கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 19, 2022
பார்வையிட்டோர்: 909 
 

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன், அன்றிரவு திடீரென விழிப்படைந்தவன் போன்று வழக்கமான நேரத்திற்கு முன்பே, அயர்வு நீங்கி எழுந்தான். தன் முன் வாழ்வெலாம் எவ்வெவ்விடத்தில் எவ்வெவ்வகை கொண்டதாகிறது என்று, கனவின் நிழலென, உணர்விற்கப்பால் தோன்றி மறையக் கண்டான் போலும், எங்கிருந்தெல்லாமோ ‘சா’ குருவிகள் அலறலும் ஆங்காங்கே எட்டிய வெளியில் புதைந்து, கேள்வி பதில் களென விபரங்கொள்ளக் காத்து நின்று ஆந்தை களின் சீறலும் கேட்டன. இரண்டொருவர் நடமாட்டமும் அந்த அகால வெளியில், வீதி வழியே உலாவி வரும் மௌனத்தைக் குலைக்கா வண்ணம், கேட்டு மறைய இருந்தது. எதிரே, கீழே நடைபாதையில் முடங்கிக் கிடந்த பிச்சைக்காரர்கள் அயர்ந்து தூக்கம் கொண்டிருந்தனர். இரவில் வெகுநேரம், எதிரே தூக்கம் காண, அவர்கள் இரைந்து பேசிக் கூவி கொம்மாளமிட்டு இருமி இருமிச் செத்துக் கொண்டிருந்தவர்கள்… எவ்வளவு அமைதியான தூக்கம், விடிவுகொண்டு விழிப்பு வரும் வரையில்….

‘ஏன் தன் வாழ்வு, ‘அவளுடன்’ ஆரம்பித்த அந்த இனிமையுடன் முடிவு பெறவில்லை . ஏன் எதற்கு இவ்வகையில், நடுவில் குறுக்கிட்டு வந்து போனதான சம்சயம், நிச்சயம் கொள்ள வாழ்க்கை தொடருகிறது? உலகு அவளை எவ்வளவு ஏளனமாக ஏற்க, தன்னைக் கலந்து இன்பம் காண, என்பதில் கண்ட கண்ட இடத்தில் கண்ட கண்டவர்களை மகிழ்விக்க, தன்னை ஈனமாக்கிக் கொண்டவளா….? இவனுக்குப் புரியவில்லை . கேள்வி பதில் என்பதின்றியே, எதிரே இரவின் இருள் கவிந்து இருந்தது. உள் ஜன்னலைத் திறந்து, பிடித்துக் கொண்டு, வெளியே பார்ப்பதில் தான் எல்லாம் இருக்கிறது. ஆகாயத்தில் எண்ணிலா தாரகைகள் வீதியில் பதிந்து பவனிவர சென்று கொண்டிருந்தன போலும், அன்று மாலை நிகழ்ச்சியை இப்போது நினைவு கூர்ந்து நிச்சயமடைய, நடக்க இருப்பதின் நீண்ட முன் சாயையும், பின் நடந்தவைகளின் மறைவு, மறதி பின் ஞாபகத்தையும் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வீதியில் ஒரு சந்தின் குறுக்கீட்டின்போது அவனைக் காண நேர்ந்தது வியப்படைய இருந்தது. இவனைப் பார்த்து அவன், “என்னப்பா… இங்கே தானா…எப்போது, தெரிய வில்லையே…” என்றது யதேச்சை குறுக்கீட்டு சம்பவமென இப்போது கொள்ள முடியவில்லை. வாழ்க்கை எவ்வளவு வசீகரமாக அவனுக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்பது ஒளிவு மறைவின்றி அவன் நடையுடை பாவனைகளில் மிளிர்கின்றது…அவனுடன் தானே இப்போது ‘அவள்’ வாழ்கிறாள்….? இவன் விலாசத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு மறுநாள் மாலை சரியாக நாலரை மணிக்கு நிச்சயமாக சந்திக்க வருவதாகச் சொல்லி அப்போதைய அவன் அவசர ஜோலியில் போய்விட்டான். மாலை சூரியன் மங்கல் மஞ்சள் ஒளியும் அவ்வீதி வழியே படர்ந்து வசீகரமாகத் தோன்றி மறைவு கொள்ள ஆரம்பிக்கிறது.

தன் தனிமை மாடி அறையில், இவன் தங்கியிருந்த இடம், போதுமானதற்கு அதிகமாகவே இருந்தது. நாற்புற ஜன்னல்களுடன், எதிரே எட்டிய வெளியையும் கீழே ஊர் நடப்பையும் கவனிப்பு கொடுக்கும் வகைக்கு, அது வெகு உயரத்தில் மேல் மாடியில் இருந்தது. தடுக்கி விழக்கூடிய விதத்தில், செங்குத்தான அநேக படிகளைத் தாண்டி ஏறித்தான் தன் அறைக்குள் நுழைய வேண்டிய சிரமம், அதிகமாக கீழிறங்கி ஊர் சுற்றித் திரிந்து திரும்பும் இவன் ஆவலை, வேதனை எனத்தான் கொள்ளச் செய்யும். ஜன்னலைப் பிடித்துக் கொண்டு எட்டிய வெளியை நோக்கியிருந்தான்…காலையும், காண கண்டுகொண்டிருக் கிறது.

அன்று மாலை நான்கு மணியிலிருந்து அவன் வருகையில் கொள்ளும் ஆவலில், நேரமாகியும் அவன் வராதது கண்டு ஆத்திரம் கொள்ளலானான். அடிக்கடி கடியாரத்தைப் பார்த்தும் கொண்டிருந்தான். இன்னும் நேரமாகவில்லை என்று சமாளித்துக் கொள்ளுவதில், எப்போது அவன் வருவதாகக் குறிப்பிட்டான் என்பதையும் மறந்து கொண்டிருந்தான் போலும். சில சில சமயம் யாருக்காக தான் காத்திருத்தல் என்பதும் விளங்குவது இல்லை. வீதி வழியே அநேக ஆடவ பெண்டிர் பிள்ளை குட்டியுடன் கடற்கரையை நோக்கி விரைந்து சாய்ந்து கொண்டிருந்தனர். தத்தம் தினசரி வாழ்க்கை அலுப்பை கடற்கரைக் காற்று வாங்குவதில் கரையவிட முடியும் என்ற எண்ணத்திற்குத்தான் எவ்வளவு அலங்காரங்கள் ஆர்ப் பாட்டங்கள் வேண்டிக்கிடக்கின்றன… இந்திர விழா எடுப்பென…மேலே ஆகாயம் நிர்மலமாக சூரிய மறைவிற்கு இருள் கொள்ளக் காத்திருந்தது. வீதி விளக்குகளும், ஏற்றப்படாமல் எட்டிய வரையிலும் நின்று தெரிந்தன.

நேரமாகி விட்டது. அறையின் அமைதி அச்சுறுத்த லாகி, உள்ளே இருப்புக் கொள்ள முடியாது கீழிறங்கி வீதியை அடைந்தான். அநேகரை ஆங்காங்கே கடக்கும் போது உன்னிப்பாய் வெறித்து நோக்கிச் சென்று கொண்டிருந்தான். ஒருக்கால் தன் எதிரிலேயே தெரியாமல் தன் நண்பன் தன்னைக் கடந்து செல்லக் கூடுமென்ற எண்ணம் போலும், எதிரே யாரோ ஒருவன் கையில் கட்டியிருந்த கடியாரத்தை இவன் கவனித்து, அவனருகில் சென்று திடுக்கிட நின்று, கேட்டான். இவனை ஒரு விதமாகப் பார்த்துக் கொண்டே அவன் தன் கடியாரத்தையும் பார்த்துவிட்டு அடிக்கடி அதற்கு சாவி கொடுக்கத் தவறியதால் அது நின்றிருப்பதைக் குறிப்பிட்டு, “…ஏன் ஸார்…சரியாக நாலரை இருக்கும்” என்றான். ‘ஐந்துக்கு மேலாகாது’ என்றும் சொல்லிக் கொண்டே அவன் போய்விட்டான். திரும்பி தன் அறையை அடையவும் தோன்றியது. ஒருக்கால் தன் நண்பன் அப்போதுான் அங்கே வந்து, தன் அறையில் தன் நாற்காலியில் தன்னை எதிர்பார்த்து அமர்ந்து கொண்டிருக்கமுடியும் எனவும், தான் குறிப்பிட்ட காலத்தில் வந்தும் தன்னை வெகு நேரமாகக் காத்திருக்கச் செய்த தன் தவறை அவன் கட்டிக் காட்டிச் சொல்ல, அதை எப்படி சமாளிக்க முடியும் என்ற எண்ணத்தில், திரும்பும் நினைவை மறந்தான். வெளிக் கிளம்பும் போது பூட்டாதே தன் அறைக்கதவைச் சாத்தி வந்ததாகவும் ஞாபகம் வந்தது…மேலே வீதி வழியே போய்க் கொண்டிருந்தான்.

ஒரு பங்களா, சுற்றுச் சுவர் சூழ மத்தியில் தெரிந்தது. அதைக் கடக்கும் போது வராண்டாவில் ஒரு அழகிய பெண், அலுப்பு மிகுதி ஆனந்தத்தில் ஆவலுடன் ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்தான். படிக்கும் பாவனையும் அவள் முகத்தில் படர்ந்து தெரிந்தது. உள்ளே அவள் முன் சென்று சரியாக சொன்னபடி ஆறு மணிக்கு தான் வந்ததைச் சொல்லி அவள் அலுப்பிற்குத் தான் ஜவாப்பல்ல எனச் சுட்ட வேண்டுமெனத் தோன்றியதும், ‘அவனாக’ அவளுக்குத் தானாக முடியுமா என்ற சந்தேகத்தில் விழிப்படைந்து மேலே நடந்து கொண்டிருந்தான். எதிர்பாராச் சம்பவம், விபத்தென அடிக்கடி ஆபத்தில் சிக்க வைக்க, வாழ்வுதான், தவிப்பில் எவ்வளவு அபத்தமென பெரும் பாடாகிறது. குறுக்கும் நெடுக்கும் அநேக கார்கள் வீதி வழியே வேகமாக இவனைத் தொடும் அளவிற்கு உரசிச் சென்று கொண் டிருந்தன. வீதி விளக்குகள் இன்னும் ஏற்றிய பாடில்லை.

எதிரில், தனக்குப் பால் விற்பவளை இவன் பார்த்து, சிறிது தயங்கியவாறு நின்றான். இவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவள், “எங்கே ஐயா… இவ்வளவு சீக்கிரமாக வெளியே….புதிசா நான் வரதுகூட மறந்து…” என்றதும் அவளுடன் தன் அறைக்குத் திரும்ப எண்ணினான். மேலும், தன் நண்பன் தனக்காக அங்கு காத்து வீற்றிருந்தால், இருவரையும் அவன் பார்த்தால்…என்ற எண்ணம் எப்படியோ தோன்ற அந்நினைப்பை மறந்தான். அவளையே போய் பாலை ஊற்றச் சொல்லவும் தயங்கி “இன்று வேண்டாம். நீ ரூமுக்கும் போக வேண்டாம்…” என்று சொல்லி மேலே அவள் சிரிப்பில் “பாவம் என்னிடம் எவ்வளவு பிரியம்” என மிதந்து நடந்து கொண்டிருந்தான். – குறிப்பற்ற போக்கில் போவது, நிச்சயமாக வேண்டி, எல்லை விரிந்த வெளியென எங்கெங்கேயும் ஒளிகிறதா கிறது. எதிரே, ரயிலடி ஆயிரம் விளக்கொளியில் நிற்கக் கண்டான். சிறிது எட்டி நின்று பார்த்திருந்து, பிறகு அதன் ஈர்ப்பில் அதனூடே கும்பலில் ஒருவனாக எப்படி எப்போது கலந்தான் என்பது இவனுக்கு விளங்கவேயில்லை.

ரயிலடியே ஒரு அலாதி அநாதைப் பார்வை கொடுப்பது. அதன் வெறிச்சோட்டத்திலும் கும்பலிலும் மனிதர்கள் ரயில் வண்டியில் வந்து போவதற்கு சிறிது அது ஒரு தங்கும் இடம். ஆனால் இந்தப் பெரிய புகைவண்டி நிலையம், வண்டிகளில் பிரயாணம் செய்பவர்களுக்கு ஒரு ஆரம்ப முடிவு ஸ்தலம்-டெர்மினஸ். இங்கிருந்து ஆரம் பிக்கும் பிரயாண தொடர்கள் எங்கேயோ எப்போதோ எட்டுத் திக்குகளுக்கும் சென்றடைந்து, சிறிது தாமதித்து நின்று திரும்பவும் இங்கு வந்தடையும். நாலாபக்கத்து ஜனங் களும் இங்கிருந்து கிளம்பவும், ஆங்காங்கிருந்து வந்தடைய கூட்டுறவு கொள்ளுதலும் இங்கேதான். அநேக குண விசேஷங்கள் விட்டுப் பிரிந்து தவறுதலில் அநேகரை மாற்றடைவது நேருமிடம்…ஆக இந்த ஆரம்ப முடிவிடம் எவ்வளவு கும்பல் கூச்சலையும் சமாளித்து சலனமற்ற ஒரு உன்னத மௌனப் புதிர்க்ஷேத்திரம். அவ்வேளையில் அங்கே வெகு ஜனக்கும்பல், ஏதோ வந்த ஒரு ரயிலில் இருந்து இறங்கியவர்களும், போவதான, ஒன்றுக்குக் காத்திருப்பவர்களும் ஒன்று சேர்ந்து அநேக தவறுதலுக் கான பாவனை கொண்டிருந்தது. கூச்சல்கள் யாராரிட மிருந்து வருகிறதென்பதன்றி தானும் சேர்ந்ததான ஒரு பிரமை கொள்ளவும்… உருவங்கள் தெரிந்தும் மறைந்தும், சப்தங்கள் கேட்டும் கேட்காமலும், எல்லா சந்தடிகளும் ஒரு அலங்கோலத்தில் ஒரு புலனாகா நியதியில் அவதி கண்டு சிதறித் தெரிந்தன. இந்த உரு, இந்த சப்தம், இந்த பெயர் என்ற இசைவு முறை நழுவி தனித்தனியாகத் தோன்றும் புலனுணர்வுகளை மனது ஒப்புக் கொள்ள முடியவில்லை. – அங்கிருந்து புறப்பட இருக்கும் ஒரு ரயில் வெகு காலமாக பிராயணத்திற்கு ஆவல் தூண்ட காத்திருந்தது போலும், அதில் செல்ல நினைத்தவர்கள் கண்ட கண்டபடி இடம் பிடிக்கும் ஆர்வத்தில் அதை மொய்த்துத் திரிந்தனர். நெருக்கியடித்து ஏறியவர்களும் மேலும் எவர் எவரும் படிக்கட்டுகள், ஜன்னல் பிடிப்பு மற்றும் மேல் கூறையிலும் கூட ஏறியிருந்தனர். சிலர், ஸ்டேஷன் கம்பங்களிலும், மேல் பிளாட்பாரத்திலும் ஏன் ஸ்டேஷன் கூறையிலும் கூட ஏறி ஆவலைத் தணித்துக் கொண்டிருந்தது, ஒரு குருட்டு குரங்குத்தனமான விளையாட்டெனத் தோன்ற இருந்தது….. என்ஜின் கோர்க்கப்பட்டு பூதாகரத்தில் புகையைக் கக்கி நின்றது, செல்ல ஆயத்தம் கொண்டு நகர முடியாது முக்கித் திணறி பெருமூச்சில் உறுமியது. அந்த வண்டித் தொடர், ஒரு ஜனக்கதம்பத் தொடுப்பு வடமெனத் தோன்றியது.

சீக்கிரமே வேறு வண்டி புறப்பட இருப்பதை அறிவித்து விட்டு, கூட்டத்தைக் குறைக்க போலீஸ்காரர்கள் முனைந்தனர். கண்ட கண்டபடி அநேகரை இழுத்து அடித்துத் துரத்தினர். ஒரு புறம் ஓடியவர்கள் மறு புறமாக ஆங்காங்கே தொத்திக் கொண்டனர்.

இரண்டொரு முன் பின் குலுக்கலில் திடீரென வண்டி வேகம் கொண்டு ஓட ஆரம்பித்தது. உதறி விழுந்த அநேகர் அதில் தொற்றிக் கொள்ள முடியாமல் அத்துடன் ஓடி, களைத்து நின்றார்கள். இந்தச் சந்தடியில் தன்னை அறியாதே வண்டியில் புகுந்தது எவ்விதம் என, இவனுக்குப் புரியவில்லை. ஒரு சாமான் வைக்கும் மேல் தட்டில் ஒண்டி கூனிக் குறுகி உட்கார்ந்திருந்தான். தன் முழங்காலையும் கட்டி அதன் மேல் தலை வைத்துத் தூங்கியும் விட்டான். எங்கெங்கேயோ கண்ட கண்டவிடங்களில் ரயில் நின்ற போதும், ஊர்ந்து சென்ற போதும் அநாவசிய பிரயாணம் கொண்டவர்கள் அவசியமென இறங்கி, இரவின் இருளில் மறைந்தனர். இடவசதி கண்டு காலை நீட்டி, நன்றாகத் தூங்கி விழித்த விதமும் புரியாதுதான் எழுந்து உட்கார்ந்தான். எங்கேயோ தடுமாறியதான ஒரு கனவுத் தோற்றமாய் உணர்ந்தவன், தானே ஒரு கனவுத் தோற்றமெனவும் கண்டான் போலும்….

தன்னையே விழி கொட்டாமல் கீழிருந்து பார்த்துத் தூங்கி வழியும் ஒரு முகத்தில் ஏளனப் புன்னகை கண்டு விழித்து அவனுடன் பேச ஆர்வம் கொண்டான்.

“ஸார் நாம் தூங்கும் போது, டிக்கட் பரிசோதகர் வந்து போய் விட்டார் ஸார். நம்மைப் பார்த்து, நம் நடையுடை பாவனயைக் கவனித்து டிக்கட் வாங்கியதாகக் கருதி கேட்காமலே போய்விட்டார் ஸார்… இனி வரமாட்டார் ஸார்…”

இவன் தன் பையைத் தடவிக் கொண்டான். பையில் டிக்கட் இல்லாதது நிச்சயமாகத் தெரிந்தது. தான் வாங்கியதோ வாங்காததோ மேலும் பிரயாணம் செய்வதோ ஒன்றும் ஞாபகம் வரவில்லை. ஒருக்கால் தான் வாங்கியிருந்தால் இவன் ஏன் பிக்பாக்கெட் அடித்திருக்க முடியாதென்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை.. மறு ஒரு தரம் அவர் வந்தால் வருவதற்கு முன் எங்கேயாவது போய் விட வேண்டுமென்ற எண்ணத்தில் தன் தலைமயிரைப் பிடித்தே தன்னைத் தூக்கிக்கொண்டு சென்று விடமுடியும் என, கோதிக் கொண்டான் போலும்.

நிற்காத ஒரு சிறிய ஸ்டேஷன் வெளிக் கைகாட்டி காட்டவில்லை போலும். ஒரு அத்துவான வெளியில் சிறிது அது நிற்க ஊர்ந்து கொண்டிருந்தது. வேகம் கண்டு, நிற்குமுன்பே அவசரமாக, வெகு லாகவமாக இறங்கலா னான். தடுக்க அவனிடம் சாமான் சச்சுகள் இல்லை, வண்டி நின்று, போனவுடன் அந்த இரவின் இருள் சூழ்ந்த வெளியில் கூர்ந்து சுற்றும் முற்றும் கவனிப்பு கொண்ட போது, தன்னைப் போல் யாருமில்லை என அப்போது உணர்ந்தான்.

அந்த இரவு இருள் வெளியில், கண்ட இருளானது மிகப் பிரகாசமாகத் தெரிந்து ஏனைய தோற்றங்கள் கொள்ளவும் ஏதுவாகியது. அடிக்கடி இவ்வித ஒளியும் இருளாகியது. உடல் தனித்த ஆவி, வாசனை கொண்டு அரூபத்தில் அலற, பயங்கரம் தொனிக்கக் கேட்கிறது. இருள், மறைவு, ஒளி, இசைவு முறை நியதியினின்றும் நழுவியது போலும். தறிதலை என குதிக்கும் சேவல், இருளில் முண்டம் காணாது, கண்ட கண்டவைகளில் சார்ந்து பொழுது புலர கூவியது, விநோதமாகக் கேட்டது. கொஞ்சம், வெளிச்சம் காணுமுன்பிருந்து பனை, தென்னை , ஆடு, மாடு, நாயெனவும் ஏன், மனிதனாகக் கூட இச் சேவலின் விடிவைக் கூவ முடியாது? ஆதாரம் தெரிந்தும் தவறை (பிரமை) தவிர்ப்பது எப்படி… தவறென உலகைக் காண்பதில்தான் போலும்…

காலை ஒளி காணும் சிறிது முன்பே பால் கொடுக்க வந்தவள் கதவை தட்டி கூப்பாடு போட்டும் இவன் எழுவதாக இல்லை … யாரோ ஒருவன் கனவின் சாயை யென, தன் கனவில் உலகைக் கண்டு களித்திருந்தான் போலும், யார் யார் காதிலோ இந்த கூப்பாடு கேட்டும் இவன் காதில் விழாது, இவனுக்காக இனி காத்திருத்தல் தவறென, பால் விற்பவள் சென்று கொண்டிருந்தாள்…

– கசடதபற 1971

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)