தானசீலன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 24, 2021
பார்வையிட்டோர்: 3,641 
 
 

பாம் பாம்…பேருந்துகளின் ஹாரன் சத்தம், விர்ர்ரூம்..கிரீச்.. சர்ர்க்க்…டூ வீலர்களின் உறுமலும் பிரேக் சத்தமும் அந்த காலை நேரத்தை பரபரப்பாக்கி கொண்டிருந்தன. காலை ஏழு முப்பத்துக்கே வெகு வேகமாக இயங்க ஆரம்பித்து விடுகிறது கோவை மாநகரம். ஜெயன் மேன்ஷனை விட்டு வெளியே வந்தான், விக்ரம் மேன்ஷன் இரண்டடுக்கு மாடிகளை கொண்டது. மொத்தம் 21 ரூம்கள். கிரௌண்ட் ப்ளோர் ஏழு, முதல் மாடியில் ஏழு, இரண்டாம் மாடியில் ஏழு ரூம்கள். ஒரு ரூமில் இரண்டு பேர் தங்க மட்டுமே அனுமதி. நூறடி ரோடில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் பின்புறம் உள்ளதால் எப்போதுமே எந்த ரூமும் காலியாக இருந்தது இல்லை.

2002-இல் BE முடித்த பிறகு 2003-இல் இங்கு வந்து Nutshell Technologies நிறுவனத்தில் நெட்வொர்க்கிங் கோர்ஸ் முடித்து, படித்த இடத்திலேயே வேலை செய்து கொண்டிருக்கிறேன். இங்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது. கைக்கும் வாய்க்கும் சரியான சம்பளம். நேராக எதிரில் உள்ள வாசு அண்ணா டீக்கடைக்கு போனேன்.

ஏட்டா.. ஒரு கிங்ஸ் ஒரு கட்டஞ்சாயா..பத்து ரூபாயை கொடுத்து மீதி இரண்டு ருபாய் வாங்கி பாண்ட் பாக்கெட்டில் வைத்தேன். கிங்க்ஸை பற்ற வைத்து ஒரு இழுஇழுத்தேன்.

எடோ..இந்தா சாயா..வாசு அண்ணா மிதமான சூட்டில் டீ க்ளாசை டேபிள் மீது வைத்தார்.அது என்னமோ..இந்த கிங்க்ஸுடன் பிளாக் டீ அருந்துவது எப்போதுமே ஒரு சுகம். இரண்டையும் ரசித்து கொண்டே ரோடை பார்த்தேன். சூர்யா மெடிக்கல் பஸ் ஸ்டாப்பில் அப்போது தான் 53-ம் பஸ் வந்து நின்றது. 56+2, 60+2 இருக்கை கணக்கு எல்லாம் மலை ஏறி ரொம்ப நாளாச்சு.. வேணுமுன்னா..200+ இல்லை 300+ என்று பஸ்ஸில் எழுத வேண்டியது தான். பாபு (ஆபீஸ்மேட்) எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது. மக்கள் எப்பவுமே பாவம் தான்.

அண்ணா..என்று சத்தம் கேட்டு திரும்ப..தோ வந்துட்டாண்டா உன் ஆளு..வாசு அண்ணா கண் சிமிட்டினார். வின்சென்ட் நின்று கொண்டிருந்தான். இன்னொரு பத்து ரூபாயை நீட்டினேன்.

அவனுக்கு ஒரு டீ..ரெண்டு வடை என்றேன்.

ஏண்டா..நீயே காச மிச்சம் பண்ண கட்டஞ்சாயா குடிக்கிற..இதுல இவன் வேற..

விடுங்கண்ணே..போவும் போது எடுத்துக்கிட்டா போக போறோம்… சொல்லும் போது குரலில் ஏனோ ஒரு கர்வம் இருந்தது.

வின்சென்ட் எங்கள் மேன்ஷன் அருகில் இருக்கும் பைக் ஒர்க்கஷாப்பில் வேலை செய்யும் தினக்கூலி. பதிமூன்று வயது தான் இருக்கும். அவன் முதலாளி சரியாக சம்பளம் தர மாட்டார். ஒரு நாள் காலை பசி என்று வந்தவனுக்கு சாப்பிட வாங்கி தர, அதுவே பழக்கமாகி போனது.

நோக்கியா 1100 பாக்கெட்டில் அதிர்ந்தது. சோமேஷ் அழைக்கிறார்.

ஹலோ பாஸ்..குட் மார்னிங்..

எடோ..ஷார்ப்பா..எட்டு மணிக்கு ஆபீஸ் வந்துடு..

சரி என்று போனை வைத்தேன். வரேன்டா வின்சென்ட்..என்று சொல்லி விட்டு..என் சில்க்கை (ஹீரோஹோண்டாஸ்லீக்கைபாபுஅப்படிதான்சொல்லுவார் ) ஸ்டார்ட் செய்தேன்.

ஆஃபீசுக்குள் நுழையும் போது மணி எட்டு ஐந்து. சுகன்யா குட் மார்னிங் என்றாள். சுகன்யா, பவானி இரண்டு பேரும் டெலி சப்போர்ட் டீம். கஸ்டமருக்கு கால் செய்து எங்களின் வருகையை கன்பார்ம் செய்வார்கள். சுகன்யாவிடம் வழக்கமான புன்னகை மிஸ்ஸிங்.

பாஸ் வந்தாச்சா..

resource ரூமில் இருக்கிறார் என்றாள்.

வாடா..பங்க்சுவாலிடி..சோமேஷும், பாபுவும் சிரித்தனர்.

சொல்லுங்க பாஸ்..

இன்னைக்கு கணபதி இண்டஸ்ட்ரீஸ் போய் அங்க இருக்குற ஐஞ்சு மெஷின்லயும் Windows XP இன்ஸ்டால் பண்ணிடு. ஈவினிங் நீயும் பாபுவும்..பாலக்காடு போங்க..zion கம்பெனில பதினோரு மெஷின் ஆட்டோமேட்டிக் ரீஸ்டார்ட் ஆகுதாம். அன்றைய ப்ரோகிராம்மை தெரிந்து கொண்டு வெளியே வந்தேன்.

சுகன்யா!..சொல்லுங்க ஜெயன்..

Zion Solutions-க்கு நானும் பாபுவும் ஈவினிங் போறோம். அவங்க சிஸ்டம் அட்மின் யாரவது ஒருத்தர இன்னைக்கு ஈவினிங் ஒன்பது மணி வரைக்கும் இருக்க சொல்லுங்க…

சரி ஜெயன்!

அப்புறம் ஏன் ரொம்ப டல்லா இருக்கிறீங்க.. கேட்டதற்கு ஒரு கவலை தோய்ந்த சிரிப்பை உதிர்த்தாள்..

நேத்து என்ன பொண்ணு பக்க வந்தாங்க. மாப்பிள்ளை IBM’ல வேல பாக்குறாரு..

வாவ்..என்றேன். ஏங்க என் ரெசும கொஞ்சம் அவருகிட்ட குடுங்களேன்..

கேவலமாக முறைத்தாள்.

சரி சரி சொல்லுங்க..முறைக்காதீங்க..

அது இல்ல..அவருக்கு முன்னாடி வழுக்கை..வேண்டாம்முனு அப்பாகிட்ட சொன்னேன்..அப்பா உனக்கு தல முடியா வந்து சோறு போடா போகுதுன்னு சொல்றாரு..

ஏனோ எனக்கு அக்கா ஜோதியின் ஞாபகம் வந்தது. போன 2003-இல் தான் திருமணம் நடந்தது. ஐம்பது பவுன் நகை.ஒரு லட்சம் ரொக்கம். ஜோதி சிரித்த முகத்துடன் புகுந்த வீட்டிற்குள் போக..நாங்கள் கடனுடன் போராடி கொண்டிருக்கிறோம். தாலி மாற்றும் போது கூட இரண்டு பவுன் என்று கூறி விட்டு நாலு பவுனுக்கு செயின் போட்டு விட்டார்கள். இப்போது மாப்பிள்ளை வீட்டிலும் பதின்மூன்றாயிரம் கடன். அந்த கடனே முடியாத நிலையில் குழந்தை பேரு வேறு சமீபத்தில் தான் நடந்து முடிந்தது.

ஹலோ..என்ன யோசிக்கிறீங்க..

ஒன்னும் இல்லைங்க சுகன்யா..உங்கப்பா சொன்னது சரியோன்னு படுது..முறைத்தவளை கண்டு கொள்ளாமல் வெளியில் வந்தேன். எங்க மாமாக்கு நெறய முடி இருக்கு ஆனா..என்று யோசித்தவனை..யோவ் போலாமாயா என்றார் பாபு.

கணபதி இண்டஸ்ட்ரிஸில் வேலை முடிந்து மேன்ஷன் வரும்போது மதியம் மணி இரண்டு முப்பது. வாசு அண்ணா கடையில் எப்போதும் சில ஐட்டம் இருக்கும். லெமன் ரைஸ் – 20 ரூபாய், வெஜிடபிள் பிரியாணி – 30 ரூபாய், தயிர் சாதம் – 15 ரூபாய், கீரை வடை 5 ரூபாய், மெது வடை – 3 ரூபாய்.

ஏட்டா..ஏதாச்சும் மீதி உன்டோ..வரு வரு என்றவர் , ஒரு வெஜிடபிள் பிரியாணியும், ஒரு லெமன் ரைஸுமாக இரண்டு பொட்டலங்களை கொடுத்தார். இரண்டையும் கையில் வைத்து கொண்டு சுற்று முற்றும் பார்த்தேன்.

யாரத் தேடுற? அந்த கிழவன் வெயிலா இருக்குன்னு உங்க மேன்ஷன் செவுத்துக்கு அந்த பக்கம் நிக்கறான் பாரு என்றார்.

நான் மேன்ஷன் கேட்டின் அருகில் போக சன்னாசி உக்கார்ந்திருந்தார். லெமன் ரைஸ் பொட்டலத்தை அவரிடம் நீட்டினேன். நடுங்கும் கரங்களால் வாங்கி கொண்டார்.

மேன்ஷன் வாட்ச்மேன் சத்தமாக..காலைல வின்சென்ட்..இப்ப இந்த ஆளா..

ஆமாண்ணே வின்சென்ட்டுக்கு மதியம் சோறு குடுத்துடுறாங்க..

சரி உங்கம்மா சேலத்துல இருந்து போன் பண்ணாங்க..உன்ன எப்பவும் போல பத்து மணிக்கு மேல கூப்பிட சொன்னாங்க..

சரிண்ணே..நன் பாத்துக்குறேன்..

அதற்குள் சன்னாசி சாப்பிட்டு முடித்து விட்டார். மெதுவாக எழுந்து அந்த பக்கம் நடந்து போனார்.

பாத்தியா.. என்னா வேகமா சாப்புடுது, ஒரு தேங்க்ஸ் சொல்லுதா அது..

விடுங்கண்ணே..பாவம்!

நீ வெட்டியாவே செலவு பண்ணு.

விடுங்கண்ணே..போவும் போது எடுத்துக்கிட்டா போக போறோம்.

ஏனோ சன்னாசி இதுவரை நன்றி என்று சொன்னதில்லை. யாரிடமும் பேசவும் மாட்டார். இது வேண்டும் என்று கேட்டதில்லை. கொடுத்ததை சாப்பிட்டு விட்டு போய் விடுவார்.

zion-னில் வேலை முடிய ஒன்பது மணிக்கு மேலாகி விட்டது. கம்பெனி ஜீப்பை ஜோசப் அண்ணா ஓட்டி கொண்டிருந்தார். வண்டி பிச்சன்னூரை நெருங்கும்போது மணி இரவு பத்து ஐந்து.

ஜோசப் ஏட்டா..

என்னப்பா..

ஒரு டீ குடிக்கலாமா.

ஆமாம்பா அப்படியே ஒரு தம்ம போடலாம் என்றார் பாபு.

ஜோசப் அண்ணா வண்டியை ரோடு ஓரமாக இருந்த டீ கடையிடம் நிறுத்தினார்.

நான் மொபைல் போனை எடுத்து வீட்டுக்கு டயல் செய்தேன். முதலில் மூன்று ரிங் கொடுத்து கட் செய்தேன், பிறகு இரண்டு ரிங் கொடுத்து கட் செய்தேன். மூன்றாவது முறை போன் செய்த போது அம்மா எடுத்தார்கள்.

சாப்பிட்டீங்களா..

சாப்டோம்ப்பா..நீ சாப்பிட்டியா..

ம்ம்..ஆச்சு.

டேய் ஜெயன்..அந்த லோன் விஷயம் என்ன ஆச்சுப்பா..

முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்மா..

அப்பா எங்க..

இப்ப தான் தூங்க ஆரம்பிச்சார். சரிப்பா..யாரோ கேட்டை திறக்கிறாங்க..வச்சிடறேன். என் பதிலுக்கு காத்திருக்காமல் போனை அம்மா வைத்து விட்டார்.

அழ வேண்டும் போல் இருந்தது.

இந்தா ஜெயா..டீ க்ளாசை புடி..

க்ளாசை வாங்க கை நீட்டினேன்.

என்ன அழறியா?

இல்லைங்க பாபு..என்ன பண்றதுன்னு தெரியல. அடுத்த மாசம் வேற ஐந்தாயிரம் ரூபாய் அம்மா கேட்டிருக்காங்க. அம்மாவும் அப்பாவும் வெளிய தலை காட்ட முடியாம எப்பவும் கதவ உள்ளார பூட்டிக்கிட்டு..முழுவதுமாய் உடைந்து விட்டேன்.

பாபுவும் ஜோசப் அண்ணாவும் ஆசுவாசப்படுத்தினார்கள்.

விடுப்பா..எனக்கு தெரிஞ்சி தொடர்ந்து அழுதவனுமில்ல..தொடர்ந்து சிரிச்சவனுமில்ல..சீக்கிரம் நல்ல வேலை கிடைச்சிடும்..தைரியமா இரு என்றார் ஜோசப்.

மறு நாள் காலை ஆஃபீசுக்குள் நுழைந்த போது. சுகன்யா குட் மார்னிங் சொல்லவில்லை. போனில் யாரிடமோ சிரித்து பேசி கொண்டிருந்தாள்.

எதிரே வந்த பவானி..ஜெயன்! சுகன்யா வேற`யார் கிட்டயும் இனி பேச மாட்டா..நேத்துல இருந்து அவ அவளோட வுட்பி கிட்ட பேசிக்கிட்டே`இருக்கா..

அக்கா ஜோதியும் இப்படி தான். திருமணத்திற்கு முன் தினமும் நான்கு மணி நேரமாவது மாமாவுடன் சிரித்து சிரித்து பேசுவாள். ஆனால் திருமணத்திற்கு பின் என்னை நீங்கள் நரகத்தில் தள்ளி விட்டீர்கள் என்றாள். நரகத்திற்கு அனுப்ப இவ்வளவு சிலவாகும் என்று எங்களுக்கு முன்பே தெரியாமல் போய் விட்டது.

ஜெயன்..என்ன என்று பவானியை பார்த்தேன்.

சோமேஷ் உங்கள வந்த வொடனே பார்க்க சொன்னார்.

சரி என்று கூறி விட்டு நேரே அவர் கேபினுக்கு சென்றேன்.

என்னை நிமிர்ந்து பார்த்தவர், எடோ.. நேத்து நைட் அழுதியாமே..

சாரி பாஸ்..என்றேன்.

டோன்ட் ஒர்ரி. என் பிரெண்டு விப்ரோ’ல டீம் மேனேஜர், அவன் கிட்ட சொன்னேன், நெக்ஸ்ட் மந்த் அப்டேட் பன்றேன்னு சொல்லி இருக்கான்.

தேங்க்ஸ் பாஸ்.

டோன்ட் ஒர்ரி..ட்ரை டு கான்சன்ட்ரேட் ஆன் யுவர் ஒர்க்…

ஓகே பாஸ் என்றேன்.

அன்றைய விசிட்ஸ் கன்பார்ம் செய்து கொண்டு வெளியே வந்த என்னிடம், என்னப்பா சோமேஷ் ஏதாவது சொன்னாரா..

அமாம் பாபு.. எப்பவும் போல தான் என்று சிரித்தேன்.

இரண்டு வாரம் கழித்து மாத கடைசியில் ரகு சாரை போய் பார்த்தேன். ரகு சார், எங்கள் கம்பெனி எம்.டி.

சோமேஷ் சொன்னார் ஜெயன்! சோ யூ ஆர் லுக்கிங் பார் எ சேஞ்?

சாரி பாஸ்.. மை பேமிலி இஸ் இன் சீரியஸ் பைனான்சியல் ட்ரபுள்..என்றேன்.

ஓ.கே. என்றவர், இந்தா என்று ஒரு கவரை நீட்டினார். உன் சம்பளம் மூவாயிரம் அன்ட் எக்ஸ்ட்ரா மூன்றாயிரம் உள்ளது என்றார்.

தேங்க்ஸ் எ லாட் பாஸ் என்று கூறி விட்டு திரும்பினேன்.

டேய்..ஜெயன்..

எஸ் பாஸ்..

அட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் டா! என்றார்.

சேம் டு யூ பாஸ் என்றேன். ஓ! இன்று டிசம்பர் முப்பத்தி ஒன்னு இல்ல என்று நினைத்து கொண்டு அவர் அறையை விட்டு வெளியே வந்தேன். நேராக போய் அம்மாவின் பிரெண்ட் வீட்டிற்கு மனி ஆர்டர் அனுப்பி விட்டு, அவர்களுக்கு போன் செய்து சொல்லி விட்டேன். சற்று நிம்மதியாக இருந்தது.

மேன்ஷன் வந்து சேர்ந்த போது வாட்ச்மேன் சிரித்து கொண்டே என்ன ஜெயன்? அண்ணனை நியூ இயர்கு ஒன்னும் கவனிக்க மாட்டியா?

உங்களுக்கு இல்லாமலா என்று பாக்கெட்டில் இருந்து நூறு ருபாய் எடுத்து கொடுத்தேன்.

அப்படியே மாச வாடகை எழுநூறையும் கொடுத்துடரியா என்றார்.

அதையும் கொடுத்து விட்டு ரூமில் வந்து உட்கார்ந்தேன்.

சோமேஷிடம் இருந்து போன் வந்தது. எடோ ஜெயன்..என் பிரெண்டு போன் பண்ணான். நீ கமிங் மண்டே பெங்களூரு போய் அவன பாரு. எப்படியும் ஜாப் கன்பார்ம் பண்ணிடலாம்னு சொல்லிட்டான். அவன் டீடெயில்ஸ் உனக்கு மெயில் பண்ணிட்டேன். நான் ரகுகிட்ட பேசிக்கறேன்..நீ சண்டே அங்க போய்டு. இண்டர்வீயூ டிரஸ் கோட் இஸ் சூட் அன்ட் டை. நான் ஊருக்கு கிளம்பிக்கிட்டு இருக்கேன். விஷ் யூ எ வெரி ஹாப்பி நியூ இயர் டா.. அன்ட் குட்லக்..

தேங்க்ஸ் எ லாட் பாஸ்..சேம் டு யு பாஸ் என்றேன்.

ஆண்டவா! நன்றி நன்றி என்று வாய் விட்டு கூறி ரூமில் இருந்த சாமி படத்துக்கு முன் விழுந்து எழுந்தேன். பாக்கெட்டில் இருந்த மீதி நூற்றி பத்து ருபாய் கீழே விழுந்தது.

ரகு சார் கொடுத்த ஆறாயிரத்தில், மனி ஆர்டர் ஐந்தாயிரம், ரூம் வாடகை எழுநூறு மற்றும் வாட்சமேனுக்கு நூறு ரூபாய் போக மீதி இவ்வளவு தான். எப்படி சூட்டும் கோட்டும் வாங்குவது? தலை சுற்றத் தொடங்கியது. அடுத்த ஐந்து நிமிடத்தில் பாபு, சுகன்யா,பவானி, வாட்ச்மேன் எல்லாரிடமும் கேட்டு விட்டேன். சிலர் ஊருக்கு போய் கொண்டிருந்தார்கள், சிலர் இல்லை என்றார்கள். சோமேஷ் அன்ட் ரகு சார் இருவரும் நாட் ரீச்சபிளாக இருந்தார்கள். ஒன்றும் செய்ய முடியாது. சாதாரண ட்ரெஸ்ஸில் போக வேண்டுமானாலும், பஸ்ஸுக்காவது பணம் வேண்டுமே! ஓரளவுக்கு தெரிந்த சிலரிடம் முயற்சி செய்தேன்..ஒன்றும் முடியவில்லை.இந்த அலைச்சலில் இருந்த நூற்றி பத்து ரூபாயும் காலி ஆனது. சிவா அண்ணாவும் கடையை மூடி விட்டு ஊருக்கு போய் விட்டார். திரும்ப செவ்வாய் கிழமை தான் வருவாராம். இரவு எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. சனிக்கிழமை காலை வெளியே வந்தேன். நேற்று மதியம் சாப்பிட்டது, மேன்ஷனிலும் கூட்டம் குறைவு. மீண்டும் ரூமிற்குள் வந்து கட்டிலில் படுத்து விட்டத்தையே பார்த்து கொண்டு இருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை.

ஏம்ப்பா ஜெயன்! வாட்ச்மேன் அழைத்தார்.

வெளியே எட்டி பார்த்தேன்.

சன்னாசி நிக்கறான் பாரு..

மேன்ஷனுக்கு வெளியே வந்தேன்.

நேத்து மதியம் ரொம்ப நேரம் ஒக்காந்து இருந்துட்டு போய்ட்டான்.. நீ வேற வரவே இல்லை என்றார் வாட்ச்மேன்.

பாக்கெட்டில் ஐந்து ரூபாய் இருந்தது. அதை சன்னாசியிடம் தந்தேன்.

நிமிர்ந்து என்னை பார்த்தார். வேற இல்லங்கய்யா.. எதாவது வாங்கிக்கோங்க. என்றேன்.

என்னையே வெறிக்க பார்த்தவர், ஒன்றும் சொல்லாமல் போய் விட்டார்.

அங்கேயே பிரம்மை பிடித்தவன் போல் நின்று கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் நின்றிருப்பேன் என்று தெரியாது.

த.த..தம்பிய்..குரல் கேட்டு திரும்பினேன், சன்னாசி கையில் இரண்டு பொட்டலத்துடன் நின்று கொண்டிருந்தார். ஒரு பொட்டலத்தை என்னிடம் நீட்டினார்..சாப்டு..பசி..ஒன் கண்ணுல தெரியுது..ஒன்றும் சொல்லாமல் வாங்கி சாப்பிட்டேன்.

காசு வேணுமா..என்றார். வாய் முழுவதும் சோற்றுடன் தலை ஆட்டினேன்.

எவ்ளோ..என்றார். ஒன்றும் சொல்லாமல் மீண்டும் தலை ஆட்டினேன்.

கிழிந்த சட்டைக்குள் கையை விட்டு ஒரு பாலிதீன் கவரை எடுத்தார். இந்தா வச்சிக்க ..

அப்போது வெளியே வந்த வாட்ச்மேன், இதை பார்ரா என்று அந்த கவரை வாங்கி உள்ளிருந்த பணத்தை எண்ணத் தொடங்கினார்.

திருப்பி குடுத்துடறேன்யா..என்றேன்.

வேணாம்..போம் போது..என்றார்.

கண்டிப்பா மேன்ஷன விட்டு போம் போது குடுத்துடறேன் என்றேன்.

இல்லை என்பது போல் தலை ஆட்டினார். மெதுவாக என் அருகில் வந்தார்..என்னை நிமிர்ந்து பார்த்து..போம்போது நா கொண்டு போமாட்டேன் என்றார்.

ஜெயா! மூவாயிரத்தி எழுநூறுக்கு மேல இருக்குப்பா..என்று வாட்ச்மேன் கத்தி கொண்டிருந்தார்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *