காலையில் வெந்தயக் கொழுக்கட்டை அவித்திருந்தார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை.
மாவரைத்துப் பிடித்துக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவைத்து எடுப்பதல்ல வெந்தயக் கொழுக்கட்டை. இட்டிலிச் சட்டுவத்தில் வைத்து அவித்து எடுப்பது, சுடச்சுட, நல்லெண்ணெய் விட்டுப் புரட்டிய தோசை மிளகாய்ப்பொடி தொட்டுக் கொண்டு ஆர்வமாக ஏழெட்டுத் தின்ற பிறகும் எழுந்து கை அலம்பப் போகாமல் தாலத்தின் முன் உட்கார்ந்திருந்தார் கும்பமுனி.
வெளியே வந்து பார்த்த கண்ணுபிள்ளை காரமாகச் சொன்னார் –
பாட்டா போரும் கேட்டேரா? காஞ்ச மாடு கம்புல பாஞ்ச மாரி இப்பிடித் திண்ணா வாற வியாழக்கிழமை கொழுக்கட்டைக் கெழமை ஆயிரும்..”
கும்பமுனிக்குக் காந்தாரி மிளகாய் கடித்தது போலச் சுள்ளென்று உறைத்தது.
“ஆனா ஆயிற்றுப் போகட்டும்டே! நீ இன்னும் ரெண்டு கொண்டா” என்றார். காடாத்துக்குப் பெரும்பயிறு. பிறகு தோசைக்கிழமை, கொழுக்கட்டைக் கிழமை, பின்னே முறுக்குக்கிழமை… இலேசாக சிரித்துக் கொண்டார்.
எவன் வச்சு அழப்போறான் நமக்கு? படத்துக்கு முன்னே மாசாமாசம் காலச்சுவடு, உயிர்மை, அந்திமழை, நிலவெளி, கணையாழி, காக்கை எல்லாம் எவன் கொண்டாந்து வைக்கப் போறான். நமக்குத் தயிர்வடை, கட்லெட், சமோசா எல்லாம் வேண்டாம்.. ரெண்டு ரசவடை எந்த நாயி கொண்டாந்து வைக்கப் போகு?” என்று யோசித்துச் சலித்தார்.
நாஞ்சில்நாடன் இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ‘மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும் வெஜிடபிள் பிரியாணியும்’ என்ற சிறுகதை ஓர்மைக்கு வந்தது அவருக்கு,
ஆவி பறக்க மூன்று வெந்தயக் கொழுக்கட்டைகளைக் கொண்டு வந்து தட்டத்தில் போட்டுவிட்டு இளக்காரமாகக் கேட்டார் கண்ணுபிள்ளை.
ஆனாலும் வாயைத் தொறந்து நல்லாருக்குடேண்ணு சொல்ல மாட்டேரா?” என்றார். தவசிப்பிள்ளை அடுக்களைக்கு மடங்கிப்போய் சீவிய கோட்டயம் சர்க்கரையும் நல்லெண்ணெய் ஊற்றிக் குழைத்த இட்லிப்பொடியும் தொட்டுக்கொண்டு வெந்தயக் கொழுக்கட்டை ஏழெட்டு தின்று, அடுக்களையை ஒழித்துப் போட்டுவிட்டு முன் படிப்புரைக்கு வந்தார். இனி மத்தியானத்துக்கான பொங்கிப் பொரிப்புதான். ஒரு தரத்துக்கு வெற்றிலை போடலாம் என்று தோன்றிற்று. வெற்றிலை போட்டான் என்று சொல்வதா, முறுக்கான் சவைத்தான் என்பதா, தாம்பூலம் தரித்தான் எனலாமா என்ற ஐயமும் எழுந்தது கண்ணுபிள்ளைக்கு, கூடவே, ’தீட்டம்ணும் சொல்லலாம், மலம்ணும் சொல்லலாம் பீண்ணும் சொல்லலாம்’ என்கிற கும்பமுனியின் சொல்லதிகார நூற்பாவும் ஞாபகம் வந்தது.
வயிராற உண்டு, கை கழுவி, முகம் துடைத்து, சற்றே சாய்வான சூரல் நாற்காலியில் சாய்ந்து கால்களை மேலே தூக்கி வைத்துக் கொண்டு, கண்கள் செருகப் பாடிக் கொண்டிருந்தார் கும்பமுனி.
“ஏதேது செய்திடுமோ? பாவி விதி ஏதேது செய்திடுமோ?
தேவடியாளை என் தாயாகச்
தேவடியாள் வீட்டு நாயாகச் செய்யுமோ?
ஏதேது செய்திடுமோ? பாவி விதி ஏதேது செய்திடுமோ?”
குணங்குடி மஸ்தான் சாகிபு பொங்கிப் பிரவகித்து வந்தார்.
பாடி முடிக்கட்டும் என்று படிப்புரையில் கல்வரி மீது அமர்ந்து, கரிய பனைமரத்துத் தூணில் சாய்ந்து கும்பமுனியின் முகத்தையே பார்த்திருந்தார்.
பாடி நிறுத்தி, மெய்மறப்பில் இருந்து மீண்டு, கண் விழித்துப் பார்த்தவர் கேட்டார் – “என்னடே கண்ணுவிள்ளே: நண்டை நரி பார்த்த மாதிரி பாக்கேரு?”
”அது வந்து பாட்டா… சொன்னா எரிஞ்சு விழ மாட்டேருல்லா… பாட்டு படிக்கச்சிலே தேவிடியா தேவிடியாண்ணு சொல்லுகேரே, அது சரியா?”
”அதுக்கு நான் என்ன செய்யட்டும்: குணங்குடியாரு பாடியிருக்காரே: நானதை மாத்த முடியுமா?”
”இருந்தாலும் இப்பம் சமூகநீதி பெண் விடுதலை, சமத்துவம், முற்போக்கு பேசப்பட்ட எல்லாரும் பாலியல் தொழிலாளிண்ணுதான் பேசணும் எழுதணும்ணு, தேவிடியாள்ணு சொல்லப்பிடாது அப்பிடிண்ணு கண்டிசன் போடுகாள்ளா?”
”ஆமா… சொல்லுகா… வேசி, பரத்தை, தாசி, விலைமகள், விபச்சாரிண்ணு எல்லாம் சொல்லப்பிடாதுங்கா… கேக்கதுக்கு நல்லாத்தான் இருக்கு… ஆனா திருவள்ளுவர், ’நண்ணேன் பரத்த நின் மார்பு’ என்கிறார். கம்பன், ’இருமனப் பெண்டிர்’ என்பார். முலைகளை விலைக்குத் தருபவள்ங்கிற பொருளில் ’விலை முலையாட்டி’ என்கிறார். அதுக்கு நாம் என்ன செய்ய முடியும் சொல்லும்? பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பரத்தை, பரத்தையர், பரத்தள், பரத்தமை என்கிறது. அங்கோயல்லாம் போயி பாலியல் தொழிலாளி, பாலியல் தொழில்னு மாத்த முடியுமாவே?”
”இருந்தாலும் தேவிடியாண்ணா அது சரியா பாட்டா?”
”தேவரடியாள், தேவருக்கு அடியாள் என்கிற சொல்தான் தேவடியாள்ணு மாறிச்சு.. பொறவு அத கலவியைத் தொழிலாச் செய்றவங்களுக்கு சொன்னா…. அப்பிடி மாத்துனது யாருவோ? தாசன், தாசிண்னா அது நல்ல வார்த்தை இல்லியா? இண்ணைக்கும் காளிதாசன், பாரதிதாசன், கண்ணதாசன், கம்பதாசன், வாணிதாசன் சொல்லுகோம்லா? தேவரடியாளையும் தாசியையும் வசவா மாத்துனது யாரு? சமூகம் பயன்படுத்திய சொல்லைப் புலவன் பயன்படுத்தினான். உ.வே.சா. காலத்திலே எவனோ ஒரு பாதிரியாரு திருக்குறளைத் திருத்திக் கொண்டாந்தானாம்…. அதுபோல் நாம போயி எல்லாத்தையும் திருத்த முடியுமா?”
”நீரு சொல்லுகது சரிதான் பாட்டா.. ஆனாலும்?”
தெருவிலே சண்டை வரச்சிலே ஆம்பிளையோ பொம்பிளையோ பாலியல் தொழிலாளியே, பாலியல் தொழிலாளி மகனேண்ணு அப்பிடீண்ணு என்னைக்கு ஏசுகாளோ அன்னைக்குத்தான்வே சமூகத்தில் சொல் நிலைபெறும். பாலியல் தொழிலாளிண்ணு காட்சி ஊடகத்திலே, அச்சு ஊடகத்திலே பேசக்கூடியவனும் எழுதக்கூடியவனும் கோவம் வந்தா தேவிடியா மகனேண்ணு தானவே திட்டுகான்.. இன்னொரு காரியம்… சொல்லை மாத்தினா கசடு மாறிருமாவே?”
”அப்பம் பழைய மாதிரியே சொல்லலாம்ங்கேரா?”
”அதைச் சொல்லதுக்கு நாம யாருவே? நீரு ஒரு வைப்புக்காரரு…. நானொரு தாவு தீந்த வெள்ளாள எழுத்தாளன். கடிக்கவும் கழியாது, கடிச்சதை முழுங்கவும் கழியாது. குருடு, செவிடு, ஊமை, முடம், கூனு, நெட்டை, குட்டை, தடி, ஒல்லி எல்லாமே ஒரு மனுசனுக்கு வாய்ச்சதைக் குறிக்கிற சொல்தான… அதை நாம்தானவே குருடா, செவிடி, ஊமை, நொண்டி, தடியா, கூனா, குள்ளா, ஒல்லிண்ணு ஏசுகதுக்குப் பயன்படுத்தினோம்?. அது சொல்லுக்க தப்பா! இல்ல நம்ம தப்பா? சொல்லை மாத்தினா மனோபாவம் சரியாப் போயிருமா? இந்தச் சொல்லையெல்லாம் ஊடகம் மாத்தி எத்தனை வருசம் இருக்கும்?. இண்ணைக்கும் எவனாவது குருடனை செவிடனை நொண்டியைப் பாத்து ‘ஏ மாத்துத் திறனாளி’ண்ணு ஏசுகதைக் கேட்டிருக்கேரா? ஆடத் தெரியாத சினிமா நடிகை செட்டிங் சரியில்லைன்று சொல்லுக மாதிரி இல்லாவே இருக்கு?”
”நீரு இப்பம் ஞானி மடத்துக்கு நோனி மடம்னு பேசுகேரு பாட்டா?.”
”இது தற்குத்தறம் இல்லடே! எனக்கு இதுலே என்ன காரியம்? கொக்குக்கு வச்ச வெடி, நீர்க்கோழிக்குக் கொண்டது போல நீரு என்னத்துக்குப் பெடங்கி அடிச்சுக்கிட்டு வாறேரு”
“அதுக்கில்ல…”
”இங்கிலீஸ்லே Sex worker, physical handicaped என்றெல்லாம் சொல்லுவான். ஆனா அகராதியிலேருந்து Prostitutes, Brothel, whore சொல்லெல்லாம் போச்சா வே? Blind, Deaf, Dum, Dwamங்கிற சொல்லெல்லாம் போச்சா? பேசுகேரே பேச்சு? எனக்கு சந்தாகட்டி வரப்பட்ட மாசப்பத்திரிகை எல்லாம் மனப்பாடம் செய்யப்பிடாது கேட்டேரா?”
”இருந்தாலும் சமாதானம் ஆக மாட்டங்கு…”
”அப்பம் இனிமேலாட்டு ஊடகத்துல எல்லாம் கொலகாரன், திருடன், அரசியல்வாதிண்ணு எழுதப்படாதுண்ணு பரப்புரை செய்யும். கொலைத் தொழிலாளி, திருட்டுத் தொழிலாளி, அரசியல் தொழிலாளிண்ணு சொல்லச் சொல்லும்..”
“அதெப்படி பாட்டா? விபச்சாரம் ஏதோ வயிற்றுப்பிழைப்புக்குப் பண்ணுகா… அதைப் போலயா?”
”பாவமாத்தாண்டே இருக்கு… சமூகம் அவாளை அப்பிடி மாத்தி வச்சிருக்கு…. பாவம் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் என்றாரே ஏசுபிரான். ஆனா நீரே இப்பம் விபச்சாரம்னுதானே சொன்னேரு? பாலியல் தொழில்ணா சொன்னேரா?”
“அது வந்து…”
”வந்தும் போயும்தான்… எல்லாம் பேப்பர்லே எழுதுவான்…. டி.வி.யிலே பேசுவான்… மேடையிலே பேசிக் கைதட்டு வாங்குவான். நான் சொல்லப்பட்டது, அவங்க மனசிலே உள்ள அழுக்குப் போச்சாவே?”
”பாட்டா, நீரு ரொம்பப் பிற்போக்காப் பேசுகேரு… சாதித் திமிரு…”
”சரி! எனக்கு மொளச்ச மயிரெல்லாம் கள்ள மயிருண்ணே வச்சுக்கிடுவோம்… நான் ஒரு காரியம் கேக்கட்டும்… உமக்கு ஒரு மகன் இருந்து அவனுக்குப் பாலியல் தொழிலாளியைக் கெட்டி வேப்பேரா ஓய்? கெட்டி வச்ச பிறகு அவள் மேற்கொண்டும் பாலியல் தொழிலுக்குப் போகப் பிரியப்பட்டா, சரி மக்கா! போயிட்டு வாண்ணு சொல்லுவேரா? திருநீறு பூசி வழி அனுப்புவேரா? நம்ம நாட்டுலே ரோட்டுலே நிண்ணு கூப்பிட்டாத்தான்வே கேவலம்.. ஆடி கார், பென்ஸ் கார் வச்சுக்கிட்டுப் போயிட்டு வந்தா அந்தக்கெவுரவம் வேற…. அவ கையைத் தொட்டு முத்துவியோ… அவ தூமைத்துணி கெடச்சா பூசையிலே வச்சு சாம்பிராணி காட்டுவியோ… உலக மாநாட்டுக்கெல்லாம் கூப்பிடுவியோ…”
தவசிப்பிள்ளை கொஞ்சம் நின்று நிதானித்துக் கேட்டார்.
”எல்லாத்துக்கும் காறட்டு வழக்குப் பிடிக்கணுமா பாட்டா? கவிஞனுக்குப் பெண்பால் கவிதாயினிண்ணு சொன்னா உமக்கு எதுக்கு மூலம் கடுக்கு?”
”எனக்கு என்னத்துக்கு மூலம் கடுக்கணும்?. தமிழ் எனக்கு அம்மைக்கு ஆமக்கனுக்கு சொந்த வகையா, இங்க யாரும் வந்து தூறப்பிடாதுன்னு அதிகாரம் எடுக்கதுக்கு? எல்லாருக்கும் சொத்து பொதுதானவே! செத்துப் போன தலைவனுக்கு எல்லாம் புதைக்கதுக்கு தலைக்கு அஞ்சு ஏக்கர் குடுத்தா மெரீனாவுல என்ன மிஞ்சும்?. அது கெடக்கட்டும்…. பாட்டு எழுதப்பட்டவனை கவின்னு சொன்னது ஆயிரம் வருசமாத்தான் தெரியுமா?”
”அதுக்கு மிந்தி யாரும் பாட்டு எழுதல்லியா?”
இதான் மருந்துக்கு மோளச் சொன்னா மண்ணுலே மோளுகது! நம்ம சொல்லு புலவன், தெரிஞ்சிக்கிடும்….”
”சரி புலவனுக்குப் பெண்பால் புலவியா?”
”உமக்குக் கொழுக்கட்டை கூடிப்போச்சு பாத்துக்கிடும்…. புலவிண்ணா ஊடல்ணு அர்த்தம்… உப்பு அமைந்தற்றால் புலவி என்று திருவள்ளுவர் சொல்லுகாரு…”
அப்பம் புலவன் மட்டும்தானா? பொம்பளை ஒருத்திகூடப் பாட்டு எழுதல்லியா?”
”இருந்தாவே! சங்ககாலப் பாடல்களைப் பாடிய 473 பேரிலே 45 பேரு பெண்கள்ங்கிறாங்க பேராசிரியர் தாயம்மாள் அறவாணன்…”
”அப்ப புலவனுக்கு என்னதான் பெண்பால் அதைச் சொல்லும் முதல்லே!”
”புலவர்லா பொதுப்பால்வே…. ஆணும் ஆகலாம் பொண்ணும் ஆகலாம்… கவிஞர்ணாலும் அது பொதுப்பால்தான், அதனாலதான் கவிதாயினிண்ணா அது எதுக்குண்ணு தமிழறிஞர் எல்லாம் கேக்கா… நான் கேக்கல்லே…. சரி! நான் ஒன்று கேக்கட்டும் உம்மகிட்டே … உழவன் – உழத்தி, குயவன் – குயத்தி, குறவன் – குறத்தி சரி… தச்சன், கொல்லன் இதுக்குப் பெண்பால் என்ன?”
”சரி! ஒரு கட்டன் சாயா எடுக்கட்டா?”
”இரியும், இதையும் கூடக் கேட்டுக்கிட்டுப் போவும்! ஆசிரியன் – ஆசிரியை, சரி, ஒத்துக்கிட்டோம். அமைச்சருக்கு என்னவே பெண்பால் சரி, அதை விடும்! வட்டாட்சியர், ஆட்சியர் இதுக்கு என்ன பெண்பால்? ஆட்சியரா, வட்டாட்சியரா பெண்கள் எவரும் இல்லையா? கவிஞருக்கு ஆசிரியருக்கு ஒரு நியாயம் ஆட்சியருக்கு ஒரு நியாயமா? சொல்லும் வாயத் தொறந்து! சரி கெடக்கட்டும்… நீதியரசருக்குப் பெண்பால் என்னவோ?”
”நீரு புடிச்ச மொசலுக்கு மூணு காலும் பேரு பாட்டா… சும்மையா உம்மைப் பிற்போக்கு எழுத்தாளர்ங்கான்?”
”எலி புடிக்கப்பட்ட பூச்சை கலமும் உடைக்கும்வே! அதுக்கு யாரு என்ன சொல்ல முடியும்?. சில சொல்லுக்கு ஆண்பாலும் இருக்கு, பெண்பாலும் இருக்கு, பாடகர் – பாடகி இருக்கு, நடிகர் – நடிகை இருக்கு. மருத்துவன் – மருத்துவச்சி இருக்கு. ஆனால் மருத்துவர்னா கெவுரவமா இருக்கு, சேவகன் – சேவகி உண்டும். ஊழியருக்கு என்ன பெண்பால்வே? தலைவன் – தலைவி தெரியும். அரசியல்வாதிக்கு என்ன பெண்பால்? அதுனாலதான் சில சொற்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுண்ணு சொல்லுகோம்! புலவர் போதும், கவிஞர் போதும். இல்லாட்டா புதுசாக் கண்டு சொல்லலாம். ஆனா பொருத்தமாட்டு இருக்கணும், காப்பியைக் கொட்டைவடிநீர்னு சொன்னது மாதிரி மெனக்கெடப்பிடாது…. Modernism – நவீனத்துவம். சரி! Post – Modernism – பின் நவீனத்துவம்ணா எப்பிடிவே கண்ணுவிள்ளே! ஆனைக்கு அர்ரம்னா குதிரைக்குக் குர்ரம்னு சொல்லலாமா? சரி… போட்டும்… கடுப்பம் கூட்டி ஒரு கட்டன் எடும் என்றார் கும்பமுனி?”
”அதும் சரியாத்தான் படுகு பாட்டா…. சமையல்காரன் – சமையல்காரி உண்டும். வேலைக்காரன் – வேலைக்காரி இருக்கு… ஓட்டுநர், நடத்துவர், கூட்டுநர் இதுக்கெல்லாம் பெண்பால் சொல் இல்லேல்லா?”
படிப்புரையில் இருந்து எடுத்து, முட்டு பிடித்து நின்று, ஆணிப்புற்றுக்காலை ஊன்றி காலைக் கிந்தி நடந்து குசினிப்புரைக்குப் போனார் தவசிப்பிள்ளை,
கண்ணுபிள்ளை எழுந்து போனபின் குரலெடுத்து சிவவாக்கியர் பாடல் ஒன்றைப் பாடினார் கும்பமுனி,
“மாதாமாதம் தூமைதான், மறந்து போன தூமைதான்,
மாதம் அற்று நின்றலோ வளர்ந்து ரூபம் ஆனது!
நாதமேது? வேதமேது? நற்குலங்கள் ஏதடா?
வேதம் ஓதும் வேதியர் விளைந்தவாறும் பேசடா!”
எல்லாம் கொழுக்கட்டை செய்கிற வேலை என்று உள்முகமாய் நகைத்தார் தவசிப்பிள்ளை,
ஆவி பறக்கும் கட்டன் சாயாவைக் கண்ணாடித் தம்ளரில் ஊற்றி, சூடு பொறுக்கத் தம்ளரின் அடிப்பாகத்தைத் தோள்துவர்த்தில் தாங்கிக் கொண்டு வந்து நீட்டினார் கண்ணுபிள்ளை, பொன்னே போல் வாங்கிப் பதனமாகப் பிடித்து, கால் நூற்றாண்டு மூத்த சிங்கிள் மால்ட் கிளென்லிவட் விஸ்கியை மோந்து பார்ப்பது போல் கட்டன் சாயாவை மணம் பிடித்து, சூடு பொறுக்கப் பொறுக்க சில துளிகள் அருந்தி, முயக்கத்தின் உச்சத்தில் சிலிர்ப்பதுபோல் சிலிர்த்து, “ஆகா!” என்றார் கும்பமுனி.
கண்ணபிள்ளை முகத்தில் சத்தீஸ்கர் மாநிலத்து ஆளுநராக அருளப்பட்டதுபோல் பூரிப்பு. அதற்கு அவருக்குத் தகுதி இல்லை என்று மறுக்க முடியுமா? பூ ரித்த புன்முறுவலைக் சுரந்தவாறு, ”பாட்டா! ஒரு சம்சியம்!” என்றார்.
”கேளும்வே!”
”எதிர்மறைன்று சொல்லுகா…. அது மனசிலாகு… அதென்னது நேர்மறைங்கிறது?”
கும்பமுனி சினந்து கடுப்படித்தார் – ”போறேரா இங்கேருந்து? சவம் ரெண்டு கொழுக்கட்டை கூடத்திண்ணதுக்கு என்ன பாடுபடுத்துகேரு?. நான் என்ன தேவநேயப் பாவாணர் நினைச்சுப் போட்டேராவே?”
கண்பிள்ளையைக் கடித்துத் துப்பிவிட்டு கட்டன் சாயாவுடன் கலவியில் ஈடுபட்டார் கும்பமுனி.
– பேசும் புதியசக்தி தீபாவளி மலர், 22 செப்டம்பர் 2020.