தீச்சுவை பலா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 7,022 
 
 

“இருளா! இந்தாப் புடி உங் கூலி பத்து ரூபா ” என்று ஆண்டை நீட்டினார், கருத்த வட்ட முகத்தில் பளிச்சிட்ட அழகிய கண்கள் வேறு எங்கோ நோக்கின. இருளப்பன் அந்த பணத்தை வாங்காமல் கைகளைப் பின்னுக்கு இழுத்து கொண்டு பிகு செய்தான்.

அவன் அப்பனுக்கு துணையாக பலா கன்றுகளுக்குக் குழி தோண்டினன். குழிகளில் எருவிட்ட பின்பு நட்டு நீர் ஊற்றினான். அப்பனுடன் இருந்து நாள் முழுவதும் இவ்வாறு செய்தான். அப்பன், தாத்தா காலத்தில் பயிர் செய்யப்பட்டு இருந்த பலா, முந்திரி தோப்புகளில் ஆண்டைக்கு நல்ல வருமானம் கிடைந்தது. அதில் சேர்ந்த பணத்தில் அரைகாணி நிலம் வாங்கி, பலா மரங்கன்றுகளை நட்டுக் கொண்டு இருக்கிறார்.

“கூலி பத்தவில்லையாடா… நீ சின்ன பையன் தானே உங்க அப்பனுக்கு தர்ற கூலியே உனக்கு வேணுமாக்கும்” என்று கிண்டல் பேசினார்.

“இல்ல…. பலா கன்னு வேணும்…” இருளப்பன் இழுத்தான்.

“உங்கப்பன் எதாச்சும் தோப்பு வாங்கி இருக்கானாடா” என்று கிண்டல் அடித்தவாறு இரண்டு பலா கன்றுகளைத் தந்தார்.

மகிழ்ச்சியில் இருளன் அந்தச் செடிகளைக் குழந்தையாய் நினைத்து வருடினான். பலா கன்றுகள் தாயாய் பால் சொறிந்தன. அதனால் அவன் கைகளை பிசுபிசுப்பாக்கியது. பல நாட்கள் அல்ல… பல ஆண்டுகள் இருளன் கனவு இன்று நிறைவேறி உள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சுவைத்த அந்த பலா சுளையின் இனிப்பு இன்றும் தொண்டைக் குழியில் இனித்துக் கொண்டு இருக்கின்றது.
அவனது அப்பா பலா பழச்சுளைக் கூறு ஒன்றை வாங்கி, தம்பி, தங்கைகளுக்கு இரண்டிரண்டு தந்தார். மூத்தவனான இவனுக்கு ஒரே ஒன்றைத் தந்தார்.. அந்த பலாச் சுளையின் திகட்டும் இனிப்பு அவனது ஆசையை கொழுந்து மேலும் விட்டு எரிய செய்தது. சின்னப் பையன் தானே! அப்பாவிடம் இன்னொன்று சுளை வாங்கி தரும்படி அழுதான். அடம் பிடித்தான். தம்பி, தங்கைகளிடம் பங்கு கேட்டுச் சண்டை போட்டான். அப்பாவிடம் இருந்து அடிதான் கிடைத்தது. பலாச் சுளை கிடைக்கவில்லை.

அந்த சிறுவனின் நிறைவேறாத ஆசை அவனுடன் சேர்ந்து வளர்ந்து பெரியதானது. படிப்பை குடும்பத்தின் ஏழ்மையால் பள்ளி இறுதி வகுப்பிற்கு மேல் தொடர முடியாமல் போனது. தனது தந்தையுடன் கூலி வேலைக்கு போக தொடங்கினான். அவனது முதல் உழைப்பிற்கு, உழைப்பின் கூலிக்கு கிடைத்தது தான் இந்த பலா கன்றுகள்! அவனே தன் கரங்களால் உழைத்து சம்பாரித்தது.

தலித் இயக்கம் ஒன்று பொறம்போக்கு நிலத்தை மடக்க முயன்ற பொழுது இருளப்பனின் தந்தையும் அதில் பங்கு கொண்டார். அதனால் அந்த குடும்பம் சொந்தமாய் குடியிருக்க ஒரு சின்ன குடிசைக்கான இடம் கிடைத்து இருந்தது.

குடிசையின் முன்புறம் காவல் தெய்வங்களாக அந்த பலா கன்னுகளை நட்டான். வீட்டு அருகில் அங்காங்கே கிடைக்கும் காய்ந்த மாட்டு சாணத்தை பொறுக்கி வந்து எருவாக இட்டான். தங்கச்சி பாப்பாவை கவனத்துடன் பேணியது போன்று பலா கன்னுகளையும் பராமரித்தான். அவை துளிர் விட்டு தளிர்த்து வளர்ந்தன. தழைந்த ஒவ்வொரு பசும் இலையும், உதிரும் ஒவ்வொரு பழுப்பு இலையும், வளர்ந்த ஒவ்வொரு இணுக்கு தண்டும் அங்குலம் அங்குலமாய் இருளப்பன் நினைவில் பதிந்து கிடந்தன.

அனைவரும் வேலைக்கு சென்றிருந்த ஒரு நாளில் வெள்ளாடுகள் சிலது தழைந்து வளர்ந்திருந்த அந்தப் பலா செடிகளை மேய்ந்து தும்சம் செய்து விட்டன. ஒரு செடியை முற்றிலும் மேய்ந்து புடுங்கி எறிந்து விட்டன. இன்னொன்று இலைகள் இல்லாமல் மெட்டையாய் கிடந்தன. இருளப்பன் பலா கன்னுகளுக்கு நேர்ந்த கதியை கண்டு கதறி அழுத்தான். கண்ணீர் விட்டான். மொட்டையாய் நின்றச் செடியின் காயங்களில் பசும் சாணியை மருந்தாய் தடவினான். வேலிகாத்தன் முட்களான வேலியை பலாவைச் சுற்றி அமைத்து கண்ணின் இமையாய்ப் அதைப் பாதுகாத்தான்.

“எத்தினி பலா பழங்க இருக்குப்பா நம்ம மரத்தில்” என்று இருளப்பனிடம் குட்டி பெண் கேட்டாள். அவன் பலாமரத்தில் தொங்கி கொண்டிருந்த காய்களை எண்ணத் தொங்கினான். அவன் வீட்டில் இருக்கும் நேரங்கள் முழுவதும் பலா மரத்தை சுற்றியோ அல்லது பலா பழங்களை பற்றிய அவனது மகளின் குழந்தைத்தனமான கேள்விகளுடனேயே கழிந்தன.

ஒரு நாள் சமையல் கறிக் கூட்டிற்கு பலாப் பிஞ்சை அறுக்க முனைந்த அவனுடைய மனைவிக்கும் அவனுக்கும் ஒரு யுத்தமே நடந்து முடிந்தது!

அவனது தீராத ஏக்கமும், குட்டி பெண்ணின் ஒயாத கேள்விகளும் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று நினைப்பு கூட பலா பழமாக இனித்தது. சிறுவயதில் அவனுக்கு வந்த ஏமாற்றம் தனது குழந்தைக்கு வரக் கூடாது என்று சிந்தனையில் அவனின் பத்தாண்டுகள் உழைப்பு தோன்றி மறைந்தது!

வழக்கமாய் ஒவ்வொரு ஆண்டும் வரும் புயல்தான் என்ற நினைப்பில் கட்டிட வேலைக்கு இருளப்பன் சென்றேன். “தானே” புழல் அப்படியானது இல்லை!

அசாதாரணமான அமைதியும், கொந்தளிப்பும் மாறிமாறி சுற்றுபுற சூழ்நிலையில் தென்பட்டது நல்லதற்கு இல்லை என்று அவனுக்குத் தோன்றியது. காற்று வீச தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாய் வேகம் அதிகரித்தன. வேகம் அதிகரிப்பது அதற்கு பிறகு எங்கும் நிற்கவே இல்லை. சூறாவளி ஒரு திசையிலிருந்து மட்டுமல்ல எல்லா திசைகளிலிருந்து வீசியது அதிசயமாக இருந்தது. காற்று சுழன்று சுழன்று அடித்தது. அந்த சுழல் வேகத்தில் ஆடைகள் தாறுமாறய் கிழிந்தது. நூறு ஆட்கள் கையை பிடித்து தரதரவென்று இழுப்பது போன்று ஒரு பக்கமாய் ஆளை நெட்டித் தள்ளி காற்று இழுத்து சென்றது. நூற்றாண்டு வாழ்ந்த பெரும் மரங்கள் வேரோடு பூமியை பிளந்தும் முறிந்தும் சாய்ந்தது பரிதாபமாய் இருந்தன. மின்கம்பிகள் முறுக்கி கொண்டு சடசடவென்று தீப்பொறிகள் சிதறி கொடியாய் பரவி டிரன்னபார்மர்கள் வெடித்து சிதறியன. சிங்களப் படைகள் ஈழத்தமிழ்ர் நகரில் வன்மத்துடன் நுழைந்து நிகழ்த்திய போர் கால அழிவுகளை தானே புயல் சில மணி நேரங்களில் நிகழ்த்தியது. உயிர் சேதாரங்கள் மட்டும் குறைவு என்று கூறலாம். குடிசையின் கூரைகள் பியத்து கொண்டு ஆகாயத்தில் பறந்தன. பேய்க் காற்று கடலில் உப்பு நீரை வாரிச் சுருட்டி நிலமெங்கும் கொட்டித் தீர்த்தது.

புயலின் வெகமும் கோரத்தாண்டவமும் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிப்பது முடிவே இல்லாமல் தொடர்ந்தன. அதை எவ்வாறு விவரிப்பது என்பது புரியவில்லை. அதற்கு மொழியின் சொற்கள் போதாமையை உணர்கிறேன். மொழியைத் தாண்டி உங்கள் மனக்கண்களால் பார்த்தால், மனதால் உணர்ந்தால் மட்டுமே இந்த புயல் வேகத்தை, வீச்சை, கோரத்தாண்டவத்தைப் புரிந்து கொள்ள இயலும்!

இருளப்பன் அலங்கோலாமாய் வீட்டை அடைந்தான். அந்த குடிசைப் பகுதி முழுவதும் புயலினால் சின்னா பின்னாமாக்கப்பட்டு கிடந்தது. குடிசைகளின் கூரைகள் தெருவில் கிடந்தன. குடிசையின் சுவர்கள் குடடிச்சுவர்களாய் சிதலமடைந்து கிடந்தன. அவன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே குஞ்சும் குலுவானமாய் கிடந்த பலா மரம் வேரொடு சாய்ந்தது விழுந்தது. விழுந்த வேகத்தில் பலா பிஞ்சுகள் பிய்ந்து சேற்றில் சிதறின. அவன் குந்துகாலிட்டு அந்த மழையிலும் பலாமரத்தின் வேரில் அமர்ந்து குலுங்கி அழுதான். அந்த மரமும் நிச்சயம் அழுது இருக்கும். அவனின் பதினாறு ஆண்டுகள் கனவும் கண்ணீரும் புயல் மழையில் கரைந்தது யாருக்கும் தெரியவில்லை.
உப்பு நீர் பட்டதால் மிஞ்சி இருந்த மரங்கள், செடிகள் பசுமை இழந்து கறுத்து வதங்கி தொங்கி கொண்டிருந்தன.

வீழ்ந்து கிடந்த மரத்தின் பலாப் பிஞ்சுகளைப் பறிந்து குட்டிச் சுவரின் மூலையில் அடிக்கி வைத்தான். ஒரு பிஞ்சை அறுத்து கூட்டு வைக்க கேட்ட மனைவியிடம் சண்டை போட்ட இருளப்பன், இன்று தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்கள் பலா பிஞ்சு கூட்டு பொறியலாக, சில வேளைகளில் அதையே சாப்பாடாகவும் செய்ய சொல்லிச் சாப்பிட்டான்.. குட்டி பெண் தினமும் பலா பிஞ்சுகள் பார்த்து அது எப்பொழுது பழுக்கும் என்று கேட்டாள். முதலில் பொறுமையாக பதில் சொன்னான். அடிக்கடி அவள் இதையே திரும்ப திரும்ப கேட்டாள். சில நாட்களில் இருபது முப்பது தடவைகள் அந்த கேள்விகளை விதவிதமாகக் கேட்டாள். அவனுக்கு அமுகையும் ஆத்திரமும் வந்தது.

“சனியனே! உன்னால் தாண்டி எல்லாம் போச்சு அதை தொட்டு தொட்டு ஆசைப்பட்டு வீக்கினியே” என்று குழந்தை மீது எரிந்து விழுந்தான்.

பலாப் பிஞ்சுகளை கூடையில் வைத்து சந்தையில் கொண்டு போய் விற்க முனைந்தான். அங்கு தலை சுமையாகவும், வண்டி வண்டியாயாகவும் பலா பிஞ்சுகள் சந்தையில் வந்து இறங்கின. சீந்துவாறின்றி நாறிக் கிடந்தன. அடிமாட்டு விலைக்கு சுமை கூலியாவது கிடைக்கட்டும் என்று மொத்த வியாபாரியிடம் விற்று விட்டு அவன் வந்தான்.

சென்னை அரசும், டில்லி அரசும் நிபுணர் குழுக்களை அனுப்பி புயலின் சேதங்களை ஆய்ந்து கொண்டிருந்தன. பஞ்சாய்த்து, வட்டம், மாவட்டம் என அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளாய் பறந்து புயல் நிவராணப்பணிகளில் கலக்கி கொண்டிருந்தனர். கலக்கியதிலிருந்து பொறுக்கியும், வாரியும் தின்று கொண்டிருந்தனர். இருளப்பனிடம் நூறு ரூபாய் வாங்கி கொண்டு புயல் நிவராணத் தாளை பூர்த்தி செய்து கொண்டு போனார்கள். நிவாரணத் தொகை வாங்க நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடந்தனர்.

சொற்ப தொகையை முன்சீப்பிடம் வாங்கிய இருளப்பன், “சார். .” என்று இழுத்தான்.

“பலாமரம் ஒன்னு வீழ்ந்துட்டதய்யா… அதற்கு ஏதாவது கொடுங்கய்யா.”

அப்பொழுது அந்த கிராம முன்சீப் பார்த்த அலட்சிய பார்வையில் ஒட்டு மொத்த இந்திய நாட்டின் அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும் தெரிந்தார்கள். கைகொட்டி கேலிசெய்வது மாதிரி அவனுக்கு தோன்றியது.

“அவரை போயி பாருங்க…..” என்று ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரைக் கை காட்டினார். நிவாரணத் தொகை வாங்குபவர் அனைவரிடமும் ஆயிரம் ரூபாய் கட்டாய வசூலை அவர் செய்து கொண்டு இருந்தார்.

அவரிடம் ஆயிரம் ரூபாய் தத்தம் கொடுத்து விட்டு “பலா மரம் ஒன்னு…” என்று இருளப்பன் தலையை சொறிந்தான்.

“ஒரு மரத்துக்க நிவராண கேட்கிற.. ய்ய்ய்……ய்ய்ய்ய்ய்…….அது பாரு உங்க ஆண்டை … தனது தோப்பில் ஆயிரம் மரங்கள் போயிருச்சாம்… நிவராண கேட்டு நாயாய் பேயாய் அலையராரு… அவருக்கே ஒன்னும் கிடைக்கல்ல…” என்று நக்கலாக சிரித்தான் அந்த அரசியல்வாதி! அந்த சம்சாரி நிவராணம் கேட்டு நொந்து நூலாகி இருந்ததை அவர் இருந்த கோலம் காட்டிக் கொடுத்தது.

மனக்கசப்புடன் இந்த சுண்டைக்காய் பணத்தில் குடிசையை மீண்டும் கட்டுவது எப்படி என்று சிந்தனையுடன் வீட்டை அடைந்தான். அவனது மகள் சிறிய பலா கன்னை பழைய மரம் இருந்த இடத்தில் நட்டு தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்தாள்.

அவனது கவலை அனைத்தும் அந்த கணம் மறந்து போனது. அளவற்ற ஆனந்தத்துடன் குட்டி பெண்னை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டான். அவள் கைகளிலும், கன்னத்திலும் ஒட்டி இருந்த மண்ணில் புயலில் வீழ்ந்து போன அந்த பலா மரத்தின் தீச்சுவை பால் வாசனை கமகமவென்று மணந்து கிடந்தது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *