திரைச்சீலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 7,982 
 
 

காலை 8.30 மணி……

“ஏண்டி மீனாட்சி…..வீட்டுக்குள்ளே துணி துவைக்காதேனு இங்க வரும்போதே சொன்னேன்ல”

வாயில் பான்பராக்கை குதப்பி புளிச்சென்று செம்மண் தரையில் துப்பியவாறு உரக்கக் கத்தினாள் அந்த தடிமனான பெண்மணி. வீடு என்று அவள் கூறியது பத்துக்கு பத்தடி சின்ன குடிசையை. நகரத்தைவிட்டு ஒதுக்குப்புறமாக கருவேலமுள் மரங்களால் சூழப்பட்ட சற்றே மேடான செம்மண் நிலப்பரப்பில் சுமார் இருபது குடிசைகள் இருந்தன. ஒழுங்கே இல்லாமல் அவரவர் விருப்பப்படி குடிசை போட்டிருந்தார்கள். அனைத்து குடிசை வாயில்களிலும் கதவு என்ற பெயரில் சாக்கு திரைச்சீலையாக தொங்கிக்கொண்டிருந்தது. அப்பகுதியின் ஒரு ஓரத்தில் பெரிய ஆலமரம். அதனருகே பெரிய குழி வெட்டியிருந்தார்கள். குடிசைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சிறுசிறு வாய்க்கால் மூலம் அக்குழியில் சென்று சேரும். தற்போது அந்த குழி நிரம்பி நாற்றமடிக்க தொடங்கியிருந்தது.

அது ஒரு பாலியல் தொழில் செய்யும் இடம்.

மீனாட்சி என்பவள் ஒரு வாரம் முன்புதான் அங்கு வந்திருந்தாள். தமிழக எல்லையை ஒட்டிய ஆந்திர கிராமத்தில் பாலியல் தொழில் செய்து கொண்டிருந்தவள் அங்கு ரௌடிகள் தொல்லை தாங்காமல் இங்கு வந்திருந்தாள்.

“ஒரு புடவைதாக்கா இருக்கு….அதனாலதான் வீட்டுக்குள்ளே துவைச்சி காயப்போட்டிருக்கேன்”

ஆங்காங்கே கிழிசலுடன் முழங்கால்வரை தொங்கிய சட்டையுடன் அவளது ஐந்து வயது மகன் குடிசை வாசலில் விளையாடிக்கொண்ருந்தான்.

மதியம் 1.30 மணி

அங்கு பாலியல் தொழில் செய்யும் அனைவருக்கும் வருமானமே வாடிக்கையாளர்கள் தரும் டிப்ஸ்தான். காலையிலிருந்து தற்போதுவரை வந்த இரண்டு வாடிக்கையாளர்கள் அவளுக்கு தந்த அன்பளிப்பு மதிய உணவுக்கு போதுமானதாக இருந்தது. கருவேலமுள் மரங்களின் ஊடே நீண்டிருந்த ஒற்றையடிப்பாதையில் நகரத்தின் பிரதான சாலையை நோக்கி நடக்கத்தொடங்கினாள். பின்னாலாயே அவளது மகனும் வந்துகொண்டிருந்தான்.

இரண்டு பிரியாணி பொட்டலங்களை வாங்கிக்கொண்டு திரும்பிக்கொண்டிருக்கையில் ஒரு வாரமாக அவளுடன் பழகிய நாய் சாப்பிட்டுவிட்டு போடும் மீத உணவுக்காக வாலாட்டியபடி அவளுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது.

இரவு 7.30 மணி

சாக்கை விலக்கிக்கொண்டு ஒரு வாடிக்கையாளர் உள்ளே வருவதைப் பார்த்தாள். வந்தவர் சற்று வயது கூடுதலாக இருப்பவர்போல் தோன்றினாலும் வாட்ட சாட்டமாகவும் வசதியானவராகவும் இருப்பது குடிசையின் ஒரு மூலையில் மினுக்மினுக்கென எரிந்த சிம்னி விளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது. எப்படியும் இவரிடம் நிறைய அன்பளிப்பு வாங்கி ஒரு புடவையும் மகனுக்கு சட்டையும் வாங்கிவிடவேண்டும் என உள்ளுர நினைத்துக்கொண்டு

“வாங்க” கொஞ்சும் குரலில் அழைத்து அவரது கன்னத்தில் முத்தமிட்டாள். வந்தவர் நெகிழ்ந்துபோனார். கீழே விரிக்கப்பட்டிருந்த பழைய பாயில் அமர வைத்துவிட்டு

“உங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வரவா” என வினவினாள்.

“இரண்டு பீர் வாங்கிக்கினு அப்படியே உனக்கும் ஏதாச்சும் வாங்கிக்கோ”

கூறிக்கொண்டே பர்சிலிருந்து இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்து நீட்டினார். மகிழ்ச்சியாக வாங்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக மூத்திரம் நாற்றமடிக்கும் அந்த ஒற்றையடிப்பாதையில் விரைந்தாள். நான்கு பீர்களும் இரவு உணவும் வாங்கிக்கொண்டு திரும்புகையில் காலையில் திட்டிய பெண்மணி ஆள் பிடிப்பதற்காக நின்றிருந்தாள்.

“எங்கேடி போய்ட்டு வர”

“சாப்பாடு வாங்க போனேங்கா’

பையிலிருக்கும் பீர் பாட்டிலை பார்த்துவிட்டால் பிடிங்கிக்கொள்வாள் என ஓடத்தொடங்கினாள் பாதத்தில் முள்குத்தியதையும் பொருட்படுத்தாமல் குடிசையை நோக்கி. குடிசையை நெருங்குகையில் கவனித்தாள். கதவு என்ற பெயரில் தொங்கிக்கொண்டிருந்த திரைச்சீலை சாக்கை காணோம்.

உள்ளே உட்கார்ந்திருந்த அவரிடம் வினவியபடி சுற்றிலும் பார்த்தாள். சற்று தூரத்தில் மதியம் அவளுடன் வந்த நாய் சாக்கை கடித்து குதறி உருண்டு புரண்டு விளையாடிக்கொண்டிருந்தது. உள்ளே நுழைந்து

“என்னங்க பீரை கிளாஸில் ஊற்றித் தரவா”

“சரிம்மா……வாசலில் மறைப்பு இல்லாமல் இருக்கு…..ஏதாவது தொங்கவிடு”

குடிசைக்குள் ஒன்றுமே இல்லை. தான் கட்டியிருந்த ஒரே புடவையை அவிழ்த்து அவரிடம் தந்தாள். வாசலில் திரைச்சீலையாக தொங்கவிட்டுவிட்டு அவளருகே வந்தமர்ந்தார்.

“இன்னுமா பீரை ஊற்றல”

பதில் பேசாமல் குட்டை சுவற்றில் வெறும் ஜாக்கெட் பாவாடையுடன் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். மிக அருகே சென்றார். அப்பொழுதும் அவள் அசைவில்லாமல் இருப்பதைக்கண்டு ஏதோ விபரீதம் என உணர்ந்தார். செல்போனில் டார்ச்சை ஆன் செய்து முகத்தருகே கொண்டு சென்றார். கடைவாய் ஓரம் வெள்ளையாக நுரை தள்ளியிருந்தது. முழுவதும் ஆராய்ந்தபோது கால் பாதத்தில் சிறிது ரத்தக்கசிவுடன் இரண்டு கரும்புள்ளிகள் அவளை பாம்பு கடித்திருப்பதை உறுதி செய்தது. கையை தொட்டுப்பார்த்தாள். சில்லிட்டு அவள் இறந்து விட்டிருப்பதை பறைசாற்றியது. அரைமணி நேரமே அவளைத்தெரிந்திருந்தாலும் அடக்கமுடியாமல் அவரையும் மீறி கண்களில் நீர் வழிந்தது. வாசலில் திரைச்சீலையாக தொங்கிக்கொண்டிருந்த அவளது சேலையை அவிழ்த்து அவள் மேல் போர்த்தினார். திரைச்சீலையாக பயன்பட்ட அவளது புடவை தற்போது அவளுக்கே கோடித்துணியானது.

இதை எதையுமே அறியா அவள் மகன் யாரோ கடித்து கீழே போட்டிருந்த கொய்யாப்பழத்தை எடுத்து வந்து குடிசை வாசலில் நின்று கடித்துக்கொண்டிருந்தான்.

தூரத்தே ஒரு பாட்டு சத்தம்

“மாடி வீட்டு ஜன்னல் கூட சட்டை போட்டிருக்கு

சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமாயிருக்கு”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *