(1971 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கொழும்பிலிருந்து காலிவரை பெரும் பகுதியும் கடற்கரை ஓரமாகவே நீண்டு கிடக்கும் காலி வீதியில் வெள்ளவத்தை நகர எல்லைக்குள்ளாக காலி வீதியையும் கடற்கரை ரயில் பாதையையும் இணைக்கும் ஒரு குறுக்கு “லேன்” (சிற்றொழுங்கை) முகப்பில் இருப்புப் பாதை கடந்து அதற்கு அப்பால் நீண்டு கிடக்கும் கடற்கரையில் அலைகள் மோதும் கருங்கல் வரிசைக்குள் சிக்குண்டு நின்றது ஒரு தென்னை மரம்.
அதற்கு இரு பக்கமும் நெடுந்தூரம் கடலோரமாகவே நூறு ஆயிரமாக வரிசைப்பட நிற்கும் இன்னும் எத்தனையோ தென்னைகள். இருந்தாலும் இந்த ஒரு தெங்கு மட்டும் என் கவனத்தைக் கவர்ந்த காரணம், அது மனித நடமாட்டம் அதிகமாயுள்ள ஒரு சந்திக்கு அண்மித்தாற்போல நின்றதுதான்.
நெடுநெடென வளர்ந்து முன்வளைந்து கடலுக்கப்பால் கழுத்தை நீட்டி எட்டிப் பார்ப்பதுபோல் முடத்தெங்காக காற்றில் அசைந்தாடி நின்றது அத்தென்னை. அதன் கீழ் சமுத்திரம் அலையடித்து நிலமரித்துப் போகாதபடி கடற்கரை நெடுகிலும் நிரையாக அடுக்கி வைத்திருந்த இரு பெரும் பாறைக்கல், இரண்டு பேருக்கு மேலும் அதன் மீதமர்ந்து தென்னையின் அடி மரத்தில் சாய்ந்தபடியும் பிறர் பார்வையைக் கவராதபடியும் நிம்மதியாக காற்று வாங்க, கலந்துரையாட வாய்ப்பானதொரு சுகாசனமாய் இணைந்திருந்தன.
இது பற்றி, அந்த இடத்தை மனத்தே எண்ணி இலக்கிட்டோராய் பலர் மாலை வேளையில் அத்தென்னையை நாடி நடந்தும் வருவார்கள், ஓடியும் வருவார்கள், நடந்தோடியும் வருவார்கள். முன்னிடம் பிடிப்பதற்காக அவ்விதமாய் அங்கு விரைவோரில் காதல் சிட்டுகளே என்றைக்கும் முன் நிற்பார்கள் என சொல்ல வேண்டியதில்லை.
“அந்த முடத்தெங்கிற்கு மட்டும் வாயிருந்தால் எத்தனை சுவையான காதல் கதைகளை அதனிடம் கேட்டறியலாம். தன் ஆயுளில் இந் நாள் மட்டில் எத்தனை பேரின் மகிழ்ச்சி, துயரம், கண்ணீ ர், ஏக்கம் இதயதாபங்களில் அது பங்கு கொண்டிருந்திருக்கும் என்று இவ்வாறு அதைப் பார்த்த போதெல்லாம் நான் எண்ணுவதுண்டு.
அதனைப் பார்த்து இவ்விதமாக நான் எண்ணமிட்டு வந்த போது அத்தென்னையானது தாளுண்ட உப்பு நீரைத் தலையாலே அமுத கலசமாக வடித்துத் தருவது போல ஒரு நாள் மெய்யாகவே என்னுடனே பேசலாயிற்று.
“என்ன ஓய் கதை அளக்கிறீர் தென்னை மரமாவது பேசுவதாவது? உதெல்லாம் சுத்தப் பொய் முழுப் புருடா, நம்பவே முடியாது. உன் தலையிலே தென்னை மரம் ஒருவேளை தேங்காயைப் போட்டு உடைத்திருக்கும்” என்கிறீரா வாசகரே?
ஐயா வாசக நேயரே! கேட்கிறவன் கேட்டால் தென்னை மரமென்ன, உலகத்திலே உள்ள எல்லா மரங்களும், மட்டைகளும் பேசும்; கதை சொல்லும், நம்முடனே சிரித்துக் கொண்டே கலந்துரையாடும். ஆனால் அவற்றிடம் கதை பிடுங்கும் வாய்ச் சாதுரியம் நம்மிடமும் இருத்தல் வேண்டும். அப்போதுதான் அது பேசும். ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக்கறக்க வேணும். பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்க வேணும். பழமொழி கேள்விப்பட்டதில்லையா?
கவி தாகூருக்குப் படித்துறையும், மகரிஷி வ.வெ.சு. ஐயருக்கு குளத்தங்கரை அரச மரமும், புதுமைப்பித்தனுக்கு ஆஸ்பத்திரிக் கட்டிலும், பழைய நாள் விக்கிரமாதித்த ராசாவின் சிம்மாசனம் ஏறப் போன போசராசனுக்கு முப்பத்திரண்டு கெட்டிக்காரப் பதுமைகளும் சிந்தை குளிர செவி உவப்ப, சிரிப்பும் கண்ணீருமாக சிங்காரக் கதை கட்டிச் சொல்லியிருக்கையில், இந்தக் கடற்கரை முடத்தெங்கு மட்டும் பேசாதா, பறையறையாதா? கதை சொல்லக்கூடாதா? தென்னையின் நீட்டோலை வாசிக்க மாட்டாதவர்கள் ஔவைப் பாட்டி கூறிய பிரகாரம் முருக்க மரங்களேதாம் காண்மின் நேயரே!
குருத்தோலை பார்த்துக் கலகல என்று நகைக்க, தென்னை மரத்தின் முற்றிப் பழுத்த காவோலைகள் பருவந்தோறும் ஒவ்வொன்றாய் உதிர்கின்றன. ஒவ்வொரு பழுத்த காவோலையினது வாழ்வும் முடிவுமே தென்னையின் வளர்ச்சியாகிறது. இந்த வரலாறும், வாழ்வின் கதையும் கல்மேல் எழுத்துபோல் அழுத்தமான வரைகளாக அடி மரத்திலிருந்து நுனிமரம் வரை ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கடுக்காய் தென்னையில் பதிவாகிப் போயிருக்கின்றன.
புதுமை என்பதே பழமையில் வேர்விடுவது. வளர்ச்சி என்பது படிப்படியாக நீண்ட காலத்தை அளாவி நிற்பது. முடிவில் தொடங்கிய இடத்துக்கே திரும்புவது என்ற இயற்கைப் பரிணாம தத்துவத்தைக் கூடத்தான் தென்னை மரம் நமக்கு எடுத்துக்காட்டி அறிவுறுத்திக் கொண்டு நிற்கிறது. அது பேசமட்டும் ஆரம்பித்தால் தன் மீதுள்ள ஒவ்வொரு வரிவடிவத்துக்கும் ஒவ்வோர் இரண்டு அங்குல வளர்ச்சிக்கும் ஒரு கதையாக நீட்டோலை வாசிக்குமே.
குதிரை கொண்டு ஏறித் திரியுமோர் இளங்காற்று, சின்னஞ்சிறு குழந்தை தன் மலர்க் கரத்தினால் தாயின் முகத்தில் இன்பமாக அறைவதுபோல தென்னையின் கீற்றை அசைத்துச் சலசலக்கச் செய்தது.
கடற்கரைக்குக் காற்று வாங்க வந்திருந்த எவளோ ஒரு பூங்கொடியாளின் பூந்துகிலையும் காற்று அவ்விதமாகச் சுழற்றியடித்த போது வெண்மணலில் கால் பதிந்து நின்றவள் “தடா” ரெனக் கீழே உட்கார்ந்து விட்டாள். அது சமயமாக அவ்வழியே நடைபோட்டு வந்த வாலிபர் குழாம் ஒன்றும் அங்கு அவளிருந்த பக்கமாய் மெல்ல அமர்ந்தது.
கடலில் கண்ணுக் கெட்டிய தூரத்தே ஒரு கப்பல் புகை கக்கியவாறு துறைமுகத்தில் சில தினங்கள் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு புத்தெழுச்சி பெற்ற விசையுடனே போய்க் கொண்டிருந்தது.
“தம்பி, உனக்குக் கல்யாணமாகி விட்டதா?” – என்றிவ்வாறு ஒரு வினாவுடனே தென்னைமரம் என்னிடம் பேசலாயிற்று.
“உனக்கேன் அந்தக் கவலை நெடுமாமே? கதை எழுதுகிறவன், கதைகளிலே காதலையும் கல்யாணத்தையும் கொட்டி அளப்பவன் தன் சொந்த வாழ்க்கையிலும் அதைப் பற்றி எல்லாமா சிந்தித்துக் கொண்டிருப்பான்?” நான் சொன்னேன்.
“ஓகோ! நீயும் அப்போ என்னைப் போல “ஒற்றை” என்று சொல்லு. இந்தக் காலத்துப்பிள்ளைகள் கல்யாணப் பேச்செடுத்தாலே இப்படித் தான் வீட்டு மாச்சாரிகளைப் போலத் துள்ளிக்குதிக்கிறார்கள். ஏனோ தெரியவில்லை. உன் கல்யாணத்தில் எனக்கென்ன அக்கறை அப்பனே! ஆனால் நான் சொல்லப் போவது காதல் கதையானபடியால் உன் நிலையை அறிய விரும்பினேன் – தென்னைமரம் சொல்லிற்று. சொல்லிவிட்டு அது என்னைக் கூர்ந்து கவனித்த போது,
“காதல் கதையா சொல்லப் போகிறாய்? ஷோக்குத்தான் அது எனக்கு நிரம்பப் பிடிக்குமே” என்றதற்கு,
“எது பிடிக்கும்?” காதலா காதல் கதையா? என்று வெடுக்கென்று கேட்டது.
“கதை – காதல், கதை பிடிக்கும் என்றுதான் சொன்னேன் தென்னை யாரே? எனக்கு மட்டுமென்ன காதல் கதை என்றால் என் வயசுக் கிளைய சின்னஞ் சிறிசுகளும் எனக்கு மூத்தோராய் கல்யாணம் செய்து கொண்டு பிள்ளைகள் பெற்ற பெரியவர்களும் அதற்கு மேல் பேரப்பிள்ளைகளும் பூட்டப்பிள்ளைகளும் கண்டு முதிர்ந்து பழுத்த கிழவனும் கிழவியும் கூட, நான் நீ என்று முந்திக் கொண்டு வருவார்கள். அது மென்னியைப் பிடிக்கும் கழுத்தை நெரிக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்க்காமலே காதலை விரும்பி அதன் பின்னே ஓடுவோர் பருவக் கன்றுகளான காளையரும் கன்னியருமே… ஏன், கதையைத் தொடங்கேன் வளர்தெங்கே” என்று கூறி தென்னையாரை முடுக்கினேன்.
“காதல் கதை என்றதும் ஆளின் மூஞ்சியும் முகரக்கட்டையும் எப்படி ஆகிவிடுகிறது பாரேன்” என்று குறு நகை அரும்ப மெல்ல முணுமுணுத்துக் கொண்டே முடத்தெங்கு கதையைச் சொல்லலுற்றது:
“அதோ பார்த்தாயா, கடலிலே ஒரு கப்பல் துறைமுகத்திலிருந்து கிளம்பிப் போய்க் கொண்டிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு அன்றொரு நாளும் இப்படித் தான் ஒரு கப்பல், துறைமுகம் விட்டுப் போய்க் கொண்டிருந்தது. இதே நேரம் தான் இருக்கும். நான் சொல்லப் போகும் கதை துயரமாக முடிந்த வேளையும் இதே மாதிரியானதொரு அந்தி நேரம், செக்கர்வானம் மைமல் கருக்கு கருங்கடல் பறவைகள் நீர்ப்பரப்பிலிருந்து நிலம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தன. வானம் ஒளி இழந்து கிடந்தது. எங்கும் இருள் கவிந்து ஒரு பகலின் கதை சோக கீதமாக முடிவது போலத்தான் என் கதையும் செக்கர்வானம், இருள், அந்தகாரம் என இந்த சமுத்திரப் பெரும் பரப்பில் எழும் அலை ஓசையுடன் கலந்து முடிகிறது. அன்றைக்கு நேரம் அப்பொழுது மாலை ஐந்து மணி சுமார் இருக்கும். பதினெட்டு அல்லது பத்தொன்பது வயசு மட்டிலான ஓர் இளமங்கை தொலைவில் சென்ற கப்பலின் மீதே பார்வை செலுத்தி அதனையே உற்று நோக்கியவளாக இதே பாறைக் கல் மீது அமர்ந்திருந்தாள். மாலை வெயிலில் அவளது சிவந்த மேனி சுவர்ண விக்கிரகமாக ஒளிர்ந்தது. கடல் காற்றில் அசைப்புண்டு அவள் நெற்றியில் வீழ்ந்த கேசச் சுருளை அடிக்கொரு தடவை தன் செங்காந்தள் விரலினால் மேலே சுண்டி ஒதுக்கிக்கொண்டே கடல்வெளியை நோக்கி மௌன தியானத்தில் ஆழ்ந்திருந்த
அப் பெண்ணின் வாடிய முகத்தில் பொழுதாக ஆக கவலைக்குறிகள் படரலாயின. மனத்தில் எழுந்த துயர கலவரம் முகத்தில் நிழலிட்டது. கைக்கடிகாரத்தில் மணி பார்ப்பாள் ஒரு சமயம். அதன் பின் திரும்பிக் கடற்கரையின் இரு பக்கமும் பார்ப்பாள். அப்படியாகப் பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமே குடி கொண்ட கண்களுடன் மனத்தே அமைதி இழந்தாளாய் துடித்தனள், துவண்டனள்…”
“அடடே, நல்ல இலக்கியச் சொற்களெல்லாம் அள்ளி வீசுறியே தென்னையாரே! தமிழ்ப் பிணைகளும் உன் காலடி ஏகி மகிழ்ந்து குலாவியிருப்பார்கள் போலும்” கதை நடுவே குறுக்கிட்டு சும்மா இப்படி ஒரு போடு போட்டேன். கதை சொல்வதில் ஆழ்ந்து லயித்துப் போயிருந்த தென்னையார் என் குறுக்கீட்டைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
தனது மென் குருத்து ஓலைகளில் தோரணம் கட்டிப் போட்டுக் கொண்டு சுவாமி அறையிலே எழுத்தறிந்த பயல் என்னிடமே இறுமாப்புக் காட்டுகிறானே என்று மனதுக்குள்ளாக ஒரு வேளை ஓர் இமைப்பொழுது நினைத்திருந்தாலும், அது ஒன்றையுமே ஒரு கை நொடிப்பாகக் கூட வெளிக்காட்டாமல், தான் கூற வந்த கதையைத் தொடர்ந்தது:
“கடலிலே போய்க் கொண்டிருந்த கப்பலுக்கு கரையிலிருந்த படியே தாவிப் பாய்ந்து விடத்துணிந்தாள் போல் அம்மங்கை நல்லாள் கற்பாறை ஆசனம் விட்டிறங்கி விடுவிடென்று நேரே கடலை நோக்கி நடப்பாள். மறுபடி அக்கம் பக்கம் பார்த்து விட்டுத் தண்ணீரில் தோய்ந்த பாதங்களைப் பின் வைத்து பொங்கி எழும் ஓர் அலைக்கு அஞ்சினளாய் குதித்தோடி வருவாள். மீண்டும் துணிந்தாளாய், அஞ்சினளாய், வழி மேல் விழி வைத்துப் பார்வையை வீசினளாய், காப்பவிழும் கவின்மலர் காற்றிலே சுழன்றாடினாற் போல் நிலமும் நீரும் இணையும் புவிலோக சங்கமத்தில், வாழ்வுக்கும் சாவுக்கும் நடுநிலையில் பகலும் இரவும் இணைந்து பிரியும் அந்தி மயக்கில் அவ்வாரணங்கு முன்னேகி பின்னிட்டு நெடுங்கடலை நோக்கிக் கற்சிலையாய் நின்று கண் கலங்கி நெட்டுயிர்த்து முழு மோசம் போனாளாய் ஏங்கி மனமுடைந்து துடிதுடித்துக் கொண்டிருந்தாள்.’
கதைக்கு இவ்விடத்தே ஒரு புள்ளி போட்டு விட்டு தென்னையார் ஆடாமல் அசையாமல் நின்றார்.
“என்ன, தென்னையாரே! கதையை இன்னும் தொடங்கிய பாடில்லை. அதற்குள்ளாகப் புள்ளி போட்டுத் தரித்து விட்டீரே. ஒரு வேளை அரைப்புள்ளி, காற்புள்ளி அல்லது “பாரா” பந்தியாகவிருக்குமோ? இல்லையானால் கதையை அதன் முடிவிலிருந்து தொடங்கும் புதிய உத்தி கித்தி ஏதும் கையாளப் போகிறீரோ?” – உசாவித் துளைத்தேன்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை அவசரப்படாதே மகனே. யாதொரு குத்தும் குடைசலும் உத்தியும் உபாதையுமில்லை. இந்தக் கதை அதன் முடிவிலேதான் முழுமை பெறுகிறது, கதையின் மூர்ச்சனையே அங்குதான் பிறக்கிறது என்று கூறிய வளர்தெங்கு மறுபடியும் காற்றிலே அசைந்தாடி மேலே கதையைத் தொடரலாயிற்று.
“அவள் யாரை-மனதிற்குகந்த எந்தக் கட்டிளம் காளையை ஒவ்வொருகணமாக எண்ணி அவ்வாறு துடித்துக் கொண்டிருந்தாளோ, அவன், அவளுடைய இன்னுயிர்க் காதலன், அவள் காலடியில் நீண்டு கிடந்த ஏழ்கடல் தொலைவில் அதே நேரம் கப்பலில் மிதந்து கொண்டிருந்தான். விளக்குகள் ஏற்றப்பட்டுத் தீபத் தெப்பமாகக் கப்பல் அலைகடலில் அசைந்தது. கரையிலிருந்து அவ்வொளி வடிவத்தின் மீதே வைத்த கண் அகற்றாது பார்வையை எறிந்து அப்பார்வையினூடே மனப்புலனையும் இழந்து சர்வமும் ஒடுங்கி சுற்றிலும் பயங்கரமான இருள் கவிந்து வருவதையும் உணராளாய் கல்லோடு கல்லானாள் கோதை அவள்.”
என்னது உசக்க இருந்து நீர்த்துமி தெறிக்கிறது. வாய் நனைந்து எச்சில் பறக்கிறதா? அல்லது…. ஓகோ, கண்கலங்கிக் கண்ணீர் சிந்தியதா? சேசே, என்னதான் சோகக் கதையாயிருந்தாலும் அதற்கு இப்படியெல்லாமா கண் கலங்குவது? சொல்லு, சொல்லு. அவ்விருபேரும் தானே கதாநாயகர்கள் காதல் ஜோடி? பலே பலே! அப்புறம் மேலே தொடரும்” – என் கதை முடுக்கு!
குரும்பைகளை அரித்துச் சுவை பார்த்த அணிற்பிள்ளை ஒன்றினை விரட்டி விட்டு தென்னையார் அதன் மேல் கதையைத் தொடர்ந்தார்:
“அவள் ஒரு பறங்கிப் பெண். ரீட்டா என்று பெயர். இங்கே சமீபமாகத்தான் ஒரு சின்ன ஒழுங்கையிலுள்ள சிறிய வீடொன்றில் தாயுடனே வசித்து வருகிறாள். நெசவு ஆலையில் வேலை. தன் வீடு; தன் வேலை என்று வேறு அல்லல் தொல்லைகள் நாடாமல் பரமசாதுவாக வாழ்ந்தவள், காதல் புயலிலே சிக்குண்டாள்.
காதல் அவள் வீடு தேடி வந்தது. அவளுடைய காதலன் ஒரு கடற்படைக் காளை, கப்பல்காரன். அவனை இந்நாட்டுக்குச் சுமந்து வந்த போர்க் கப்பல் கொழும்புத் துறைமுகம் சேர்ந்ததும் கப்பல் விட்டுத் தரை இறங்கிய முதல் அணியில் அவனும் ஒருவனாக வந்திறங்கினான். அவனது உயிரற்ற சடலத்தையும் கூட இப்பசுந்துளிர்த் தீவின் பாலைமணல் கரைகள் வாஞ்சையுடனே ஏந்தி எடுக்கக் காத்திருந்ததை அது சமயம் சிறிதேனும் முன்னறியானாய் ஈண்டு கால் பதித்தனன் அப்போர்க்காளை.
“இப்படி எத்தனை எத்தனை போர்க் கப்பல்கள், போர்க்காளைகள், படையெடுப்புகள், பயங்கர யுத்தங்கள் நம் நாட்டைச் சூழ்ந்திருக்கின்றன” – கண்ணிமைப்பது போல மனத்துள்ளே ஒரு பழைய சரித்திர கால நினைவு நெளிந்தோட அதனைத் துரத்திப் பிடித்து ஆழக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு மறுபடியும் கடற்கரை வான்பயிர் கூறும் கதைக்குக் காது கொடுத்தேன்.
“றொபின் – அதுதான் அவன் பெயர். கப்பல் விட்டிறங்கி துறைமுக வாயில் கடந்து வெளியே நகர்ப்புற எல்லையில் கால் வைத்ததும் விதி அவனை வரவேற்றது. ஊருக்குப் புதிதாக வரும் கப்பல் பிரயாணிகளுக்கு ஊர் சுற்றிக் காண்பிக்கும் “தொண்டர்” கூட்டம் ஆங்கு மற்றொரு சேனையாக றொபினையும் அவன் சகாக்களையும் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். “என்கூட வாருங்கோ சேர்! விக்டோரியா பூந்தோட்டம், நூதனசாலை, நகர மண்டபம், மிருகக் கண்காட்சிச்சாலை, புறக்கோட்டை காலிமுகக் கடற்கரை, களனி, கண்டி, அநுராதபுரம், பொலனறுவை வரை போய் வரலாம். எல்லாம் ஒரே சுற்றில் பார்த்து வந்துவிடலாம்” என்றெல்லாம் அவர்களிடத்தே ஆசை எழ நயமாகக் கூறி தலைக்கு இரண்டு பேராகவும் மூன்று பேராகவும் அதற்கு மேல் கூட்டமாகவும், தனித்தனியாகவுமே அவர்களைப் பொறுப்பேற்று வாடகை மோட்டாரிலும், ரிக்ஷாவிலும் வாடகை பஸ்ஸிலும் ஏற்றிக் கொண்டு பறப்பார்கள். இது விபரமெல்லாம் எனக்கு எப்படித் தெரியுமென்று நீ என்னை கேட்பதற்கு முன்னமே, றொபினும் ரீட்டாவும் இங்கே என் தாளடியில் வந்தமர்ந்து பேசியதைக் கேட்டுத் தெரிந்து கொண்டதுதான் என்று அக்கேள்விக்கு இடம் வைக்காமலே சொல்லி விடுகிறேன். மேலும், நான் கூறும் கதையில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே. அவை யாரையும் குறிப்பிடா. யாரோ எவரோ! ஓர் ஆணும் பெண்ணும், அவனும் அவளும் என்று வைத்துக் கொள் இனி, கதையைக் கேள்.
அன்றைய தினம் நகர்ப்புற வழி காட்டிகள் என அந்த வகைப்பட்ட ஆட்களிடம் வகையாக மாட்டிக் கொண்ட றொபின் கடல்பறவை ஒருபோது தனித்தவன் ஆனான். அது சமயமாக ஒரு ரிக்ஷாவில் அவனை ஏற்றி நாலு தெருவைச் சுற்றி அழைத்துச் சென்று குடிப்பதற்கு நிறைய சாராயம் வாங்கிக் கொடுத்து போதை தலைக்கேறிய நிலையில் ரீட்டா வீட்டு வாசலில் கொணர்ந்து விட்டார்கள். அந்த மாதிரியொரு அவல நிலையில் தான் ரீட்டா-றொபின் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அவர்களிரு பேரும் சில தினங்கள் என் நிழலில் ஒதுங்கி கலந்துரையாடினார்கள். பகல் முழுவேளையுமே இங்கு உட்கார்ந்திருந்து கதை அளப்பார்கள்.
“இரவு முழுவதும் உன் இனிய குரலே என் காதிற் கேட்டது ரீட்டா. கப்பலின் மேல் தளத்துக்குப் போய் அங்கு நின்று கரையோரம் தெரிந்த தென்னைகளைப் பார்த்துப் பெருமூச்சு விடுவேன் என்பான்.
உங்கள் நாடு உடல்நலத்துக்கு உகந்த குளிர்ந்த மலைச் சுவாத்தியத்துக்கு பெயர்பெற்றது என்று தெரிந்து வைத்திருந்தேன். மனதுக்கு இதமளிக்கும் இனிய அன்புச் சுவாத்தியம்கூட இங்குண்டு என்பதைக் கண்டு என் மனம் பூரிக்கிறது ரீட்டா. அன்றைக்கு உன் தாய் என்ன அன்பு சொரிந்தாள். எவ்வளவு பரிவும் பாசமும் பொழிந்தாள் என்பான்.
அதற்கு ரீட்டா, “எனக்கும் கூடத்தான் உன்னுடனே பழகியது முதல் இச் சில தினங்களில் நெஞ்சத்திலே இன்ப ஊற்றுப் பெருக்கெடுத்துப் பாய்கிறது றொபின். மனித சமூகத்தை விட்டு ஒதுங்கி வாழும் கடற்படை ஆட்களிடம் அவர்தம் இதயத்தில் இவ்வளவு ஆசாபாசமும், இனிய இங்கிதமும் இருக்குமென்று நான் எண்ணியதே இல்லை. போர் வீரர்களைப் பார்த்தாலே அவர்களைப் பொல்லாதவர்கள், முரடர்கள் என்றெல்லாம் பயங்கரமாகக் கற்பனை பண்ணிக்கொண்டு இந்நாள் வரை ஓடி ஒளிந்தோம்” என்று அவனிடம் கனிவாள்.
“இப்பொழுதுகூட என்ன, நான் மகா பொல்லாத போர் வீரன் தான் ரீட்டா. இதோ இப்பொழுதே உன்னைத் தூக்கி என்தோளில் போட்டுக் கொண்டு இதே கடவில் வீழ்ந்து கப்பலுக்கு நீந்திப் போய்விடப் போகிறேன்” றொபின் தோள் கொட்டுவான்.
“அது இனிமேல்தானா நடக்கப்போகிறது ! றொபின் ! எப்பொழுதோ உன்னை என்னோடு கொண்டு போய்ச் சேர்த்து விட்டாயே. மகா பொல்லாத கப்பல்காரன் நீ. பின்னே, ஊரெங்கிலும் பெண்களும் பிள்ளைகளும் கப்பல்காரர்களைப் பார்த்தபோதெல்லாம் ஓடி ஒளிப்பதற்கு அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடிந்திருந்தது? தோளிலே கோணிப்பை கூட ஒன்று மாட்டி வைத்திருப்பார்களாமே?” ரீட்டாவின் ஒரு கண் வெட்டு.
“உன் கண்களை விடவா என் போர்க்கோலம் பொல்லாதது ரீட்டா? பட்பட்டென்று வாள் வீச்சாக வீசி என்னைக் கொல்லாமல் கொன்று விடுகிறாயே ரீட்டா! கண் வெட்டோ புயல், மின் வெட்டோ? நான் இங்கே வீழ்ந்து கிடக்கிறேன். நீயோ என்னை வென்று என் போர்க் கப்பலையும் கைப்பற்றி வாகைசூடி நிற்கிறாய்.”
“கோழைகள் களத்தில் குதித்திருக்கவே கூடாது ! போர் வீரரே !”
“மனங்கலந்து உறவாட, உரையாட, மனத்தை அழுத்தும் தனிமையின் நினைவுச்சுமைகளை இப் பூவசியத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு மெல்லியலார் தோள் சேர, தோழமை பூணக் கிட்டாதபோது வாழ்க்கை எத்தனை சூன்யம் மண்டிய பாழ் வெளியாகிப் போய்விடுகிறது ரீட்டா! இந்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கும் வழியில் கப்பல் வேறு நாட்டுத் துறைமுகங்களில் தங்கி அங்கெல்லாம் இங்கு சுற்றியதுபோல் ஊருக்குள்ளே சென்று மக்கள் மத்தியில் நான் பழக நேர்ந்தபோது எவளாவது ஒரு பெண்ணுடனே அவளுக்குப் பணம் செலுத்தியாவது சிறிது நேரம் அன்பாகப் பேசிவர எண்ணினேன்.”
“ஆனால் இந்நாட்டில் ஒருத்தி எதிர்பார்த்திருக்காதபடி மிக சுலபமாக அகப்பட்டு விட்டாள் இல்லையா றொபின்?”
“ஆமாம், போட்டுக் கிடந்தெடுத்த இந்நாட்டு இரத்தினக் கல் போல.”
“ஆனால் கப்பல்காரருக்கு இதெல்லாம் எதுக்கு என்று கேட்டுத் துறைமுக வாயிலில் வைத்தே அதனைப் பறிமுதல் செய்து விடமாட்டார்களா?”
“அப்போ தரையிலேயே நின்று விடுகிறது.”
“கப்பல்காரனுக்குத் தரையிலே என்ன வேலை என்று கேட்பார்களே?”
“கப்பல் வீரன் இனித் தரையில் தரித்திருந்து ஓடம் விடப் போகிறான். கப்பலுக்கு வர மாட்டான் என்று சொல்லிவிட்டால் போச்சு”
“மெய்யாகவா றொபின்? எதிரில் இருக்கும்வரை உங்களை நம்புகிறேன். உங்கள் பேச்சை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் மறைந்து அப்பால் விலகிப் போனதும் கடல் குறுக்கிட்டு என் நம்பிக்கையைச் சிதறடித்து விடுகிறதே ! என்ன செய்வேன் றொபின்” விம்முவாள் ரீட்டா அப்பொழுது. கலங்காத அக் காளையும் நெஞ்சம் கலங்கி, “அன்பினால் ஒன்றுபட்ட உள்ளங்களை இந்த அற்ப கடலும் மலையும், காலமும் தூரமுமா பிரித்துவிட முடியும் ரீட்டா?” என்று அப்பேதையை ஆற்றித் தேற்றுவான்.
“இவ்விதமாகவெல்லாம் காலமும் நேரமும் போவதே அறியாமல் எவ்வளவோ பேசி மகிழ்வார்கள். அந்தி மயங்க ஒருவரை ஒருவர் பிரிய மனமில்லாமலே பிரிந்து செல்வார்கள். நானே அவர்களின் நெஞ்சங் கலந்த குலவுதலில் மனம் லயித்து ஒரு தினம் ஓர் இளநீர்க் குரும்பையை அவர்தம் கண்முன்னே கற்பாறை மீது போட்டுச் சிதறடித்து உங்கள் அன்பு வாழ்வுக்கு ஒரு விக்கினமும் நேராதிருக்கட்டும் என மனமார்ந்த ஆசி கூறினேன்.
ஆனால் நாம் நினைத்தபடியே எல்லாம் நடந்து விடுகிறதா? எங்கெங்கோ உலகின் வெவ்வேறு தேசங்களில் பிறந்து வளர்ந்த ஓர் ஆணையும் பெண்ணையும் இவ்வாறு அபூர்வமாகப் பிணைத்து வைத்த இதே கடல் காற்றும் வெண்மணலும் அவர்களைக் குரூரமாகப் பிரித்து வைக்கும் கொடுமைக்கும் உடந்தையாக இருந்து விட்டது.
“கப்பல் துறைமுகம் விட்டுப் போகும் நாள் வந்தது. ரீட்டா என் காலடியில் வீழ்ந்து அன்று பகல் முழுக்கப் பழி கிடந்தாள். றொபின் வருவான் என்று நாள் முழுதும் ஒவ்வொரு கணமாக எண்ணிக் கடும் தவமியற்றினாள். மாலைப்பொழுதாக ஒரு கப்பல் துறைமுகம் விட்டு வெளியேறிப் போய்க் கொண்டிருந்தது. அதைப் பார்த்து கருங்கல் பாறை மேல் மற்றொரு கல்லாகச் சமைந்தாள் அப்பூங்கொடி…
“கதிரவன் மேலைக் கடலில் குதித்தனன். பொன்னொளிர் அடிவானில் அக்கப்பல் ஒரு நிழலுருவாகத் தேய்ந்து அடிவானத்துக்கப்பால் மெல்லப் போய் மறைந்தது.
“எங்கும் இருள் சூழலாயிற்று கடல் அலைகள் “ஹோ” என்று கொந்தளித்து எழுந்தன.
ரீட்டாவின் நெஞ்சம் ஓவென்று அலறியது.
விம்மி வெடிக்கும் சிறு குழந்தை போல் தாங்கொணா துயருற்றவளாய், கண்கள் குளமாக விருட்டென எழுந்து விடுவிடென நடந்தாள்.
தன் நினைவற்று நடந்தவளை அதுசமயம் வேகமாக வந்த ரயில் ஒன்று மோதிச் சிதறடித்தது. அப்பொன்னின் கலம் – பொன்னொளிர் மேனி ஆங்கு ஒரு கணத்தே பொடி சாம்பராயிற்று.
இது சம்பவித்த மறுநாள் காலை என் காலடியில் மோதிய கடல் அலைகள் கப்பல்காரன் ஒருவனின் உயிரற்ற உடலை மணல் கரையில் கொணர்ந்து ஒதுக்கின…”
இவ்வாறு கடற்கரைத் தென்னையார் உருக்கமாகக் கதையைக் கூறி முடித்தார். எங்கும் விளக்குகள் எரிய ஆரம்பித்திருந்தன. நான் எழுந்து நடந்தேன்.
– தினபதி மலர் 1971, சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல