தி ரிவன்ச்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 7,474 
 

ஆள்அரவமற்ற அந்த முட்டுச்சந்தில் பெரியவர் ஒருவர், தன் நெஞ்சில் கை வைத்துக்‍ கொண்டு வானத்தில் எதையோ பார்த்தபடி 3 சுற்று சுற்றி சுற்றினார். ஏதோ கருடனை பார்த்து பக்‍திப் பரவசத்தில் சுற்றுகிறாரோ என்று நினைத்து முடிப்பதற்குள் பொத்தென்று கீழே விழுந்தார். ஒரு பெரிய மனிதர் நெஞ்சு வலியால் துடித்தபடி கீழே விழுகிறார் என்பதை கூட உணர முடியாத மடையனாக மாறிவிட்டோமே என்பதை நினைத்துப் பார்க்‍கையில் என்னையே எனக்‍கு பிடிக்‍கவில்லை. பின் 150 சிசி பல்சர் வேகத்தில் ஓடி அருகில் சென்று பார்த்தால், அந்த முகத்தை எங்கோ பார்த்தது போல் இருந்தது. என் கால்கள் ஸ்லோமோஷனில் தயங்கி தயங்கி நின்றது.

ஐயோ தண்ணீர் தாகமாக இருக்‍கிறது என்று கூறி கீழே விழுந்து துடிக்‍கும் ஹிட்லரை, தண்ணீர் குவளையுடன் அவ்வழியே செல்லும் யூதன் ஒருவன் பார்க்‍க நேர்ந்தால் அவனுக்‍கு என்ன மனநிலை ஏற்படுமோ அதே நிலைமைதான் எனக்‍கும் ஏற்பட்டது.

அவர் பெயர் ரத்தினம்.

அவர் ஒரு காலத்தில் என் பள்ளி ஆசிரியர்

அவருக்‍கு இப்பொழுது ஏற்பட்டிருப்பது ஹார்ட் அட்டாக்‍ என்றால் அது இரண்டாவதாகத்தான் இருக்‍க வேண்டும். முதல் ஹாட் அட்டாக்‍ எப்பொழுது ஏற்பட்டது என்று எனக்‍கு நன்றாக நியாபகம் இருக்‍கிறது.

அன்றைய தினம் அவர் எனது பரீட்சை பேப்பரை திருத்திக்‍ கொண்டிருந்தார். கீழ்கண்ட அந்த பத்தியை படித்து விட்டுத்தான் அவருக்‍கு பத்திக்‍கொண்டு வந்ததாக என்னிடம் கூறினார்.
============

கோயில்களின் சிறப்பு:

தமிழகத்தில் நிறைய கோயில்கள் உள்ளன. அதுவும் தஞ்சை, கும்பகோணம் பக்‍கம் சென்றால் அங்கே நிறைய கோயில்களைக்‍ காணலாம். வீடே கோயில், தாயே தெய்வம் என்ற கூற்றை மறுக்‍கிறேன். ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை என் தாயே எனக்‍கு எதிரி. “ஜீ” படத்தில் கோயில்கள் பற்றி எங்கள் தலை ‘அஜீத்” ஒரு பாட்டு பாடியுள்ளார்.

“டிங் டாங் கோயில் மணி, கோயில்
மணி நான் கேட்டேன்”

இப்பாடலடி எனக்‍கு அவ்வளவுதான் தெரியும், அரையாண்டுத் தேர்வில் கண்டிப்பாக இந்த பாடலை முழுதாக எழுதிவிடுவேன் என்று நம்பிக்‍கை தெரிவிக்‍கிறேன்.

==============
மதிப்பெண்கள் கொடுக்‍க விருப்பமில்லையென்றால் அது அவரது சொந்த விருப்பம். அவரது சொந்த விஷயங்களில் நான் தலையிடப் போவதில்லை. ஆனால் ஒரு சிறுவன் என்று கூட பார்க்‍காமல் கொலை வெறியுடன் கையில் பிரம்பை எடுத்துக் கொண்டு ஓட ஓட விரட்டி விரட்டி அடித்தாரென்றால் அதில்………. என்ன……… நியாயம்……… இருக்‍கிறது.

அக்‍காலத்து புலவர்களுக்‍கு எல்லாம், எளிதாக புரிந்து கொள்கிற மாதிரி பாடல் எழுத வரவில்லையென்றால் அது என் தவறா? இக்‍காலத்து புலவர்களின் திறமையும், வல்லமையும் அவர்களுக்‍கு இல்லை. தமிழ்பாடல் என்று சொல்லி, ஏதோ ஒரு மொழியில் எழுதிவைத்திருக்‍கிறார்கள். வேறு எந்த மொழியிலாவது இதைப் போன்ற தொல்லை இருக்‍கிறதா? நிச்சயமாக இருக்‍காது. அடுத்த முறை வேறு மொழி பேசும் நாட்டில் பிறக்‍க வேண்டும் என்று அன்று நான் முடிவு செய்தேன். கடவுள் புண்ணியத்தில் நண்பன் படத்தில் வரும் விஜயை போல புத்தகத்தையே தொடாமல் நன்றாகப் படித்து இன்று ஒரு விஞ்ஞானியாக இருக்‍கிறேன். ஆம் விஞ்ஞானியாக இருக்‍கிறேன். ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் எல்லாம் என்னை தேடிக்‍ கொண்டிருக்‍கிறார்கள். ஒரு அப்பாய்ன் மென்ட்டுக்‍காக தவமிருக்‍கிறார்கள். (கடைசியாக கவிழ்ந்த க்‍ரயோஜெனிக்‍ ராக்‍கெட்டுக்‍கும் எனக்‍கும் எந்த சம்பந்தமும் இல்லை). அடுத்தபடியாக நாசா விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற இருக்‍கிறேன்.

ஆனால் கடவுள் என்று ஒருவர் நிச்சயமாக இருக்‍கிறார். இல்லையென்றால் என் மனதில் அரித்துக் கொண்டிருந்த அந்த 4 கேள்விகளை கேட்க என் மாஜி ஆசிரியரை என் கண் முன் வந்து நிற்கச் செய்வதற்கு எந்த சக்‍தி காரணமாக இருக்‍கப் போகிறது.

நெஞ்சுவலியில் துடித்துக் கொண்டிருந்த அவருக்‍கு ஒரு வணக்‍கம் சொல்லிவிட்டு, என் மனதை குடைந்து கொண்டிருந்த அந்த கேள்விகளை மடை திறந்த வெள்ளம் போல அவரிடம் கொட்டினேன். அவர் அந்த வலியிலும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சேரன் படித்தில் வரும் ஆசிரியர் போல கண்ணாடியைக் கீழே இறக்‍கிவிட்டு என்னை உற்றுப் பார்த்தார்.

=======================

என்னை உங்களுக்‍கு நியாபகம் இருக்‍கிறதா?,

மண்டையை இட வலமாக ஆட்டினார்.

உங்களுக்‍கு சில விஷயங்களை நியாபகப்படுத்த வேண்டும்.

மண்டையை மேலும் கீழும் ஆட்டினார்.

என்னுடைய மோசமான கடந்தகாலத்தை அவருக்‍கு நியாபகப்படுத்தினேன். அவர் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது. நான் அவரை காப்பாற்றப் போவதாக முழுமையாக நம்பினார். ஆனால் வில்லத்தனமாக அவரை கடந்த காலத்துக்‍கு கூட்டிச்சென்றேன்.

=============

எனது வசனம்

உங்கள் மனைவி மீது உள்ள கோபத்தைத் தானே அன்று என் மீது காட்டுனீர்கள். இந்த உண்மையை ஒத்துக்‍ கொண்டால்தான் ஹார்ட் அட்டாக்‍கில் துடித்துக்‍கொண்டிருக்‍கும் உங்களை மருத்துவமனைக்‍கு தூக்‍கிச் செல்வேன். உண்மையை ஒத்துக்‍ கொள்ளுங்கள், வலித்துக்‍ கொண்டிருக்கும் உங்கள் இதயத்தின் மீது கை வைத்து சொல்லுங்கள், உங்கள் சைக்‍கோத்தனத்தையெல்லாம் மாணவர்கள் மீது காட்டிவிட்டு, மாணவர்களின் ஒழுக்‍கத்தை வளர்க்‍கத்தான் நான் பாடுபடுகிறேன் என்று சுதந்திர தினத்தன்று மேடையில் கூறியது எல்லாம் பச்சைப் பொய் என்று என் கையில் அடித்து சத்தியம் செய்யுங்கள். இல்லையென்றால் பச்சைத்தண்ணீர் கூட குடிக்‍க கொடுக்‍க மாட்டேன்.

ஒருவேளை இந்த ஊரில் உள்ள பலநூறு மருத்துவர்களில் யாராவது ஒரு எம்.பி.பி.எஸ். உறுப்படியாக படித்து அரியர்ஸ் இல்லாமல் முடித்த மருத்துவர் இருக்‍கலாம். ஏதோ ஒரு நல்ல சக்‍தியால் உந்தப்பட்டு, தெரியாத்தனமாக நான் உங்களை அவரிடம் அழைத்துச் செல்லலாம், அவரும் போராடி மருத்துவம் பார்த்து உங்களைக்‍ காப்பாற்றலாம். ஆனால் இவையெல்லாம் நடக்‍க ஒரு சதவிகிதம் தான் வாய்ப்பு உள்ளது. என்னிடம் உண்மையைக்‍ கூறினால் நான் அத்தகைய நல்ல மருத்துவரைக்‍ கண்டுபிடித்து உங்களை அங்கே அழைத்துச் செல்வேன். உண்மையை ஒத்துக்‍ கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால், எனக்‍குக்‍ கவலையே இல்லை, ஏதாவது ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றுவிடுவேன். நிறைய வாய்ப்பிருக்‍கிறது. நாம் இருக்‍கும் இந்தத் தெருவைச் சுற்றி நிறைய மருத்துவர்கள் இருக்‍கிறார்கள். வாய்ப்புகளை நம்புங்கள். நீங்கள் கொல்லப்படுவதற்கு நிறைய வாய்ப்பிருக்‍கிறது. இந்த கொல்லப்படுதல் இங்கு சகஜமாக நடக்‍கும் விஷயம்தான். ஒரு வேளை நீங்கள் மயக்‍கத்தில் கூட இருக்‍கலாம். நீங்கள் செத்துவிட்டீர்கள் என்று கூறி புதைத்துவிடுவார்கள் ஜாக்‍கிரதை. இதுதான் சமயம். உண்மைகளை ஒத்துக்‍ கொள்வதற்கு இதைவிட வேறு உகந்த தருணம் கிடைக்‍காது.

சில வருடங்களுக்‍கு முன்னர் உங்கள் கட்டை விரலில் நீளமாக வளர்த்திருந்த நகத்தைக்‍ கொண்டு என் காதுகளில் ஓட்டை போட்டீர்களே. நான் கூட கதறித் துடித்தேனே. அன்று நான் விசாரித்தேன். உங்கள் மனைவியிடம் கடுமையாக சண்டை போட்டு வந்தீர்கள் என்று. க்‍விண்டன் டாரண்டினோவின் ஆங்கிலப்படத்தில் கூட அத்தகைய ஒரு வதையை நான் பார்த்ததில்லை. எல்லா மனிதர்களுக்‍குள்ளும் ஒரு குட்டி ஹிட்லர் ஒழிந்திருக்‍கிறான் என்று நான் சொல்கிறேன். இதை ஒத்துக்‍ கொள்கிறீர்களா? வாய்ப்பு கிடைத்தால் திருப்பித் தாக்‍க இயலாத பள்ளி மாணவர்களிடம் தன்னுடைய சைக்‍கோத்தனத்தை காட்ட எந்த ஒரு ஆசிரியரும் தயங்குவதில்லை அப்படித்தானே. ஏன் அப்படி முறைத்துப் பார்க்‍கறீர்கள், உண்மை வலிக்‍கிறதா? அப்படித்தான் வலிக்‍கும். அது இன்னொரு ஹாட் அட்டாக்‍. அப்படித்தான் இருக்‍கும்.

மனிதனுக்‍கும் விலங்குக்‍கும் என்ன வித்தியாசம் தெரியுமா, சிரிப்பு இல்லை. விலங்குகள் தனது மகிழ்ச்சியை வாலை ஆட்டியோ, குதித்தாடியோ காட்டி விடும். மொழி அல்ல, விலங்குகள் மனிதனின் பாசையை புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டன. உங்களுக்‍கு புரியுமாறு சொல்லவா? மனிதனுக்‍குத்தான் இன்னொரு மனிதனை மதிக்‍கத் தெரியும். விலங்குகளுக்‍கு இன்னொரு விலங்கை மதிக்‍கத் தெரியாது. இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் மனிதனா? விலங்கா?… என்றாவது ஒருநாள் ஒரு மாணவனை மதித்திருக்‍கிறீர்களா? நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள், வலித்தாலும் பரவாயில்லை. என்றாவது ஒருநாள் எந்தவொரு மாணவனையாவது மதித்திருக்‍கிறீர்களா? இல்லை என்று வாய் திறந்து சொல்லுங்கள். எதற்காக மதித்திருக்‍கக்‍ கூடாது. மதித்திருந்தால் என்ன நடந்திருக்‍கும். ஏதேனும் விரும்பத்தகாத, நடக்‍கக்‍ கூடாத செயல் நடந்திருக்‍குமா.

எனக்‍கு ஹாட் அட்டாக்‍ என்றால் என்ன என்று நன்றாகவே தெரியும். அப்பொழுது எப்படி வலிக்‍கும் என்றும் நன்றாகவே புரியும். எப்பொழுது தெரியுமா அதை உணர்ந்து கொண்டேன். வெட்கமே இல்லாமல் ஆசிரியர் தினத்தன்று பள்ளி அளவில் நல்ல ஆசிரியருக்‍கான பரிசைப் பெற்றீர்களே… அப்பொழுதுதான் நான் அந்த வலியை உணர்ந்தேன். நான் உட்பட ஏராளமான மாணவர்கள் அப்பொழுது ஹாட் அட்டாக்‍கின் அர்தத்தை புரிந்து கொண்டோம். கடவுள் நம்பிக்‍கையில்லாத நான் கடவுளே என்ன கொடுமை இது என்று வாய்திறந்து கதறினேன். அந்த பாவத்தைக்‍ கழுவுவதற்கான அரிய வாய்ப்பு இப்பொழுது உங்களுக்‍கு வழங்கப்பட்டிருக்‍கிறது. வாய்ப்பை பயன்படுத்திக்‍கொள்ளுங்கள் தயவுசெய்து ஒத்துக்‍கொள்ளுங்கள். நீங்கள் செய்த அக்‍கிரமங்களை, வெளியே தெரியாமல் ஆசிரியர் என்ற போர்வைக்‍குள் ஒளிந்து கொண்டு செய்த, சரியாக சொல்ல வேண்டுமானால் மொள்ளமாரித்தனங்களை, மூளையின் முன் பகுதியில் தான் மனிதனின் வன்முறை எண்ணங்கள் எல்லாம் உற்பத்தியாகும் என்று அறிவியல் அறிஞகர்ள் கூறுவார்களே, அங்கிருந்து வெளிப்பட்ட உங்கள் வன்முறை அசிங்கங்களை எல்லாம் ஒத்துக்‍கொள்ளுங்கள்,

ஜீசஸ் என்ன சொல்லியிருக்‍கிறார் தெரியுமா? உங்கள் பாவங்களை எல்லாம் ஏற்றுக்‍ கொண்டால் நீங்கள் மன்னிக்‍கப்படுவீர்கள். கடவுளின் வலதுபக்‍கம் நீங்கள் சேர்வீர்கள். ஒருவேளை சொர்க்‍கம், நரகம் என்றெல்லாம் இருந்தால் நீங்கள் சொர்க்‍கத்திற்கு செல்லலாம். இன்னும் சில நிமிடங்கள் தான் உள்ளன. என்ன சொல்கிறீர்கள். டீலுக்‍கு ஓ.கே. சொல்லுங்கள். நான் வீடியோவெல்லாம் எடுத்து அனைவரிடமும் போட்டுக்‍ காண்பித்து உங்களை அசிங்கப்படுத்த மாட்டேன். என்னை நீங்கள் முழுமையாக நம்பலாம். என்னிடம் மட்டும் ஒத்துக்‍ கொண்டால் போதும். வேறு எதுவும் செய்ய வேண்டாம். சரியா…. இதயம் வலித்தாலும் பரவாயில்லை, இவ்வளவு இதய வலிக்‍கு மத்தியிலும் உண்மையை ஒத்துக்‍ கொண்ட பின் ஒருவித சுமை இதயத்திலிருந்து இறங்கியது உங்களால் கண்டிப்பாக உணர முடியும்.

சரி அதையெல்லாம் கூட விடுங்கள் பரவாயில்லை. ட்யூசன் படிக்‍கும் மாணவர்களுக்‍கு எல்லாம் அரையாண்டுக்‍கு முன் பாடங்களை முடித்துவிட்டு, பள்ளியில் படிக்‍கும் மாணவர்களுக்‍கு பொதுத்தேர்வுக்‍கு 2 நாட்களுக்‍கு முன்னர்தானே பாடத்தை முடித்தீர்கள். பாடத்தை முடித்துவிட்டு என்னை யாரும் குறை கூறக்‍கூடாது என்று வேறு சொன்னீர்களே… உங்கள் மனசாட்சியை எந்த அடகுக்‍ கடையில் அடகு வைத்தீர்கள் என்று சொன்னால், என்ன விலை கொடுத்தாவது அதை மீட்டு வர வேண்டியது என் பொறுப்பு. ஆனால், எந்த முட்டாள் அடகுக்‍ கடைக்‍காரனும் உங்கள் மனசாட்சியை அடகுக்‍கு வாங்க முன்வந்திருக்‍க மாட்டான். என் சந்தேகம் என்னவென்றால் இல்லாத ஒன்றை அடகு வைக்‍க முடியாதே என்பதுதான்.

ஒன்றரை மணி நேர ட்யூசனில், அரையாண்டுக்‍கு முன் எல்லா பாடங்களையும் முடித்து, பொதுத்தேர்வுக்‍கு முன் 5 முறை பரீட்சை வைத்து எழுதி வாங்கி மாணவர்களை தயார் செய்ய முடிகிறது. ஆனால், ஒருநாளைக்‍கு 8 பீரியட் கொண்ட வகுப்பறையில் மட்டும் பொதுத்தேர்வு நாளை என்றால் இன்றுதான் பாடத்தை முடிக்‍கறீர்கள். உங்களுக்‍கு நன்றாகவே தெரிந்திருக்‍கிறது மாணவர்களை தயார் செய்வது எப்படி என்று. ஆனால் ட்யூசன் வராத மாணவர்களைதான் தயார் செய்ய மனது வரவில்லை. அப்படித்தானே. இப்படியெல்லாம் முறைத்து பார்த்தால் கண்ணாம்முழி இரண்டையும் நோண்டி விடுவேன் ஜாக்‍கிரதை… யாரெல்லாம் நல்ல மதிப்பெண் எடுக்‍க வேண்டும். யாரெல்லாம் மதிப்பெண் எடுக்‍கக்‍ கூடாது என்று நீங்களே முடிவு செய்துவிடுகிறீர்கள். ஆனால் ஊரில் உள்ளவர்கள் எல்லாம் என்ன நினைப்பார்கள் தெரியுமா? நன்றாக மதிப்பெண் வாங்குபவர்கள் எல்லாம் புத்திசாலி மாணவர்கள், மதிப்பெண் குறைந்தவர்கள் எல்லாம் முட்டாள் மாணவர்கள் என்றுதான் நினைப்பார்கள். அவர்களுக்‍கு என்ன தெரியும், பள்ளியில் டியூசன் என்கிற பெயரில் நடக்‍கும் அரசயில் தனங்கள் எல்லாம். சிறிது டியூசன் ஃபீசுக்‍காக எத்தனை மாணவர்களின் வாழ்க்‍கையில் விளையாடியிருக்‍கிறீர்கள். மனசாட்சி உறுத்தவில்லை. மனசாட்சி இல்லையென்றாலும் அந்த இடத்தில் குத்த வேண்டும். அதுதான் விதி.

இப்பொழுதாவது ஒத்துக்‍கொள்ளுங்கள் நான் செய்தது எல்லாம் தவறுதான் என்று. பெரிய வேதாந்தி போல விளக்‍கம் அளிக்‍க இது நேரமில்லை. இந்த நேரத்தில் நடிக்‍கவும் உங்களால் முடியாது. ஒரே விஷயம் மட்டும்தான் உங்களால் செய்ய முடியும். தயவு செய்து நீங்கள் செய்த தவறையெல்லாம் ஒத்துக்‍ கொள்ளுங்கள். ஒரு மோசமான ஆசிரியர் தன் தவறையெல்லாம் ஒத்துக்‍ கொண்டார் என்று நாளைய சரித்திரம் உங்களைப் புகழும். உங்களை இந்த உலகம் ஏற்றுக்‍ கொள்ளும். ஒரு மோசமான ஆசிரியராக செத்துப் போய் விடாதீர்கள். முட்டாள் தமிழ் சினிமா வில்லனைப் போல் செத்துப் போவதற்கு முன் எந்த வசனமும் பேசி விடாதீர்கள். இறந்தபின் மண்டையிலேயே கொட்டுவேன். சாபம் விடுவேன். பலிக்‍கவில்லை என்றால் யாராவது ஒரு பத்தினியைத் தேடிப்பிடித்த சாபம் கொடுக்‍கச் செய்வேன். பத்தினி சாபம் பலிக்‍கும் தெரியுமா?… உங்கள் மனைவியை அழைத்து வந்தே சாபம் கொடுக்‍கச் செய்வேன். அப்பொழுது நம்புவீர்கள் தானே, உங்கள் வாழ்க்‍கை முழுவதும் உங்களை சபித்து, சபித்து சலித்து போயிருக்‍கலாம். இருப்பினும், இப்படியொரு வாய்ப்பு இன்னொரு முறை உங்களுக்‍கு வாய்க்‍காது என்கிற இமாலய உண்மையை எப்பாடுபட்டாவது அவருக்‍குப் புரியச்செய்து, அந்த பெண்மணியை சபிக்‍கச் செய்வேன். அதுவும் போதவில்லை என்றால் நரகத்திலும் உங்கள் மனைவியாக இருக்‍கும் வரத்தை உங்களிடம் கேட்கச் செய்வேன். அப்படியொரு வரம் கேட்கப்படும் பொழுது உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் அந்நேரம் இந்த பூமியில் உங்கள் கடைசி விநாடியாகக்‍ கூட இருக்‍கலாம்.

மதிப்பி்றுகுரிய ஆசிரியரே, நீங்கள் உண்மையை ஒத்துக் கொண்டால் உங்களை எனது இருசக்‍கர வாகனத்தில் உட்காரவைத்து, சந்து, பொந்து என கிடைக்‍கும் வழியில் எல்லாம் புகுந்து சரியான நேரத்தில் உண்மையான மருத்துவரிடம் அழைத்துச் செல்வேன். எனக்‍குத் தெரியும் இங்கிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உண்மையான ஒரு மருத்துவர் இருக்‍கிறார். போலி மருத்துவர்களை அரசாங்கம் கலையெடுத்த பொழுது கூட அவர் தனது மருத்துவமனையை திறந்தே வைத்திருந்தார். நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என முரண்டு பிடிப்பீர்களேயானால், ஆம்புலன்சுக்‍கு போன் செய்து விடுவேன் ஜாக்‍கிரதை.

=======================

அவர் வெகு நேரமாக உற்றுபார்த்துக் கொண்டிருந்தார். அவர் எனனைப் பார்க்‍காமல் எனக்‍குப் பின்னால் பார்த்துக் கொண்டிருந்தார். பின்புதான் புரிந்தது அவர் பார்வை நிலைகுத்திவிட்டது என்று. நான் ஒரு கொலைகாரன் என்கிற பட்டத்தை சுமக்‍க விரும்பாத ஒரே காரணத்தால் அவரை அருகில் இருந்த ஒரு மயானத்திற்கு….. மன்னிக்‍கவும், மருத்துவமனைக்‍கு அழைத்துச் சென்றேன். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்கிற வாசகத்தை 99 சதவிகிதமும், காட் இஸ் கிரேட் அவர் பொழைச்சுக்‍கிட்டார் என்கிற வாசகத்தை 1 சதவிகிதமும், இல்லை 0.1 சதவிகிதமும், இல்லையில்லை 0.001 சதவிகிதமும் சத்தியமாக எதிர்பார்த்தேன். நிச்சயமாக அவருக்‍கு எண்ட் கார்ட் போடப்போவது நானில்லை. சட்டப்படி மருத்துவர் தான் ‘எ ஃபிலிம் (டெத்) பை டாக்‍டர். ……. என்று தனது பெயரை பதிவுசெய்து கொள்வார் என்று உறுதியாக நம்புகிறேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *