அவனுக்கு வந்த ஆத்திரத்தில் எதிரில் யார் வந்திருந்தாலும் என்ன நடந்திருக்குமோ? அப்படி ஒரு கோபம், பரபரப்பு, ‘குட்டிப் போட்ட பூனை’யைப் போல வாசலுக்கும் உள்ளுக்கும் நூறு நடை நடந்திருப்பான். தெரு முனை வரை கண்களை ஓட்டுவதும், மறுபடி உள்ளே வருவதும், ஏதோ யோசிப்பதும் இப்படியாக காலை மணி ஒன்பது முதல், மன நிம்மதி இல்லை.
“ஹும்…… காசில்லாமல் பிறர் கையை எதிர்பார்த்தால் இதான் கதி. சென்ற வருஷம் வரை அனாவசியமாக செலவு வந்ததே இல்லை; கேட்டவர்களுக்கெல்லாம், வீடு தேடிக் கொண்டு போய்த் தந்துவிட்டு வந்த காலம் போய்… என்ன வேதனையான நிலை!” அலுத்துக் கொண்டான்.
நிம்மதியிழந்து தவித்த மனத்துடன், காரியம் ஆகுமோ ஆகாதோ என்ற கலக்கமும் சேர்ந்து, திகைத்துப் போய் உட்கார்ந்தான்.
“சோதனையாக இந்த வருஷம் பிறந்து எவ்வளவு வெட்டிச் செவவுகள்? அது நம் சம்பளத்திற்குக் கட்டுப்படியாகுமா? செய்யாமல் விடவும் முடியவில்லையே’ … உட்காரப் பிடிக்கவில்லை. மறுபடியும் வாசலுக்கு வந்தான்.
ஊஹும் … தெருவில் தெரிந்த முகமே காணவில்லை. நண்பனாவது? வரவாவது… “போதுமப்பா இந்தச் சம்சார சுகம். ஒரு பெரு மூச்சு விட்டான். பிரம்மச்சாரிக் கட்டையாக வாழும் அவனது நண்பர் திருக்கூட்டம் அவன் மனக் கண்ணில் தோன்றியது. ஒரு கவலையுமில்லாமல் … ஜாலியாக ஊர்சுற்றிக் கொண்டு கொம்மாளம் போடும் அவர்களை நினைத்துக் கொண்டான்.
ஆனால்…? கமலத்தின் நீண்ட அந்தக் கருவிழிகள் அவன் கண்ணெதிரே கெஞ்சின. “வருவீர்களா அத்தான்?” கலங்கிய கண்களுடன் ஏக்கத்துடன் எதிர்பார்க்கும் அவளை இந்நிலையில் ஏமாற்றலாமா..?
இந்த நிலையில் அவள் ஆசைக்கு எந்த எமாற்றமும் ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற கவலையில் லெட்டரும் எழுதிப் போட்டுவிட்டான். இப்போது ‘பணப் பிரச்சனை’ பூதாகாரமாக நின்று பயமுறுத்திக் கொண்டிருக்கறது.
முதல்நாள் கடிதம் வந்ததுமே திகைப்பாகவும், அதே சமயம் ‘அவளை’ சந்திக்கப் போகிறோம் என்றதால் ஆனந்தமாகவும் இருந்தது. யாரிடம் பணம் கேட்பது – காரணம் கேட்டால் என்ன சொல்வது என்றெல்லாம் சிறிது கூச்சமாகவும் இருந்தது.
அவன் கிக்கனமாகச் செலவழிப்பவன்தான். ஆனால் இந்த ஊருக்கு மாற்றலாகி வந்த ஏழெட்டு மாதத்திற்குள் அவனுக்கு எதிர்பாராத விதமாக ஏதேதோ செலவுகள். ஒரு சில வயதான சக ஊழியர்கள் அவனிடம் அதைப் பற்றி எச்சரிப்பதுபோல் கூடப் பேசியிருக்கிறார்கள்.
“ஏம்…ப்…பா..! இப்படி மாதம் இரண்டு தடவை ஊர் போய் வந்தா என்ன ஆறது? கையிலே நாலு காசு இருந்தாத்தானப்பா அவசரத்துக்கு ஆகும். திடீர்னு அவசரச் செலவு வந்தா யாரிடமப்பா கேட்க முடியும்?” வந்த புதிதில் ராகவாச்சாரி சொன்னது அவன் நினைவில் பளிச்சிட்டது.
இதுவரை பொய் வந்ததெல்லாம் வீண். இப்போது போக வேண்டியது மிக அவசரம். ஆனால் யாரிடமும் அதை விவரமாகச் சொல்ல முடியாது. “இறைவா! அவளை நான் நல்லபடி உயிருடன் பார்ப்பேனா?” தெய்வத்தினிடம்தான் பிரார்த்தித்துக்கொண்டான்.
லீவைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஏகப்பட்ட லீவ் ‘கிரெடிட்’டில் இருக்கிறது. யாரும் அவனை அந்த விஷயத்தில் தடுக்க முடியாது. பணம்! பணம்தான் இப்போது திருப்புங்கூர் நந்தியைப் போல் குருக்கே நிற்கிறது.
‘மானேஜர் சதாசிவம்’
ஊஹும். அவரிடம் வந்த புதிதில் வாங்கியாகிவிட்டது.
‘டைப்பிஸ்ட் சுந்தரவேலு’
அவரிடம் அவ்வளவு பழக்கமில்லையே. கேட்டுத் தராவிட்டால் அவமானம்.
‘ஹெட் க்ளார்க் நளினி’
போயும் போயும் ஒரு பெண்பிள்ளையிடம் போய் கடன் கேட்கவாவது…?’
‘சூபரண்ட் சுந்தர மூர்த்தி…’
போன மாதம் வாங்கினதையே திருப்பித் தராமல் தவணையல்லாவா சொல்லியிருக்கிறோம். மறு படி கேட்பது அழகில்லை.
இன்னும் பலப்பல அலுவலக ஊழியர்களும் அவன் கவனத்துக்கு வந்து – கேட்க மனம் துணியாமல் – கைவிட்டு விட்டான்.
அசட்டு தைரியம் ஒன்றுண்டு. யாரிடமோ வாங்கிவிடலாம் என்பதுதான் அது. ‘கட்டாயம் வருகிறேன்’ எனக் கடிதமும் எழுதிப் போட்டாயிற்று.
இதே சிந்தனையுடன் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி வந்தான். மனம் கடந்த காலத்து அசட்டுத்தனத்தை எண்ணி வருத்தப்பட்டது. பணமாகச் சேமித்து வைக்காமல் போனோமே – என கழிவிரக்கப்பட்டான்.
சுமார் நான்கைந்து ஆண்டுகளாக இரண்டாயிரம் ரூபாய் வரை சேமித்தும் அவ்வளவும் என்னென்னவோ பொருளாகவே நின்றது. சைக்கிளும் – கேமராவும் – புத்தகங்களும் – படங்களும் – ரேடியோவுமாக சொந்த ஊரில் வாங்கி நிரப்பியிருக்கிறான். அதையெல்லாம் கூட அவன் அனுபவிக்கவா முடிகிறது. சைக்கிள் ஒன்றுதான் உறுதுணை. அதைப் பார்த்தான்…
“என்ன இது? ……..யாருடைய சைக்கிளோ அல்லவா இது! அடடா! இப்படி ஒரு குழப்பமா…?”
மறுபடி ஆபீஸ் போக வேண்டுமே – என்ன செய்வது? திரும்பிய அவன் கண்கள் எதிரே ஆபீசை பூட்டிக்கொண்டு வரும் கந்தசாமியை கவனிக்கவே இல்லை..
அவன் கவனித்து நிறுத்தினான். இன்று எவ்வளவு தவறுகள்! தன்னையே கடிந்துகொண்டான். – பிறகு தகவலை பியூனிடம் சொன்னான்.
“ஆமாங்க… தேடினாங்க…பெறகாலே உங்க சைக்கிள் இருந்தது. நல்ல வேளை சாவியும் அதுலேயே இருந்துச்சு. நீங்கதான் மறந்தாப்பலே எடுத்திருப்பீங்கன்னு உங்க சைக்கிளை அவங்க எடுத்துக்கிட்டுப் போனாங்க…!”
யார் என்ற பாவனையில் இவன் பார்த்தான்.
“அதாங்க… யோசித்தபடி சைக்கிளைத் தொட்டுக்கொண்டே… பில் க்ளார்க் சிவசங்கரம் இல்லீங்க அவரு! மேலும் தொடர்ந்து கூறினான்.- இந்த சைக்கிள் அவருதுதாங்க…!”
“இதென்னடா வம்பாப்போச்சு. !” தனக்குத் தானே கூறிக் கொண்டான்.
“சரி, வாப்பா – கந்தசாமி – ஆபீசைத் திற. இதை வெச்சிட்டு வந்துவிடலாம். ஏன்…னா…நாளைக்கு நான் லீவு. என் சைக்கிள் வேணுமானா ஆபீசிலேயே இருக்கட்டும். அவருகிட்டே சொல்லி சாவியை வாங்கி நீயே வச்சுக்க. நான் திங்கட்கிழமை வந்து வாங்கிக்கறேன்..”
‘சரிங்க’..இருவரும் நடந்தார்கள்.
மௌனமாகவே சென்றாலும் பணக்கவலை கொண்ட அவன் மனம் சும்மாவே இருக்கவில்லையே… ஒரு முடிவுக்கு வந்தது.
“கந்தசாமி … ஒரு காரியம் செய்யணுமே…!”
‘ப்யூனைப் போயாப் பணம் கேட்பது?’ சில வினாடிகள் தயங்கினான். ஆனால் வேறு வழி? – இதற்குமுன் இருந்த ஊரில் ஆபீசர் கூட ‘பியூனிடம்’ அவ்வப்போது பணம் வாங்குவது தெரியும். ‘இதென்ன அவமானம். அவன் சம்பளம் என்ன? ஆபீசர் சம்பளம் என்ன? என்றெல்லாம் நினைத்திருக்கிறான். இப்போது அவனே துணிந்துவிட்டான்.
“என்னங்க ஏதோ சொல்ல வந்தீங்க..?” கந்தசாமி கேட்டான்.
முதன் முறையாதலால் தயக்கமாகத்தான் இருந்தது. ஆசை வெட்கமறியாதல்லவா? எப்படியோ வாய் திறந்து கேட்டே விட்டான். என்ன பதில் வருமோ..! தவித்தான்.
“அடடா… காலையே கேட்டிருந்தால் தந்திருப்பேனுங்களே… நம்ம ராகவாச்சாரி அய்யா இல்லே…? அவங்களுக்கு ஒரு எடத்திலேயிருந்து வாங்கித் தந்தேன். நீங்க ரொம்ப அர்ஜ்ஜண்டுங்கறீங்க..” தலையைச் சொரிந்தபடியே “அவ்வளவு சீக்கிரமா யாரு கிட்டயும் பெறளாதுங்களே…” மெதுவாகச் சொன்னான்.
‘என்ன? ராகவாச்சாரியா? நமக்கு உபதேசம் பண்ணினாரே? என்ன மொடையோ பாவம் ! அவருக்காக அங்கலாய்த்துக் கொண்டான். அவர் எப்படி ஆனால் என்ன? நம்ம காரியம் ஆகலியே?’
“ஒரு காரியம் பண்றீங்களா..?” கந்தசாமிதான் பேசினான்.
“என்ன..?”
“தினம் உங்க கூட கலைட்டராபீஸ் வருவாரே… செவத்தவரா..- அதாங்க… உங்க தெருவுக்குப் பக்கத்துத் தெரு. அவரு பேரு கூட..” நினைவுக்குக் கொண்டுவருவதற்காக யோசித்தான்.
இவனுக்க நினைவு வந்துவிட்டது. வீரமணியோ என்னமோ… வாசலிலே சின்ன போர்டு… இருக்கு. நல்லா கவனிச்சதில்லை. ஆனால் அவரோடு எனக்கு அதிகப் பழக்கமில்லையே..!”
“அதெல்லாம் யோசிக்காதீங்க. ரொம்பவும் நல்ல மனிசரு… அவரு கூட உங்களைப் பத்திச் சொல்லியிருக்காரு…”, “ஜனங்களோட பழகறதுக்கு ரொம்பக் கூச்சப்பட்டவர் மாதிரி தெரியுது. ஆனாலும் தங்கமானவரா இருப்பார் போலே இருக்குன்னு..”
இருவரும் வெவ்வேறு அலுவலகங்களில் வேலை செய்தாலும் ஆபீஸ் நேரம் ஏறக்குறைய ஒன்றுதான். தற்செயலாக இரண்டு மூன்று நாள் சேர்ந்தாற்போல் ஆபீஸ் வந்தார்கள். எதிரெதிர் ஆபீசில் வேலை செய்வதாகத்தான் தெரிந்துகொண்டார்கள். அதிகம் பேச்சுக் கிடையாது. ஆனாலும் தினமும் ஆபீஸ் வருவது ஓர் ஒற்றுமையான செயலாக நிகழ்ந்து வந்தது. அதை எண்ணிப் பார்த்துக்கொண்டான்.
இந்த நாளில் இப்படி அதிக அறிமுகமில்லாதபடியே தான் இருந்து வருவது தவறு என்று கூடத் தோன்றியது. அதிகம் பழகாவிட்டாலும் தன்னைப் பற்றி அவர் ‘எடை’ போட்டுக் கூட ஆயிற்று. ‘நாம் அவரை பிரத்யேகமாக நினைத்தது கூட இல்லை.’
தன் மேலேயே அவனுக்குக் கோபமாக வந்தது – நினைத்துப் பார்க்க அவமானமாகவும் இருந்தது.
“ஓஹோ…! அப்படியா? அதிகம் பழகாமல் பணத்திற்கு மட்டும் அவரிடம் போனால்…?’ சற்று யோசித்து –“ நீயே வாங்கித் தந்துவிடேன்..” என்றான்.
“செய்யலாமுங்க…ஆனால்…? “ கந்தசாமி தலையைச் சொரிந்தான்.
‘ஆனால்’ என்ற சொல் காதில் விழுந்ததுமே இவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போயிற்று. ‘சரி. இந்தப் பிரயாணம் இல்லைதான்.’ – என்ற அவசர முடிவுக்கும் வந்துவிட்டான்.
கலங்கிய கண்களுடன் கூடிய கமலத்தின் அந்த நீண்ட கருவிழிகள் அவன் எதிரில் தோன்றி – மறுபடியும் ‘கெஞ்சுவது’ போல் ஓர் தோற்றம்.
“ஏனுங்க?” அப்போதுதான் கந்தசாமி ஏதோ சொல்லி வருவதை கவனிக்காமல் யோசனையில் ஆழ்ந்துவிட்டதை உணர்ந்தான். அவனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
கவனிக்காததைக் காட்டிக் கொள்ளாமல் “அப்படியா?” சரி கேட்டுப் பார்க்கிறேன்..” கடைசி வார்த்தையை மட்டும் கவனித்து பதிலளித்தபடியே ஆபீசை வந்தடைந்தார்கள். சைக்கிளை வைத்துவிட்டு இருவரும் சிறிது தூரம் ஒன்றாக நடந்து வந்தார்கள். வழி பிரிந்தது.
மனம் பற்பல எண்ணங்களை அசை போட்டது. எவ்வளபு தடவை நினைத்தும் கூட இதுவரை செய்த எந்தச் செலவும் அனாவசியமானதாகத் தெரியவில்லை. வழக்கமாக ‘காபி’ சாப்பிடடு வரும் கடையைக் கூட கடந்துவிட்டான். கால்கள் பழக்க தோஷத்தில் ‘வழி’ தவறாது நடந்தது. தன் தெருவில் நுழையும்போதுதான் ‘வீரமணி’யின் நினைவு வந்தது.
நேராக நடந்து அவர் இருக்கும் தெருவில் நுழைந்தான். மாலை மங்கிவிட்டது. தெருவிளக்குகள் ஏற்றப்பட்டன. அவர் திண்ணையில் இருப்பதைக் கூட கவனிக்காமல் அவர் வீட்டு வாசலில் சென்று தயங்கியபடியே நின்று யோசித்தான்.
“வாங்க, வாங்க. ஏதேது அத்தி பூத்த மாதிரி…” மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்றார். கூப்பிய கைகளுடன் உள்ளே சென்று இருவரும் வாசல் முன் அறையில் உட்கார்ந்தார்கள்.
என்ன பேசுவது – எதை எப்படி ஆரம்பிப்பது என்றே விளங்காமல் தயங்கினான். இன்று வரை அவன் பட்ட கூச்சம் எப்படித்தான் விலகியதோ! வீரமணியின் கண்களில் என்னதான் கண்டானோ! அவனே எதிர்பார்க்கவில்லை இந்த தைரியத்தை! – சட்டென்று தன் பையிலிருந்த ‘அவள்’ எழுதிய – ஆம்! தன் மனைவியே எழுதியுள்ள ‘அந்தரங்க’க் கடிதத்தையே வீரமணியிடம் தந்தான்.
திடீரென்று இவ்வளவு தூரம் தன்னிடம் ஒட்டிப் பழகுவான் என்பதை அவனும் எதிர்பார்க்கவில்லை. ஆயினும் அவன் இதைத்தான் விரும்பினான். ஒரே கண்ணோட்டத்தில் செய்திகளைப் புரிந்து கொண்டான். கடிதத்தை மடித்து கையில் பிடித்தபடி… “அவசியம் போக வேண்டியதுதாங்க… எப்ப்க் கிளம்பறீங்க, அதுக்கு நான் என்ன செய்யணும்.”? எதுவும் செய்யத் தயார் என்பதாக ஒலித்தது அவன் குரல்.
“நாளைக்குப் புறப்படறேனுங்க. ‘ட்வண்டீ ஃபைவ் ரூபீஸ் தேவைப்படறது… எங்க ஆபீஸ் ப்யூன் ‘கந்தசாமிதான்’ உங்களை நினைவு படுத்தினான். நான்கூட ரொம்பத் தயங்கினேன். கடைசியிலே உங்க கிட்டே என் ‘அந்தரங்கத்தையே’ விண்டு சொல்லலாம்னு தோணித்து..”
நீங்க அப்படி இல்லையேன்னுதான் நான் கவலைப் பட்டேன். முதல்நாள் உங்களை பார்த்ததுமே உங்கள் குணம் புரிஞ்சுட்டுது. ஆனா நீங்கதான் வெலகி வெலகிப் போனீங்க.. ரொம்ப சரிங்க, இப்ப கையிலே இல்லே. நாளைக்கி காலைலே ஆபீஸ் போறதுக்கு முந்தி உங்க வீட்டுக்கே வந்து தறேன்- ரெடியா இருங்க…!”
‘ஆனந்த வாரிதி’ என்பார்களே அதில் முக்கியெடுத்த நிம்மதி அவனிடம் குடிகொண்டது. பிறகு எது எதுவோ பேசினார்கள். ஒரு மணி நேரம் மிகச் சீக்கிரம் கழிந்தது. அவனும் இவனும் ஒரு விஷயத்தில் மிகவும் ஒத்த நிலையில் உள்ளவர்கள். இருவரும் புதிதாக மணமானவர்கள். அதனால்தான் மனநிலையை நன்கு உணர்ந்து கொள்ளவும் முடிந்தது.
மகிழ்ச்சி பொங்கும், நிலை கொள்ளா மனத்துடன், புதிய ஊரில் அந்தரங்கமான ஓர் நண்பனையும் அடைந்துவிட்ட உவகையுடன், நாளை ‘அவளை’ இந்நேரத்திற்குள் பார்த்துவிடுவோம் என்ற பூரிப்புடன் வீடு வந்து சேர்ந்தான். பகலில் செய்து வைத்திருந்த உணவே இருந்தது. பாலை மட்டும் ‘ஸ்டவ்’வில் காய்ச்சி வைத்துவிட்டு சாப்பிட்டு எழுந்தான்.
இரவு பூராவும் என்னென்னவோ கணவுகள்! ஆகாயத்தில் பறந்தான். வானவெளியின் விசாலமான வண்ண வண்ண அழகு பரவசமூட்ட, மெல்லிய பூங்காற்று இவர்களை அணைந்துச் செல்ல… திடீர் விழிப்பு… தனிமை உணர்வு…
எல்லாமே ஒரு முறை மறுபடி நினைவு வந்தது. எதிரே இருக்கும் ‘அவளது’ புகைப்படம் இவனைப் பார்த்து ஏக்கத்துடன் பொருமியது.
டாண்…டாண்… என வீட்டுக்காரர் வீட்டுச் சுவர் கடிகாரம் மணி பத்து அடித்தது. தினமும் ஆபீஸ் போகும் நேரம் அதுதான்.
“ஆபீஸ் போகும்போது தந்துவிட்டுப் போவதாகத்தானே சொன்னார்.. வந்துவிடுவார். பணம் தந்ததும் –‘மிகவும் நன்றி’ என்று சொல்லி இரண்டு கைகளாலும் அவரது கைகளைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும் – இதற்க வெட்கப் படக் கூடாது. அவனுள் தீர்மானித்துக் கொண்டு-
மறுபடியும் வாசற்புறம் போனான். யாராரோ போய்க் கொண்டிருந்தார்கள்… வீரமணியைக் காணவே இல்லை..
“சரி.- வீட்டிற்கே சென்று பார்து வரலாம்’ என்று தீர்மானித்தான். உள்ளே வந்து ஒரு கணம் தயக்கம் – இங்கேதானே வீடு…இதற்குச் சட்டை எதற்கு.. பனியனே போதும். ஒரு துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு நடந்தான்.
வாசல் அறை பூட்டியிருந்தது. அவன் அங்குதான் வசிப்பதாக நினைத்தான். ‘ஒரு வேளை உள்ளேயோ?’ தயங்கி நின்றான்.. ‘அன்று வாசல் முன் அறையில்தானே இருந்தார்..?’
இடைவழியில் நிழலாடியது. யாரோ ஒரு பையன். வீரமணி தினமும் பத்து மணிக்குத்தான் ஆபீஸ் செல்வார் என்றும், இன்று எட்டு மணிக்க எங்கேயோ போனார் என்றும் தகவல் கொடுத்தான்.
இவன் நம்பிக்கை சிதைந்துவிட்டது. தன்னைப் பற்றி மறந்துதான் போயிருக்கும். காலையிலேயே வந்து பார்த்திருக்க வேண்டும்…’அவர்தானே வீட்டுக்கே வருவதாகச் சொன்னார்..?’
“இப்போது என்ன செய்வது? வேறு யாரிடம் கேட்பது? – திடீரென்று இவரை இவ்வளவு தூரம் நம்பியதே தப்பு என்றும் தோன்றியது ! – எவ்வளவு அசட்டுத்தனம் செய்துவிட்டோம். அவளுடைய லெட்டரைக் காட்டியது எவ்வளவு தவறு..? அப்படி அவருடன் பழகியிருக்கவும் இல்லையே? ஏன்தான் தன் புத்தி இப்படிப் போயிற்றோ?
கொந்தளிக்கும் கடலென அலை மோதும் சிந்தனைகள்! யாராரோ நினைவில் வந்து போனார்கள். எப்படியோ போயாக வேண்டும். உடல் துடித்தது. அவளை இப்படி இந்நிலையில் ஏமாற்றிவிடக் கூடாது. நாளைக்கு ஏதாவது ஏடாகூடமாக ஆகிவிட்டால்? நினைக்கவே அஞ்சினான்.
வெறி கொண்டவன் போல் – ஒரு முடிவுக்கு வந்தான். அவளுடன் இந்த ஊரில் குடியேறிய புதிதில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஜவுளிக் கடையில் ஐம்பது ரூபாய்க்குக் கடனாக ஒரு புடவை எடுத்து அடுத்த மாதம் தந்த இடம் ஞாபகம் வந்தது. அவரைப் போய் கேட்பது. அவரிடம் ஒரு சமயம் பதினைந்து ரூபாய் வாங்கித் தந்தும் இருக்கிறான். ஒரே வழி! கடைசீ வழி! எப்படியும் பிரயாணம் ரத்து செய்யக்கூடாது.
வீட்டைப் பூட்டவில்லை என்பது கவனத்தில் இருந்தாலும்.. மறுபடி போய்வர நேரமில்லை.இப்போதே மணி பதினொன்று ஆகப் போகிறது…
ஓட்டமும் நடையுமாக கடையை அடைந்தான். நல்ல காலம் தனியாகத்தான் செட்டியார் இருந்தார். அவசர அவசரமாகச் சொல்லி முடித்தான். ஐந்து புதிய ஐந்து ரூபாய் தாள்களைக் கொடுத்து கை கூப்பி விடை கொடுத்தார் அவர்.
இவ்வளவு சுலபத்தில் காரியம் ஆகும் என அவன் நினைக்கவே இல்லை. இனிக் கவலை விட்டது. இழந்த ஆனந்தம் மறுபடியும் திரும்பிவிட்டது. இனி அவனுக்கு உலகமே லட்சியமில்லை.
‘கிடக்கிறான்! அற்பப் பயல்! முடியவில்லை என்றால் சொல்லியிருக்கலாமே! வீட்டில் வந்து தருவதாக ஏமாற்றுவதுதான் கௌரவமோ?’ “சொன்னதெல்லாம் வெறும் பாசாங்கு.”
நல்ல வேளை கதவு மூடியபடியே இருந்தது.. அவசரமாகக் குளித்தான். கிளம்பியாயிற்று. திருச்சி பஸ்க்கு இடமும் கிடைத்துவிட்டது. மணி பனிரெண்டு முப்பது ஆனால் பஸ் கிளம்பிவிடும்.
மூன்று நாளைக்கு நிம்மதியாக இருக்கலாம். பணம்! ஆபீஸ்! வீடு! எந்தக் கவலையும் வேண்டாம். வந்த உடனே வீரமணியைப் பார்த்து ‘என்னய்யா? உம்மை விட்டால் பணம் கிடைக்காதென்றா நினைத்தீர்? என்று கேட்டுவிட வேண்டும்.
‘…ஆரஞ்சு… கமலா… ஆப்பிள்…’ வியாபாரிகளின் குரல் சிந்தனையைக் கலைத்தது.
ஆப்பிள் அவளுக்கு நிரம்பப் பிடிக்குமே.. அதன் சிகப்பு நிறம்.. அவனுக்க எதையோ நினைவூட்டியது. பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான். ஏதேதோ எண்ணங்கள். சொன்ன விலைக்கே நல்ல பழங்களாகப் பொறுக்கி வாங்கினான்.
பணம் கொடுத்தாகிவிட்டது. மடியில் கிடக்கும் பழங்களை ‘ஹாண்ட் பாக்’கில் வைக்கக் கூட மறந்த இன்பக் கனவுகள்.
“சார்! கொஞ்சம்..”
யாரோ தன் பக்கத்துச் சீட்டுக்க ரிசர்வ் ஆனவர் போலும். நகர்ந்து இடம் கொடுத்தான். எதிரில் உள்ள பையில் பழங்களைத் திணித்தான்.
“இது என்ன? அவளது கடிதம். அது எங்கே இப்படி வந்தது? சட்டைப் பையில் அல்லவா! அதுவும் நேற்று அணிந்த சட்டையின்.. ! தொடர்பற்ற துண்டு துண்டான எண்ணச் சிதறல்கள். !
மாறியது – எப்படியோ அவளை ஏமாற்றாமல் நாம் நேரிலேயே போகப்போகிறோம். எத்தனையோ தடவை படித்தாயிற்று. மறுபடியும் படிக்கத் தூண்டும்படி அதில் என்னதான் சுவையோ..?”
“…சில பேருக்கு இந்த மாதிரித்தான் இருக்கும்.. ‘அவர்’ இருந்தால்.. சுலபமாக டெலிவரி ஆகிவிடும். ஒரு தடவை வந்து போகச் சொல்லி எழுதுங்க. அது நீங்கதான் எழுதணும். எழுதினா கட்டாணம் வருவார். தனியாகக் கூப்பிட்டு நர்சே என்னிடம் சொன்னாள். எனக்கும் ரொம்ப ஏக்கமாகத்தான் இருக்கிறது. என் இந்த வேண்டுகோளை மதித்து கட்டாயம் வருவீர்களா அத்தான்? படிக்கப்படிக்க மனம் பூராவும் அவளாகவே நிறைந்துவிட்ட நிம்மதி!
மடித்த கடிதத்தைப் பையுள் திணித்தான். ‘இதென்ன இன்னொரு கவர்?’
உள்ளே இருபத்தைந்து ஒற்றை நோட்டுகள். ! ஒரு கடிதம்!
அன்புள்ள நண்பர்… ஆம் ! பெயர் தெரிந்து கொள்ளாமலேயே நண்பராகியுள்ள அதிசம் நம்மிடம்தான் உண்டு. பணம் கிடைக்க எதிர்பாராமல் தாமதமாகிவிட்டது. சிறிது அலையும்படி ஆகிவிட்டது. கிடைத்த உடனே உங்களைத் தேடி வந்தேன். நீங்கள் இல்லை. உங்கள் பைகள் நீங்கள் ஊர் கிளம்பத் தயாராக இருப்பதைக் காட்டின. வீட்டில் யாரும் இல்லாமல் இப்படித் திறந்து போடுவிட்டுப் போகலாமா? – ஆனாலும் அது எனக்கு வசதியாக இருந்தது. நேற்று நீங்கள் கடிதத்தை என்னிடமே தந்துவிட்டுப் போய்விட்டீர்களே.. ! அண்ணி கேட்டால் என்ன சொல்வீர்கள்? நல்லபடி போய் வாருங்கள்.- பிறகு சந்திப்போம். இனி மூன்று நாட்களுக்கு என் நினைவு ஏது?
அன்புள்ள
வீரமணி
மெய் மறந்து படித்த அவனுக்கு ஏற்பட்டது – திகைப்பா? நெகிழ்ச்சியா? ஆனந்தமா? என்று அவனாலேயே ஊகிக்க முடியவில்லை.
கண்ணில் நீர் நிறைந்து – நகரும் பஸ்ஸில் ஜன்னல் வழியாகத் தெரியும் கோவை நகரின் தெருக்களை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். சற்று முன் தவித்துக் கலங்கிய மனம் தெளிவு பெற்று விட்டது.
– குடியரசு – 25-10-1965