(1970 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘தேடிச் சோறு நிதம் தின்பதற்காக அலுவலகம் சென்று அங்கு கிடைக்கும் ஓய்வுப் போதில் இடமாற்றம், சம்பளப் பற்றாக்குறை வாழ்க்கைச் செலவு என்ற இன்னோரன்ன சின்னஞ்சிறு விஷயங்களை முடிவு காணாமலே பேசித் தீர்த்து விட்டு, மாலை வேளைகளில் மகாவலிகங்கை கடலோடு கலக்குஞ் சங்கமத்திட்டிள் வெண் மணற்பரப்பில் அமர்ந்து கொண்டு எதிரே கருநீல மாகப் பரந்து கிடக்கும் கொட்டியாபுரக் குடாக்கடலைப் பார்த்துக் கொண்டேயிருப்பதில் எனக்கு என்றைக்குமே அலுப்பதில்லை.
ஏனென்றால் அந்தக் கருநீலக் கடல் வடக்கே முல்லைத்தீவு தொட்டுத் தெற்கே மட்டக்களப்புவரை மரக்கலஞ் செலுத்தித் தன்னை வெற்றி கொண்ட என் மூதாதைய னரின் வீரப்பிரதாபங்களை எத்தனையோ தடவை எனக்குச் சொல்லியிருக்கிறது. ‘உங்கள் வாழ்வும் வளமும் எல்லாமே நான் தான்’ என்று யேசு பிரானைப் போல அக்கடல் எனக்கு உபதேசஞ் செய்திருக்கிறது. உன் இளைய சந்ததியினருக்கு என் மடியில் மூழ்கி, நான் ஒளித்து வைத்திருக்கும் முத்துக்குவியலை எடுக்கத் திராணியுண்டா? என்று இடித்துக் கேட்டிருக்கிறது. எல்லாமே பென்னம் பெரிய கதைகள் தான்! அன்றும் நான் சங்கமத்திட்டின் மணல் மேட்டிலே உட்கார்ந்திருந் தேன். வெப்பமும் வெதுவெதுப்பும் கொண்ட பங்குனி மாதத்தின் இலையசையாப் பம்மலில் நிச்சலனமாகக் கிடந்த குடாக் கடலிலே மாலைச் செவ்வானத்தின் ஒளிபடர்ந்து, முயங்கிக்கலந்து இரசவாத வித்தை செய்து கொண்டிருந்தது. குடாக் கடலைக் குறுக்காகக் கிழித்துக் கொண்டு திரிகோணமலையிலிருந்து ஊருக்கு வந்து. கொண்டிருக்கும் இயந்திரப் படகுகூட ஒரு ஆட்டமோ அசைவோ இன்றித் தக்கைபோலக் கிடக்கும் பொய்ம் மாயத் தோற்றத்தோடு தான் காட்சியளித்தது. மீன் பிடித்தோணிகள், கட்டுமரங்கள் எல்லாமே அசைவற்று, நேற்று என்ற இறந்தகாலமும் நாளை என்ற எதிர் காலமும் அற்றுவிட்ட நித்திய நிகழ்காலமாய்ப் பிரபஞ்சமே செயலற்று நிற்பதுபோலத் தோன்றிற்று.
அந்த அசமந்தத்தில் லயித்திருந்த என் கண்கள், கடலோரத்தே நின்று கொண்டிருந்த ஒரு நாரையின் மேற் பதிந்தன. அது ஒரு கிழட்டு நாரை, சிறகுகள் உதிர்ந்து பறக்கச் சக்தியின்றிருந்த முதுபெரும் நாரை!
பாவம்! அந்தக் கிழட்டு நாரையால் இனி இரை தேடவே முடியாது போலும்! கரைபுரண்டு அலை அடிக் கையில் அதில் நெளியும் மீன் குஞ்சுகளைக் கொத்தக் காத்துக் கொண்டிருக்கின்றது. ஆனாற் பங்குனி மாதத் தில் ஏன்- அடுத்துவர இருக்கும் ஆறு மாதங்களிலும் இந்தக் கரையில் ஏன் அலையடிக்கப்போகின்றது? கிழட்டு நாரை உண்ணா விரதமிருந்தே சாக வேண்டியது தானா?
வாடைக்காற்று ஓவென்று இரையும் மாரிக்காலத்தில் இந்தக் குடாக்கடல் ஆயிரந்தலைகள் கொண்ட ஆதிசேஷ னாகத் தலையுயாத்திப் படம் விரித்துக் குமுறிக் கொண்டு கரையை முட்டி நுரை கொப்புளித்துப் பின் வாங்குகை யில், அந்த நாரைக்கு வயிறார உணவு கிடைத்திருக்க லாம். ஆனால் இப்போ இந்தக் கரையில் சலனமே இல்லை; மறுபடியும் வாடைக் காற்று வரும் வரைக்கும் குடாக்கடல் குளமாகக் கிடக்கும். அலையே அடிக்காது. ஆகவே நாரைக்கும் உணவே இராது. அலையடிக்கும் மேற்குக் கரைப் பக்கம் பறந்து செல்ல அதற்குச் சகதி யில்லை .
என்னுட் கிளர்ந்த எண்ணங்களோடு நாரையையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்த என் கண்களில் அதோ மனித உருவம் ஒன்று தென்படுகின்றது. நாரையை அதன் பாட்டிற் தவஞ் செய்யவிட்டு விட்டு நான் அந்த உருவத் தைக் கூர்ந்து பார்க்கிறேன். ஏற்கனவே எனக்குப் பரிச்சயமான உருவந்தான். சங்கமத்திட்டின் மீனவக் குடிசை ஒன்றிலே வாழும் வாலைப் பெண் அவள். நீலக் கடலில் அந்திச் செம்மை படர்ந்து முயங்கிக் கலக்கையில் நெளியும் காந்திகால் வண்ணத்தள். கடற்பரப்பின் உப்பங் காற்றால் வைரமேறிய உட ற்கட்டு. ஒவ்வோர் அங்கத்திலும் யௌவனமிடுக்கு திமிர்த்துக் கொண்டிருப் பினும் அவள் கோந்தாளங் கோது போன்ற கண்களிலே மட்டும் ஒரு சோகம்… ஓர் அவநம்பிக்கை…மேற்குப் பக்க மாகவே அவளும் பார்த்துக் கொண்டிருந்தாள்! கிழ நாரை உணவுக்காகத் தவஞ்’ செய்கின்றது!
இந்த வாலைப் பெண் எதற்காகத் தவமிருக்கிறாள்?
என் தலத்தையும் கலைக்க இஷ்டமின்றி, எவர் தவத்தையுமே கலைக்க மன தின்றி நானும் மோனத் திருக்கும்’ வையகத்தோடு ஒன்றி மௌனியாகவே இருந்தேன்.
மூவருமே தவமிருந்தோம்! முழு உலகுமே தவமிருக்கின்றது! நீண்ட மௌனத்தின் பின் திரிகோணமலைத் துறை முகத்தின் வெளிவாயிலில், நடுக்கடலிலே தலைநீட்டி நின்ற கற்பாரின்மேற் குத்திட்டு நின்ற வெளிச்ச வீட்டின் உச்சந் தலையில் பச்சையும் சிவப்புமாக விட்டு விட்டு ஒளிரவே அந்தச் சூழ்நிலையில் ஒரு சலனம். ஆற்றங்கரை யிலே காக்கைகள் குளித்துக் கொண்டன. புஸ்ஸென்ற காற்று கடற் பரப்பை இலேசாகத் தழுவிக் கரை யோரத்தே நின்ற புங்கைமர இலைகளை அசைத்தது. அந்தப் பெண்ணும் பெருமூச்சு விட்டாள். மாலைப் பொழுதின் ஊமை ஒளியில் அவள் மார்புகள் விம்மித் தணிவது தெளிவாகவே தெரிந்தது. இன்னமும் அவள் கண்கள் மேற்கையே வெறித்திருந்தன. அதே சோகம்…. அவநம்பிக்கை … ;
அவள் பெருமூச்சின் சலனத்தால் என்னுள்ளே கதை விரிகிறது.
வாடைக்கடல் குமுறியடிக்கும் மாரிக்காலத்தில் இங்குள்ள மீனவர்களால் கடலிலே வலையை விரிக்க முடி யாது. தோணிவிடவும் இயலாது. ஆகவே ஆண்கள் எல் லாருமே தொழில் தேடி மேற்குக் கரைக்குப் போய் விட்டார்கள. அப்படிப் போனவர்களோடு ‘அந்திரேயா’ வும் போய்விட்டான்.
கடற்கரையிலே பள்ளிக்கு ஒழித்துக் கிழிஞ்சல் பொறுக்கிய இளமைப்பருவந் தொட்டு அவனும் அவளும் ஒன்றாகவே பழகியவர்கள். இப்போது ‘அந்திரேயா’ கட்டான வாலிபன். நங்கூரக்கல் போன்ற அவன் வைரித்த மார்பிலும், துடுப்புத் தண்டு போன்ற வலிமை மிக்க கரங்களிலும் தன்னை இழந்துவிட்ட அந்தக் குமரி இப்போது மேற்கரைக்குச் சென்று விட்ட அவன் வரவிற் காகத் தவமிருக்கிறாள்! மாரிக்கடல் ஓய்ந்து விட்டது. அவன் மீண்டும் வந்துவிடுவான் எனக் காத்திருக்கிறாள்: எத்தனை நாட்களாக இப்படியோ? ஏமாற்றத்தினால் அவள் கண்களில் இத்தனை சோகமா?
பாவம்! கிழட்டு நாரையால் உணவுக்காக மேற்குக் கரைக்குப் பறக்கச் சக்தியில்லை. வாலைப் பருவத்தினள் ஆதலினால் இவளாலும் அக்கரைக்குச் செல்ல முடிய வில்லை .
இந்த எண்ணங்களிடையே, ஒரு வாரத்திற்கு முன் னால் அவள் தந்தை என்னிடம் பேசிய பேச்சுக்கள் ஞாபகத்திற்கு வருகின்றன.
‘இந்தக் கடற் தொழிலிலே என்ன சுகத்தைக் கண்டோம் ஐயா. அன்றாடங் காய்ச்சிப் பிழைப்பு. தோணிக்கும் வலைக் கும் அப்பப்போ கடன் வாங்க வேண்டும். நாங்க மீனை வாடிக்கையாகக் கொடுக்கும் ‘கந்தர’ முதலாளிப் பையன் இல்லா விட்டால் ஆலாய்ப் பறக்க வேண்டியிருக் கும். எவ்வளவோ உதவி செய்கிறார். அப்பையனுக்கு என் மகளிலே ஒரு கண். அவருக்கு மகளைக் கட்டி வைச்சாற்கூட நல்லது என்று நினைக்கிறேன். ‘அன்றாடங்காய்ச்சி வாழ்வு என் மகளுக்கும் வேண்டாம்’
அந்த நினைவு முறியல் என் மனம் துணுக்குற்றது. மேற்குக் கரையையே பார்த்தபடி தன் காதலனுகாகத் தவஞ் செய்யும் அவ்வாலைக் குமரியின் காதல் ஈடே றாதா? அந்திரேயா இக்கரைக்கு வந்து சேருமுன்பே, அப் பெண்ணின் தந்தை தன் மகளுக்கு மீன் முதலாளியைப் பலவந்தமாக மணஞ் செய்து வைத்து விடுவானா? அப்படிப் பலவந்தம் நடந்தால் அப்பெண் கடற்தாயின் மடியிலேயே தன் உயிரை விட்டு விடுவாளோ?
நான் நினைவுகளில் மூழ்கியிருக்கையில் அப்பெண் எழுந்து நடந்தாள். நான் திடுக்குற்று எழுந்து அவளை நோக்கி நடந்தேன். ஆனால் அவள் கடற் பக்கமாகப் போகவேயில்லை. என் மனம் அமைதியுற்றது.
ஆனால் அதோ அந்தப் பெண் ஆற்றங்கரைப் பக்க மாக நச்சு மாமரங்களை நோக்கி அல்லவா செல்கிறாள! அம்மரங்களிலே குலை குலையாகக் காய்கள் தொங்குகின்றன. அதன் விதையின் ஒரு பகுதியைச் சாப்பிட்டாலே சில நிமிடங்களில் உயிர் போய் விடுமாம்!
‘அவளைத் தடுத்து நிறுத்தி விடவேண்டும்’ என்ற வேகத்தோடு நான் நடக்கின்றேன்.
எங்கே ஓடுகிறீர்கள்?
என்னைப்போலக் கடற்கரைக்குப் பொழுது போக்க வந்த நண்பரின் குரல் என்னைத் தடுத்து நிறுத்துகின்றது.
‘நேரமாகி விட்டதே, வீட்டிற்குப் போகத்தான்’ என்று பொய் சொல்லிவிட்டு நான் அந்த நண்பரோடு தடக்கின்றேன். வெட்கம் என்னைப் பிடுங்குகிறது.
போகும் வழியில்,
குணகடற்திரையது பறை தபு நாரை
திண்தேர்ப் பறையன் தொண்டி முன் துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்தா அங்குச்
சேயன் அரியோட்படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பாலோமே.
என்று நான் நேற்றுப் படித்த குறுந்தொகைச் செய்யுளை என் வாய் முணுமுணுத்தது.
– தமிழமுது 1970 – ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது, ஐம்பது சிறுகதைகள், மித்ர வெளியீடு, முதற் பதிப்பு ஒக்டோபர் 1996