திருடர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 8,365 
 

என்னை ஆப்பிரிக்காவுக்கு அழைத்த கம்பனியில் நான் சேர்ந்த ஒன்றிரண்டு வாரங்களுக்குள்ளாகவே அங்கே பெரிய திருட்டுகள் நடப்பதை கண்டு பிடித்தேன். கண்டுபிடித்தேன் என்றால் திருடர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கவில்லை. களவுகள் நடப்பதை ஊகித்தேன். ஆப்பிரிக்காவில் பிரிட்டிஷ்காரரால் ஆரம்பிக்கப்பட்ட மரம் ஏற்றுமதிசெய்யும் கம்பனி அது. காட்டுமரங்களை வெட்டி அதில் நல்ல மரங்களை இங்கிலாந்து, ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளுக்கு அனுப்பும் வியாபாரம். மீதி மரங்களை உள்நாட்டில் விற்றார்கள். இன்னும் சில மரங்களில் தளவாடங்கள் செய்தார்கள். இந்தக் கம்பனியில்தான் பிரதம கணக்காளராக எனக்கு வேலை கிடைத்திருந்தது.

ஆப்பிரிக்கா எனக்கு புதியது. அந்த நாட்டவர்கள் பற்றியும், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் பற்றியும் ஒன்றுமே தெரியாது. ஆனாலும் பள்ளத்தாக்கில் யானைக்கூட்டம் இறங்குவதுபோல படபடவென்று இறங்கி கம்பனி நிர்வாகத்தில் பல மாற்றங்களை செய்ய ஆரம்பித்தேன். புதிய விதிகளையும், கட்டுப்பாடுகளையும் புகுத்தினேன். கணக்குகளை விரிவாக்கினேன். புதியவர்களை நியமித்ததுடன் பழையவர்களுக்கும் கடும் பயிற்சி அளித்தேன். அப்பொழுதுதான் எனக்கு ஒரு விசயம் உறைத்தது.

இந்தக் கம்பனி பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் தொடங்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற பிறகு சியாரா லியோன் அரசும் கம்பனியில் கணிசமான முதலீடு செய்திருந்தது. நவீனரக மெசின்களும், கருவிகளும் நிறைத்திருந்த தொழிற்சாலையை, ஆங்கிலேயர்களும், டச்சுக்காரர்களும், ஸ்வீடன்காரர்களும் மேற்பார்வை செய்தார்கள். முதல்தரமான பயிற்சிபெற்ற ஆயிரக்கணக்கான ஊழியர்கள்; வெட்ட வெட்டக் குறையாத காடு. அப்படியிருந்தும் கம்பனி வருடா வருடம் நட்டத்தில் ஓடியது. காரணம் திருட்டு.

ஆப்பிரிக்காவின் சகல தளங்களையும் திருட்டு ஆக்கிரமித்திருந்தது. ஆகப்பெரிய அதிகாரியில் தொடங்கி கடைநிலை ஊழியரில் முடிந்தது. மிகச்சிக்கலான முறையில் நடந்த களவுகள் அல்ல. மிக எளிய முறையில் அவை நிறைவேற்றப்பட்டன. பெரிய திருட்டுகள்; சிறிய திருட்டுகள். ஆயிரம் மரங்கள் வெட்டினால் 900 மரங்களே வந்து சேர்ந்தன. 500 மரங்களை விற்று அதற்கான விலைபட்டியல் போட்டால் 600 மரங்கள் வெளியே போயின. கடன் வாங்கியவர்கள் பெயர்களை தட்டச்சு செய்தால் அது நீண்டுகொண்டே போய் 15 – 20 பக்கங்களை நிரப்பியது. அந்தப் பெயர்களில் ஜனாதிபதியின் பெயரும் உப ஜனாதிபதியின் பெயரும் இருந்தன. அவர்கள் கட்டவேண்டிய கடன் தொகையை வசனமாக எழுதினால் அதன் நீளம் அவர்களுடைய பெயர்களிலும் பார்க்க நீண்டதாக இருந்தது. மாதா மாதம் கடன் தொகையை கேட்டு கடிதங்கள் போகும். அந்தக் கடிதங்களின் தபால்தலை செலவுகூட எங்களுக்கு வந்து சேரவில்லை.

நான் வேலையில் சேர்வதற்கு முன்னரே எனக்கு ஓர் அந்தரங்கக் காரியதரிசியை நியமித்திருந்தார்கள். இந்த விசயத்தில் என்னிடம் ஆலோசனை கேட்கவேண்டும் என்று ஒருவருக்கும் தோன்றவில்லை. என்னுடைய பணியில் அந்தரங்கமான பல கூறுகள் இருந்ததால் அவர்கள் நியமித்தது சரி என்றே நினைத்தேன். காரியதரிசிப் பெண் இளமையானவள். கண்களில் ஒரு தந்திரம் இருந்தது. ஒரு வேலையைக் கொடுத்தால் அதை ஒரே மூச்சில் செய்து முடிக்கும் திறமை கொண்டவள். சுருக்கெழுத்து குறிப்பேட்டுடன் எனக்கு முன் நிற்கும்போது குதிக்காலில் சுழன்றுகொண்டு நிற்பாள். ஆனால் எனக்கு தேவையான நேரம் அவளைக் கண்டுபிடிக்கமுடியாது. அவளுடைய ஆசனத்தில் உயிர்போனாலும் தரிக்கமாட்டாள். பத்தாயிரம் சதுர அடிகள் கொண்ட அந்த அலுவலகத்தில் அவள் எங்காவது மிதந்துகொண்டிருப்பாள். அவளைத் தேடிப் பிடிப்பதற்கு இன்னொருவரை நியமிக்கவேண்டும். அவள் மறைந்து விடுவதும் அவளைத் தேடிப் பலர் அலைவதும் நாளாந்தம் நடக்கும்.

என்னுடைய முக்கியமான பணிகளில் ஒன்று மாதாந்திர அறிக்கை தயாரிப்பது. இது பல அந்தரங்க தகவல்களை அடக்கியது. ஆசனத்தில் தரித்திருக்கும் சமயங்களில் இந்த அறிக்கையை காரியதரிசிப் பெண் தட்டச்சு செய்துதருவாள். நான் அறிக்கையை முடித்து முதன்மை இயக்குனருக்கும் மற்றவர்களுக்கும் அனுப்பிவைப்பேன். ஆனால் அறிக்கையை படித்துப் பார்க்காமலே முதன்மை இயக்குனர் பல அந்தரங்கமான தகவல்களை எனக்குச் சொல்லுவார். எனக்கு வியப்பான வியப்பு. எப்படி இவருக்கு இதுவெல்லாம் எனக்கு முன்பே தெரிந்திருக்கிறது.

பல மாதங்கள் சென்ற பின்னர்தான் இந்தப் பெண் முதன்மை இயக்குனருடைய ஆசை நாயகி என்பது எனக்கு தெரிய வந்தது. என் அந்தரங்க அறிக்கைகளைத் திருடி அவள் கொடுக்கிறாள் என்பதையும் அந்தக் காரணத்துக்காகவே நான் வேலையை ஏற்பதற்கு முன்னரே அவள் நியமிக்கப்பட்டாள் என்பதையும் அறிந்தேன். ஓர் அந்தரங்க காரியதரிசியை முதலில் நியமித்துவிட்டு அதற்குப்பின்னர் அவளுடைய மேலாளரை நியமிக்கும் வழக்கம் அங்கே இருந்ததை நான் எப்படி அறியமுடியும்.

அந்தக் கம்பனிக்கு வெளிக் கணக்குப்பரிசோதகர் இருந்ததுபோலவே உள் கணக்குப்பரிசோதகர் ஒருவரும் இருந்தார். இவருடைய தொழில் நாளாந்தம் கணக்கு விவரங்களை ஆராய்வது. வங்கிக் கணக்குகளையும், விற்பனை விபரங்களையும் திரட்டி சரிபார்த்து அறிக்கைகள் தயாரிப்பது. பெயர் ம்பயோ. வயது ஐம்பது இருக்கும். பார்ப்பதற்கு உருண்டையாக இருப்பதால் சிரிக்கும்போது அவர் கண்கள் மறைந்துவிடும். கையை எடுத்து வீசினார் என்றால் ஒரு இலையான்கூடப் பறக்காது. சாதுவான மனுசர். இவருக்குப்போய் உள்கணக்குப் பரிசோதகர் வேலையை யாரோ கனவான் கொடுத்திருந்தார். இவர் நடக்கும்போது ஆகக்கடைசியான துப்புரவுத் தொழிலாளிகூட அவர் பின்னால் நெளிந்து நெளிந்து பழிப்புக் காட்டுவான்.

வழக்கமாக ஒரு கம்பனியில் உள் கணக்குப்பரிசோதகர் நடந்துபோனால் சக அலுவலர்கள் ஒடுங்குவார்கள். இங்கே அவரை ஒருவரும் லட்சியம் செய்வதில்லை. அவருடைய நீண்ட அறிக்கைகள் அந்தரங்கம் என்று மேலே கொட்டை எழுத்தில் எழுதி அடிக்கோடிட்டு வரும். இரண்டு கார்பன் தாள் வைத்து மூன்றே மூன்று நகல்களை அவரே தட்டச்சு செய்து விநியோகிப்பார். ஒன்று முதன்மை இயக்குனருக்கு, ஒன்று எனக்கு இன்னொன்று அவருக்கு. ரிப்பனை சரியாக மாட்டாதபடியால் எழுத்துக்கள் எல்லாம் கறுப்பும் சிவப்புமாக கலந்து கிடக்கும். மேலே அந்தரங்கம் என்று போட்டிருக்குமே ஒழிய அந்த அறிக்கையில் அந்தரங்கமாக ஒன்றுமே இல்லை. அவர் வேலைசெய்த 17 வருடங்களில் ஒரு திருட்டைக்கூட அவர் கண்டுபிடித்ததில்லை.

அவர் நடந்து வந்தாலே சிரிப்பு வரும். நடப்பதை நிறுத்திய பிறகும் தொந்தி மேலும் கீழுமாக அசைந்துவிட்டு நிற்கும். இந்த ம்பயோதான் ஒருநாள் என்னை தன்வீட்டுக்கு விருந்து சாப்பிட அழைத்தார். ஆப்பிரிக்க வாழ்க்கையில் என்னை விருந்துக்கு முதல் அழைத்தவர் அவர்தான். அப்பொழுது என் மனைவியும் வந்து சேர்ந்துவிட்டதால் நானும் மனைவியும் அவர் வீட்டு விருந்துக்கு போனோம். வீட்டிலே ம்பயோவைப் பார்த்த நான் திடுக்கிட்டுவிட்டேன். ஆள் முற்றிலும் மாறியிருந்தார். ஆப்பிரிக்க அரசர்போல உடையணிந்திருந்தார். அவருடைய மூதாதையரில் ஒருவர் சிற்றரசராக இருந்தவராம். அவருக்கு ஏழு பிள்ளைகள். அவர்கள் அத்தனைபேரும் ம்பயோ சொல்லும் கட்டளைகளை நிறைவேற்றக் காத்துக் கொண்டிருந்தனர். அவர் வீட்டு வாசலிலேயே ஒரு பையன் அவர் கழற்றிவிட்ட செருப்பை, பாதுகையை தூக்குவதுபோன்ற மரியாதையுடன் காவிப் போனான். இன்னொரு எட்டு வயதுச் சிறுவன் ம்பயோ போகும் இடங்களுக்கெல்லாம் அவர் பின்னாலே ஒரு பரம்பரை முக்காலியை தூக்கிக்கொண்டு திரிந்தான். அவர் இருக்கவேண்டும் என்று தோன்றும்போது கீழே வைத்தான். அவர் அரச முக்காலியில் மட்டுமே அமர்ந்துகொள்வார். இன்னொரு சிறுவன் அவருக்கு விசிறினான். அவருடைய மனைவி அவருடைய வாயிலே இருந்து வார்த்தைகள் பிறந்து வெளியே வரமுன்னர் அதை நிறைவேற்ற துடித்தார்.

வீட்டிலே சிற்றரசர் போல வாழ்பவர் அலுவலகத்தில் ஏன் இப்படியாகிவிட்டார் என்பது புதிராகவே இருந்தது. அவரை நான் அலுவலகத்தில் ‘சிற்றரசர்’ என்றே அழைக்கத் தொடங்கினேன். அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஒருநாள் அவரிடம் வேலை எப்படி நடக்கிறது என்று கேட்டேன். அவர் கம்பனியில் எல்லாமே சுமுகமாகவும் நேர்மையாகவும் உன்னதமாகவும் நடப்பாதாக உத்திரவாதம் தந்தார். அவரைச் சுற்றி விசுவாசிகளும் நியாயவான்களும் சத்தியவான்களுமே இருந்தார்கள். அப்படியென்றால் மிகவும் நல்லது. ஒரேயொரு நாளைக்கு வெளியே போகும் நூறு லொறிகளில் ஒன்றே ஒன்றை தொழிற்சாலை வாசலில் பரிசோதிக்கும்படி வேண்டிக்கொண்டேன். அவரும் சம்மதித்தார். அப்படியே சோதனை நடத்தியபோது விலைப்பட்டியல் 210 மரங்கள் என்று சொன்னபோது லொறியிலே 240 மரங்கள் அகப்பட்டன. முப்பது மரங்கள் அதிகம்.

இந்தச் சம்பவத்தை நான் விவரமாக எழுதி அறிக்கை சமர்ப்பித்தபோது முதன்மை இயக்குநர் அதைப் படித்துப் பார்த்து ஆச்சரியப்படவில்லை. அவருக்கு இந்த விசயம் ஏற்கனவே தெரிந்திருந்தது. என்னுடைய அந்தரங்கக் காரியதரிசிப் பெண் மிகத் துரிதமாக அறிக்கையையும் திருடிவிட்டாள்.

திருட்டை விசாரிக்க உயர்தர விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. பத்து நாட்கள் விசாரணை நடந்தது. விலைப்பட்டியல் தயாரிக்கும் மன்ஸாரேயும், வாசல்காவல்காரனும் சேர்ந்து களவு செய்ததை ஒப்புக்கொண்டார்கள். காவல்காரன் ஒருநாள் திடீரென்று ஓடித் தப்பிவிட்டான். மன்ஸாரேக்கு அப்போதுதான் மணமாகி இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள். அவனை பொலீசில் பிடித்துக் கொடுக்காமல் மன்னித்துவிட தீர்மானித்தார்கள். ஆனால் அவனுடைய வேலை பறிபோய்விட்டது.

ம்பயோவின் சேவையை மெச்சி அவருக்கு ஒரு கடிதம் போனது. சம்பள உயர்வும் கொடுத்தார்கள். ஆனால் தென்துருவ பெங்குவின்போல கைகளை ஆட்டி அசைந்துவரும் ம்பயோ இப்போது இல்லை. மிகவும் சோர்வாகவும் துக்கமாகவும் காணப்பட்டார். கம்பனியில் எல்லோரும் அவரை வெறுத்தார்கள்; எதிரியாகவே நினைத்தார்கள். கம்பனி தொடங்கி அத்தனை வருடங்களில் திருட்டுக்காக பிடிபட்டு வேலை நீக்கப்பட்டது மன்ஸாரே ஒருவன்தான். அவன் திருட்டைக் காட்டிக் கொடுத்தது துரோகியான ம்பயோ. இது வரலாற்றில் மன்னிக்கமுடியாத குற்றம்.

மன்ஸாரே வேலை நீக்கப்பட்டு இரண்டு நாள் கழிந்த பின்னர் ம்பயோ என் அலுவலக அறைக்குள் அழாக்குறையாக பிரவேசித்தார். என்னவென்று கேட்டபோது வாயை திறந்தார் ஆனால் அழுகைதான் வந்தது. கடைசியாக ஒருவாறு தேற்றிக்கொண்டு சொன்னார். மன்ஸாரே அவனுடைய மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் அவருடைய வீட்டுக்கு குடிவந்துவிட்டான். அது எப்படி என்றேன். ‘உன்னால் என் வேலை போனது. ஆகவே என் குடும்பத்தைக் காக்கவேண்டியது உன் பொறுப்பு’ என்று மன்ஸாரே கூறிவிட்டான். அவனைத் துரத்தவேண்டியதுதானே என்றேன். ‘அது எப்படி? கிராமப் பஞ்சாயத்தில் இந்த முடிவு ஏற்கப்பட்டுவிட்டது. ஊர்க் கட்டுப்பாட்டை மீறமுடியாது, சேர்’ என்றான்.

மேலும் நாலு வருடங்கள் கழித்து ம்பயோ ஓய்வுபெற்றார். தொடர்ந்து 21 வருடங்கள் அவர் ஊழியம் செய்திருந்தாலும் அவருடைய வேலை வாழ்க்கையில் அவர் கண்டுபிடித்தது ஒரேயொரு திருட்டுத்தான். அந்த நாலு வருடங்களும் மன்ஸாரே அவன் குடும்பத்துடன் ம்பயோ வீட்டிலேயே தங்கியிருந்தான். அவனுடைய பிள்ளைகளின் எண்ணிக்கை ஒன்று கூடியிருந்தது. ‘சரி, நீர் ஓய்வுபெற்றுவிட்டீர். இனிமேல் என்ன செய்வதாய் உத்தேசம்?’ என்று ம்பயோவிடம் கேட்டேன். அவர் பிரச்சினை இல்லை சேர் என்றார். அவருடைய தம்பி ஒருத்தன் தலைநகரத்தில் பெரிய பதவியில் வசதியாக வாழ்ந்தான். அவனுடன் போய் தங்கப்போவதாகச் சொன்னார். குடும்பத்துடனா என்று திடுக்கிட்டு கேட்டபோது அவர் ஆமாம் என்று பதில் சொன்னார். அவர் குரல் ஒரு சிற்றரசருடையதுபோல கம்பீரமாக உயர்ந்திருந்தது.

‘மன்ஸாரே, அவன் கதி என்ன?’ என்றேன்.

‘உங்களுக்கு தெரியாதா, சேர்? அவனுக்கு இரண்டாவது மணம் முடிந்துவிட்டது. அவனுடைய புதுமனைவியிடம் ஒரு விவசாய நிலம் உண்டு. அவன் மனைவியும், மூன்று பிள்ளைகளும் புது மனைவி வீட்டில் போய் தங்குவார்களே’ என்றார்.

ஒரு நல்ல ராசா, ராணிக் கதைபோல எல்லாமே சிறப்பாக முடிந்தது. ஒரேயொரு குறை, கதையில் திருடர்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாகிவிட்டதுதான்.

– 2010-08-15

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *