செல்லும் அவளுக்குத் துணையாகித் துன்பத்தைக் கொடுக்காத நான் சற்று நின்றுவிட்டு வெளியே வருகிறேன்.அப்பப்பா! என்ன இருள். இருமருங்குமுள விருட்சங்கள் இருள் முழுவதையும் இங்கேதான் ஒன்றாகத் தேக்கி வைத்திருக்கின்றனவோ? இது என்ன செய்யும்? இருளாகிவிட்ட நெஞ்சுடன், இருளை ஊடறுத்துப் புறப்பட்ட திசையை நோக்கி நகருகிறேன். அவளுக்கு வண்டியிலிருப்பவர்கள் துணைபுரிவர். இந்த இருளை ஊடறுத்துச் செல்லும் எனக்குத் துணை தேவையேயில்லை!

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *